கிரேக்க கடல் பகுதியில் படகு மூழ்கியதில் நூற்றுக்கணக்கான அகதிகள் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கிரேக்கத்தின் கடற்பகுதியில் 20-30 மீட்டர் நீளமுள்ள மீன்பிடி படகு ஒன்று புதன்கிழமை அதிகாலை மூழ்கியதில், அதில் பயனம் செய்த நூற்றுக்கணக்கான அகதிகள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த ஆண்டு மத்திய தரைக்கடலின் கிரேக்கப் பகுதியில் நடந்த மிக மோசமான வெகுஜன இறப்பு சம்பவத்தில், இறப்பு எண்ணிக்கை ஏற்கனவே 79 ஐ எட்டியுள்ளது.

கடந்த புதனன்று கார்டியன் பத்திரிகை மேற்கோள் காட்டிய ஒரு கிரேக்க அதிகாரியின் கூற்றுப்படி, 'இறப்பு எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு உள்ளது, இந்த எண்ணிக்கை மணிநேரத்திற்கு அதிகரித்து வருகிறது... 600 பேர் வரை கப்பலில் இருந்ததாக ஊகங்கள் பரவலாக உள்ளன, ஆனால் இது உறுதிப்படுத்தப்படவில்லை. மூழ்கிய கப்பல் நீருக்கடியில் உள்ளது’’ என்று அவர் கூறினார்.

ஜூன் 14, 2023 புதன்கிழமை அன்று, கிரேக்க கடலோரக் காவல் படை வழங்கிய கையேடு படம், தெற்கு கிரேக்கத்தில் மூழ்கிய மீன்பிடி படகின் ஒவ்வொரு தளத்திலும் கிட்டத்தட்ட மக்கள் நிறைத்திருப்பதைக் காட்டுகிறது. ஐரோப்பாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற இந்த மீன்பிடிப் படகு புதன்கிழமை கிரேக்க கடல் பகுதியில் மூழ்கியது, இந்த ஆண்டு நடந்த இந்த மோசமான பேரழிவில் குறைந்தது 79 பேர் இறந்தனர் மற்றும் பலரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். [AP Photo/Hellenic Coast Guard via AP]

மூழ்கிய படகிலிருந்து இதுவரை 104 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர், மேலும் பைலோஸுக்கு தென்மேற்கே 50 மைல் (80 கிமீ) தொலைவில் படகு மூழ்கியபோது 750 பேர் வரை அதில் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. 'இந்தப் படகில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்ததாக உயிர் பிழைத்தவர்கள் கூறியுள்ளனர்' என்று பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டதுடன், பல பெண்களும் குழந்தைகளும் இந்தப் படகில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜூன் 25 அன்று நடைபெற இருக்கும் கிரேக்க பொதுத் தேர்தலின் இரண்டாவது சுற்றுக்கு இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில், இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன. புதிய ஜனநாயக கட்சி பிரதம மந்திரி மிட்சோடாகிஸ் மற்றும் முக்கிய எதிர்க்கட்சியான சிரிசாவின் அலெக்சிஸ் சிப்ராஸ் மற்றும் பிற கட்சித் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தை இடைநிறுத்துமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். மூன்று நாட்கள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டது. பிப்ரவரியில் டெம்பி பள்ளத்தாக்கில் நடந்த ரயில் விபத்து மரணங்களைத் தடுக்கும் வகையில், வெகுஜன எதிர்ப்புகள் மற்றும் வேலைநிறுத்தங்களின் விளைவாக தேர்தல் ஏற்கனவே ஒரு மாதத்திற்கு இடைநிறுத்தப்பட்டது.

கிழக்கு லிபியத் துறைமுகமான டோப்ரூக்கில் இருந்து இத்தாலி நோக்கிப் புறப்பட்ட இந்தப் படகு கிரேக்கத்தின் பெலோபொன்னீஸின் தெற்கு கடற்கரையில் மூழ்கியது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சிரியா மற்றும் எகிப்து நாடுகளைச் சேர்ந்தவர்கள் கப்பலில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிரேக்க அரசு ஒலிபரப்பு நிறுவனமான ERT, “இருபத்தாறு பேர் சிறிய காயங்கள் அல்லது கடலின் தாழ்வெப்பநிலை பாதிப்புடன் கலமாட்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஆண்கள், இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் ஆவர். எழுபத்தெட்டு பேர் கடலோர காவல்படை வளாகத்தில் உள்ளனர், யூன் 15 அன்று, அவர்கள் மலகாசாவில் உள்ள வரவேற்பு மையத்துக்கு மாற்றப்படுவார்கள்'' என்று அறிவித்தது.

ஜூன் 14, 2023 புதன்கிழமை, ஏதென்ஸுக்கு தென்மேற்கே சுமார் 240 கிலோமீட்டர் (150 மைல்) தொலைவில் உள்ள கலாமாடா நகரில் உள்ள துறைமுகத்தின் பொதிகள் வைக்கும் கட்டிடப் பகுதியில், படகு விபத்தில் இருந்து தப்பியவர்கள் உறங்குகின்றனர். புலம்பெயர்ந்தவர்களை ஏற்றி வந்த இந்த மீன்பிடி படகு புதன்கிழமை கிரேக்கத்தின் கடற்கரையில் மூழ்கியது. இந்த ஆண்டு, இதுபோன்ற நடந்த மோசமான பேரழிவுகளில் ஒன்றான இந்த விபத்தில், குறைந்தது 79 பேர் இறந்துள்ளனர் மற்றும் பலர் காணாமல் போயுள்ளனர். [AP Photo/Thanassis Stavrakis]

‘’பெலோபொன்னேசியன் நகரமான கலமாட்டாவில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை கொண்டு செல்லும் முன்னெப்போதும் இல்லாத காட்சிகள். கடலோரக் காவல்படை கப்பல்கள், கடற்படை போர் விமானம், ராணுவப் போக்குவரத்து விமானங்கள், விமானப்படை ஹெலிகாப்டர்கள் மற்றும் தனியார் கப்பல்கள் வரிசையாக உயிர் பிழைத்தவர்களை தேடும் பணியில் ஈடுபட்டன. பலத்த காற்று வீசியதால் மீட்புப் பணிகள் முதலில் பாதிக்கப்பட்டன’’ என்று கார்டியன் எழுதியது.

கலாமாட்டாவின் துணை மேயர் ஐயோனிஸ் ஜாபிரோபொலோஸை மேற்கோள் காட்டிய கதிமெரினி செய்தி நிறுவனம், அவர் கப்பலில் '500 க்கும் மேற்பட்டவர்கள்' இருந்ததை அறிந்து கொண்டதாகக் கூறினார். 

ஐரோப்பிய ஒன்றிய எல்லை ஏஜென்சியான புரென்டெக்ஸ் (Frontex) மற்றும் கிரேக்க கடலோர காவல்படை வழங்கிய களநிலைமையை யாரும் மதிப்புமிக்க ஒன்றாக கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது, ஏனெனில், இந்த படகு விரோதத்துடன் நடத்தப்பட்டதோடு, அது மூழ்குவதற்கு அனுமதிக்கப்பட்டது என்பதற்கான சான்றுகள் வெளிவருகின்றன.

‘’புரென்டெக்சின் கண்காணிப்பு விமானம், ஜூன் 13, செவ்வாய்கிழமை அன்று 09:47 UTC நேரத்திற்கு படகைக் கண்டறிந்து, உடனடியாக கிரேக்க மற்றும் இத்தாலிய அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தது. படகின் அனைத்து பிரச்சனைகளும் கிரேக்க மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்று அது தெரிவித்தது’’ என்று புரென்டெக்ஸ் ஒரு சுயசேவை 89 என்ற வார்த்தை அறிக்கையை புதன்கிழமை வெளியிட்டது.

கப்பலில் இருந்தவர்கள் தங்களுக்கு உதவி தேவையில்லை என்று கூறியதாக கடலோர காவல்படையை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ‘’செவ்வாய்கிழமை பிற்பகுதியில், படகு கவிழ்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, படகில் இருந்தவர்கள் தங்கள் பயணத்தைத் தொடர வலியுறுத்தி உதவி வழங்க மறுத்துவிட்டனர் என்று கடலோர காவல்படையினர் தெரிவித்ததாக’’ ராய்ட்டர்ஸ் செய்தி ஸ்தாபனம் செய்தி வெளியிட்டுள்ளது,

படகில் என்ன நடந்தது என்பதற்கான தகவலை வழங்க, படகுகளில் ஆபத்தில் இருப்பவர்கள் பாவிக்கும் ஒரு சிறப்பு நேரடி இணைப்பினூடாக, தன்னார்வலர்களின் தொலைபேசிக்கு ஆபத்து எச்சரிக்கை விடப்பட்டது. கடந்த புதன்கிழமை அன்று, கிரேக்கத்தின் கடற்கரையில் மூழ்கிய படகிலிருந்த நூற்றுக்கணக்கான மக்களைப் பற்றி ‘‘ஐரோப்பாவின் 'கேடயம்: நூற்றுக்கணக்கானோர் கிரீஸில் மூழ்கியிருப்பதாக கருதப்படுகிறது’’ என்ற கட்டுரையுடன் இணைந்த வகையில், இந்த சம்பவம் தொடர்பான காலவரிசையை இந்தக் குழு வெளியிட்டது. அதில், ‘‘நேற்று, 13 ஜூன் 2023 அன்று, படகில் இருந்த மக்கள் எங்களை உதவிக்கு அழைத்ததால், ஆபத்தில் உள்ள இந்தப் படகு குறித்து ஹெலனிக் கடலோரக் காவல்படைக்கு 16:53 CEST [மத்திய ஐரோப்பிய கோடை நேரம்] எச்சரித்தோம். கிரேக்கம், இத்தாலி மற்றும் மால்டா அதிகாரிகளுக்கு ஏற்கனவே பல மணிநேரங்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கிரேக்கம் மற்றும் பிற ஐரோப்பிய அதிகாரிகள் இந்த நெரிசலான மற்றும் கடலுக்குத் தகுதியற்ற கப்பலைப் பற்றி நன்கு அறிந்திருந்தனர். மீட்பு பணி தொடங்கப்படவில்லை. இன்று, ஜூன் 14, 2023 அதிகாலையில், படகு கவிழ்ந்து மூழ்கியது’’ என்று அக்கட்டுரைகுறிப்பிட்டது.

'கடலில் நடந்த இந்த பேரழிவைத் தொடர்ந்து சில மணிநேரங்களில், ஹெலனிக் கடலோரக் காவல்படையினர்கள், மக்களுக்கு உதவத் தவறியதை நியாயப்படுத்தத் தொடங்கியதுடன், துன்பத்தில் உள்ள மக்கள் கிரேக்கத்திற்கு மீட்கப்படுவதை விரும்பவில்லை என்று அவர்கள் வாதிடுகின்றனர்' என்று அது மேலும் தெரிவித்தது.

'நாங்கள் கேட்கிறோம்: கடலில் உள்ள மக்கள் ஏன் கிரேக்கப் படைகளை எதிர்கொள்ள மிகவும் பயப்படுகிறார்கள்?... ஏனெனில், பயணத்தில் இருக்கும் மக்கள் கிரேக்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் கொடூரமான மற்றும் திருப்பி அனுப்பும் நடைமுறைகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கையாளும் நடைமுறைகள் பற்றியும் அறிந்திருக்கிறார்கள். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் வான் டெர் லேயன் ஒருமுறை குறிப்பிட்டது போல, மக்களை வன்முறையில் தடுத்து நிறுத்தியதால், கிரேக்கம் ஐரோப்பாவின் கேடயமாக மாறியுள்ளது’’ 

'இந்த கிரேக்கப் படைகளால் ஆயிரக்கணக்கான அகதிகள் சுட்டும், அடித்தும் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் கடலில் கைவிடப்பட்டுள்ளனர் என்பது அந்த அகதிகளுக்கு தெரியும். ஹெலனிக் கடலோரக் காவல்படை, ஹெலனிக் காவல்துறை அல்லது ஹெலனிக் எல்லைக் காவலர்களை எதிர்கொள்வது பெரும்பாலும் வன்முறையுடன் கூடிய துன்பத்தைக் குறிக்கிறது என்பதை அவர்கள் அறிவார்கள். படகுகள் கிரேக்கத்தை தவிர்க்க முயல்வதும், நீண்ட வழிகளில் பயணிப்பதும், கடலில் உயிரைப் பணயம் வைப்பதும் முறையாக திருப்பி அனுப்பும் நடைமுறையே காரணமாகும்’’ என்று அந்த கட்டுரை மேலும் குறிப்பிடுகிறது.

இந்த படகு விபத்தின் காலவரிசை குறிப்புகள்:

ஜூன் 13 ஆம் தேதி காலை 9:35h CEST இலிருந்து, ட்விட்டர் பயனர் நவல் சௌஃபி என்பவர், 750 பேரை ஏற்றிச் செல்லும் ஒரு பெரிய படகு பேரிடரில் சிக்கியிருப்பதாக ட்விட்டரில் எச்சரித்துள்ளார். அடுத்த சிலமணிநேரங்களில் நவல் சௌஃபி, படகின் ஜி.பி.எஸ் இன் கடலின் இருப்பிட நிலை மற்றும் இத்தாலி, கிரீஸ் மற்றும் மால்டாவில் உள்ள அதிகாரிகளுக்கு அபாய எச்சரிக்கை உள்ளிட்ட கூடுதல் தகவல்களைச் சேர்த்து வழங்குகிறார்.

14:17 CEST: ‘’ஆபத்தில் சிக்கியிருக்கும் படகில் இருந்து எச்சரிக்கை தொலைபேசிக்கு முதல் அழைப்பு வந்தது. ஆபத்தில் சிக்கியிருப்பவர்களுடன் தொடர்புகொள்வது கடினம் என்றும், இரவில் தாங்கள் உயிர்வாழ முடியாது மற்றும் பெரும் துயரத்தில் இருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். எச்சரிக்கை மணி தொலைபேசி, அவர்களின் தற்போதைய ஜி.பி.எஸ் ஆயத்தொலைவுகளைப் பெற முயற்சிக்கிறது, அதனால் அவர்கள் அதிகாரிகளை எச்சரிக்க முடியும் - ஆனால் அழைப்பு துண்டிக்கப்பட்டது. அவர்களுடன் மீண்டும் இணைக்க முயற்சிக்கிறோம்’’.

“பிற்பகல் 16:53 CEST: நாங்கள் கிரேக்க அதிகாரிகளை மின்னஞ்சல் மூலம் எச்சரிக்கிறோம், அதே போல் புரென்டக்ஸ் மற்றும் கிரேக்கத்திலுள்ள UNHCR உட்பட பிற சம்பந்தப்பட்டவர்களுக்கு இதுபற்றி எச்சரிக்கிறோம்.

“17:20 CEST: நாங்கள் துன்பத்தில் இருக்கும் மக்களிடம் பேசுகிறோம், படகு நகரவில்லை என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள். அவர்கள் சொல்கிறார்கள்: “கேப்டன் ஒரு சிறிய படகில் ஏறி புறப்பட்டுள்ளார். தயவுசெய்து, எங்களுக்கு ஏதேனும் தீர்வும், உணவும் தண்ணீரும் வேண்டும் என்கிறார்கள்.''

' 17:34 CEST: துன்பத்தில் உள்ள படகில் இருந்து எங்களுக்கு மற்றொரு அழைப்பு வந்தது மற்றும் அதன் நிலை புதுப்பிக்கப்பட்டது: 36 18, 21 04 - முந்தைய நிலைக்கு மிக அருகில். படகில் கூட்டம் அதிகமாக இருப்பதாகவும், படகு பக்கவாட்டில் சரிந்து வருவதாகவும் அதிலிருந்தவர்கள் கூறுகிறார்கள்.

‘’18:00 CEST: நாங்கள் 'லக்கி மாலுமி' என்ற வணிகக் கப்பலின் நிறுவனத்தை தொடர்பு கொண்டு படகு ஆபத்தில் இருப்பதை அவர்களுக்குத் தெரிவிக்கிறோம். தாம் கிரேக்க கடலோர காவல்படையின் அதிகாரத்தின் கீழ் மட்டுமே செயல்படுவதாக அவர்கள் எமக்கு பதில் கூறுகிறார்கள்.’’

இரண்டு மணி நேரம் கழித்து 20:05 CEST: ‘’லக்கி மாலுமி என்ற வணிகக் கப்பலில் இருந்து தண்ணீரைப் பெற்றதாகவும், காவல்துறையுடன் தொடர்பு கொண்டதாகவும் எச்சரிக்கை தொலைபேசி ஊடாக தகவல் தெரிவிக்கப்பட்டது. எச்சரிக்கை தொலைபேசி, பைத்ஃபுல் வாரியர் என்ற இரண்டாவது வணிகக் கப்பல், துன்பத்தில் இருக்கும் மக்களுக்கு அருகில் இருப்பதையும் கவனிக்கிறது.’’

“14/06/2023 அன்று 00:46 CEST, காலவரிசை முடிவடைகிறது: ஆபத்தில் உள்ள படகுடனான கடைசி தொடர்பின்போது: வணக்கம் நண்பரே... நீங்கள் அனுப்பும் கப்பல்.... இத்துடன் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்படுகிறது.

80க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்று மீட்கப்பட்டு தெற்கு கிரேட் (Crete) தீவிலுள்ள துறைமுகத்திற்கு இழுத்துச் செல்லப்பட வேண்டியிருந்ததால், அதே நாளில் பல அகதிகளின் மரணங்கள் கடலில் நிகழ்ந்திருக்கலாம்.

2014ல் இருந்து 20,000க்கும் அதிகமான அகதிகள் மத்தியதரைக் கடல் பிரதேசத்தில் பெருமளவில் இறந்த பிறகு, அரசாங்கங்களும் அரசியல் தலைவர்களும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்து முதலைக் கண்ணீர் வடித்து, “இந்த துன்பகரமான சம்பவங்களால் ஆழ்ந்து வருந்துகிறார்கள்”என்று புரென்டெக்ஸ் குறிப்பிடுகிறது. ஆனால் மிருகத்தனமான குடியேற்ற எதிர்ப்புக் கொள்கைகளின் தவிர்க்க முடியாத விளைவுதான் இந்த மரணங்கள் ஆகும். இந்த ஆண்டு இதுவரை, மத்தியதரைக் கடலில் கிட்டத்தட்ட 1,000 பேர்கள்  இறந்துள்ளனர். இது போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறுமையில் வாடும் நாடுகளில் இருந்து அகதிகள் வெளியேறுவதைத் தடுக்கும் பெரும் நிதியுதவியுடன் கூடிய ஐரோப்பிய கோட்டை என்ற கொள்கையின் சமீபத்திய பலிகளாகும்.

கடந்த ஜூலை மாதம், 11 பேரைக் கொன்ற ஏஜியன் கடலில் மூழ்கி இறந்த அகதிகளைப் பாதுகாக்கத் தவறியதன் மூலம் கிரேக்கம் சட்டவிரோதமாகச் செயல்பட்டதாக மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் (ECHR) தீர்ப்பளித்தது. இந்த சம்பவத்தில் தப்பிப்பிழைத்த 16 பேர்களில் 13 ஆப்கானியர்கள், இரண்டு சிரியர்கள் மற்றும் ஒரு பாலஸ்தீனியர் ஆவர். கிரேக்க கடலோர காவல்படையினர், துருக்கியை நோக்கி அதிவேகமாக படகை இழுக்க முயன்றபோது, அகதிகளின் படகு மூழ்கடிகடிக்கப்பட்டதாக கூறினர். தப்பிப்பிழைத்தவர்களில் 12 பேரை கரைக்கு கொண்டு வந்து, ​​அவர்களது ஆடைகளை அகற்றி, அவர்களை இழிவுபடுத்தும் விதத்தில் கிரேக்க அதிகாரிகள் சட்டவிரோதமாக நடந்துகொண்டதாக ECHR கண்டறிந்தது. அப்போது இந்தப் படகு மூழ்கிய சூழ்நிலை குறித்து அதிகாரிகள் உரிய விசாரணைகளை நடத்தவில்லை.

கிரேக்கத்தின் போலி-இடது கட்சியான சிரிசா ஆட்சியில் இருந்த ஆண்டுகளில் (2015-19) இந்த மிருகத்தனமான கொள்கையைச் செயல்படுத்துவதில் மிகப்பெரும் பங்கு வகித்தது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் துருக்கிக்கு இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் 'திருப்பி அனுப்பும்' கொள்கையை செயல்படுத்துவது உட்பட, சிரிசாவின் குடியேற்ற எதிர்ப்பு நிகழ்ச்சி நிரல் WSWS ஆல் இங்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடியின் தீவிரம் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான கூடுதல் அகதிகளை உருவாக்குகிறது. கடந்த ஆண்டு, ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் (UNHCR) அமைப்பு, பலவந்தமாக இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனுக்கும் அதிகமாக இருப்பதாக மதிப்பிட்டுள்ளது.

உக்ரேன், சோமாலியா, சூடான் மற்றும் பிற இடங்களில் நடந்துவரும் போர்களினால் தூண்டப்பட்டு, அகதிகளின் இந்த எண்ணிக்கை 110 மில்லியன் மக்களாக, ஒரு புதிய சாதனையை எட்டியுள்ளது. இந்தக் கோளத்தில் உள்ள ஒவ்வொரு 74 பேரிலும் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் அகதிகளாக உள்ளனர் என்று செவ்வாயன்று UNHCR அறிவித்துள்ளது.