இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழு வல்லுனர்கள், மேற்கு கரையில் உள்ள ஜெனின் நகர் மீதும் மற்றும் வேறு இடங்களிலும் நடத்தப்பட்ட இஸ்ரேல் இராணுவ நடவடிக்கைகளைக் கண்டித்து புதன்கிழமை ஓர் அறிக்கையை வெளியிட்டது. அந்த நடவடிக்கைகள், “படைகளைப் பயன்படுத்துவது மீதான சர்வதேச சட்டம் மற்றும் நெறிமுறைகளை மோசமாக மீறியதற்கு நிகராக உள்ளன, ஒரு போர் குற்றமாகக் கூட இருக்கலாம்,” என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தால் அமைக்கப்பட்ட இந்த மூவர் குழு, இஸ்ரேலிய இராணுவத்தின் தொடர்ச்சியான நடவடிக்கைகளைச் சுட்டிக் காட்டியது. இந்த நடவடிக்கைகள், “ஆக்கிரமிப்பு பகுதியில் வசிப்பவர்களைக் கடுமையாக காயப்படுத்தி உள்ளது மற்றும் கொன்றுள்ளது, அவர்களின் வீடுகள் மற்றும் உள்கட்டமைப்பை அழித்துள்ளது, ஆயிரக் கணக்கானவர்களைத் தான்தோன்றித்தனமாக இடம் பெயரச் செய்துள்ளது.”
14,000 பேர் வசிக்கும் ஜெனின் நகருக்கு வெளியே அமைந்துள்ள பெரிய, ஓரளவுக்கு நிரந்தர அகதிகள் முகாம் மீதான இந்த இரண்டு நாள் தாக்குதல், பாலஸ்தீன ஆயுதப் படையினரை மோதல்களுக்குள் இழுக்க வழிவகுத்தது. மேலும் குடிநீர் மற்றும் மின்சார வினியோகம் மற்றும் மருத்துவச் சிகிச்சை மையங்கள் உட்பட அப்பாவி மக்களுக்கான உள்கட்டமைப்புகள் பரந்தளவில் வேண்டுமென்றே அழிக்கப்பட்டன. நான்கு பதின்ம வயதினர் உட்பட குறைந்தபட்சம் 12 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். 100 இக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். அந்த முகாமில் இருந்தவர்களில் ஒரு கால்வாசி பேர் வெளியேற நிர்பந்திக்கப்பட்டனர்.
வீடுகளும் பெரிய கட்டிடங்களும் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளால் அழிக்கப்பட்டதாக பத்திரிகையாளர்கள் உட்பட நேரில் பார்த்தவர்கள் விவரித்தனர். இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) 1,000 சிப்பாய்களை அனுப்பி இருந்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள் உயரடுக்கு அதிரடிப் படைகளில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் மக்கள் நெருக்கமாக வாழும் குடியிருப்பு பகுதிக்குள் அனுப்பப்பட்டனர்.
அந்த ஐ.நா. குழுவின் தகவல்படி, “2002 இல் ஜெனின் முகாம் அழிக்கப்பட்டதற்குப் பின்னர், இந்த தாக்குதல்களே மேற்கு கரையில் நடத்தப்பட்ட மிகவும் கொடூரமான தாக்குதல்களாக இருந்தன.” இரண்டு தசாப்தங்களில் முதல்முறையாக விமானத் தாக்குதல்களும் அதில் உள்ளடங்கி இருந்தன. குறிப்பாக மருத்துவ சிகிச்சை மையங்களே இலக்கில் வைக்கப்பட்டன. காயப்பட்டவர்களை ஆம்புலன்ஸ் வாகனங்களில் வெளியேற்றுவது கூட தடுக்கப்பட்டதாகவும், ஜெனின் பொது மருத்துவமனை மீது இஸ்ரேலிய பாதுகாப்புப் படை துருப்புகள் கண்ணீர்புகை குண்டுகளை வீசியதாகவும் பல செய்திகள் குறிப்பிடுகின்றன.
அந்த ஐ.நா. குழு பின்வருமாறு தெரிவித்தது, “இந்த தாக்குதல்கள், பாலஸ்தீன மக்களுக்கான கூட்டுத் தண்டனையாக இருக்கின்றன. பாலஸ்தீன மக்களை ‘ஒருமித்த பாதுகாப்பு அச்சுறுத்தலாக’ (collective security threat) இஸ்ரேலிய அதிகாரிகள் பார்க்கிறார்கள்.” “ஆக்கிரமிப்பு பாலஸ்தீன பகுதியில் உள்ள பாலஸ்தீனர்கள், சர்வதேச சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டவர்கள் என்பதோடு, குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதிகள் (presumption of innocence) என்ற உரிமை உட்பட அவர்களுக்கு அனைத்து மனித உரிமைகள் மீதும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது… அனைத்திற்கும் மேலாக ஆக்கிரமிப்பு பாலஸ்தீன நிலத்தை அது இணைக்கவும், அதன் பாலஸ்தீனியர்களை இடம்பெயர்த்தவும் வெளியேற்றவும் முயலும் போது, ஆக்கிரமிப்பு சக்தியால் அவர்களை ஒருமித்த பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருத முடியாது,” என்று அது குறிப்பிட்டது.
ஆனால், அமெரிக்க ஊடகங்களில், ஜெனின் நகர மண்ணின் உண்மையான நிலைமைகள் குறித்தோ, அல்லது ஐ.நா. குழுவின் கண்டுபிடிப்புகள் குறித்தோ பெரும்பாலும் எதுவும் குறிப்பிடப்படவில்லை. “பயங்கரவாதத்தை எதிர்ப்பதே” இஸ்ரேல் நடவடிக்கையின் நோக்கம் என்று கூறியதையே கூறுவதோடு, இஸ்ரேல் நடவடிக்கையைக் குறித்த செய்திகள் பொதுவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இஸ்ரேல் நடவடிக்கைகளைச் சர்வதேச சட்ட மீறலாக ஐ.நா. குழு கண்டித்ததைக் குறித்து வாஷிங்டன் போஸ்ட் ஒரேயொரு வரி எழுதி இருந்தது. நியூ யோர்க் டைம்ஸ் மொத்தத்தில் எதுவுமே எழுதவில்லை. இதேயளவுக்கு தொலைக்காட்சி வலையமைப்புகளும் வாய் திறக்கவில்லை.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் மேற்கு கரையில் நிலவும் மூர்க்கமான யதார்த்தம் என்னவென்றால்: பாலஸ்தீனியர்களுக்கு எதிராக தொடர்ந்து திட்டமிட்டு வன்முறையும் ஒடுக்குமுறையும் நடக்கிறது. இஸ்ரேலிய சிப்பாய்களும் அங்கே குடியேறிய அதிதீவிர வலதினரும் மக்களைப் படுகொலை செய்வதுடன், அவர்களைச் சுட்டுக் கொல்கின்றனர், அவர்களின் வீடுகளை அழிக்கின்றனர், நூற்றாண்டுகளாக அவர்கள் வாழ்ந்து வந்துள்ள நிலத்தைச் சூறையாடுகின்றனர்.
பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகூ அரசாங்கம், மேற்கு கரையில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் மிகப் பெரிய அடித்தளத்துடன், வெளிப்படையான பாசிசவாதிகள் உட்பட வலதுசாரி கட்சிகளின் ஒரு கூட்டணியாகும். இந்த ஆட்சி, இத்தகைய பயங்கரவாதம் மற்றும் படுகொலை நடவடிக்கைகளின் மூலம், மில்லியன் கணக்கான பாலஸ்தீனியர்களைப் பலவந்தமாக இடம்பெயர்த்தி, மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைத்துக் கொள்ளும் தர்க்கரீதியான முடிவைத் தயார் செய்து வருகிறது.
பாசிசக் கட்சிகளின் தலைவர்கள், மேற்கு கரையின் ஒட்டுமொத்த அரபு மக்களையும் வெளியேற்றி, அந்தப் பகுதியை இணைக்க அவர்கள் தீர்மானமாக இருப்பதாக பகிரங்கமாக கூறுகிறார்கள். இதில், அவர்கள் அரபியர்களுக்கு எதிரான படுகொலைகளில் தங்களை முன்மாதிரியாகக் காட்டிக் கொள்கிறார்கள். இது 1947-48 இல் இஸ்ரேல் நிறுவப்பட்டதுடன் சம்பந்தப்பட்டதாகும். இன்று “இனச் சுத்திகரிப்பு” என்று அழைக்கப்படக் கூடிய இந்த நடவடிக்கையில் தான், அரபு பெரும்பான்மையினர் இருந்த பாலஸ்தீனம் யூதப் பெரும்பான்மையினரின் இஸ்ரேல் அரசாக மாற்றப்பட்டது.
மேற்கு கரையில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு, அமெரிக்க அரசின் முழு ஒப்புதலுடன் நடந்து வருகிறது. பைடென் நிர்வாகம் நிச்சயமாக இந்த நடவடிக்கைக்கு முன்கூட்டியே பச்சை விளக்கு காட்டி இருந்தது, மேலும் அது நடந்த பின்னரும் அதற்கு வாய்வார்த்தையாக ஒப்புதல் அளித்தது. வெள்ளை மாளிகை பத்திரிகைத்துறை செயலர் கேரீன் ஜீன்-பியர் புதன்கிழமை கூறுகையில், “நிச்சயமாக நாங்கள் இஸ்ரேலின் பாதுகாப்பையும், ஹமாஸ், பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் பிற பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக அதன் மக்களைப் பாதுகாப்பதற்கான அதன் உரிமையையும் ஆதரிக்கிறோம் என்பதை நாங்கள் பல முறை கூறியுள்ளோம்… இஸ்ரேல் ஒரு நெருக்கமான கூட்டாளியும் பங்காளியும் ஆகும். நாங்கள் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும், நிச்சயமாக, பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம். ஆகவே எங்கள் உரையாடலை உரக்கச் சொல்வதில் எதுவும் இல்லை, மாறாக நாங்கள் வழமையான தொடர்பில் உள்ளோம்,” என்றார்.
பெருநிறுவன ஊடகச் செய்திகள், மேற்கு கரையில் இஸ்ரேல் காட்டிய காட்டுமிராண்டித்தனத்திற்கு பைடென் காட்டிய அலட்சியத்தில் இருந்து குறிப்புகளை எடுத்துக் கொண்டன. அங்கே மேற்கு கரையில் ஆக்கிரமிப்பு ஆட்சியின் அதிகரித்தளவிலான இடுக்கிப்பிடியை அமுலாக்க, பாலஸ்தீன நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு எதிராக ஆயுதமேந்திய குடியேறிகளின் வெறியாட்டத்தோடு இராணுவ வன்முறையும் சேர்ந்துள்ளது. இந்தாண்டு இது வரையில் சிப்பாய்கள் மற்றும் அங்கே குடியேறியவர்களால் குறைந்தபட்சம் 155 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது 2002 இல் இரண்டாவது ஆயுதந்தாங்கிய கிளர்ச்சி (intifada) இக்கு பின்னர், அதிகபட்ச மொத்த எண்ணிக்கையாகும்.
இதற்கிடையே, இஸ்ரேல் அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் எவரையும் ஊடகங்கள் யூத-எதிர்ப்புவாதிகள் என்று கண்டித்து அவர்களை வேட்டையாடுகின்றன. இது முக்கியமாக மக்களிடையே பிரபலமாக உள்ளவர்களுக்கு எதிராக திருப்பி விடப்பட்டுள்ளது. மிகச் சமீபத்தில், பின்க் ஃபுளோய்டு ராக் இசைக்குழுவின் நிறுவனரும் இசைக் கலைஞருமான ரோஜர் வாட்டர்ஸ் இலக்கில் வைக்கப்பட்டுள்ளார். இவர் பல தசாப்தங்களாக பாலஸ்தீன மக்களைக் கோட்பாட்டு ரீதியில் ஆதரிக்கிறார் என்பதோடு, இப்போது உக்ரேனில் அமெரிக்க-நேட்டோ போரின் ஒரு சில முக்கிய எதிர்ப்பாளர்களில் இவரும் ஒருவராக இருக்கின்றார்.
உக்ரேன் போர் மற்றும் மேற்கு கரையில் வாழும் பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக, அமெரிக்க ஊடகங்கள் வெட்கமின்றி இரட்டை நிலைப்பாட்டைக் கடைபிடிக்கின்றன. ஆக்கிரமிப்பு பகுதிகளில் இஸ்ரேலின் வன்முறை மற்றும் அபகரிப்பை மூடிமறைக்கும் அதேவேளையில், இதே ஊடகங்கள் உக்ரேனில் ரஷ்ய இராணுவம் இனப்படுகொலையில் ஈடுபட்டிருப்பதாக கூறி, ஒரு விஷமத்தனமான பிரச்சாரத்தில் ஓராண்டுக்கும் மேலாக ஈடுபட்டுள்ளன.
சோவியத் ஒன்றிய கலைப்பில் இருந்து தங்கள் சொத்துக்களைத் திரட்டிய முதலாளித்துவ பில்லியனிய தன்னலக் குழுவின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் புட்டின் ஆட்சியின் காட்டுமிராண்டித்தனத்தை மறைக்கவோ அல்லது மன்னிக்கவோ அங்கே எந்த காரணமும் இல்லை. ஆனால், இதே தரநிலை, நாஜி உடந்தையாளர் ஸ்டீபன் பண்டெராவுக்குத் துதிபாடும் பாசிசவாதிகளோடு பிணைந்துள்ள, அதிபர் வோலொடிமிர் செலென்ஸ்கியின் உக்ரேனிய ஆட்சிக்கும் பொருந்தும். மேலும் இது மத்தியக் கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நீண்ட கால பிரதான கூட்டாளியான இஸ்ரேல் அரசின் குற்றங்களுக்கும் பொருந்தும்.
நியூ யோர்க் டைம்ஸ் அல்லது வாஷிங்டன் போஸ்ட் இரண்டுமே ஜெனின் நகரில் இஸ்ரேலிய தாக்குதல் குறித்து தலையங்கம் எதுவும் எழுதவில்லை. ஆனால் இதுவே அமெரிக்க அரசாங்கத்துடன் முரண்பட்ட ஓர் ஆட்சி இத்தகைய ஒரு நடவடிக்கை மேற்கொண்டிருந்தால், அது கடுமையான கண்டனங்களைத் தூண்டி இருக்கும்.
அந்தத் தாக்குதலுக்கு முந்தைய நாள், “ரஷ்யாவை அதன் போர்க் குற்றங்களுக்குப் பொறுப்பாக்க வேண்டும்” என்ற தலைப்பில் போஸ்ட் ஒரு தலையங்கம் வெளியிட்டது. அது உக்ரேனில் ரஷ்ய நடவடிக்கைகள் குறித்து ஐ.நா. மற்றும் பல மனித உரிமைகள் அமைப்புகளின் கண்டுபிடிப்புகளை மேற்கோளிட்டது — ஜெனினில் இஸ்ரேலிய நடவடிக்கைகள் என்று வரும் போது அதே போன்ற ஆதாரங்களை அது ஒதுக்கி விடுகிறது அல்லது நிராகரிக்கிறது.
அந்தத் தலையங்கம், குறிப்பிட்ட அட்டூழியங்களைக் குறிப்பிடுவதுடன் சில குறிப்பிடத்தக்க தீர்மானங்களுக்கும் வருகிறது, “உண்மையில், திரு. புட்டினும் அவரது உயர்மட்ட ஆலோசகர்களின் கூட்டமும் முதலாவதாக இந்தப் போரைத் தொடங்கியதன் மூலம் ஒரு பரந்த குற்றத்தைச் செய்துள்ளனர் — இந்தக் குற்றத்தில் இருந்து அடுத்தடுத்து மற்ற எல்லா அட்டூழியங்களும் எழுகின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நூரெம்பேர்க்கில் நாஜி போர் குற்றவாளிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட அதே குற்றச்சாட்டுக்களுடன், ஆக்கிரமிப்பு குற்றத்தில் ஈடுபட்டதற்காக அவர்கள் வழக்கை முகங்கொடுக்க வேண்டும்,” என்று அது எழுதுகிறது.
ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷில் இருந்து அமெரிக்க நிர்வாகங்களின் நடவடிக்கைகளுக்கு நூரெம்பேர்க் முன்மாதிரியைப் பயன்படுத்த வேண்டுமென உலக சோசலிச வலைத்தளம் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி உள்ளது. போரைக் கட்டவிழ்த்து விட்டு “ஆக்கிரமிப்பு குற்றத்தை மேற்கொண்டதில்” வாஷிங்டன் டி.சி. அரசாங்கம் ஈடுபட்டதை விட உலகில் வேறெந்த அரசாங்கமும் அதிகமாக ஈடுபட்டதில்லை.
நூரெம்பேர்க் தீர்ப்பாயம், நாஜி ஆட்சி போர் குற்றங்களுக்கு பிரதான ஊடகங்களில் இருந்த அனுதாபிகளுக்கும் தண்டனை விதித்தது. ஒவ்வொரு அமெரிக்க இராணுவ சாகசத்திற்கும் விசுவாசத்துடன் ஆலோசனை வழங்கும் போஸ்ட் ஆசிரியர்கள், அவர்கள் என்ன ஆசைப்படுகிறார்களோ அதைக் குறித்து அவர்களே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
