இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
தொலைக்காட்சி மற்றும் ரேடியோ கலைஞர்களின் திரையுலக நடிகர்களது அமெரிக்க-கழக கூட்டமைப்பின் (Screen Actors Guild–American Federation of Television and Radio Artists - SAG-AFTRA) 160,000 உறுப்பினர்களின் வேலைநிறுத்தம் புதன்கிழமை இரவும் தொடர்ந்தால், அது பல தசாப்தங்களுக்குப் பின்னர் அமெரிக்காவில் நடக்கும் மிகப் பெரிய வேலைநிறுத்தங்களில் ஒன்றாக இருக்கும் என்பதோடு, புத்துயிர் பெற்ற உலகளாவிய வர்க்க போராட்டத்தை இன்னும் கூடுதலாக ஆழப்படுத்தும். கூட்டாட்சி மத்தியஸ்தர்களைக் கொண்டு வேலைநிறுத்த நடவடிக்கையைத் திணறடிப்பதற்கான பெருநிறுவனங்களின் கடைசி நிமிட பெரும்பிரயத்தன முயற்சிகளையும், மற்றும் மற்றொரு தாமதத்தையோ அல்லது விற்றுத்தள்ளலையோ அறிவிப்பதற்கான தொழிற்சங்கத்தின் எந்தவொரு முயற்சியையும் தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும்.
பத்தாயிரக் கணக்கான நடிகர்கள், ஒளிபரப்பு சேவை பத்திரிக்கையாளர்கள், செய்தி எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலரும் மே 2 இல் இருந்து வேலைநிறுத்தத்தில் உள்ள அமெரிக்க எழுத்தாளர்கள் சங்கத்தின் (WGA) இந்த 11,000 உறுப்பினர்களுடன் இணைவார்கள். இந்த SAG-AFTRA வேலைநிறுத்தம், அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பில் அமெரிக்க நடிகர்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கிட்டத்தட்ட எஞ்சியுள்ள அனைத்து திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்புகளையும் நிறுத்தும்.
1960 இக்குப் பின்னர் எழுத்தாளர்கள் மற்றும் நடிகர்கள் நடத்தும் இந்த முதல் “இரட்டை வேலைநிறுத்தத்தில்”, அமெரிக்க பொழுதுபோக்குத் துறையின் பெரும்பாலான பகுதிகள் முடக்கப்படும் சாத்தியக்கூறு, மிகப்பெரும் தாக்கங்களைக் கொண்டுள்ளது.
முதலாவதாக, இது, உலக முதலாளித்துவத்தின் மையத்தில், தொழிலாள வர்க்கத்தின் மாபெரும் பலத்தையும் வீச்சையும் எடுத்துக்காட்டுகிறது. முதலாளித்துவ ஆட்சிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் இன்றியாததாய் விளங்கும் பல பில்லியன் டாலர் தொழில்துறையின் நடவடிக்கைகளைத் தொழிலாளர்களால் ஒரேயடியில் முடக்க முடியும்.
இரண்டாவதாக, இந்த வேலைநிறுத்தத்தின் விரிவும் மற்றும் உலகளாவிய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி துறை தயாரிப்பில் அதன் தாக்கமும், ஒன்றோடொன்று இணைந்த, சர்வதேச கலாச்சார வாழ்வின் தன்மையையும் மற்றும் திரைப்பட, தொலைக்காட்சி மற்றும் அவை தொடர்புடைய அனைத்து துறைகளின் கலைஞர்களின் மற்றும் தொழிலாளர்களின் பொதுவான தேவைகள் மற்றும் நலன்களையும் வெளிப்படுத்துகின்றன.
மூன்றாவதாக, ஒரு வேலைநிறுத்தமானது, வேலைகள், கூலிகள் மற்றும் நிலைமைகள் மீதான இடைவிடாத தாக்குதல்களையும் பெருநிறுவனங்களையும் எதிர்க்க, UPS நிறுவன தொழிலாளர்கள், வாகனத்துறை தொழிலாளர்கள் மற்றும் ஹோட்டல் தொழிலாளர்கள் உட்பட, மற்ற தொழிலாளர்களையும் ஊக்கப்படுத்தும். அனைத்திற்கும் மேலாக, SAG-AFTRA உறுப்பினர்கள் புறநிலை ரீதியாக உலகெங்கிலும போராட்டத்தில் உள்ள தொழிலாளர்களுடன் அணி சேர்ந்து வருகிறார்கள்.
நான்காவதாக, தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவினரிடமும் அதிகரித்து வரும் எதிர்ப்பு, அமெரிக்காவைப் பொதுவாக திருப்திகரமான, செல்வசெழிப்பான நாடாக, அரசாங்கத்தின் முடிவில்லாத போர்களுக்கு ஆதரவு இருப்பதாகக் காட்டுவதற்காக அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்களின் தொடர்ச்சியான பிரச்சார முயற்சியை அம்பலப்படுத்துகிறது. உண்மையில் சொல்லப் போனால், சமூக கோபம் மற்றும் எதிர்ப்பின் கொந்தளிக்கும் கொப்பரையாக அமெரிக்கா உள்ளது.
SAG-AFTRA தொழிலாளர்கள், பணவீக்கம் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவைகளின் வளர்ச்சியால் ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பு உட்பட, எண்ணற்ற உறுதியான பிரச்சினைகளுக்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கலாம். ஆனால் மேற்கூறிய இரண்டு காரணங்களும், எஞ்சிய விஷயங்களுக்கும் கடுமையான அடியைக் கொடுத்ததுடன், வேலை காலங்களின் குறைப்பு மற்றும் வேலை குறைப்பை ஏற்படுத்தின. நுண்ணறிவின் வளர்ச்சி, நிகழ்ச்சிகளை மாற்றி அமைக்கவும் மற்றும் நடிகர்களைப் பிரதியீடு செய்யவும் பெருநிறுவன குழுமங்களை அனுமதிக்கும்.
2020 இல் இருந்து, SAG-AFTRA உறுப்பினர் எண்ணிக்கை 10,000 ஆக அதிகரித்த அதேவேளையில் சந்தா வருவாய் “உயரவில்லை” என்பதை மே மாதம் Variety வலைத்தளத்தின் கட்டுரை ஒன்று அறிவித்தது. இது நிஜமான கூலிகள் குறைந்திருப்பதைக் காட்டுகிறது. எந்தவொரு ஆண்டிலும், ஒரு மதிப்பீட்டின்படி 50 சதவீத SAG-AFTRA உறுப்பினர்களால் “நடிப்புக்காக ஒரு பைசாவும் சம்பாதிக்க முடியாது; 5-15% உறுப்பினர்கள் மட்டுமே $26,470 என்ற சுகாதாரப் பாதுகாப்பு வரம்புக்குப் போதுமானளவில் சம்பாதிக்கிறார்கள்.” தொழிற்சங்க உறுப்பினர்களில் இரண்டு சதவீதத்தினர் மட்டுமே “ஒரு நடுத்தர வர்க்க சம்பளத்தைப் பாதுகாப்பாகப் பெறுகிறார்கள் ... இந்த தொழிலாளர் சக்தி மிகவும் பாதுகாப்பின்றி, உதிரி-பொருளாதாரம் சார்ந்த தொழிலாளர்களைப் போல, நிச்சயமற்ற நிலைமைகளுக்கு ஆளாகி வருகிறார்கள்,” என்று Variety வலைத்தளம் மதிப்பிட்டுள்ளது.
அதே நேரத்தில், எழுத்தாளர்களும் நடிகர்களும், ட்ரில்லியன் கணக்கான சொத்துக்களைக் கொண்ட டிஸ்னி, அமசன், நெட்ஃபிக்ஸ், ஆப்பிள், சோனி மற்றும் வார்னர் பிரதர்ஸ் போன்ற திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவன கூட்டமைப்புக்குள் ஒழுங்கமைந்துள்ள மிகப் பெரும் பெருநிறுவனங்களை எதிர்கொள்கின்றனர்.
இந்த நிறுவனங்களின் நிர்வாகிகள், எழுத்தாளர்கள் மற்றும் நடிகர்களின் “நியாயமற்ற” கோரிக்கைகளைக் கண்டிக்கும் அதேவேளையில் அவர்களின் பேராசையைத் தொடர்கிறார்கள். “ஹாலிவுட் உயர்மட்ட நிர்வாகிகளுக்கான [சம்பளம்] இந்தப் பெருந்தொற்றின் போது உயரத்திற்கு அதிகரித்தது. 2018 இன் மொத்த சம்பளத்தை விட 50% அதிகரித்து, 2021 இல் அது 1.43 பில்லியன் டாலராக இருந்தது,” என்று லோஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் ஜூன் மாத ஆரம்பத்தில் வெளிப்படுத்தியது. கடந்த ஐந்தாண்டுகளில், பொழுதுபோக்குத் துறையில் மூன்று மிக அதிக சம்பளம் பெறும் நிர்வாகிகளின் கூட்டு வருமானத் தொகை 1.1 பில்லியன் டாலராகும். “பொருளாதார சமத்துவமின்மையால் சூழப்பட்ட ஒரு நாட்டிலும் கூட, ஹாலிவுட்டின் சம்பள விகிதங்கள் தனித்துவமானவை,” என்று டைம்ஸ் எழுதியது.
அனைத்திற்கும் மேலாக, SAG-AFTRA உறுப்பினர்களின் சமீபத்திய கடிதத்தில், இறுதியில் 2,000 இக்கும் அதிகமான கலைஞர்கள் கையொப்பமிட்டிருந்தனர். அவர்களின் தொழிற்சங்கத் தலைவர்களுக்கு எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதம், ஒரு காட்டிக்கொடுப்பை நடத்த வேண்டாமென அவர்களை எச்சரித்ததுடன், புதிய கொந்தளிப்பான காலக்கட்டத்திற்கான ஓர் அறிகுறியாக இருந்தது. தொழிற்சங்க தலைவர்களிடம் இருந்து உளமகிழ்ச்சியான அறிவிப்புகளுக்கு விடையிறுப்பாக இருந்த அந்த பகிரங்க கடிதம், “மாற்றத்தைத் தரும் உடன்படிக்கைக்கு” குறைவின்றி, “அதிர்வூட்டும் மறுசீரமைப்பை” கோரியது. “SAG-AFTRA தலைமை தியாகங்கள் செய்ய தயாராக இல்லை, உறுப்பினர்கள் தியாகங்கள் செய்ய தயாராக இருக்கக்கூடும்,” என்பதைக் குறித்து அது கவலை வெளியிட்டது.
மிகவும் வரவேற்கத்தக்க இந்த நடவடிக்கை, ஒரு விற்றுத்தள்ளலை எட்டுவதற்கான முயற்சிகளைக் கீழறுத்ததுடன், SAG-AFTRA தலைவர்களைப் பலவீனப்படுத்தியது. தொழிற்சங்க தலைவர் ஃபிரான் ட்ரெஷர் ஒரு வேலைநிறுத்தம் ஏற்படலாம் என்பதற்கு முந்தைய நாட்களில் கிம் கர்தாஷியன் (Kim Kardashian) உடன் இத்தாலியில் கேமராக்களுக்குத் தீனிக் கொடுக்கும்” விதத்தில் ஆடம்பரமான வாரயிறுதியைச் செலவிட்டார் என்பது வெளியானதும், நடிகர்கள் இன்னும் கூடுதலாக ஆத்திரமடைந்தனர். கர்தாஷியன் ஜூன் மாத இறுதியில் எழுத்தாளர்களின் மறியலைத் தாண்டியதற்காகக் கோபத்தைத் தூண்டியிருந்தார். ட்ரெஷர் மீண்டுமொருமுறை பிற்போக்குத்தனமான -எதிர்ப்பு பிரச்சாரத்தின் தன்னை வெளிப்படுத்தினார்.
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பில் தற்போது ஏற்பட்டுள்ள வெடிப்பு, ஒளிபரப்பு சேவை மற்றும் இதர பிறவற்றை விட மிகப் பெரியது. திரைப்பட மற்றும் தொலைக்காட்சி உற்பத்தி ஒரு மோசமான வியாபார முறை” என்பதை தற்போதைய சூழ்நிலை அம்பலப்படுத்துகிறது என்பது மட்டுமல்ல, சில விமர்சகர்கள் அறிவுறுத்துவதைப் போல, அமெரிக்க முதலாளித்துவமே “மோசமானது,” உண்மையில், ஏற்றுக் கொள்ளவியலாத ஒரு சமூக முன்மாதிரி” என்பதைக் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதை இது எடுத்துக்காட்டுகிறது.
பகுப்பாய்வின் இறுதியில், அமெரிக்க மற்றும் உலகளாவிய முதலாளித்துவத்தின் சீரழிந்த ஆபத்தான நிலையே ஒட்டுமொத்தமாக எழுத்தாளர்கள் மற்றும் நடிகர்களின் வேலைநிறுத்த நடவடிக்கையில் உள்ள பிரச்சினையாக உள்ளது. அமெரிக்காவின் ஒருபோதும் முடிவுறாத போர்கள் மீதும், அணுஆயுத நிர்மூலமாக்கல் அச்சுறுத்தல் மீதும், வறுமை மற்றும் சமூக சமத்துவமின்மை, சுற்றுச்சூழல் பேரழிவுகள், இந்தப் பெருந்தொற்றில் மில்லியன் கணக்கானவர்களின் அவசியமற்ற மரணங்கள், மனிதப் படுகொலைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் வன்முறை, கருக்கலைப்பு மற்றும் பிற அடிப்படை உரிமைகள் மீது நீதிமன்றங்களின் தாக்குதல்கள், புத்தகங்களுக்குத் தணிக்கை மற்றும் தடைகள், பெருநிறுவன-சார்பு போர் வெறி கொண்ட பைடென் நிர்வாகம் மீதும் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரொன் டிசாண்டிஸ் போன்ற அறியாமை கொண்ட பாசிசவாத குண்டர்கள் மீதும் மக்கள் கோபம் அதிகரித்து வருகிறது.
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தயாரிப்பை நிறுத்துவது, கலைத்துறைச் சுதந்திரம் மற்றும் படைப்பாற்றலின் குரல்வளையை நெரிக்கும் பெருநிறுவனத்திற்கு ஓர் அச்சுறுத்தலும் மற்றும் ஒரு சவாலும் ஆகும். தொழில்துறை தலைமை செயலதிகாரிகள், நிஜத்தில் அவர்களின் தலையில் ஒன்றும் இல்லாமல், பெரும்பாலும் காமிக்ஸ் புத்தக கற்பனைத் தொடர்களையும் மற்றும் “அதிரடி சண்டைப் படங்களையும்” தயாரிக்கிறார்கள். ஒன்றை விட ஒன்று மிகவும் வெறுமையாகவும், மிகவும் பரிதாபமாகவும் உள்ளது. மிகவும் தீவிரமாக, உறுதியாகவும் செயல்பட்டு வரும் எழுத்தாளர்களும் நடிகர்களும் — இதற்கான குறிப்பிடத்தக்க உதாரணங்கள் சமீபத்திய ஆண்டுகளில் வெளிப்படத் தொடங்கி உள்ள நிலையில் — அவர்கள் கொடூரமாக குப்பைகளே மேலோங்கி இருப்பதையும், இரசிகர்களின் மூளைகளை மழுங்கடிக்கும் விதத்தில் ஸ்டூடியோக்களும் வலையமைப்புகளும் வேண்டுமென்றே செயல்படுவதையும் பார்க்கின்றனர். கலைஞர்கள் இந்த சமகால சமூக வாழ்வின் கடுமையான உண்மைகளுக்கு எதிராக எழுந்து நிற்பதால், எழுத்தாளர்கள் மற்றும் நடிகர்களின் இந்த வேலைநிறுத்த இயக்கமானது, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி உற்பத்தியை யதார்த்தத்தை நோக்கி திரும்புவதை ஊக்குவிக்க வேண்டும்.
ஒட்டுமொத்தமாகப் பொழுதுபோக்குத் துறை சங்கங்களின் தலைமை, இந்தப் போராட்டத்தை அது பார்க்கும் கோணத்தில் இருந்தே அதன் மதிப்பற்றத் தன்மையை ஏற்கனவே நிரூபித்துள்ளது. இந்தத் தொழில்துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மீது கட்டுப்பாடு சென்று கொண்டிருக்கின்ற நிலையில், அவர்கள் இழந்ததைக் குறைந்தபட்சம் சமாளிக்கவாவது, எழுத்தாளர்களுக்கும் நடிகர்களுக்கும் 25 சதவீத சம்பள உயர்வுகள் வேண்டும் என்பதோடு, நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களின் பார்வையாளர் எண்ணிக்கை மற்றும் வெற்றியோடு தொடர்புபடுத்தி மீத சலுகைகள் வழங்கப்பட வேண்டும். இதற்கு நிறுவனங்கள் அவற்றின் கணக்குப் புத்தகங்களைத் தொழிலாளர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும். இந்தப் போராட்டத்தின் பரிமாணங்களும் சூழ்நிலையின் தீவிரத்தன்மையும், இந்தப் போராட்டத்தை இறுதியில் வரையில் கொண்டு செல்ல, அவர்களின் அதிகரித்த உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் விதமான மற்றும் உறுப்பினர்களே ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தும் சாமானிய தொழிலாளர் குழுக்கள் என்ற புதிய அமைப்புகள் தேவைப்படுகின்றன.
SAG-AFTRA வேலைநிறுத்தம் வெடித்து வந்தால், அது ஒரு கொந்தளிப்பான சமூக மற்றும் அரசியல் உள்ளடக்கத்தில் இருக்கும்.
ஒருபுறம், பைடென் தலைமையில் வில்னியஸில் ஒன்று கூடியுள்ள ஏகாதிபத்தியவாதிகள் ஏதோ பயங்கரமான ஒன்றை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள்: அதாவது, உக்ரேனில் இரத்தக்களரியான போர் விரிவாக்கம், அதிக மரணங்கள், இன்னும் பரந்தளவில் உலகக் கொந்தளிப்பின் ஆபத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
மறுபுறம், தற்போதுள்ள நிலைமைகளுக்கு எதிரான வெடிப்புகள், அன்றாட நடவடிக்கைகளாகி உள்ளன. பிரான்ஸ் மற்றும் இலங்கையில் பாரிய போராட்டங்கள், பிரிட்டிஷ் கொலம்பியா துறைமுகத் தொழிலாளர்கள் மற்றும் லோஸ் ஏஞ்சல்ஸின் ஹோட்டல் தொழிலாளர்களின் வெளிநடப்புகள், பிரிட்டனில் காட்டிக்கொடுக்கப்பட்ட தபால்துறை தொழிலாளர்களின் பாரிய கோபம், சமூக கோபத்தின் இன்னும் பல வெடிப்புகள் என இவை எப்போதும் உத்தியோகப்பூர்வ சமூகத்திற்கு ஒரு “ஆச்சரியமாக” வருகின்றன.
காட்டுமிராண்டித்தனமான பிற்போக்குத்தனமும், சமூக மேலெழுச்சியும் என இரண்டு நிகழ்வுபோக்குகள் ஒரே நேரத்தில் நடந்து வருகின்றன.
சமூகம் மற்றும் கலாச்சாரத்தின் சோசலிச மறுசீரமைப்பிற்காக நனவுடன் போராடும், ஒரு சக்தி வாய்ந்த, கட்டளையிடும் சர்வதேச சக்தியாக, தொழிலாள வர்க்கத்தின் இயக்கம் தான், தற்போதைய முட்டுச்சந்தில் இருந்து வெளியேறுவதற்கான ஒரே வழியாக உள்ளது. போர் கொடூரங்கள் மற்றும் முதலாளித்துவக் காட்டுமிராண்டித்தனத்திற்கான பதில் இந்தப் பாதையில் தான் இருக்கிறது.