இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
பல ஆரம்ப அறிகுறிகள் இருக்கின்ற நிலையில், அமெரிக்கா கோவிட்-19 பெருந்தொற்றின் மற்றொரு அதிகரிப்புக்குள் நுழைந்துள்ளது. வேஸ்ட்பேப்பர் முறையில் எண்ணிக்கை மட்டங்களும், கோவிட்-19 இக்காக அவசர சிகிச்சை அறைகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும், நோய்தொற்று உறுதிப்படுத்தும் விகிதமும் நாடெங்கிலும் அதிகரித்துள்ளன.
ஜூன் 24 மற்றும் ஜூலை 12 இக்கு இடையே, பயோபோட் (Biobot) நிறுவன கழிவு நீர் கோவிட் ஆய்வு முறை தேசியளவில் இந்த நோய் 46 சதவீதம் அதிகரித்திருப்பதாகக் காட்டியது. தெற்கு மற்றும் கடற்கரை பகுதிகளில் இதன் திரட்சி அதிகமாக உள்ளது. தொற்றுநோய் ஆய்வு ஒன்றின் தகவல்படி, ஒவ்வொரு நாளும் சுமார் 280,000 அமெரிக்கர்கள் தற்போது கோவிட்-19 நோய்தொற்றுக்கு உள்ளாகி வருவதையும், இது தொடர்ந்து அதிகரித்து வருவதையும் இந்த கழிவு நீர் ஆய்வு முறையில் கண்டறியப்பட்ட மட்டங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில் கடந்த வாரம் தேசிய அளவில் கோவிட்-19 இக்காக அவசர சிகிச்சை பிரிவுக்கு வந்தவர்கள் எண்ணிக்கை 10.7 சதவீதம் அதிகமாக இருந்ததையும், அலாஸ்கா, புளோரிடா மற்றும் ஹவாய் ஆகியவை அதிக அதிகரிப்பு விகிதத்தைப் பதிவு செய்திருந்ததையும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) சமீபத்திய புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. பரிசோதனையில் உறுதி செய்யப்பட்ட நோய்தொற்று விகிதம் தேசியளவில் கடந்த வாரத்தை விட 0.7 சதவீதம் அதிகரித்திருப்பதையும் CDC புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. அரிசோனா, ஆர்கன்சாஸ், இடாஹோ, லூசியானா, ஆக்லஹோமா, ஓரிகான், டெக்சாஸ் மற்றும் வாஷிங்டன் ஆகிய இடங்களில் பதிவாகும் விகிதம் 7 சதவீதத்திற்கு அதிகமாக உள்ளது.
தற்போதைய போக்கில் இந்தப் புள்ளிவிபரங்கள் தொடர்ந்தால், இது மே மாத ஆரம்பத்தில் உலக சுகாதார அமைப்பும் (WHO) பைடென் நிர்வாகமும் அவர்களின் கோவிட்-19 பொது சுகாதார அவசரநிலையை (PHE) முடிவுக்குக் கொண்டு வந்ததற்குப் பின்னர், அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் முதல் அதிகரிப்பாக இருக்கும்.
இந்த முன்கூட்டிய மற்றும் விஞ்ஞானப்பூர்வமற்ற முடிவுகள், உலகெங்கிலும் எண்ணற்ற அரசாங்கங்கள் நடைமுறையளவில் இந்தப் பெருந்தொற்று மீதான அனைத்து கண்காணிப்புகளையும் கைவிட இட்டுச் சென்றது. அமெரிக்காவில், CDC அனைத்து கோவிட்-19 நோயாளிகள் பற்றிய விபரங்களை வெளியிடுவதையும் திடீரென நிறுத்தியது. அதேவேளையில் பைடென் நிர்வாகம் வெள்ளை மாளிகை கோவிட் விடையிறுப்பு குழுவைக் கலைத்தது. CDC இயக்குனர் ரோசெல்லி வாலென்ஸ்கி அவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்தார்.
கோவிட்-19 நோயாளிகள் விபர வெளியீடுகள் நிறுத்தப்பட்டதன் விளைவாக, கழிவு நீர் ஆய்வு முறை புள்ளிவிபரங்கள் போன்ற முன்கூட்டி எச்சரிக்கை வழங்குவதற்கான அறிகுறிகளையும், தேசிய அல்லது உள்ளூர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதியாகும் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கைக் குறித்த புள்ளிவிபரங்களையும் தொடர்புபடுத்திப் பார்ப்பது சாத்தியமில்லாமல் போனது. தடம் அறிவதற்கான வழிவகைகள் முறையாக கலைக்கப்பட்டு விட்டதால், இந்தப் புள்ளிவிபரங்களே இல்லை என்றாகி உள்ளன.
பொது சுகாதார புள்ளிவிபரங்கள் மொத்தமாகக் கைவிடப்பட்டதற்கு விடையிறுப்பாக, உலகெங்கிலும் ஒவ்வொரு பெருநிறுவன ஊடகமும் பெரும்பாலும் ஒட்டுமொத்தமாக இந்தப் பெருந்தொற்று குறித்து குறிப்பிடுவதையே நிறுத்திவிட்டன. முதலாளித்துவ ஆளும் உயரடுக்குகளின் தொடர்ச்சியான குற்றங்களுக்கு மூடிமறைப்பை வழங்க, இது கபடத்தனமான மவுனப் பிரச்சார வடிவமாக இருந்தது.
திங்கட்கிழமை, நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரையாளர் டேவிட் லியோன்ஹார்ட், ஒரு நேர்மையற்ற மற்றும் வெளிப்படையாகவே பொருத்தமற்ற நேரத்தில் வெளியான தலையங்கத்தில் இந்த மவுனத்தை உடைத்தார். “இந்தப் பெருந்தொற்று நிஜமாகவே முடிந்துவிட்டது,” என்று பொய்யாக அறிவிக்க, அந்தத் தலையங்கம், தேர்வு செய்து வெறும் நான்கு நாடுகளில் இருந்து ஒரேயொரு புள்ளிவிபரத்தை மட்டும் எடுத்துக் கையாண்டிருந்தது.
லியோன்ஹார்ட், டைம்ஸில் இந்தப் பெருந்தொற்றைக் குறைத்துக் காட்டுவதில் தலையாயவர். தினந்தோறும் பெருந்தொற்று விபரங்களைக் குறிப்பிடுவதற்காக மே 2020 இல் தொடங்கப்பட்ட அவருடைய The Morning செய்தி மடல் (Newsletter) பரவலாகப் படிக்கப்பட்ட போது, அவர் காலத்திற்கு முந்தியே அந்தப் பெருந்தொற்று முடிந்துவிட்டதாக மீண்டும் மீண்டும் அறிவித்தார், அத்துடன் முகக்கவசம் அணிவதையும் பிற தணிப்பு நடவடிக்கைகளை நிராகரிக்கவும் வலியுறுத்தினார், மேலும் குழந்தைகளையும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி உள்ளவர்களையும் கோவிட்-19 கடுமையாக பாதிக்காது என்று அதன் கடுமையைக் குறைத்துக் காட்டினார், அத்துடன் நெடுங்கோவிட் ஆல் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கானவர்களின் அனுபவங்களை நிராகரித்தார் மற்றும் பொது சுகாதார கொள்கையை வழிநடத்தும் கோட்பாடாக தனிநபர் நடவடிக்கைகளை மேலுயர்த்த முயன்றார்.
லியோன்ஹார்டின் நடைமுறைவாத, குறுகிய பார்வை கொண்ட, விஞ்ஞானப்பூர்வமற்ற கண்ணோட்டங்கள், பெரிதும் டைம்ஸின் செல்வசெழிப்பான நடுத்தர வர்க்க வாசகர்களை உருவகப்படுத்துகின்றன என்பதோடு, அவர்களை வழிநடத்துகின்றன. மேலும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பைடென் நிர்வாகத்தின் ஒவ்வொரு குற்றகரமான பெருந்தொற்று கொள்கையை உருவாக்கவும் நியாயப்படுத்தவும் உதவி உள்ளன. இந்த பெருந்தொற்றின் ஆரம்பத்தில், பைடென் அவரே கூட தானும் லியொன்ஹார்ட் வாசகர்களில் ஒருவர் என்று குறிப்பிட்டார்.
“ஒரு நேர்மறையான கோவிட் மைல்கல்” என்ற தலைப்பில் திங்கட்கிழமை அந்த செய்திமடல், அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் மற்றும் பிரேசிலில் அதிகப்படியான இறப்புகள் தற்போது பெருந்தொற்றுக்கு முந்தைய மட்டங்களில் இருப்பதாகக் காட்டும் புள்ளிவிபரங்களை மேற்கோளிடுகிறது. இந்த ஒரேயொரு புள்ளிவிபரத்தை வைத்து, லியோன்ஹார்ட், “பெருந்தொற்று இறுதியில் முடிந்துவிட்டது,” என்ற பொய்யான மற்றும் முக்கியமான தீர்மானங்களை எடுக்கிறார். கோவிட்-19 இனி “பெருபாலானவர்களுக்கு ஒரு பயங்கர அச்சுறுத்தல் இல்லை” என்பதோடு, “அந்த வைரஸ் ஒரு சாதாரண நோயாக மாறிவிட்டது,” என்று தீர்மானிக்கிறார்.
இந்தப் பெருந்தொற்று நெடுகிலும் பொதுமக்களுக்குக் கல்வியூட்ட முயன்ற கொள்கைப் பிடிப்பான விஞ்ஞானிகள் மற்றும் தொற்றுநோய் நிபுணர்களால் பரவலாக வெறுக்கப்படும் லியோன்ஹார்ட், அவரது சமீபத்திய இந்த பிதற்றல்களுக்காக ட்வீட்டரில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். லியோன்ஹார்ட் மீது மிகவும் பரவலாக பகிர்ந்து கொள்ளப்பட்ட மறுப்புரைகளில் ஒன்று, சுகாதாரச் சட்ட அறிஞரும், அல்பேர்டா பல்கலைக்கழகத்தின் இன அடிப்படையிலான உடல்நல வல்லுனருமான பிளேக் முரோச்சிடம் இருந்து வந்தது.
“பொய்,” முரோச் எழுதினார். “இந்தப் பெருந்தொற்று உண்மையிலேயே முடிந்துவிட்டது என்றால், அதிகப்படியான மரணங்கள் சில காலத்திற்கு வரலாற்று சராசரிகளை விடவும் கணிசமாகக் குறைந்திருக்கும். ஏற்கனவே கோவிட் இக்கு முன்னரே இறந்து விட்டார்கள் என்பதால், அவர்கள் இறக்காமல் இருப்பதைப் பிரதிபலித்திருக்கும். பலர் இன்னமும் இறந்து கொண்டிருக்கிறார்கள்.”
இந்த ஒரேயொரு புள்ளிவிபரத்தில் இருந்து பெரும் தீர்மானங்களுக்கு வந்திருப்பதற்குக் கூடுதலாக, அதன் தேசியவாத முன்னோக்கே லியோன்ஹார்டின் வாதத்தில் உள்ள அடிப்படை தவறாக உள்ளது. வரையறையின்படி, ஒரு பெருந்தொற்று என்பது உலகளாவிய இயல்நிகழ்வாகும், அதன் பரவல் ஒரேயொரு நாட்டை வைத்து தீர்மானிக்க முடியாது.
உலகளவில் ஆய்வுக்கு உட்படுத்தும் போது, லியோன்ஹார்ட் சுட்டிக்காட்டும் அந்தப் புள்ளிவிபரம் — அதாவது அதிகப்படியான மரணங்கள் — தெளிவாக மேலுயர்த்திக் காட்டுவதாக உள்ளது. பெருந்தொற்றுக்கு முந்தைய புள்ளிவிபரங்களைக் கடந்து ஒவ்வொரு நாளும் சுமார் 9,000 பேர் தொடர்ந்து இறந்து கொண்டிருப்பதாக The Economist பத்திரிகை மதிப்பிடுகிறது. மொத்தத்தில், இப்போது 24.1 மில்லியன் அதிகப்படியான மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் சுமார் ஒரு மில்லியன் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அதிகரித்துள்ளது.
இதையும் விட, இந்தப் பெருந்தொற்றை வெறுமனே அதிகப்படியான மரணங்களை வைத்து மட்டுமே அளவிட முடியாது. இந்த விஷயத்தில், லியோன்ஹார்ட் தேர்ந்தெடுத்த இந்த புள்ளிவிபரம், அவர் எழுத்துக்களில் உள்ள நேர்மையின்மையை எடுத்துக்காட்டுகிறது. “வேறு வகை மாறுபாடுகள்,” (variant), “வைரஸ் பரிணாமம்,” “நெடுங்கோவிட்,” “நோயாளிகள்,” “பரிசோதனை” மற்றும் “வேஸ்ட்வாட்டர்” போன்ற வார்த்தைகளே அவர் கட்டுரையில் இல்லை. ஏனென்றால் இந்த பெருந்தொற்று தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதோடு, உலகளவில் வெகுஜன மக்களுக்கு ஓர் அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதை இந்தப் பெருந்தொற்று பற்றிய இந்த உண்மைகள் எடுத்துக்காட்டுகின்றன.
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள வெளிப்படையான அதிகரிப்புக்குப் பக்கவாட்டில், ஜப்பானின் வறிய தீவான ஒகினாவாவை மையமிட்டு, அந்நாடு இந்தப் பெருந்தொற்றின் ஒன்பதாவது அலையில் இப்போது சிக்கி உள்ளது. மருத்துவமனைகள் மீண்டுமொருமுறை நிரம்பி உள்ளன. “நிலைமை ஒரு மருத்துவ நெருக்கடியைப் போல இல்லை, இந்த அமைப்புமுறையின் பொறிவைப் போல் உள்ளது,” என்று மருத்துவத்துறை தொழிலாளர் ஒருவர் Okinawa Times இக்கு தெரிவித்தார்.
இது, கடந்த குளிர்காலத்தில் அழிவுகரமாக சீனாவின் பூஜ்ஜிய-கோவிட் கொள்கை அகற்றப்பட்டதற்கு ஒன்பது மாதங்களுக்குப் பின்னர், அந்நாட்டில் சமீபத்திய மாதங்களில் ஏற்பட்ட இந்தப் பெருந்தொற்றின் மிகப் பெரிய இரண்டாவது அலையைப் பின்தொடர்ந்து வருகிறது.
நெடுங்கோவிட்டால் இப்போது சுமார் 20 மில்லியன் அமெரிக்கர்களும் உலகெங்கிலும் அனேகமாக நூறு மில்லியனுக்கு அதிகமானவர்களும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்படுகின்ற நிலையில், நெடுங்கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்களைப் பொருத்த வரையில், இந்தப் பெருந்தொற்று தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும் ஒரு பேராபத்தாக உள்ளது. லியோன்ஹார்ட் இந்தப் பெருந்தொற்று நெடுகிலும் செய்துள்ளதைப் போலவே, கண்களுக்கு முடிவே தெரியாமல் நீண்ட இயலாமை கதியில் சிக்க வைக்கப்பட்டுள்ள அந்த பெருந்திரளான மக்களுக்கு மறைந்திருக்கும் இந்தப் பனிப்பாறையை அவர் மூடிமறைத்து, உதறி விடுகிறார்.
இறுதியாக, “இந்தப் பெருந்தொற்று நிஜமாகவே முடிந்து விட்டதாகவும்”, “இந்த வைரஸ் ஒரு சாதாரண நோயாக மாறிவிட்டதாகவும்”, டைம்ஸ் மற்றும் பைடென் நிர்வாகத்தின் சுய-பிரமைக்கு எதிர்முரணாக, கொள்கைப் பிடிப்பான விஞ்ஞானிகள் இந்த வைரஸ் பரிணாமத்தின் தொடர்ந்து கொண்டிருக்கும் அபாயங்களைக் குறித்து ஆழ்ந்த கவலைக் கொண்டுள்ளனர்.
கடந்த மாதம் நுண்கிருமியியல் துறைக்கான அமெரிக்க சமூகத்தின் மாநாட்டில் பேசுகையில், பிரபல பரிணாமவியல் உயிரியியல் துறை வல்லுனர் ட்ரெவர் பெட்ஃபோர்ட் வலியுறுத்துகையில், SARS-CoV-2 “2021 இல் போலவே அதே வேகத்தில் பரிணமித்து வருகிறது. அது H3N2 சுவாச நோயை விட இரண்டரை மடங்கு வேகமாக பரிணமித்து வருகிறது… மேலும் உண்மையில் அது வேகம் குறைவதற்கான எந்த அறிகுறியும் காட்டவில்லை,” என்றார்.
லியோன்ஹார்ட்டால் உருவகப்படுத்தப்படும் இந்த மேலாட்டமான கண்ணோட்டத்திற்கு எதிரான கூர்மையான எச்சரிக்கைகளில் ஒன்றை, கடந்த மாதம் நுண்ணுயிரியல் வல்லுனர் அரிஜித் சக்ரவர்த்தி உலக சோசலிச வலைத் தளத்திற்குக் கூறினார், “இந்தப் பெருந்தொற்று பெரிதும் முடிந்துவிடவில்லை என்பது மட்டுமல்ல, மாறாக இது வேகமாகப் பரவுவதுடன் தொடர்ந்து வேகமாக பரிணமித்து வருவதன் முன்னால், இந்தப் பெருந்தொற்று முடிந்துவிட்டது என்ற உணர்வை உருவாக்குவதன் மூலம், அடிப்படையில் நம்மை நாமே மோசமான சூழலில் நிறுத்திக் கொண்டு, இந்த வைரஸ் இன்னும் பாதிப்புகளை ஏற்படுத்துமாறு கேட்டு வாங்குகிறோம்,” என்றார்.
சக்ரவர்த்தியின் ஆராய்ச்சிக் குழு இந்தப் பெருந்தொற்றை முன்கணிப்பதில் தொடர்ந்து சரியாக செயல்பட்டுள்ளது, அவர் அழுத்தமாக பின்வருமாறு குறிப்பிட்டார்:
அடுத்த அலையின் விளைவைக் குறித்து என்னால் கணிக்க முடியாது. அடுத்த ஐந்து அலைகளின் விளைவை என்னால் கணிக்க முடியாது. ஆனால், நாம் செயல்பட்டு வரும் இந்த வேகத்தில், பெரிதும் நிச்சயமாக ஒரு முன்கணிப்பைச் செய்ய முடியும் என்றால், அது, இந்த நிலைப்பாடுகளால் மிக விரைவிலேயே ஏதோ மோசமானது நடக்கப் போகிறது. அடுத்து ஐந்தாண்டுகளுக்கு இந்தப் பெருந்தொற்றைப் பரவ அனுமதித்தால், நீங்கள் பார்த்திராத அளவில் ஒரு மிகப்பெரிய பாதிப்பை நீங்கள் முகங்கொடுப்பீர்கள். அது தான் நடக்கும்.
இந்தப் பெருந்தொற்று நெடுகிலும், நியூ யோர்க் டைம்ஸ், அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் கொலைபாதக கொள்கைகளான உயிர்களை விட இலாபங்கள் மற்றும் பொது சுகாதார அழிப்பு ஆகிய கொள்கைகளுக்கு இன்றியமையாத சித்தாந்த நியாயப்பாட்டை வழங்கி உள்ளது. இது, “நோயை விட சிகிச்சை மோசமாகி விடக் கூடாது,” என்று தோமஸ் பிரெட்மனின் அவமானகரமான அறிக்கையோடு தொடங்கியது. இதை ட்ரம்ப் அவருடைய “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கைக்கான” தாரக மந்திரமாக ஏற்றுக் கொண்டார். இந்த செங்கோல் விரைவிலேயே லியோன்ஹார்டுக்கு வழங்கப்பட்டது. அவரது சமீபத்திய கட்டுரை தவறான தகவல்களைக் கொண்ட டசின் கணக்கான கட்டுரைகளில் ஒன்றாகும்.
அதே நேரத்தில், டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் மற்றும் இன்னும் பல ஊடகங்கள் ஜனவரி 2020 இல் பாசிசவாதி ஸ்டீவ் பானன் இட்டுக் கட்டிய வூஹான் ஆய்வகப் பொய்க்கு நம்பகத்தன்மையை வழங்கின. 1.1 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களைக் கொன்றுள்ள அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான கோபத்தைச் சீனாவை நோக்கி திருப்பி விட வடிவமைக்கபட்ட, இந்த சதிக் கோட்பாட்டுக்கு, அதிபர் பதவி போட்டியில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஆவார் என்று நம்பப்படும் ரோபர்ட் கென்னடி ஜூனியர் ஒரு யூத-எதிர்ப்புவாத தொனியை மிக சமீபத்தில் வழங்கினார். இதை டைம்ஸூம் பிற ஊடக நிறுவனங்களும் குறைத்துக் காட்டின.
உலக சோசலிச வலைத் தளத்தை வெளியிடும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே, இந்தப் பெருந்தொற்று பிரச்சாரத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் தொடர்ந்து அம்பலப்படுத்தி, இந்தப் பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வர சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த போராடி வருகின்ற, உலகில் ஒரே அரசியல் கட்சியாகும். ஒரே உண்மையான சோசலிச இயக்கமாக, நாம் விஞ்ஞான உண்மைக்காகவும், பொது சுகாதாரத்திற்காகவும் மற்றும் தொழிலாள வர்க்க நலன்களுக்காகவும் நிற்கிறோம்.
சர்வதேச தொழிலாள வர்க்கம் இந்தப் பெருந்தொற்றின் அனுபவங்களை ஆராய்ந்து, தொடர்ந்து கொண்டிருக்கும் அபாயங்களைப் புரிந்து கொண்டு, சமூக சமத்துவம் மற்றும் பொருளாதார திட்டமிடல் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு புதிய சமூகத்தைக் கட்டமைப்பதற்கு அதன் கூட்டு பலத்தை அணித்திரட்டுவது மிக மிக முக்கியமாகும்.
