இத்தாலி முழுவதும் 10,000ம் விமான நிலையத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

இத்தாலிய விமான நிலையங்களில் சுமார் 10,000 தொழிலாளர்கள் ஜூலை 15 அன்று காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நீடித்த எட்டு மணி நேர எச்சரிக்கை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் விளைவாக, கிட்டத்தட்ட 1,000 விமானங்கள் இரத்து செய்யப்பட்டன, மேலும் கால் மில்லியன் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

ரோமின் லியோனார்டோ டாவின்சி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் விமான நேர அட்டவணையைப் பார்க்கிறார்கள். [AP Photo/Andrew Medichini]

இத்தாலிய செய்தி சேவையான ANSA, மிலானின் இரண்டு விமான நிலையங்களான லினேட் மற்றும் மால்பென்சா முனையங்களில் ஒரு “யதார்த்தமான மௌனம்” நிலவுவதாக தெரிவித்தது. ரோமா-ஃபியூமிசினோ, போலோக்னா-மார்கோனி, வெனிசியா மார்கோ போலோ மற்றும் கேசெல் டோரினீஸ் விமான நிலையங்களும் மோசமாக பாதிக்கப்பட்டன. நாப்பிள்ஸ், பாரி, பலேர்மோ, ஜெனோவா, வெனிஸ் ஆகிய நகரங்களில் பல விமானங்கள் தரையிறக்கப்பட்டன. இந்த வேலை நிறுத்தம் மிலான் முதல் கட்டானியா வரை நாடு முழுவதும் பரவியது.

வேலை நிறுத்தம் கிட்டத்தட்ட 100 சதவீதம் உறுதியாக இருந்தது. ரோமின் லியோனார்டோ டா வின்சி சர்வதேச விமான நிலையத்தில், வாக்களித்த களத் தொழிலாளர்களில் 99 சதவீதம் பேர் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தனர், இத்தாலி முழுவதும் ஒரு தேசிய வேலைநிறுத்தத்திற்கான அழைப்புகள் சந்தேகத்திற்கு இடமின்றி இருந்தன. இதன் விளைவாக, தொழிற்சங்கங்கள் சனிக்கிழமையின் எட்டு மணி நேர வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க நிர்பந்திக்கப்பட்டன, இதில் விமானத்தைக் கையாளும் தொழிலாளர்கள், தரையை கையாளுதல் மற்றும் பயணிகள் உள்வரவுச் சேவைகள் ஆகியவைகள் அடங்குகின்றன.

தொழிற்சங்கங்கள் அழுத்தத்தின் கீழ் செயல்பட்டன என்பதை வேலைநிறுத்தத்தின் பொருளாதார தாக்கம் குறித்து அவற்றின் செய்தித் தொடர்பாளர் சாரா டி மார்கோவின் (FILT-CGIL) அறிக்கை காட்டுகிறது. “மற்ற சகாக்களுக்கு தீங்கு விளைவிக்கும்” எந்த நோக்கமும் தனது அமைப்புக்கு இல்லை என்று அவர் கூறினார், ஆனால் அரசாங்கம் தொழிற்சங்கங்களுடன் உட்கார மறுத்ததை அடுத்து தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தை வேலைநிறுத்தத்தில் ஈடுபட கட்டாயப்படுத்தினர்.

FILT-CGIL, FIT CISL, Uiltrasporti மற்றும் UGL Trasporto Aereo ஆகியவை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆகும். அவர்களின் முக்கிய கோரிக்கை விமான நிலைய தரைச் சேவை ஊழியர்களுக்கான ஊதியத்தை உள்ளடக்கிய கூட்டு ஒப்பந்தம் ஆகும், இது பல ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியானது. விமானங்களை ஏற்றுவது, இறக்குவது, அனைத்து பொதிகளையும் கையாள்வது என அழைக்கப்படும் விமானம் தரையிலுள்ள போதுள்ள அனைத்து வேலை செய்யும் தொழிலாளர்களுக்கான ஒப்பந்தம், 2015 டிசம்பரில் ஆரம்பித்து, ஆறரை ஆண்டுகளுக்கு முன் காலாவதியானது. அந்த நேரத்தில், பணவீக்கம் உண்மையில் ஊதியங்களை விழுங்கிவிட்டது.

எரியும் சூடான வெப்பநிலையில் விமான நிலையத்திலுள்ள விமான ஓடு பாதையில் தொழிலாளர்கள் பயங்கரமான நிலைமைகளில் உழைக்கின்றனர். இத்தாலி தற்போது முன்னெப்போதும் இல்லாத வெப்ப அலையை அனுபவித்து வருகிறது, வரலாறு காணாத வெப்பநிலை 48 டிகிரி செல்சியஸை (118 டிகிரி பாரன்ஹீட்) எட்டியுள்ளது. தலைக்கவசம், கழுத்து பாதுகாப்பு மற்றும் இலவச குடிநீர் இருந்தபோதிலும், வெப்பத்தைத் தவிர்க்க வழியில்லாத இந்த தொழிலாளர்களுக்கு உடல் அதியுயர் வெப்பநிலை ஆபத்து அல்லது சுற்றோட்ட சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இலையுதிர்காலம் மற்றும் குளிர்காலத்தில், அவர்கள் மீண்டும் காற்று மற்றும் மோசமான வானிலை தாக்கத்திற்கு ஆளாகின்றனர்.

பெரும் உழைப்பு இருந்தபோதிலும், இந்த தொழிலாளர்கள் சொற்ப ஊதியம் பெறுகிறார்கள். Worldsalaries வலைத்தளத்தின்படி, இத்தாலிய விமான நிலைய சேவை வழங்குநர்களில் பணியாற்றுபவர்களின் மொத்த மாதாந்திர வருமானம் மாதத்திற்கு € 1,300 முதல் € 4,150 யூரோக்கள் வரை இருக்கும், இதில் வரவேற்பு ஊழியர்கள், பாதுகாப்பு காவலர்கள் மற்றும் கட்டுப்பாட்டு மற்றும் நிர்வாக ஊழியர்களும் அடங்குவர்.

விமான ஓடு பாதையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அளவுகோலின் மிகக் குறைந்த முனையில் உள்ளனர். பொதிகளை கையாளும் தேர்ச்சி பெறாத தொழிலாளர்களின் ஊதியம் மிகக் குறைவாக இருக்கும், அவர்கள் 800 யூரோக்களை மட்டுமே வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார்கள். சராசரியாக, விமானங்களை கையாளுபவர்களுக்கான ஊதியம் சுமார் 1,400 யூரோக்கள் ஆகும். ரோமில் ஒரு படுக்கையறை வீட்டின், வழக்கமான வாடகை சுமார் 600 யூரோக்கள் ஆகும். மிலானில், மாதாந்திர வாழ்க்கைச் செலவுகள் மட்டும் குறைந்தது 1,200 யூரோக்கள் ஆகும்.

ஜூன் 20 அன்று 24 மணி நேர விமான நிலைய வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, இந்த கோடையில் இத்தாலிய விமான போக்குவரத்தை சீர்குலைக்கும் இரண்டாவது வேலைநிறுத்தம் இதுவாகும். இது ஐரோப்பா முழுவதிலும் வளர்ந்து வரும் தொழிலாளர் கிளர்ச்சி அலையின் ஒரு பகுதியாகும், இதை இத்தாலிய அரசாங்கம் வெளிப்படையாக புரிந்து கொண்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு, அரசுக்கு சொந்தமான இரயில்வே நிறுவனமான Trenitalia இலுள்ள இத்தாலிய இரயில்வே தொழிலாளர்களும், அதே போல் தனியார் Italo குழுவும் 24 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர், தொடர்ச்சியான உபரிவேலை நேரம், மோசமான ஊதியம் மற்றும் ஊழியர் பற்றாக்குறைக்கு எதிராக அவர்கள் போராடினர். இந்த வேலை நிறுத்தம் வெள்ளிக்கிழமை மாலை வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் போக்குவரத்து அமைச்சரான இத்தாலியின் துணை சான்சுலர் மத்தியோ சால்வினி (Lega கட்சி) வேலைநிறுத்தம் இரண்டாவது நாளாக தொடர்வதை திட்டவட்டமாக தடை செய்தார். வேலைநிறுத்தம் செய்வதற்கான அரசியலமைப்பு உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமையை மீறும் வகையில், சால்வினி விமான நிலைய தரைத் தொழிலாளர்களை வேலைநிறுத்தத் தடை மூலம் அச்சுறுத்தினார்.

“சில தொழிற்சங்கங்கள் இத்தாலிக்கு இடையூறு விளைவிப்பதையும், மில்லியன் கணக்கான இத்தாலிய தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அசௌகரியத்தையும் தீங்கு விளைவிப்பதையும் நான் ஏற்கவில்லை,” என்று சால்வினி ஆத்திரமடைந்தார். “பொது அறிவு மேலோங்கவில்லை என்றால், நான் ஏற்கனவே செய்ததைப் போல, ரயில்களை முற்றிலுமாக முடக்குவதைத் தடுக்க நான் தலையிடத் தயாராக இருக்கிறேன்” என்றார்.

ஆனால், வேலை நிறுத்த நாளிலேயே பல விமான ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை முன்னெடுத்து நீட்டிப்பதை அவரால் தடுக்க முடியவில்லை. பல விமான நிறுவனங்களின் விமானிகளும் விமானப் பணிப் பெண்களும் அரசாங்கத் தாக்குதல்கள் மற்றும் விமானப் போக்குவரத்தில் இரக்கமற்ற உலகளாவிய போட்டியின் விளைவாக வேலை வெட்டுக்கள் மற்றும் வறுமை மட்ட ஊதியங்களை அனுபவித்து வருகின்றனர்.

இத்தாலியில் Ryanair விமானங்களை இயக்கும் Malta Air விமானிகள், அதே சனிக்கிழமை மதியம் 12:00 மணி முதல் மாலை 4:00 மணி வரையும், Vueling Airline இல், விமானிகள் மற்றும் விமானத்தின் ஊழியர்கள் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். Malta Air மீதான வேலைநிறுத்தம் முன்னாள் Alitalia வான ITA Airways இயக்கும் விமானங்களையும் பாதித்தது, அது அன்று மொத்தம் 133 விமானங்களை இரத்து செய்ய வேண்டியிருந்தது.

Ryanair இல், வேலைநிறுத்தத்தால் பெல்ஜியத்திலுள்ள பிரஸ்ஸல்ஸ் தெற்கு சார்லெரோய் விமான நிலையத்தில் 120 விமானங்களும் இரத்து செய்யப்பட்டன, மேலும் இத்தாலிக்கு செல்லும் மற்றும் வெளியேறும் விமானங்களில் இரத்து மற்றும் கட்டுப்பாடுகள் எதிர்பார்க்கப்படுவதாக Ryanair தெரிவித்துள்ளது. Ryanair விமானிகள் தங்கள் சம்பளத்தை பெருந்தொற்று நோய்க்கு முந்தைய நிலைக்கு திரும்பப் பெற இன்னும் போராடி வருகின்றனர். பெருந்தொற்று நோய்களின் போது தொழிற்சங்கங்கள் கணிசமான சம்பள வெட்டுக்களை ஏற்றுக்கொண்டன, அவைகள் பரவலான பணவீக்கத்திற்கு ஈடுசெய்யப்படுவது ஒருபுறம் இருக்க, அவைகள் இன்னும் ஈடுசெய்யப்படவில்லை.

ஐரோப்பிய வான் போக்குவரத்தில் ஒரு கூட்டு, நாடுகடந்த வேலைநிறுத்தத்திற்கான நிலைமை வெளிப்படையானது. எவ்வாறெனினும், கடந்த சில நாட்களாக இரயில்வே தொழிலாளர்கள், விமானத் தரைத் தொழிலாளர்கள் மற்றும் விமானிகளின் வேலைநிறுத்தங்களின் வெற்றியால் பீதியடைந்துள்ள தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடன் ஒரு முறிவு தேவைப்படுகிறது. சாமானிய குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியில் (IWA-RFC) இணைந்து போராட சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவது அவசியமாகும்.