முன்னோக்கு

காலநிலை மாற்ற நெருக்கடி உச்சி முனையை எட்டியுள்ளது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஐரோப்பிய கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவையும் (C3S) மற்றும் உலக வானிலை அமைப்பும் (WMO) வியாழக்கிழமை வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில், ஜூலையின் முதல் மூன்று வாரங்களில் பதிவு செய்யப்பட்ட வெப்பநிலை இதுவரையில் பதிவு செய்யப்பட்ட மூன்று வாரகால வெப்பநிலையிலேயே மிகவும் அதிகபட்சமானது என்பதை உறுதி செய்ததுடன், மனிதகுல நாகரீகத்திலேயே இந்த மாதம் இதுவரை இல்லாத வெப்ப காலமாக இருக்கும் என்று கணிக்கிறது.

C3S இன் இயக்குனர் Carlo Buontempo அந்த அறிக்கையின் ஒரு பகுதியில் குறிப்பிடுகையில், “முந்தைய அதிகபட்ச அளவுகளை முறியடித்துள்ள வெப்பநிலைகள், கடுமையான உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பு போக்குகளின் பாகமாக உள்ளன. மனித சமூகத்தின் மாசுபாடு உமிழ்வுகளே, இறுதியில் இவ்வாறு அதிகரித்து வரும் வெப்பநிலைகளுக்கு முக்கிய காரணமாகும்,” என்றார். அவர் தொடர்ந்து கூறுகையில், “ஜூலையில் ஏற்பட்ட அதிகபட்ச வெப்பநிலை, அனேகமாக இந்தாண்டு இத்துடன் முடிந்து விடாது. உயர்ந்த நிலப் பகுதிகளின் வெப்பநிலைகள் சராசரிக்கும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது, இவை இந்தாண்டில் முதல்முறையாக காலநிலை பட்டியலில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று C3S இன் பருவகால கணிப்புகள் சுட்டிக் காட்டுகின்றன,” என்றார்.

ஜூலை 25, 2023, செவ்வாய்கிழமை, தென்கிழக்கு கிரேக்கத்தில் ஏஜியன் கடலின் ரோட்ஸ் தீவில் உள்ள ஜென்னாடி கிராமத்தில் மரங்கள் தீப்பற்றி எரியும் இடத்தில் உள்ளூர்வாசி ஒருவர். [AP Photo/Petros Giannakouris]

கடைசியாக ஆகஸ்ட் 2016 இல் அதிகபட்சமாக இருந்த வெப்பநிலையை இந்தாண்டு ஜூலை விஞ்சிவிட்டது. அப்போது உலகளாவிய சராசரி வெப்பநிலை 16.92 டிகிரி செல்சியஸிற்கு (62.46 டிகிரி பாரன்ஹீட்) அதிகரித்ததாக அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல மேலாண்மை அமைப்பு (NOAA) அளவிட்டிருந்தது. ஆனால் ஜூலை 3 இல் இருந்து, உலகளாவிய வெப்பநிலை, சராசரியாக ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் அதற்கு முந்தையதை விட அதிகரித்து, ஜூலை 6 இல் புதிய உச்சமாக 17.23 டிகிரி செல்சியஸை (63.01 டிகிரி பாரன்ஹீட்டை) எட்டியது. ஜூலை 14 இல் இருந்து மிக குளிர்ச்சியான நாளின் வெப்பநிலை 16.94 டிகிரி செல்சியஸாக (62.49 டிகிரி பாரன்ஹீட்டாக) இருந்தது. இது இப்போதும் கூட முந்தைய அதிகபட்ச அளவை விட அதிகமாக இருக்கிறது.

குறிப்பாக தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த வெப்ப அலையால் பூமியின் வெப்ப அடுக்கு மண்டலங்களும் வடக்கு அரைக்கோளமும் பாதிக்கப்பட்டுள்ளன. அப்பிராந்தியத்தில் உள்ள வெப்பநிலைகள் சராசரியை விட முறையே தற்போது சுமார் 0.9 டிகிரி செல்சியஸ் (1.6 டிகிரி பாரன்ஹீட்) மற்றும் 1.2 டிகிரி செல்சியஸ் (2.1 பாரன்ஹீட்) அதிகமாக உள்ளன. வட அட்லாண்டிக் கடற்பகுதி வெப்பநிலைகள் மார்ச் மாதத்தில் இருந்து முந்தைய பருவகால அளவுகளை மிஞ்சி, ஏறக்குறைய 1.5 டிகிரி செல்சியஸ் (2.7 டிகிரி பாரன்ஹீட்) சராசரிக்கும் அதிகமாக அதிகரித்து வருகின்றன. அதேவேளையில் இந்த துருவங்களுக்கு வெளியே உலக கடல்பகுதி வெப்பநிலைகள் சராசரியை விட 0.8 டிகிரி செல்சியஸ் (1.4 டிகிரி பாரன்ஹீட்) அதிகமாக உள்ளன. இதில் புதிய அதிகபட்ச அளவாக மார்ச்சில் எட்டிய 21.1 டிகிரி செல்சியஸூம் (69.98 டிகிரி பாரன்ஹீட்டும்) உள்ளடங்கும். ஒட்டுமொத்தமாக இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே பெரும்பாலும் 2023 ஆம் ஆண்டு அதிகபட்ச வெப்பம் நிலவிய ஆண்டாகப் பதிவாகலாம்.

கனடாவில் 1989 இக்கு முன்னர் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பு அளவை விட சுமார் இரண்டு மடங்கு அதிகமாக, 10,000 சதுரக் கிலோமீட்டருக்கும் (3,6000 சதுர மைல்களுக்கும்) அதிகமான பகுதிகளை எரித்து நாசமாக்கிய காட்டுத்தீ, மற்றும் வட அமெரிக்காவின் வடகிழக்கைச் சுற்றி வளைத்த நச்சார்ந்த புகையும் தூசியும் இந்தாண்டின் அதிகபட்ச வெப்பநிலைகளின் மிகவும் பேரழிவுகரமான விளைவுகளில் உள்ளடங்கும். தெற்கு ஐரோப்பா, மத்தியக் கிழக்கு, தெற்காசியா மற்றும் ஒட்டுமொத்த தெற்கு அமெரிக்காவின் பெரும் பகுதிகளும் வெப்பநிலை எச்சரிக்கைகளின் கீழ் வைக்கப்பட்டிருந்தன அல்லது இன்னமும் அங்கெல்லாம் இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் ஜூலையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 13 பேர் கொல்லப்பட்டது உட்பட, அங்கே வெள்ளப் பெருக்கில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளையில் ஐரோப்பா மற்றும் வட ஆபிரிக்காவின் காட்டுத்தீ சம்பவங்களில் 40 இக்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். அல்ஜீரியா, சீனா, சைப்ரஸ், கிரேக்கம், இத்தாலி, மெக்சிகோ மற்றும் ஸ்பெயினின் வெப்ப தாக்குதலில் நூற்றுக் கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அனைத்திற்கும் மேலாக, இந்த காலநிலை மாற்றத்தால் இப்போது ஏற்பட்டுள்ள பேரிடர்கள் இன்னும் அதிக பேரழிவுகரமான சம்பங்களுக்கு முன்னோட்டமாக உள்ளன. புளோரிடா கடற்கரையை ஒட்டியப் பகுதிகளின் 38.38 டிகிரி செல்சியஸ் (101.1 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலையும், அண்டார்டிக் கடல் பனிக்கட்டிகளின் நீள அளவும் (அதாவது, சராசரியை விட 2.6 மில்லியனுக்கும் அதிகமான சதுர கிலோமீட்டர், சுமார் 1 மில்லியன் சதுர மைல்கள்) என்ன வரவிருக்கிறது என்பதற்கான அறிகுறிகளாகும். வெப்பமடையும் பெருங்கடல்கள் முக்கிய பவளப்பாறை அமைப்புகளை அச்சுறுத்துவதுடன், உலகளாவிய கடல்வாழ் உயிரிகளுக்கு நோய்கள் ஏற்படுவதற்கும் கொல்லப்படுவதற்கும் அச்சுறுத்தலாக உள்ளன. இதனால் ஒட்டுமொத்த உணவுச் சங்கிலியே பாதிக்கப்படும் அபாயம் ஏற்படுகிறது. அட்லாண்டிக் கடல் பனிக்கட்டிகள் இல்லாமல் போவது, நிலத்தின் பனிக்கட்டிகள் கடலில் விழும் மரண ஆபத்தை எழுப்புகிறது. இதனால் உலகளவில் கடல் மட்டங்கள் உயர்ந்து, 3 பில்லியன் மக்கள் வாழ்வதாக மதிப்பிடப்படும் கடல் பகுதிகள் நிரந்தரமாக வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் எழுகிறது.

அராஜகவாத முதலாளித்துவ உற்பத்தி பூமியின் வளங்களைச் சுரண்டுவதாலும், குறிப்பாக ஒன்றரை நூற்றாண்டுகளாக நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை நெறிமுறையின்றி எரித்ததாலும் தான் புவி வெப்பமடைதல் ஏற்பட்டுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தற்போது தொடர்ந்து தீவிரமடைந்து வரும் இந்தச் சுற்றுச்சூழல் நெருக்கடிக்கு என்ன தீர்வு என்பதே அழுத்தமான கேள்வியாகும்.

C3S மற்றும் WMO அறிக்கைக்கு விடையிறுத்து, ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், “மனிதநேயம் இறந்துவிட்டது, இதற்கு மனிதர்கள் தான் காரணம்,” என்றார். இது தவறான சமன்படுத்தல் என்பது குட்டெரெஸிற்கே தெரியும்.

“மனிதநேயத்தை” குற்றம் சொல்வதற்கில்லை; முதலாளித்துவம் தான் காரணம். பொருளாதார வாழ்வைத் தனியார் இலாபத்திற்கு அடிபணிய செய்திருக்கும் இந்த இலாபகர அமைப்புமுறையும் மற்றும் எதிர்விரோத தேசிய அரசுகளாக உலகம் பிளவுபட்டிருப்பதுமே, காலநிலை மாற்ற நெருக்கடியை முழு தீவிரத்துடன் சமாளிப்பதற்கான ஒவ்வொரு முயற்சியையும் உண்மையில் தடுக்கின்றன.

2008 இல் சோசலிச சமத்துவக் கட்சியின் கொள்கை அறிக்கை பின்வருமாறு அறிவித்தது,

இந்த இலாப அமைப்பு முறைக்கும் மனிதகுலத்தின் உயிர் வாழ்வுக்கும் இடையேயான சமரசத்திற்கிடமற்ற மோதல், நேரடி அர்த்தத்தில், புவி வெப்பமடைதல் மற்றும் இயற்கைச் சுற்றுச்சூழல் நெருக்கடியில் அதன் மிகத் தீங்கான வெளிப்பாட்டைக் காண்கிறது. முதலாளித்துவ ஊடகங்கள் பொய்யாக கூறுவதைப் போல, இந்த நெருக்கடிக்கு மக்கள்தொகை அதிகரிப்பு காரணமில்லை. அல்லது மனிதகுல நாகரீகத்தின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான விஞ்ஞானமோ தொழில்நுட்பமோ காரணமில்லை. மாறாக, இந்தக் காலாவதியான பொருளாதார ஒழுங்குமுறையால் விஞ்ஞானமும் தொழில்நுட்பங்களும் பகுத்தறிவின்றி துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன என்பதே காரணமாகும்.

அந்த அறிக்கை பின்வருமாறு குறிப்பிட்டது,

சோசலிச மறுஒழுங்கமைப்பில், இந்த புவியின் சுற்றுச்சூழலானது, இலாப முனைவுக்கோ அல்லது நாசகரமான தேசியவாத நலன்களுக்கோ பணயம் வைக்கப்படுவதில்லை என்பதால், இந்த உலகப் பொருளாதாரத்தின் சோசலிச மறுசீரமைப்பிற்குக் குறைவின்றி வேறெதுவுமே, பேரிடர்களைத் தடுக்க அவசியமான காற்று மாசுபாட்டைக் குறைக்காது என்பதை எல்லா விஞ்ஞானப்பூர்வ ஆதாரங்களும் சுட்டிக் காட்டுகின்றன.

மிக சமீபத்தில் நடந்த COP27 காலநிலை உச்சிமாநாடு உட்பட, காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கான ஒவ்வொரு சர்வதேச மாநாடும், மிகவும் அடிப்படையான உலகப் பிரச்சினைகளை இந்த எதிர்விரோத முதலாளித்துவ தேசிய அரசுகளின் அடிப்படையில் தீர்க்க இயலாமல், முழுமையாகத் தோல்வி அடைந்துள்ளன. இந்த முதலாளித்துவ தேசிய அரசுகள் இராணுவ செலவினங்களைப் பாரியளவில் விரிவாக்கி வரும் நிலையில், காலநிலை மாற்ற நெருக்கடியைத் தீர்க்க அவை முன்னர் உறுதியளித்த அனைத்து வாக்குறுதிகளையும் கைவிட்டு வருகின்றன.

முதலாளித்துவ வர்க்கத்தின் சுயநலத்தின் அடிப்படையில் சமூகத்தை ஒழுங்கமைக்கும் இந்த முதலாளித்துவ இலாப அமைப்புமுறை, காலநிலை மாற்ற நெருக்கடியைத் தீர்ப்பதற்குத் தேவையான பரந்த மட்டத்திலான சமூகத் திட்டமிடல் மற்றும் ஒழுங்கமைப்பைச் செய்ய அமைப்புரீதியிலேயே இலாயக்கற்று உள்ளது.

2020 இல் புதுப்பிக்கப்பட்ட சமீபத்திய கார்பன் மேஜர்ஸ் அறிக்கையின்படி (Carbon Majors Report), 1751 இல் இருந்து 70 சதவீதக் காற்று மாசுபாட்டிற்கு முன்னணியில் உள்ள 108 புதைப்படிம எரிசக்தி மூலப்பொருள் உற்பத்தி நிறுவனங்கள் (உதாரணமாக, சவூதி அரம்கொ, செவ்ரோ, காஜ்ப்ரொம், BP, எக்ஸொன்மொபில் ஆகியவை) பொறுப்பாகின்றன. இந்தக் காற்று மாசுபாட்டில் பாதியளவு 1990 இக்குப் பின்னர் ஏற்படுத்தப்பட்டதாகும். அத்தகைய நிறுவனங்களில் வெறும் 20 நிறுவனங்கள், உலகளாவிய காற்று மாசுபாட்டில் 30 சதவீதத்திற்குப் பொறுப்பாகின்றன என்று குறிப்பிடுகிறது.

இலாபங்களோ விண்ணைத் தொடுகின்றன. சர்வதேச எரிசக்தி ஆணைய தலைவர் ஃபதிஹ் பிரொல் சென்ற பிப்ரவரியில் கூறுகையில், எண்ணெய் மற்றும் எரிவாயுவின் இலாபங்கள் 2022 இல் உலகளவில் 4 ட்ரில்லியன் டாலருக்கு அதிகரித்த நிலையில், இந்த நிறுவனங்களைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள ஒவ்வொரு பிரதான முதலாளித்துவ நாட்டின் முதலீட்டு நிறுவனங்களும் நிதி அமைப்புகளும் இன்னும் கூடுதலாக செழிப்படைந்தன என்றார்.

பல கோடி மில்லியனர்கள் மற்றும் பில்லியனர்கள் பூமியின் வளங்களை விழுங்கிக் கொண்டிருக்கையில், இதற்காக தொழிலாள வர்க்கமும் கிராமப்புற மக்களும் விலை கொடுக்கப்படுகிறார்கள். கடந்தாண்டு ஐரோப்பாவில் ஏற்பட்ட வெப்ப அலையில் 61,000 இக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தார்கள். இந்தாண்டும் இந்த எண்ணிக்கை அதேயளவுக்கு இருக்கும் அல்லது அதை விட அதிகாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலநிலை மாற்றத்தால் கடந்தாண்டு ஏற்பட்ட பாகிஸ்தான் வெள்ளப்பெருக்கில் 33 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்தனர். விவசாயம் செய்யும் சுமார் 500 மில்லியன் பேர் அவர்களின் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். சுமார் 1 மில்லியன் மக்கள், அவர்கள் வாழ்வாதாரத்திற்காகச் சார்ந்திருந்த நிலம் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்புடையதாக இல்லாமல் போனதால் பட்டினிக்கு உள்ளாகும் அபாயத்தில் உள்ளனர்.

வேறு வார்த்தைகளில் கூறினால், காலநிலை மாற்ற நெருக்கடிக்கு எதிரான போராட்டம் அடிப்படையில் ஒரு வர்க்கப் பிரச்சினையாகும். வறட்சி, பஞ்சம், காட்டுத்தீ மற்றும் வெள்ளப்பெருக்குகள் உட்பட, காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளைத் தொழிலாள வர்க்கமே மிகவும் நேரடியோகவும் பேரழிவுகரமான விதத்திலும் அனுபவிக்கிறது. அதீத வானிலை மற்றும் புவி வெப்பமடைதலின் எண்ணற்ற மற்ற பாதிப்புகளின் கீழ் வேலை செய்து உயிர் விடும் எல்லா தொழிலாளர்களையும் கூட இதில் ஒருவர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆகவே, முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் எந்தப் பிரிவினருக்கும் முன்வைக்கப்படும் முறையீடுகள் திவாலானவை ஆகும். அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி தலைமையில் ஆகட்டும் அல்லது குடியரசுக் கட்சி தலைமையில் ஆகட்டும், அல்லது ஐரோப்பாவில் பழமைவாதிகள் ஆகட்டும் அல்லது சமூக ஜனநாயகவாதிகள் ஆகட்டும், இந்த நெருக்கடியைக் கையாள்வதில் முக்கிய முதலாளித்துவ சக்திகளின் நிலைப்பாடு திறனற்றவை என்பதும், அவற்றுக்கு இதில் ஆர்வமே இல்லை என்பதும் அம்பலமாகிவிட்டது. அவர்கள் பல்வேறு “கார்பன் வெளியீடு” (carbon trading) திட்டங்கள் மூலமாகவும் மற்றும் ஒட்டுமொத்த நாடுகளை அழிப்பதன் மூலமாகவும் தங்களைச் செல்வ செழிப்பாக்கிக் கொள்வதில் மட்டுமே பேராசையோடு இருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு உலக அரசாங்கங்கள் காட்டிய விடையிறுப்பு, இந்த சிறிய சமூக அடுக்கின் நலன்களுக்கு ஒரு கூடுதல் எடுத்துக்காட்டாக அமைகிறது. இந்த உயிர்கொல்லி நோய் பரவுவதைத் தடுக்க ஓர் உலகளாவிய நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அமெரிக்காவும் மற்றும் ஒவ்வொரு முக்கிய சக்தியும், மனித உயிர்களை அல்ல, மாறாக முதலில் பெருநிறுவன இலாபங்களை உத்தரவாதப்படுத்த முனைந்தன. அடியில் இருந்த “படுமோசமான அலட்சிய” கொள்கையால், 24 மில்லியன் பேர் உயிரிழந்திருப்பதாகவும், பத்து மில்லியனுக்கும் அதிகமானவர்கள் நெடுங்கோவிட் ஆல் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் மதிப்பிடப்படுகிறது.

நடுத்தர வர்க்க சுற்றுச்சூழல் இயக்கங்களைப் பொறுத்த வரை, அவர்களின் பரிணாமத்திற்கு பசுமைக் கட்சியினர் உருவகமாகிறார்கள். இவர்கள் இராணுவவாதத்தின் ஆதரவாளர்களாகவும் மற்றும் ஆளும் வர்க்கத்தின் முக்கிய கருவிகளாகவும் மாறி உள்ளனர். குறிப்பாக ஜேர்மன் பசுமைக் கட்சி, முதலாளித்துவத்திற்கான அதன் ஆதரவின் காரணமாக, உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் உட்பட, ஏகாதிபத்திய போரின் மிக தீவிர ஆதரவாளர்களில் ஒன்றாக மாறி உள்ளது.

உலகளவில் முதலாளித்துவத்தைத் தூக்கியெறிய தொழிலாள வர்க்கத்தின் ஓர் இயக்கத்தை அபிவிருத்தி செய்வதன் அடிப்படையில் அல்லாமல், புவி வெப்பமயமாதலைத் தடுத்து தலைகீழாக மாற்றுவதற்கான எந்தவொரு முயற்சியும் நம்பிக்கையற்ற கற்பனாவாத மற்றும் திவாலான நடவடிக்கையாகவே இருக்கும் என்பதை இந்தக் கட்சிகள் மற்றும் போக்குகளின் அரசியல் பாதை தெளிவுபடுத்துகிறது.

உலக வெப்பநிலைகள் முன்பில்லாதளவில் அதிகரித்திருப்பது, உலகெங்கிலும் மிகப் பெரியளவில் ஒரு வேலைநிறுத்த இயக்கம் உருவெடுத்து வரும் நேரத்தில் நடக்கிறது. கடந்தாண்டு தான் வாகனத்துறை, சுகாதாரத் துறை மற்றும் சரக்குப் பரிவர்த்தனை துறைகளில் கூர்மையான போராட்டங்கள் நடந்துள்ளன. UPS, USPS, மேற்கு கடற்கரை துறைமுகங்கள் மற்றும் மூன்று மிகப் பெரிய வாகனத்துறை நிறுவனங்களின் வெடிப்பார்ந்த வர்க்க போராட்டங்கள் ஏற்கனவே வடிவமெடுத்து வருகின்றன. கொரோனா வைரஸ் பெருந்தொற்று மற்றும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டம் போலவே, காலநிலை மாற்ற நெருக்கடிக்கு எதிரான போராட்டமும் தவிர்க்கவியலாதவாறு வர்க்கப் போராட்ட அபிவிருத்தியோடு பிணைந்துள்ளது.

இலாபத்திற்காக இல்லாமல், மனிதகுல தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு பகுத்தறிவார்ந்த அடிப்படையில் சமூகத்தை மறுஒழுங்கமைக்கும் ஒரு சோசலிச முன்னோக்கைக் கொண்டு, அதிகரித்து வரும் இத்தகைய தொழிலாள வர்க்கப் போராட்டங்களை ஆயுதபாணியாக்குவது அவசரத் தேவையாகும். இந்த வழிவகை மூலமாக மட்டுமே காலநிலை மாற்ற பேரழிவுகளைத் தடுக்க முடியும்.