இலங்கை சோ.ச.க. விஜே டயஸ் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

29 ஜூலை 2023 அன்று கொழும்பில் நடந்த விஜே டயஸ் அவர்களின் நினைவுக் கூட்டத்தின் ஒரு பகுதி

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும், ஜூலை 29 அன்று தோழர் விஜே டயஸ் அவர்களின் மறைவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை நினைவுகூரும் கூட்டத்தை அதிக பங்குபற்றலுடன் வெற்றிகரமாக நடத்தியது. கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

தோழர் விஜே, தனது 81 வது பிறந்தநாளுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னதாக, திடீர் மாரடைப்பால் கடந்த ஆண்டு ஜூலை 27 அன்று காலை காலமானார்.

விஜேயின் நெருங்கிய குடும்பத்தினர் உட்பட சுமார் 150 பேர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். விஜேயை கௌரவிக்க ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் கூட்டம் தொடங்கியது. சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் நாட்டின் வடக்கில் யாழ்ப்பாணம், மத்திய தோட்ட மாவட்டங்களில் ஹட்டன் மற்றும் பண்டாரவளை, தெற்கில் அம்பலாங்கொடை மற்றும் கண்டியில் இருந்தும் வந்திருந்தனர்.

விஜே மற்றும் அவரது அன்புக்குரிய மனைவி பியசீலி விஜேகுணசிங்கவினதும் நினைவுச்சின்னம் ஒன்று ஜூலை 27 வியாழன் அன்று கொழும்பில் உள்ள பொரளை பொது மயானத்தில் திறந்து வைக்கப்பட்டது. இதில், சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் மற்றும் குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

கொழும்பில் உள்ள பொரளை பொது மயானத்தில் விஜே டயஸ் மற்றும் அவரது அன்புக்குரிய மனைவி பியசீலி விஜேகுணசிங்கவினதும் நினைவுச்சின்னத்துக்கு அருகில் விஜேவின் குடும்பத்தினர் நிற்கின்றனர். இடமிருந்து வலமாக: விஜேயின் தங்கை ஷ்ரியா விஜேகுணசிங்க, மருமகள் அஞ்சனா, பேர மகள் ஜனார்த்தி மற்றும் மகன் கீர்த்தி.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை (ICFI) கட்டியெழுப்ப விஜே செய்த பங்களிப்பிற்கு புகழஞ்சலி செலுத்தும் செய்திகள் கூட்டத்தில் வாசிக்கப்பட்டன. உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவருமான டேவிட் நோர்த், ஆஸ்திரேலியா, ஜேர்மனி மற்றும் இங்கிலாந்திலும் உள்ள சோசலிச சமத்துவக் கட்சிகளின் தலைவர்கள் அந்த செய்திகளை அனுப்பியிருந்தனர். துருக்கியில் உள்ள சோசலிச சமத்துவக் குழுவிடமிருந்தும் ஒரு செய்தி வந்திருந்தது.

அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியின் கோடைகாலப் பாடசாலை விஜேயின் நினைவாக அர்ப்பணிக்கப்படும் என்று நோர்த் கூறினார். “தோழர் விஜேயின் வாழ்க்கையை முழுமையாக மதிப்பாய்வு செய்தால் ஒரு தனிநபரின் வாழ்க்கை வரலாற்றை விட மிக உயர்ந்ததாக இருக்கும். இது இலங்கை தொழிலாள வர்க்கத்தின் நவீன வரலாற்றையும் உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றையும் உள்ளடக்கியதாகும்.

“அவர் லங்கா சம சமாஜக் கட்சியின் (ல.ச.ச.க.) இளைஞர் இயக்கத்தின் உறுப்பினராகி ஒரு ட்ரொட்ஸ்கியவாதியாக ஆனார். ல.ச.ச.க. ட்ரொட்ஸ்கிசத்திற்கான அதன் பல தசாப்த கால போராட்டத்தின் அடிப்படையில், இலங்கை தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன புரட்சிகர கட்சியாக வளர்ந்தது. ஆனால் ல.ச.ச.க., தசாப்த காலங்களாகவும் மிகவும் வெளிப்படையாகவும் பாராளுமன்ற சந்தர்ப்பவாதத்தை நோக்கி சரிந்து வந்ததன் விளைவாக, ட்ரொட்ஸ்கிசத்தின் புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தை நிராகரித்து, 1964 ஜூன் மாதம், பிரதமர் ஸ்ரீமா பண்டாரநாயக்க தலைமையிலான முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் (ஸ்ரீ.ல.சு.க.) ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைத்தது.

“இந்த காட்டிக்கொடுப்பை எதிர்த்து, இலங்கையில் ட்ரொட்ஸ்கிச இயக்கமான ல.ச.ச.க.யில் இருந்த சந்தர்ப்பவாதிகளுக்கு எதிராக தளராத போராட்டத்தில் ஈடுபட்டு, அதை மீண்டும் கட்டியெழுப்பப் புறப்பட்ட, கொள்கை பிடிப்பும் தைரியமும் மிக்க இளம் புரட்சியாளர்களின் குறிப்பிடத்தக்க தலைமுறையின் முன்னணியில் தோழர் விஜே இருந்தார்.

“தோழர் விஜே டயஸ் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்குள் சிறந்த அதிகாரத்தைக் கொண்டிருந்தார். அவர் பங்கேற்ற அனைத்து கலந்துரையாடல்களிலும், அவரது பரந்த அனுபவம் மற்றும் புறநிலை அறிவை நம்பியிருக்க கூடியதாக இருந்தது. அனைத்துலகக் குழுவின் வரலாற்றில் இடம்பெற்றுள்ள விஜேயினுடைய உதாரணம், சோசலிசப் புரட்சிக்கான உலக கட்சியின் உறுப்பினர்களுக்கு உத்வேகத்தின் ஊன்றுகோலாக எப்போதும் இருக்கும்.

கே. ரட்நாயக்க

கூட்டத்திற்கு தலைமை தாங்கிய உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) இலங்கையின் தேசிய ஆசிரியர் கே. ரட்நாயக்க கூறியதாவது: “தோழர் விஜேயின் மறைவு எமது கட்சிக்கும் அனைத்துலகக் குழுவுக்கும் பெரும் இழப்பாகும். இந்த நிகழ்வை நாங்கள் ஒரு சடங்காக அன்றி, அவர் போராடிய முன்னோக்கு மற்றும் கொள்கைகளின் மீது கவனம் செலுத்தவும், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான கட்சியின் போராட்டத்தை வலுப்படுத்தவும், புரட்சிகர தலைமையை வழங்கவுமே நடத்துகிறோம்.”

ட்ரொட்ஸ்கிசத்தை ல.ச.ச.க. கைவிட்டமை பற்றி விளக்கிய ஜெரி ஹீலியின் சிலோன்: மாபெரும் காட்டிக்கொடுப்பு என்ற ஆவணத்திலிருந்து ரட்நாயக்க மேற்கோள் காட்டினார்: “இதற்கு பதில் இலங்கையில் அன்றி மாறாக பப்லோவாதத்திற்கு எதிரான ஒரு சர்வதேச போராட்டத்திலே உள்ளது. கூட்டணியின் உண்மையான சிற்பிகள் பாரிஸிலேயே வசிக்கின்றனர்.”

ல.ச.ச.க. முதலாளித்துவ அரசாங்கத்திற்குள் நுழைவதை எதிர்த்த கீர்த்தி பாலசூரிய மற்றும் விஜே உட்பட ஒரு இளைஞர் குழு அனைத்துலகக் குழுவின் பக்கம் ஈர்க்கப்பட்டது. பப்லோவாதத்திற்கு எதிரான சர்வதேசப் போராட்டம் பற்றிய அவர்களின் தீவிர கற்கை, 1968ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு.க.க.) ஸ்தாபிக்கப்படுவதற்கு அடிப்படையாக அமைந்தது, என்று ரட்நாயக்க கூறினார்.

“1987 டிசம்பரில் பு.க.க. ஸ்தாபக பொதுச் செயலாளரான தோழர் கீர்த்தியின் அகால மரணத்திற்குப் பிறகு, விஜே அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு 35 ஆண்டுகள் கட்சியை வழிநடத்தினார். கீர்த்தியும் விஜேயும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றுப் படிப்பினைகளின் அடிப்படையில் கட்சியின் போராட்டத்தை அபிவிருத்தி செய்யப் போராடினர்.

விலானி பீரிஸ்

சோசலிசப் புரட்சிக்கான சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கான தலைமையை தயார் செய்வதற்காக அவர் போராடிய ட்ரொட்ஸ்கிசக் கொள்கைகளில் காலூண்றிக்கொள்வதே ஒருவர் தோழர் விஜேயின் வாழ்க்கையை நினைவு கூருவதற்கான உண்மையான வழி, என்று சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் விலானி பீரிஸ் கூட்டத்தில் கூறினார்.

“அனைத்துலகவாதத்தின் மீதான தோழர் விஜேயின் உறுதியான நம்பிக்கையும், அரசியல் கொள்கையில் அவர் கொண்டிருந்த சமரசமற்ற அர்ப்பணிப்பும் அவரை அறிந்த அனைவருக்கும் உத்வேகமாக இருந்தது. அவர் அனைத்து வகையான தேசியவாதம் மற்றும் சந்தர்ப்பவாதத்தையும் எதிர்த்தார். அவருடன் இந்தக் கட்சியில் இணைந்து பணியாற்றியவர்களுக்கு, அவரது 60 வருட கால அரசியல் வாழ்வின் அடிப்படைப் பாடம் அதுவே,” என்றார் பீரிஸ்.

எம். தேவராஜா

சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் எம். தேவராஜா, விஜேயின் இளமைக்கால அரசியல் அனுபவங்கள் இன்றைய இளைய தலைமுறையினருக்கு முக்கியமான படிப்பினைகளை உள்ளடக்கியதாகக் கூறினார். “முதலாளித்துவ ஸ்ரீ.ல.சு.க. உடன் ஒரு கூட்டணி அரசாங்கத்தில் ல.ச.ச.க. நுழைந்துகொண்டதைத் தொடர்ந்து, பல இளைஞர்கள் மாவோ, காஸ்ட்ரோ, சே குவேரா மற்றும் ஹோ சி மின் போன்ற புள்ளிகளின் பக்கம் திரும்பினர். ஆனால் தோழர் கீர்த்தியும் விஜேயும் ட்ரொட்ஸ்கிசத்தை நிலைநிறுத்தி, இந்த சகாப்தத்தில் உள்ள ஒரே புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்பினர். பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதத்தின் அடிப்படையில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் உருவாக்கப்பட்டது,” என்று தேவராஜா கூறினார்.

சகுந்த ஹிரிமுத்துகொட ஐ.வை.எஸ்.எஸ்.இ. சார்பாக கூட்டத்தில் உரையாற்றினார். விஜேயின் மரணத்திற்கு அடுத்த நாள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு வெளியிட்ட அறிக்கையை சுட்டிக் காட்டிய ஹிரிமுத்துகொட, ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காக விஜே சளைக்காமல் போராடினார் என்று கூறினார். “தோழர் விஜேயின் முழு புரட்சிகர வாழ்க்கையும் தொழிலாள வர்க்கம், இளைஞர்கள் மற்றும் உழைக்கும் மக்களுக்கு ஒரு முன்மாதிரியாக உள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.

சகுந்த ஹிரிமுத்துகொட

ல.ச.ச.க.யின் காட்டிக்கொடுப்பு, இலங்கையிலும் சர்வதேச அளவிலும் பாரிய அரசியல் குழப்பத்தை உருவாக்கியது. “ ல.ச.ச.க.யின் காட்டிக்கொடுப்பைத் தொடர்ந்து இலங்கையில் காளான்கள் போல் உருவான, தெற்கில் ஜே.வி.பி. [மக்கள் விடுதலை முன்னணி] மற்றும் வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட, அனைத்து அரசியல் போக்குகளும், மத்தியதர வர்க்கம் மற்றும் குட்டி முதலாளித்துவத்தை அடித்தளமாகக் கொண்டு, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரத்தை நிராகரித்தன” என்று ஹிரிமுத்துகொட விளக்கினார்.

சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் தீபால் ஜயசேகர இறுதி உரையை ஆற்றினார். சர்வதேச சோசலிசக் கொள்கைகளுக்காக தனது வாழ்நாளில் முக்கால்வாசியை அர்ப்பணித்த ஒரு அசாதாரண தோழரின் வாழ்க்கையை இந்த கூட்டம் நினைவு கூருவதாக அவர் தெரிவித்தார்.

1964ல் ல.ச.ச.க. சர்வதேச சோசலிசத்தை காட்டிக் கொடுத்ததற்கு எதிராகவும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காகவும் போராடிய அரசியல் ரீதியில் புத்திசாலித்தனமான இளைஞர்கள் குழுவின் ஒரு பகுதியாக விஜேயின் முன்னணி பாத்திரத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் தீபால் ஜயசேகர கொழும்பு கூட்டத்தில் உரையாற்றிய போது.

“ல.ச.ச.க.யின் காட்டிக்கொடுப்பின் உண்மையான தோற்றுவாய் இருப்பது இலங்கையில் அல்ல, மாறாக நான்காம் அகிலத்திற்குள் தலைதூக்கி, ட்ரொட்ஸ்கிசத்தின் கொள்கைகளை காட்டிக் கொடுத்த சர்வதேச பப்லோவாத திருத்தல்வாதமே அதன் தோற்றுவாய் என்று தெளிவுபடுத்தி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தீர்க்கமான அரசியல் தலையீடே, விஜேயின் அபிவிருத்தியின் மிக முக்கியமான காரணி ஆகும்,” என்று அவர் கூறினார். விஜே மற்றும் கீர்த்தி உட்பட அந்தத் தோழர்கள், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அரசியல் மற்றும் தத்துவார்த்த வழிகாட்டுதலின் கீழ், 1968ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை ஸ்தாபிக்க உழைத்தனர்.

கீர்த்தி பாலசூரியவின் துன்பகரமான அகால மரணத்தைத் தொடர்ந்து, விஜே பு.க.க. தலைமையை ஏற்றுக்கொண்ட போது இலங்கையின் நிலைமையை பற்றி ஜயசேகர விளக்கினார்.

“அந்த காலகட்டத்தில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான உக்கிரப்படுத்தப்பட்ட உள்நாட்டுப் போரையும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் இராணுவ அடக்குமுறை மற்றும் ஜே.வி.பி.யின் பாசிச பயங்கரவாதத்தையும் கட்சி எதிர்கொண்டது.

“இந்த கடினமான சூழ்நிலையை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் வெற்றிகரமாக எதிர்கொண்டு அதன் சோசலிச அனைத்துலகவாத வேலைத்திட்டத்தையும் தொழிலாள வர்க்கத்தை நோக்கிய நோக்குநிலையையும் அபிவிருத்தி செய்ய முடிந்தது எனில், அது பொதுவில் கட்சித் தலைமையின் அரசியல் ஒருமைப்பாட்டிற்கும், குறிப்பாக தலைமைத்துவத்தில் விஜே ஆற்றிய தீர்க்கமான பாத்திரத்திற்கும் ஒரு சக்திவாய்ந்த நிரூபணமாகும்,” என அவர் தெரிவித்தார்.

வெறுக்கப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக கடந்த ஆண்டு இடம்பெற்ற வெகுஜன எழுச்சியின் போது விஜே ஆற்றிய முக்கிய பாத்திரத்தை ஜயசேகர விளக்கினார். அவரது முதுமை மற்றும் உடல் பலவீனம் ஒருபுறம் இருக்க, விஜே “தனது வாழ்க்கையின் இறுதி நாள் வரை கட்சித் தலைமைக்குள் அரசியல் ரீதியாக செயற்பாட்டுடன் இருந்து, அவரது அபாரமான அரசியல் அறிவு மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தலைமைத்துவத்துக்கு வழிகாட்டுதலை வழங்கினார்.”

ஜூலை 20 அன்று, கட்சி வெளியிட்ட அறிக்கையை வரைவதிலும் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் மாநாட்டிற்கான பிரச்சாரத்தைத் தொடக்கி வைப்பதிலும் அனைத்துலகக் குழுத் தோழர்களுடனான விஜேயின் பங்கேற்பையும் ஒத்துழைப்பையும் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். “தனது பலத்தை ஒருங்கிணைக்கவும், கிராமப்புற மக்களின் செயலூக்கமான ஆதரவை வென்றெடுக்கவும், சோசலிச வழியில் சமுதாயத்தை மறுகட்டமைக்க அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தின் மூலம் அதன் சொந்த ஆட்சிக்கு அடித்தளம் அமைப்பதற்கும் தொழிலாளர் வர்க்கத்திற்கு ஒரு அரசியல் மூலோபாயத்தை” அந்த அறிக்கை வழங்கியது என ஜயசேகர கூறினார்.

சோசலிச சமத்துவக் கட்சியில் அங்கம் வகிக்காத அனைவரையும் கட்சியுடன் கலந்துரையாடல்களை ஆரம்பிக்குமாறும், அதில் இணைவதற்கு விண்ணப்பிக்குமாறும் அழைப்பு விடுத்து உரையை முடித்த ஜயசேகர, “தோழர் விஜே டயஸுக்கு உங்கள் புகழஞ்சலியை செலுத்த அதுவே சிறந்த வழிமுறையாகும்,” என்று அறிவித்தார்.

சோசலிச சமத்துவக் கட்சி எதிர்வரும் நாட்களில் சர்வதேச வாழ்த்துகளையும் கூட்டத்தில் பங்கேற்றவர்களுடனான நேர்காணல்களைகளையும் வெளியிடும்.

தோழர் விஜே டயஸ்: ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராளி (27 ஆகஸ்ட் 1941 – 27 ஜூலை 2022)

இலங்கை ட்ரொட்ஸ்கிச தலைவர் விஜே டயஸின் 80 வது பிறந்தநாளில்

விஜே டயஸ் ஆற்றிய உரை: தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச போராட்டங்களும் நிரந்தரப் புரட்சி முன்னோக்கும்

Loading