பிரெஞ்சு துருப்புக்கள் நைஜரில் இருந்து வெளியேற உத்தரவு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

முன்னாள் பிரெஞ்சு காலனியான நைஜரில் உள்ள அனைத்து பிரெஞ்சு துருப்புக்களும் செப்டம்பர் தொடக்கத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஜெனரல் அப்துரஹ்மானே டிசியானி தலைமையிலான இராணுவ ஆட்சிக்குழு கடந்த ஆகஸ்ட் 14 அன்று அறிவித்துள்ளது.

CNSP (தாயகத்தின் பாதுகாப்பிற்கான தேசிய கவுன்சில்) செய்தித் தொடர்பாளர் கேர்னல் மேஜர் அமடு அப்ராமன் ஆகஸ்ட் 3 அன்று பிரான்சுடன் 1977 மற்றும் 2020 க்கு இடையில் கையெழுத்திட்ட ஐந்து இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்வதாக அறிவித்ததை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

நியாமியில் அமெரிக்க விமானப்படையின் C130 சரக்கு விமானத்தில் இருந்து பிரெஞ்சு படையினர்கள் இறங்குகின்றனர். நைஜர் தளம், ஜூன் 9, 2021 [AP Photo]

மே 2021 மற்றும் செப்டம்பர் 2022 இல் இராணுவ சதிப்புரட்சிகளைத் தொடர்ந்து ஏற்கனவே மாலியில் இருந்து 2,400 படையினர்களையும், புர்கினா பாசோவிலிருந்து 400 படையினர்களையும் திரும்பப் பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட பிரான்ஸ், தற்போது அதன் முன்னாள் காலனித்துவ பிரதேசங்களில் அதன் இராணுவ இருப்பு வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவின் சஹேல் பகுதியில் இருக்கும் சாட் நாட்டில், இப்போது ஏகாதிபத்தியத்தின் கடைசி இராணுவத் தளம் அமைந்திருக்கிறது. இது அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து செங்கடல் வரை பரந்து விரிந்திருக்கும் சஹாரா பாலைவனத்திற்குக் கீழேயுள்ள ஒரு நிலப்பரப்பு ஆகும்.

பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கான நெருக்கடியின் அளவு, பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனுக்கும் DGSE உளவுத்துறையின் தலைவரான பேர்னார்ட் எமிக்கும் இடையே நடந்த ஒரு பொது வாதத்தால் எடுத்துக்காட்டப்பட்டது.“DGSE-யின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்பதை நாம் பார்க்கலாம். நீங்கள் வருவதுபற்றி எதுவும் அறிந்திருக்கவில்லையெனில், அங்கே ஒரு பிரச்சனை இருக்கிறது”என்று ஜனாதிபதி எமியிடம் கூறியதாக பல ஆதாரங்கள் தெரிவித்தன. ஆனால், எமி, இது தொடர்பாக மக்ரோனை எச்சரித்ததாக பதிலளித்தார், இதை உறுதிப்படுத்தும் வகையில் செய்திகள் ஊடகங்களில் தகவல் கசிந்துள்ளது.

பல ஆண்டுகளாக “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற போர்வையின் கீழ் இப்பகுதியில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பிரெஞ்சுப் படைகள், 2011 இல் லிபியாவிற்கு எதிராக நடத்தப்பட்ட ஏகாதிபத்திய பினாமிப் போரில் உருவெடுத்த ஜிஹாதி ஆயுதக்குழுக்களை எதிர்த்து சண்டையிடுகின்றன. தோராயமாக 1,500 பிரெஞ்சுப் படையினர்கள் நைஜரில் உள்ளனர். அதன் தலைநகரான நியாமி டியோரி-ஹமானி சர்வதேச விமான நிலையத்தில், பிரெஞ்சு விமானப்படைத் தளம் இயங்குகிறது. பல மிராஜ் 2000D ரக போர் விமானங்கள், தாக்குதல் ஹெலிகாப்டர்கள், MQ-9 ரீப்பர் ட்ரோன்கள், இராணுவ வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் இத்தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

சஹேல் பிராந்தியம் முழுவதும் பிரெஞ்சு இராணுவத்தின் பிரசன்னம் மற்றும் பொருளாதாரச் சுரண்டல் என்பன, பரவலான மக்கள் விரோதத்தை தூண்டிவிட்டுள்ளன. மாலி, புர்கினா பாசோ ஆகியவை இப்போது நைஜரில் உள்ள ஆட்சிக் கவிழ்ப்பு ஆட்சியாளர்களுக்கு ஆதரவைத் திரட்ட முற்பட்டுள்ளன. ஜூலை 30 அன்று, நியாமியில் பிரெஞ்சு தூதரகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டங்கள் நடந்தன, அதன் போது தூதரகத்தின் ஒரு கதவுக்கு தீ வைக்கப்பட்டது. ஆகஸ்ட் 11 அன்று, ஆயிரக்கணக்கான மக்கள் பிரெஞ்சு விமானப்படைத் தளத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பிரெஞ்சு அரசாங்கம் போர் வெறிகொண்டது. தமது தூதரகத்துக்கு எதிரான போராட்டத்துக்கு மக்ரோனின் அலுவலகம் பின்வருமாறு பதிலளித்தது, “எவராவது பிரெஞ்சு குடிமக்கள், இராணுவம், இராஜதந்திரிகள் மற்றும் பிரெஞ்சு நலன்கள் மீது தாக்குதல் நடத்தினால், பிரான்ஸ் உடனடி மற்றும் தீர்க்க முடியாத முறையில் பதிலளிப்பதை அவர்கள் காண்பார்கள், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இவற்றை பொறுத்துக்கொள்ள மாட்டார்.”

ஆகஸ்ட் 9 அன்று, நைஜர் இராணுவ ஆட்சியாளர்களால் விமானங்கள் பறப்பதற்கு தடைவிதிக்கப்பட்ட வான்வெளியை மீறி, 16 பயங்கரவாதிகளை தில்லாபெரி பகுதியில் விமானம் மூலம் விடுவித்ததால், பிரான்ஸ் தமது நாட்டை ஸ்திரமின்மைக்கு உள்ளாக்கியதாக பேச்சாளர் அப்த்ரமானே குற்றம் சாட்டினார்.

தில்லாபெரி பிராந்தியத்தில் கனேடிய மற்றும் மொராக்கோ நிறுவனத்தால் இயக்கப்படும் சமிரா தங்கச் சுரங்கத்திலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போர்கோவ் போர்கோவில் தேசிய காவலரின் ஒரு பிரிவு, ஜிஹாதிகளால் தாக்கப்பட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஆட்சிக் கவிழ்ப்புக்கு பின்னர் நைஜர் இராணுவத்தின் மீது இரத்தக்களரி தாக்குதல்கள் தொடர்கின்றன. செவ்வாயன்று, மாலி மற்றும் நைஜர் எல்லைக்கு அருகே உள்ள கூடோகோவில் ஆயுதமேந்திய குழு நடத்திய தாக்குதலில் 17 நைஜர் படையினர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர்.

பிரெஞ்சு அரசாங்கம் உடனடியாக இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தாலும், பிரான்சும் இதர மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளும் லிபியா மற்றும் சிரியாவில் நடந்த பேரழிவுகரமான போர்களில், தமது இஸ்லாமிய ஆதரவாளர்களை தங்கள் சொந்த நோக்கங்களுக்காக பயன்படுத்துவதில் இழிபுகழ் பெற்றவையாகும்.

தனது படைகளை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்ட பிரான்ஸ்,“பாதுகாப்புத் துறையில், நைஜருடன் அதன் ஒத்துழைப்பிற்கான சட்டக் கட்டமைப்பானது, சட்டப்பூர்வமான நைஜர் அதிகாரிகளுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை அடிப்படையாகக் கொண்டது... இவைகளை மட்டுமே பிரான்ஸ் மற்றும் ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் அங்கீகரிக்கிறது”என்று அதற்கு பதிலளித்தது.

பிரெஞ்சு அரசாங்கம் மிகவும் பொறுப்பற்றதாக இருக்க விரும்புகிறது, ஏனெனில் அதன் பெயரளவிலான ஏகாதிபத்திய கூட்டாளிகள், தங்கள் சொந்த நிலைகளை பாதுகாக்க விரைந்து செல்லும் போது, அதை கைவிட்டுவிட்டதாக பிரான்ஸ் உணர்கிறது.

“நைஜரில் ஏற்பட்ட ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, பிரான்ஸ் தனது அமெரிக்க நட்பு நாடால் முந்தப்பட்டுவிடும் என்று அஞ்சுவதாக”Le Figaro ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. ஒரு பிரெஞ்சு இராஜதந்திரியின் கருத்துக்களின் அடிப்படையில், அமெரிக்க வெளியுறவுத் துறையின் உதவிச் செயலர் விக்டோரியா நுலாண்டைச் சந்திப்பதற்கு அனுப்பியதன் மூலம் “நாங்கள் நினைத்ததற்கு நேர்மாறாக அமெரிக்கா செய்தது”என்று இந்த பத்திரிகை தெரிவிக்கிறது. “இது போன்ற கூட்டாளிகள் இருக்கும்போது, நமக்கு எதிரிகள் தேவையில்லை”என்ற வரியுடன் லூ பிகாரோ பத்திரிகையின் கட்டுரை தொடங்குகிறது.

“அமெரிக்கர்கள் முதன்மையாக இப்பகுதியில் தங்கள் தளங்களை வைத்திருக்க விரும்புவதாக”லூ பிகாரோ அதன் ஆதாரத்தின் கருத்தை சுருக்கமாகக் கூறியது. மேலும் “இந்த இலக்கை அடைய வாஷிங்டன் அரசியலமைப்பு சட்டப்பூர்வமானது என்று அழைக்கும் தேவையை கைவிட தயங்காது…

“அமெரிக்கா, இந்த விஷயத்தில் எங்கள் நட்பு நாடுகளைப் போலவே, எங்களை தண்டனை பெற அனுமதிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளது.”

இந்த மதிப்பீடு கடந்த வியாழன் அன்று ஒரு CNN கட்டுரையில் ஆதரவைக் கண்டது. “கடந்த மாதம் நைஜரின் அரசாங்கத்தை தூக்கியெறிந்த இராணுவ ஆட்சிக்குழு, ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கு மீண்டும் அதிகாரத்தை விட்டுக்கொடுப்பது சாத்தியமற்றதாக இருந்தாலும் கூட, நைஜரில் அமெரிக்கப் படைகள், தமது சொத்துக்களை பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தொடர்வதற்கான வழிகளை பைடென் நிர்வாகம் தேடுகிறது”என்று அது தெரிவித்தது.

தற்போது நைஜர் பாதுகாப்புத் தளபதி பதவியை வகித்து வருவதோடு, அமெரிக்க இராணுவத்தால் பயிற்சி பெற்றவரான பிரிகேடியர் ஜெனரல் மூசா பார்மூ, ஒரு வேறுபட்டவராக இருக்கின்றார் என்று சிஎன்என் தெரிவித்தது. அத்துடன் சிஎன்என் அமெரிக்காவின் முன்னாள் சிறப்பு நடவடிக்கைக் கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜே மார்கஸ் ஹிக்ஸின் கருத்தை மேற்கோள் காட்டியுள்ளது. அதில், ஜெனரல் மூசா பார்மூ மேற்கத்திய நாடுகளுக்கு எதிர்ப்பாளர் அல்ல, மாறாக அமெரிக்க இராணுவத்தில் உள்ள எங்களில் பலருக்கு அவர் நண்பராகவும் இருக்கிறார் என்றும், நாங்கள் வெளியேற வேண்டும் என்று அவர்கள் நினைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். நுலாண்ட் நைஜருக்கான தனது பயணத்தின் போது பார்மூவை சந்தித்திருந்தார்.

இதுவரை, நைஜர் இராணுவம் அமெரிக்கப் படைகளையும் மற்றும் இத்தாலிய மற்றும் ஜேர்மன் படைகளையும் நாட்டை விட்டு வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கவில்லை. ஆட்சிக் கவிழ்ப்பு தலைவர்கள் பிரெஞ்சு எதிர்ப்பு உணர்வை ஆழத்திலிருந்து தட்டி எழுப்புகின்றனர். ஆனால், திரைக்குப் பின்னால் அமெரிக்கப் படைகளுடன் நடந்து வரும் பேச்சுவார்த்தைகள், அரசாங்கத் தரப்பின் ஏகாதிபத்திய எதிர்ப்பு பாசாங்குகளை அம்பலப்படுத்துகின்றன.

பிரான்ஸை விட அமெரிக்கா தனது வார்த்தைகளை மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுத்திருந்தாலும், நைஜரில் ஒரு “கடைசி முயற்சியாக”ஒரு பேரழிவு இராணுவத் தலையீட்டிற்குத் தயாராகி வரும் மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகத்திற்கு (ECOWAS) அது இன்னும் தனது ஆதரவை தெரிவித்து வருகிறது. ECOWAS தலைவர்கள் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று கானாவின் தலைநகரான அக்ராவில் இராணுவத் திட்டங்களைப் பற்றி விவாதித்திருந்தனர்.

ஆபிரிக்கா முழுவதும் அதன் அரசாங்கங்களுக்கு ஆதரவாக செயல்படுவதைப் போலவே, ரஷ்ய அரசாங்கமும் தன்னை இப்பகுதியில் ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்தியாகக் காட்டிக் கொள்கிறது.

ஆகஸ்ட் 15 அன்று நடைபெற்ற சர்வதேச பாதுகாப்பு தொடர்பான 11வது மாஸ்கோ மாநாட்டில் பங்கேற்றவர்களிடம் புட்டின் கூறினார், “இந்த மோதல்களுக்குப் பின்னால் உள்ளவர்கள், தேசங்களை ஒன்றுக்கொன்று எதிராகத் தூண்டுவதன் மூலம் மனித அவலத்திலிருந்து பயனடைய முயல்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. அத்துடன், ஒரு நவ-காலனித்துவ அமைப்பிற்குள், நிலப்பிரபுத்துவ கீழ்ப்படிதலுக்கு அரசுகளை அடிபணியச் செய்து, இரக்கமின்றி அவர்களின் வளங்களை சுரண்டுகின்றனர்.”

ரஷ்யாவின் பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு, மேற்கு நாடுகள் அதன் முன்னாள் காலனிகளின் இயற்கை வளங்களில் இருந்து லாபம் ஈட்டுவதற்காக ஆப்பிரிக்க கண்டத்தில் “மோதல் மையங்களை பராமரிப்பதாக”குற்றம் சாட்டினார்.“நவ காலனித்துவம் மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்தில் ஆப்பிரிக்க நாடுகளுடன் ராணுவ மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தொடர்ந்து வலுப்படுத்தும்”என்றும் அவர் கூறினார்.

ஆனால், இரு முன்னரங்கிலும் வழங்குவதற்கு ரஷ்யாவிடம் எதுவும் இல்லை. ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படை இயங்கி வரும் மாலி மற்றும் புர்கினா பாசோ, ஆயுதமேந்திய குழுக்களால் அழிக்கப்பட்டு வருவதுடன், இன்னும் சர்வதேச நிதி மூலதனத்தின் தயவில் இருக்கிறது. இப்போது நைஜரை மையமாகக் கொண்ட ஏகாதிபத்திய-ஆதரவு யுத்தத்தால் அச்சுறுத்தப்படுகிறது, இந்த நிலைமை, அவர்களின் சமூகங்களை குழப்பத்தில் ஆழ்த்தும்.

பிரெஞ்சு துருப்புக்களை வெளியேற்றுவதற்காக, ஏகாதிபத்திய சக்திகளுக்கும் அவற்றின் பிரதான போட்டியாளர்களான ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையில் சூழ்ச்சி செய்யும் ஒரு ஆட்சியை அலங்கரிப்பதை விட, தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற ஏழைகள், இவர்கள் அனைவருக்கும் எதிரான போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.

மேற்கு ஆபிரிக்காவில் உள்ள தொழிலாளர்கள் பிரான்ஸ் மட்டுமல்ல, உலகின் பல முக்கிய ஏகாதிபத்திய சக்திகளின் தாக்குதலை எதிர்கொள்கின்றனர், அவற்றின் புவிசார் அரசியல் மோதல்கள் பிராந்தியத்தை உலகளாவிய மோதலின் சுழலுக்குள் இழுத்துச் செல்கின்றன. இது ஆப்பிரிக்கா முழுவதிலும் மற்றும் ஏகாதிபத்திய மையங்களில் உள்ள முழு தொழிலாள வர்க்கத்துடனும் அவர்கள் பகிர்ந்து கொள்ளும் போராட்டமாகும்.