பிரெஞ்சு தூதுவரை வெளியேற்ற நைஜர் இராணுவ ஆட்சிக்குழு அழைப்பு விடுத்ததால், மக்ரோன் போர் அச்சுறுத்தலை விடுக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கடந்த வெள்ளியன்று, தலைநகர் நியாமிலுள்ள நைஜரின் இராணுவ ஆட்சிக்குழு, நைஜருக்கான பிரெஞ்சு தூதுவர் சில்வைன் இத்தே க்கு நாட்டை விட்டு வெளியேற 48 மணிநேர காலக்கெடுவை விடுத்தது. பிரெஞ்சு தூதரை வெளியேற்றுவதற்கான இராணுவ ஆட்சிக்குழுவின் காலக்கெடு, 1977 மற்றும் 2020 க்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட பிரான்சின் ஐந்து இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை ஆகஸ்ட் 3 அன்று ரத்து செய்த பின்னர் வந்துள்ளது. அத்தோடு, ஆகஸ்ட் 14 அன்று, முன்னாள் பிரெஞ்சு காலனியாக இருந்த நைஜரில் உள்ள அனைத்து பிரெஞ்சு துருப்புக்களும் செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து நாட்டை விட்டு வெளியேறுமாறும் அது உத்தரவிடப்பட்டுள்ளது.

நியாமியில் அமெரிக்க விமானப்படையின் C130 சரக்கு விமானத்தில் இருந்து பிரெஞ்சுப் படையினர்கள் இறங்குகின்றனர். நைஜர் தளம், ஜூன் 9, 2021 [AP Photo]

இராணுவ ஆட்சிக்குழுவால் நியமிக்கப்பட்ட நைஜரின் வெளியுறவு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட கடிதத்தில், “தகுதிவாய்ந்த நைஜீரிய அதிகாரிகள் திரு. சில்வைன் இத்தே யிடமிருந்து தங்கள் ஒப்புதலை திரும்பப் பெற முடிவு செய்து, மேலும் நாற்பத்தெட்டு மணி நேரத்திற்குள் நைஜீரியப் பிரதேசத்தை விட்டு வெளியேறும்படி அவரைக் கேட்டுக்கொண்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “நைஜரின் நலன்களுக்கு எதிராக பிரெஞ்சு அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக' தூதுவரை வெளியேற்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் கூறியது. நைஜரில் புதிதாக நியமிக்கப்பட்ட வெளியுறவு மந்திரியை சந்திப்பதற்கான அழைப்பிற்கு பிரெஞ்சு தூதுவர் பதிலளிக்க மறுத்ததும் இதில் அடங்கும்.

பிரெஞ்சு தூதுவருக்கு எதிரான இறுதி எச்சரிக்கை, பாரிஸில் உள்ள பிரெஞ்சு வெளியுறவு அமைச்சகத்தால் உடனடியாக நிராகரிக்கப்பட்டது. இது நைஜரின் இராணுவ ஆட்சிக்குழுவின் அதிகாரத்தை, அமைச்சகம் அங்கீகரிக்கவில்லை என்று மீண்டும் மீண்டும் கூறியது. “இந்த கோரிக்கையை முன்வைப்பதற்கான அதிகாரம் ஆட்சியாளர்களுக்கு இல்லை, தூதுவரின் ஒப்புதல் சட்டப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட நைஜீரிய அதிகாரிகளிடமிருந்து மட்டுமே வருகிறது” என்று பிரெஞ்சு அரசாங்கம் கூறியது.

நேற்று, எலிசே ஜனாதிபதி மாளிகையில் பிரெஞ்சு தூதர்களின் வருடாந்திர மாநாட்டில் உரை நிகழ்த்திய பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்,  தூதர் சில்வைன் நைஜரில் தங்கியிருப்பார் என்றும் நைஜருக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார். நியாமியில் உள்ள இராணுவ ஆட்சிக்கு, சில்வைனை தங்கள் நாட்டை விட்டு வெளியேறச் சொல்ல “எந்த அதிகாரமும் இல்லை” என்று அவர் அறிவித்தார். பாரிஸ் மற்றும் வாஷிங்டனின் உத்தரவின் பேரில் நைஜரை ஆக்கிரமிக்கக்கூடிய ECOWAS ல் (மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம்) இருக்கும் ஆப்பிரிக்க நாடுகளின் “பொறுப்பான கொள்கையையும்” அவர் பாராட்டினார்.

ஒரு கூட்டாண்மையின் கட்டமைப்பிற்குள் ECOWAS இன் இராஜதந்திர திட்ட நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து பாராட்டிய மக்ரோன், ECOWASன் இராணுவ நடவடிக்கைக்கு உடன்பட்டதோடு, அதற்கு ஒப்புக்கொண்டார்.

நைஜர் மற்றும் அருகிலுள்ள நாடுகளான மாலி மற்றும் புர்கினா பாசோவில் உள்ள இராணுவ ஆட்சிகளுக்கு எதிராக, பிரான்ஸ் தலைமையில் இராணுவத் தலையீடுகளுக்கான திட்டங்களுக்கான எதிர்ப்பையும் மக்ரோன் மறைமுகமாக விமர்சித்தார். “சிலருக்கு முந்தைய ஆட்சிக் கவிழ்ப்புகளில் இருந்த பலவீனம் பிராந்திய போக்குகளை ஊக்குவித்துள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

உண்மையில், ஆபிரிக்கா முழுவதும், குறிப்பாக, ஆபிரிக்காவில் பிரான்சின் முன்னாள் காலனித்துவ சாம்ராஜ்யத்தின் பெரும்பகுதி முழுவதும், இந்த ஆட்சிக் கவிழ்ப்பானது, ஒரு தசாப்தத்திற்கும் மேலான இரத்தம் தோய்ந்த நேட்டோ போர்களின் விளைபொருளாக இருக்கிறது. 2011 இல், லிபியாவிற்கு எதிரான நேட்டோ போருக்குப் பிறகு, பிரான்ஸ் 2013 இல் மாலியில் ஒன்பது ஆண்டுகள் இராணுவ ஆக்கிரமிப்பைத் தொடங்கிய போது, ஆயிரக்கணக்கான துருப்புக்களை நைஜர் மற்றும் புர்கினா பாசோவிற்கு அனுப்பியது. பிரெஞ்சு இராணுவ பிரசன்னத்திற்கு எதிராக இப்பகுதிகளில் பெருகிவரும் கோபம், வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், பிரெஞ்சுத் துருப்புக்கள் கடந்த ஆண்டு மாலியை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது.

மாலி, புர்கினா பாசோ மற்றும் இப்போது நைஜர் ஆகிய நாடுகளில் பிரெஞ்சு இராணுவ நடவடிக்கைகளுடன் நெருக்கமாக பணியாற்றிய அரசாங்கங்கள், வளர்ந்து வரும் மக்கள் கோபத்தின் மத்தியில் வீழ்ச்சியடைந்துள்ளன. அதற்கு பதிலாக, அதிகாரத்திலிருக்கும் இராணுவ ஆட்சிகள், உக்ரேன் மோதலில் ஈடுபட்டுள்ள ரஷ்யாவுடனும், வாக்னர் இராணுவக் குழுவுடனும் உறவுகளை நாடியுள்ளன.

இப்போது, ​​உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போருக்கு மத்தியில், ஆபிரிக்காவில் ஒரு பெரிய போர் விரிவாக்க அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. நைஜீரியா, கானா அல்லது ஐவரி கோஸ்ட் போன்ற ECOWAS லுள்ள கனமான நாடுகளுக்கு, குறிப்பாக பிரான்ஸ் போருக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. அத்தோடு, மாலி, நைஜர் மற்றும் புர்கினா பாசோவை திரும்பப் பெற, நேட்டோ தலைமையிலான போருக்கு அது தரைப்படைகளை வழங்கும். பாரிஸ், வாஷிங்டன் மற்றும் பிற நேட்டோ சக்திகள், ஜூலை 26 அன்று ஆட்சிக் கவிழ்ப்பில் ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்ட நைஜீரிய ஜனாதிபதி மொஹமட் பாஸூமை மீண்டும் பதவியில் அமர்த்துவதற்கான ECOWAS இன் அழைப்பை ஆதரித்துள்ளன.

ஆகஸ்ட் 24 அன்று, தூதர் சில்வைனை வெளியேற்ற நைஜர் அழைப்பு விடுத்ததற்கு முந்தைய நாள், புர்கினா பாசோ மற்றும் மாலியின் வெளியுறவு மந்திரிகள் முறையே ஒலிவியா ரூவாம்பா மற்றும் அப்துலே டியோப் ஆகியோர் நியாமிக்கு இராணுவத் தலைவர் ஜெனரல் அப்துரஹாமானே தியானியைச் சந்திக்கச் சென்றனர். நைஜர் பிரதேசத்தில் இராணுவத் தாக்குதல் நடந்தால், உடனடியாக தலையிட புர்கினா பாசோ மற்றும் மாலியின் தற்காப்பு மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு அதிகாரம் அளிக்கும் ஒப்பந்தங்களில் அவர்கள் கையெழுத்திட்டனர்.

கடந்த வாரம், ECOWASன் பிரதிநிதிகள் ஜெனரல் அப்துரஹ்மானே டிசியானியை நியாமியில் சந்தித்தனர். ECOWAS நாடுகளை சேர்ந்த அதிகாரிகள், பதவியில் இருந்து அகற்றப்பட்ட பாசுமை மீண்டும் பதவியில் அமர்த்த இராணுவரீதியில் தலையிடத் தயாராக இருப்பதாக அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த சந்திப்பு நடந்தது.

ECOWASன் தூதுக்குழு நியாமியில் இருந்தபோது, ​​தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு அதிகாரத்தை மீண்டும் ஒப்படைப்பதற்கு முன்பு அதிகபட்சம் “மூன்று ஆண்டுகள்”  அதிகாரத்தை வைத்திருப்பதாக டிசியானி கூறினார். இராணுவ ஆட்சிக்குழுவால் முன்மொழியப்பட்ட இந்த திட்டம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், மொஹமட் பாஸூம் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட வேண்டும் என்றும் தூதுக்குழு வலியுறுத்தியதால், இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

பாஸூமை மீண்டும் பதவியில் அமர்த்த இராணுவ ஆட்சி மறுத்துவிட்டது. நைஜரில் எந்தவொரு தலையீட்டுக்கும் எதிராக ஜெனரல் டிசியானி ECOWAS ஐ எச்சரித்தார்: “ஆனால், தெளிவாக இருக்கட்டும். எங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டால், சிலர் நினைப்பது போல் அது பூங்காவில் நடக்காது” என்றார்.

ஆகஸ்ட் 26 அன்று, நைஜரில் உள்ள “சட்டவிரோத இராணுவ ஆட்சியாளர்களை” பிரெஞ்சு அதிகாரிகள் கண்டித்ததை அடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள் நியாமியின் தெருக்களில் வந்து நைஜரின் ஜெனரல் செய்னி கவுன்சே மைதானத்தில் ஒன்று கூடி, பிரெஞ்சு எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர். அவர்கள் நைஜீரிய, அல்ஜீரிய மற்றும் ரஷ்ய கொடிகளை உயர்த்திப் பிடித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ராமதோ இப்ராஹிம் பௌபக்கர் என்பவர், “நாங்கள் விரும்பும் கூட்டாளர்களைத் தேர்ந்தெடுக்க எங்களுக்கு உரிமை உண்டு, பிரான்ஸ் இந்தத் தேர்வை மதிக்க வேண்டும், 60 ஆண்டுகளாக நாங்கள் சுதந்திரமாக இங்கு இருந்ததில்லை”, என்று தெரிவித்தார்.

நைஜரில் இருந்து பிரெஞ்சு துருப்புக்களை திரும்பப் பெறக் கோரி, செப்டம்பர் 3 முதல் நியாமியில் உள்ள பிரெஞ்சு இராணுவம் மற்றும் விமானப்படை தளத்திற்கு முன்பாக மேலும் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாலி மற்றும் நைஜரின் வடக்கே எல்லையாகக் கொண்ட அல்ஜீரியா, ஜூலை 26 ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் நைஜரில் எந்த வெளிநாட்டு இராணுவ நடவடிக்கையையும் எதிர்க்கிறது. 2013-2022 இல் அந்நாட்டில் நடந்த போரின் போது மாலியில் உள்ள இலக்குகளை குண்டுவீசுவதற்கு பிரெஞ்சு போர் விமானங்கள் அதன் வான்வெளியைப் பயன்படுத்த அல்ஜியர்ஸில் உள்ள இராணுவ ஆட்சி அனுமதித்த பிறகு, தற்போது அது திடீரென தனது நிலைப்பாட்டை 180 டிகிரிக்கு மாற்றியுள்ளது. பிரான்சினுடைய போர் விமானங்களுக்கு அல்ஜீரியா வான்பரப்பில் பறக்கும் உரிமையை வழங்க மாட்டோம் என்று அது அறிவித்துள்ளது. அல்ஜீரியா வழியாக நைஜர் அல்லது மாலிக்கு செல்வதற்கு நான்கு மணிநேரம் எடுக்கும் பிரெஞ்சு இராணுவ விமானங்கள், இதனால் 10 மணிநேர மாற்றுப்பாதையில் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

மேற்கு ஆபிரிக்கா   [Photo by PirateShip6 / CC BY-SA 4.0]

பிரான்ஸ் தூதரை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்ட நைஜர் ராணுவ ஆட்சிக்குழு, அமெரிக்கா, இத்தாலி, ஜேர்மனி ஆகிய நாடுகளின் தூதுவர்களுக்கும் இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிக்கவில்லை. ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, 'அமெரிக்க அரசாங்கத்திடம் அத்தகைய கோரிக்கை எதுவும் முன்வைக்கப்படவில்லை' என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.

ஆகஸ்ட் 7 அன்று, பிரெஞ்சு ஏகாதிபத்தியம் நைஜரில் இராணுவத் தலையீட்டிற்கு ECOWAS ஐ தயார்படுத்திக் கொண்டிருந்த நிலையில், வாஷிங்டன் தனது அரசு துணைச் செயலாளரான விக்டோரியா நுலாண்டை இராணுவ ஆட்சிக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த நியாமிக்கு அனுப்பியது. “நைஜரில் பிரான்சுக்கான பங்குகள் வாஷிங்டனை விட மிக அதிகம். ... இது பிரான்சுக்கு உளவியல் மற்றும் மூலோபாய ரீதியாக ஏற்பட்ட தோல்வியாகும்,” என முன்னாள் வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரி கேமரூன் ஹட்சன், ஆப்பிரிக்காவை மையமாக வைத்து பொலிட்டிகோ பத்திரிகைக்கு தெரிவித்தார்.

ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான புதிய பதட்டங்கள், குறிப்பாக பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா இடையே அதிகரித்து வருகின்றன. “நைஜர் ஆட்சிக் கவிழ்ப்புக்கு பிறகு, பிரான்ஸ் தனது அமெரிக்க கூட்டாளியால் முந்தப்பட்டுவிடும் என்று அஞ்சுகிறது” என்று லூ பிகாரோ பத்திரிகை எழுதியது. உண்மையில் பிரெஞ்சு அதிகாரிகளின் விரக்தியை மேற்கோள் காட்டிய அப்பத்திரிகையானது, நைஜர் இராணுவத் தலைவர்கள் அமெரிக்க துருப்புக்களை அனுமதிக்க திட்டமிட்டுள்ளனர், ஆனால் பிரெஞ்சு துருப்புக்கள் நைஜரில் இருக்க முடியாது என்று குறிப்பிட்டது. “இதுபோன்ற நட்பு நாடுகள் இருக்கும்வரை, எங்களுக்கு எதிரிகள் தேவையில்லை” என்று பிரான்ஸ் வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, நேட்டோ சக்திகள் ஆபிரிக்காவில் இராணுவரீதியில் தலையிடவும் ரஷ்யாவுடன் அவர்கள் ஏற்கனவே உக்ரேனில் நடத்தி வரும் போரை அதிகரிக்கவும் நகர்கின்றன. நேட்டோ மற்றும் ECOWAS தலையீட்டின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், இப்பிராந்தியத்தில் இராணுவ பதட்டங்கள் மேலும் அதிகரித்து வருகின்றன. நைஜர், புர்கினா பாசோ மற்றும் மாலி ராணுவத்தின் அனைத்து படைப் பிரிவுகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நைஜரில் சுமார் 10,000 தன்னார்வலர்கள் ராணுவத்தில் சேர்ந்து அடிப்படை பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு ரஷ்யாவின் வாக்னர் குழுமம் பயிற்சி அளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரெஞ்சு மற்றும் நேட்டோ போர்களுக்கு எதிராக ஆபிரிக்க தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட கிராமப்புற மக்களின் வளர்ந்து வரும் இயக்கத்தின் ஒருங்கிணைப்பு தீர்க்கமான அரசியல் பிரச்சினை ஆகும். ஏகாதிபத்திய போருக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச இயக்கத்தில் நேட்டோ நாடுகள், ரஷ்யா, உக்ரேன் மற்றும் அதற்கு அப்பால் உள்ள தொழிலாளர்களுடன் அவர்களது ஒருங்கிணைப்பு அவசியமாகும்.

Loading