மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
சனிக்கிழமையன்று, நைஜரின் தலைநகரான நியாமியில் உள்ள பிரெஞ்சு இராணுவ தளத்தின் முன் பல்லாயிரக்கணக்கான மக்கள் நைஜரில் இருந்து பிரெஞ்சு துருப்புக்களை திரும்பப் பெறக் கோரி அணிவகுத்துச் சென்றனர்.

ஜூலை 26 அன்று, ஒரு ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் தற்போதைய நைஜீரிய ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளது என்ற சாக்குப்போக்கில், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இந்த முன்னாள் பிரெஞ்சு காலனியில் இருந்து தனது படைகளை வெளியேற்ற மறுத்துள்ளார். பிரெஞ்சு ஆதரவு நைஜீரிய ஜனாதிபதி மொஹமட் பாஸூமை வீழ்த்திய சதிக்கு எதிராக ஜனநாயகத்தின் பாதுகாவலராக மக்ரோன் தன்னைக் காட்டிக் கொள்கிறார். இந்த அடிப்படையில், மக்ரோன் நைஜரில் பிரெஞ்சு துருப்புக்களை வைத்திருப்பதோடு, அந்நாட்டுக்கான பிரெஞ்சு தூதர் சில்வைன் இத்தேயை மாற்ற வேண்டும் என்ற நைஜர் ஆட்சியின் கோரிக்கையை நிராகரித்து வருகிறார்.
நியாமியில் நடக்கின்ற பாரிய எதிர்ப்பு போராட்டங்கள், மக்ரோனின் புதிய காலனித்துவ வாதங்களின் மோசடியை அம்பலப்படுத்தியுள்ளது. உண்மையில், இது எல்லாவற்றிற்கும் மேலாக, நைஜர் இராணுவ ஆட்சிக்குழு அல்லாத அதன் மக்களே, நைஜரிலும் சஹேல் பிராந்தியம் முழுவதிலும் உள்ள பிரெஞ்சு இராணுவ பிரசன்னத்திற்கு முடிவுகட்ட விரும்புகிறார்கள். நைஜரின் அண்டை நாடுகளான மாலி மற்றும் புர்கினா பாசோவில் இரத்தம் தோய்ந்த ஒன்பது ஆண்டுகாலப் போரை நடத்தி, கடந்த ஆண்டு பிரெஞ்சு துருப்புக்கள் வெளியேறியதைப் போலவே, பிரெஞ்சு ஏகாதிபத்தியம் மற்றும் அதன் நேட்டோ நட்பு நாடுகளுக்கு எதிராக கோபம் இப்பிராந்தியத்தில் வெடித்துள்ளது.
கடந்த வியாழன் மற்றும் வெள்ளியன்று சிறிய எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பிறகு, பிரெஞ்சு இராணுவத் தளத்திற்கு முன்னால், நியாமியில் உள்ள எஸ்காட்ரில் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டனர். யுரேனியம் மற்றும் பிற முக்கியமான மூலப்பொருட்களை வழங்கும் முன்னணி பிரெஞ்சு நிறுவனங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் பிரெஞ்சுப் படைகள், நைஜரை விட்டு உடனடியாக வெளியேறுமாறு கோரி, கோஷங்களை போராட்டக்காரகள் எழுப்பினர். “நைஜீரியர்களின் இரத்தத்தை உறிஞ்சும் அட்டை பிரான்ஸ்” “நைஜீரியர்களுக்கு நைஜர், ஆப்பிரிக்கர்களுக்கு ஆப்பிரிக்கா” மற்றும் “ஆப்பிரிக்காவின் துணிச்சலான மக்களை, மீண்டும் எதுவும் தடுக்க முடியாது” என்ற பதாகைகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வைத்திருந்தனர்.
“நாங்கள் இன்று எம்மை தியாகம் செய்ய தயாராக இருக்கிறோம் என்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். அவர்கள் எங்கள் வளங்களை கொள்ளையடித்தார்கள், நாங்கள் விழிப்படைந்தோம். அதனால் வெளியேறப் போகிறார்கள்” என்று ஆர்ப்பாட்டக்காரர் யக்கோபா இசுபூ என்பவர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
“நைஜீரிய பிரதேசத்தில் இருக்கும் பிரெஞ்சுக்காரர்கள் வெளியேறு, வெளியேறு, வெளியேறுதல் மட்டுமே எங்களது ஒரே கோரிக்கை, எங்களின் இறுதி கோரிக்கை. இந்த மக்கள் எங்களுக்கு இங்கே தேவையில்லை, எங்களுக்கு அவர்கள் தேவையில்லை, நாங்கள் எங்கள் நாட்டைப் பாதுகாக்க இறப்பதற்கும் தயாராக இருக்கிறோம். நாங்கள் அவர்களை வெளியேறச் செய்ய இறப்பதற்கு தயாராக இருக்கிறோம். அவர்கள் வெளியேற வேண்டும், எங்களுக்கு அவர்கள் இங்கு தேவையில்லை” என்று நியாமியில் மற்றொரு எதிர்ப்பாளரான மரியமா அமாடோ இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையிடம் தெரிவித்தார்.
ஏகாதிபத்தியத்தால் திணிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் மற்றும் மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் (ECOWAS) நைஜர், மாலி மற்றும் புர்கினா பாசோவின் மீதான படையெடுப்புக்கான திட்டங்களுக்கு எதிராக, மேற்கு ஆபிரிக்கா முழுவதும் பெருகிவரும் எதிர்ப்பு போராட்டங்களுக்கு மத்தியில், நியாமியில் போராட்டங்கள் வெடித்துள்ளது.
பிரெஞ்சு துருப்புக்கள் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள நாடுகளை மீளக் கைப்பற்றுவதற்காக, பிரான்ஸ் தலைமையிலான பிரச்சாரத்திற்கும், ECOWAS நாடுகளின் துருப்புக்களை பீரங்கித் தீவனமாகப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அத்தகைய படையெடுப்பிற்கும் மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார். நைஜீரியா, ஐவரி கோஸ்ட், செனகல் மற்றும் பெனின் ஆட்சிகள் நைஜருக்கு படைகளை அனுப்ப விருப்பம் தெரிவித்துள்ளன.
ECOWAS தடைகள் ஏற்கனவே நைஜர் மீது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. இது நாட்டுக்குள் மின்வெட்டுக்கு வழிவகுத்துள்ளதோடு, முக்கிய மருந்துகள், உணவுப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் வர்த்தகத்தை நிறுத்தியுள்ளது. நைஜருக்கும் அருகிலுள்ள நைஜீரியாவுக்கும் இடையே மட்டும் வாரந்தோறும் நடைபெறும் வர்த்தகத்தில் 13 பில்லியன் நைரா (15 மில்லியன் யூரோக்கள்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம், நைஜர் உடனான போருக்கான திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள், நைஜீரியாவின் வடக்கே உள்ள கானோ நகரை உலுக்கியது. “நைஜருக்கு எதிரான போர் அநீதி”, “இது அமெரிக்காவின் கைவேலை”, “இது எங்களுக்கு நீதி” , “நைஜர் எங்களுடையது” என்று எதிர்ப்பாளர்கள் பதாகைகளை ஏந்தியிருந்தனர். நைஜீரிய நாளிதழான வான்கார்ட், திட்டமிடப்பட்ட ECOWAS இராணுவ நடவடிக்கையை “பெரும்பாலான நைஜீரியர்கள் பெரிதும் எதிர்க்கிறார்கள்” என்று குறிப்பிட்டது.
நைஜீரியாவின் ஆளும் வட்டங்களுக்குள்ளும் கூட, முழுமையான போரின் சாத்தியம் குறித்து கவலை அதிகரித்து வருகிறது. ECOWAS பாராளுமன்ற உறுப்பினரான இட்ரிஸ் வாஸ் என்பவர், “எம்மால் முடிக்க முடியாத ஒன்றை ஆரம்பிக்காமல் இருக்க, கவனமாக இருக்க வேண்டும். ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே போர் தொடங்கியபோது, அது கசப்பான போராக இருக்கும் என்று மக்கள் நினைத்தனர். ஒரு வருடத்திற்குப் பிறகும், போர் இன்னும் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது... [நைஜீரிய] துணைப் பிராந்திய இராணுவத் தலைவர்களுக்கு, அதனால் என்ன பொருளாதார நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியும். இதனாலேயே நைஜரில் இராணுவத் தலையீடு செய்ய ஆர்வமாக உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் ஊழல்வாதிகள். நைஜருக்கு எதிரான எந்தவொரு போரும் நைஜீரியாவின் 60 சதவீதத்தில், குறிப்பாக வடக்கு நைஜீரியாவில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்” என்று குறிப்பிட்டார்.
செனகலில் உள்ள நைஜீரியத் தொழிலாளர்கள் ரேடியோ பிரான்ஸ் இன்டர்நேஷனலில் ECOWAS தடைகள் மற்றும் போர்த் திட்டங்களுக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தலைநகர் டாக்காவை சேர்ந்த ஒரு தொழிலாளி டாஸ்ஸியோ கூறுகையில், “நாங்கள் வெளிநாட்டில் வசிக்கிறோம், தரைவழிப் பாதையில் செல்ல முடியாது, தாயகம் திரும்ப விமானங்களில் செல்ல முடியாது. நீங்கள் வங்கிகள் வழியாக பணம் அனுப்ப வேண்டியிருந்தால், இது இனி சாத்தியமில்லை, எனவே வர்த்தகம் தடைசெய்யப்பட்டுள்ளது. எங்கள் குடும்பங்களுக்கு உதவ பணம் அனுப்புவது தடுக்கப்பட்டுள்ளது” என்று கவலையுடன் தெரிவித்தார்.
செனகலில் நிதித் துறையில் பணிபுரியும் நைஜீரியரான அப்துரஹ்மானே, ஒரு சாத்தியமான ECOWAS இராணுவத் தலையீட்டைக் கண்டித்தார். “நான் அலுவலகத்தில் பேசும் செனகல் மக்கள் பொதுவாக இந்த இராணுவத் தலையீட்டை ஆதரிப்பதில்லை. எந்தவொரு ஆப்பிரிக்கரும், இன்று இந்த தலையீட்டை பாதுகாக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் இது ஆப்பிரிக்கர்களுக்கு இடையேயான போராக இருக்கும்” என்று கூறினார்.
இருப்பினும், போரின் ஆபத்து வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக ஆபிரிக்காவில் உள்ள மோதல்கள் உக்ரேனில் ரஷ்யாவுடன் நேட்டோவின் வேகமாக அதிகரித்து வரும் போருடனும், சீனாவுடனான அமெரிக்க இராணுவ மோதலுக்கான திட்டங்களுடனும் பிணைந்துள்ளது. நைஜர், மாலி மற்றும் புர்கினா பாசோவில் உள்ள இராணுவ ஆட்சிக்குழுக்கள் அனைத்தும் வாக்னர் குழுமத்தின் ரஷ்ய தனியார் இராணுவ ஒப்பந்தக்காரர்களுடன் அல்லது ரஷ்ய இராணுவ அதிகாரிகளுடன் நேரடியாக உறவுகளை நாடியுள்ளன.
நைஜரில் உள்ள சீனாவின் நிறுவனங்கள் பெனினுக்கு எண்ணெய் குழாய் மற்றும் உணவு பதப்படுத்தும் ஆலைகளை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளன, பிரெஞ்சு ஆதரவு பொருளாதாரத் தடைகள் அதன் தொழில்துறை திட்டங்களைத் தடுக்கும் அபாயத்தில் உள்ளன. சீனா, எச்சரிக்கையுடன் நியாமி ஆட்சிக்குழுவிற்கு தனது ஆதரவைக் காட்டியுள்ளது. வெள்ளிக்கிழமை, நைஜருக்கான சீன தூதர் ஜியாங் ஃபெங் நைஜர் பாதுகாப்பு அமைச்சர் சாலிஃபோ மோடியை சந்தித்தார். நைஜர் அரசாங்கத்திற்கு சீனாவின் “ஆதரவு” இருப்பதாக ஜியாங் மோடியிடம் கூறியதாக நைஜீரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
துருக்கிய, எகிப்திய மற்றும் அல்ஜீரிய அரசாங்கங்கள் அனைத்தும் ECOWAS தலையீட்டிற்கான அழைப்புகளை விமர்சித்துள்ளன. ECOWAS படையெடுக்க முயற்சிக்கும் பட்சத்தில், ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போரின் ஒரு பகுதியாக உக்ரேனுக்கு அனுப்பும் பைரக்டர் ட்ரோன்களை துருக்கி அரசாங்கம் நைஜருக்கு விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்த முதலாளித்துவ ஆட்சிகள் எதுவும் தொழிலாள வர்க்கத்தின் நண்பர்களோ அல்லது ஏகாதிபத்தியத்தின் நிலையான எதிர்ப்பாளர்களோ அல்ல. அல்ஜீரிய இராணுவ ஆட்சி இந்த ஆண்டு மாலி மீதான போரின் போது பிரெஞ்சு குண்டுவீச்சாளர்களுக்கு அதன் வான்வெளியைத் திறந்துவிட்டது. ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல் சிசியின் 2013 ஆட்சிக் கவிழ்ப்பின் போது, எகிப்திய தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டங்களை இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்க, எகிப்திய ஆட்சி இழிவான முறையில் வாஷிங்டனுடன் நெருக்கமாக பணியாற்றியது.
இந்த ஆட்சிகள் அனைத்தின் மூலோபாயம் (ஏகாதிபத்தியத்துடன் பேரம் பேச முயற்சி செய்து, ஆப்பிரிக்கத் தொழிலாளர்களிடையே புரட்சிகர உணர்வைத் திரட்டுவதைத் தவிர்க்கிறது) கடந்த மாதம் ரஷ்ய வெளியுறவு மந்திரி மரியா ஜாகரோவாவின் கருத்துக்களில் வெளிப்பட்டது. ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, நைஜரில் “சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்தி, உள்நாட்டு அமைதியை மீண்டும் நிலைநாட்டி, ஆப்பிரிக்க ஒன்றியம் மற்றும் ECOWAS போன்ற பிராந்திய அமைப்புகளுக்கு இடையேயான மோதலைத் தீர்க்க” அவர் அழைப்பு விடுத்தார்.
சோசலிசத்திற்கான போராட்டத்தில், ஏகாதிபத்திய நாடுகள் உட்பட, ஆபிரிக்கா மற்றும் அதற்கு அப்பால் ஏகாதிபத்திய போருக்கு வளர்ந்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பை ஐக்கியப்படுத்துவதே இதற்கான மாற்றீடாகும். இந்த ஆண்டு ஐரோப்பா முழுவதும் கடுமையான வெகுஜன வேலைநிறுத்தங்களின் வெடிப்பைக் கண்டுள்ளது. தொழிலாளர்கள், பெரும் வளங்களை ஊதியங்கள் மற்றும் சமூக செலவினங்களில் இருந்து இராணுவம் மற்றும் போருக்கு திருப்புவதை எதிர்க்கின்றனர். பிரான்சில், மக்ரோன் மக்களின் விருப்பத்தை காலில் போட்டு மிதித்து, பெரும் மக்கள் எதிர்ப்பையும், வெகுஜன வேலைநிறுத்தங்களையும், கலகத் தடுப்புப் பொலிசாரால் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி ஓய்வூதிய வெட்டுகளை திணித்துள்ளார்.
இந்த புறநிலையான புரட்சிகர நிலைமைகளில், சோசலிசத்திற்காகவும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் ஆபிரிக்க, ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பொதுவான இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டு வருகிறது. ஒரு புரட்சிகர சர்வதேசிய முன்னோக்கால் வழிநடத்தப்படும் அத்தகைய இயக்கம், பிரான்சின் முன்னாள் காலனித்துவ சாம்ராஜ்யத்தில் இருந்து பிரெஞ்சு துருப்புக்களை திரும்பப் பெறுவதை நிர்ப்பந்திக்க முடியும், மற்றும் ஏகாதிபத்தியத்தால் பல தசாப்தங்களாக சஹேல் மற்றும் ஆப்பிரிக்காவில் சூறையாடுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் முடியும்.
