மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் நைஜரின் தலைநகர் நியாமியில் இந்த வார இறுதியில் ஆர்ப்பாட்டம் நடத்திய தொடர்ந்து, ஆயிரக்கணக்கானோர் நியாமியில் உள்ள நேட்டோ இராணுவத் தளத்தை சுற்றி வளைத்தனர். இந்த தளத்தில் அமெரிக்க மற்றும் இத்தாலிய துருப்புக்கள், போர் விமானங்கள், கொலையாளி ட்ரோன்கள் மற்றும் தாக்குதல் ஹெலிகாப்டர்களுடன் சுமார் 1,500 பிரெஞ்சு துருப்புக்கள் உள்ளன. அண்டை நாடான மாலியில் 2013-2022 பிரெஞ்சுப் போரின் போது சஹேலில் பிரான்சின் முன்னாள் காலனித்துவப் சாம்ராஜ்ஜம் முழுவதும் தலையிட்ட பிரெஞ்சு துருப்புக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று போராட்ட எதிர்ப்பாளர்கள் கோருகின்றனர்.
நியாமி படைத்தளத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இப்ராஹிம் முகமது என்ற எதிர்ப்பாளர் பிரான்ஸ் இன்ஃபோவிடம், மாலியில் பிரான்ஸ் மேற்கொண்ட போரின் போது சஹேல் பகுதி முழுவதிலும் கிராமங்களில் நடந்த வெகுஜன படுகொலைகளுக்கு எந்த விளக்கமும் கிடைக்கவில்லை என்று கூறினார். “கண்காணிப்பு ட்ரோன்கள் மற்றும் கனரக ஆயுதங்களுடன் பிரான்ஸ் இன்று வைத்திருக்கும் அனைத்து கருவிகளுடன் இருந்தபோது... மோட்டார் சைக்கிள்களில் தனிநபர்கள் எப்படி எங்கள் மக்களை இரவும் பகலும் கொல்ல முடியும் என்பது எனக்குப் புரியவில்லை” என்று அவர் கூறினார்.
பக்கத்தைத் திருப்புங்கள் என்ற தொண்டு வலையமைப்பின் நைஜர் ஒருங்கிணைப்பாளர் மைகோல் சோடி, நேற்று நியாமி படைத்தளத்தை சுற்றியிருந்த எதிர்ப்பாளர்களுடன் உரையாற்றினார்: “நாங்கள் இந்த தளத்தை சுற்றி வளைத்துள்ளோம், நாங்கள் வீட்டிற்கு செல்லும் முன், கடைசி பிரெஞ்சு சிப்பாய் எங்கள் பிரதேசத்தை விட்டு வெளியேறும் வரை நாங்கள் இங்கு முகாமிடுவோம்” என்று குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், பாரிஸ் ஒரு அப்பட்டமான புதிய காலனித்துவ கொள்கையை பின்பற்றுகிறது. ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் இராணுவமும் இன்னும் தங்கள் துருப்புக்களை திரும்பப் பெற மறுக்கின்றனர் அல்லது நைஜருக்கான பிரான்சின் பிரபலமற்ற தூதரான சில்வைன் இட்டேவை மாற்றுகின்றனர். அத்தோடு, அநாமதேய பிரெஞ்சு அதிகாரிகள் நியாமியில் போராட்டங்களை ஒடுக்குமாறு பத்திரிகைகளில் அச்சுறுத்தல்களை வெளியிட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் மேற்கொள்ளும் எந்தவொரு திரும்பப் பெறுதலும் சஹேல் பிராந்தியம் முழுவதும் பிரெஞ்சு போர் செயல்திறனை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்று உறுதியளிக்கின்றனர்.
நைஜரில் [பிரான்சின்] “இராணுவ மற்றும் இராஜதந்திர நிலைகளுக்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தலுக்கும், பிரெஞ்சுப் படைகள் பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக, இராணுவப் பொது ஊழியர்கள் எச்சரித்ததாக” பிரான்ஸ் இன்ஃபோ செய்தி நிறுவனம் மேற்கோளிட்டுள்ளது.
நேற்று, நியாமியில் இருந்து பிரெஞ்சு துருப்புக்கள் கணிசமானளவு திரும்பப் பெறுவது குறித்து நைஜரின் இராணுவ ஆட்சியுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக பிரெஞ்சு அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இந்தப் பேச்சுவார்த்தைகளின் நோக்கம், நைஜரின் மிகவும் சர்ச்சைக்குள்ளான பகுதிகளிலிருந்து பிரெஞ்சு துருப்புக்களை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதாகும், இதனால் அவர்கள் பிராந்தியத்தில் வேறு இடங்களில் தங்கள் போர் நடவடிக்கைகளை இப்பகுதியில் இருந்து தொடர முடியும்.
“இந்த பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினர்களை சும்மா விடுவதில் எந்த பயனும் இல்லை. பாதுகாப்பு அமைச்சின் கூற்றுப்படி, சில இராணுவ கூறுகளை திரும்பப் பெற ஏற்பாடு செய்வதற்கான செயல்பாட்டு விவாதங்கள் தொடங்கியுள்ளன. இவை ஆயத்த, தொழில்நுட்ப மற்றும் அரசியல் அல்லாத விவாதங்கள் என்று கூறப்படுகிறது. இராணுவம் வேறு இடங்களில் நிறுத்தப்படலாம், அவர்களின் எண்ணிக்கை இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பொது ஊழியர்கள் அதன் செயல்பாட்டு நம்பகத்தன்மையை தரையில் [நைஜரில்] பராமரிக்க விரும்புகிறார்கள். இந்த முடிவு நிச்சயமாக மாற்றப்படலாம்” என்று லூ பிகாரோ பத்திரிகை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பிரான்ஸுக்கு அடுத்தபடியாக நைஜரின் இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்காளியான சீனா, பாரிசுக்கும் நைஜீரிய இராணுவ ஆட்சிக்குழுவிற்கும் இடையில் மத்தியஸ்தம் செய்யும் வாய்ப்பை பிரெஞ்சு அதிகாரிகள் புறக்கணிக்கின்றனர். நைஜரில் உள்ள சீனத் தூதர் ஜியாங் ஃபெங், நைஜீரிய இராணுவ ஆட்சிக்குழுவால் நியமிக்கப்பட்ட பிரதம மந்திரி அலி மஹாமான் லாமைன் சைனைச் சந்தித்த பிறகு இந்த வாய்ப்பை நீட்டித்துள்ளார்.
“இந்த நைஜர் நெருக்கடிக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்காக, பிராந்திய நாடுகளை முழுமையாக மதித்து, ஒரு மத்தியஸ்தராக, நேர்மறையான பங்கை சீன அரசாங்கம் வகிக்க விரும்புகிறது” என்று ஜியாங் கூறினார். “பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடாத கொள்கையை சீனா எப்போதும் பின்பற்றுகிறது,” ஆபிரிக்க நாடுகள் “தங்கள் பிரச்சனைகளை ஆபிரிக்க பாணியில் தீர்க்க முடியும்” என்று தான் நம்புவதாக ஜியாங் மேலும் கூறினார்.
பாரிஸுடன் பேச்சுவார்த்தை நடத்தும் சீன ஆட்சியின் முயற்சியானது, பெய்ஜிங்கின் ஆளும் வட்டங்களில் மக்ரோனின் ஆக்கிரோஷமான நைஜர் கொள்கை பற்றிய கவலைகளை பிரதிபலிக்கிறது. நைஜரில் ஜூலை 26 ஆட்சிக்கவிழ்ப்பு, பிரெஞ்சு ஆதரவுடைய ஜனாதிபதி மொஹமட் பாஸூமை அகற்றியதில் இருந்து, நைஜர் மீது பொருளாதாரத் தடைகளை மக்ரோன் விதித்து ஆக்ரோஷமாக அழுத்தம் கொடுத்து வருகிறார். மற்றும் பாஸூமை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவர, மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் (ECOWAS) நைஜரின் மீது படையெடுப்பைத் மேற்கொள்வதற்கான தயாரிப்புக்களையும் அவர் மேற்கொண்டுள்ளார். பொருளாதாரத் தடைகள் மற்றும் நியாமியில் இராணுவ ஆட்சியைக் கவிழ்க்கும் அச்சுறுத்தல்கள் ஆகியவை முக்கியமான சீனப் பொருளாதார நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
நைஜரில் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை பெய்ஜிங் உருவாக்கி வருகிறது. 1960 இல் பிரான்சில் இருந்து முறையான சுதந்திரம் பெற்றதிலிருந்து பல தசாப்தங்களாக பிரெஞ்சு ஆதிக்கத்திலிருக்கும் உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக நைஜர் உள்ளது. சீனா, பெனினில் உள்ள துறைமுகங்களுக்கு நைஜீரிய எண்ணெயைக் கொண்டு செல்வதற்கு 2,000 கிலோமீட்டர் தூரத்திற்கு எண்ணெய்க் குழாய் ஒன்றையும், நைஜர் ஆற்றின் மீது கண்டாட்ஜியில் ஒரு பில்லியன் யூரோ நீர்மின் நிலையத்தையும் உருவாக்கி, நாட்டில் மின்சாரம் தடைபடுவதைக் குறைக்கிறது. தற்போதைய Franco-ECOWAS தடைகள் பெய்ஜிங்கின் திட்டங்களைத் தடுக்குமா அல்லது உலகச் சந்தைகளில் நைஜீரிய எண்ணெய் விற்பனை, நியாமியை ECOWAS தடைகளிலிருந்து தப்பிக்க அனுமதிக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
எவ்வாறாயினும், பிரான்சில் இருந்து அல்ஜீரிய சுதந்திரத்திற்கான இரத்தக்களரியான 1954-1962 போருக்குப் பின்னர் பாரிஸ் அதன் முன்னாள் காலனித்துவ சாம்ராஜ்ஜியத்தின் மீதான அதன் மேலாதிக்கத்திற்கு ஆழமான சவாலை எதிர்கொள்கிறது என்பது ஏற்கனவே தெளிவாகத் தெரிகிறது. அண்டை நாடுகளான மாலி மற்றும் புர்கினா பாசோவில் நடந்த தொடர்ச்சியான ஆட்சிக் கவிழ்ப்புகளைத் தொடர்ந்து நைஜரில் ஆட்சிக்கவிழ்ப்பு ஏற்பட்டது, இது பிரெஞ்சு துருப்புக்கள் தங்கள் நாடுகளில் இருந்து வெளியேறுமாறு கோரும் இராணுவ ஆட்சிகளை அதிகாரத்திற்கு கொண்டு வந்தது. இது, 2013 முதல் 2022 வரை மாலியில் பிரான்ஸ் தலைமையிலான போரின் போது, மாலி மற்றும் சஹேல் பிராந்தியம் முழுவதும் இரத்தம் சிந்தப்பட்டதுக்கு, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெருகிய சீற்றத்தை உருவாக்கியுள்ளது.
பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் நெருக்கடியானது, உள்நாட்டில் மக்ரோனின் சிக்கன திணிப்பு நடவடிக்கைக்கு பிரான்சில் உள்ள தொழிலாள வர்க்கத்தின் வெடிக்கும் எதிர்ப்பின் காரணமாக மிகவும் தீவிரமாகியுள்ளது. பெரும் மக்கள் எதிர்ப்பு மற்றும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் பாரிய வேலைநிறுத்தங்கள், மக்களின் விருப்பத்தை மிதித்து, வேலைநிறுத்தம் செய்பவர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களை மிருகத்தனமாக தாக்க கலகத்தடுப்பு போலீஸ் படைகளை அனுப்பிய நிலையில், இந்த வசந்த காலத்தில் அவர் ஓய்வூதிய வெட்டுக்களை திணித்தார். ஓய்வூதியங்களைக் குறைத்த பின்னர், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போருக்கு மத்தியில், பிரெஞ்சு இராணுவ வரவு செலவுத் திட்டத்தில் 100 பில்லியன் யூரோ அதிகரிப்பை மக்ரோன் சுமத்தினார்.
ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பிரான்சிலும் முன்னாள் பிரெஞ்சு ஆபிரிக்க காலனிகளிலும் தொழிலாளர்களின் ஐக்கியப்பட்ட சர்வதேச புரட்சிகரப் போராட்டத்திற்கான புறநிலை நிலைமைகள் வெளிப்படுகின்றன.
ஏகாதிபத்தியப் போருக்கு எதிராகவும் சோசலிசத்துக்காகவும் ஒரு சர்வதேசப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட, இயக்கத்தின் கட்டுமானம் எதிர்கொள்ளும் தீர்க்கமான கேள்வி, தேசிய தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் அதனுடன் இணைந்த போலி-இடது அல்லது தேசியவாதக் கட்சிகளுடன் அரசியல் முறிவு ஆகும். பிரான்சில், ஓய்வூதியப் போராட்டத்தின் போது மக்ரோனை வீழ்த்துவதற்காக இந்த வசந்த காலத்தில் பரந்த வேலைநிறுத்த நடவடிக்கைகளை இந்த சக்திகள் தடுத்தன. நைஜர் மற்றும் சஹேல் பிராந்தியம் முழுவதும், ஏகாதிபத்தியத்துடன் இராணுவ ஆட்சிக்குழுக்களின் பேச்சுவார்த்தைகளுக்கு முட்டுக்கட்டை போடுவதற்கு அவர்கள் வேலை செய்கிறார்கள், அதே நேரத்தில் இராணுவ ஆட்சிகளை “இடது” ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசாங்கங்கள் என்று பொய்யாக முன்வைக்க முயற்சிக்கின்றனர்.
உண்மையில், நைஜரில் உள்ள இராணுவ ஆட்சி மக்ரோனுடன் உறவுகளை பேணுவதற்கு தீவிரமாக முயன்று வருகிறது, அதே நேரத்தில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வெடிக்கும் எதிர்ப்பை தணிக்க முயற்சிக்கிறது. உண்மையில், நைஜீரிய மற்றும் பிரெஞ்சு இராணுவத்தினரிடையே ஒரு பகுதியளவு பிரெஞ்சு வெளியேற்றம் பற்றிய பேச்சுக்கள் தொடர்ந்தாலும், நைஜீரிய இராணுவ ஆட்சிக்குழுவின் நிலைப்பாட்டை பிரதம மந்திரி சைன் இன் செய்தியாளர் சந்திப்பின் போது தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.
நைஜரில் பிரான்சின் இராணுவப் பிரசன்னம் மக்களால் எதிர்க்கப்படுவதாலும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாததாலும் “சட்டவிரோதமான நிலையில்” இருப்பதாகக் குறிப்பிட்ட அதேவேளையில், பிரெஞ்சு ஏகாதிபத்தியத்துடன் ஒத்துழைக்குமாறு பிரதம மந்திரி சைன் அழைப்பு விடுத்தார். பிரெஞ்சு இராணுவத்துடனான இராணுவ ஆட்சிக் குழுவின் “பரிமாற்றங்களைச்” சுட்டிக்காட்டி, “நாங்கள் விரும்புவது, முடிந்தால், நாம் பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளும் நாட்டுடன் ஒத்துழைப்பைப் பேண வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.
இதேபோல், பிரான்ஸுக்கு எதிராக அவர்கள் அழைப்பு விடுத்த போதிலும், நைஜரில் எதிர்ப்பு போராட்டங்களில் தலையீடு செய்துவரும், பக்கத்தை திருப்பவும் என்ற வலையமைப்பில் உள்ள மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஆர்வலர் குழுக்களும் ஏகாதிபத்திய நலன்களுடன் நெருக்கமாக பிணைந்து இருக்கின்றன. இந்த வலையமைப்புகளின் வலைத் தளமானது, அதன் ஸ்பான்சர்களில் பிரெஞ்சு அரசின் பிரெஞ்சு மேம்பாட்டு நிறுவனம் (AFD), ஜேர்மன் அரசு நிதியளிக்கும் ரோசா லக்சம்பர்க் அறக்கட்டளை மற்றும் அமெரிக்க தேசிய ஜனநாயக நிறுவனம் (NDI) ஆகியவற்றைப் பட்டியலிட்டுள்ளது. NDI என்பது ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளையின் (NED) ஒரு பகுதியாகும், இது CIA நிதிகளுக்கான நீண்டகால வழித்தடமாகும்.
ஏகாதிபத்தியம் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்துக்கு, ஆபிரிக்கா, ஐரோப்பா மற்றும் அதற்கு அப்பால் சர்வதேச அளவில் தொழிலாளர் போராட்டங்களை ஏகாதிபத்தியத்திற்கும், மற்றும் சமூக மற்றும் பொருளாதார வாழ்வில் முதலாளித்துவ உயரடுக்கின் ஆதிக்கத்துக்கும் எதிரான ஒரு இயக்கமாக ஒருங்கிணைக்க, ஒரு நனவான திருப்பத்தின் மூலம் மட்டுமே தொடர முடியும். அத்தோடு, இது முன்னாள் காலனித்துவ நாடுகளில் ஏகாதிபத்தியம் மற்றும் அதன் பல்வேறு குட்டி முதலாளித்துவ ஏஜென்சிகள் இரண்டையும் எதிர்ப்பதையும் ஏகாதிபத்திய போருக்கு எதிராகவும், சோசலிசத்திற்காகவும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச இயக்கத்தை கட்டியெழுப்புவதைக் குறிக்கிறது.