நைஜர் மீதான படையெடுப்பிற்கு பிரான்ஸ் தயாராகி வருவதாக இராணுவ ஆட்சி குற்றம் சாட்டுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

நைஜரில் பிரெஞ்சு ஆதரவு ஜனாதிபதி மொஹமட் பாஸூமின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு, பாரிசுக்கும் இராணுவ ஆட்சியாளர்களுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. பிரெஞ்சு துருப்புக்கள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று கோரும் வெகுஜன போராட்டங்களுக்கு மத்தியில், நைஜர் இராணுவ ஆட்சி, நாட்டை ஆக்கிரமிக்க பிரான்ஸ் தயாராகி வருவதாக குற்றம் சாட்டியுள்ளது.

நைஜர் தளம், நியாமியில் அமெரிக்க விமானப்படையின் C130 சரக்கு விமானத்தில் இருந்து பிரெஞ்சு படையினர்கள் இறங்குகின்றனர், ஜூன் 9, 2021 [AP Photo]

சனிக்கிழமையன்று, இராணுவ ஆட்சியின் செய்தித் தொடர்பாளர், கேர்னல்-மேஜர் அமடோ அப்த்ரமானே, நைஜர் மீது படையெடுப்பதற்கு மேற்கு ஆபிரிக்க நாடுகளான பெனின், ஐவரி கோஸ்ட் மற்றும் செனகல் ஆகியவற்றிற்கு பிரான்ஸ், தனது துருப்புக்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை அனுப்புவதாக குற்றம் சாட்டினார். “நைஜருக்கு எதிரான ஆக்கிரமிப்புக்கான தயாரிப்புகளின் ஒரு பகுதியாக, பல ECOWAS [மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம்] நாடுகளில் பிரான்ஸ் தொடர்ந்து தனது படைகளை நிலைநிறுத்தி வருகிறதுடன், இந்த அமைப்புடன் இணைந்து அதை பரிசீலித்தும் வருகிறது” என்று அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு, “இரண்டு A400M வகை இராணுவ போக்குவரத்து விமானங்களும் ஒரு Dornier 328 விமானமும் ஐவரி கோஸ்ட்டில் வலுவூட்டல்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் இரண்டு சூப்பர் பூமா வகை பல்வகை செயற்பாட்டுக்கான ஹெலிகாப்டர்கள் மற்றும் சுமார் நாற்பது கவச வாகனங்கள் பெனினில் உள்ள கண்டி மற்றும் மலான்வில்லியில் நிறுத்தப்பட்டுள்ளன. செப்டம்பர் 7, 2023 அன்று, ஒரு பிரெஞ்சு இராணுவ போரக்கப்பல் கோட்டோனோவில் [பெனின்] பணியாளர்கள் மற்றும் இராணுவ உபகரணங்களுடன் நிறுத்தப்பட்டுள்ளது. செனகல், ஐவரி கோஸ்ட் மற்றும் பெனினில் குறிப்பிடத்தக்க அளவு போர்த் தளபாடங்கள் மற்றும் உபகரணங்களை தரையிறக்குவதற்கு இராணுவ சரக்கு விமானங்கள், நூறு தடவைகளுக்கு மேல் பறந்துள்ளதாக அதிகாரத்தில் உள்ள ஜெனரல்கள் தெரிவிக்கின்றனர்” என்று அப்த்ரமானே மேலும் தெரிவித்தார்.

பிரெஞ்சு இராணுவக் கட்டமைப்பின் குறிக்கோள், “நமது நாட்டிற்கு எதிரான ஒரு வெற்றிகரமான இராணுவத் தலையீட்டை அடைவதாகும்” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நைஜீரிய இராணுவ ஆட்சியாளர்களின், ஆட்சியதிகாரத்தை அங்கீகரிக்க மறுத்து ஒரு போர்வெறிமிக்க அறிக்கையை வெளியிட்யார். அத்தோடு, நைஜரில் இருந்து பிரெஞ்சு துருப்புக்கள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளின் நியாயத்தன்மையை அவர் அங்கீகரிக்கவில்லை. “நைஜரில் இராணுவ ஆட்சியாளர்களின் அறிக்கைகளில் எந்த சட்டபூர்வமான தன்மையையும் நாங்கள் அங்கீகரிக்கவில்லை” என்று டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்துகொண்டு, செய்தியாளர் சந்திப்பின் போது மக்ரோன் இதனை தெரிவித்தார்.

உண்மையில் மக்ரோனின் இந்தக் கருத்துக்கள், நைஜரில் பிரான்சின் ஆதரவோடு, ECOWAS துருப்புக்களுடன் நடத்தப்படும் ஒரு தலையீட்டை ஒழுங்கமைப்பதற்கான அவரது அச்சுறுத்தலைத் திரும்பத் திரும்பக் கூறுவதாக இருந்தது. நைஜர் மற்றும் இப்பிராந்தியத்தில் பிரெஞ்சுத் துருப்புக்களுக்கு எதிரான பாரிய எதிர்ப்புக்கள் இருந்தபோதிலும், நைஜரில் பஷும் ஆட்சியும், பிரெஞ்சு இராணுவ பிரசன்னமும் முறையானவை என்று அவர் வலியுறுத்துகிறார்.

“நைஜரின் வேண்டுகோளின்படி, நைஜர் மண்ணில் பிரான்ஸ், பிரெஞ்சு படைகள் நிலைகொண்டுள்ளன. நைஜர் மற்றும் அதன் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரம் படைத்தவர்களான ஜனாதிபதி பாஸூம், அவரது அரசாங்கம் மற்றும் அவரது பாராளுமன்றத்தின் கோரிக்கையின் பேரில் பயங்கரவாதத்திற்கு எதிராக போராட நாங்கள் இங்கு வந்துள்ளோம். கடந்த ஜூலை மாதம் முதல் நடைபெற்ற இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பில், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரை பணயக் கைதியாக இராணுவம் பிடித்து வைத்துள்ளது. பிரான்ஸ் ஒரு எளிய நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது, நாங்கள் இதைக் கண்டிக்கிறோம். ஜனாதிபதி பாஸூமை விடுவிக்கவும், அரசியலமைப்பு ஒழுங்கை மீட்டெடுக்கவும் நாங்கள் கோருகிறோம்” என்று மக்ரோன் கூறினார்.

மக்ரோனின் புதிய காலனித்துவக் கொள்கையையும், சூறையாடும் போர்களுக்கான திட்டங்களும் “ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு” என்று முன்வைக்கும் முயற்சிகள் ஒரு இழிந்த மோசடியாகும். 1960 களில் துணை-சஹாரா ஆபிரிக்காவில், பிரெஞ்சு காலனிகளின் முறையான சுதந்திரம் முதல், பிரெஞ்சு பத்திரிகைகள் அதன் “கொல்லைப்புறம்”  என்று அழைக்கும் எண்ணற்ற இராணுவ சதிகளை பாரிஸ் ஆதரித்துள்ளது. 2013 முதல் 2022 வரை மாலியில் நடந்த இரத்தக்களரிப் போருக்குப் பிறகு, அது பின்னர் பெரும்பாலான சஹேல் பகுதிகளுக்குப் பரவியது, அப்பகுதியில் உள்ள திரளான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் சட்டப்பூர்வமாக பிரெஞ்சு துருப்புக்களை வெளியேற்ற கோரி வருகிறார்கள்.

2022 இல் மாலியிலிருந்து திரும்பப் பெறப்பட்ட பிரெஞ்சு துருப்புக்கள் ஆரம்பத்தில் 1,500 பிரெஞ்சு படையினர்கள் சாட் மற்றும் நைஜரில் நிறுத்தப்பட்டன.

நைஜரின் தலைநகரான நியாமியில், பிரெஞ்சு மற்றும் நேட்டோ துருப்புக்கள் நிலைகொண்டுள்ள தளத்திற்கு வெளியே, படைகளை வெளியேறுமாறு கோரி, ஒரு வாரத்திற்கும் மேலாக ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நைஜரில் 1,100 துருப்புகளை நிறுத்தியுள்ள வாஷிங்டன், தனது படைகளை நியாமியில் உள்ள 101வது தளத்திலிருந்து, மத்திய நைஜரில் உள்ள அகடெஸில் உள்ள தளம் 201க்கு நகர்த்தத் தொடங்கியுள்ளது. நியாமியில் இருந்து அகடெஸ் பயணம் சாலை வழியாக சுமார் 920 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இதுவரை, நைஜரின் இராணுவ ஆட்சியாளர்கள் அமெரிக்க, இத்தாலிய அல்லது ஜேர்மன் துருப்புக்கள் தங்கள் பிரெஞ்சு சகாக்களுடன் சேர்ந்து நாட்டை விட்டு வெளியேறுமாறு கோரவில்லை. வாஷிங்டனுடன் இராணுவ ஆட்சிக்குழு தலைவர்களின் திரைமறைவு பேச்சுவார்த்தைகள், அவர்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு பாசாங்குகளை அம்பலப்படுத்துகின்றன.

பென்டகன் செய்தியாளர் மாநாட்டில், துணை செய்தித் தொடர்பாளர் சப்ரினா சிங், அமெரிக்கத் துருப்புக்களை நியாமியிலிருந்து நகர்த்த முடிவு செய்த போதிலும், வாஷிங்டன் இன்னும் நைஜர் ஆட்சிக்குழுவுடன் இணைந்து பணியாற்ற நம்புகிறது என்று குறிப்பிட்டார். “அமெரிக்க துருப்புக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை மற்றும் தரையில் வன்முறை அச்சுறுத்தலும் இல்லை, இது வெறுமனே ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, என்ன நடக்கிறது என்பதைத் தீர்க்க சில இராஜதந்திர வழிகள் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் கூறினார்.

இருப்பினும், ஏகாதிபத்திய சக்திகள் ஆபிரிக்க தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே பெருகிவரும் எதிர்ப்பிற்கு விடையிறுக்கும் வகையில், போரின் பெரும் விரிவாக்கத்தைத் தூண்டும் அபாயம் அதிகரித்து வருகிறது. சஹேலில் உள்ள இராணுவ ஆட்சியாளர்களுடன் பிரான்சிற்கும் மற்ற ஏகாதிபத்திய சக்திகளுக்கும் இடையிலான மோதல் உக்ரேனில் போரை மையமாகக் கொண்ட நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான உலகளாவிய மோதலில் சிக்கிக் கொண்டிருப்பதால், இது குறிப்பாக நிகழும்.

நைஜரில் ஜூலை 26 ராணுவப் புரட்சிக்குப் பிறகு, ECOWAS நாடுகள் பிரான்சின் ஆதரவுடன் தங்கள் எல்லைகளில் தங்கள் படைகளை விழிப்புடன் வைத்துள்ளன. நைஜீரியா, ஐவரி கோஸ்ட், கானா மற்றும் டோகோவின் ஆளும் உயரடுக்குகளில் நைஜருக்கு எதிராக ஒரு போரைத் தொடங்குவது குறித்து வெளிப்படையான விவாதம் நடந்து வருகிறது. பிரெஞ்சு துருப்புக்களை வெளியேறுமாறு கோரும் மாலி, புர்கினா பாசோ மற்றும் நைஜரில் உள்ள இராணுவ ஆட்சியாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஆதரவை வழங்குவதன் மூலம் மொஸ்கோ இதற்கு பதிலளித்துள்ளது.

ஆகஸ்ட் 15 அன்று, மாலியின் இராணுவ ஆட்சியாளர்களுடனான அதன் உறவுகள் குறித்த அறிக்கையில், “மாலியின் தரப்பின் முன்முயற்சியின் பேரில், விளாடிமிர் புட்டின், மாலி குடியரசின் இடைக்கால அதிபரான அசிமி கோய்தாவுடன் தொலைபேசியில் உரையாடினார்” என்று கிரெம்ளின் அறிவித்தது. நைஜர் நிலவரங்கள் குறித்து புட்டினும் கோய்தாவும் விவாதித்ததாகவும், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ரஷ்யா-ஆப்பிரிக்கா உச்சிமாநாட்டில் நடைபெற்ற “ரஷ்ய-மாலி உயர்மட்ட பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியே இது” என்றும் கிரெம்ளின் அதன் அறிக்கையில் மேலும் கூறியது.

சர்வதேச பாதுகாப்புக்கான மொஸ்கோ மாநாட்டிற்காக (MCIS) முன் பதிவு செய்யப்பட்ட செய்தியில், அதே நாளில் புட்டின் சஹேலின் நெருக்கடியைப் பற்றி விவாதித்தார். “லிபியா மீது அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் ஆக்கிரமிப்பை கட்டவிழ்த்துவிட்ட பிறகு, மத்திய ஆப்பிரிக்க குடியரசு மற்றும் மாலி போன்ற சஹாரா-சஹேல் பிராந்திய நாடுகள், பல பயங்கரவாத குழுக்களின் நேரடி தாக்குதலுக்கு உள்ளாகின, இது லிபிய அரசின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது” என்று புட்டின் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 24 அன்று, நைஜீரிய, மாலி மற்றும் புர்கினாபே இராணுவ ஆட்சியாளர்கள், “ஆக்கிரமிப்பு அல்லது பயங்கரவாதத் தாக்குதல் ஒன்று நடக்குமாக இருந்தால், தற்காப்பு மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் பரஸ்பர பாதுகாப்பு குறித்த ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டதாக” நைஜர் இராணுவ ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

சஹேலில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக புதிய காலனித்துவ ஆதிக்கத்திற்குப் பிறகு, முறையான சுதந்திரத்திற்குப் பின்னர், ஒரு தசாப்த கால இரத்தம் தோய்ந்த பிரெஞ்சு இராணுவ நடவடிக்கைகள் என்பன, இப்பிராந்தியத்தில் பிரெஞ்சு ஏகாதிபத்தியம் ஆபிரிக்க தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே வெடிக்கும் எதிர்ப்பை எதிர்கொள்கிறது. இந்த சூழலில், பாரிஸ் மற்றும் அதன் நேட்டோ கூட்டாளிகளால் ஆபிரிக்காவில் ரஷ்யாவின் நடவடிக்கைகள் மீதான கண்டனங்கள் பாசாங்குத்தனமான மோசடி என்று சரியாக நிராகரிக்கப்படுகின்றன.

இருந்தபோதிலும், ஏழ்மையான சஹேல் நாடுகளில் இராணுவ ஆட்சியாளர்களால் முன்னெடுக்கப்படும் முன்னோக்கு தொழிலாள வர்க்கத்திற்கு முன்னோக்கி செல்லும் வழி அல்ல. அவர்கள் நேரடியாக தலையிடுவதில் இருந்து பிரான்சை ஊக்கப்படுத்துவதற்கும், திரைக்குப் பின்னால் நேட்டோ சக்திகளுடன் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கும், ரஷ்ய பாதுகாப்பு மற்றும் அவர்களது சொந்த இராணுவ பலத்தை நம்பியிருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், நேட்டோ சக்திகளே தற்போது மற்றும் பொறுப்பற்ற முறையில் ரஷ்யாவுடனான தங்கள் போரை தீவிரப்படுத்தி வருகின்றன, அது இப்போது ஆபிரிக்கா முழுவதும் வெடிக்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது.

மேலும், புட்டின் தலைமையிலான சோவியத்துக்கு பிந்தைய ரஷ்ய தன்னலக்குழு, உக்ரேன் போருக்கு மத்தியில் நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளை கையாள்வதில் முக்கியமாக சஹேலை ஒரு பேரம் பேசும் பொருளாக பார்க்கிறது. மொஸ்கோ ஆபிரிக்காவில் உள்ள அதன் நட்பு நாடுகளின் இழப்பில், முக்கிய நேட்டோ சக்திகளுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் நிலையில் இருப்பதாக நம்பினால், அது அவ்வாறு செய்யும்.

ஆபிரிக்க முதலாளித்துவத்துடன் ஆழமான உறவுகளைக் கொண்ட ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்திற்கு, முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரத்தை தூக்கியெறிவதை இலக்காகக் கொண்ட ஏகாதிபத்தியம் மற்றும் போருக்கு எதிரான இயக்கத்தில், ஆபிரிக்கா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துதல் மற்றும் அணிதிரட்டுதல் அவசியமாக தேவைப்படுகிறது.

.

Loading