நைஜரில் பாரிய எதிர்ப்பு போராட்டங்களுக்கு மத்தியில், ட்ரோன் விமானங்களை அமெரிக்கா மீண்டும் இயக்கத் தொடங்குகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

பிரான்சின் ஆதரவு பெற்ற ஜனாதிபதியை ஆட்சிக் கவிழ்ப்பில் வீழ்த்தி, ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்களுக்குள், நைஜரின் இராணுவ ஆட்சியாளர்கள், தங்கள் நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கத் துருப்புக்களை ட்ரோன்கள் மற்றும் குண்டுவீச்சு விமானங்கள் மூலம், அங்கு மீண்டும் ரோந்துப் பணியைத் தொடங்க அனுமதித்துள்ளனர். ஆப்பிரிக்காவில் நிலைகொண்டுள்ள 6,500 அமெரிக்கப் படையினர்களில், 1,100 படையினர்கள் நைஜரில் நிலைகொண்டுள்ளனர். இப்படைகளை வாஷிங்டன், தலைநகர் நியாமிக்கு வடக்கே 920 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அகடெஸ் பிராந்தியத்தை நோக்கி நகர்த்துகிறது.

பிரெஞ்சுப் படைகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று நியாமியில் நடந்து வரும் பாரிய வெகுஜனப் போராட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்கப் படைகள் நியாமிக்கு அருகிலுள்ள ஏர் பேஸ் 101 இலிருந்து அகடெஸில் உள்ள ஏர் பேஸ் 201க்கு நகர்ந்ததாக பென்டகன் கடந்த வாரம் கூறியது. ஆனால், இப்போது வாஷிங்டன் “இரண்டு விமான தளங்களில் ட்ரோன் மற்றும் ஆளில்லா விமான பயணங்களை மீண்டும் தொடங்க நைஜரின் இராணுவத் தலைவர்களுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளது” என்று அல்ஜசீரா தெரிவித்துள்ளது.

ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவிற்கான உயர்மட்ட அமெரிக்க விமானப்படைத் தளபதியான ஜெனரல் ஜேம்ஸ் ஹெக்கர், நைஜீரிய ஆட்சியாளர்களுடன் அமெரிக்கப் பேச்சுவார்த்தைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அமெரிக்க உளவுத்துறை மற்றும் கண்காணிப்புப் பணிகள் மீண்டும் தொடங்கவுள்ளதாக பெருமையாகக் கூறினார்.

 “சிறிது காலமாக நாங்கள் எமது தளங்களில் எந்த பணிகளையும் மேற்கொள்ளவில்லை. அவர்கள் விமான நிலையங்களை மூடிவிட்டனர், இராஜதந்திர செயல்முறையின் மூலம், நாங்கள் இப்போது பணிகளை மேற்கொள்கிறோம் – இந்தப் பணிகளை மேற்கொள்வது, நாங்கள் முன்புபோல் 100 சதவிகிதம் என்று நான் சொல்ல மாட்டேன் – ஆனால், நாங்கள் முன்பு செய்து கொண்டிருந்த பெரிய அளவிலான பணிகளை நாங்கள் இப்போது மேற்கொள்கிறோம்” என்று ஹெக்கர் கூறினார்.

2013 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், மாலியில் பிரெஞ்சு இராணுவத் தலையீட்டை ஆதரிக்கும் சாக்குப்போக்கின் கீழ், அமெரிக்கப் படைகள் பெருமளவில் நைஜருக்கு அனுப்பப்பட்டன. பின்னர், வடக்கு நைஜரில் உள்ள அகடெஸ் பிராந்தியத்தில் 6,800 அடி ஓடுபாதையுடன் கூடிய ராணுவ விமானத் தளத்தை அமெரிக்கா கட்டியுள்ளது.

250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில், 2016 ஆம் ஆண்டு தளத்தின் கட்டுமானம் தொடங்கியது. தற்போது, மேற்கு ஆபிரிக்காவில் உள்ள முக்கிய அமெரிக்க கண்காணிப்பு மையமாக இருக்கும் இந்த தளத்தின் பராமரிப்பிற்காக, ஆண்டுக்கு $20 முதல் 30 மில்லியன் வரை செலவழிக்கப்படுகிறது.

 “ஆபிரிக்கா முழுவதும் உள்ள 12 அமெரிக்க தளங்களுக்குமாக இந்த கட்டளை மையம் செயல்படுகிறது” என்று AFRICOM இன் தலைவர் ஜெனரல் மைக்கேல் லோங்லி கூறினார்.  “இந்த தளங்கள் குறைந்தபட்சமாக, நிரந்தர அமெரிக்க இருப்பைக் கொண்டுள்ளன என்றும், இது அர்ப்பணிப்புள்ள அமெரிக்கர்களுக்கு முக்கியமான பணிகளைச் செய்வதற்கும் அவசர நிலைகளுக்கு விரைவாகப் பதிலளிப்பதற்கும், குறைந்த செலவில், வசதிகள் மற்றும் வரையறுக்கப்பட்ட உபகரணங்கள் உள்ளன” என்றும் லோங்லி கூறினார்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் ட்ரோன்கள், போர் விமானங்கள் மற்றும் C-17 Globemaster போன்ற இராட்சத இராணுவ போக்குவரத்து விமானங்களை இந்த தளத்தில் இருந்து இயக்குகிறது. 2011 இல் லிபியாவை நாசப்படுத்திய போருக்கு, நேட்டோ சக்திகள் ஆரம்பத்தில் பினாமிப் படைகளாகப் பயன்படுத்திய அல்-கொய்தா மற்றும் ISIS உடன் இணைந்த போகோ ஹராம் மற்றும் பிற “இஸ்லாமிய குழுக்களுக்கு” எதிராக, இந்த தளத்தில் இருந்து ட்ரோன் தாக்குதல்களை மீண்டும் தொடங்கியுள்ளதாக வாஷிங்டன் இப்போது தெரிவிக்கிறது.

நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளின் துருப்புக்களை நாட்டிலிருந்து அகற்றுமாறு நியாமியில் வெகுஜன போராட்டக்காரர்கள் கோரும் அதே வேளையில், அமெரிக்கப் படைகளை அகடெஸில் நிறுத்துவதன் மூலம், வாஷிங்டன் ஒரு முக்கியமான, வளங்கள் நிறைந்த பகுதியின் மீது கட்டுப்பாட்டை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கத்தை கொண்டுள்ளது. வடக்கு நைஜரில் பல யுரேனியம் மற்றும் தங்கச் சுரங்கங்கள் உள்ளன, அவை பிராந்தியத்தின் பொருளாதாரம் மற்றும் உலகளாவிய எரிசக்தி வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அத்தோடு, சஹாரா பாலைவனம், வட ஆபிரிக்கா மற்றும் மத்திய தரைக்கடல் வழியாக வடக்கு ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்ல விரும்பும் ஆபிரிக்க அகதிகளை தடுத்து வைக்க நேட்டோ சக்திகள் பயன்படுத்தும் ஒரு பெரிய ஐ.நா. அகதிகள் முகாமும் அகடெஸ்ஸில் உள்ளது. இந்தப் பகுதியில் அமெரிக்க மற்றும் பிரெஞ்சு இராணுவப் பிரசன்னமானது, அகதிகள் வடக்கு நோக்கிச் செல்வதைத் தடுக்க உதவுகிறது, மேலும் அகதிகள் ஐரோப்பாவிற்கு வருவதைத் தடுக்கும் நேட்டோ தடுப்பு முகாம்களின் வலையமைப்பை ஆபிரிக்கா முழுவதும் இவை நீட்டிக்க உதவுகின்றன.

இதுவரை, நைஜீரிய இராணுவ ஆட்சியாளர்கள் பிரெஞ்சு மற்றும் நேட்டோ துருப்புக்களின் பிரசன்னத்திற்கு எதிரான பாரிய எதிர்ப்புக்களுக்கு, மொஸ்கோவிற்கு மட்டுப்படுத்தப்பட்ட இராஜதந்திர அறிவிப்புகளை அளித்ததன் மூலம் பதிலளித்துள்ளது. உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போருக்கு மத்தியில், ஏகாதிபத்திய நேட்டோ சக்திகளுக்கு ஆபிரிக்க தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே பரந்த எதிர்ப்பு உள்ளது. இந்த அடிப்படையில், நைஜரின் இராணுவ ஆட்சியாளர்கள் மற்றும் அண்டை நாடுகளான மாலி மற்றும் புர்கினா பாசோவில் உள்ள இதேபோன்ற ஆட்சிகள், பிரான்சை விமர்சிப்பதன் மூலமும், மொஸ்கோவுடன் வரையறுக்கப்பட்ட இராணுவ உறவுகளை வளர்ப்பதன் மூலமும் தங்களை ஏகாதிபத்திய-எதிர்ப்பு என்று சித்தரிக்க முயற்சித்தன.

வாஷிங்டனுடன் நைஜீரிய இராணுவ ஆட்சியாளர்களின் வஞ்சகமான சூழ்ச்சிகள், இந்த தோரணையை ஒரு சிடுமூஞ்சித்தனமான மோசடி என்று அம்பலப்படுத்துகின்றன. சோவியத் யூனியனின் ஸ்ராலினிசக் கலைப்பினால் உருவாக்கப்பட்ட சோவியத்துக்குப் பிந்தைய, மொஸ்கோவிலுள்ள முதலாளித்துவ ஆட்சியுடன் உறவுகளை வளர்த்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், இராணுவ ஆட்சி உண்மையில் ஏகாதிபத்தியத்துடன் அதன் உறவுகளை பராமரிக்கவும் வளர்க்கவும் முயல்கிறது. இருப்பினும், அது நேட்டோ மற்றும் உலகளாவிய நிதிச் சந்தைகள் மீதான அதன் நோக்குநிலையை, பிரான்சின் வரையறுக்கப்பட்ட விமர்சனங்கள் மற்றும் ரஷ்யாவுடனான அனுதாபத்தின் தவறான வெளிப்பாடுகளுக்குப் பின்னால் மறைக்கிறது.

நைஜரின் ஆளும் வட்டங்களும் நைஜீரிய இராணுவமும், பெரும் வல்லரசுகளை ஒன்றுக்கொன்று எதிராக நிறுத்துவதன் மூலம் பெறக்கூடிய அரசியல் அனுகூலங்களை அது அதிகப்படுத்த முயல்கிறது. நைஜரில் நடந்த சதிப்புரட்சியால் பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா இடையேயான உறவுகள் சந்தேகத்திற்கு இடமின்றி சிதைந்துள்ளன.

நியாமியில் உள்ள இராணுவ ஆட்சியாளர்களை அதிகாரத்தில் இருந்து வெளியேற்ற, நைஜருக்கு எதிரான போருக்கு ECOWAS நாடுகளை பிரான்ஸ் தயார்படுத்தி வருகின்று என்று, நைஜர் இராணுவ செய்தித் தொடர்பாளர் கடந்த சனிக்கிழமை இம்மானுவேல் மக்ரோனின் அரசாங்கத்தை கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

கடந்த வியாழக்கிழமை, இம்மானுவேல் மக்ரோன் பத்திரிகையாளர்களிடம், நைஜரை விட்டு வெளியேறுமாறு இராணுவ ஆட்சிக்குழுவால் கோரிக்கை விடுக்கப்பட்ட நைஜருக்கான பிரெஞ்சு தூதர் சில்வைன் இட்டே பிணைக் கைதியாகப் பிடிக்கப்பட்டிருப்பதாக கூறினார். இப்போது பிரெஞ்சு தூதரகத்தில் அடைபட்டிருக்கும் இட்டே அங்கிருந்து வெளியேற மறுத்துவிட்டார். இராணுத்தினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரெஞ்சு ஆதரவு நைஜீரிய ஜனாதிபதி மொஹமட் பாஸூம் நைஜரில் சட்டபூர்வமான அதிகாரத்தைக் கொண்டுள்ளார் என்று மக்ரோனும் இட்டேயும் தெரிவித்து வருகின்றனர்.

நைஜீரிய இராணுவத்தினர், “உணவு [பாஸூமுக்கு] வழங்குவதைத் தடுக்கின்றன. அவர் இராணுவத்தினரின் உணவுகளை உண்கிறார்... ஜனாதிபதி பாஸூம் உடன் நாங்கள் உடன்பட்டதை நான் செய்வேன், ஏனென்றால் அவர் சட்டபூர்வமான அதிகாரி மற்றும் நான் அவரிடம் தினமும் பேசுகிறேன்” என்று மக்ரோன் கூறினார்.

எவ்வாறாயினும், நியாமியில் உள்ள இராணுவ ஆட்சியுடன் வாஷிங்டன் வேறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

உக்ரேனில் 2014 ஆம் ஆண்டு அமெரிக்க ஆதரவுடன் ஆட்சிக்கவிழ்ப்பை ஏற்பாடு செய்வதில் முக்கியப் பங்கு வகித்த அமெரிக்கச் உதவிச் செயலர் விக்டோரியா நுலண்ட், ஆகஸ்ட் 7ஆம் தேதி நைஜரில் உள்ள இராணுவ ஆட்சியாளர்களைச் சந்திக்க உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். “இராஜதந்திரத்திற்கான கதவை அவர்கள் திறந்து வைத்திருப்பார்கள் என்று நம்புகிறேன். அதற்கான முன்மொழிவை நாங்கள் மேற்கொண்டோம். நாம் பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அவர்களுக்கு பல விருப்பங்களை வழங்கியுள்ளோம், அவர்கள் எங்களை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறோம்” என்று பேச்சு வார்த்தைக்குப் பிறகு நூலண்ட் தெரிவித்தார்.

நூலண்டின் நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் நியாமியில் உள்ள இராணுவ ஆட்சியாளர்களுடன் அமெரிக்க அதிகாரிகள் நடத்திய பேச்சுக்களின் மூலம் நிறைவேறியதாகத் தெரிகிறது. நைஜரின் முக்கியமான இயற்கை வளங்களைக் கட்டுப்படுத்த, அமெரிக்கப் படைகளை ஒரு முக்கிய இடத்தில் ராணுவ ஆட்சியாளர்கள் வைத்திருக்கிறது.

ஆபிரிக்காவில் இருக்கும் ரஷ்யாவிற்கும் நேட்டோ சக்திகளுக்கும் இடையே மட்டும் அல்லாமல், நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலும் பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. ஏனெனில், நைஜரில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் இழப்பில் வாஷிங்டன் தனது ஆதாயங்களை அடையும் என்று பாரிஸில் உள்ள சக்திகள் அஞ்சுகின்றன.

“நைஜரில் ஏற்பட்ட ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, தனது கூட்டாளியான பிரான்சை அமெரிக்கா முந்திவிடும் என்று பிரான்ஸ் அஞ்சுவதாக”, பிரெஞ்சு வலதுசாரி நாளிதழ் லூ பிகாரோ சமீபத்தில் ஒரு கட்டுரையில் எழுதியது. அத்தோடு, “இத்தகைய நட்பு நாடுகள் இருக்கும் வரை, எங்களுக்கு எதிரிகள் தேவையில்லை” என்று அமெரிக்காவைப் பற்றி பிரெஞ்சு வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதை பிகாரோ மேற்கோள் காட்டியது.

ஐரோப்பாவில் நேட்டோ சக்திகளுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே போர் தீவிரமடைந்துள்ளது, அதே போல் ஆபிரிக்காவில் பெரும் வல்லரசுகளுக்கு இடையே பின்னிப் பிணைந்த போட்டிகள் தொழிலாள வர்க்கத்திற்கு பாரிய ஆபத்துக்களை முன்வைக்கின்றன. ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவின் பெரும்பகுதி முழுவதும் ஒரு பரந்த இராணுவ விரிவாக்கத்தின் ஆபத்து, இப்போது பிரதான அணுவாயுத சக்திகளுக்கு இடையே நேரடியாக சண்டையிடுவதை உள்ளடக்கியதாக இருக்கும்.

பிரெஞ்சு மற்றும் நேட்டோ ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஆபிரிக்க தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பாரிய அணிதிரட்டல் மூலம் முன்னோக்கி செல்லும் வழி சுட்டிக்காட்டப்படுகிறது. நைஜர், சஹேல் மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஒரு சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கின் அடிப்படையில் ஒரு ஐக்கியப்பட்ட சர்வதேச போர் எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்பினால் மட்டுமே ஒரு பரந்த போரை நிறுத்த முடியும்.

Loading