மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
மாலி, புர்கினா பாசோ மற்றும் நைஜர் ஆகிய சஹேல் நாடுகள் செப்டம்பர் 16 அன்று ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, அவை சஹேல் நாடுகளின் கூட்டணி (பிரெஞ்சு மொழியில் AES) என்று அழைக்கப்படுகின்றன. AES சாசனத்தில் கையெழுத்திடுவதற்காக மாலியின் அசிமி கோய்டா, புர்கினா பாசோவின் இப்ராஹிம் ட்ராரே மற்றும் நைஜரின் அப்துரஹமானே தியானி ஆகிய மூன்று நாட்டுத் தலைவர்களும் சந்தித்தனர்.
இந்த மூன்று நாடுகளால் பகிரப்பட்ட ஒரு பிராந்தியத்தின் பெயரைக்கொண்டுள்ள “லிப்டகோ-கூர்மா சாசனம்” பின்வருமாறு கூறுகிறது : “நமது மக்களின் நலனுக்காக கூட்டு பாதுகாப்பு மற்றும் பரஸ்பர உதவியின் கட்டமைப்பை நிறுவுதல். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஒப்பந்தக் கட்சிகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் மீதான எந்தவொரு தாக்குதலும் மற்ற தரப்பினருக்கு எதிரான ஆக்கிரமிப்பாகக் கருதப்படும். மேலும் ஆயுதப்படையைப் பயன்படுத்துவது உட்பட அனைத்துத் தரப்பினருக்கும் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ உதவி மற்றும் நிவாரணம் வழங்குவதற்கான கடமையை உருவாக்குகிறது. இந்த கூட்டணிக்கு உட்பட்ட பகுதிக்குள் பாதுகாப்பை மீட்டமைத்து உறுதிப்படுத்துகிறது”
மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூக (ECOWAS) நாடுகள், பிரான்சின் ஆதரவுடன் AES நாடுகளை ஆக்கிரமிக்கக்கூடும் என்ற அச்சுறுத்தலை எதிர்கொள்வதை, இந்தக் கூட்டணி நோக்கமாகக் கொண்டுள்ளது. சஹேல் பிராந்தியம் முழுவதும் இரத்தக்களரிக்கு வழிவகுத்த, மாலியில் ஒரு தசாப்த கால பிரெஞ்சுப் போருக்குப் பிறகு, வெகுஜன எதிர்ப்புக்கள் மற்றும் இராணுவ சதிகள் காரணமாக, பிரான்சின் ஆதரவுடைய அரசாங்கங்கள் மூன்று நாடுகளிலும் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, இந்த நாடுகள் அனைத்தும் முன்னாள் பிரெஞ்சு காலனிகளாக இருந்துள்ளன. நைஜீரியா, ஐவரி கோஸ்ட், கானா மற்றும் டோகோ போன்ற ECOWAS நாடுகளின் இராணுவத் தலையீட்டை ஆதரிப்பதாக அச்சுறுத்தி பிரெஞ்சு அதிகாரிகள் இதற்கு பதிலடி கொடுத்துள்ளனர்.
உக்ரேனில் நேட்டோ-ரஷ்யா போர் ஆபிரிக்கா முழுவதும் ஒரு முழு அளவிலான போராக அதிகரிக்கும் அபாயத்தை AES ஒப்பந்தம் எடுத்துக்காட்டுகிறது. உண்மையில், AES நாடுகள் அனைத்தும் பிரான்சுடனான இராணுவ உறவுகளைத் துண்டித்த பிறகு, ரஷ்யா அல்லது வாக்னர் இராணுவக் குழு போன்ற ரஷ்யப் படைகளிடம் இருந்து நெருக்கமான இராணுவ உறவுகளையும் ஆலோசனைகளையும் நாடியது. எனவே AES மற்றும் ECOWAS க்கு இடையேயான போர் அச்சுறுத்தல் பிரான்சிற்கும் நேட்டோவிற்கும், மறுபுறம் ரஷ்யாவிற்கும் இடையே பரந்த சர்வதேச பதட்டங்களுடன் அதிகரித்து வருகிறது.
ஜூலை 26 அன்று நைஜரில் ஆட்சியைப் பிடித்த இராணுவ ஆட்சி, ஆகஸ்ட் மாத இறுதியில் பிரெஞ்சு துருப்புக்கள் மற்றும் பிரெஞ்சு தூதுவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான காலக்கெடுவை நிர்ணயித்தது. வெட்கமற்ற புதிய காலனித்துவ ஆணவத்துடன் செயல்பட்ட பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், அவ்வாறு செய்ய மறுப்பதில் விடாப்பிடியாக இருந்தார். ஜனாதிபதி மொஹமட் பாஸூமை அகற்றிய நைஜர் இராணுவ ஆட்சிக்குழுவை அங்கீகரிக்கவும் மக்ரோன் மறுத்து வருகிறார்.
நைஜர் மற்றும் சாகெல் பிராந்தியம் முழுவதிலும் பிரெஞ்சு மற்றும் நேட்டோ துருப்புக்களுக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பாரிய எதிர்ப்புக்கள் இருந்தபோதிலும், மதிப்பிழந்த பிரெஞ்சு கைப்பொம்மையான ஜனாதிபதி பாஸூம் மற்றும் நைஜரில் பிரெஞ்சு இராணுவம் இருப்பது சட்டபூர்வமானது என்று மக்ரோன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்.
நைஜர் மீது படையெடுத்து, நைஜர், புர்கினா பாசோ மற்றும் மாலியில் உள்ள இராணுவ ஆட்சிகளை அகற்றுவதற்காக மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான பெனின், ஐவரி கோஸ்ட் மற்றும் செனகல் ஆகிய நாடுகளுக்கு பிரான்ஸ் துருப்புக்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை அனுப்பியதாக நைஜரின் இராணுவ ஆட்சிக்குழு குற்றம் சாட்டியுள்ளது.
“நைஜருக்கு எதிரான ஆக்கிரமிப்புக்கான போர் தயாரிப்புகளின் ஒரு பகுதியாக, பிரான்ஸ் தனது படைகளை பல ECOWAS நாடுகளில் தொடர்ந்து நிலைநிறுத்துகிறது மற்றும் இந்த அமைப்புடன் இணைந்து அதை பரிசீலித்து வருகிறது”என்று நைஜரின் இராணுவ ஆட்சியின் செய்தித் தொடர்பாளர் கேர்னல்-மேஜர் அமடோ அப்த்ரமானே அறிவித்தார்.
இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்து, பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், “நைஜரில் உள்ள இராணுவ ஆட்சிக்குழுவின் அறிக்கைகளில் எந்தவிதமான சட்டபூர்வமான தன்மையையும் நாங்கள் அங்கீகரிக்கவில்லை”என்று ஒரு போர்வெறிமிக்க அறிக்கையை வெளியிட்டார்.
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் வெடிக்கும் கோபம் இருந்தபோதிலும், AES ஐ வழிநடத்தும் இராணுவ ஆட்சிக்குழுக்கள் ஏகாதிபத்தியத்தையோ அல்லது நேட்டோ கூட்டணியையோ எதிர்க்கவில்லை. பாரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில், இராணுவ ஆட்சியாளர்கள் பிரான்சைத் தேர்ந்தெடுத்து விமர்சித்துள்ளனர். பிரான்ஸ் இந்தப் பிராந்தியத்தின் பெரும்பகுதி இரத்தக்களரியில் சம்பந்தப்பட்ட முன்னாள் காலனித்துவ சக்தியாகும். ஆனால், வாஷிங்டன் நைஜரின் இராணுவ ஆட்சிக்குழுவுடன் பேரம் பேசி, வடக்கு நகரமான அகடெஸில் அமைந்துள்ள விமானப் படைத்தளம் 201 இலிருந்து நைஜரில் போர் மற்றும் ட்ரோன் விமான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியுள்ளது. இது நைஜரின் மூலோபாய யுரேனியம் சுரங்கங்களுக்கு அருகில் அமெரிக்கப் படைகளை நிறுத்தி வைத்துள்ளது.
பிரான்சை விமர்சிக்கும் AES நாடுகளில் உள்ள இராணுவ ஆட்சியாளர்களின் கொள்கையானது, நேட்டோவுடனான ஒப்பந்தங்களைக் குறைப்பது, தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களிடையே ஏகாதிபத்தியம் மற்றும் ஆபிரிக்க முதலாளித்துவத்தில் உள்ள அதன் கூட்டாளிகள் இரண்டையும் எதிர்க்கும் ஒரு சுயாதீனமான இயக்கம் தோன்றுவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திவாலான மற்றும் பிற்போக்குத்தனமான கொள்கையானது, உண்மையில் சஹேல் மற்றும் முழு ஆப்பிரிக்காவையும் வளர்ந்து வரும் உலகளாவிய போரின் சுழலுக்குள் ஆழமாக இழுத்துச் செல்கிறது.
பாரிஸ், வாஷிங்டன் மற்றும் முழு நேட்டோ கூட்டணியும் மொஸ்கோவிற்கு மூன்று AES நாடுகளின் இராணுவ ஆட்சிகளால் செய்யப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட இராஜதந்திர அறிவிப்புகளால் பாரியளவில் கோபமடைந்துள்ளன. உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக அவர்கள் போரை நடத்துகையில், நேட்டோவின் ஏகாதிபத்திய சக்திகள் உலகில் ரஷ்ய செல்வாக்கை நசுக்க இன்னும் கடுமையான மற்றும் இரத்தக்களரி வழிமுறைகளை நோக்கி நகர்கின்றன.
தற்போது, இந்த AES மூன்று சஹேல் நாடுகளும் ECOWAS இலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, நைஜீரியா தலைமையிலான வளமான ECOWAS நாடுகளால் விதிக்கப்பட்ட கடுமையான தடைகளை எதிர்கொள்கின்றன. நிலத்தால் சூழப்பட்ட இந்த நாடுகளுக்கு எதிரான எல்லை மூடல்கள் மற்றும் பொருளாதாரத் தடைகள் மில்லியன் கணக்கான மக்களை வறுமையில் தள்ளுகிறது.
மூன்று AES உறுப்பு நாடுகள் ஒன்றுக்கொன்று எதிரான அச்சுறுத்தல்கள் அல்லது ஆக்கிரமிப்புகளை நாடக்கூடாது என்று தீர்மானித்துள்ளன. குறிப்பாக, ஒருவருக்கொருவர் துறைமுகங்கள், சாலைகள், கடற்கரைகள் அல்லது மூலோபாய உள்கட்டமைப்பை முற்றுகையிடக்கூடாது. இந்த ஒப்பந்தம் குறித்து செய்தியாளர்களிடம் மாலியின் பாதுகாப்பு மந்திரி அப்துலே டியோப் கூறுகையில், “மூன்று நாடுகளிலும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் எங்கள் முன்னுரிமை” என்று தெரிவித்தார்.
மாலி, புர்கினா பாசோ மற்றும் நைஜர் ஆகிய நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் லிப்டகோ- கூர்மா பகுதி சமீப ஆண்டுகளில் இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளது. 2011 லிபியாவில் நடந்த போரின் போது, இஸ்லாமிய பினாமிப் படைகளுக்கு நேட்டோ ஆயுதங்களை வழங்கியது இப்பிராந்தியத்தில் நன்கு அறியப்பட்டதாகும். AES நாடுகளில் உள்ள அதிகாரிகள், பிரான்ஸ் சஹேலில் உள்ள இஸ்லாமிய குழுக்களுக்கு ரகசியமாக உதவி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளனர். அந்த வகையில், இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது என்ற பெயரில், தனது துருப்புக்களை பிராந்தியத்தில் வைத்திருக்க ஒரு சாக்குப்போக்கை பிரான்ஸ் உருவாக்குகிறது.
இது தொடர்பாக மாலி ராணுவ ஆட்சிக்குழு மக்ரோன் அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறது. கடந்த ஆண்டு, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவருக்கு எழுதிய கடிதத்தில், மாலியின் வெளியுறவு மந்திரி அப்துலே டியோப், “மாலியின் வான்வெளியில் இந்த ஆண்டு 50 தடவைகளுக்கு மேல், பெரும்பாலும் ட்ரோன்கள், இராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானங்களைப் பயன்படுத்தி பிரெஞ்சுப் படைகள் அத்துமீறி நுழைந்துள்ளது. மாலியின் வான்வெளியின் இந்த அப்பட்டமான மீறல்கள், சஹேலில் செயல்படும் பயங்கரவாத குழுக்களுக்காக தகவல்களை சேகரிக்கவும், அவர்களுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வீசவும் பிரான்ஸ் பயன்படுத்தியது”என்று குற்றம்சாட்டினார்.
நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் இந்த மூலோபாயம் தொடர்ந்தால், தன்னைத் தற்காத்துக் கொள்ள மாலிக்கு உரிமை உண்டு என்று அப்துலே டியோப் இறுதியாக எச்சரித்தார்.
எவ்வாறாயினும், ஏகாதிபத்தியத்துடன் இயல்பாக இணைக்கப்பட்ட முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக தொழிலாளர்களையும் இளைஞர்களையும் அணிதிரட்டாமல் ஏகாதிபத்திய ஆத்திரமூட்டல்களுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க முடியாது என்பதை முன்னாள் காலனித்துவ நாடுகளின் முழு வரலாறும் எடுத்துக் காட்டுகிறது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் ஒரு இராணுவப் போராட்டம் மட்டுமல்ல, எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு வர்க்கப் போராட்டம் ஆகும். ஆபிரிக்கா முழுவதும், ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில், தொழிலாள வர்க்கத்தில் ஒரு வெகுஜன போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்பி, போரை நிறுத்தவும், ஏகாதிபத்தியம் தோன்றிய முதலாளித்துவ அமைப்பு முறையை முடிவுக்குக் கொண்டு வருவதும் தீர்க்கமான கேள்வியாக உள்ளது.
