மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நைஜரில் இடம்பெற்றுவரும் பெரும் போராட்டங்களுக்கு மத்தியில், பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் ஞாயிறன்று நியாமிக்கான பிரெஞ்சு தூதரை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். நைஜரில் இருந்து பிரெஞ்சு துருப்புக்கள் திரும்பப் பெறுவது இந்த ஆண்டு இறுதிக்குள் நிகழும். மாலி மற்றும் புர்கினா பாசோவை விட்டு வெளியேறிய பின்னர், பிரெஞ்சு இராணுவம் இப்போது சஹேலில் மூன்றாவது நாட்டை விட்டு வெளியேற உள்ளது.
மாலியில் போர் வெடித்ததில் இருந்து, சஹேலில் பயங்கரவாத எதிர்ப்பு இராணுவ நடவடிக்கைகளின் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, இப்போது 1,000ம் பிரெஞ்சுத் துருப்புக்கள் மட்டுமே இப்பகுதியில் நிலைகொண்டுள்ளன. அவர்கள் நைஜரின் கிழக்கு எல்லையில் உள்ள சாட் பகுதியில் குவிந்துள்ளனர்.
ஜூலை 26 அன்று, ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் ஆட்சிக்கு வந்த ஜெனரல் அப்துரஹ்மானே தியானி தலைமையிலான நைஜர் இராணுவ ஆட்சி, பாரிஸுக்கும் நியாமிக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை ரத்து செய்தது. கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில், நைஜரில் இருந்து பிரெஞ்சுப் படைகளை திரும்பப் பெறவும் அது உத்தரவிட்டது.
மக்ரோன் ஆரம்பத்தில் பிரெஞ்சு துருப்புக்களை வெளியேற்றவோ அல்லது நைஜர் இராணுவ ஆட்சியை அங்கீகரிக்கவோ மறுத்திருந்தார். அவர்கள் நைஜரை “சட்டவிரோதமாக” ஆட்சி செய்வதாக அவர் குற்றம் சாட்டினார். அதே நேரத்தில், பிரான்ஸ் நைஜருக்கு எதிராக இராணுவ நடவடிக்கைக்கு தயார்படுத்த ECOWAS (மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம்) நாடுகளை ஊக்குவித்து வருகிறது. நைஜீரியா, பெனின், ஐவரி கோஸ்ட் மற்றும் செனகல் ஆகிய ECOWAS நாடுகளுடன் கூட்டு சேர்ந்து, தனக்கெதிரான ஆக்கிரமிப்புப் போருக்கு, துருப்புக்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை பிரான்ஸ் அனுப்பியதாக நைஜரின் இராணுவ ஆட்சி குற்றம் சாட்டியது.
ஆபிரிக்காவில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் போர்த் திட்டங்கள் இப்போது உக்ரேனில் ரஷ்யாவுடன் அதிகரித்து வரும் நேட்டோ போருடன் பிரிக்க முடியாத வகையில் பிணைந்துள்ளன. நைஜர், மாலி மற்றும் புர்கினா பாசோவுடன் இராணுவ தற்காப்பு கூட்டணியில் கையெழுத்திட்டுள்ளதோடு, ரஷ்ய இராணுவத்துடன் உறவுகளை நாடியுள்ளது. இது உக்ரேனில் நடக்கும் போர், மேற்கு ஆபிரிக்காவின் பெரும் மக்கள்தொகையை உள்ளடக்கிய ஒரு போராக விரைவாக விரிவடைவதற்கான நிலைமைகளை உருவாக்குகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, பிரெஞ்சு துருப்புக்கள் திரும்பப் பெறப்படுவதாக அறிவித்தபோது, மக்ரோன் மாலியில் பிரெஞ்சுப் போரைப் புகழ்ந்ததோடு, பர்கேன் இராணுவ நடவடிக்கையின் வெற்றியைப் பாராட்டினார் ... “இந்த இராணுவ நடவடிக்கை இல்லையெனில், இந்த நாடுகளில் பெரும்பாலானவை ஏற்கனவே பிராந்திய கலிபாக்கள் மற்றும் ஜிஹாதிகளால் கைப்பற்றப்பட்டிருக்கும்” என்று குறிப்பிட்டார்.
சஹேலில் பிரெஞ்சுப் போர்களை “பயங்கரவாத எதிர்ப்பு' போராட்டம் என்று நியாயப்படுத்த மக்ரோனின் முயற்சி ஒரு சிடுமூஞ்சித்தனமான மோசடியாகும். 2011 இல் லிபியாவில் கடாபிக்கு எதிராக ஆக்கிரமிப்புப் போரை நடத்திய பிரான்ஸ் மற்றும் நேட்டோ நாடுகள், அல்-கொய்தா பயங்கரவாத வலையமைப்புடன் தொடர்புடைய ஜிஹாதிகளை, லிபியாவில் தங்களது முக்கிய பினாமி படைகளாக ஆயுதம் ஏந்த வைத்தனர். சண்டை சஹாரா முழுவதும் மாலி வரை பரவியதோடு, மாலியில் பிரான்சின் இராணுவத் தலையீட்டிற்கு ஒரு சாக்குப்போக்குயும் வழங்கியது.
கடந்த ஆண்டு, மாலியின் வெளியுறவு அமைச்சர் அப்துலே டியோப், ஜிஹாதிகளுக்கு பிரான்ஸ் உதவி செய்வதாக குற்றம் சாட்டி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், “மாலியின் வான்வெளி, இந்த ஆண்டு 50 தடவைகளுக்கு மேல், பெரும்பாலும் ட்ரோன்கள், இராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானங்களைப் பயன்படுத்தி பிரெஞ்சுப் படைகள் அத்துமீறியுள்ளது. மாலி வான்வெளியின் இந்த அப்பட்டமான அத்துமீறல்கள், சஹேலில் செயல்படும் பயங்கரவாத குழுக்களுக்கான தகவல்களை சேகரிக்கவும், அவர்களுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வீசவும் பிரான்ஸ் பயன்படுத்தியது” என்று டியோப் குற்றம் சாட்டினார்.
மக்ரோன் வரலாற்றை மீண்டும் எழுத முயன்றார், சஹேல் முழுவதும் நடந்த சண்டைக்கு பிரெஞ்சு ஏகாதிபத்தியம் அல்ல, ஆப்பிரிக்க இராணுவ ஆட்சிக்குழுக்கள் தான் காரணம் என்று குற்றம் சாட்டினார். அவர் கூறினார், “நாங்கள் ஆட்சியாளர்களின் பணயக் கைதிகளாக இருக்க இங்கு வரவில்லை. ... ஆட்சியைக் கவிழ்த்தவர்கள் ஒழுங்கின்மையின் நண்பர்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், சஹேல் மற்றும் மேற்கு ஆபிரிக்காவில் பிரெஞ்சு துருப்புக்களை நிலைநிறுத்துவதற்கு எதிராக வளர்ந்து வரும் சமூக கோபம் மற்றும் வெகுஜன எதிர்ப்புகள் காரணமாக, மக்ரோன் தனது படைகளை திரும்பப் பெற வேண்டும் என்ற ஆட்சியாளர்களின் கோரிக்கைகளுக்கு உடன்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆபிரிக்காவில் அதன் முன்னாள் காலனித்துவ சாம்ராஜ்யத்திலிருந்து வளங்களை கொள்ளையடிக்கும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் மூலோபாயத்திற்கு இது ஒரு பின்னடைவைக் குறிக்கிறது.
நைஜரில் உள்ள இராணுவ ஆட்சிக்குழு, கடந்த சனிக்கிழமை மாலை முதல் அனைத்து பிரெஞ்சு விமானங்களையும் அதன் வான்வெளியில் பறக்க தடை விதித்தது. பிரெஞ்சு ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் உட்பட பிரான்சால் பட்டயப்படுத்தப்பட்டவை தவிர அனைத்து தேசிய மற்றும் சர்வதேச வணிக விமானங்களுக்கும் வான்வெளி திறக்கப்படும் என்று அது அறிவித்தது.
எவ்வாறாயினும், பிரெஞ்சு ஏகாதிபத்தியம் நேரத்தை எடுத்துக் கொள்வதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாகவும், பிராந்தியத்தில் அதன் அரசியல் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்தவும் மட்டுமே நைஜரை விட்டு வெளியேறுகிறது என்பதை தெளிவுபடுத்திய மக்ரோன், மேற்கு ஆபிரிக்க அரசாங்கங்களுடன் பிரான்ஸ் தொடர்ந்து பணியாற்றும் என்று வலியுறுத்தினார். மாலி, புர்கினா பாசோ மற்றும் நைஜரில் இருந்து பிரெஞ்சு துருப்புக்கள் திரும்பப் பெறப்பட்டாலும், மேற்கு ஆபிரிக்காவின் புவியியல் மையத்தில் தனது பொருளாதார மற்றும் மூலோபாய நிலைகளை விட்டுக்கொடுக்க பிரான்ஸ் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது.
நைஜரில் இருந்து பிரான்சினது விலகல், பாரிசுக்கும் வாஷிங்டனுக்கும் இடையே வளர்ந்து வரும் பதட்டங்களை அப்பகுதியில் உயர்த்திக் காட்டியுள்ளது. தற்சமயம் அதிகாரத்தில் இருக்கும் இராணுவ ஆட்சிக்குழுவால் தூக்கியெறியப்பட்ட நைஜர் ஜனாதிபதி மொஹமட் பாஸூமை மீட்க இராணுவ ரீதியாக தலையிடுமாறு பிரான்ஸ் ECOWAS க்கு அழுத்தம் கொடுத்த அதேவேளையில், வாஷிங்டன் ECOWAS நாடுகளை சமாதானப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டது.
“ஐ.நா.வில், நைஜர் மீதான ECOWAS நாடுகளின் நிலையை மாற்ற அமெரிக்கர்கள் வீண் முயற்சி செய்கிறார்கள். நியூயோர்க்கில், ஐ.நா பொதுச் சபையின் ஓரத்தில், நைஜரில் உள்ள ஆட்சியாளர்களுக்கு மரியாதை கொடுப்பதில் தங்கள் நிலைப்பாட்டை மென்மையாக்க மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகத்தின் (ECOWAS) நாடுகளை அமெரிக்கா சமாதானப்படுத்த முயன்றது. இன்று வெள்ளிக்கிழமை காலை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தின் போது, தெளிவாக சூழ்ச்சி வெற்றிபெறவில்லை” என்று பிரான்சினுடைய சர்வதேச வானொலி (RFI) குறிப்பிட்டது.
இதற்காக நைஜீரியாவின் போலா டினுபு மற்றும் செனகலின் மேக்கி சால் போன்ற பல மேற்கு ஆபிரிக்கத் தலைவர்களுக்கு பிளிங்கன் விருந்தளித்ததாக RFI மேலும் கூறியது.
நைஜரில் இருந்து பிரெஞ்சு துருப்புக்கள் வெளியேறும்போது, அமெரிக்கா அதன் இராணுவ இருப்பு தொடர்பான “அனைத்து நடவடிக்கைகளையும் மதிப்பாய்வு செய்யும்” என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஒஸ்டின் கென்ய தலைநகர் நைரோபியில் திங்களன்று அறிவித்தார். “இராஜதந்திரத்திற்கு ஒரு வாய்ப்பை வழங்கும் அதே வேளையில், எங்கள் இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் எந்தவொரு எதிர்கால நடவடிக்கைகளையும் நாங்கள் தொடர்ந்து பரிசீலிப்போம்” என்று நைரோபியில் செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
மேற்கு ஆபிரிக்கா முழுவதும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், நைஜரின் இராணுவ ஆட்சிக்குழு ஏகாதிபத்தியத்தையோ அல்லது நேட்டோ கூட்டணியையோ எதிர்க்கவில்லை. மாறாக, அது இப்போது உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக பேரழிவு தரும் போரை நடத்தி வரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ள அதே நேரத்தில், பிரெஞ்சு துருப்புக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாஷிங்டனுடன் நைஜரின் இராணுவ ஆட்சிக்குழுவின் சந்தேகத்திற்குரிய சூழ்ச்சிகள் அதன் ஏகாதிபத்திய எதிர்ப்பு மோசடியை அம்பலப்படுத்துகின்றன.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, நைஜரின் அகாடெஸில் உள்ள ஏர் பேஸ் 201ல் இருந்து செயல்பட அமெரிக்கப் படைகளுக்கு நியாமியில் இருக்கும் இராணுவ ஆட்சி அதிகாரம் வழங்கியது. தற்போது, 1,100 அமெரிக்க துருப்புக்கள் நைஜரில் நிலைகொண்டுள்ளன, மேலும் ஜிஹாதிகளுக்கு எதிராக இந்த விமான தளத்தில் இருந்து ட்ரோன் மற்றும் போர் விமான நடவடிக்கைகளை அமெரிக்கா மீண்டும் தொடங்கியுள்ளது. மேலும், நைஜரின் மூலோபாய யுரேனிய சுரங்கங்களுக்கு அருகில் அமெரிக்கா படைகளை நிறுத்தியுள்ளது.
நைஜரில் நடந்த சதிப்புரட்சியால் பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா இடையேயான உறவுகள் சந்தேகத்திற்கு இடமின்றி சிதைந்துள்ளன. எனவே, நைஜரின் ஆளும் வட்டங்களும் அதன் இராணுவமும் பெரும் சக்திகளை ஒன்றுக்கொன்று எதிராக நிறுத்துவதன் மூலம் தாங்கள் பெறக்கூடிய அரசியல் நன்மைகளை அதிகப்படுத்த முயல்கின்றன.
எனினும், இறுதியில் நைஜரில் இருந்து பிரெஞ்சு துருப்புக்கள் திரும்பப் பெறப்பட்டாலும் கூட, நைஜரில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை, சஹேல் ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து விடுவிக்க முடியாது. உலகளாவிய நிதி ஓட்டங்கள் மற்றும் இராணுவ பலத்தின் மீதான தங்கள் கட்டுப்பாட்டை சுரண்டிக்கொண்டு, ஏகாதிபத்திய நாடுகள் பிரெஞ்சு மற்றும் நேட்டோ துருப்புக்களை பிராந்தியத்திற்குத் திரும்புவதற்கு மிகவும் இரக்கமற்ற கொள்கைகளைப் பயன்படுத்தும். ஏற்கனவே, நைஜர், மாலி மற்றும் புர்கினா பாசோவை பொருளாதாரத் தடைகளால் கழுத்தை நெரிக்க ECOWAS அரசாங்கங்களுடன் நெருக்கமாக பிரான்ஸ் செயல்பட்டு வருகிறது.
ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தால் ஸ்தாபிக்கப்பட்ட செயற்கையான தேசிய எல்லைகளுக்கு அப்பால், ஏகாதிபத்தியம் மற்றும் போருக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில், ஐரோப்பாவிலும் உலகம் முழுவதிலும் உள்ள அவர்களது வர்க்க சகோதர, சகோதரிகளுடன் ஒரு பொதுவான போராட்டத்தில் ஆபிரிக்க தொழிலாளர்களையும் இளைஞர்களையும் ஒன்றிணைப்பதே முக்கியமான கேள்வியாகும்.
