முன்னோக்கு

காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு எதிரான வெகுஜனப் போராட்டங்களை பெருநிறுவன ஊடகங்கள் தணிக்கை செய்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

காசா மீதான இஸ்ரேலின் போருக்கு எதிராக, மான்செஸ்டரில் 20,000ம் பேர் கொண்ட பலமான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களில் ஒரு பகுதியினர். அக்டோபர் 28, 2023

கடந்த வார இறுதியில், ஒரு புதிய மற்றும் இரத்தக்களரியான கட்டத்தில் நுழைந்துள்ள, காஸாவில் அதிகரித்துவரும் இனப்படுகொலைப் போர், உலகம் முழுவதிலும் பாரிய வெகுஜன சீற்றத்தைத் தூண்டியுள்ளது. காஸா மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களின் போது ஏற்கனவே படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள், பாரிய பஞ்சத்தை உருவாக்கிக்கொண்டிருக்கின்ற முற்றுகை மற்றும் உடனடி படையெடுப்பு ஆகியன காஸா பிரதேசத்தின் முழு மக்களையும் அப்பட்டமான அழிவு மற்றும் சிதறடிக்க அச்சுறுத்துவதால், தங்கள் கோபத்தையும் திகிலையும் வெளிப்படுத்த மில்லியன் கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கினர்.

பெரும் ஏகாதிபத்திய சக்திகளின் முழு ஆதரவுடனும் பங்கேற்புடனும் இஸ்ரேலால் இழைக்கப்பட்டுவரும் போர்க்குற்றங்களுக்கு எதிராக இந்த எதிர்ப்புக்கள் மக்கள் தீர்ப்பை வழங்குகின்றன. இஸ்ரேல் அரசுக்கு ஒருமனதாக ஆதரவளிக்கும் முதலாளித்துவ அரசாங்கங்களுக்கும், உழைக்கும் மக்களுக்கும் இடையே ஒரு பரந்த இடைவெளி திறக்கப்பட்டுள்ளது.

உலக மக்கள் அதிர்ச்சியூட்டும் வகையில் அட்டூழியங்களை பார்க்கின்றனர்: குண்டுகள் மற்றும் ஏவுகணைகளால் தூள்தூளாக்கப்படும் கட்டிடங்கள், தரைமட்டமாக சமன் செய்யப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்கள், இரத்த வெள்ளத்தில் குழந்தைகள், இடிபாடுகளில் இருந்து இழுத்து எடுக்கப்படும்போது கேட்கும் ஓலங்கல், எல்லா இடங்களிலும் சிதறிக்கிடக்கும் உடல்கள், இனப்படுகொலைப் போரின் இந்தக் காட்சிகள், மனசாட்சியின் மீது ஆழமாக உலுக்கி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்தக் காட்சிகளை ஊடகங்கள் மேற்கொண்டுவரும் பொய்கள் அல்லது அரசாங்க பிரச்சாரங்களால் ஒருபோதும் அழிக்க முடியாது.

கடந்தவார வார இறுதியில், லண்டனில் நடந்த எதிர்ப்பு போராட்டத்தில் அரை மில்லியன் மக்கள் கலந்து கொண்டனர். ஐரோப்பாவின் மற்ற நகரங்களில் பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர், அரபு மற்றும் பிற பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளில் நூறாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அமெரிக்காவில், நியூயோர்க் நகரம், வாஷிங்டன், டெட்ராய்ட், சிக்காகோ, சான் பிரான்சிஸ்கோ மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய இடங்களில் பல்லாயிரக்கணக்கானோர் அணிவகுத்துச் சென்றுள்ளனர்.

ஆயிரக்கணக்கான யூதர்கள், குறிப்பாக இளம் யூதர்கள் பங்கேற்றது இந்தப் போராட்டங்களின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். மன்ஹாட்டனில் உள்ள கிராண்ட் சென்ட்ரல் ஸ்டேஷனை வெள்ளிக்கிழமை இரவு இவர்கள் கையகப்படுத்தியதில் இது மிகவும் வியத்தகு முறையில் காணப்பட்டது. இந்தப் போர் “எங்கள் பெயரில் இல்லை” என்ற முழக்கத்தின் கீழ் அமைதிக்கான யூத குரல் அமைப்பு விடுத்த அழைப்பில், பல ஆயிரம் பேர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஸாவில் நடந்துவரும் போர்க்குற்றங்களுக்கு விடையிறுக்கும் வகையில் வெளிப்பட்டுவரும் மக்களின் சீற்றம், ஆளும் வர்க்கங்களையும் அவர்களின் ஊடக ஊழியர்களையும் உலுக்குகிறது. இதையிட்டு மிகவும் பயப்படும் அவர்கள், இதற்கு பதிலளிப்பதற்கான ஒரே வழி அதை புறக்கணித்து, ஊடகங்களால் தயாரிக்கப்பட்ட எதிர்-எதார்த்தத்தை உருவாக்குவதுதான் என்று அவர்கள் முடிவு செய்துள்ளனர். இதில், இஸ்ரேல் மற்றும் காஸா மீதான அதன் இனப்படுகொலைப் போரை பொதுமக்கள் ஆதரிப்பதாக, மேலும் பாரிய திகில் மற்றும் வெறுப்பின் வெளிப்பாடுகள் வெறுமனே நடைபெறவில்லை என்ற செய்திகள் ஊடகங்களால் தயாரிக்கப்படுகின்றன.

அமெரிக்க ஊடகங்களின் வேகத்தை அமைக்கும் செய்தி நிறுவனங்கள், நடைபெற்றுவரும் போராட்டங்களுக்கு மெய்நிகர் இருட்டடிப்பை விதித்துள்ளன. செய்தித் தாள்களின் பக்கங்கங்களுக்கு பக்கங்கள் செய்திகள், மற்றும் நேரத்தை ஆக்கிரமித்துள்ள முடிவில்லாத மணிநேர தொலைக்காட்சி போர்-சார்பு செய்தி வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்ட ஒரு சில இணயத்தள குறிப்புகளுடன் அவர்களின் அறிக்கைகள் மட்டுப்படுத்தப்படுகின்றன.

அக்டோபர் 7 இஸ்ரேல் மீதான ஹமாசின் தாக்குதல், இஸ்ரேலிய போர் தயாரிப்புகள், குண்டுவீச்சு தாக்குதல்கள், நெதன்யாகு மற்றும் இஸ்ரேலுடன் தங்கள் அசைக்க முடியாத ஒற்றுமையை அறிவிக்க டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் சென்ற மேற்கத்திய தலைவர்கள் (பைடென், சுனக், ஷோல்ஸ், மக்ரோன் மற்றும் பலர்) மற்றும் மூத்த அதிகாரிகளின் வருகைகள் பற்றி தொடர்ந்து செய்திகள் வெளியாகும் அதே வேளையில், காஸா மீதான போருக்கு தங்கள் எதிர்ப்பை அறிவித்த மில்லியன் கணக்கான மக்கள் பற்றிய எந்த குறிப்பும் இல்லை.

கடந்த வார இறுதியில், உதாரணமாக, நியூ யோர்க் டைம்ஸ் அதன் அச்சுப் பதிப்புகளில் உலகளாவிய போர் எதிர்ப்புப் போராட்டங்களைப் பற்றி தெரிவிக்கவில்லை. புரூக்ளின் பாலத்தின் குறுக்கே பாலஸ்தீனிய சார்பு அணிவகுப்பு பற்றிய அதன் இணையத்தள பதிப்பில் ஒரு சிறிய கட்டுரையுடன் அதன் செய்தியை வரம்பிட்டுக் கொண்டது. இது, உள்ளூர் செய்திகளைக் கொண்ட இணையத்தள பதிப்பின் “நியூயோர்க் பகுதிக்கு” மாற்றப்பட்டது.

இதேபோன்ற கொள்கையை ஏற்றுக்கொண்ட வாஷிங்டன் போஸ்ட், அச்சுப் பதிப்பில் வெளிவராத ஒரு ஆன்லைன் கருத்துத் தொகுப்பில் உலகளாவிய எதிர்ப்புகளின் சுருக்கத்தை வெளியிட்டது. இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள் மற்றும் ஹமாஸ் தாக்குதலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட முடிவில்லாத மணிநேர ஒளிபரப்புடன் ஒப்பிடுகையில், CNN அதன் இணையதளத்தில் 600 வார்த்தைகளுக்கும் குறைவான ஒரு கட்டுரையை வெளியிட்டது.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு, உலகெங்கிலும் மில்லியன் கணக்கானவர்கள் ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது ஒரு வெட்கக்கேடான போர்க் குற்றமாக பரவலாகவும் சரியாகவும் பார்க்கப்படுகிறது. 9/11 பயங்கரவாத தாக்குதல்களைப் பயன்படுத்திக் கொண்ட புஷ் நிர்வாகம், பாக்தாத்தை கைப்பற்றுவதற்கும், ஈராக்கின் பரந்த எண்ணெய் வளங்களை கொள்ளையடிப்பதற்கும் நீண்டகாலமாக தயாரிக்கப்பட்ட திட்டங்களுக்கு ஒரு போலி நியாயத்தை வழங்கியது.

அந்த நேரத்தில், நியூயோர்க் டைம்ஸ் குறிப்பிடத்தக்க வியப்புடன் குறிப்பிட்டது: “ஈராக் மீதான மேற்கத்திய கூட்டணியில் ஏற்பட்டுள்ள முறிவானது, இந்த வார இறுதியில் உலகம் முழுவதும் பெரும் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இந்த கிரகத்தில் இன்னும் இரண்டு வல்லரசுகள் இருக்கக்கூடும் என்பதை நினைவூட்டுகிறது: ஒன்று அமெரிக்கா மற்றது உலக பொதுக் கருத்து”. இதனை, வர்க்க சொற்களாக மொழிபெயர்க்கப்பட்டால், அமெரிக்க ஏகாதிபத்தியம் எந்த அரசையும் விட சக்திவாய்ந்த எதிரியை எதிர்கொண்டுள்ளது என்பதற்கான அங்கீகாரமாகும்: உலகத்தின் உழைக்கும் மக்கள், அதன் அனைத்து வடிவங்களிலும் போரையும் அடக்குமுறையையும் அடியோடு வெறுக்கிறார்கள்.

ஆனால் இன்று, டைம்ஸும் அதன் ஊடக ஆதரவாளர்களும் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் சியோனிச கூட்டாளிகளின் போர்த் திட்டங்களுக்கு எதிராக எழும் எதிர்ப்பைக் குறிப்பிடத் துணியவில்லை. இது, வாஷிங்டனின் நிலை வலுவாக இருப்பதால் அல்ல, மாறாக அதற்கு நேர்மாறானது: இது பலவீனம் மற்றும் தீவிர நெருக்கடியின் நிரூபணம் ஆகும்.

இந்த பலவீனமும் நெருக்கடியும் காஸா போருக்கு எதிரான போராட்டங்களை முற்றிலும் குற்றமாக்குவதில் வெளிப்படுகிறது. போராட்டங்கள் பற்றிய செய்திகளை நசுக்கினால் மட்டும் போதாது, போராட்டங்களே நசுக்கப்பட வேண்டும். மேற்கு ஐரோப்பாவில், பாலஸ்தீனிய சார்பு கோஷங்களின் வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு அல்லது பாலஸ்தீனியக் கொடியைக் காட்சிப்படுத்துவதை தடைசெய்வதற்கு அல்லது ஆர்ப்பாட்டங்களை முற்றிலுமாகத் தடைசெய்யும் பரந்த முயற்சிகள் ஏற்கனவே நடந்து வருகின்றன.

இதே போன்ற நடவடிக்கைகள் அமெரிக்காவிலும் நடந்து வருகின்றன. ஹார்வர்ட் மற்றும் பல பள்ளிகளில் ஹமாஸ் மற்றும் பயங்கரவாத ஆதரவு என்று கூறி மாணவர் போராட்டங்களை கண்டித்து, பாசிச குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜோஷ் ஹாவ்லி எழுதி, அறிமுகப்படுத்திய அமெரிக்க செனட் தீர்மானத்தின் மூலம் இது அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த வியாழன் அன்று, எந்த ஒரு ஜனநாயகக் கட்சியினரோ, அல்லது சுய பாணியிலான “சோசலிஸ்ட்” செனட்டர் பெர்னி சாண்டர்ஸோ கூட எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காததால், இது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானம் சட்டப்பூர்வ பலம் இல்லாத ஒரு கருத்து அறிக்கை மட்டுமே. ஆனால், ஹாவ்லி அதனுடன் நீதித்துறைக்கு கடிதம் எழுதி, அத்தகைய போராட்டங்களில் ஈடுபட்டுள்ள குழுக்கள் மற்றும் தனிநபர்கள் மீது FBIயின் விசாரணையைக் கோரினார். “இந்த அச்சுறுத்தலின் சாத்தியமான அளவைக் கருத்தில் கொண்டு, இந்த அமைப்புகளின் நிதி ஆதாரங்களை விசாரிக்க உடனடியாக நீதித்துறையின் வளங்களை பயன்படுத்துமாறு நான் உங்களை வலியுறுத்துகிறேன்”, என்று அவர் எழுதினார். “முதல் திருத்தம் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையை பாதுகாக்கிறது. ஆனால் இது பயங்கரவாத அமைப்புகளுக்கு பொருள் ஆதரவை வழங்குவதைப் பாதுகாக்காது”.

ஊடக தணிக்கை மற்றும் அரசாங்கத்தின் பொய்கள் இருந்தபோதிலும், காஸாவில் பாரிய வெகுஜன மரணங்கள் உண்மையானவை, மேலும் இந்த மரணங்களுக்கு எதிரான மக்களின் வெறுப்பும் உண்மையானவை. ஏகாதிபத்திய ஊடகங்களால் யதார்த்தத்தை உருவாக்கமுடியாது மறாக, அதை சிதைத்து மறைக்கத்தான் முடியும்.

ஆளும் வர்க்கம் பீதியடைந்துள்ளது, ஏனெனில் இந்த ஆர்ப்பாட்டங்களின் தன்னிச்சையான தன்மை, அவை தன்னால் கட்டுப்படுத்த முடியாத பெரும் திரளான மக்களை தீவிரமயமாக்கும் ஒரு அடிப்படை செயல்முறையின் விளைவாகும் என்பதைக் காட்டுகிறது. காஸாவில் இருந்து வந்துகொண்டிருக்கின்ற தடையற்ற காட்சிகள் மற்றும் களத்திலிருந்து வரும் செய்திகளை உலகிற்கு வழங்குகின்ற சமூக ஊடக அறிக்கைகளையும் அவர்களால் கட்டுப்படுத்த முடியாது. அவர்கள் தணிக்கை மற்றும் அடக்குமுறையில் ஈடுபடலாம், ஆனால் அவர்கள் சர்வ வல்லமை படைத்தவர்கள் அல்ல.

பாலஸ்தீனிய மக்களுக்கான ஆதரவு, ஏகாதிபத்திய பிரச்சார பித்தலாட்டக் கதைகள் எவ்வாறு சிதைந்து வருகிறது என்பதைக் காட்டுகிறது. ஆனால், பாரிய வெகுஜன எதிர்ப்புக்களுக்கு இன்னும் தெளிவான அரசியல் வேலைத்திட்டம் இல்லை.

காஸாவில் நடந்துவரும் போரை, அதன் பூகோள சூழலில் வைக்கும் ஒரு பரந்த அரசியல் புரிதலை இந்த இயக்கத்திற்குள் கொண்டு வருவதே தீர்க்கமான கேள்வியாகும். இது, மூன்றாம் உலகப் போருக்கான ஆழமான ஏகாதிபத்திய உந்துதலில் ஒரு முன்னரங்காக, உக்ரேனில் நடக்கும் போர் மத்திய கிழக்கின் போருடனும், சீனாவிற்கு எதிரான போரைக் கட்டியெழுப்பவும் இணைக்கப்பட்டுள்ளது.

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு கடந்த சனிக்கிழமை வெளியிட்ட அதன் அறிக்கையில், காஸாவில் போருக்கு எதிரான இயக்கத்தை விரிவுபடுத்தவும் வளர்க்கவும், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் வேலைநிறுத்தங்கள் மற்றும் பிற எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்தது. “ஒவ்வொரு நகரத்திலும் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கல்லூரிகளிலும் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளிலும், மாணவர்களின் அவசர ஒற்றுமைப் போராட்டங்களை ஏற்பாடு செய்யுமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்று அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.

“போர்-எதிர்ப்பு இயக்கத்தின் பலமும் வெற்றியும், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் சோசலிச இயக்கத்தின் வளர்ச்சியில் தங்கியுள்ளது என்று WSWS விளக்குகிறது”.

இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்ப்பின் மீதான ஆளும் வர்க்கத்தின் அச்சம் மற்றும் விரோதப் போக்கை பிரதான ஊடகங்களில் வெகுஜன எதிர்ப்புகளின் இருட்டடிப்பு வெளிப்படுத்துகிறது. ஏகாதிபத்தியப் போரை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய ஒரு இயக்கமாக இந்தப் போராட்டங்கள் வளர்ச்சியடைவதற்கு ஒரு சோசலிசத் தலைமை கட்டியெழுப்பப்பட வேண்டும். இது இன்றியமையாத பணியாகும்.

Loading