மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதலில், ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 10,000ம் பாலஸ்தீனியர்களின் உயிர்கள் பலிவாங்கப்பட்டுள்ளன. பைடென் நிர்வாகம் மற்றும் அதன் மேற்கத்திய கூட்டாளிகளால் நிதி மற்றும் ஆயுதங்களினால் ஊக்கம்பெற்ற, பாசிஸ்டுகளின் நெதன்யாகு அரசாங்கத்தால் செயல்படுத்தப்படுகின்ற, ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்தின் வெடிப்பை உலகம் காண்கிறது. கிட்டத்தட்ட பாதுகாப்பற்றிருக்கும் மக்கள் மிகவும் நவீன அழிவு ஆயுதங்களால் தூள் தூளாக்கப்படுகிறார்கள்.
ஒவ்வொரு உயிரும் பெரும் மதிப்புமிக்கது, இஸ்ரேலியர்களின் ஒவ்வொரு கொலையும் குற்றமாகும். பல பாலஸ்தீனிய கலைஞர்களின் தலைவிதியைப் பற்றி நாம் இங்கு கவனம் செலுத்தினால், ஓரளவுக்கு அவர்களின் வாழ்க்கை மற்றும் இறப்பு பற்றி ஏதாவது தெரிந்திருப்பதால், பரந்த பார்வையாளர்களுக்கு தெரிவிக்க முடியும். அவர்களின் கொலைகள், ஆயிரக்கணக்கானோரின் மரணங்களின் துயரமான மற்றும் கொடூரமான தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன, அவர்களின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் ஒரு பரந்த பொது மக்களுக்கு ஒருபோதும் தெரியாது.
அக்டோபர் பிற்பகுதியில், பாலஸ்தீனிய நடிகையும் நாடக ஆசிரியையுமான இனாஸ் அல்-சகா, காஸா நகரில் தனது ஐந்து குழந்தைகளுடன் தங்கியிருந்த கட்டிடம் இஸ்ரேலிய வான்வழி குண்டுவீச்சில் தாக்கப்பட்டதில், அவரது மூன்று குழந்தைகளுடன் அவர் கொல்லப்பட்டார், மற்ற இருவரும் பலத்த காயமடைந்தனர்.
மிடில் ஈஸ்ட் ஐ செய்தியின் படி, “ஆரம்பத்தில் 500 பேருடன், காஸாவின் ஆர்த்தடாக்ஸ் கலாச்சார மையத்தில் அவரது குடும்பம் தஞ்சம் புகுந்தது. ஆனால், பின்னர் இஸ்ரேலிய இராணுவத்தால் இந்தக் கட்டமைப்பை காலி செய்யும்படி கூறப்பட்டது. இறுதியில், அக்டோபர் 31 அன்று, இஸ்ரேலிய விமானக் குண்டு வீச்சுக்களினால் கட்டிடம் தரைமட்டமாகியது. கலாச்சார மையத்தை விட்டு வெளியேறிய பிறகு, ஒரு நண்பரின் அபார்ட்மெண்டிற்குச் சென்ற அல்-சகா, அங்கு அவர் குண்டுவீச்சினால் கொல்லப்பட்டார்”.
பிரேக்கிங் நியூஸ் நெட்வொர்க்கின் அறிக்கைகள், “அல்-சகாவின் கலைகளின் மீதான ஆர்வத்திற்கும், நாடகத்தின் மூலம் சிறுவர்களை ஊக்குவிக்கும் விருப்பத்திற்கும் அவர் அறியப்பட்டவராக இருந்தார். ஜெருசலேமின் இஷ்தார் முன்னணி நாடக பட்டறைகள் முதல், சுவீடன் அகாடமியுடன் ஒத்துழைப்பது வரை, இனாஸின் செல்வாக்கு எல்லைகளைத் தாண்டியது. ‘ஏதோ நடக்கிறது‘ மற்றும் ‘கரடி‘ ஆகிய படைப்புகளுக்காக அவர் அறியப்பட்டார். அவை வெறும் நிகழ்ச்சிகள் மட்டுமல்ல, மோதலின் குறுக்கு வலைப்பின்னல்களில் சிக்கிய மக்களின் உணர்வை உள்ளடக்கிய கதைகளாகும்” என்று குறிப்பிட்டிருந்தன.
அரபு உலகில் “கௌரவக் கொலைகள்” பற்றிய ஒரு பகுதியைக் கையாளும், கலீல் அல்-முசாயென் இயக்கிய பாலஸ்தீனிய திரைப்படமான சாரா வில்(2014), அல்-சகா, முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். இன்னும் கூடுதலாக, இந்த இருண்ட மற்றும் சிக்கலான திரைப்படம் காஸாவின் வாழ்க்கையைக் கையாள்கிறது. வறுமை மற்றும் அழிவு படங்கள் முழுவதும் நிகழ்கின்றன. எதிர்காலத்தில் இன்னும் வன்முறையான “மூன்றாவது காசா போர்” நடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய குண்டுவீச்சுக்கள் படத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அல்-சகா, ஒரு வலுவான தோற்றத்தை ஏற்படுத்துகிறார். விமியோவிலிருந்து (வீடியோ பகிர்வு இணையதளம்) ஒளிபரப்புவதற்கு சாரா கிடைக்கிறது.
திரைப்படக் குறிப்புகள் விளக்குகின்றன: “வீரம் தவிர மற்ற விஷயங்களால் பாதிக்கப்படும் காஸாவின் வித்தியாசமான கதையை இப்படம் சொல்கிறது, தன் மக்கள் சாவைத் தவிர மற்ற விஷயங்களைச் செய்கிறார்கள் மற்றும் சாதாரண காரணங்களால் காயப்படுகிறார்கள். அவர்கள் மற்ற மனிதர்களைப் போலவே கனவு காண்கிறார்கள், நேசிக்கிறார்கள், வெறுக்கிறார்கள், வெற்றி பெறுகிறார்கள், தோல்வியடைகிறார்கள், தவறு செய்கிறார்கள், பிரிந்து விடுகிறார்கள்”.
காஸாவில் தயாரிக்கப்பட்டு, முஸ்தபா அல்-நபிஹ் இயக்கிய “தாயகத்தின் குருவி” என்ற படத்திலும் அல்-சகா, தோன்றினார். அவர் சிறுவர்களுக்கு நாடகத்தைப் பற்றி கற்பிப்பதற்காக, அவர்களுடனேயே பணியாற்றினார்.
மிடில் ஈஸ்ட் ஐ செய்தியின் படி, பாலஸ்தீனிய கலாச்சார அமைச்சகம் அல்-சகா மற்றும் அவரது குழந்தைகளுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. “அவர் முன்பு குழந்தைகளுடன் பல நாடகங்கள் மற்றும் நாடகப் பட்டறைகளை நடத்தியிருந்தார், மேலும் பல்வேறு சமூக நடவடிக்கைகளிலும் பங்கேற்றார்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரமல்லாவை இருப்பிடமாகக் கொண்ட பிரபல கவிஞரான கலீத் ஜுமா, இனாஸ் மற்றும் அவரது குழந்தைகளின் மரணத்தை உறுதிப்படுத்தும் வகையில் பேஸ்புக்கில் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். “என் நண்பரே, இன்று திரை விழுந்துவிட்டது… நாடக அரங்கம் இருண்டு விட்டது” என்று அவர் எழுதினார். அதே ஆதாரத்தின்படி, சாகாவின் மகள் ரிட்டாவின் தோழியான சாஜா எல்யன், சமூக ஊடகங்களில் தனது அவநம்பிக்கையைப் பகிர்ந்து, பின்வருமாறு எழுதுகிறார்:
“இது உண்மையிலேயே நெஞ்சை பதற வைக்கிறது. ரிட்டா தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். தயவுசெய்து அவளை உங்கள் பிரார்த்தனையில் வைத்துக்கொள்ளுங்கள், இந்த பிரமாண்டமான இழப்பைத் தாங்க கடவுள் அவளுக்கு பலத்தை வழங்கட்டும். நான் எழுதுகிறேன், ஆனால் இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, எவ்வளவு நேரம், கடவுளே? ”
ஆகஸ்ட் 27 அன்று, சாகாவின் கடைசி பேஸ்புக் பதிவை மிடில் ஈஸ்ட் ஐ எழுதுகிறது, அதில் அவர் அக்டோபரில் அவருக்கு ஏற்படப்போகும் விதியை என்னவென்று அறியாமல், காஸாவின் கடந்த கால பயங்கரங்களில் இருந்து தப்பிய தனது அனுபவத்தைப் பற்றி பேசியிருந்தார். “சில சமயங்களில் நீங்கள் திரும்பிப் பார்த்து, உங்கள் கடந்த காலத்திலிருந்து ஒரு பார்வையை எடுத்துக் கொள்ளுங்கள்... நீங்கள் ஒரு படுகொலையிலிருந்து உயிருடன் வெளியே வந்துள்ளீர்கள் என்பதை கண்டறிய மட்டுமே ” என்று அவர் எழுதியிருந்தார்.
38 வயதான பாலஸ்தீனிய கலைஞரான ஹெபா ஜாகவுட்டின் மரணம் குறித்து ஹைபலர்ஜிக் (நியூயோர்க்கின் புரூக்ளினில் உள்ள ஒரு ஆன்லைன் கலை இதழ்) சமீபத்தில் ஒரு செய்தியை வெளியிட்டது. மற்றொரு இஸ்ரேலிய விமான குண்டு வீச்சில், அவர் தனது இரண்டு குழந்தைகளுடன் கொல்லப்பட்டார். அவரது மரணத்தை அவரது சகோதரி பேஸ்புக்கில் உறுதிப்படுத்தியுள்ளார்.
காஸாவின் அல்-அக்ஸா பல்கலைக்கழகத்தில் ஹெபா ஜாகவுட் நுண்கலை பயின்றதோடு, வரைகலை வடிவமைப்பில் பயிற்சியும் பெற்றார். பாலஸ்தீனிய நிலப்பரப்புகள் மற்றும் மக்களைப் பற்றிய அவரது உயிர்த்துடிப்பான ஓவியங்களுக்காக, குறிப்பாக காஸா மற்றும் ஜெருசலேமின் காட்சிகளை அவர் வரைந்ததற்காக, சமூக ஊடகங்களில் ஒரு பெரிய பின்தொடர்பவர்களைப் பெற்றார் என்று ஹைபர்லர்ஜிக் கருத்து தெரிவித்தது.
“காஸாவில் நிகழும் எதிர்மறை உணர்வுகள், உணர்ச்சிகள் மற்றும் பதட்டங்களை வெளிப்படுத்த முயற்சித்துள்ளேன்,” என்று அவர் இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த ஒரு நேர்காணலில் தனது பணியைப் பற்றி கூறினார். “பாலஸ்தீனிய நோக்கம் மற்றும் பாலஸ்தீனிய அடையாளத்தை வெளிப்படுத்துவதன் மூலம், வெளி உலகிற்கு நான் வழங்கும் ஒரு செய்தியாக கலையைக் கருதுகிறேன்” என்று அவர் குறிப்பிட்டார்.
ஜாகவுட் ஒரு பொதுப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்ததோடு, முன்பு பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி முகமையால் பணியமர்த்தப்பட்டிருந்தார்.
“ஹெபா ஜாகவுட்டின் வாழ்க்கை மற்றும் மரபு ஆகியவற்றைபற்றி” ஜனா ஷகாஷிர் என்பவர் Savoir Flair (டிஜிட்டல் பெண்கள் ஃபேஷன், அழகு மற்றும் கலாச்சார இதழ்) இல் எழுதினார். “காஸாவில் உள்ள அல் புரேஜ் அகதிகள் முகாமில் பிறந்து, தனது மூதாதையர்களின் கதைகளால் சூழப்பட்டு வளர்ந்த ஹெபா, இறுதியில் ஓவியம் மற்றும் கதைசொல்லல் மீதான தனது காதலை கலை மூலம் செதுக்கினார். அவரது ஓவியங்கள், சிக்கலான மற்றும் முழுமையான வாழ்க்கை, பாலஸ்தீனத்தின் அன்றாட வாழ்க்கை, கட்டிடக்கலை மற்றும் இயல்பு ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது. இவை பாலஸ்தீனிய அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு காட்சி வேண்டுகோளாக செயல்படுகிறது” என்று ஜனா ஷகாஷிர் குறிப்பிட்டிருந்தார்.
ஜாகவுட் “ஒரு கலைஞராக தனது திறமைகளை மெருகேற்றியது மட்டுமின்றி, காஸாவின் ஆரம்பப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு கலை கற்பிக்கும் கல்வியாளராகவும் திகழ்ந்தார். ஒரு கலைஞராகவும் ஆசிரியராகவும் அவரது இரட்டை வேடங்கள் நெகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையின் கலங்கரை விளக்காக மாறியது. ஏனெனில், அவர் தனது கலைத் தேவைகளை சமப்படுத்தியதால், அவரது குடும்பத்திற்கு முதன்மையான உணவளிப்பவராக இருந்தார்” என்று கட்டுரை கூறுகிறது.
அக்டோபர் 13 அன்று, இஸ்ரேலிய விமான குண்டுவீச்சுத் தாக்குதலால், “கலை, கல்வி மற்றும் குடும்பத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வாழ்க்கை அணைந்தது”.
எழுத்தாளர் ஹிபா அபு நடா அக்டோபர் 10 அன்று கொல்லப்பட்டார். அவர் சவுதி அரேபியாவில் பிறந்த கவிஞர், நாவலாசிரியர் மற்றும் ஆசிரியர் ஆவார். காசாவில் உள்ள இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியலில் இளங்கலைப் பட்டமும், அல்-அசார் பல்கலைக்கழகத்தில் மருத்துவ ஊட்டச்சத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். ஆக்ஸிஜன் இறந்தவர்களுக்கு அல்ல என்ற அவரது நாவல் 2017 இல் அரபு படைப்பாற்றலுக்கான ஷார்ஜா விருதில் இரண்டாவது இடத்தைப் பெற்றது.
அபு நாடா, “பாலஸ்தீன இலக்கிய சமூகத்தில் ஒரு பிரியமான நபராக” இருந்ததாக இலக்கிய மையம் எழுதுகிறது. அக்டோபர் 8 அன்று, அரபு மொழியில் எழுதிய தனது கடைசி ட்வீட்டில், “காஸாவின் இரவு ராக்கெட்டுகளின் ஒளியின்றி இருண்டது, குண்டுகளின் சத்தம் இல்லாமல் அமைதியானது, பிரார்த்தனையின் ஆறுதலைத் தவிர திகிலூட்டுகிறது, தியாகிகளின் ஒளியைத் தவிர இருள் சூழ்ந்தது. நல்லிரவு காஸா” என்று எழுதினார்.
இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் காஸா நகருக்கு தெற்கே உள்ள அவரது வீட்டில் அபு நடா கொல்லப்பட்டபோது, அவருக்கு வயது 32.
சமூக வலைதளங்களில், காஸாவைச் சேர்ந்த அகமது என்பவர், அவரது அன்பான கலைஞரும், நண்பருமான சுவரோவியக் கலைஞர் முஹம்மது கரிகாவின் மரணத்தை அறிவித்தார். சுவரோவியக் கலைஞர் இறப்பிற்கு ஒரு நாள் முன்னதாக YouTubeல் வீடியோ பதிவிட்டிருந்தார்.
பாரிய படுகொலைகளும் பேரழிவுகளும் தொடர்கின்றன. குற்றவாளிகள் நினைவு கூரப்படுவார்கள்.