மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
காஸாவில் தற்போது இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் செய்து வரும் அட்டூழியங்களின் வெளிச்சத்தில், பாலஸ்தீனியர்களுக்கு எதிரான குற்றங்களின் வரலாற்றை வாசகர்களுக்கு நினைவூட்டுவது பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். காஸாவில் தற்போது நடந்துவரும் இனப்படுகொலை தாக்குதல், அக்டோபர் 7 நிகழ்வுகளுக்கு எதிர்வினையாக இருந்தது என்ற கருத்து, செப்டம்பர் 11 “எல்லாவற்றையும் மாற்றிவிட்டது” மற்றும் உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு “ஆத்திரமூட்டப்படாமல்” இருந்தது என்ற கூற்றின் அதே வகையிலேயே உள்ளது. வரலாற்று அறிவு தொழிலாள வர்க்கத்திற்கும் இளையோர்களுக்கும் ஆயுதம் கொடுக்கும் என்பதால், ட்ரொட்ஸ்கிச இயக்கம் அந்த வழிகளில் அதன் முயற்சிகளை இரட்டிப்பாக்கும்.
பின்வரும் 2008 மதிப்பாய்வு விளக்குவது போல், பஷீருடன் வால்ட்ஸ், என்பது இஸ்ரேலிய இயக்குனர் அரி போல்மனின் அனிமேஷன், சுயசரிதைத் திரைப்படமாகும், இது பெய்ரூட்டின் சப்ரா சுற்றுப்புறத்திலும் ஷாட்டிலா அகதிகள் முகாமிலும் பாலஸ்தீனியர்களின் (மற்றும் லெபனான் ஷியாக்கள்) படுகொலையுடன் முடிவடைகிறது. 1982 ம் ஆண்டு, செப்டம்பர் 16-18ம் திகதிகளில், இஸ்ரேலிய இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்ட இந்த அகதிகள் முகாமில், லெபனானின் இஸ்ரேலிய பாசிச கூட்டாளிகள், சுமார் 3,500 பாலஸ்தீன குடிமக்களை கொடூரமான முறையில் படுகொலை செய்தனர். இஸ்ரேலிய பாதுகாப்பு மந்திரி ஏரியல் ஷரோனும் மற்ற உயர்மட்ட இஸ்ரேலிய அதிகாரிகளும் இந்தப் படுகொலைக்கு முழு உடந்தையாக இருந்தனர்.
பஷீருடன் வால்ட்ஸ் (Waltz With Bahir) திரைப்படம் பல ஒளிபரப்பு தளங்களில் கிடைக்கிறது.
1982 இல் லெபனான் மீதான இஸ்ரேலிய படையெடுப்பில் சுமார் 18,000ம் பேர் கொல்லப்பட்டனர். பெய்ரூட்டில் உள்ள சப்ரா சுற்றுப்புறத்திலும் அதை ஒட்டிய ஷட்டிலா அகதிகள் முகாமிலும் சுமார் 3,000ம் பாலஸ்தீனிய ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டதில் இஸ்ரேலியர்கள், லெபனான் பாசிச பாலாங்ஜிஸ்டுகளுடன் ஒத்துழைத்தனர். 1979-80ல் ஜிம்மி கார்ட்டர் நிர்வாகத்தின் கீழ் தொடங்கப்பட்டு, ரொனால்ட் ரீகனால் பெரிதும் விரிவுபடுத்தப்பட்ட ஆளும் வர்க்கங்களின் உலகளாவிய எதிர்த் தாக்குதலின் ஒரு பகுதியாக இந்த மிருகத்தனமான நடவடிக்கை இருந்தது. அத்துடன், மே 1979 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட மார்கரெட் தாட்சரின் அரசாங்கத்தால் மூர்க்கத்துடன் போரிட்ட மால்வினாஸ் (போல்க்லாந்து) போரினால் 1982 ஆம் ஆண்டு குறிக்கப்பட்டது.
இஸ்ரேலிய இயக்குனர் அரி போல்மேனின் பஷீருடன் வால்ட்ஸ் இந்த ஆண்டு டொராண்டோ திரைப்பட விழாவில் மிகவும் அசாதாரணமான மற்றும் பேய் பிடித்த படங்களில் ஒன்றாகும். போல்மேன் ஒரு அனிமேஷன் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார், இது சப்ரா மற்றும் ஷட்டிலாவில் நடந்த சோக நிகழ்வுகளுடன் முடிவடைகிறது. இது “முழுக்க முழுக்க சுயசரிதை திரைப்படம்” என்கிறார் இயக்குனர்.
படம் இப்படி விரிகிறது: ஒரு நண்பன் போல்மேனிடம், 26 உறுமுகின்ற கொடூரமான நாய்களின் கூட்டத்தால் தான் துரத்தப்படும், ஒரு தொடர்ச்சியான கனவைப்பற்றி கூறுகிறான். நண்பன், போவாஸ், லெபனான் படையெடுப்பின் போது, ஒரு சிப்பாயாக தனது அனுபவங்களுடன், ஏதோ இதனுடன் தொடர்பு இருப்பதாக உறுதியாக நம்புகிறான். இஸ்ரேலியர்கள் கிராமங்களுக்குள் நுழையும்போது, அவர்கள் எந்த எச்சரிக்கையும் கொடுக்க முடியாதபடி முதலில் நாய்களை “விரட்டுவார்கள்”. லெபனான் படையெடுப்பின் போது போவாஸ் 26 நாய்களை சுட்டுக் கொன்றான்.
எவ்வாறாயினும், லெபனான் சண்டையின் நினைவே அவனுக்கு இல்லை என்பதை போல்மேன் கண்டுபிடிக்கிறார். அவன், “தனது ஞாபகத்தில் இவை சேமிக்கப்படவில்லை” என்கிறான். அவனும், அவனது தோழர்களும் நிர்வாணமாக, அமைதியாக கடலில் நீந்துவது போன்ற ஒரே ஒரு காட்சி மட்டுமே அவனுக்கு நினைவில் உள்ளது. நினைவாற்றல் இல்லாதது அவனைத் தொந்தரவு செய்கிறது, மேலும் அவன் சண்டைபிடித்தவர்களை கண்டுபிடித்து, வெற்றிடத்தை நிரப்ப முடிவு செய்கிறான். “நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு நினைவகம் நம்மை அழைத்துச் செல்கிறது” என்று அவன் விளக்குகிறான்.
அவன் முதலில் ஹாலந்தில் வசிக்கும், பாலாஃபெல் (கொண்டைக்கடலை அல்லது பீன்ஸ் உருண்டைகள் பல்வேறு மசாலாப் பொருட்களுடன் கலந்து, எண்ணெயில் வறுக்கப்படும் உணவு) விற்று பெரும் வருமானம் ஈட்டிவரும் கார்மி என்ற பழைய நண்பரை சந்திக்கிறான். கார்மி லெபனானில் தனது முதல் அனுபவங்களில் ஒன்றை நினைவு கூர்ந்தான், அதில் அவனும், அவனது சக இஸ்ரேலிய சிப்பாய்களும், ஒரு பழைய மெர்சிடிஸ் வாகனம் மீது “பைத்தியம் பிடித்தவர்கள் போல் சுட்டுத் தள்ளுகிறார்கள்”, அதில் அவர்கள் ஒரு முழுக் குடும்பத்தின் உடல்களையும் கண்டுபிடித்தனர்.
“எனக்கு எதுவும் நினைவில் இல்லை” என்று போல்மேன் விளக்குகிறார், இந்த ஒரு காட்சியை அவர் ஞாபகத்தில் தக்க வைத்துக் கொண்டார். “என்ன காட்சி? ” என்று அவனது நண்பன் கேட்கிறான். “நீங்கள் அதில் இருக்கிறீர்கள்”. கடலில் இருந்து வெளிவரும் சிப்பாய்களின் உருவம் இது. சப்ரா மற்றும் ஷட்டிலாவில் நடந்த படுகொலைகள் பற்றி தனக்கு எதுவும் நினைவில் இல்லை என்று கார்மி கூறுகிறான். அது “எனது ஞாபக அமைப்பில் சேமிக்கப்படவில்லை” என்று போல்மேனை கார்மி எதிரொலிக்கிறான்.
நெதர்லாந்தில் உள்ள ஒரு டாக்ஸியில், “அனைத்தும் போல்மேனிடம் திரும்பி வருகின்றன”. அவர் பழைய தோழர்களைத் தொடர்ந்து சந்திக்கிறார், அவர்கள் லெபனானில் தங்களின் அனுபவங்களைப் பற்றி அவரிடம் கூறுகிறார்கள், அவர்களில் பலர் அதுபற்றி வேதனைப்படுகிறார்கள்.
பலாங்ஞ் அமைப்பின் தலைவர் பஷீர் கெமாயில் (தலைப்பில் “பஷீர்”) படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரும் அவரது பிரிவினரும் மேற்கு பெய்ரூட்டில் எப்படி அணிவகுத்துச் சென்றனர் என்பதையும், சப்ரா மற்றும் ஷட்டிலா அகதிகள் முகாமைச் சுற்றி அவர்கள் எவ்வாறு நிலைகளை எடுத்தார்கள் என்பதையும் போல்மேன் இறுதியில் விவரிக்கிறார். பலாங்ஜிஸ்ட் படைகள் வந்து, பாலஸ்தீனியப் போராளிகளை “சுத்திகரிப்பதற்காக” அகதிகள் முகாம்களுக்குள் நுழைவதாகக் கூறினர். இருப்பினும், அவர்களில் பெரும்பாலோர் இரண்டு வாரங்களுக்கு முன்னரே துனிசியாவிற்கு கப்பல்களில் வெளியேற்றப்பட்டு விட்டனர்.
முகாம்களுக்குள் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கும் அளவுக்கு இஸ்ரேலிய படைகளின் கட்டளையகம் உயரத்தில் இருந்ததை போல்மேனின் திரைப்படம் தெளிவாகக் காட்டுகிறது. மூன்று நாட்களாக, பாசிச சக்திகள் தங்கள் படுகொலைகளை பாலஸ்தீன அகதிகள்மீது கட்டவிழ்த்திருந்தனர். பிரபல இஸ்ரேலிய தொலைக்காட்சி நிருபர் ஒருவர், இந்தப் படுகொலை பற்றி அறிந்து, இஸ்ரேலிய பாதுகாப்பு மந்திரி ஏரியல் ஷரோனை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். “எனது கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி, புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்று, வருங்கால பிரதமராக வந்த ஷரோன் இதற்கு பதிலளித்தார். “இரத்தக்களரி மற்றும் ஆபத்தான பழிவாங்கும் நடவடிக்கையை தடுப்பதை புறக்கணித்ததற்காகவும், இரத்தம் சிந்துவதைத் தடுக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதற்காகவும்” ஷரோன் பின்னர் உத்தியோகபூர்வ விசாரணையின் மூலம் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டார்.
ஒரு நண்பரும், ஒரு சிகிச்சையாளருமான ஒருவர், “நீங்கள் அங்கு என்ன செய்தீர்கள்?” என்று போல்மானிடம் கேட்கிறார், அதற்கு, அவரும் அவரது தோழர்களும் பிரகாசமான ஒளியை அகதி முகாமில் ஏற்படுத்திக் கொடுத்ததாக விளக்குகிறார். இது, பாலாங்ஜிஸ்டுகளுக்கு அவர்களின் கொலைகார வேலைக்கு உதவியது. “நீங்கள் ஒரு நாஜி பாத்திரத்தை தயக்கத்துடன் ஏற்றுக்கொண்டீர்கள்”, பாலஸ்தீனியர்கள் தங்கள் தலைக்கு மேல் கைகளை வைத்து முகாமில் இருந்து வெளியே வந்த காட்சி, வார்சா கெட்டோவில் சரணடைந்த யூதர்களின் புகழ்பெற்ற காட்சியை நினைவுபடுத்தியதாக தொலைக்காட்சி நிருபர் ஒருவர் குறிப்பிடுகிறார்.
பஷீருடன் வால்ட்ஸ் கணிசமான கலைத்திறன் மற்றும் புத்திசாலித்தனத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. காட்சிகள் ஆழமாக கவலையளிக்கின்றன, மாயத்தோற்றம் கொண்டவை, போல்மேனின் தொடர்ச்சியான நினைவாற்றல் உட்பட, பயமுறுத்தும் மஞ்சள் வானத்தின் கீழ், பெய்ரூட்டின் உயரமான கட்டிடங்களின் வரிசைக்கு முன்னால், ஆடையின்றி, ஆயுதம் ஏந்திய சிப்பாய்கள் கடலில் இருந்து வெளிப்படுகிறார்கள்.
சியோனிச குற்றங்களை அம்பலப்படுத்துவது, அல்லது மிகவும் நேர்மையான ஒரு திரைப்படம், இன்று அமெரிக்கத் திரையுலகில் நினைத்துப் பார்க்க முடியாததாக இருக்கும். டிசம்பர் இறுதியில் அமெரிக்காவில் வெளியாகும் இத்திரைப்படம் என்னவாகும் என்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
ஒரு நேர்காணலில், போல்மேன் அதை விளக்கினார், “பஷீருடன் வால்ட்ஸ், என் வாழ்க்கையில் சில முக்கிய பகுதிகள் என் நினைவில் இருந்து முற்றிலும் காணாமல் போய்விட்டன என்பதை நான் உணர்ந்த தருணத்திலிருந்து, நான் கடந்து வந்ததைப் பின்தொடர்கிறது…. எனது கடந்த காலத்தைப் பற்றிய பல கனமான விஷயங்களை நான் கண்டுபிடித்தேன். இதற்கிடையில், அந்த ஆண்டுகளில், நானும் என் மனைவியும் மூன்று குழந்தைகளை இந்த உலகத்திற்கு கொண்டு வந்தோம். இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது, ஒருவேளை நான் இதையெல்லாம் என் மகன்களுக்காக செய்கிறேன். அவர்கள் வளர்ந்து, திரைப்படத்தைப் பார்க்கும்போது, எந்தவொரு போரிலும் பங்கேற்காத, சரியான முடிவுகளை எடுக்க அது அவர்களுக்கு உதவக்கூடும்”.
“ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய முன்னாள் படையினர்கள் தங்கள் போர் நினைவுகளை ஆழமாக அடக்கி வைத்திருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும், எதுவும் நடக்காமல் அப்படியே வாழலாம். ஆனால், அது எப்பொழுதும் ஒரு நாள் வெடிக்கும்போது, அவர்களுக்கு என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும். அதுதான் பிந்தைய மனஉளைச்சலின் சீர்கேடு” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
பலருக்கு, கடந்த சில தசாப்தங்களாக, பல்வேறு உண்மைகள், சமூக ஏற்றத்தாழ்வுகள், குற்றங்கள் வெளிப்படையாக “ஞாபக அமைப்பில் சேமிக்கப்படவில்லை”. ஆனாலும் அவர்கள் அங்கேயே இருந்தார்கள். பிற செயல்முறைகள், மனநிலைகள் மற்றும் மாயைகள் அவர்களை நனவில் இருந்து விலக்க உதவியது. விஷயங்களைப் பற்றிய உண்மை வெள்ளத்தில் வருவதற்கு என்ன காரணம்? அகநிலை முயற்சி மற்றும் வெளிப்புற தூண்டுதல்களின் சிக்கலான கலவை, ஒருவேளை புதிய மற்றும் அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளின் வடிவத்தில் இருக்கலாம், (போல்மேனின் விஷயத்தில், ஒருவேளை லெபனானில் ஒரு புதிய போர், ஈராக் ஆக்கிரமிப்பு?), அகநிலை முயற்சியே புறநிலையாக இயக்கப்படுகிறது, எந்த சமூக உண்மைகள் தற்போதுள்ள நம்பிக்கை அமைப்புக்கு அடித்தளமிட்டு நிலைநிறுத்தப்பட்டாலும், அவை வேறொன்றிற்கு வழிவகுத்துள்ளன என்பதற்கான அறிகுறியாகும்.
பஷீருடன் வால்ட்ஸ் இந்த சிக்கலான செயல்முறையின் மிகவும் உணர்வுபூர்வமான வெளிப்பாடுகளில் ஒன்றாகும்.