இந்திய-கனேடிய கவிஞர் ரூபி கவுர் காஸா படுகொலை தொடர்பாக வெள்ளை மாளிகை அழைப்பை நிராகரித்தார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ஏகாதிபத்திய ஆதரவு, இஸ்ரேலின் காஸா மீதான இனப்படுகொலைத் தாக்குதலைக் கண்டிக்கும் கலைஞர்கள் மற்றும் கலாச்சாரப் பிரமுகர்களின் பெருகிவரும் குழுவில், இந்திய-கனேடியக் கவிஞர் ரூபி கவுர் இணைந்துள்ளார்.

கடந்த புதன்கிழமை, வெள்ளை மாளிகையில் ஜனநாயகக் கட்சியின் துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் நடத்திய தீபாவளி நிகழ்ச்சிக்கு கவுர் அழைக்கப்பட்டிருந்தார். காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு பைடென் நிர்வாகத்தின் முழு ஆதரவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கவுர், இந்த வாய்ப்பை நிராகரித்தார்.

சமூக ஊடக தளமான X ட்விட்டரில் வெளியிட்ட கொள்கை ரீதியான அறிக்கையில், “சிக்கியிருக்கும் மக்களின் (அவர்களில் 50 வீதமான குழந்தைகள்) கூட்டுத் தண்டனையை ஆதரிக்கும் ஒரு நிறுவனத்திலிருந்து எந்தவொரு அழைப்பையும்” நிராகரிப்பதாக கவிஞர் எழுதுவதற்கு தள்ளப்பட்டார்.

ரூபி கவுர் [Photo by Joe Carlson / CC BY 4.0]

[Photo by Joe Carlson / CC BY 4.0]

“இன்று அமெரிக்க அரசாங்கம் காஸா மீதான குண்டுவீச்சுக்கு நிதியளிப்பது மட்டுமல்லாமல், எத்தனை அகதிகள் முகாம்கள், சுகாதார வசதிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அடித்து நொறுக்கப்பட்டாலும், பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இந்த இனப்படுகொலையை அவர்கள் தொடர்ந்து நியாயப்படுத்துகிறார்கள்” என்று கவுர் கூறினார்.

வெள்ளை மாளிகையில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்திற்கு தனது அழைப்பு முற்றிலும் அடையாளமாக இருந்தது என்றும், “ஒரு சீக்கியப் பெண்ணாக, இந்த நிர்வாகத்தின் செயல்களுக்கு வெள்ளையடிக்க எனது படத்தை பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன்” என்றும் கவுர் இதுபற்றி விளக்குகிறார்.

தெற்காசியா முழுவதும் அனுசரிக்கப்படும் தீபாவளி, இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான விழாவாக இருக்கிறது. “பொய்யின் மீது நீதியையும், அறியாமையின் மீதான அறிவையும் கொண்டாடுவதாகும்” என்று இந்த விழாவை கவுர் விளக்குகிறார். “ஒடுக்குமுறைக்கு எதிராக சுதந்திரத்திற்காகப் போராடுவது என்றால் என்ன என்பதைப் பற்றி சிந்திக்க நான் எப்போதும் இந்த நாளைப் பயன்படுத்தினேன்” என்று அவர் எழுதுகிறார்.

கவுரின் அறிக்கை, அப்பாவி பொதுமக்கள் மத்தியில் பேரழிவுகரமான இறப்பு எண்ணிக்கையையும், மனிதாபிமான போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க பைடென் நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்ததையும் எடுத்துக்காட்டுகிறது. வாஷிங்டனால் பெருமளவில் நிதியளிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட குற்றவியல் முறைகள் குறித்து, “இஸ்ரேல் வெள்ளை பொஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்துவதை நாங்கள் பார்த்திருக்கிறோம், இது சர்வதேச மன்னிப்புச் சபையின் படி, போர்க் குற்றமாக விசாரிக்கப்பட வேண்டும்” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இஸ்ரேலிய இனப்படுகொலையை விமர்சிக்கும் கலாச்சார தொழிலாளர்களை “யூத விரோதிகள்” என்று முத்திரை குத்தி சர்வதேச தணிக்கை பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், கவுரின் அறிக்கைகள் தைரியமானவை. குறிப்பாக, அவரது கொள்கை ரீதியான ஒரு பத்தியில், “ஒரு சமூகமாக, மேசையில் ஒரு இருக்கையைப் பெறுவதற்காக நாம் அமைதியாகவோ அல்லது இணக்கமாகவோ இருக்க முடியாது. இது மனித வாழ்க்கைக்கு அதிக விலை கொடுக்கிறது” என்று அவர் எழுதுகிறார்.

அவரது கடிதம் ஒரு கூர்மையான கருத்துடன் முடிகிறது: “ஒரு அரசாங்கத்தின் நடவடிக்கைகள் உலகெங்கிலும் உள்ள மக்களை மனிதநேயமற்றவர்களாக மாற்றும் போது, ​​நீதியைக் கோருவது நமது தார்மீகக் கடமையாகும். பயப்படாதே ! உலகத்துடன் நின்று மனிதாபிமான போர் நிறுத்தத்தைக் கோருங்கள். நீங்கள் பேசும்போது பல குரல்கள் உங்களுடன் சேரும். மனுக்களில் கையெழுத்திடுவோம். எதிர்ப்புகள், புறக்கணிப்புகளுக்காக காத்திருங்கள். எங்கள் பிரதிநிதிகளை அழைத்து சொல்லுங்கள் - இனப்படுகொலையை நிறுத்துங்கள்”!

தனது ஐந்தாவது வயதில், தனது குடும்பத்துடன் இந்தியாவில் இருந்து கனடாவிற்கு குடிபெயர்ந்த கவுர், எளிமையான கருப்பொருள்கள் மற்றும் பாணியைப் பயன்படுத்தி, தனது கவிதைகளுக்காக பரவலாக அறியப்பட்டவர். 2014 ஆம் ஆண்டில், வெறும் 21 வயதில், அவர் மனவேதனை, அதிர்ச்சி மற்றும் புலம்பெயர்ந்தோர் அனுபவங்களை ஆராயும் கவிதைகளின் தொகுப்பான பாலும் தேனும் என்ற கவிதைப் புத்தகத்தை சுயமாக வெளியிட்டார். மூன்று மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்கப்பட்ட இந்த புத்தகத்தின் கவிதைகள், இளையோர்களிடையே ஒரு புதிய ஆர்வத்தை தூண்டும் பெருமைக்குரியது.

பாலும் தேனும் (கவிதை தொகுப்பு)