மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
டிசம்பர் 6 அன்று, பாலஸ்தீனிய எழுத்தாளர், கல்வியாளர் மற்றும் சமூக ஆர்வலர் டாக்டர் ரெஃபாத் அல்-அரீர், காஸாவில் உள்ள அவரது சகோதரியின் வீட்டை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலில், அமெரிக்க ஆதரவு இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளால் (IDF) படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
டாக்டர் அல்-அரீரின் மரணத்தை X/Twitter இல் அறிவித்த, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கை தளமாகக் கொண்ட, ஒரு இலாப நோக்கற்ற மனித உரிமைகள் அமைப்பான Euro-Med Monitor இன் தலைவர் ராமி அப்துல், “சிறந்த கல்வியாளர்களில் ஒருவரான எனது அன்பான மற்றும் மதிப்புமிக்க நண்பரான டாக்டர். ரெஃபாத் அல்-அரீரை கொலையாளிகள் குறிவைத்து, பின்தொடர்ந்து சென்று காஸாவின் குரலை கொலை செய்தனர்” என்று எழுதியிருந்தார்.
2008-2009 இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையான “ஆபரேஷன் காஸ்ட் லீடில்” இருந்து உயிர்தப்பிய இளம் பாலஸ்தீனியர்களின், 23 சிறுகதைகளின் தொகுப்பான அமைதியற்ற காஸா மற்றும் காஸா மீண்டும் எழுதுகிறது என்ற இரண்டு படைப்புகளுக்கு டாக்டர் அல்-அரீர் ஆசிரியராக இருந்தார். சர்வதேச அளவில் அதிகம் விற்பனையாகி வருகின்ற காஸா மீண்டும் எழுதுகிறது என்ற படைப்பு 2014 இல் ஆறு வெவ்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
டாக்டர் அல்-அரீர் காஸாவில் உள்ள இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் கவிதைகளை கற்பித்தார்.
யூரோ-மெட் மானிட்டரின் தகவல் தொடர்புத் தலைவரான முஹம்மது ஷெஹாடா, டிசம்பர் 6 இடம்பெற்ற குண்டுவீச்சில், அல்-அரீரின் சகோதரர், சகோதரி மற்றும் அவரது நான்கு குழந்தைகளும் கொல்லப்பட்டதாக அறிவித்தார். டாக்டர் அல்-அரீரை மேற்கோள் காட்டி ஷெஹாடா, டிசம்பர் 6 குண்டுவீச்சில் டாக்டர் அல்-அரீரின் குடும்ப இல்லத்தை இஸ்ரேலிய இராணுவம் குறிவைத்து தாக்கியது முதல் முறை அல்ல என்று குறிப்பிட்டார்.
2014 இல், டாக்டர் அல்-அரீர், “இஸ்ரேலிய இராணுவம் என் சகோதரனைக் கொன்றது, அது 40 பேர் தங்கியிருந்த எனது குடும்ப வீட்டை தரைமட்டமாக்கி எனது குடியிருப்பை அழித்தது. ... நானும் நுசைபாவும் ஒரு சராசரி பாலஸ்தீனிய தம்பதிகள். ...நாம் 30க்கும் மேற்பட்ட அன்பான உறவினர்களை இழந்தோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
கடந்த இரண்டு மாதங்களில் அமெரிக்காவின் முழு ஆதரவுடன் இஸ்ரேலிய அரசால் படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்களில் ஒருவரான டாக்டர் அல்-அரீர், இலக்கு வைத்து கொல்லப்பட்டதானது, உலகத் தொழிலாள வர்க்கத்தால் ஒருபோதும் மறக்க முடியாத ஒரு கொடூரமான போர்க்குற்றமாகும்.
டாக்டர் அல்-அரீர் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு, ஒரு திறமையான ஆசிரியர், எழுத்தாளர் மற்றும் பாலஸ்தீனிய சமூக உரிமை ஆர்வலராக இருந்தார். அவருடைய X/Twitter லுள்ள “Refaat in Gaza” உட்பட, சமூக ஊடகங்களில் ஏராளமான பின்தொடர்பவர்களைக் குவித்திருந்தார். “Refaat in Gaza” ல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மற்றும் தற்போதைய இராணுவ முற்றுகையின் கீழ் வாழ்க்கை நிலமை பற்றிய கட்டுரைகளை அவர் தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.
அல்-அரீர், தனது கடைசி X/Twitter பதிவில், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் டிசம்பர் 3-ம் தேதி போரைத் தூண்டும் வீடியோ அறிக்கையை மேற்கோள் காட்டி துல்லியமாக கூறினார்: “இஸ்ரேல் நடத்திவருகின்ற காஸா இனப்படுகொலைக்கு ஜனநாயகக் கட்சியும் பைடெனும்தான் பொறுப்பு”.
இதை எழுதும் வரை, ட்டுவிட்டரில் அந்த பதிவு 68,000ம் முறைக்கு மேல் விரும்பப்பட்டது, 29,000 முறை மீள்பதிவிடப்பட்டது, மற்றும் 7.3 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டுள்ளது.
அவரது மறைவையடுத்து, உலகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள் சமூக வலைதளங்களில் தங்களது வருத்தத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
பத்திரிகையாளர் கேட்டி ஹால்பர் எழுதினார், “இது மிகவும் வருத்தமளிக்கிறது. கடவுளே. பயனுள்ள முட்டாள் வலையொளியில் அவரிடம் பேசினோம், அவர் மிகவும் நல்லவராக இருந்தார். அவர் மிகவும் தைரியமாக இருந்தார். தன் குழந்தைகள் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்பது பற்றி எங்களிடம் பேசினார். அவர் எங்களிடம் பேசியபோது, பின்னணியில் குண்டுகள் வெடித்துக்கொண்டிருந்தன. பைடென், இது உங்கள் தவறு”.
கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்ட 350 பாலஸ்தீனியர்களில் அல்-அரீரும் அவரது குடும்பத்தினரும் உள்ளடங்குவதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சந்தேகத்திற்கு இடமின்றி குறைத்து மதிப்பிட்டு, அக்டோபர் 7 முதல் குறைந்தது 17,177 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
சுமார் 1.9 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ள தெற்கு காஸா பகுதியை நோக்கி இஸ்ரேலிய இராணுவம் தரை நடவடிக்கையில் நகரும்போது, எதிர்கால போர்க்குற்ற விசாரணைகளில் பயன்படுத்தப்படக்கூடிய பயங்கரமான காட்சிகளை, அதன் படைகள் கண்மூடித்தனமாக மற்றும் கிட்டத்தட்ட முழு நிர்வாண பாலஸ்தீனிய ஆண்களை துப்பாக்கி முனையில் கடத்திச் செல்வதைக் காட்டுகிறது.

பணயக்கைதிகளில் சிலர் இஸ்ரேலிய சிறைகளுக்கு அல்லது பாரிய புதைகுழிகளுக்குள் கொண்டு செல்லப்படுகிறார்கள். யூரோ-மெட் மானிட்டர், இஸ்ரேலியப் படையினர் ஏழு பொதுமக்களை சுட்டுக் கொன்றதை நேரில் கண்ட சாட்சி ஒருவர் பார்த்ததாகக் கூறியது. அவர்களில் ஒருவர் வெள்ளைக் கொடியை ஏந்தியிருந்தார். விரைவாக ஆடைகளை அவிழ்க்க வேண்டும் என்ற படையினர்களின் அவமதிக்கும் கட்டளைகளை பின்பற்றாததற்காக அவர்கள் கொல்லப்பட்டார்கள்.
ஆடைகள் அகற்றப்பட்டு கடத்தப்பட்ட ஒவ்வொரு பாலஸ்தீனிய ஆணும் “ஹமாஸ் போராளி” என்று இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ள நிலையில், பாலஸ்தீனிய தூதர் ஹூசம் ஸோம்லோட் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் பாலஸ்தீனிய குடிமக்களை ஐக்கிய நாடுகளின் தங்குமிடத்திலிருந்து கடத்திச் சென்றதாக குற்றம் சாட்டினார். மேலும், தங்குமிடமாக மாற்றப்பட்ட ஐக்கிய நாடுகளின் பள்ளியிலிருந்து இதர மக்களை இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

கடத்தப்பட்டவர்களில் எவரும் ஹமாஸ் போராளிகள் என்பதற்கான எந்த ஆதாரத்தையும் இஸ்ரேல் இன்னும் முன்வைக்கவில்லை. அவர்களில் பலர் ஏற்கனவே அவர்களது சகாக்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களால் பத்திரிகையாளர்கள், ஐக்கிய நாடுகளின் ஊழியர்கள் மற்றும் சிறுவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பலத்த ஆயுதம் ஏந்திய உருமறைப்பு அணிந்த சிப்பாய்கள் மத்திய கிழக்கு மக்களை ஆடைகளை களைந்து துஷ்பிரயோகம் செய்யும் படங்கள், ஈராக்கில் உள்ள அபு கிரைப் சிறைச்சாலையில் நடந்த பாரிய துஷ்பிரயோகம் மற்றும் குவாண்டனாமோ வளைகுடா இராணுவ சிறையில் “பயங்கரவாதிகள்” என்று கூறப்படுபவர்கள் மீதான சித்திரவதைகள் உட்பட, இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் பிரபலப்படுத்தப்பட்ட சித்திரவதை முறைகளுடன் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்களிடமிருந்து உடனடி ஒப்பீடுகளைத் தூண்டியது.
இந்த சமீபத்திய போர்க்குற்றங்கள் இனப்படுகொலை மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உலகளாவிய எதிர்ப்பைத் தொடர்ந்து எரியூட்டுகின்றன. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள ஆயுத உற்பத்தியாளர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் வியாழனன்று எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்ந்தன.
இணையத்தில், டாக்டர் அல்-அரீரின் முந்தைய வீடியோ நேர்காணல்கள் மற்றும் கட்டுரைகள் மில்லியன் கணக்கான மக்களால் பகிரப்பட்டுள்ளன. இதில் நியூயார்க் டைம்ஸில் 2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட “என் குழந்தை கேட்கிறது, மின்சாரம் துண்டிக்கப்பட்டால் எங்கள் கட்டிடத்தை இஸ்ரேலியர்களால் அழிக்க முடியுமா? என்ற ஒரு கட்டுரையும் அடங்கும்.
அல்-அரீர் எழுதினார்:
செவ்வாய் அன்று, என் மனைவிக்குப் பிறகு, லினா மீண்டும் தன் கேள்வியைக் கேட்டாள், நான் அதற்கு முதல் முறையாக பதிலளிக்கவில்லை: மின்சாரம் துண்டிக்கப்பட்டால் எங்கள் கட்டிடத்தை அவர்களால் அழிக்க முடியுமா? நான் சொல்ல விரும்பினேன்: “ஆம், குட்டி லினா, இஸ்ரேல் இன்னும் அழகான அல்-ஜவ்ஹாரா கட்டிடத்தையோ அல்லது எங்களின் குடியிருப்புக் கட்டிடங்களையோ, இருட்டில் கூட அழிக்க முடியும். நம் ஒவ்வொரு வீட்டிலும் சொல்லப்பட வேண்டிய சேதிகள் மற்றும் கதைகள் நிறைந்துள்ளன. எங்கள் வீடுகள் இஸ்ரேலிய போர் இயந்திரத்தை எரிச்சலூட்டுகின்றன, கேலி செய்கின்றன, இருளில் கூட வேட்டையாடுகின்றன. அது அவர்களின் இருப்பைத் தாங்க முடியாது. மேலும், அமெரிக்காவில் வரிகளில் வரும் டொலர்களிலும், சர்வதேச நோய் எதிர்ப்பு சக்தியுடனும், இஸ்ரேல் மறைமுகமாக எதுவும் மிச்சமில்லாத வரை, எங்கள் கட்டிடங்களை அழித்துக்கொண்டே இருக்கும்”.
ஆனால், இதையெல்லாம் என்னால் லினாவிடம் சொல்ல முடியாது. எனவே நான் பொய் சொல்கிறேன்: “இல்லை, செல்லம். இருட்டில் அவர்களால் எங்களைப் பார்க்க முடியாது”.
காஸாவில் இருந்து எலக்ட்ரானிக் இன்டிஃபாடாவிற்கான (Electronic Intifada) தனது கடைசி நேர்காணல் ஒன்றில் டாக்டர் அல்-அரீர் கூறினார், “இது மிகவும் கருமையாகவும், மிகவும் இருண்டதாகவும் இருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். தண்ணீர் இல்லை, காஸாவை விட்டு வெளியேற வழி இல்லை... என்ன செய்வது? மூழ்குவதா? பாரிய தற்கொலையா? இதைத்தான் இஸ்ரேல் விரும்புகிறதா? நாங்கள் அதைச் செய்யப் போவதில்லை.”
“ஒரு நாள், நான் எனது நண்பரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன், நான் ஒரு கல்வியாளர், எனது வீட்டில் இருக்கும் கடினமான பொருள் ஒரு எக்ஸ்போ மார்க்கர்தான் (வரைவதற்கு உபயோகிக்கும் தடித்த பேனா), ஆனால், இஸ்ரேலியர்கள் படையெடுத்து வந்தால், விமானப் படையினர் எங்கள் மீது தாக்குதல் நடத்தினால், வீடு வீடாகச் சென்று எங்களை படுகொலை செய்தால், நான் கடைசியாக செய்யக்கூடிய காரியமாக இருந்தாலும் கூட, அதை இஸ்ரேலிய படையினர்கள் மீது வீச, இந்த மார்க்கரைப் பயன்படுத்துவேன். இது எல்லோருடைய உணர்வு. நாங்கள் ஆதரவற்றவர்கள், இழப்பதற்கு எதுவும் இல்லை”.
உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே இஸ்ரேலிய இராணுவ தாக்குதலுக்கு பரந்த எதிர்ப்பின் டிஜிட்டல் வெளிப்பாடாக, அவரது படுகொலைக்குப் பிறகு, ரெஃபாத் அல்-அரீர்ஸ் வெளியிட்ட ஒரு கவிதை 13 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டது. மேலும் இதை எழுதும் வரை 65,000 முறை மறு ட்வீட் செய்யப்பட்டுள்ளது. “நான் இறக்க வேண்டும் என்றால்” என்ற தலைப்பிலான கவிதையை டாக்டர் அல்-அரீர் எழுதினார், “நான் இறக்க வேண்டும் என்றால், அது ஒரு கதையாக இருக்கட்டும். #சுதந்திர பாலஸ்தீனம் #காஸா”.
அவர் எழுதிய கவிதை:
நான் இறக்க வேண்டும் என்றால்,
நீங்கள் வாழ வேண்டும்
என் கதையை சொல்ல
என் பொருட்களை விற்க
ஒரு துண்டு துணி வாங்க
மற்றும் சில சரங்கள்,
(ஒரு நீண்ட வால் கொண்டு வெண்மையாக்கு)
அதனால் காஸாவில் எங்கோ ஒரு குழந்தை
கண்களில் சொர்க்கத்தைப் பார்க்கிறது
தீப்பிளம்பில் விட்டுச் சென்ற தந்தைக்காகக் காத்திருக்கிறது
மற்றும் யாரிடமும் விடைபெறவேண்டாம்
அவரது சதை கூட இல்லை
தனக்கு கூட இல்லை -
நீ உருவாக்கிய என் காத்தாடி மேலே பறப்பதைப் பார்
அங்கே ஒரு தேவதை இருக்கிறாள் என்று ஒரு கணம் நினைக்கிறான்
அன்பை மீண்டும் கொண்டு வாருங்கள்
நான் இறக்க வேண்டும் என்றால்
நம்பிக்கை தரட்டும்
அது ஒரு கதையாக இருக்கட்டும் !