முன்னோக்கு

இரு கட்சி வாக்கெடுப்பில், அமெரிக்க காங்கிரஸ் பென்டகன் வரவு செலவுத் திட்டத்தை அங்கீகரிக்கிறது: உலகப் போர் திட்டம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

காங்கிரஸின் இரு அவைகளிலும் இருகட்சி வாக்குகளுடன், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இரு கட்சிகளும் இந்த வாரம் 2024 நிதியாண்டிற்கான சாதனை படைக்கும் பென்டகன் வரவு செலவுத் திட்டத்தை அங்கீகரித்தன.

காஸாவில் அமெரிக்க/இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு எதிராக அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் வெகுஜன எதிர்ப்புக்கள் மற்றும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான வாஷிங்டனின் பினாமி போருக்கு மக்கள் ஆதரவு சரிந்துள்ள நிலையில், ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் இணைந்து தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்தை (NDAA) ஏற்றுக்கொண்டனர். அது வரவிருக்கும் ஆண்டில் $883.7 பில்லியன் இராணுவ செலவினத்திற்கு அழைப்பு விடுக்கிறது, அது 2020ல் இருந்து $145 பில்லியன் அல்லது 20 சதவீதம் அதிகமானது.

பாதுகாப்புத் துறைக்கான உயர்மட்ட புள்ளிவிவரம் $841.4 பில்லியன், எரிசக்தி துறையின் “தேசிய பாதுகாப்பு” திட்டங்களுக்கு $32.4 பில்லியன் மற்றும் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் $438 பில்லியனை கொண்டிருக்கும். மொத்த அங்கீகாரமானது வருடாந்திர கூட்டாட்சியின் நிர்ணயிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் பாதிக்கும் மேல் எடுத்துக் கொள்கிறது.

பென்டகன், வாஷிங்டன், டி.சி., மே 15, 2023 இன் வான்வழி காட்சி. [Photo: Navy Petty Officer 2nd Class Alexander Kubitza, US Department of Defense]

பட்டினியும் வீடற்றவர்களும் பெருகிவரும் நிலைமைகளின் கீழ், பெருநிறுவனங்கள் வேலைகளை வெட்டி வருகின்றன. மற்றும் கோவிட் அவசரநிலையின் போலியான “முடிவை” பைடென் நிர்வாகம் பயன்படுத்தி, கோடிக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களிடமிருந்து மருத்துவ உதவி மற்றும் உணவு முத்திரை போன்ற நலத்திட்டங்களை பறிக்கின்றது.

இராணுவ ஒப்பந்தக்காரர்கள் இலாப வரத்தை அனுபவிக்கும் அதே வேளையில், போர் செலவினங்களை ஊக்குவிப்புக்கான முழு செலவையும் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தப்பட இருக்கிறது.

புதன்கிழமையன்று 3,000ம் பக்க மசோதாவை சரிசம நிலையற்றதாக 87-13 வாக்குகள் வித்தியாசத்தில் செனட் நிறைவேற்றியது, மேலும் அதைத் தொடர்ந்து வியாழன் அன்று 310க்கு 118 என்ற வாக்குகளின் மூலம் பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியது. சாதாரண நடைமுறையின் இடைநிறுத்தத்தின் கீழ் விரைவாக நிறைவேற்றுவதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு வித்தியாசத்தை எளிதாகத் தாண்டியது.

தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டம் (NDAA ) உண்மையில் ஒரு “பாதுகாப்பு” மசோதா அல்ல. அது பூகோளரீதியான போருக்கான ஒரு வரைபடமாகும், இது குறிப்பாக இராணுவ ஆக்கிரமிப்பிற்காக சீனாவை இலக்கு வைத்துள்ளது, அதை அடுத்து ரஷ்யா, ஈரான் மற்றும் வட கொரியா, அதே சமயம் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் அழிப்புப் போருக்கு அமெரிக்க இராணுவ ஆதரவையும் ஈடுபாட்டையும் உறுதிப்படுத்துகிறது.

குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள சபையின் ஆயுத சேவைகளுக்கான கமிட்டியால் வெளியிடப்பட்ட “FY24 தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்தின்” சுருக்கம் இதைத் தெளிவுபடுத்துகிறது. அது இவ்வாறு தொடங்குகிறது:

அமெரிக்கா சீனாவிடமிருந்து முன்கண்டிராத அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது மற்றும் ரஷ்யா, ஈரான், வட கொரியா மற்றும் பயங்கரவாத அமைப்புகளிடமிருந்து தொடர்ந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது. நமது எதிரிகள் அனைவரும் அமெரிக்க மேலாதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தில் இணைந்துள்ளனர். இந்த எதிரிகளின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்து உருவாகி வருகின்றன.

“எதிர்கால போர்க்களங்களில் நாம் மேலோங்கி நிற்பதற்கு கொடிய சண்டை சக்தியை உருவாக்குவதற்கு மற்றும் பராமரிப்பதற்கு போதுமான முதலீட்டை FY24 NDAA வழங்குகிறது” என்று அந்த ஆவணம் உறுதிப்படுத்துகிறது.

பிரதிநிதிகள் சபையின் ஆயுத சேவைகள் குழுவின் குடியரசுக் கட்சியின் தலைவரான மைக் ரோஜர்ஸ், இந்த மசோதாவைப் பற்றி கூறுகையில், “இது எங்கள் எதிரிகளை, குறிப்பாக சீனாவைத் தடுப்பதில் மிகத் தீவிரமான கவனம் செலுத்துகிறது” என்றார்.

செனட் ஆயுத சேவைகள் குழுவின் சாமானிய உறுப்பினரான குடியரசுக் கட்சியின் செனட்டர் ரோஜர் விக்கர், “அமெரிக்காவிடம் சிறந்த போர் சக்தி இல்லாத ஒரு உலகத்தை நாங்கள் ஏற்க மாட்டோம் என்பதை நமது மசோதா சீனா, ரஷ்யா மற்றும் பிறருக்கு உணர்த்த வேண்டும்” என்று கூறினார்.

ஜனநாயகக் கட்சியின் செனட் பெரும்பான்மைத் தலைவர் சக் ஷுமர் இதனை ஒப்புக்கொண்டதோடு, “NDAA ஐ நிறைவேற்றுவது ரஷ்யாவிற்கு எதிரான நிலையை தக்க வைக்கவும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு (CCP) எதிராக உறுதியாக நிற்கவும் மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு அதிநவீனமாக இருப்பதை உறுதி செய்யவும் உதவுகிறது” என்று அறிவித்தார்.

பிரதிநிதிகள் சபை அறிக்கையின் தொகுப்பிலுள்ள மிக நீளமான பகுதி, “CCP ஆக்கிரமிப்பை எதிர்த்தல்” என்ற தலைப்பில் தொடங்குகிறது. அது “FY 2024 NDAA ஆனது, CCP ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள நமக்குத் தேவையான மேன்மையை உருவாக்கி பராமரிக்கிறது” என்று குறிப்பிடுகிறது. இது மசோதாவின் விதிகளில் பட்டியலிடப்பட்டுள்ளது:

  • அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான சீன எதிர்ப்பு AUKUS உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துதல் மற்றும் அணுசக்தி திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியாவிற்கு செய்வதற்கு அங்கீகாரம் அளித்தல்.
  • அமெரிக்க இந்தோ-பசிபிக் ஆணையகத்தால் நடத்தப்படும் பயிற்சிகளின் அளவையும் அதிர்வெண்ணையும் அதிகரித்தல்.
  • பசிபிக் தடுப்பு முன்முயற்சிக்கு $14.7 பில்லியனை அங்கீகரித்தல் மற்றும் தைவானின் இராணுவப் படைகளுக்கான பயிற்சி, ஆலோசனை மற்றும் திறன்-வளர்ப்புத் திட்டத்தை நிறுவுதல், இதில் இரண்டு படையணி துருப்புக்களுக்கு புதிய ஆயுத அமைப்புகள் மற்றும் இராணுவத் தந்திரோபாயங்கள் குறித்து அமெரிக்காவில் பயிற்சி அளிப்பது.
  • செயற்கை நுண்ணறிவு, தன்னாட்சி அமைப்புகள், சைபர், மொபைல் நுண் அணு உலைகள் மற்றும் உயர் ஆற்றல் ஒளிக்கதிர்கள் உள்ளிட்ட “எதிர்கால போர்க்களங்களில் CCP ஐத் தடுக்க” புதிய தொழில்நுட்பங்களுக்கான நிதியுதவியை அதிகரித்தல்.
  • “CCP இன் முன்கண்டிராத அணுசக்தி கட்டமைப்பை எதிர்ப்பதற்கு” அமெரிக்க அணுசக்தி படைகளின் பயன்படுத்தக்கூடிய திறனை விரிவுபடுத்துதல்.
  • அவசரகால மற்றும் பல வருட கொள்முதல் அதிகாரங்களுக்கு தகுதியான ஆயுதங்களின் பட்டியலை விரிவுபடுத்துதல்.
  • உக்ரைனுக்கு வெடிமருந்துகளை வழங்குவதையும் நிரப்புவதையும் விரைவுபடுத்த கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட திட்டத்தில் இஸ்ரேல் மற்றும் தைவானைச் சேர்த்தல்.

கூடுதல் போர் விமானங்கள், ஏவுகணைகளைச் சுடும் ட்ரோன்கள், மேலும் ஏழு “C-130J போக்குவரத்து விமானங்கள், புதிய போர் மண்டலங்களுக்கு துருப்புக்கள், டாங்கிகள் மற்றும் பீரங்கிகளை விரைவாக கொண்டு சென்று நிலை எடுக்க பயன்படுத்துவதற்கு,” மேலும் இராணுவ ஹெலிகாப்டர்கள், கடற்படை போர்க்கப்பல்களுக்கு பில்லியன் டாலர்களை பிரதிநிதிகள் சபை அறிக்கையின் தொகுப்பு மேற்கோளிட்டுள்ளது. எதிர்கால போட்டியாளர்களுக்கு (ரஷ்யா, சீனா அல்லது மற்றொரு பெரிய சக்திக்கு)” எதிரான போருக்காக பீரங்கிகள், டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களின் மறுவடிவமைத்தலையும்” அறிக்கை குறிப்பிடுகிறது.

அணு ஆயுதப் போர் தயார்நிலையின் ஒரு பெரிய மேம்படுத்தல் மற்றும் விரிவாக்கத்தை ஆவணம் பட்டியலிடுகிறது, “அமெரிக்க அணு ஆயுதங்களின் நவீனமயமாக்கல், ஒபாமாவின் கீழ் தொடங்கி டிரம்பின் கீழ் தொடர்ந்தது, இதில் நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணைகள், தரையிலிருந்து ஏவப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் கண்டங்களுக்கு இடையே பறக்கும் திறன் கொண்ட கனரக குண்டுவீச்சு விமானங்களும் அடங்கும்.”

உக்ரைனில் NDAA ஆனது, 2026 ஆம் ஆண்டின் இறுதியில் இராணுவ உதவியை நீட்டிக்க மற்றும் நடப்பு நிதியாண்டில் $300 மில்லியன் மற்றும் அடுத்தது அமெரிக்க ஆயுதக் குவிப்பிலிருந்து நேரடியாகப் பெறாமல், உக்ரைனுக்கான ஆயுதங்களைத் தயாரிப்பதற்காக தொழில்துறைக்கு பணம் கொடுக்கும் திட்டத்திற்கு அங்கீகாரம் அளிக்கிறது. பைடெனின் கூடுதல் செலவின மசோதாவில் உக்ரைனுக்கான 60 பில்லியன் டாலர், வெள்ளை மாளிகை மற்றும் பிரதிநிதிகள் சபையின் குடியரசுக் கட்சியினர் இருதரப்பு ஒப்பந்தத்தை நோக்கிச் செயல்படுவதில், வறுமை மற்றும் ஒடுக்குமுறையிலிருந்து வெளியேறும் அவநம்பிக்கையான தொழிலாளர்களுக்கு புகலிடம் பெறுவதற்கான உரிமையை மேலும் பறிக்க மற்றும் கிட்டத்தட்ட அமெரிக்க-மெக்சிகோ எல்லையை மூடுவதற்கு இழுபறி நிலையிலேயே உள்ளனர்.

எவ்வாறாயினும், தென்மேற்கு எல்லையில் தேசிய காவலர் துருப்புக்களை அனுப்புவதற்கு NDAA “முழு நிதியுதவி” செய்கிறது.

இஸ்ரேல் தொடர்பாக, துல்லியமாக வழிகாட்டும் போர்த்தளவாடங்கள் உட்பட, சியோனிச ஆட்சிக்கு ஆயுத அமைப்புகளை வழங்க பாதுகாப்புத் துறை அதிகாரத்தை நீட்டிக்க NDAA அங்கீகாரம் அளிக்கிறது. மேலும், அமெரிக்க மத்திய ஆணையகமானது இஸ்ரேலுடன் வழக்கமான கூட்டுப் பயிற்சிகளை நடத்துவதற்கும் மற்றும் நேட்டோ விமானம் பயிற்சி திட்டங்களில் பங்கேற்பதற்கும் இஸ்ரேலுக்கு அங்கீகாரம் அளிக்கிறது.

இந்த மசோதா, ராணுவத்தினர்கள் மற்றும் பென்டகன் ஊழியர்களின் ஊதியத்தை, 20 ஆண்டுகளில் மிகப்பெரிய வருடாந்திர அதிகரிப்பாக 5.2 சதவீதம் அதிகரித்துள்ளது, மேலும் வீட்டுவசதி, கல்வி மற்றும் குழந்தை பராமரிப்புக்கான கூடுதல் நன்மை திட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இது ஒரு தரமான வேலை கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களை ஈர்ப்பதற்கான இழிந்த முயற்சியாக உள்ளது, அதே சமயம் அமெரிக்காவில் உள்ள 1 சதவீதத்தினரின் கைகளில் செல்வச் செறிவு பெருகி அது இப்போது 60 சதவீத நடுத்தர மக்களிடம் உள்ள செல்வத்தை மிஞ்சும் வகையில் புதிய சாதனைகளை எட்டியுள்ளது.

பைடெனை பதவி நீக்கம் செய்வதற்கான குடியரசுக் கட்சியின் நகர்வுகள் மற்றும் ட்ரம்ப்புக்கான அதன் ஆதரவு ஆகியவை, மூன்றாம் உலகப் போருக்கான வாஷிங்டனின் தயாரிப்புகளை முன்னெடுப்பதற்கு, குடியரசுக் கட்சியினருடன் இணைந்து வெள்ளை மாளிகை மற்றும் ஜனநாயகக் கட்சியினர் செயற்படுவதை தடுக்கவில்லை.

இந்த பிற்போக்குத்தனம் மற்றும் போர் வெறித்தனமான காட்சியானது, ஆளும் வர்க்கத்தின் எந்தவொரு பிரிவினருக்கும் அல்லது அதன் அரசியல் கட்சிகளுக்கு முறையீடுகள் செய்வதன் மூலம் போர், இனப்படுகொலை மற்றும் பாசிசத்தின் ஆபத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்ற அமெரிக்காவின் ஜனநாயக-சார்பு ஜனநாயக சோசலிஸ்டுகளால் ஊக்குவிக்கப்படும் அனைத்து முயற்சிகளின் பயனற்ற தன்மையையும் எடுத்துக்காட்டுகிறது. தேசிய மற்றும் சர்வதேச அளவில் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி மற்றும் ஒரு வெகுஜன, பூகோள போர்-எதிர்ப்பு இயக்கத்தின் எழுச்சிக்கான அவர்களின் பதில், போர் மற்றும் அடக்குமுறையை இரட்டிப்பாக்குவதாகும்.

முதலாளித்துவம் அதன் காலடியில் அழுகிக் கொண்டிருக்கிறது. அதன் மரண நெருக்கடி இரண்டு வழிகளில் ஒன்றின் மூலம் மட்டுமே தீர்க்கப்பட முடியும்: காட்டுமிராண்டித்தனம் அல்லது சோசலிசம். போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டம் தொழிலாள வர்க்கத்தில் வேரூன்றி, இலாப அமைப்புமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்து சோசலிசத்தை ஸ்தாபிக்க ஒரு சுயாதீனமான, சர்வதேச இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும்.