இலங்கை சோ.ச.க. அதன் உறுப்பினர்கள் மீதான அரசாங்க சார்பு குண்டர்களின் தாக்குதலுக்கு எதிராக முன்னெடுக்கும் பிரச்சாரத்திற்கு ஆதரவு பெருகிவருகின்றது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), அதன் இரண்டு உறுப்பினர்கள் மீது இலங்கை அரசாங்கத்துடன் தொடர்புடைய குண்டர்களால் நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலுக்கு எதிரான அதன் பிரச்சாரத்திற்கு உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் அவர்களது அமைப்புகளிடமிருந்து வலுவான ஆதரவைப் பெற்று வருகிறது.

நவம்பர் 30 அன்று மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பின் வாயிலில் கட்சி பிரச்சாரத்தின் போது இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றன. ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) இணைந்துள்ளது பொதுஜன முற்போக்கு ஊழியர் சங்கத்தின் (PPSS) பல்கலைக்கழகக் கிளையின் தலைவரும் செயலாளருமான இந்திக்க பெரேரா மற்றும் சுரங்க பியவர்தன ஆகியோரோ தெஹின் வசந்த மற்றும் லக்ஷ்மன் பெர்னாண்டோவையும் வன்முறையாகத் தாக்கினர்.

தேஹின் வசந்த

சோசலிச சமத்துவக் கட்சி “சுதந்திரமாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான எங்கள் கட்சியின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முன்வருமாறு இலங்கையிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு” வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அழைப்பின் பேரில் இதுவரை எங்களுக்கு கிடைத்த சில எதிர்ப்புக் குறிப்புகளை கீழே வெளியிடுகிறோம்.

முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் இருந்து போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர்:

அன்பான இலங்கை தோழர்களே,

முன்னாள் சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் (YGBL) அமைப்பினராகிய நாங்கள், உங்கள் உறுப்பினர்களின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் மற்றும் சரீரத் தாக்குதலுக்கு எதிராக உங்களுடன் நிற்கிறது. இரண்டு ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. குண்டர்களின் தாக்குதலானது, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் சோசலிச உணர்வை வளர்ப்பதை நிறுத்தும் நோக்கில் சரீர வன்முறையில் ஈடுபடுவதானது, ஆளும் விக்கிரமசிங்க ஆட்சியின் பரிதாபகரமான நிலையைக் காட்டுகிறது.

தாக்குதல் நடத்தியவர்கள் சலுகையின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இருப்பினும், தொழிலாளர் வர்க்கத்தின் அழுத்தம் இல்லாமல் நீதிமன்றம் நிச்சயமாக நியாயமான தீர்ப்பை வழங்காது. இது உலகெங்கிலும் உள்ள நமது தோழர்களின் பாதுகாப்பு குறித்த அழுத்தமான கேள்விகளை எழுப்புகிறது. நமது தோழர்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் ஆரோக்கியத்தின் மீதான இத்தகைய வெட்கக்கேடான தாக்குதல்களுக்கு எதிராக, நம்மைத் தற்காத்துக் கொள்ள தொழிலாள வர்க்கத்தின் ஆதரவைத் தேட வேண்டும்.

தொழிலாள வர்க்கத்திற்கு அதன் சுயாதீன நலன்களைப் பாதுகாக்கும் உறுதியான மற்றும் கொள்கை ரீதியான தலைமை தேவைப்படுவது போல், முதலாளித்துவத்தின் கருத்தியல் ரீதியான மற்றும் உடல் ரீதியான அழுத்தத்தை சமாளிக்கும் வகையில், அந்த தலைமைக்கு தொழிலாள வர்க்கத்தின் ஆதரவு தேவை. தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் தலைமைத்துவத்தின் மீதான அக்கறையின் காரணமாகவே, முதலாளித்துவத்தின் புதிய நெருக்கடிக்கு முகங்கொடுக்க கூடியவாறு இயக்கம் அதன் பணியாளர்களை பாதுகாக்க முடிந்தது என்பதை ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாறு தெளிவாகக் காட்டுகிறது.

தோழர்கள் தேஹின் வசந்த மற்றும் லக்ஷ்மன் பெர்னாண்டோ ஆகியோருக்கு ஏற்பட்ட காயங்களை குறைத்து மதிப்பிடக்கூடாது. காயமடைந்த தோழர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம். இத்தகைய வெட்கக்கேடான மற்றும் அபாயகரமான தாக்குதல்களை நடத்த அரசாங்கங்களும் அவற்றினால் தேர்ந்தெடுக்கப்பட்ட கும்பல்களும் செயற்பட்டு வரும் இச்சமயத்தில், நாம் விழிப்புடன் இருப்பதோடு முதலாளித்துவ கும்பல்களிடமிருந்து மேலும் தாக்குதல்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

ட்ரொட்ஸ்கிச வாழ்த்துக்களுடன்,

YGBL மத்திய குழு உறுப்பினர்

ஆண்ட்ரி ரிட்ஸ்கி


அமெரிக்காவின் நியூ யோர்க்கைச் சேர்ந்த கல்வியாளர் ஹார்வி லிச்ட்மேன்:

நியூயோர்க் நகர பாடசாலை அமைப்பின் இருபத்தி நான்கு வருட கல்வியாளர் என்ற வகையில், இலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பொதுஜன முற்போக்கு ஊழியர் சங்கத்தின் கிளையின் தலைவர் இன்திக பெரேரா மற்றும் செயலாளர் சுரங்க பியவர்தன ஆகியோர், சோசலிச சமத்துவக் கட்சியின் (இலங்கை) இரண்டு உறுப்பினர்கள் மீது மேற்கொண்ட சரீரத் தாக்குதலை நான் கண்டிக்கிறேன். காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிரான, பல கல்வி ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் பங்குபற்றும் வெகுஜன எதிர்ப்புகளின் வெளிச்சத்தில், ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் ஒரு சர்வதேச அக்கறை கொண்ட விஷயம் என்ற உணர்வு எனக்கும், சர்வதேச அளவில் உள்ள தொழிலாளர்களுக்கும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்க்க அழைப்பு விடுக்கின்றது. முற்போக்கிற்கு எதிரானதாக உள்ள இந்த குண்டர்கள் தங்கள் அமைப்பின் பெயரைக் கூட இழிவுபடுத்துவதோடு ஊழியர்கள் மற்றும் உழைக்கும் மக்களை ஒன்றிணைப்பதற்கு எதிராக செயல்படுகிறார்கள்.

இந்த சம்பவம், சோசலிச அனைத்துலகவாதத்திற்கான நவீன போராட்டத்தை உள்ளடக்கிய இயக்கமான ட்ரொட்ஸ்கிசத்தின் நூற்றாண்டு விழாவில் பேசுவதற்காக அமெரிக்காவிலிருந்து ஒரு சோசலிச தோழர் பங்குபற்றுவது சம்பந்தமான துண்டுப்பிரசுரத்தை விநியோகிப்பதை நிறுத்தும் முயற்சியாகும். செல்வந்த முதலாளித்துவ வர்க்கம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் சார்பாகச் செயல்படும் சர்வதேச நாணய நிதியம் அனைத்து நாடுகளிலும், குறிப்பாக இலங்கையிலும் தொழிலாள வர்க்கத்தின் மீதான அடக்குமுறை சுரண்டலை திணிப்பதை சர்வதேச அளவில் சோசலிச சமத்துவக் கட்சி எதிர்ப்பதனால் இந்த தாக்குதலுடன் தொடர்புபட்ட அரசியல் குறிக்கோள் வெளிக்காட்டப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட சிக்கன வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி இராஜபக்ஷவின் கொள்கைகளை ஜனாதிபதி விக்கிரமசிங்க அரசாங்கமும் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் எவ்வாறு ஒத்துழைக்கின்றன என்பதற்கு இந்த தாக்குதல் ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இலங்கை தொழிலாளர்களின் வெகுஜன எதிர்ப்புக்கு எதிராக வன்முறைக் குண்டர்களைப் பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் உரிமைகள் மீதான இத்தகைய தாக்குதல்களால் உலகெங்கிலும் உள்ள என்னைப் போன்ற தொழிலாளர்கள் கவலை கொண்டுள்ளனர், ஏனெனில் அவர்கள் பாலஸ்தீனிய மக்களின் வாழ்வு மற்றும் உரிமைகளுக்காக முன்நிற்கின்றனர். வளர்ந்து வரும் வன்முறைகள் மற்றும் போரும் உலகளாவிய நெருக்கடியிலேயே வேரூன்றியுள்ளன என்பது தெளிவாகிறது. முதலாளித்துவமானது எல்லா இடங்களிலும் தொழிலாள வர்க்கத்தையும் மனிதகுலத்தையும் அச்சுறுத்துகிறது.

பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் நலன்களுக்காக பிரச்சாரம் செய்யும் இரண்டு சோ.ச.க. உறுப்பினர்கள் மீது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுமளவுக்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதும், சோ.ச.க. சார்பாக மட்டுமன்றி சோ.ச.க. மற்றும் எல்லா அரசியல் கட்சிகளும் சொல்வதைக் கேட்பதற்கு தொழிலாள வர்க்கத்திற்கு உள்ள அரசியல் உரிமைகளுக்காகவும் அரசாங்கம் குற்றவாளிகளை தண்டிக்கத் தவறியுள்ளமை, தொழிலாள வர்க்கத்தின் உரிமைகள் என்பது அவர்கள் போராடிப் பெற வேண்டிய ஒன்று என்பதற்கான மற்றொரு வெளிப்பாடாக மட்டுமே இருக்கும். இலங்கையிலும், எனது சொந்த நாடான அமெரிக்காவிலும் உள்ள தொழிலாளர்கள், சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டத்தைக் கற்று, சர்வதேச ரீதியாக அந்த சமூக சமத்துவ வேலைத் திட்டத்திற்கான போராட்டத்தில் இணைய வேண்டும்.

உண்மையுடனும் தோழமை மதிப்புடனும்,

ஹார்வி லிச்ட்மேன்

ஜேக்கப் ஜோசப்சன்:

சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினர் மற்றும் முழு சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கும் எதிராக முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் அவர்களின் பாசிச குண்டர்கள் நடத்தும் அனைத்து தாக்குதல்களையும் நான் எதிர்க்கிறேன்.

சோ.ச.க., WSWS.ORG, ICFI, ஐ.வை.எஸ்.எஸ்.இ.க்கு வெற்றி.

ஷனன் ஜோன்ஸ், அமெரிக்காவில் உலக சோசலிச வலைத் தள நிருபர்:

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளர்கள் மீது நவம்பர் 30 அன்று மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் உள்ள மக்கள் முற்போக்கு ஊழியர் சங்க கிளையின் அதிகாரிகளான இந்திக்க பெரேரா, சுரங்க பியவர்தன ஆகியோர் நடத்திய குண்டர் தாக்குதலை நான் கடுமையாக எதிர்க்கிறேன். 25 வருடங்களுக்கும் மேலாக மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியராக கடமையாற்றிய தேஹின் வசந்த, தூண்டப்படாத தாக்குதலில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர் லக்ஷ்மன் பெர்னாண்டோவும் காயமடைந்தார்.

இரண்டு மக்கள் முற்போக்கு ஊழியர் சங்க அதிகாரிகளின் இந்த காட்டுமிராண்டித்தனமான நடத்தை, அனைத்து தொழிலாளர்களாலும் ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலர்களாலும் சாத்தியமான வலுவான வகையில் கண்டிக்கப்பட வேண்டும். தொழிலாளர்கள், மாணவர்கள், புத்திஜீவிகள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒரு உறுதியான பாதுகாவலராக சோசலிச சமத்துவக் கட்சி இலங்கையில் நன்கு அறியப்பட்டிருக்கிறது. சோசலிச சமத்துவக் கட்சியை அச்சுறுத்தி மௌனமாக்கும் முயற்சி முழு தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலாகும், அது வெற்றிபெற அனுமதிக்க முடியாது.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குத் தொடரவும், அதற்கு அனுமதி வழங்கியவர்களின் பெயரைக் குறிப்பிடுமாறும், அம்பலப்படுத்துமாறும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

தொழிலாளர்களுக்கு அன்றி, முதலாளிகளுக்கும் அரசுக்கும் விசுவாசமாக இருக்கும் ஊழல் உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்களின் குண்டர் நடத்தையை அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்கள் நன்கு அறிவார்கள்.

நான் உங்களுக்கு ஆதரவாக நிற்கிறேன்.

ஷனன் ஜோன்ஸ்

சோ.ச.க. (அமெரிக்கா)

துருக்கியைச் சேர்ந்த கெமல் உல்கர்:

சமீபத்தில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலுக்கு எனது ஆழ்ந்த திகைப்பையும் சீற்றத்தையும் தெரிவிக்கவே எழுதுகிறேன்.

சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களான தேஹின் வசந்த, லக்ஷ்மன் பெர்னாண்டோ ஆகியோரை கொடூரமான முறையில் தாக்கிய பொதுஜன முற்போக்கு ஊழியர் சங்கத்தின் (PPSS) தலைவர்களான இந்திக்க பெரேரா மற்றும் சுரங்க பியவர்தன சம்பந்தப்பட்ட தாக்குதலால் நான் திகைப்புற்றேன்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நான் கடுமையாகக் கோருகிறேன். கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியான ஒன்றுகூடல் உரிமை எந்தவொரு ஜனநாயக சமுதாயத்திற்கும் இன்றியமையாததுடன் இந்த உரிமைகளை மீறும் எந்தவொரு முயற்சியும் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டும்.

கெமல் அல்கர்

(துருக்கி)

* * *

எதிர்ப்புக் கடிதங்கள் பின்வரும் முகவரிகளுக்கு அனுப்பப்பட வேண்டும் (பிரதிகள் சோசலிச சமத்துவக் கட்சியின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்: wswscmb@sltnet.lk)

1. சிரேஷ்ட பேராசிரியர் என்.டி. குன்வதேன, மொரட்டுவ பல்கலைக்கழக உபவேந்தர்

மின்னஞ்சல்: vc@uom.lk அல்லது ndg@uom.lk

2. சட்ட மா அதிபர், திரு. சஞ்சய் ராஜரத்தினம்

மின்னஞ்சல்: agdurgentmotions@gmail.com

Loading