மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
மத்திய கிழக்கு முழுவதும் அமெரிக்க-இஸ்ரேலிய வெறித்தனத்தின் சமீபத்திய விரிவாக்கத்தில், கடந்த வியாழன், ஈராக் தலைநகர் பாக்தாத் மீது அமெரிக்கா சட்டவிரோத ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
பென்டகன் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் பாட் ரைடர், அமெரிக்கா தனது இலக்காக அடையாளம் காணப்பட்ட முஷ்டாக் ஜவாத் காசிம் அல்-ஜவாரி என்பவரை கொன்றதாக உறுதிப்படுத்தினார். அல்-ஜவாரி, ஈரான் ஆதரவு ஹரகத் ஹெஸ்புல்லா அல்-நுஜாபா போராளிகளின் தலைவர் என்றும், இந்த தாக்குதலில், ஈராக் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதாகவும், ஐந்து பேர் காயமடைந்ததாகவும் ஈராக்கிய மக்கள் அணிதிரட்டல் படைகள் கூறியது.
ஈராக்கிற்குள் தாக்குதல்களை நடத்துவதற்கு அமெரிக்காவிற்கு எந்த உத்தரவும் இல்லை என்பதை தெளிவுபடுத்தி, ஈராக்கிய அதிகாரிகள் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர். எனவே, இந்த தாக்குதல், ஈராக்கிய இறையாண்மையை மீறுவதாகவும், சர்வதேச சட்டத்தை மீறிய ஆக்கிரமிப்புச் செயலாகவும் அமைகிறது.
2003 இல், அமெரிக்கா சட்டவிரோதமாக ஈராக்கை ஆக்கிரமித்து கைப்பற்றியது. மேலும், அமெரிக்காவின் பினாமிப் படைகள், ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹுசைனை 2006 இல் தூக்கிலிட்டதைத் தொடர்ந்து, சர்வதேச மன்னிப்புச்சபை “நியாயமற்ற விசாரணை” என்று இதனை அழைத்தது.
ஈராக்கிற்குள் நிலைகொண்டுள்ள 2,500 அதன் துருப்புக்களை அமெரிக்கா பராமரித்து வருகிறது. ஆனால் ஈராக் அரசாங்கம், நாட்டிற்குள் இராணுவத் தாக்குதல்களை நடத்துவதற்கு அமெரிக்காவிற்கு அங்கீகாரம் இல்லை என்று வலியுறுத்துகிறது.
ஈராக்கின் இராணுவ தலைமையகம் மீதான “அப்பட்டமான தாக்குதலுக்கு” ஈராக்கின் வெளியுறவு அமைச்சகம் “கடும் கண்டனம்” தெரிவித்து அறிக்கை விட்டுள்ளது.
“ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதியுடன் இணைக்கப்பட்ட மற்றும் அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட பாதுகாப்பு அமைப்பு மீதான தாக்குதல் ஒரு ஆபத்தான விரிவாக்கமாகும். உறுதியான நிலைப்பாட்டை எடுக்க ஈராக் தனது உரிமையை கொண்டுள்ளது மற்றும் அதன் பிரதேசத்திற்கும் அதன் பாதுகாப்புப் படைகளுக்கும் தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் எவரையும் தடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் உறுதிசெய்கிறோம்” என்று அந்த அறிக்கை கூறுகிறது.
ஒரு ஈராக்கிய அதிகாரி “இந்த தாக்குதல், ஈராக்கின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை அப்பட்டமாக மீறுகிறது” என்றும், “பயங்கரவாதச் செயலிலிருந்து எந்த வகையிலும் இது வேறுபட்டதல்ல” என்றும் கூறினார்.
அதே நேரம், “இந்த தாக்குதல் தற்காப்புக்காக நடத்தப்பட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் ரைடர் அபத்தமான முறையில் கூறினார்.
ஈராக்கில் நடந்த தாக்குதலுக்கு அமெரிக்காவின் பொறுப்பை ரைடர் ஒப்புக்கொண்ட அதே நாளில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ஈராக்கில் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் மேஜர் ஜெனரல் காசிம் சுலைமானியின் கெர்மான் நினைவிடத்தில் 84 பேர் கொல்லப்பட்ட புதன்கிழமை குண்டுவெடிப்புக்கு, இஸ்லாமிய அரசு சுனி பயங்கரவாதக் குழு பொறுப்பேற்றுள்ளது.
இந்தத் தாக்குதல்கள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கனின் ஒரு வார காலப் பயணத்திற்கான களத்தை அமைத்துள்ளது, இதில் இஸ்ரேலுக்கான முக்கிய விஜயமும் அடங்கும்.
கடந்த மூன்று மாதங்களில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பிளிங்கன் மேற்கொள்ளும் நான்காவது பயணம் இதுவாகும் என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை தெரிவித்தார். “துருக்கி, கிரீஸ், ஜோர்டான், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, இஸ்ரேல், மேற்குக் கரை மற்றும் எகிப்து” ஆகிய நாடுகளுக்கு பிளிங்கன் விஜயம் செய்வார்.
பாலஸ்தீன மக்களை வெளியேற்றுவதன் மூலம் காஸாவை இனச்சுத்திகரிப்பு செய்ய இஸ்ரேலிய அதிகாரிகள் வெளிப்படையாக வாதிடுகையில் இந்த நகர்வுகள் வந்துள்ளன.
செவ்வாயன்று, இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு மந்திரி இடாமர் பென் க்விர், பாலஸ்தீனிய மக்களை காஸாவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். “காஸாவில் இருந்து நூறாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர வைப்பதன் மூலம், அப்பகுதிக்கு குடியேற்றவாசிகள் தாயகம் திரும்பவும் பாதுகாப்பாக வாழவும் [இஸ்ரேல் பாதுகாப்புப் படை] படையினர்களைப் பாதுகாக்கவும் அனுமதிக்கும்” என்று ஒரு ட்விட்டர் பதிவில் பென் க்விர் அறிவித்தார்.
இவரது இந்தப் பதிவு, கடந்த ஞாயிற்றுக்கிழமை “காஸா பகுதியில் குடியேற்றத்தை ஊக்குவிப்பதை” மேற்கொள்ள வேண்டும் என்று இஸ்ரேலிய நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து வந்துள்ளது. “காஸாவில் 2 மில்லியன் அரேபியர்கள் இல்லாமல், 100,000ம் அல்லது 200,000ம் அரேபியர்கள் இருந்தால், அடுத்த நாள் முழு விவாதமும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
திங்களன்று பிரிட்டனுடைய LBC தொலைக்காட்சி பேச்சு நிகழ்ச்சியின் ஒரு நேர்காணலில், இங்கிலாந்திற்கான இஸ்ரேலிய தூதர் டிசிபி ஹோடோவெலி, இஸ்ரேல் “காஸா பகுதி முழுவதையும் அழிக்கும்” நோக்கத்துடன் இருக்கிறது என்பதை மறுக்க, மறுத்துவிட்டார்.
“காஸாவில் சுரங்கப்பாதைகள் கொண்ட ஒரு நிலத்தடி நகரம் இருப்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன், மேலும் இந்த நிலத்தடி நகரத்தை அணுக, இந்த பகுதிகள் அழிக்கப்பட வேண்டும், ஒவ்வொரு பள்ளி, ஒவ்வொரு மசூதி, ஒவ்வொரு இரண்டாவது வீட்டிற்கும் சுரங்கப்பாதைகளுக்கு அணுகல் உள்ளது, நிச்சயமாக, வெடிமருந்து அங்கு உள்ளது” என்று அவள் கூறினாள்.
“இது காஸா பகுதி முழுவதையும், அங்குள்ள ஒவ்வொரு கட்டிடத்தையும் அழிப்பதற்கான ஒரு வாதமா?” என்று LBC தொகுப்பாளர் இயன் டேல் கேட்டார்.
“இதற்கு உங்களிடம் வேறு தீர்வு எதாவது உள்ளதா?” என்று இந்தக் கேள்விக்கு, ஹோடோவெலி பதிலளித்தார்.
ஸ்மோட்ரிச் மற்றும் கிவிர் ஆகியோரின் அறிக்கைகளில் இருந்து தங்களைத் தூர விலக்கிக் கொள்ள முயன்ற அமெரிக்க அதிகாரிகள், அவர்களது அறிக்கைகள் இஸ்ரேலிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று பொய்யாகக் கூறுகின்றனர்.
இந்த கூற்றுக்கள் பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவின் பல பொது அறிக்கைகளுக்கு முரணாக இருப்பதுடன், தனது பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில், “இதுதான் நாம் செல்லும் திசை என்று குடியேற்றவாசிகளின் தன்னார்வ குடியேற்றம்” குறித்து அவர் கூறினார்.
தனிப்பட்ட முறையில், நெதன்யாகு எகிப்து மற்றும் கொங்கோ ஜனநாயகக் குடியரசு உள்ளிட்ட நாடுகளில், காஸாவின் மக்கள்தொகையை தங்கள் பகுதிக்கு மாற்றுவதை ஏற்கும்படி வற்புறுத்தி வருகிறார்.
புதன் கிழமையன்று, டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் வெளியிட்டுள்ள செய்தியில், “காஸாவில் இருந்து பாலஸ்தீனியர்கள் தானாக முன்வந்து மீள்குடியேறுவது மெதுவாக அரசாங்கத்தின் முக்கிய உத்தியோகபூர்வ கொள்கையாக மாறி வருகிறது. இது தொடர்பாக இஸ்ரேல் பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும்” மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வியாழக்கிழமை வெள்ளை மாளிகையின் தினசரி மாநாட்டில், வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி, இஸ்ரேல் திட்டமிட்ட போர்க்குற்றங்களில் ஈடுபடுவதாக பல ஐ.நா அதிகாரிகளின் கூற்றுகளுக்கு பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.
“இஸ்ரேல் போர் விதிகளை மதிக்கிறதா இல்லையா என்பதை மதிப்பிடுவதற்கு இன்றுவரை ஏதேனும் நடவடிக்கை எடுத்தீர்களா?” என்று ஒரு நிருபர் அவரிடம் கேட்டார்.
இதற்கு, பதிலளித்த கிர்பி, “எங்கள் கூட்டாளியான இஸ்ரேல், சர்வதேச சட்டத்திற்கு இணங்குவதை பகுப்பாய்வு செய்வதற்காக, அமெரிக்க அரசாங்கம் மேற்கொண்ட எந்த வகையான முறையான மதிப்பீட்டையும் நான் அறிந்திருக்கவில்லை” என்று கூறினார்.
அந்த அறிக்கையை வெளியிட்ட பிறகு கிர்பி, “நாங்கள் வேறு அணுகுமுறையை எடுக்க வேண்டும் என்று எங்களை நம்ப வைக்கும் எதையும் நாங்கள் காணவில்லை என்பதை நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.
இஸ்ரேல் கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களை நடத்தியதாக டிசம்பர் 12 அன்று ஜனாதிபதி ஜோ பைடென் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளிவந்துள்ளது - வரையறையின்படி இது போர்ச் சட்டங்களை மீறுவதாகும், இது பொதுமக்களின் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.
கிர்பியின் அறிக்கை, மக்கள் அடர்த்தியாக உள்ள பகுதிகளில் திட்டமிட்ட குண்டுவீச்சின் மூலம், கிட்டத்தட்ட 30,000ம் மக்களைக் கொன்று குவித்தது உட்பட, 1.9 மில்லியன் மக்கள் பெருமளவில் இடம்பெயர்ந்தமை, காஸாவில் உள்ள மக்களை வேண்டுமென்றே பாரிய பட்டினிக்குள் தள்ளுவது, மற்றும் வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் மதக் கட்டிடங்கள் மீது திட்டமிட்டு இலக்கு வைப்பது வரை, இஸ்ரேலின் அனைத்து போர்க்குற்றங்களுக்கும் ஒப்புதல் அளிக்கிறது.
வியாழனன்று, கல்வி அமைச்சின் கொள்கை அதிகாரியான தாரிக் ஹபாஷ், காஸா மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் போரை செயல்படுத்துவதைக் கண்டித்து, பைடென் நிர்வாகத்தில் இருந்து தான் ராஜினாமா செய்வதாக அறிவித்து ஒரு பகிரங்க கடிதத்தை வெளியிட்டார்.
அந்தக் கடிதம், “கடந்த மூன்று மாதங்களில், காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான கண்மூடித்தனமான வன்முறைக்கு எங்கள் அரசாங்கம் பங்களித்துள்ளது - 22,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர், ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் உயிருடன் புதைக்கப்பட்டனர் மற்றும் பெரும்பான்மையானவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்தனர்” என்று குறிப்பிடுகிறது.
அத்தோடு, “நமது சொந்த வெளியுறவுத்துறை, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல மனிதாபிமான அரசு சாரா அமைப்புகளால் அடிக்கடி பயன்படுத்தப்படும் பாலஸ்தீனிய இறப்பு எண்ணிக்கையின் நேர்மை குறித்து ஜனாதிபதி பகிரங்கமாக கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள நமது பிரதிநிதிகள், போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் வீட்டோ தீர்மானங்கள் உட்பட, சர்வதேச சமூகத்தின் மிகப்பெரும்பான்மைக்கு எதிராக பலமுறை வாக்களித்துள்ளனர். நிர்வாகத் தலைவர்கள் பாலஸ்தீனியர்களை முறையாக மனிதநேயமற்றவர்களாக மாற்றும் சரிபார்க்கப்படாத கூற்றுக்களை மீண்டும் மீண்டும் கூறியுள்ளனர்” என்று அக்கடிதத்தில் தாரிக் ஹபாஷ் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வியாழன், பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனமானது, காஸா பகுதி முழுவதும் பெரும் பஞ்சத்தின் மத்தியில் நோய் பரவி வருவதாக எச்சரித்துள்ளது. காஸாவில் 180,000 க்கும் அதிகமானோர் மேல் சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 136,000 க்கும் அதிகமான வயிற்றுப்போக்கு சம்பவங்களில், பாதிக்கும் மேற்பட்டோர் ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகள் என்று பணி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேநாள், காஸாவில் இருந்து மூன்றாவது நாடுகளுக்கு பொதுமக்களை மாற்றும் திட்டம் குறித்து இஸ்ரேலிய உயர்மட்ட அதிகாரிகளின் அறிக்கைகளால் தான் மிகவும் கவலையடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் கூறினார். காஸாவில் 85 வீதமான மக்கள் ஏற்கனவே உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார். அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப உரிமை உண்டு. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்குள் பாதுகாக்கப்பட்ட நபர்களை வலுக்கட்டாயமாக மாற்றுவதையோ அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் இருந்து நாடு கடத்துவதையோ சர்வதேச சட்டம் தடை செய்கிறது.