மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
அரசு பழிவாங்கும் ஒரு மூர்க்கமான நடவடிக்கையில், விக்கிலீக்ஸிற்கு இரகசியங்களை வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஜோசுவா ஷூல்ட்க்கு உளவுத்துறை சட்டம் மற்றும் பிற “தேசிய பாதுகாப்பு” குற்றங்களுக்காக வியாழனன்று 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 35 வயதான அவர் 2022 ஆம் ஆண்டில் விக்கிலீக்ஸிற்கு ஆவணங்களை அனுப்பியதற்காகவும், மத்திய புலனாய்வு அமைப்பின் சைபர் ஊடுருவல் மற்றும் உலகளாவிய உளவு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியதற்காகவும் தண்டிக்கப்பட்டார்.
ஷூல்ட் வழக்கானது தகவல் தெரிவிப்பவர்கள் மற்றும் செய்தியியல் ஊடகவியலாளர்கள் மீதான ஒரு நீடித்த போரை ஆழப்படுத்துவதைக் குறிக்கின்றது. கணினி நிபுணர் மீது திறம்பட வழக்குத் தொடுத்து விசாரிக்கப்பட்டு, குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு ஒரு பயங்கரவாதியாக தண்டிக்கப்பட்டுள்ளார். அவரது சிறைத்தண்டனை மிகவும் கொடூரமான குற்றங்களுக்காக தண்டிக்கப்படும் தனிநபர்களுக்கு வழங்கப்படும் சிறைத்தண்டனையுடன் ஒப்பிடத்தக்கதாகும்.
பழிவாங்கும் நோக்கங்கள் ஒருபுறம் இருக்க, ஷூல்ட் ஒரு உதாரணமாக ஆக்கப்பட்டுள்ளார். காஸாவில் அமெரிக்க-இஸ்ரேலிய இனப்படுகொலையானது, பரந்த போர்களுக்கான தயாரிப்புகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான ஒடுக்குமுறைக்கு இடையே, இராணுவம் மற்றும் உளவுத்துறை முகமைகளின் குற்றங்களை அம்பலப்படுத்தும் யாரொருவரும், சவூதி அரேபியா அல்லது எந்தவொரு அமெரிக்க ஆதரவிலான சர்வாதிகாரத்தில் நடத்தப்படுவதைப் போலவே கையாளப்படுவார்கள் என்பதற்கான ஒரு செய்தியே அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகும்.
முதலாவதாக, பிரிட்டனில் இருந்து அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்படும் உடனடி அச்சுறுத்தலை முகங்கொடுக்கும் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஜை அமெரிக்க அரசாங்கம் என்ன செய்ய உத்தேசித்துள்ளது என்பதற்கான ஒரு சமிக்கையாக இந்தத் தண்டனை உள்ளது.
தான் நிரபராதி என்று நிலைநாட்டும் ஷூல்ட்டிற்கு எதிரான வழக்கின் பலவீனமான தன்மையை எடுத்துக் கொண்டால், இந்த தண்டனை இன்னும் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. 2020 இல் ஷூல்ட்டின் முதல் விசாரணையில் உளவுச் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு குற்றச்சாட்டுகள் குறித்து ஒரு ஜூரி உடன்பாட்டை எட்ட முடியாமல் போனதற்கு அவரது குற்றம் குறித்து போதுமான சந்தேகம் இருந்தது, இதன் விளைவாக ஒரு தவறான விசாரணை நடத்தப்பட்டது.
சிஐஏ ஆனது தகவல் திருட்டுக்கு ஒரு பலிகடாவைக் கண்டுபிடிக்க அரசாங்கம் பெரும்பிரயத்தனம் செய்து கொண்டிருந்ததால், தான் பொருத்தப்பட்டதாக ஷூல்ட் கூறினார். ஒரு அதிருப்தியடைந்த மற்றும் தனித்துவமான முன்னாள் சிஐஏ ஊழியராக, மார்ச் 2017 இல் விக்கிலீக்ஸ் ஆவணங்களை வெளியிடத் தொடங்கிய உடனேயே அவர் ஒரு சந்தேகத்திற்குரியவராக அடையாளம் காணப்பட்டார்.
இதையடுத்து, சிறார் ஆபாசப் படங்களை வைத்திருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவற்றின் உண்மைத்தன்மை எதுவாக இருந்தாலும், அந்தக் குற்றச்சாட்டுக்கள் ஷூல்ட்டை சட்ட அமைப்பில் சிக்க வைப்பதை தெளிவாக நோக்கமாகக் கொண்டிருந்தன, ஏனெனில் அரசாங்கம் ஒரு வழக்கை உருவாக்க முயன்றது. சிஐஏ கசிவு தொடர்பாக ஷூல்ட்க்கு எதிரான குற்றச்சாட்டைத் தொகுக்க நீதித்துறைக்கு ஓராண்டிற்கும் மேலாக பிடித்தது.
FBI யும் அரசாங்கமும் ஷூல்ட்டின் குற்றத்தை முடிவு செய்து அங்கிருந்து பின்னோக்கி வேலை செய்தன என்று காலஅட்டவணை வலுவாக அறிவுறுத்துகிறது. சிஐஏ சைபர் ஊடுருவல் கருவிகள் குறித்து அது வெளியிட்ட தகவல்கள் பல முன்னாள் அரசாங்க ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களிடையே சுற்றுக்கு விடப்பட்டிருந்ததாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டது.
பிரதான பத்திரிகைகளில் ஷூல்ட்க்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்த மட்டுப்படுத்தப்பட்ட செய்திகளானது, அமெரிக்க அதிகாரிகளின் அறிக்கைகளை விமர்சனமின்றி மேற்கோளிட்டுள்ளன, டிஜிட்டல் முறையில் கசிவு வெளியிடலானது பேர்ள் துறைமுகத்தின் (Pearl Harbor) திடீர்த் தாக்குதலுக்குச் சமமானதாகவும், “தேசிய பாதுகாப்புக்கு” முன்னொருபோதும் இல்லாத ஒரு அடி என்றும் விவரித்தன. கசிவு வெளியிடல்களின் உள்ளடக்கம் பற்றி மிகக் குறைவாகவே எழுதப்பட்டுள்ளது.
விக்கிலீக்ஸால் “வால்ட் 7” (“Vault 7”) என்று பெயரிடப்பட்ட அந்த ஆவணமானது, முன்னொருபோதும் இல்லாத அளவில் சைபர்- ஊடுருவல் மற்றும் கறைபடிந்த தந்திரங்கள் சம்பந்தப்பட்ட ஓர் உலகளாவிய சிஐஏ நடவடிக்கையை சுட்டிக்காட்டியது. வெளிப்படுத்தப்பட்டவைகளில், “வால்ட் 7” ஆவணம் பின்வருவனவற்றை வெளியிட்டது:
- சி.ஐ.ஏ உலகின் மிகப்பெரிய மால்வேர் (malware) வழங்குபவராக இருந்தது. இது கிட்டத்தட்ட அனைத்து கணணி இயக்க செயற்பாடுகளையும் குறிவைத்து வைரஸ்கள் மற்றும் ஊடுருவல் கருவிகளை உருவாக்கியது.
- உளவு நோக்கங்களுக்காக ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் மற்றும் பிற வீட்டு சாதனங்களை ஊடுவச் செய்ய உதவும் திட்டங்களை சிஐஏ உருவாக்கியது.
- ஸ்மார்ட்போன்களை நேரடியாக ஊடுருவல் செய்வதன் மூலம், சிஐஏ மறைகுறியாக்கப்பட்ட செய்தியிடல் பயன்பாடுகளை (encrypted messaging apps) சமாளிக்க முடியும்.
- இந்த நிறுவனம் புதிய மாடல் கார்களை இயக்கும் கணினி அமைப்புகளை தொலைவிலிருந்து கட்டுப்பாட்டில் எடுக்கும் திறன்களை வளர்க்க முயன்றது. சரீரரீதியான தீங்கு விளைவிப்பதேதான் கற்பனை செய்யக்கூடிய ஒரே நோக்கமாக இருக்கும்.
- சிஐஏ ஆனது தனது சொந்த கெடு நோக்கான சைபர் ஊடுருவல் நடவடிக்கைகளுக்கு எதிரிகளைக் காரணம் காட்டி டிஜிட்டல் “ஆதாரங்களை” உருவாக்குவதற்கான திறன்களை அபிவிருத்தி செய்திருந்தது, இது சைபர் தாக்குதல்கள் என்று கூறப்படுவதற்கு மற்றைய நாடுகளைக் குற்றஞ்சாட்டும் “கறுப்பு பிரச்சார” நடவடிக்கைகளில் பயனுள்ளதாக இருந்தது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சைபர் ஊடுருவல் தொடர்பாக ரஷ்யா மற்றும் சீனா போன்ற பிற நாடுகள் செய்வதாக அமெரிக்க அரசாங்கம் குற்றஞ்சாட்டிய ஒவ்வொன்றையும், சிஐஏ மிகவும் விரிவாகவும் வெற்றிகரமாகவும் செய்துள்ளது.
வால்ட் 7 ஆவண வெளியீடு குறித்த விக்கிலீக்ஸ் அறிவிப்பு பின்வருமாறு விவரித்தது, “விக்கிலீக்ஸிற்கான ஒரு அறிக்கையில், சிஐஏ இன் சைபர் ஊடுருவல் தகைமைகள் அதன் கட்டாய அதிகாரங்களை மீறுகின்றனவா மற்றும் அந்த முகமையை பொதுமக்கள் மேற்பார்வையிடும் கேள்விகள் உட்பட அவசரமாக பகிரங்கமாக விவாதிக்கப்பட வேண்டிய கொள்கை கேள்விகளை அந்த ஆதாரம் விவரிக்கிறது. சைபர் ஆயுதங்களின் பாதுகாப்பு, உருவாக்கம், பயன்பாடு, பரவல் மற்றும் ஜனநாயக கட்டுப்பாடு குறித்து ஒரு பொது விவாதத்தைத் தொடங்க ஆதாரம் விரும்புகிறது.”
அதற்கு கிடைத்த பதில் அதிருப்தியாக இருந்தது. ஆரம்ப வெளியீட்டுக்கு ஒரு மாதத்திற்குப் பின்னர், ஏப்ரல் 2017 இல், அப்போதைய சிஐஏ இயக்குனர் மைக் பொம்பியோ ஒரு உரையை வழங்கினார், அதில் அவர் அசான்ஜ் மற்றும் விக்கிலீக்ஸ் பணியாளர்களை “அரக்கர்கள்” மற்றும் “எதிரிகள்” என்று கண்டனம் செய்ததுடன், அவர்கள் முதலாவது அரசியலமைப்பு திருத்தமோ அல்லது பிற ஜனநாயக உரிமைகளோ இல்லாத ஒரு “அரசு-சாரா விரோத உளவுத்துறை முகமையாக” நடத்தப்படுவார்கள் என்று அறிவித்தார்.
ஒரு 2021 யாகூ நியூஸ் (Yahoo News) ஆய்வானது நடைமுறையில் இதன் அர்த்தம் என்ன என்பதை பின்வருவனவற்றிலிருந்து வெளிப்படுத்துகிறது. 30 க்கும் அதிகமான அமெரிக்க அதிகாரிகளின் கருத்துக்களின் அடிப்படையில், 2017 இல், பொம்பியோ, சிஐஏ மற்றும் ஜனாதிபதி உட்பட ட்ரம்ப் நிர்வாகத்தின் ஏனைய பிரமுகர்கள், அசான்ஜ் ஒரு அரசியல் அகதியாக இருந்த ஈக்குவடோரின் இலண்டன் தூதரகத்தில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்படுவது அல்லது அவரைப் படுகொலை செய்வது குறித்து விவாதித்திருந்தனர் என்பதை அது உறுதிப்படுத்தியது. இது வெறும் பேச்சு அல்ல. தூதரகத்திற்கு பாதுகாப்பு வழங்கிய மற்றும் அசான்ஜின் பௌதீக சூழலைக் கட்டுப்படுத்திய நிறுவனமான யுசி குளோபல் (UC Global), சிஐஏவுக்காக இரகசியமாக வேலை செய்து வந்தது.
அந்த நீதிக்குப் புறம்பான திட்டங்களானது தோல்வியுற்று அல்லது கைவிடப்பட்ட பின்னர்தான் அமெரிக்க அரசாங்கம் அசான்ஜ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அவர் உளவுச் சட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் மற்றும் ஒப்படைக்கப்பட்டால் 175 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொள்வார். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க போர் குற்றங்கள் மற்றும் வெளியுறவுத்துறையின் உலகளாவிய சதித்திட்டங்களை அம்பலப்படுத்திய 2010 மற்றும் 2011 இன் தனித்தனி விக்கிலீக்ஸ் வெளியீடுகள் சம்பந்தப்பட்டுள்ள அதேவேளையில், அசான்ஜின் தீவிரப்படுத்தப்பட்ட துன்புறுத்தலுக்கான பிரதான உந்துதல் வால்ட் 7 ஆவணம் மற்றும் மூர்க்கமான சிஐஏ பதிலடியாக இருந்தது என்று அசான்ஜும் விக்கிலீக்ஸும் குறிப்பிட்டிருக்கின்றன.
வியாழனன்று நடந்த தண்டனை விசாரணையில், அரசாங்க வக்கீல்கள் ஷூல்ட்டுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று வாதிட்டனர். “இயலாமைக்கு ஒரு தேவை உள்ளது” என்று ஒருவர் கூறியதாக கூறப்படுகிறது. “பயங்கரவாதத்தை மேம்படுத்தும்” விதிகளின் அடிப்படையில் அவரது தண்டனையை நீட்டிக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர்.
ஷூல்ட் ஏற்கனவே ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக காட்டுமிராண்டித்தனமான நிலைமைகளில் வைக்கப்பட்டுள்ளார். அவர் சிறப்பு நிர்வாக நடவடிக்கைகளின் கீழ் வைக்கப்பட்டுள்ளார், இது கிட்டத்தட்ட முழுமையான தனிமைப்படுத்தல் மற்றும் புலன்கள் இழப்பும் சம்பந்தப்பட்ட ஒரு வகையான தடுப்புக்காவல் ஆகும்.
இந்த வழக்கை விரிவாக உள்ளடக்கிய ஒரு சில வெளியீடுகளில் ஒன்றான இன்னர் சிட்டி பிரஸ் தகவல்படி, இரகசிய செய்தி வெளியீட்டாளர் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர் தண்டனை விசாரணையில் கூறினார்: அதாவது “அமெரிக்க மத்திய அரசாங்கம் என்னை 24/7 மணிநேரமும் தொடர்ந்து துன்புறுத்தும் சத்தத்தை ஏற்படுத்தியும் மற்றும் தனிமைச் சிறையில் அடைத்து வைத்தும் சித்திரவதை செய்கிறது. ஜன்னல் இருட்டாக செய்யப்பட்டுள்ளது. எனக்கு சட்ட நூலகத்திற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டால், நான் தரையில் சிறுநீர் கழிக்க வேண்டும், மலம் கழிக்க வேண்டும். 9 மணி நேரம் அங்கேயே இருப்பேன்.”
ஷூல்ட் மேலும் கூறினார்: “நான் எலிகளின் மலத்துடன் எனது சித்திரவதைக் கூண்டில் அடைக்கப்பட்டுள்ளேன். ஜன்னலுக்கு அருகில் பனிக்கட்டி குவிகிறது. நான் என் கழிப்பறையில் என் துணிகளை துவைக்கிறேன். நான் ஒரு விலங்கைப் போல என் வெறும் கைகளால் சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். அவர்கள் என்னை மனிதனே அல்ல என்பது போல இழிவாகப் பார்க்கிறார்கள்.”
ஒரு மத்தியகால நிலவறை சிறைக்கு ஒத்த இந்த நிலைமைகளானது, அசான்ஜ் ஒப்படைக்கப்பட்டால் அவருக்கும் காத்திருக்கின்றன. விக்கிலீக்ஸ் நிறுவனர் தன்னை துன்புறுத்துபவர்களுக்கு அனுப்பப்படுவதற்காக ஆபத்தான நிலைக்கு அருகில் இருக்கிறார். பிப்ரவரி 20-21 தேதிகளில், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார், அங்கு ஒப்படைப்பு உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான விண்ணப்பம் விசாரிக்கப்படும். தோல்வியுற்றால், பிரிட்டிஷ் சட்ட அமைப்புமுறைக்குள் அசான்ஜின் வழிகள் தீர்ந்துவிடும்.
ஷூல்ட் வழக்கானது மீண்டும் அசான்ஜை குற்றவாளியாக, குண்டர் பாணியில் பின்தொடர்வதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அமெரிக்க அரசாங்கம் மற்றும் அதன் நட்பு நாடுகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியதற்காக இந்த தைரியமான பத்திரிகையாளர் ஒரு குற்றவாளி என்று வேட்டையாடப்படுகிறார். இது ஒபாமா-பைடென் நிர்வாகத்தின் கீழ் தொடங்கியது, ட்ரம்பால் தீவிரப்படுத்தப்பட்டது, மேலும் தற்போதைய பைடெனின் ஜனாதிபதி நிர்வாகம் அசான்ஜின் அழிவை முழுமையாக செய்ய முயன்று வருகிறது.
ஒட்டுமொத்த அரசியல் நிறுவனமும், அவற்றின் தந்திரோபாய பிளவுகள் என்னவாக இருந்தாலும், அவை பூகோளரீதியான போர்த் திட்டத்தை பின்தொடர்கின்ற நிலையிலும், உள்நாட்டில் அதிகரித்து வரும் சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பை முகங்கொடுக்கின்ற நிலையிலும், முன்பினும் அதிகமான எதேச்சதிகாரத்திற்கு அவை பொறுப்பேற்கின்றன என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
அமெரிக்காவில் மட்டும் இல்லாமல், பிரிட்டனிலும் அவரது தாய்நாடான ஆஸ்திரேலியாவிலும் அசான்ஜ் மீதான தாக்குதலின் இருகட்சியினரின் தன்மையானது, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு முறையீடு செய்வதன் மூலமாக அவரது விடுதலையைப் பாதுகாக்கும் எந்த முன்னோக்கின் பயனற்ற தன்மையையும் நிரூபிக்கிறது. அந்த முன்னோக்கு முயற்சி செய்யப்பட்டு தோல்வியடைந்துள்ளது.
அசான்ஜின் பாதுகாப்பதற்கு தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான போராட்டமே மாற்றீடாகும். அது அவசியமானது மட்டுமல்ல, சாத்தியமானதும் கூட. உலகெங்கிலும், பெருந்திரளான மக்கள் காஸா இனப்படுகொலை எதிர்ப்பிலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். எங்குமே அளப்பரிய போர்-எதிர்ப்பு மனோநிலை உள்ளது, ஊடக இருட்டடிப்புகளுக்கு இடையிலும், அவரைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு, அசான்ஜ் ஒரு வீரமிக்க நபராக சரியாகவே கருதப்படுகிறார்.
இந்த உணர்வுகளானது அரசாங்கங்கள், அவற்றின் போர்கள் மற்றும் இராணுவவாதம் மற்றும் சர்வாதிகாரத்திற்கு பொறுப்பான முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக, அவரது விடுதலைக்காகப் போராடும் ஒரு இயக்கமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். ஜோசுவா ஷூல்ட் மற்றும் ஏகாதிபத்தியத்தின் குற்றங்களை அம்பலப்படுத்தும் யாரொருவராக இருந்தாலும் அவர்களது விடுதலையையும் மற்றும் ஜூலியான் அசான்ஜின் விடுதலையையும் தொழிலாள வர்க்கம் கோர வேண்டும்.