மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஆலை மூடப்படும் அச்சுறுத்தலுக்கு விடையிறுக்கும் வகையில், டுரினில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்டெல்லாண்டிஸ் மிராஃபியோரி ஆலையில், இத்தாலிய வாகனத் தொழிலாளர்களின் தன்னியல்பான திடீர் வேலைநிறுத்தங்கள் மற்றும் தொடர்ச்சியான எதிர்ப்பு போராட்டங்கள் என்பன மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை நடந்தன. FIOM-CGIL தொழிற்சங்கக் கூட்டத்தின் முடிவில், மிராஃபியோரி மற்றும் Pomigliano d’Arco ஆலைகள் மூடப்படும் அபாயத்தில் இருப்பதாக ஸ்டெல்லாண்டிஸ் தலைமை நிர்வாக அதிகாரியான (CEO) கார்லொஸ் தவாரெஸ் அறிவித்தபோது, புதன்கிழமை இரண்டாவது ஷிப்டில் வெளிநடப்பு தொடங்கியது.
நாடுகடந்த நிறுவனத்தின் அடுத்த கட்டம், வருகின்ற திங்கட்கிழமை “தற்காலிக ஆட்குறைப்பை” நீட்டிப்புடன் மார்ச் 30 வரை, இது நடைமுறையில் இருக்கும். இது 2,260 தொழிலாளர்களை பாதிக்கிறது. தொழிலாளர்கள் ஆட்குறைப்பு ஊதியத்தில் அமர்த்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட ஆலைகள் ஃபியட் 500 ரக காரின் மின்சார மாதிரி மற்றும் உயர்தர மசெராட்டி மாடல்களை உருவாக்குகின்றன.
இவை தற்காலிக நடவடிக்கைகள் அல்ல என்ற அச்சம் மிகவும் நியாயமானது. இந்த நடவடிக்கைகள், பூகோள வாகனத் தொழில்துறை முழுவதும் செயல்படுத்தப்படும் வேலை வெட்டுக்களை துரிதப்படுத்துவதன் ஒரு பகுதியாகும். பிப்ரவரி தொடக்கத்தில், Stellantis ஏற்கனவே அதன் டெட்ராய்ட் தயாரிப்பு வளாக -மேக் ஆலையில் மூன்றாவது ஷிப்டை மூடியது, அங்கும் 2,455 பணிநீக்கங்கள் தற்காலிகமானவை என்ற இதே போன்ற கூற்றுக்கள் உள்ளன. ஓஹியோவில் உள்ள டோலிடோ ஜீப் தயாரிப்பு வளாகத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர், மற்ற நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு இடமாற்றம் மற்றும் வேலையின்மை ஆகியவற்றிற்கு இடையே தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பிரான்சின் ஸ்டெல்லாண்டிஸ் முல்ஹவுஸ் ஆலையும் 600 வேலைகளை குறைக்க திட்டமிட்டுள்ளது.
ஸ்டெல்லாண்டிசின் தலைமை நிர்வாக அதிகாரியான கார்லொஸ் தவாரெஸ், மின்சார வாகனங்களின் (EV) உற்பத்திக்கு மானியம் வழங்க பாரிய ஊக்குவிப்புகளை கோரி, நிறுவனம் செயல்படும் நாடுகளில் உள்ள மாநில மற்றும் தேசிய அரசாங்கங்களை மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதன் மூலம், இந்த நிறுவனம் சீனாவின் வேகமாக வளர்ந்து வரும் வாகனத் துறையுடன் போட்டியிட முடியும்.
சமீபத்திய அறிக்கையில், புதிய மின்சார வாகனங்களின் சந்தைக்கு அதிக நிதியுதவி வழங்காததற்காக இத்தாலிய அரசாங்கத்தை Tavares குற்றம் சாட்டினார். நாட்டில் நிறுவனத்தின் செயல்பாடுகளை குறைக்கும் வகையில் அச்சுறுத்தலை வெளியிட்டார்: “மின்சார வாகனங்கள் முன்னேறுவதை நீங்கள் விரும்பவில்லை என்றால், நீங்கள் மானியங்களை நிறுத்த வேண்டும். இத்தாலிய அரசாங்கம் அதைத்தான் செய்து வருகிறது என்பது வெளிப்படையானது. இத்தாலியில் மின்சார வாகனங்களின் சந்தை மிக மிக சிறியது. இத்தாலிய அரசாங்கம் மின்சார வாகனங்களை வாங்குவதற்கு மானியம் வழங்காததன் நேரடி விளைவு தான் இதுவாகும்“.
மிராஃபியோரியில் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கோபம் உள்ளது. இதுபற்றி, FIOM இன் முகநூல் பக்கத்தில் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், “நாங்கள் ஒரு துளி மட்டுமே, நெடுஞ்சாலைகள், தனிவழிகள் போன்றவற்றைத் தடுக்க வேண்டும். ஆலைக்கு வெளியே வேலைநிறுத்தம் செய்வது போதாது, டிராக்டர்களைப் பாருங்கள் [விவசாயிகளின் போராட்டங்களைக் குறிப்பிடுகிறார்]” என்று குறிப்பிட்டார். மற்றொருவர், “திரு. டவாரெஸ் வந்தவுடன், அவருக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக எல்லாவற்றையும் முடக்க வேண்டும்” என்று பரிந்துரைத்தார்.
பல வேலைகளின் அபாயகரமான தன்மை குறித்து மற்றொரு தொழிலாளி கருத்து தெரிவிக்கையில், “2022 மற்றும் 2023 இல் தொழிலாளர்கள் ஆண்டுக்கு 7-8 வாரங்கள் மட்டுமே வேலை செய்கின்றனர். இதைப் பற்றி யாரும் பேசவில்லை. இவர்கள் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள், அவர்கள் பாகுபாடு காட்டப்படுகிறார்கள். பட்டினியால் சாகாமல் வாழ அவர்களுக்கு உரிமை உண்டு!’' என்று குறிப்பிட்டார்.
ஒரு நேர்காணலில், ஒரு தொழிலாளி கூறுகையில், “நிலைமை மிகவும் தீவிரமானது. நாங்கள் 17 ஆண்டுகளாக பணிநீக்க ஊதியத்தை கையாண்டு வருகிறோம், உற்பத்தி வரலாறு காணாத அளவில் குறைந்துள்ளது. நாங்கள் மிகவும் சோர்வடைந்துள்ளோம். அமைதியாக நடந்திருக்க வேண்டிய தொழிற்சங்க கூட்டம் உண்மையான வேலைநிறுத்தமாக மாறியுள்ளது” என்று தெரிவித்தார்.
இத்தாலியில் உள்ள அரசியல் ஸ்தாபனம் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் பாத்திரத்தை ஆய்வு செய்வோமாயின், இந்த விரோத சக்திகள் அனைத்திலிருந்தும் தொழிலாளர்கள் சுயாதீனமாக அணிதிரள்வதன் அவசியத்தை அது மேலும் அடிக்கோடிட்டுக் காட்டும்.
முதலாவதாக, பாசிச பிரதம மந்திரி ஜியோர்ஜியா மெலோனியின் அரசாங்கத்தின் ஸ்டெல்லாண்டிஸ் பெருநிறுவன நிர்வாகிகள் குறித்த சமீபத்திய விமர்சனங்கள் இத்தாலியில் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதுடன் எந்த சம்பந்தமும் இல்லாதது. மாறாக, மெலோனியின் அரசாங்கம், பூகோளரீதியாக வாகனத் தொழிலாளர்களினால் உருவாக்கப்பட்ட ஸ்டெல்லாண்டிஸின் இலாபத்தின் பெரும் பங்கை இத்தாலிய ஆளும் வர்க்கத்தை நோக்கி திருப்ப முயல்கிறது.
ஸ்டெல்லாண்டிஸ் அதன் பிரெஞ்சு மற்றும் இத்தாலிய பங்குதாரர்களுக்கு இடையே “சமநிலையற்ற, முற்றிலும் சமமற்ற” பங்குதாரர் கட்டமைப்பைக் கொண்டிருந்ததாக, இத்தாலியின் தயாரிப்பு மற்றும் வணிக அமைச்சர் அடோல்போ உர்சோ கூறினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இத்தாலிய மூலதனம் தொழிலாளர்களைச் சுரண்டுவதற்குப் பொறுப்பாக இருக்குமாயின் எல்லாம் நன்றாக இருக்கும் என்பதாகும்.
எதிர்க்கட்சிகள் என்று சொல்லப்படுவது இதற்கு முழு உடன்பாட்டில் உள்ளன. ஜனநாயகக் கட்சியின் (PD) செயலாளர் எல்லி ஸ்க்லீன், மெலோனியின் அரசாங்கத்தை பங்குதாரராக ஆக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்: “தவரேஸ் ஒரு சவாலைத் தொடங்கினார்: அரசாங்கம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் ஸ்டெல்லாண்டிஸின் ஆத்திரமூட்டலைத் தவறவிடக்கூடாது. ஸ்டெல்லாண்டிஸில் இத்தாலிய பங்கேற்பின் வாய்ப்பை பிரான்சுடன் சமநிலையாக இருப்பதற்கான முக்கியத்துவத்துடன் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்” என்று ஸ்க்லீன் குறிப்பிட்டார்.
FIOM-CGIL தொழிற்சங்கங்கமும், இதே போன்ற தொனியை எடுத்துக் கொண்டது. Mirafiori அமைந்துள்ள பீட்மாண்ட் பிராந்தியத்தில் உள்ள CGIL இன் தலைவரான Giorgio Airaudo, ஆலையின் எதிர்காலம் குறித்த சாத்தியமற்ற நிலையை எதிர்பார்த்தார்: “இன்று நமக்குத் தெரிந்தபடி, Mirafiori இனி 2027 க்குள் எந்த தயாரிப்பையும் உற்பத்தி செய்யாது. புதிய தயாரிப்புகள் வராவிட்டால் மற்றும் ஐரோப்பிய சந்தையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படவில்லை என்றால், ஆலை ஒரு மினுமினுப்பான ஒளியாக குறைக்கப்படும்“.
இதேபோல், CGIL இன் வாகனத் தொழிலாளர்களின் தேசிய செயலாளரான சாமுவேல் லோடி, பாசிச மெலோனி அரசாங்கம் மற்றும் டவாரெஸ் ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்தார்: அதாவது, “[அனைத்து வாகனத் தொழிலாளர் சங்கங்களும்] FIOM, FIM மற்றும் ULIM ஆகியவை பிரதம மந்திரி மற்றும் CEO கார்லொஸ் தவாரெசுக்கு விடுத்த கூட்டுக் கோரிக்கைக்குப் பிறகு, உற்பத்தி மற்றும் வேலைகளைப் பாதுகாக்க நிறுவனங்களை முன்தள்ளும் முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கேட்கிறார்கள்” என்று FIOM தேசிய செயலாளர் Michele De Palma, தொழிற்சங்கங்கள், அரசாங்கம் மற்றும் Stellantis நிர்வாகிகளுக்கு இடையே ஒரு இணைந்த கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
மிராஃபியோரி தொழிலாளர்களுக்கு ஒரு அதிதீவிர தேசியவாத பாசிச அரசாங்கத்திடம் இருந்து என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பது நன்றாகவே தெரியும்: அது, பெரும் மூலதனத்திற்கு விசுவாசம் மற்றும் தொழிலாளர்கள் மீதான அடக்குமுறையாகும். மெலோனியின் அரசியல் மூதாதையரான பெனிட்டோ முசோலினி, 1939 ஆம் ஆண்டு 50,000ம் தொழிலாளர்கள் முன்னிலையில் தொழிற்சாலையைத் திறக்கத் தலைமை தாங்கினார், அவர் தனது வார்த்தைகளை இழிவுபடுத்திய பின்னர், “பாசிச தலைவர் முசோலினி” மேடையை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்.
மெலோனியின் அரசாங்கம் தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகள் மீது இரக்கமற்ற தாக்குதல்களை நடத்தி வருகிறது, மேலும் உக்ரேனில் போருக்கு தொடர்ந்து நிதி கிடைப்பதை உறுதி செய்ய பாடுபட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு, உக்ரேனுக்கான ஐரோப்பிய ஒன்றிய நிதிக்கு உடன்பட செய்வதற்காக ஹங்கேரிய ஜனாதிபதி விக்டர் ஓர்பனை சமாதானப்படுத்தியதற்காக அனைத்து ஐரோப்பிய தலைவர்களாலும் பிரதம மந்திரி பாராட்டப்பட்டார். போர் மற்றும் இனப்படுகொலைக்கு ஏராளமான வளங்கள் இருந்தாலும், ஸ்டெல்லாண்டிஸில் இத்தாலிய அரசின் தலையீடு என்பது “தேசிய நலன்” என்ற பெயரில் கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கு தொழிலாளர்களை அடிபணியச் செய்வதை மட்டுமே குறியாக கொண்டிருக்கிறது.
உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு ஆலையிலும் நடைபெறும் பணிநீக்கங்களின் வெளிச்சத்தில் ஸ்டெல்லாண்டிஸிடம் இருந்து எவற்றை எதிர்பார்க்க வேண்டும் என்பதையும் தொழிலாளர்கள் அறிவார்கள். முதலாளித்துவத்தின் கீழ், செயற்கை நுண்ணறிவின் (AI) பயன்பாடு போன்று மின்சார வாகனங்களுக்கு மாறுவது என்பது தொழிலாளர்களின் அழிவில் இருக்கும்: மெல்லிய தயாரிப்பு வரிசைகள், சிறிய தொழிலாளர் திரள் மற்றும் நெகிழ்வான ஒப்பந்தங்கள் ஆகியவை ஸ்டெல்லாண்டிஸின் கார்ப்பரேட் அலுவலகங்களில் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளன.
பெருநிறுவனங்கள் மற்றும் முதலாளித்துவ அரசுகள் வேலை வெட்டுக்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தின் மீது தாக்குதல்களை வலுக்கட்டாயமாக திணிப்பதற்கு உதவுவதில் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கடந்த ஆண்டு ஐக்கிய வாகன தொழிலாளர்கள் சங்கத்தின் காட்டிக் கொடுப்பு ஒப்பந்தத்தின் படிப்பினைகள் அனைத்து தொழிலாளர்களாலும் உள்கிரகிக்கப்பட வேண்டும்.
“சீர்திருத்த” தொழிற்சங்கத் தலைவர் என்று தன்னை தானே கூறிக்கொள்ளும் ஷான் ஃபைனின் நிர்வாகம், ஃபோர்டு, ஜிஎம் மற்றும் ஸ்டெல்லாண்டிஸ் நிறுவனங்களில் பெரும்பான்மையான வாகனத் தொழிலாளர்களை வேலை செய்யும்படி செய்து நிறுவனங்களுக்கு லாபம் ஈட்டித்தந்த ஒரு மோசடியான “தனியான திடீர்” வேலைநிறுத்தத்தை ஏற்பாடு செய்தது. ஐக்கிய வாகன தொழிலாளர் (UAW) அதிகாரத்துவ தலைமை, நிறுவனங்களுடன் தற்காலிக ஒப்பந்தங்களை அறிவித்த பிறகு, வாக்குகளை நடத்துவதற்கு முன் அல்லது தொழிலாளர்களுக்கு ஒப்பந்தங்களைக் காட்டுவதற்கு முன் வரையறுக்கப்பட்ட வேலைநிறுத்தங்களை நிறுத்தியது.
தொழிலாளர்களின் முதுகுக்குப் பின்னால், நிறுவனங்கள், தொழிற்சங்க எந்திரம் மற்றும் பைடென் நிர்வாகம் ஆகியவற்றுக்கு இடையே செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் UAW தலைமையால் “வரலாற்று” மற்றும் “வேலை பாதுகாப்பு” என்று பாராட்டப்பட்டன. ஆனால், சில வாரங்களுக்குப் பிறகு, பரந்தளவில் பணிநீக்கங்கள் மற்றும் தற்காலிக ஊழியர்களை பணிநீக்கம் செய்ய நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.
“எங்களுக்கு பூகோளரீதியான வேலைநிறுத்தம் அவசியம் வேண்டும்”
அமெரிக்காவில் உள்ள ஸ்டெல்லாண்டிஸ் தொழிலாளர்கள் இத்தாலியில் நடந்த வெளிநடப்புச் செய்திகளுக்கு உற்சாகத்துடன் பதிலளித்தனர். கடந்த மாதம் பணிநீக்கம் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான துணை (தற்காலிக) தொழிலாளர்களில் ஒருவரான டெட்ராய்ட் புறநகர் பகுதியில் உள்ள முன்னாள் வாரன் டிரக் தொழிலாளி ஹன்னா, “இத்தாலியத் தொழிலாளர்கள் உண்மையான ஒற்றுமையைக் காட்டுகின்றனர்” என்றார். “மிராஃபியோரி ஆலையில் உள்ள தொழிலாளர்கள் எங்களைப் போலவே தொழிற்சங்கத் தலைவர்களிடமிருந்து பதில்களைத் தேடுகிறார்கள். எனவே, அவர்கள் தங்கள் சொந்த கைகளில் விஷயங்களை எடுத்துக்கொள்கிறார்கள்.
வேலை வெட்டுக்களை எதிர்த்துப் போராடுவதற்காக சமீபத்தில் உருவாக்கப்பட்ட சாமானிய தொழிலாளர் குழுவின் உறுப்பினரான ஹன்னா, “எங்கள் முகநூல் பக்கத்தில் வேலைநிறுத்தம் பற்றிய செய்தியை நான் வெளியிட்டபோது, நிறைய தொழிலாளர்கள் இடுகைகளை விரும்பினர். ‘நாமும் வெளியே போகலாம்’, ‘நாம் ஏன் முதலில் வெளிநடப்பு செய்யவில்லை?’, ‘நம்முடைய பலத்தை அவர்களிடம் காட்டினால்தான் எதையும் செய்ய முடியும்’ போன்ற பதில்களை அவர்கள் பதிவிட்டனர்.
“UAW பிரதிநிதிகள், ‘அது இத்தாலியில் முடிந்துவிட்டது, அதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்று கூறுகிறார்கள். சரி...தலைவா ...நாங்கள் அனைவரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்கிறோம்! நாம் ஒரு பூகோளரீதியான வேலைநிறுத்தம் நடத்த வேண்டும். போராடுவது இத்தாலியில் தொழிலாளர்களின் விருப்பமாக இருந்தது, தொழிற்சங்க எந்திரத்தினது அல்ல. UAW அதிகாரிகள் எப்போதும் போலியான நம்பிக்கையுடன் உறுப்பினர்களை கவர முயற்சிக்கின்றனர். ஆனால், இந்த வேலை வெட்டுக்கள் வெறும் அச்சுறுத்தல்கள் அல்ல, அவை எல்லா இடங்களிலும் நடக்கின்றன, மேலும் தொழிலாளர்கள் இங்கேயும் விஷயங்களை தங்களது கைகளில் எடுக்கும் விளிம்பில் உள்ளனர்” என்று பதிவிட்டனர்.
இத்தாலிய வாகனத் தொழிலாளர்கள், அமெரிக்காவில் உள்ள தங்கள் சகோதர சகோதரிகளைப் போலவே, போராடத் தயாராக உள்ளனர். ஆனால், தவாரெஸ் மற்றும் பாசிச மெலோனியால் எவற்றை ஏற்றுக்கொள்ள முடியுமோ அவ்வாறாக, தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் போராட்டங்களை கட்டுப்படுத்துகின்றன. ஒட்டுமொத்த பொது வேலைநிறுத்தத்திற்குப் பதிலாக மூன்று தொடர்ச்சியான ஷிப்டுகளுக்கு ஒரு மணி நேர தன்னியல்பான திடீர் வேலைநிறுத்தங்களை நடத்துவதன் மூலம், அவர்களின் பிடியில் இருந்து தப்பித்து செல்ல அச்சுறுத்தும் சூழ்நிலையைக் கட்டுப்படுத்த தொழிற்சங்கங்கள் முயற்சிக்கின்றன.
ஒரு சர்வதேச வர்க்கமாக அவர்களது பொதுவான நலன்களின் அடிப்படையில், தொழிலாளர்கள் சுயாதீனமாக அணிதிரள்வது மிகவும் அவசரம் என்று அதிகாரத்துவம் கருதியதே இல்லை.
போர்க்குணமிக்க தொழிலாளர் அமைப்புகளின் வலையமைப்பான, சாமானிய தொழிலாளர் குழுக்களின் (IWA-RFC) சர்வதேச தொழிலாளர் கூட்டணியால் ஒரு புதிய, பூகோளரீதியான போராட்ட வடிவம் முன்னெடுக்கப்படுகிறது. வேலை வெட்டுக்களுக்கு எதிராகவும் மற்றும் தேசிய எல்லைகளுக்கு அப்பால் தொழிலாளர் நலன்களுக்காகவும், IWA-RFC போராட்டங்களை ஒருங்கிணைக்கிறது.