மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த புதன்கிழமை பிற்பகுதியில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில், அமெரிக்கா ஒரு அப்பட்டமான சட்டவிரோத ஆளில்லா விமானம் மூலம் (ட்ரோன்) மேற்கொண்ட தாக்குதலில், கத்தாயிப் ஹிஸ்புல்லா போராளிகளின் இரு உறுப்பினர்கள் கொல்லப்பட்டதால், அது நகரத்தின் தெருக்களில் கோபமான ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியது. அருகில் கண்டெடுக்கப்பட்ட அடையாள அட்டைகளில் அவர்கள் அர்கான் அல்-எலயாவி மற்றும் அபு பக்கீர் அல்-சைதி என அடையாளம் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த ட்ரோன் தாக்குதல் சிறப்பு நடவடிக்கை, ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று அமெரிக்க சிப்பாய்கள் கொல்லப்பட்டதற்கு, அமெரிக்காவின் பதிலடியின் ஒரு பகுதியாகும். ஜோர்டானில் நடத்தப்பட்ட அந்த தாக்குதல் உட்பட கட்டாயிப் ஹிஸ்புல்லா நடவடிக்கைகளை இயக்கியதற்கு அல்-சைதி பொறுப்பு என்று பென்டகன் கூறியது.
முந்தைய வெள்ளியன்று ஈராக் மற்றும் சிரியாவில் நடந்த முதல் சுற்று தாக்குதல்களைப் போலவே, அமெரிக்க இராணுவம் அதன் கூற்றுக்கள் எதற்கும் எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை. மாறாக, காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலையின் விளைவாக ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் போரை வேண்டுமென்றே பதட்டங்களைத் தூண்டிவிட்டு, விரிவுபடுத்தி மத்திய கிழக்கு பூராவும் கொலைகாரத் தாக்குதல்களை நடத்துவதற்கான உரிமையை வாஷிங்டன் தனக்குத் தானே திமிருடன் எடுத்துக் கொண்டுள்ளது.
தீப்பற்றி எரியும் வாகனத்தை மக்கள் வேகமாக சுற்றி வளைத்து, அமெரிக்க எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியதாக ஸ்கை நியூஸ் தெரிவித்தது. பொதுமக்களின் உயிர்கள் பற்றிய அமெரிக்கர்களின் அப்பட்டமான அலட்சியம் குறித்து நிறைய கோபம் இருப்பதாக சாட்சிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். தலைநகரின் கிழக்கில் பரபரப்பான மக்கள் நடமாட்ட தெருவில் ஒரு காரை அழித்த ஒரு “ஒருதலைப்பட்ச தாக்குதலை” நடத்தியதை அமெரிக்கா ஒப்புக்கொண்டது.
“சர்வதேச சட்டத்தை மீறியதற்காக அமெரிக்கா விசாரிக்கப்பட வேண்டும்,” என்று ஒருவர் ஸ்கை நியூஸிடம் கூறினார்.
“எப்படி அவர்களால் மற்றொரு நாட்டை தாக்கி தண்டனை ஏதும் இல்லாது மக்களை கொல்ல முடிகிறது?” என்று அவர் கேட்டார்.
தாக்குதல் நடந்த சில மணி நேரங்களுக்குள், படுகொலைகளுக்கு எதிராக பாக்தாத்தில் பலத்த பாதுகாப்புமிக்க பசுமை மண்டலத்தின் நுழைவாயிலில் மக்கள் கூடினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் “அமெரிக்காவிற்கு மரணம்” மற்றும் “அமெரிக்கா, எங்கள் நிலத்தை விட்டு வெளியேறு” என்று கோஷமிட்டனர், பெரும் எண்ணிக்கையிலான பலத்த-பாதுகாக்கப்பட்ட கலகத் தடுப்புப் பொலிசார் நுழைவாயிலைத் தடுத்தனர்.
2003 இல் ஈராக் மீதான அமெரிக்க தலைமையிலான குற்றவியல் படையெடுப்பிற்குப் பிறகு கட்டப்பட்ட பசுமை மண்டலம், மிகப்பெரிய அமெரிக்க தூதரகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இது ஈராக்கின்மீது அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பை வழிநடத்தியதின் விளைவாக மில்லியன் கணக்கான பொதுமக்கள் இறந்தனர்.
தாக்குதலுக்கு அடுத்த நாள், ஈராக் இராணுவ செய்தித் தொடர்பாளர் யெஹியா ரசூல் இந்த தாக்குதலை “ஒரு அப்பட்டமான படுகொலை” என்றும் இது “பொதுமக்களின் உயிர்கள் அல்லது சர்வதேச சட்டங்களை பொருட்படுத்தவில்லை” என்றும் கண்டனம் செய்தார்.
“இந்த பாதை ஈராக் அரசாங்கத்தை முன்னெப்போதையும் விட இந்த கூட்டணியின் [அமெரிக்கா தலைமையிலான] பணிக்கு முற்றுப்புள்ளி வைக்க கட்டாயப்படுத்துகிறது, இது உறுதியற்ற தன்மைக்கான காரணியாக மாறியுள்ளது மற்றும் ஈராக்கை மோதலின் சுழற்சியில் இழுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது” என்று ரசூல் எச்சரித்தார்.
ஈராக் மற்றும் சிரியா இஸ்லாமிய அரசு (ISIS) ஆயுதக் குழுக்களின் மிச்ச மீதங்களை எதிர்த்துப் போரிடும் சாக்குப்போக்கில் அமெரிக்கா ஈராக்கில் சுமார் 2,500 துருப்புகளை நிறுத்தியுள்ளது. மேலும் 900 அமெரிக்க துருப்புக்கள் சிரியாவின் சில பகுதிகளை சிரிய அரசாங்கத்தின் அங்கீகாரம் என்ற பாசாங்கு கூட இல்லாமல் ஆக்கிரமித்துள்ளது.
ஈராக் பிரதம மந்திரி முகமது ஷியா அல்-சூடானியின் அலுவலகமானது, அமெரிக்க துருப்புக்கள் மற்றும் ISIS க்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான கூட்டணியைச் சேர்ந்த மற்றவர்களும் ஈராக்கை விட்டு வெளியேற வேண்டும் என்று பரிந்துரை செய்தது. ஒரு சமூக ஊடக இடுகை “பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதில் ஈராக்கின் மேம்பட்ட திறன்களை பிரகாசமாக காட்டியது, ISIS பயங்கரவாத மிச்ச மீதங்களால் இனி ஈராக்கிற்கு அச்சுறுத்தலாக இல்லை என்பதால், கூட்டணியின் பணியை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முடிவுக்கு வழிவகுத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.
ஈராக் பாதுகாப்பு சேவைகளின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் தஹ்சின் அல்-கஃபாஜி, தாக்குதலை “ஈராக்கிய இறையாண்மையை மீறிய ஒரு ஆக்கிரமிப்பு” என்று முத்திரை குத்தியதோடு, இது பிராந்தியத்தில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்” என்று குறிப்பிட்டார்.
அமெரிக்கா மற்றும் அனைத்து ஏகாதிபத்திய சக்திகளாலும் ஆதரிக்கப்படும் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலிய ஆட்சியின் காட்டுமிராண்டித்தனமான போரின் ஆழமான ஸ்திரமின்மையின் தாக்கம் மற்றும் அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடங்கும் பரந்த பிராந்திய யுத்தத்திற்கு, ஈராக் அரசாங்கத்தின் பதில் எடுத்துக்காட்டுகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள் லெபனான், சிரியா, ஈராக் மற்றும் யேமன் ஆகிய நாடுகளில் உள்ள ஈரானிய ஆதரவு போராளிக் குழுக்களுடன் இன்றுவரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், ஈரானே முக்கிய இலக்காக உள்ளது.
அக்டோபர் 2022 இல் பாக்தாத்தில் உருவாக்கப்பட்ட அரசாங்கம், தெஹ்ரானுடன் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இணைந்த ஷியா கட்சிகளின் மற்றும் சன்னி மற்றும் அதனுடன் சேர்ந்து குர்திஷ் கட்சிகளுடன் சேர்ந்த மிகவும் நிலையற்ற கலவையாகும். பிரதம மந்திரி அல்-சூடானி ஈரான் ஆதரவு ஷியா ஒருங்கிணைப்பு கட்டமைப்பால் பரிந்துரைக்கப்பட்டவர் ஆவர். இது நாட்டின் பாராளுமன்றத்தில் மிகப்பெரிய உறுப்பினர்களை கொண்ட அணியாகும்.
எவ்வாறாயினும், ஜனரஞ்சக ஷியைட் தலைவரும் மதகுருவான முக்தாதா அல்-சதர் தலைமையிலான குழுவின் எதிர்ப்பை அரசாங்கம் எதிர்கொள்கிறது. இது 2021 தேசியத் தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற இடங்களை வென்றது. அமெரிக்க துருப்புக்கள் மற்றும் ஈரான்-ஆதரவுள்ள போராளிகள் உட்பட ஈராக்கில் இருந்து அனைத்து வெளிநாட்டுப் படைகளையும் திரும்பப் பெறுமாறு கோரும் சத்ரிஸ்டுகள் தற்போதைய அரசாங்கத்தில் சேர மறுத்துவிட்டனர்.
அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் நாட்டில் அமெரிக்க இராணுவ பிரசன்னத்திற்கு மக்கள் எதிர்ப்பை மேலும் தூண்டும், அது மேலும் அரசியல் நிலையற்ற தன்மையை உருவாக்கும்.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட PBS இன் நிருபர்கள் கடந்த வாரம் மேற்கு ஈராக்கிற்குச் சென்றனர். பிப்ரவரி 2 அன்று, அங்கு அமெரிக்க இராணுவம் அதன் பதிலடித் தாக்குதல்களின் ஒரு பகுதியாக பல நகரங்களைத் தாக்கியதால், அது உள்ளூர் மக்களிடமிருந்து கோபமான எதிர்வினைகளைத் தூண்டியது. அன்று, ஈராக் மற்றும் சிரியா முழுவதும் ஏழு இடங்களில் 85 இலக்குகள் மீது அணுசக்தி திறன் கொண்ட B-1B குண்டுவீச்சு விமானங்கள் 125 க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகளை போட்டன.
சிரிய எல்லைக்கு அருகில் அமைந்துள்ள அகாஷாத் நகரம் அமெரிக்க வான்வழித் தாக்குதல்களால் பெரிதும் பாதிக்கப்பட்டது. ISIS உடனான போருக்குப் பிறகு, அது பெருமளவில் கைவிடப்பட்ட நிலையில், 13வது படைப்பிரிவின் (PMF) கட்டுப்பாட்டில் உள்ளது. இது ISIS உடன் போராடுவதற்காக உருவாக்கப்பட்ட துணை ராணுவப் படைகளின் குடைக் குழுவாகும். இப்போது இது அதிகாரப்பூர்வமாக ஈராக்கின் பாதுகாப்புப் படைகளின் ஒரு பகுதியாக இருக்கிறது.
முதல் ஏவுகணை இராணுவ மருத்துவமனையைத் தாக்கியதில், அங்கிருந்த ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, அங்கிருந்த ஆம்புலன்ஸை நாசப்படுத்தியது என்று நேரில் பார்த்தவர்கள் PBS இடம் தெரிவித்தனர். மொத்தத்தில், 17 PMF உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.
அமெரிக்கப் படைகள்மீது தாக்குதல் நடத்திய, ஈராக்கில் இருக்கும் எந்தவொரு இஸ்லாமிய போராளிக் குழுக்களுடனும் தொடர்பு இல்லை என்று PMF கமாண்டர் காசிம் முஸ்லே, திட்டவட்டமாக மறுத்தார். “எதிர்ப்பு பிரிவுகளுக்கு ஆதரவு உள்ளது என்பதற்கான ஒரு ஆதாரத்தை அமெரிக்கா வெளிப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். அவர்கள் கூறியது போல், இங்கு எந்த தலைமையும் இல்லை, அல்லது வெளிநாடுகளுடன் தொடர்பு கொண்டவர்கள், அல்லது கூட்டணிப் படைகள் மீதான தாக்குதல்களில் பங்கேற்றவர்கள் இல்லை” என்று குறிப்பிட்டார்.
கத்தாயிப் ஹிஸ்புல்லாவின் தளம் அமைந்துள்ள அல்-கைம் நகரத்தில் PBS, அன்மார் அல்-ரவி என்பவரிடம் பேசியது. அவருடைய சகோதரருடைய குடும்ப வீட்டின் மீது அமெரிக்க ஏவுகணை தாக்கியதில் அவர் கொல்லப்பட்டார். “நிச்சயமாக, அவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்வினையாக, அவர்களின் [அமெரிக்க] தாக்குதல் இருந்தது. ஆனால், அவர்களின் பதிலடி பொதுமக்கள் மீது விழுந்ததே ஒழிய, இராணுவங்கள் மீது அல்ல. கத்தாயிப் ஹிஸ்புல்லாஹ்வைச் சேர்ந்த ஒருவர் கூட இத்தாக்குதலில் கொல்லப்படவில்லை. அந்த முகாமில் வெடிமருந்துகள் இருப்பதையும், பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர்” என்று அவர் குறிப்பிட்டார்.
ஒரு உள்ளூர் பழங்குடித் தலைவர், ஷேக் ரகேப் அல்-கர்பௌலி, விரோதங்கள் “கணிக்க முடியாத பிராந்தியப் போருக்கு” வழிவகுக்கும் என்று எச்சரித்தார். அத்தகைய மோதலைத் தடுப்பது எது என்று கேட்டதற்கு, அவர் வெளிப்படையாக, “தீர்வுக்கான தீர்வு பாலஸ்தீனப் பிரச்சினை. முழு இறையாண்மை கொண்ட சுதந்திரமான பாலஸ்தீன நாடு முழு பிராந்தியத்திலும் பாதுகாப்பு மற்றும் அமைதிக்கான வாய்ப்பை வழங்கும்” என்று அறிவித்தார்.
ஒரு சுதந்திர பாலஸ்தீன அரசை உருவாக்கும் அல்லது பாலஸ்தீன மக்களின் மீதான அடக்குமுறைக்கு தீர்வு காணும் எண்ணம் இஸ்ரேலுக்கோ அல்லது அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கோ இல்லை. மாறாக, காஸாவின் பிற பகுதிகளில் இருந்து ஒரு மில்லியன் அகதிகள் கொடூரமான சூழ்நிலையில் கூடியிருக்கும் ரஃபா மீதான தாக்குதலுடன் இஸ்ரேலிய இராணுவம் அதன் காட்டுமிராண்டித்தனமான போரைத் தீவிரப்படுத்த தயாராக உள்ளது.
ஒரு பரந்த பிராந்தியப் போரைத் தவிர்க்க முயல்வதாக அமெரிக்கா கூறுகிறது. இது முடிவில்லாமல் மீண்டும் மீண்டும் கூறுகின்ற ஒரு பொய்யாகும். பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலியப் போர், அமெரிக்காவும் இஸ்ரேலும் பிராந்தியத்தில் தங்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்துவதால், மத்திய கிழக்கு முழுவதும் பரந்த மோதல்களுக்கு எரியூட்டுகிறது.
- சனிக்கிழமையன்று, இஸ்ரேலிய ஆளில்லா விமானம் லெபனானின் தெற்கு துறைமுக நகரமான சிடோன் அருகே கார் மீது மோதியதில், குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இருவர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் லெபனானுக்குள் ஆழமாக ஊடுருவி நடத்தப்பட்ட ஒன்றாகும். அங்கு இஸ்ரேல், ஈரானிய ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா போராளிகளுடன் அறிவிக்கப்படாத போரில் பல தாக்குதல்களை நடத்தியது. காஸா மற்றும் மேற்குக் கரையில் ஹமாஸ் போராளிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்குப் பொறுப்பான ஹமாஸ் அதிகாரி பாஸல் சலே இலக்கு வைக்கப்பட்டதாகத் தெரிகிறது
- சிரிய தலைநகர் டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதியில் உள்ள பல தளங்களில் இஸ்ரேலிய ராணுவம் சனிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது. பிரிட்டனை அடிப்படையாக கொண்ட போர் கண்காணிப்பு, மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு, ஒரு தாக்குதல் தலைநகரின் மேற்கில் ஒரு குடியிருப்பு கட்டிடத்தை தாக்கியதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சிரிய எல்லையில் இஸ்ரேல் நடத்திய 10வது தாக்குதல் இது என்று கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
- யேமனில் உள்ள ஹவுதி போராளிகளுடன் அமெரிக்கா புதிய இராணுவ பரஸ்பர மோதலில் ஈடுபட்டுள்ளது. செங்கடலில் கப்பல்களை அச்சுறுத்திக்கொண்டிருந்த இரண்டு நடமாடும் ஆளில்லா படகுகள், நான்கு கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ஒரு கப்பல் ஏவுகணை ஆகியவற்றை அமெரிக்க போர்க்கப்பல்கள் அழித்ததாக அமெரிக்க மத்திய கட்டளையகம் சனிக்கிழமை அறிவித்தது. கூடுதலாக, யேமன் தலைநகர் சனா உட்பட ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது அமெரிக்காவும் பிரிட்டனும் பல வான்வழித் தாக்குதல்களை நடத்தின.