இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
உலகின் முதல் தொழிலாளர் அரசான சோவியத் ஒன்றியத்துக்கு என்ன நடந்தது என்பது, தொழிலாள வர்க்கத்தை அதிகாரத்திற்கு இட்டுச் செல்வதற்காக சோசலிசப் புரட்சியை ஒழுங்கமைப்பதற்கான போராட்டத்தில் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒரு விடயம் ஆகும். எனவே, 1917 இல் ரஷ்யாவில் அக்டோபர் புரட்சிக்கு விளாடிமிர் லெனினுடன் இணைந்து தலைமை தாங்கிய லியோன் ட்ரொட்ஸ்கியால் 1936 இல் எழுதி வெளியிடப்பட்ட காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி நூல், உலக ஏகாதிபத்தியத்தினதும் அதற்கு அடிவருடும் முதலாளித்துவ அரசாங்கங்களினதும் தாக்குதலுக்கு எதிராக இன்று போராடும் அனைத்துப் போராளிகளும் தீவிரமாகப் படிக்க வேண்டிய ஒன்றாகும்.
இந்த நிலைபேறான படைப்பு தற்போது தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதால், தமிழில் படிக்கும் உங்களுக்கும் அதை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
லெனின் தலைமையில் ரஷ்யாவில் கட்டியெழுப்பப்பட்ட போல்ஷிவிக் கட்சியின் தலைமைத்துவத்தில் தொழிலாள வர்க்கம் 1917 அக்டோபரில் சோசலிசப் புரட்சியில் அதிகாரத்தைக் கைப்பற்றி, பிரதான முதலாளித்துவ சொத்துக்களை தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.
1991ல், சோவியத் ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்த அதிகாரத்துவ ஆட்சி, தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த உற்பத்தி சக்திகள் உட்பட சொத்துக்களை, அந்த அதிகாரத்துவ ஆட்சியை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய முதலாளித்துவ தன்னல ஆளும்கும்பலிடம் ஒப்படைத்து சோவியத் ஒன்றியத்தை கலைத்துவிட்டது. இப்படி ஒரு பேரழிவு நிலை எப்படி ஏற்பட்டது? அதற்கு மாற்று வழி இருந்ததா? என்ற கூர்மையான கேள்விகள் தொடர்பாக, 1936ல், அதாவது சோவியத் ஒன்றியம் பிறந்து இரண்டு தசாப்தங்களுக்குள்ளேயே, ட்ரொட்ஸ்கி இந்தப் புத்தகத்தில் கலந்துரையாடுகிறார்.
ரஷ்யப் புரட்சியில் இருந்து உருவான சிறுபராய பாட்டாளி வர்க்க அரசுக்கு எதிராக, ஏகாதிபத்திய ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்ட உள்நாட்டுப் போரில், விவசாயிகளின் ஆதரவுடன் ரஷ்ய தொழிலாள வர்க்கம் வெற்றி பெற்றாலும், தங்கள் நாட்டில் நிலவிய தொழில்நுட்பத்தில் மிகவும் பின்தங்கிய நிலை, கிராமப்புறங்களில் காணப்பட்ட கடுமையான வறுமை மற்றும் பின்தங்கிய சமூக சூழலும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய முக்கியப் பிரச்சினைகளாக இருந்தன. அதன்படி, அனைத்து உழைக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உற்பத்தியை மேம்படுத்துதல் மற்றும் அந்தப் பொருட்களின் விநியோகம் உட்பட சமூகத் தேவைகளை நிறைவேற்ற இயலாமயும் அந்த தொழிலாளர் அரசின் மீது சுமத்தப்பட்ட சவாலான சூழ்நிலையாகும்.
அக்டோபர் புரட்சியின் பிரதான தலைவர்களான லெனினும் ட்ரொட்ஸ்கியும், உலகின் ஏனைய நாடுகளில், குறிப்பாக, முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றி சோசலிச வேலைத்திட்டத்தை முன்னெடுத்து, அதன் அடிப்படையில் உலகளாவிய ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதிலேயே இந்த நிலைமையை சமாளிப்பதற்கான திறவுகோல் உள்ளது என்பதை புரிந்து கொண்டனர்.
ரஷ்யப் புரட்சியின் பின்னர், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி தலைமையிலான தலைவர்களின் குறிக்கோள், உலகின் ஏனைய நாடுகளிலும் புரட்சிகளை வெல்வதாகும். அவர்கள் அக்டோபர் புரட்சியை உலகப் புரட்சியின் முதல் தாக்குதலாகப் பார்த்தார்கள். இரண்டாம் அகிலத்தின் தலைவர்கள் முதலாளித்துவத்தைப் பாதுகாத்து, தேசியவாதத்திற்கு அடிபணிந்து, மார்க்சிசத்திற்கு புறமுதுகு காட்டி, ஜேர்மன் புரட்சியைக் காட்டிக் கொடுத்த பின்னணியிலே அவர்கள் மூன்றாம் அகிலத்தைக் கட்டியெழுப்பத் தொடங்கினர். புரட்சித் தொழிலறிஞர்களால் கட்டியெழுப்பப்பட்ட போல்ஷிவிக் கட்சி போன்ற ஒரு கட்சியின் தலைமை கிடைக்காததால், ஜெர்மனி உட்பட நாடுகளில் புரட்சிகள் தோற்கடிக்கப்பட்டன.
ஜெர்மனி, பிரிட்டன், ஆஸ்திரியா, சீனா, போலந்து, பல்கேரியா, எஸ்தோனியா உட்பட்ட பல நாடுகளில் எழுந்த புரட்சிகர சூழ்நிலைகளில் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றத் தவறியதால், 1924 இல் ஜோசப் ஸ்டாலின் மற்றும் நிகோலாய் புகாரினும், விஞ்ஞான சோசலிசத்தின் அடிப்படை ஆவணமான கம்யூனிஸ்ட் அறிக்கைக்கே எதிரான கோட்பாடான “தனி ஒரு நாட்டில் சோசலிசத்தை” கட்டியெழுப்பி முடிக்க முடியும் என்ற பிற்போக்கு தேசியவாதக் கோட்பாட்டிற்குள் சோவியத் ஒன்றியத்தை அடக்கி வைக்க வேலை செய்தது.
1920களின் முற்பகுதியில் இருந்த போல்ஷிவிக் கட்சிக்குள் ஜனநாயகத்தை படிப்படியாக ஒழித்தவாறே தலைதூக்கிய அதிகாரத்துவத்திற்கு எதிரான போராட்டத்தை, சம எண்ணம் கொண்ட கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து வழிநடத்திய ட்ரொட்ஸ்கி, 1923ல் இடது எதிர்ப்பு அணியை உருவாக்கினார். லியோன் ட்ரொட்ஸ்கி, உலக சோசலிசப் புரட்சியின் போக்கைப் பாதுகாப்பதற்கான கடுமையான போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். சோவியத் ஒன்றியத்தில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஸ்டாலின் தலைமையிலான அதிகாரத்துவம், ’ட்ரொட்ஸ்கிசவாதத்துக்கு’ எதிராகப் போருக்குச் சென்றது.
ஸ்டாலினின் முன்வைத்த தனி ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டியெழுப்பும் பிற்போக்கு கோட்பாடு, போல்ஷிவிக் கட்சியின் அதிகாரத்துவ வீழ்ச்சியில் நங்கூரமிடப்பட்டது. அதிகாரத்துவத்தின் முதன்மையான குறிக்கோள், தனது சிறப்புரிமைகளை தொடர்ந்து பராமரிப்பதும் விரிவாக்குவதும் ஆகும். தங்களின் நலன்கள் மற்றும் சலுகைகளுக்கு அவசியமான வகையில், அரசியல் மற்றும் தனிப்பட்ட குணங்களுடன் தனிக்கேயுரிய அதிகாரம், கீழ்த்தரமான நடைமுறைவாதம் மற்றும் தேசியவாத பார்வையையும் அவர் கொண்டிருந்ததாலேயே அதிகாரத்துவம் ஸ்டாலினைத் தனது தலைவராகத் தேர்ந்தெடுத்தது.
1927 ஆம் ஆண்டிலேயே, ட்ரொட்ஸ்கி நேரடியாக ஸ்டாலினை “புரட்சிக்கு புதைகுழி தோண்டுபவர்” என்று அழைத்தார்.
ட்ரொட்ஸ்கி தனது காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி புத்தகத்தில் குறிப்பிடுவது போல், 1927 வாக்கில், சோவியத் சமுதாயத்தின் நூற்றுக்கு 15-20 வீதத்துக்கு இடையிலான உயர் மட்டத்தினர், கீழ் மட்டத்தில் இருந்த 80 சதவிகித மக்கள் அனுபவித்தமைக்கு சமமான வளங்களை, அதாவது தொழிலாளர்களின் உபரி உழைப்பின் அதே அளவு வளங்களை அனுபவித்தவர்களாவர். அதிகாரத்துவத்தின் வளர்ச்சி பற்றி ட்ரொட்ஸ்கி ஒரு சிறந்த உதாரணத்தை வழங்கினார். உற்பத்தி செய்யப்பட்ட குறைவான பொருட்கள், அதிகமான மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டதால் வரிசைகள் நீண்டன. அதைக் கையாள பொலிஸ் போன்ற அதிகாரத்துவ வர்க்கம் தேவைப்பட்டது. அதிகாரத்துவம் பெரும்பகுதியை தனக்குப் பங்கிட்டுக்கொண்டது.
அதிகாரத்தைப் உறிதிப்படுத்திக்கொண்ட ஸ்டாலினிச அதிகாரத்துவம், இந்த எதிர்ப்புரட்சிகர வேலைத்திட்டத்தின் சமரசம் செய்ய முடியாத எதிரியான லியோன் ட்ரொட்ஸ்கியை 1928ல் சோவியத் ஒன்றியத்தில் இருந்து நாடு கடத்தியது. 1936-1939 ஆண்டுகளில், போல்ஷிவிக்குகள், விஞ்ஞான சோசலிசத்தை ஆதரித்தவர்கள் மற்றும் சுதந்திர சிந்தனையாளர்கள் உட்பட பல்லாயிரக் கணக்கானவர்களை சிறையில் அடைத்தும், பொய் வழக்கு பதிவு செய்து கொலை செய்தும் ரஷ்யப் புரட்சியின் மீதான பிற்போக்கு தாக்குதல் உக்கிரமாக்கப்பட்டது.
இவ்வாறு வேரூண்றிய அதிகாரத்துவம், உலகப் புரட்சிக்கு குழிபறிப்பதாக மாறியது. இந்த அதிகாரத்துவ ஆட்சியின் வேலைகள், சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவத்தை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான பாதையை அமைப்பதற்கு உதவியது மட்டுமல்லாமல், உலகின் ஏனைய நாடுகளில் புரட்சிகளின் கழுத்தை நெரிக்கவும் வழிவகுத்தது. மறுபுறம், இந்த ஸ்டாலினிச அதிகாரத்துவத்தின் நடவடிக்கைகளால், மற்ற நாடுகளில் புரட்சிகளின் தோல்வி அந்த அதிகாரத்துவத்தை வலுப்படுத்தியது.
ட்ரொட்ஸ்கி, சோவியத் ஒன்றியத்தில் காணப்பட்ட நிலைமையை முதலாளித்துவம் அல்லது சோசலிசம் என்று நிச்சயமாக அர்த்தப்படுத்தாமல் மாறாக, முதலாளித்துவத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையிலான முரண்பாடான இடைநிலை அரசு என்று அழைத்ததுடன், தொழிலாள வர்க்கம் ஒரு அரசியல் புரட்சி மூலம் அதிகாரத்துவத்தை தூக்கி எறிந்து, அரசியல் அதிகாரத்தை தொழிலாளிகளின் கைகளில் எடுத்துக் கொள்ளாவிட்டால், அது முழுமையாக முதலாளித்துவத்தில் மூழ்கிப் போகலாம் என எச்சரித்தார். சோவியத் ஒன்றியத்தில் நிலவும் பலவீனமான தொழிலாளர் உற்பத்தித்திறன், சோசலிச கொள்கைகளின் அடிப்படையில் பங்கீடு செய்வதற்கு ஒரு கூர்மையான தடையாக இருப்பதாக ட்ரொட்ஸ்கி விளக்கினார்.
ட்ரொட்ஸ்கி, இந்த நிலைமையை, காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி நூலில் பின்வருமாறு விவரித்தார்:
(தொழிலாளர்) அரசு நேரடியாகவும் அதன் வெகு ஆரம்பத்திலிருந்தும் இரட்டை வடிவத்தைக் கொண்டிருக்கின்றது. உற்பத்திச் சாதனங்களின் சமூக உடமைகளை அது பாதுகாக்கும் மட்டத்திற்கு, அது சோசலிச தன்மையைக் கொண்டிருக்கிறது. உயிர்வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களின் விநியோகமானது மதிப்பு குறித்த ஒரு முதலாளித்துவ அளவீட்டைக் கொண்டும், அதிலிருந்து எழுகின்ற அனைத்து பின்விளைவுகளுடனும் நடைமுறைப்படுத்துகின்ற மட்டத்திற்கு அது முதலாளித்துவ தன்மையைக் கொண்டிருக்கின்றது. (பக்கம் 131, காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி, தமிழ் மொழிபெயர்ப்பு, தொழிலாளர் பாதை வெளியீடு, 2023)
ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் ஆதிக்கத்தில் இருந்த கிரெம்ளின், அந்த நாடுகளில் சோசலிசப் புரட்சியை ஆபத்தில் வைத்து, தொழிலாள வர்க்கத்தைக் காட்டிக் கொடுப்பதன் மூலமே ஏனைய நாடுகள் உடன் கொடுக்கல் வாங்கல் செய்தது. சோவியத் ஒன்றியத்தில் சோசலிசத்தை கட்டியெழுப்புவதற்கு அது அவசியம் என்று அறிவித்தே இது நியாயப்படுத்தப்பட்டது.
லெனின், இதற்கு நேர்மாறாக, சோவியத் ஒன்றியத்தின் இராஜதந்திர கொடுக்கல் வாங்கல்களில், எந்த வகையிலும் கொடுக்கல் வாங்கல் செய்யும் நாடுகளில் புரட்சிகள் காட்டிக்கொடுக்கப்படக் கூடாது என்று வலியுறுத்தினார். ஸ்டாலினிச அதிகாரத்துவத்திற்கும் லெனினின் தலைமைத்துவத்துக்கும் இடையில் காணப்பட்ட அரசியல், வேலைத்திட்ட முரண்பாடுகள் இந்த புத்தகத்தில் பின்வருமாறு சுருக்கிக் காட்டப்பட்டுள்ளது:
சோவியத்துக்களின் சர்வதேச கொள்கையின் அடிப்படை நிலைப்பாடானது ‘சூழ்நிலையின் தவிர்க்கவியலாத தன்மை காரணமாக சோவியத் அரசாங்கம் ஏகாதிபத்திய அரசாங்கங்களுடன் மேற்கொள்ளக்கூடிய ஏதேனும் வர்த்தக, இராஜதந்திர அல்லது இராணுவ பேரம் எதுவும், எந்த வகையிலும் சம்பந்தப்பட்ட முதலதாளித்துவ நாடுகளில் பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தை மட்டுப்படுத்தவோ அல்லது பலவீனப்படுத்தவோ கூடாது. ஏனென்றால் இறுதி பகுப்பாய்வில் தொழிலாளர் அரசின் பாதுகாப்பு என்பதே, உலகப் புரட்சியின் வளர்ச்சியால் தான் உத்தரவாதம் பெறும்’ என்ற உண்மையின் மீது தங்கியிருந்தது. (காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி: பக்க்கம் 281-82)
காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி முதலாளித்துவத்தை மீளவும் ஸ்தாபிக்கும் செயல்முறை பற்றி விளக்கியதாவது:
சோவியத் ஆட்சியின் வீழ்ச்சியானது, தவிர்க்கமுடியாத வகையில் திட்டமிடப்பட்ட பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்து, அதன் மூலம் அரசு சொத்துடமைகள் ஒழிப்புக்கும் இட்டுச் செல்லும். டிரஸ்டுகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் இடையிலான கட்டாய பிணைப்பு உடைக்கப்படும். மிகவும் வெற்றிகரமான நிறுவனங்கள் சுதந்திரப் பாதையில் பயணிப்பதில் வெற்றி பெறும். அவை தங்களை பங்கு நிறுவனங்களாக மாற்றிக்கொள்ளக் கூடும், அல்லது வேறு ஏதோ இடைமருவு சொத்து வடிவத்திற்கு (உதாரணத்திற்கு, தொழிலாளர்கள் இலாபங்களில் பங்கு பெறுவதற்கான ஒன்றைக் கூறலாம்) தங்களை மாற்றிக்கொள்ளும். அதே நேரத்தில், கூட்டுப் பண்ணைகள் இன்னும் எளிதாகவே சிதறிவிடும். ஆக, நடப்பு அதிகாரத்துவ சர்வாதிகாரத்தின் வீழ்ச்சி, ஒரு புதிய சோசலிச சக்தியால் பிரதியீடு செய்யப்படாது போனால், அது சரிவு பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்தின் பெருந்துயரகரமான வீழ்ச்சியுடன் முதலாளித்துவ உறவுகள் மீட்சி காண்பதையே அர்த்தப்படுத்தும். (காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி: பக்க்கம்: ப. 351)
இது சம்பந்தமாக, கடந்த மாதம் உலக சோசலிச வலைத் தளம் வெளியிட்ட புத்தாண்டு அறிக்கையில் பின்வருமாறு சாராம்சப்படுத்தப்பட்டது:
அதன் துயரகரமான விளைவுகள் இருந்தபோதிலும், சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது ஸ்ராலினிச கொள்கையான “தனி ஒரு நாட்டில் சோசலிசம்” குறித்த இன்றியமையாத மார்க்சிச-ட்ரொட்ஸ்கிச விமர்சனத்தை உறுதிப்படுத்தியது. ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சோசலிச அரசு என்ற பிற்போக்கு தேசியவாத கற்பனையானது, ட்ரொட்ஸ்கி முன்கணித்ததைப் போல, உலகப் பொருளாதாரத்தின் யதார்த்தத்திற்கு பலியானது. (முதலாம் பாகம், 7வது பந்தி)
1980களில் தொழில்நுட்பத்தின் (கணினிகள், போக்குவரத்து, தகவல் தொடர்பு) வளர்ச்சியுடன், உற்பத்தியின் உலகமயமாக்கலால், அனைத்து தேசியவாத வேலைத் திட்டங்களும் திவாலாகிப் போனமையே உலகப் பொருளாதாரத்தின் யாதார்த்தம் ஆகும். இது சோவியத் ஒன்றியத்திலும், அதே போல், கிழக்கு ஐரோப்பாவிலும் “தனியொரு நாட்டில் சோசலிசம்” வேலைத் திட்டத்தை, அதாவது பொருளாதாரத்தை வலுவாக பாதித்தது.
1982வாக்கில், ஸ்டாலினிச அதிகாரத்துவத்தால், முதலாளித்துவத்தை மீட்டெடுப்பதற்கான “பொருளாதார ஆராய்ச்சி” தொடங்கப்பட்டது. இதன் விளைவாக, 1986-1988 காலகட்டத்தில் சோவியத் ஒன்றித்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருந்த மிகைல் கோர்பச்சேவ்வினால் முன்னெடுக்கப்பட்ட பெரெஸ்ட்ரோயிகா (புனரமைப்பு) மற்றும் கிளாஸ்னோஸ்ட் (வெளிப்படைத்தன்மை) வேலைத்திட்டங்கள் முதலாளித்துவத்தை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டவை என்பது இன்று இரகசியமானதல்ல.
அரசு ஏகபோகத்தை தகர்த்தெறிந்து, தனியார்மயமாக்கல் வரை கொண்டு சென்ற முதலாளித்துவ மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக, சோவியத் ஒன்றியத்தில் இலட்சக் கணக்கான சுரங்கத் தொழிலாளர்களின் பங்களிப்புடன் வெடித்துப் பரவிய வேலை நிறுத்தங்களுடன், அரசியல் புரட்சிக்கு, அதாவது சோவியத் தொழிலாள வர்க்கம், அதிகாரத்துவத்தின் அரசியல் அதிகாரத்திற்கு சவால் விடுக்கும் நிலைமைக்கு வரும் சமிக்ஞைகள் தெரிந்ததால், பீதியடைந்த அதிகாரத்துவம் அவசர அவசரமாக முதலாளித்துவத்தை மீட்டெடுக்கும் “அதிர்ச்சி சிகிச்சை” என்ற பெயரில், தொழிலாளர் அரசுக்குச் சொந்தமான சொத்துக்களை மிகக் கொடூரமான முறையில் அபகரிக்கும் நடவடிக்கைகளை வேகமாக முன்னெடுத்தது. இதையே ட்ரொட்ஸ்கி முன் கூட்டியே சுட்டிக் காட்டியிருந்தார். ஏகாதிபத்தியத்தின் நேரடிப் பிரதிநிதியாகத் தோன்றிய பொரிஸ் யெல்ட்சின் 1991 இல் உருவாக்கப்பட்ட ரஷ்ய கூட்டமைப்பின் தலைவரானார்.
சோவியத் ஒன்றியம் கைலைக்கப்பட்டமை சோசலிசத்தின் முடிவைக் குறித்தது என்றும், முதலாளித்துவத்திற்கு மாற்றீடு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறி, பிற்போக்கு பிரச்சாரத்தைத் தூண்டிவிட்ட பல்வேறு முதலாளித்துவ சிந்தனையாளர்களும் கல்வியாளர்களும், முதலாளித்துவத்தின் வெற்றியைக் கொண்டாடினர்.
ஆனால் என்ன நடந்திருக்கிறது?
சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டவுடன், குறிப்பாக, அமெரிக்க ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள், உலக வல்லரசு நிலையை மீண்டும் கைப்பற்ற மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நடத்திய போர்கள், இன்று உலகப் போர் அச்சுறுத்தலை எழுப்பும் அளவிற்கு உயர்ந்துள்ளது. சமூக சமத்துவமின்மை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு விரிவடைந்துள்ளதுடன் முதலாளித்துவ நெருக்கடியும் போரின் செலவுகளும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்பட்டு, தொழில்கள், ஊதியங்கள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் வேலை நிலைமைகளும் வெட்டப்படுகின்றன.
இன்று, பிராதன ஏகாதிபத்திய சக்திகளின் முழு ஆதரவுடன், காசா பகுதியில் மில்லியன் கணக்கான மக்கள் மீது நடத்தப்படும் மிகக் கொடூரமான தாக்குதல்கள், அத்துடன் பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளை மேற்கத்திய ஏகாதிபத்திய அரசாங்கங்கள் “விலங்குகள்” போல் நடத்துகின்றமை பொதுமக்களின் வெறுப்புக்கு உள்ளாகியுள்ளன.
ஏகாதிபத்தியத்தின் இந்தத் தாக்குதல்களுக்கு எதிராக, உலக தொழிலாள வர்க்கத்தின் தலைமையில், இளைஞர்களும் பொதுமக்களும் பல்லாயிரக்கணக்கில் உலகம் முழுவதும் போராடங்களுக்கு வந்துள்ளனர்.
உலக சோசலிச வலைத் தளம் வெளியிட்ட புத்தாண்டு அறிக்கையில், பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது
உலக நெருக்கடியானது நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களை தீவிரப்படுத்தி வருகிறது. வெகுஜனங்களின் அடிப்படை நலன்களுக்கும் ஆளும் வர்க்கத்தின் சலுகைகளுக்கும் இடையிலான பிளவு முன்னெப்போதையும் விட வெளிப்படையாகி வருகிறது. போர், இனப்படுகொலை, பெருந்தொற்று நோய் மற்றும் பாசிசம் ஆகியவற்றினை, ஏகாதிபத்தியம் இயல்பாக்கியமையானது, வெகுஜன நனவை புரட்சிகரமாக்குவதற்கும், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் கண்ணோட்டத்தில் சோசலிசத்தை இயல்பாக்குவதற்கும் ஒரு சக்திவாய்ந்த உந்துதலை வழங்கும். (நான்காம் பாகம், 35வது பந்தி)
ட்ரொட்ஸ்கி, காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி என்ற நூலில் முன்வைத்த தீர்க்கமான விடயம், ரஷ்யப் புரட்சியில் அதிகாரத்தைக் கைப்பற்றிய தொழிலாள வர்க்கத்தின் வெற்றிப் பாதை, உலக சோசலிசப் புரட்சியிலேயே, அதாவது ஏனைய நாடுகளில், குறிப்பாக முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ ஆட்சிகளை தூக்கியெறிந்து அதிகாரத்தை கைப்பற்றுவதிலேயே தங்கியிருக்கின்றது, என்பதாகும்.
இன்று, இதற்கான புறநிலை நிலைமை விரைவாக உருவாகி, காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி புத்தகத்தின் மூலம் பாதுகாக்கப்படும் உலக சோசலிச வேலைத்திட்டத்தை வெற்றியை நோக்கி கொண்டு செல்வதற்கான காலகட்டமே இப்போது நம் முன் திறக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
- ட்ரொட்ஸ்கியின் காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி நூலின் தமிழாக்கத்தை அறிமுகம்செய்ய சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) விரிவுரைகளை நடத்துகிறது
- தொழிலாள வர்க்கம், முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான போராட்டம், மற்றும் சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியைக் கட்டியெழுப்புதல்
- லியோன் ட்ரொட்ஸ்கியும் இருபத்தோராம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டமும்