மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசினா, வேலை ஒதுக்கீடுகள் சம்பந்தமாகவும் அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மைக்கு எதிராகவும் வெடித்துள்ள பரவலான மாணவர் எதிர்ப்பு போராட்டங்களை அடக்குவதற்கு கடந்த வெள்ளிக்கிழமை நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவுகளை விதித்து, துருப்புக்களை நிலைநிறுத்தியுள்ளதோடு “கண்டவுடன் சுட்டுத் தள்ளும்” உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளார்.
பொலிஸ் மற்றும் ஆட்சியிலிருக்கும் அவாமி லீக்கின் குண்டர்களும் மேற்கொண்ட வன்முறை தாக்குதல்களில், கடந்த வாரம் 139 பேர் கொல்லப்பட்டதோடு பல ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள் ஆவர். ரப்பர் தோட்டாக்களை மட்டுமே பாவித்து துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக பொலிசார் கூறுகின்ற போதிலும், பல உடல்களின் தலைப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருப்பதாக மருத்துவமனை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஜூலை 1 தொடங்கிய மாணவர் எதிர்ப்பு போராட்டங்கள், பங்களாதேஷின் மோசமான பின்னடைவு மற்றும் பிளவுபடுத்தும் அரசாங்க தொழில் இட ஒதுக்கீட்டு முறைமையை அகற்ற வேண்டும் என்று கோருகின்றன. இட ஒதுக்கீட்டு முறையானது, ஹசினாவின் அவாமி லீக்கின் அரசியல் ஆதரவாளர்களின் நலன்களுக்கே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த இட ஒதுக்கீட்டு முறையின் கீழ், 1971 ஆம் ஆண்டில் பங்களாதேஷை உருவாக்குவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த “சுதந்திர போராளிகளின்” உறவினர்களுக்கு அரசாங்க வேலைகளில் 30 சதவீதமும், பெண்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சியடையாத பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு 10 சதவீதமும், இன சிறுபான்மையினருக்கு 5 சதவீதமும் மற்றும் உடல் ரீதியாக ஊனமுற்ற மக்களுக்கு 1 சதவீதமும் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 44 சதவீதம் தற்போதைய தகுதி முறைமையின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பாரிய அரசாங்க எதிர்ப்பு மற்றும் அமைதியின்மையைத் தணிக்கும் என்ற நம்பிக்கையில், பங்களாதேஷின் உச்சநீதிமன்றம், நேற்று “சுதந்திர போராளிகளின்” உறவினர்களுக்கான ஒதுக்கீட்டை தற்போதுள்ள 30 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்றும், இதர வகைகள் ஒவ்வொன்றும் 1 சதவீதமாகக் குறைக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. இருப்பினும், மக்கள்தொகையின் பரந்த பிரிவினரின் ஆதரவைக் கொண்ட மாணவர் போராட்டக்காரர்கள், இட ஒதுக்கீட்டு முறைமையை முற்றாக ஒழிக்கக் கோருகிறார்கள்.
பாரபட்சத்துக்கு எதிரான மாணவர்கள் இயக்கமானது இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. “எங்கள் கோரிக்கைகளை பிரதிபலிக்கும் உத்தரவை அரசாங்கம் வெளியிடும் வரை நாங்கள் எங்கள் எதிர்ப்புக்களை நிறுத்த மாட்டோம்” என்று ஒரு மாணவர் தலைவர் நேற்று AFP இடம் கூறினார். அத்தோடு, ஒடுக்குமுறையின் போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், அடக்குமுறைக்கு உத்தரவிட்ட அதிகாரிகள் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் மாணவர்கள் கோருகிறார்கள் என்று அல் ஜசீரா விடம் அவர் தெரிவித்தார்.
“சட்ட அமலாக்க முகவர் நிறுவனங்கள் இன்னமும் தெருக்களில் இருந்து அகற்றப்படாவிட்டால், தங்குமிடங்கள், பல்கலைக்கழக வளாகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாவிட்டால், மேலும் துப்பாக்கிச் சூடு தொடர்ந்தால், அரசாங்கம் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்” என்று மாணவர் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான நஹித் இஸ்லாம் முகநூல் இடுகையில் அறிவித்துள்ளார்.
ஜூலை 1 அன்று, டாக்கா மற்றும் சிட்டகோங் பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் போராட்டங்களுடன் பாரபட்சத்திற்கு எதிரான மாணவர்கள் இயக்கம் வெளிப்பட்டது. இது, வேலை இடஒதுக்கீடு முறைமையை மீண்டும் அமுல்படுத்துவதற்காக ஜூன் 5 அன்று உயர் நீதிமன்றம் விடுத்த அழைப்பிற்கு எதிரான பதிலடியாக இருந்தது. 2018 இல் மாணவர்களின் போராட்ட அலைகளுக்கு பிறகு, இந்த இடஒதுக்கீடு முறை அகற்றப்பட்டிருந்தது.
ஹசினா அரசாங்கம் மாணவர்களுடன் எந்தவொரு கலந்துரையாடல்களையும் நடத்த மறுத்து, இந்த விவகாரம் நீதிமன்றத்தால் தீர்க்கப்பட்டதாக அறிவித்த பின்னரே, சமீபத்திய ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுவதும் விரைவாக பரவியுள்ளன. ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பில், “மாணவர்கள் தங்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள்” என்றும், “இட ஒதுக்கீடு எதிர்ப்பு இயக்கத்திற்கு எந்த நியாயமும் இல்லை” என்றும் ஹசினா கூறினார்.
எதிர்ப்பு போராட்டங்களை கலைப்பதற்கான முயற்சியாக, உச்சநீதிமன்றமானது ஜூலை 10 அன்று உயர்நீதிமன்ற தீர்ப்பை இடைநீக்கம் செய்தது. இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்வதாகவும், ஆகஸ்ட் 7 அன்று தனது தீர்ப்பை அறிவிப்பதாகவும் உச்சநீதிமன்றம் அறிவித்தது. இருப்பினும், அரசாங்கத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்த தேதி ஜூலை 21 க்கு முன் கொண்டுவரப்பட்டது.
அவாமி லீக்கின் மாணவர் அமைப்பான பங்களாதேஷ் சத்ரா லீக் (BCL) ஜூலை 15 அன்று எதிர்ப்பு போராட்டக்காரர்களை வன்முறையாக தாக்கியபோதே, பெரும்பாலும் அமைதியாக இடம்பெற்ற மாணவர் ஆர்ப்பாட்டங்கள், கடந்த வாரம் ஒரு இரத்தக்களரி திருப்பத்தை எடுத்தன. மாணவர்கள் BCL உறுப்பினர்களின் மிரட்டலுக்கு அஞ்சாத போதே, பாரபட்சத்திற்கு எதிரான மாணவர்கள் மீது போலீசார் தடிகளால் தாக்கியும், ரப்பர் தோட்டா பிரயோகமும் செய்தனர்.
பொலிசார் மேற்கொண்ட கொலைகளால் கோபமடைந்த சாதாரண மக்கள் போராட்டங்களில் சேரத் தொடங்கினர். ஊடக செய்திகளின்படி, டாக்காவில் பொலிஸ் மற்றும் அரசு குண்டர்களுடன் இலட்சக்கணக்கான மக்கள் சண்டையிட்டனர். மற்றவர்கள் ஆர்ப்பாட்டங்களில் இணைந்துகொண்டு இதர நகரங்களில் போலீசாருடன் மோதினர்.
பி.பி.சி.யிடம் பேசிய, டாக்கா பல்கலைக்கழகத்தின் சமூகவியல் உதவி பேராசிரியர் கலாநிதி சமினா லூத்ஃபா, “இது, இனி மாணவர்கள் மட்டும் அல்ல, அனைத்து தரப்பு மக்களும் எதிர்ப்பு இயக்கத்தில் சேர்ந்துள்ளதாகத் தெரிகிறது. அரசாங்கத்திற்கும் ஆளும் கட்சிக்கும் எதிரான கோபம் நீண்ட காலமாக குவிந்து வருகிறது” என்று தெரிவித்தார்.
அனைத்து அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களை மூட உத்தரவிட்டதன் மூலம், ஹசினா அரசு இதற்கு பதிலளித்தது. வியாழக்கிழமை, இது இணையத்தை மூடி, மொபைல் தொலைபேசி இணைப்புகள் மற்றும் குறுந்தகவல் முறைமைகளைத் தடுத்தது. டெய்லி ஸ்டார் மற்றும் டாக்கா ட்ரிப்யூன் உட்பட அனைத்து பங்களாதேஷ் செய்தி வலைத் தளங்களும் தடுக்கப்பட்டன. வெள்ளிக்கிழமை அது ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக இராணுவத்தை அணிதிரட்டியது.
அரசாங்க எதிர்ப்பு அமைதியின்மைக்கு, எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசிய கட்சியை (BNP) ஹசினாவின் ஆட்சி குற்றம் சாட்டுகிறது. ஆனால், இது ஒரு பொய்யாகும். பாரபட்சத்திற்கு எதிரான மாணவர்கள் அமைப்பு, குறிப்பாக எந்தவொரு அரசியல் கட்சியிடம் இருந்தும் தம்மைத் தூர விலக்கிக் கொண்டுள்ளது.
BNP கட்சியின் தலைமையகத்தை சோதனையிடுமாறு போலீசாருக்கு உத்தரவிட்ட அரசாங்கம், அங்கு வெடிபொருட்களைக் கண்டுபிடித்ததாகக் கூறியது. BNP யின் இணை செயலாளர் ருஹுல் கபீர் ரிஸ்வி அகமதையும் போலீசார் கைது செய்தனர். BNP கடந்த வியாழக்கிழமை ஆர்ப்பாட்டங்களை சந்தர்ப்பவாதமாக ஆதரித்தாலும், இந்த வலதுசாரி கட்சிக்கு மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீது எந்த அனுதாபமும் இல்லை. மேலும் ஆட்சியில் இருக்கும்போது மக்கள் மீது கொடூரமான ஜனநாயக விரோத தாக்குதல்களை BNP கட்டவிழ்த்துவிட்டது.
ஜனவரி மாதம் இடம்பெற்ற தேசிய தேர்தலில் ஹசினா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு, இப்போது தொடர்ச்சியாக நான்காவது தடவையாக பதவிக் காலத்தில் இருக்கின்றார். இந்த தேர்தல்களில் 41.8 சதவீத வாக்காளர்கள் மட்டுமே பங்கேற்றனர். மாணவர் ஆர்ப்பாட்டங்களும், அவர்களுக்கு கிடைத்த வெற்றிகரமான பரந்த ஆதரவும், அவரது ஆட்சிக்கு ஆழ்ந்த விரோதம் இருப்பதை நிரூபிக்கின்றன.
2009 இல், முதன்முறையாக ஆட்சிக்கு வந்த ஹசினா அரசாங்கம், பெருகிய முறையில் எதேச்சதிகார திசையை எடுத்து, ஜனநாயக உரிமைகளை கட்டுப்படுத்தி, அவரது அரசியல் எதிரிகளையும் கருத்துச் சுதந்திரத்தையும் அடக்கியது. கடந்த நவம்பரில், தமது வாழ்க்கைக்கான ஊதியம் கேட்டு எதிர்ப்பு தெரிவித்து போராடிய ஆடைத் தொழிலாளர்களுக்கு எதிராக அவரது அரசாங்கம் பொலிசை அனுப்பியதுடன், அங்கு ஏற்பட்ட மோதலில் நான்கு தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டனர்.
2023 இல் நாட்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.8 சதவீதமாக இருப்பதாகவும், 2,528 அமெரிக்க டாலர் தனிநபர் வருமானத்தைப் பெற்றதாகவும் ஹசினா பெருமை பேசிய போதிலும், 2018 ஆம் ஆண்டில், அதன் வளர்ச்சி விகிதம் 7.9 சதவீதமாக இருந்தது. இப்போது அதன் வெளிநாட்டு இருப்புக்கள் 26.5 பில்லியன் டொலர்களாக, 2018 இல் இருந்ததை விடப் பாதியாகக் குறைந்துவிட்டன. பணவீக்கம் தற்போது 9.7 சதவீதமாக இருக்கிறது. அவரது அரசாங்கம் கடந்த ஆண்டு, வெளிநாட்டு நாணய இருப்பு வீழ்ச்சிகள் மற்றும் கட்டண இடைவெளியின் நிலுவைத் தொகையை ஈடுகட்டுவதற்காக சர்வதேச நாணய நிதியத்திலிருந்து 4.7 பில்லியன் டொலர் கடனைப் பெறத் தள்ளப்பட்டது.
நாட்டில் வறுமை மற்றும் வேலையின்மை வேகமாக அதிகரித்து வருவதுடன், பல்கலைக்கழக பட்டதாரிகள் உட்பட சுமார் 18 மில்லியன் இளைஞர்கள் தற்போது வேலை இல்லாமல் உள்ளனர். சமீபத்திய பங்களாதேஷ் புள்ளிவிவர பணியக புள்ளிவிவரங்களின்படி, பங்களாதேஷில் ஏறக்குறைய 40 சதவீத இளைஞர்களுக்கு தொழில் இல்லாததோடு அவர்கள் கல்வி அல்லது வேலை பயிற்சிகளைப் பெறவில்லை. ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கும் 3,000 பொது சேவை வேலைகளுக்கு 400,000 பல்கலைக்கழக பட்டதாரிகள் போட்டியிடுகின்றனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில், 18.7 சதவீத மக்கள் தேசிய வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்ந்ததாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.
1972 இல் பிரதமர் ஷேக் முஜிபூர் ரஹ்மானால் நிறுவப்பட்ட அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டு முறைமை, தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த நிர்வாகங்களால் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக, அரசாங்க சார்பு குழுக்களை உருவாக்க பல முறை திருத்தப்பட்டுள்ளது.
இந்த அமைப்பை எதிர்க்கும் முந்தைய ஆர்ப்பாட்டங்களின் போது, 2018 ஆம் ஆண்டில் உலக சோசலிச வலைத்தளம் விளக்கியபடி: “இட ஒதுக்கீட்டு முறைமையானது பிளவுபடுத்துகின்றதும் பிற்போக்கானதுமாகும். இது தற்போதுள்ள சமூக ஒழுங்கையும் வேலையின்மை மற்றும் பாரிய வறுமைக்கு மூலகாரணமான முதலாளித்துவ அமைப்பு முறையை சவால் செய்வதிலிருந்து இந்த பாரிய எதிர்ப்பு இயக்கத்தை திசைதிருப்பிவிடப் பயன்படுகிறது.”
பங்களாதேஷ் ஊடகங்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஒரு “பகுதி வெற்றி” என்று முன்வைத்துள்ள நிலையில், பிற்போக்கு அமைப்புமுறை தொடர்ந்து இருந்து வருகிறது. இது, எதிர்காலத்தில் இதனைப் பயன்படுத்திக்கொள்ள ஆளும் உயரடுக்கினரை அனுமதிக்கிறது. பாக்கிஸ்தான் மற்றும் இந்தியாவில் உள்ள அதன் சமதரப்பினரைப் போலவே பங்களாதேஷ் முதலாளித்துவமும், தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு அடிப்படை சமூக அல்லது ஜனநாயக பிரச்சினைகளையும் தீர்க்க இலாயக்கற்றிருக்கிறது.
மாணவர்களுக்கு எதிரான கொடூரமான ஒடுக்குமுறையானது தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகும். மேலும் ஹசினா ஆட்சி அதன் சமூக தாக்குதல்களுக்கு அதிகரித்து வரும் எதிர்ப்பை அடக்குவதற்காக சர்வாதிகார விதிமுறைகளை நோக்கி திரும்புகிறது என்பதற்கான மற்றொரு சமிக்ஞையாகும்.
தெற்காசியாவில் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் ஒரு பாகமாக, ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிக்க முதலாளித்துவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதே, பங்களாதேஷ் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் முன்னோக்கி செல்வதற்குரிய வழியாகும். இந்த போராட்டத்தை உருவாக்க நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தைப் படிக்குமாறு தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் படிக்க
- பங்களாதேஷ் அரசாங்கம் புதிய "அத்தியாவசிய சேவைகள்" என்ற வேலைநிறுத்த எதிர்ப்பு சட்டங்களை முன்வைக்கிறது
- எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக பங்களதேஷ் முழுவதும் தெருமுனைப் போராட்டங்கள் வெடிக்கின்றன
- விக்டோரியா நூலாண்ட் பங்களாதேஷிற்கு பயணம், ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் உந்துதலுக்கு அதன் ஆதரவை கோருகிறார்