முன்னோக்கு

போர்க்குற்றவாளி நெதன்யாகுவை அமெரிக்க காங்கிரஸ் பாராட்டுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

புதனன்று, இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க காங்கிரசின் ஒரு கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அங்கு கூடியிருந்த ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரின் ஆரவாரத்திற்கும் கைதட்டலுக்கும் மத்தியில் காஸா இனப்படுகொலையின் முன்னேற்றம் குறித்து அவர் பெருமைபீற்றினார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பேச வந்தபோது கையை அசைக்கிறார்.

பெருவாரியான மக்கள் எதிர்ப்பையும் மீறி, நெதன்யாகுவுக்கு கிடைத்த வரவேற்பு, அமெரிக்காவில் ஜனநாயக ஆட்சி வடிவங்களின் முறிவிலும், இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு மற்றும் பாசிசவாத காட்டுமிராண்டித்தனத்தை அமெரிக்க அரசாங்கம் வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் அரவணைப்பதிலும் கடைப்பிடிப்பதிலும் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கிறது.

நெதன்யாகுவின் வருகையும், அவர் பெற்ற பரவசமான வரவேற்பும், ஜேர்மன் நாடாளுமன்றத்தின் முன் ஹிட்லர் தோன்றியதைத் தவிர வேறொன்றையும் நினைவூட்டவில்லை. “ஹிட்லர் வாழ்க!” என்று முழக்கமிட்ட ஜேர்மன் பிரதிநிதிகளும், “அமெரிக்கா” என்று குரைத்த அமெரிக்க காங்கிரஸ்காரர்களும் ஒரே துணியிலிருந்து வெட்டப்பட்டவர்கள் ஆவர்.

நெதன்யாகு போர்க்குற்றவாளிகள் மத்தியில் ஒரு போர்க்குற்றவாளியாக தன்னை வெளிப்படுத்தியுள்ளார். “காங்கிரஸைத் தவிர, வேறெந்த அமெரிக்க குற்றவியல் வர்க்கமும் இல்லை” என்ற மார்க் ட்வைனின் அவதானிப்பின் உண்மையை இந்த பாரிய படுகொலைகாரனுக்கு இருகட்சிகளின் கரவொலி ஊர்ஜிதம் செய்தது.

சில ஜனநாயகக் கட்சியினர் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என்றாலும், காங்கிரஸ் பெண் உறுப்பினர் ரஷிதா திலீப் நெதன்யாகுவை “இனப்படுகொலை குற்றவாளி” என்று குற்றஞ்சாட்டும் ஒரு பதாகையைக் கொண்டிருந்தார், இது காட்சிக்கு மட்டுமே. ஜனநாயகக் கட்சியின் உண்மையான நிலைப்பாடு இப்பொழுது ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இருக்கும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸால் சுருக்கமாகக் கூறப்பட்டது. நெதன்யாகுவுக்கு எதிரான “தேசபக்தியற்ற போராட்டக்காரர்களை” கண்டித்து வியாழனன்று ஹாரிஸ் ஓர் அறிக்கை வெளியிட்டதுடன், நெதன்யாகுவை தனித்தனியாக சந்தித்த பின்னர், “இஸ்ரேல் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதை நான் எப்போதும் உறுதி செய்வேன் “ என்று அறிவித்தார்.

பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலை போரை “காட்டுமிராண்டித்தனத்திற்கும் நாகரிகத்திற்கும் இடையிலான ஒரு மோதல்” என்று குறிப்பிட்டு நெதன்யாகு தனது உரையை தொடங்கினார். இஸ்ரேலிய பிரதம மந்திரி “நாகரிகம்” என்ற பெயரில் தான் பேசுவதாக மறைமுகமாக குறிப்பிட விரும்பினார். ஆனால், உலக மக்கள்தொகையின் பரந்த பெரும்பான்மையினர் ஒன்பது மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் காஸா இனப்படுகொலையை ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்தின் உருவடிவமாக காண்கின்றனர்.

காங்கிரஸை “ஜனநாயகத்தின் கோட்டை” என்று பிரகடனப்படுத்திய பின்னர், நெதன்யாகு அவரது உரையின் பெரும்பகுதியை, இனப்படுகொலை-எதிர்ப்பு போராட்டக்காரர்கள், மற்றும் அவர்களின் முதல் அரசியலமைப்பு திருத்த உரிமைகளைப் பயன்படுத்தியதற்காக அவர்கள் மீதான ஒரு கடுமையான கண்டனத்தின் மீது ஒருங்குவிந்திருந்தார்.

காஸா இனப்படுகொலையை எதிர்க்கும் அமெரிக்கர்களை “ஈரானின் பயனுள்ள முட்டாள்கள்” என்று அழைத்ததன் மூலம் நெதன்யாகு தனது அரசாங்கத்திற்கு எதிரான அமைதியான ஆர்ப்பாட்டங்களை கண்டித்தார். அவர் மேலும் கூறினார், “எங்களுக்குத் தெரிந்த வரையில், இந்த கட்டிடத்திற்கு வெளியே இப்போது நடந்து கொண்டிருக்கும் இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ஈரான் நிதியுதவி செய்கிறது.” போராட்டங்கள், “யூத எதிர்ப்புவாதத்தால்” உந்தப்பட்டவை என்று அவர் வலியுறுத்தினார்.

பல யூத மக்கள் போராட்டங்களில் முன்னணியில் இருந்து வருகின்றனர் என்ற உண்மையானது, நெதன்யாகு அவரது “பெரிய பொய்யில்” புறக்கணிக்க தேர்ந்தெடுத்த ஒரு அசௌகரியமான உண்மையாகும். எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் யூத எதிர்ப்பினால் உந்துதல் பெறவில்லை, மாறாக இஸ்ரேல் நடத்தும் மகத்தான குற்றங்களின் எதிர்ப்பினால் உந்துதல் பெற்றவர்கள் ஆவர்.

நெதன்யாகு மீது “படுகொலை” மற்றும் “நிர்மூலமாக்கல்” குற்றஞ்சாட்டி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னணி வழக்குத்தொடுனர் கடந்த மாதம் தாக்கல் செய்த குற்றச்சாட்டுக்கள் மற்றும் பாலஸ்தீன பிராந்தியங்கள் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு சட்டவிரோதமானது என்று கடந்த வாரம் சர்வதேச நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பு ஆகியவற்றின் குற்றச்சாட்டுகளின் கீழ் நெதன்யாகு காங்கிரசில் உரையாற்றினார். இந்த தீர்ப்புகளுக்கு பதிலளிக்கும் விதமாக, நெதன்யாகு சர்வதேச சட்டத்தை கண்டித்து, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ய இஸ்ரேலுக்கு மட்டுமல்ல, அமெரிக்காவிற்கும் உரிமை உண்டு என்று வலியுறுத்தினார்.

இந்த அமைப்புகள், இஸ்ரேலுக்கு எதிரான ஒரு புதிய “இரத்த அவதூறில்” பங்கெடுத்து வருவதாக நெதன்யாகு வலியுறுத்தினார்.

நெதன்யாகு அவரது குற்றச்சாட்டுக்களைப் பாதுகாக்க, காஸாவில் அப்பாவி மக்களின் இறப்பு எண்ணிக்கை “நடைமுறையில் எதுவுமில்லை” என்ற கூற்றை உள்ளடக்கிய மலைப்பூட்டும் பொய்களைப் பயன்படுத்தினார்.

அக்டோபர் 7 முதல் காஸாவில் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை 39,000 க்கும் அதிகமாக உள்ளது, அதேவேளையில் தி லான்செட் இது 186,000 அல்லது அதற்கும் அதிகமாக இருக்கக்கூடும் என்று மதிப்பிட்டுள்ளது. காஸா முழுவதும் பஞ்ச நிலையில் இருப்பதாக உணவுக்கான உரிமை தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், நெதன்யாகு தனது உரையை நிகழ்த்த அழைக்கப்பட்டார் என்பது அவரது உரையைப் போலவே முக்கியமானது. அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பாரிய எதிர்ப்பை எதிர்கொண்டு, ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் ஒரு இனப்படுகொலை நடத்தும் அரசாங்கத்தின் தலைவரை காங்கிரசின் கூட்டு அமர்வு ஒன்றில் உரையாற்ற அழைத்தனர், இது ஒரு வெளிநாட்டுத் தலைவருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த கௌரவங்களில் ஒன்றாகும்.

நெதன்யாகுவின் வருகைக்கு எதிரான போராட்டங்களுக்கு அழைப்புவிடுக்கையில், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த், இது இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உண்மையான உறவை அம்பலப்படுத்துவதாக குறிப்பிட்டார். “அவரது அரசாங்கத்தால் நடத்தப்பட்டு வருகின்ற இனப்படுகொலை போர் மத்திய கிழக்கிலும் உலகெங்கிலும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் முதலாளித்துவ புவிசார் அரசியல், நிதியியல் மற்றும் பெருநிறுவன நலன்களை எவ்வாறு முன்னெடுத்து வருகிறது” என்பது குறித்த ஒரு “முன்னேற்ற அறிக்கையை” வழங்க நெதன்யாகு அழைக்கப்பட்டார்.

இது கூடியிருந்த காங்கிரஸ் உறுப்பினர்களின் இடிமுழக்க கரவொலியில் மட்டுமல்ல, மாறாக நெதன்யாகுவின் கருத்துக்களின் உள்ளடக்கத்திலும் தெளிவாக இருந்தது.

உரையின் இரண்டாம் பாதி, காஸாவில் நடக்கும் இனப்படுகொலையானது மத்திய கிழக்கு முழுவதிலும், குறிப்பாக ஈரான் மீது குவிப்புக் காட்டும், அமெரிக்கத் தலைமையிலான பரந்த போரின் ஒரு கூறுபாடு என்ற வாதத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

அமெரிக்காவை “மேற்கத்திய நாகரிகத்தின் பாதுகாவலரும் உலகின் மிகப்பெரிய சக்தியும்” என்று அறிவித்த நெதன்யாகு, “நீங்கள் ஒரு விஷயத்தை நினைவில் வைத்திருந்தால், இந்த பேச்சைப் பற்றிய ஒரு விஷயம், இதை நினைவில் கொள்ளுங்கள்: எங்கள் எதிரிகள் உங்கள் எதிரிகள், எங்கள் சண்டை உங்கள் சண்டை, எங்கள் வெற்றி உங்கள் வெற்றியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

“அமெரிக்காவை உண்மையிலேயே சவால் செய்ய, அது முதலில் மத்திய கிழக்கை வெல்ல வேண்டும் என்பதை ஈரான் புரிந்துகொள்கிறது... இருப்பினும், மத்திய கிழக்கின் இதயத்தில், இஸ்ரேல் அரசு ஈரானின் வழியில் நிற்கிறது...” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

உண்மையில், யதார்த்தம் தலைகீழாக உள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியம் “பாலஸ்தீன பிரச்சினைக்கான இறுதி தீர்வை” ஈரானுக்கு எதிரான போரின் முதல் கட்டமாக பார்க்கிறது. ஈரானுக்கு எதிரான போரானது ரஷ்யாவுக்கு எதிராக தீவிரமடைந்து வரும் போர் மற்றும் சீனாவுடன் அபிவிருத்தி அடைந்து வரும் மோதலின் பாகமாக உள்ளது.

போர் குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், இன சுத்திகரிப்பு மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றைச் செய்ய இஸ்ரேலை அனுமதிப்பதன் மூலமாக, அமெரிக்க ஏகாதிபத்தியமும் இத்தகைய குற்றங்களை செய்ய அதிகாரமளிக்கும் என்று நெதன்யாகு விளக்கினார்: “இஸ்ரேலின் கைகள் கட்டப்பட்டால், அடுத்தது அமெரிக்காதான்.”

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் மூன்றரை மாதங்களுக்கும் குறைவான நாட்களே இருக்கையில், முழு அமெரிக்க அரசியல் அமைப்புமுறையும் ஒரு தீவிர நெருக்கடியில் மூழ்கியுள்ளது. ஒரு படுகொலை முயற்சியில், மயிரிழையில் உயிர்தப்பிய ட்ரம்ப், பாசிசவாத பிற்போக்குத்தனத்தில் களிப்படைந்துள்ள குடியரசுக் கட்சிக்கு தலைமை தாங்குகிறார். கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

கருத்து வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், இரு கட்சிகளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வன்முறை வெடிப்பை ஆதரிப்பதில் ஒன்றுபட்டு நிற்கின்றன. காஸா இனப்படுகொலை அதன் ஒரு கூறுபாடு ஆகும். அவர்கள் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான போரிலும் ஐக்கியப்பட்டு நிற்கின்றனர்.

நெதன்யாகு அவரது பாசிசவாத வசைமாரி உரையை மேற்கொண்டிருந்த சமயத்தில், உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சியும் ஐக்கிய அமெரிக்க சட்டமன்றக் கட்டிடத்திற்கு (Capitol) வெளியே ஒரு பேரணியை நடத்திக் கொண்டிருந்தன, அது இனப்படுகொலை மற்றும் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க ஒரு வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கை முன்னெடுத்தது.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

டேவிட் நோர்த் பேரணியில் வெளியிட்ட அவரது கருத்துக்களில், நெதன்யாகுவின் உரை, காஸா இனப்படுகொலை மற்றும் அந்த இனப்படுகொலைக்கு ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தின் ஆதரவு ஆகியவற்றில் இருந்து அவசியமான முடிவுகளை எடுத்தார்:

ஒரு போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு தொழிலாள வர்க்கத்தை ஒரு சர்வதேச சக்தியாக அணிதிரட்டுவது அவசியமாகும். இதற்கு தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிதம் செய்வது அவசியமாகும். அதற்கு முதலாளித்துவவாதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதோ, ஒரு அமைதியான கொள்கையை ஏற்குமாறு அவர்களுக்கு முறையிடுவதோ அதன் நோக்கமாக இருக்கவில்லை. மாறாக, தொழிலாள வர்க்கம் இந்தக் கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினால், அவர்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்க விரும்பினால், அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதை அவர்களுக்கு விளக்கும் ஒரு முன்னோக்கு அவசியப்படுகிறது.

பேரணியின் அனைத்து உரைகளையும் கவனிக்குமாறும், அவற்றை சாத்தியமானளவு பரவலாக பகிர்ந்து கொள்ளுமாறும் உலக சோசலிச வலைத் தளம் அதன் வாசகர்கள் அனைவரையும் வலியுறுத்துகிறது.

Loading