"நாங்கள் நரகத்தில் இருக்கிறோம்": காஸா குடியிருப்பாளர் WSWS உடன் பேசுகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலக சோசலிச வலைத் தளம் (wsws.org) சமீபத்தில் காஸா பகுதியில் உள்ள டெய்ர் அல் பலாவில் (Deir al Balah) வசிக்கும் காஸான் (Ghassan) (இது அவரது உண்மையான பெயர் அல்ல) என்பவருடன் பேசியது. இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரின் ஒன்பது மாதங்களைத் தொடர்ந்து அவரது குடும்பம் மற்றும் நூறாயிரக்கணக்கான மக்கள் எதிர்கொள்ளும் நிலைமைகள் குறித்து அவர் விவரித்தார்.

ஜூலை 16, 2024 அன்று டெய்ர் அல்-பலாவில் உள்ள மருத்துவமனை சவக்கிடங்கில், காஸா பகுதியில் இஸ்ரேலிய குண்டுவீச்சில் கொல்லப்பட்ட தங்கள் உறவினர்களின் உடல்களுக்கு அருகில் பாலஸ்தீனியர்கள் கூடுகிறார்கள் [AP Photo/Abdel Kareem Hana]

குண்டு வீச்சில் சேதமடைந்த வீட்டில், பல குடும்பங்களைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்டவர்களுடன் காஸான் கூட்டாக வசிக்கிறார். சோலார் பேனல்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுவதைத் தவிர, இப்பகுதியில் மின்சாரம் இல்லை. இணையம் மற்றும் மொபைல் தரவு நம்பகத்தன்மையற்றவை, ஆனால் வெளி உலகத்துடன் தொடர்புகொள்வது சாத்தியம், மேலும் பல காஸா மக்கள் இஸ்ரேலிய ஆட்சியின் அட்டூழியங்களைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்கு சமூக ஊடகங்களைத் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர்.

அவரும், அவரது குடும்பத்தினரும் கடந்த ஆண்டு பிற்பகுதியில் நூறாயிரக்கணக்கானவர்களுடன் தெற்கு நகரமான ரஃபாவிற்கு (Rafah) தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று காஸான் விளக்கினார். “அவர்கள் எங்கள் சுற்றுப்புறத்தில் குண்டுவீசினர்.  எங்கள் ஜன்னல்கள், கதவுகள், கூரை, சில சுவர்கள் என எங்கள் வீட்டிற்கு சேதங்கள் ஏற்பட்டது. பின்னர் நாங்கள் நேரடியாக ரஃபாவுக்குப் புறப்பட்டோம், ஆனால் முதலில் ஐக்கிய நாடுகள் சபையின் பள்ளிக்குச் சென்றோம், பின்னர் வேறொரு இடத்தில், பின்னர் நாங்கள் வீட்டிற்குச் செல்ல முயற்சித்தோம்.”

ரஃபாவில் அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று இஸ்ரேல் ஆரம்பத்தில் காஸாவிலுள்ள மக்களிடம் கூறியிருந்தது. ஆனால் இது பொய்: ரஃபா மீது மீண்டும் மீண்டும் குண்டுவீசி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் படையெடுத்து, ஏற்கனவே இடம்பெயர்ந்த நூறாயிரக்கணக்கான மக்களை அங்கிருந்து வெளியேறும்படி இஸ்ரேல் கட்டாயப்படுத்தியது.

ரஃபாவிலிருந்து பல்லாயிரக்கணக்கான அகதிகளுடன் காஸானின் குடும்பம் டெய்ர் அல் பாலாஹ்வுக்கு இடம்பெர்ந்தது. அவர்கள் ஆரம்பத்தில் பல குடும்பங்களுடன் ஒரு வீட்டில் வசித்து வந்தனர், மொத்தம் சுமார் 50 பேர், “ஆனால் சில குடும்பங்கள் வெளியேறி அகதி முகாம்களுக்குச் சென்றனர், மற்ற குடும்பங்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றனர்.” நிலைமைகள் மிகவும் நெரிசலாகவும் ஆரோக்கியமற்றதாகவும் உள்ளன, தண்ணீர் பற்றாக்குறை மற்றும் கோடை வெப்பத்தால் மோசமாக உள்ளது. வீட்டில் பல குழந்தைகள் உள்ளனர், அவர்களில் சிலர் மிகவும் சிறியவர்கள்.

இந்தக் குழந்தைகளின் வாழ்க்கை நிலைமைகள் குறித்து காஸான் கூறினார்: “குழந்தை பருவம் இல்லாத இவர்களுக்கு, பள்ளி இல்லை, எனவே அவர்கள் தெருவில் இருக்கிறார்கள், அவர்கள் வீட்டைச் சுற்றி விளையாடுகிறார்கள். அவ்வளவுதான். நெருப்பு மூட்டவும், சமைக்கவும் விறகுகளுக்கும், கழுவுவதற்கு தண்ணீரைக் கொண்டு வருவதற்கும் தேடி அலைகிறார்கள். அவர்கள் ஆபத்தில் உள்ளனர். பாதுகாப்பான இடம் இல்லை.  ‘இந்தப் பகுதி பாதுகாப்பானது’ என்று [இஸ்ரேலியர்கள்] கூறினாலும், இந்தப் பகுதி பாதுகாப்பானது அல்ல என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.”

ஜூன் 18, 2024 அன்று டெய்ர் அல் பலாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் பாலஸ்தீனியர்கள் தங்கள் உறவினர்களுக்காக துக்கம் அனுஷ்டிக்கின்றனர் [AP Photo/Abdel Kareem Hana]

காஸான் தனது வயதான பெற்றோர் எதிர்கொள்ளும் சவால்களையும் விளக்கினார். “என் அப்பா நலமாக இருக்கிறார், அவருக்கு எந்த உடல்நலப் பிரச்சினையும் இல்லை, ஆனால் என் அம்மா உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார், அவருக்கு இதயப் பிரச்சினைகள் உள்ளன. அவருக்கு ஆபரேஷன் செய்வதற்காக நாங்கள் காத்திருந்தோம், ஆனால் இது நடந்துள்ளதால் அதற்கு தற்போது வாய்ப்பு இல்லை, இப்போது, ​​​​அவருக்கு மருந்து [தேவை], அதைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது.”

காஸாவின் சுகாதார அமைப்பு மற்றும் அதன் பெரும்பாலான மருத்துவமனைகள் அழிக்கப்படுவதால், “நீங்கள் அவசர சிகிச்சைக்கானவர்களைப் பார்த்திருப்பீர்கள், சிறப்பு மருத்துவ சிகிச்சை அல்ல. கல்லீரல் வீக்கம் உள்ளவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் [அது எப்படி இருக்கும்] என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியாது. அதனால் நிலைமை கடினமாக உள்ளது” என்றார்.

இரத்த தானம் செய்வதற்காக அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனைக்கு (Al-Aqsa Martyrs Hospital) காஸான் வருகை தந்திருந்தார், மேலும் மோசமான, குழப்பமான நிலைமைகளைப் பார்த்தார். “அங்கு மிகவும் பரபரப்பாக கானப்பட்டது மற்றும் மிகவும் சத்தமாக இருந்தது. அங்கு இரண்டாயிரம் பேருக்கு மேல் இருக்கலாம். காஸாவில் இன்னும் மருத்துவர்கள் இருந்தார்கள், “ஆனால் தற்போது பலர் கொல்லப்பட்டுள்ளனர், பலர் சிறையில் உள்ளனர்” என்றும் அவர் கூறினார்.

உணவும், குடிநீரும் தேடுவது அன்றாடச் சோதனையாக இருக்கிறது; இரண்டும் வாங்கப்பட வேண்டும் மற்றும் அவைகள் மிகவும் விலை உயர்ந்தவையாக இருக்கின்றன. காஸா பகுதியில் வேலைகள் இல்லாததால், இனப்படுகொலை தொடங்குவதற்கு முன்பு மக்கள் தாங்கள் சேமித்த பணம் மற்றும் பொருட்களை நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர். ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, சில வளங்களைக் கொண்டிருந்தவர்களும் இப்போது கொஞ்சம் அல்லது எதுவும் அற்றவர்களாக உள்ளனர்.

வரையறுக்கப்பட்ட உணவு உதவி கிடைத்தது, காஸான் விளக்கினார். “மாவு மற்றும் கொண்டைக்கடலை, பதப்படுத்தப்பட்ட இறைச்சி போன்ற சில பதிவு செய்யப்பட்ட உணவுகளைக் கொடுத்து UNRWA  உதவுகிறது.” உலக உணவுத் திட்டமும் இதே போன்ற பொருட்களை விநியோகம் செய்வதைப் பற்றி காஸான் அறிந்திருந்தார். ஆனால் அவர் கூறினார், “இது நான்கு அல்லது ஐந்து வகையான உணவுகள் மட்டுமே; எட்டு மாதங்களாக இந்த உணவைத் தினமும் உண்ண முடியாது.”

இஸ்ரேலின் போர் முற்றுகை மூலம், உதவிப் பணியாளர்களைக் கொன்றது, சேமிப்புக் கிடங்குகளில் இருந்து உணவு திருடியது போன்றவற்றால் உதவி விநியோகம் மிகக் கடுமையாக தடைபட்டுள்ளது.


ஒரு உணவு விநியோகிக்கும் வண்டியிலிருந்து உணவை எடுப்பதற்காக, பசியால் வாடும் மக்கள் துரத்திச் செல்வதை காஸான் பார்த்திருந்தார்.

ஜூலை 9 அன்று, ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு ஒரு அறிக்கையை வெளியிட்டது: “பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் வேண்டுமென்றே மற்றும் இலக்கு வைக்கப்பட்ட பட்டினி பிரச்சாரம் ஒரு வகையான இனப்படுகொலை வன்முறை மற்றும் காஸா முழுவதும் பஞ்சத்தை விளைவித்துள்ளது” என்று கூறியது.

அவநம்பிக்கை மற்றும் பசியுடன் இருக்கும் மக்கள் காஸாவில் உதவி வண்டியைச் சுற்றி வளைக்கின்றனர்.

காஸாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை மாதக்கணக்கில் நிலையாக இருக்கும் ஒரு அளவாக 38,000 என்று தொடர்ந்து கூறும் ஊடக அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில்
காஸான் கூறியதாவது: “என் கருத்துப்படி, இது குறைந்தது 100,000 ஆக இருக்கும். எனவே, ஊடகங்களை நம்ப வேண்டாம். அவர்கள் [இஸ்ரேல்] ஊடகங்களைக் கட்டுப்படுத்துகிறார்கள், அவர்கள் செய்திகளைக் கட்டுப்படுத்துகிறார்கள், அவர்கள் விரும்பியதை உங்களுக்குக் காட்டுகிறார்கள்.”

இஸ்ரேலின் இனப்படுகொலையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ குறைந்தது 186,000 பேர் கொல்லப்பட்டதாக லான்செட் ஆய்வு மதிப்பிட்டுள்ளது என்று இந்த நிருபர் குறிப்பிட்டார், ஆனால் இந்த கண்டுபிடிப்பு பெருநிறுவன ஊடகங்களால் பெரும்பாலும் மறைக்கப்பட்டுவிட்டது.

காஸா பகுதியில் பிறந்து வளர்ந்த காஸான், “ஐந்து அல்லது ஆறு அல்லது ஏழு போர்களில் தான் வாழ்ந்திருக்கிறேன். நான் ஐரோப்பாவைச் சேர்ந்த ஒரு நண்பரிடம் சொன்னேன்: நான் இப்போது காஸா போர்களில் டாக்டர் பட்டம் பெற்றுவிட்டேன். 2008-9, 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் காஸா மீதான இஸ்ரேலின் கொலைகாரத் தாக்குதல்கள் மற்றும் அதன் பல தசாப்த கால முற்றுகையால் ஏற்பட்ட கடுமையான இழப்புகள் இருந்தபோதிலும், தற்போதைய இனப்படுகொலையுடன் ஒப்பிடும்போது, “அக்டோபர் 7 க்கு முன்பு நாங்கள் சொர்க்கத்தில் இருந்தோம் என்று நீங்கள் கூறலாம். ஆனல் இப்போது நாங்கள் நரகத்தில் இருக்கிறோம்” ​​என்று காஸான் கூறினார்.

பாலஸ்தீனிய குடிமக்களைக் கொல்வதற்கு இஸ்ரேலிய இராணுவம் பயன்படுத்திய வழிமுறைகளை விவரிக்கும் காஸான், “தேடப்பட்ட ஒருவரைக் கண்டால், சுற்றி இருப்பவர்களைக் கொன்றுவிடுவார்கள். அவர் வீட்டுக்குள் இருந்தால், இந்த வீட்டையும், இந்த வீட்டைச் சுற்றியுள்ள பல வீடுகளையும் வெடிகுண்டு வைத்து தகர்ப்பார்கள். தெருவில் அவரைக் கண்டால், தெரு மற்றும் அவருக்கு அருகில் உள்ளவர்கள் மீது குண்டு வீசுவார்கள். அவர்கள் ஒருவரைக் கொல்ல விரும்பவில்லை, 20 பேரைக் கொல்ல விரும்புகிறார்கள். அவர்கள் எங்களைக் கொல்வதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்“ என்று கூறினார்.

மக்கள் ஒரு நிலையான பயங்கரமான நிலையில், வழக்கமான குண்டு வீச்சுக்கள் மற்றும் “பகல் மற்றும் இரவில் ட்ரோன்களுடன் வாழ்கின்றனர்: இது எல்லா நேரத்திலும், மிகவும் சத்தமாக, மிகவும் ஆபத்தானதாகவும் இருக்கிறது. அவர்கள் வெவ்வேறு வகையான ட்ரோன்களைப் பயன்படுத்துகிறார்கள்: பெரியது, சிறியது, சில உளவு பார்க்க, பதிவு செய்ய, படங்களை எடுப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக இரவில் வெளியில் செல்வது ஆபத்தானது” என காஸான் கூறினார்.

சில ட்ரோன்கள் “எதிர்ப்பு மக்களின் குரல் அல்லது கைதிகளின் குரல்” மற்றும் “அழும் பெண்களின் குரல்கள்” ஆகியவற்றைப் பதிவுசெய்ததாகவும், குண்டு வீச்சிலிருந்து மக்களை கவனமாக இருக்குமாறு கூச்சலிடுவதாகவும் அவர் விளக்கினார். “அவர்கள் இந்த மக்களிடமிருந்து இந்த குரல்களைப் பதிவு செய்கிறார்கள், அதை ட்ரோனில் வைத்து, மக்களை வெளியே செல்லவைக்க [கவர] அவர்கள் தெருவில் இந்த ட்ரோன்களைப் பயன்படுத்துகிறார்கள், அப்படி மக்கள் வெளியே செல்லும்போது, ​​அவர்கள் அவர்களை சுடுகிறார்கள்” என்று தெரிவத்தார்.

இறுதியில், ஒரு போர் நிறுத்தம் ஒப்புக்கொள்ளப்படும், ஆனால் மக்களின் துன்பம் தொடரும்: “நாங்கள் சில நேரங்களில் இங்கே சொல்கிறோம்: போருக்குப் பிறகு போர், ஏனென்றால் அது ஒரு வித்தியாசமான வாழ்க்கையாக இருக்கும். தப்பிப்பிழைத்தவர்கள் தங்கள் முழு வாழ்க்கையையும் புதிதாக மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும், மேலும் இதற்கு பெரிய அளவு பணம் தேவைப்படும்” என்று காஸான் கூறினார்,

உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களைப் பற்றி காஸான் கடுமையாக விமர்சித்தார், “இந்தப் போரை நிறுத்த இஸ்ரேலுக்கு கட்டளையிடும் அளவுக்கு எந்தத் தலைவரும், எந்த அரசாங்கமும் வலுவாக இல்லை” என்று கூறினார். இதில் “அரபு அல்லது இஸ்லாமிய நாடுகளும் அடங்கும்” என்று அவர் தெளிவுபடுத்தினார். “எங்களைப் பார்த்துக் கொண்டே எங்களைத் தனியே விட்டுச் சென்றார்கள். அவர்கள் அமெரிக்காவைப் போலவே இருக்கிறார்கள், எந்த வித்தியாசமும் இல்லை” என்று தெரிவித்தார்.

இந்த நிருபர், வாஷிங்டனும் அதன் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அதன் நட்பு நாடுகளும் காஸா மீதான இஸ்ரேலின் போருக்கு முழு ஆதரவுடன் இருப்பதாகவும், அதன் இனப்படுகொலை முறைகள் வருங்காலப் போர்களுக்கான உருமாதிரியாகப் பயன்படுத்தபட உள்ளது என்று விளக்கினார்.

இஸ்ரேலுக்குள் இடம்பெறும் நெதன்யாகு ஆட்சிக்கு எதிரான போராட்ட இயக்கத்தை காஸான் கடுமையாக விமர்சித்தார்: “தங்கள் கைதிகளை திரும்பப் பெறுவதற்காக இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எங்களைக் கொல்வதை நிறுத்தாமல், அவர்கள் தங்கள் மகனைப்  மீட்பதற்கும், காஸாவில் கைதிகளாக இருக்கும் தங்கள் தாய், தங்கை அல்லது மகள், தங்கள் குடும்பத்தைப் பெறுவதற்கும் அவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்கள் தங்களைப் பற்றி கவலைப்படுகிறார்கள், அவர்கள் எங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை“ என்று மேலும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு WSWS நிருபர் பதிலளிக்கும் விதமாக, இது பெரும்பாலும் எதிர்ப்பு போராட்டங்களின் தன்மை என்று ஒப்புக்கொண்டார். ஆனால் இஸ்ரேலில் அச்சம் மற்றும் தணிக்கை சூழல் நிலவுகிறது, மேலும் காஸாவில் என்ன நடக்கிறது என்பது பலருக்குத் தெரியாது என்று குறிப்பிட்டார். இஸ்ரேலிய தற்காப்புப் படையால் போர் மற்றும் கொலைகளுக்கு கொள்கை ரீதியான எதிர்ப்பும் உள்ளது, அது சிறியது ஆனால் வளர்ந்து வருகிறது.

இனப்படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு விடுக்கும் மாணவர் முகாம்கள் உட்பட உலகளாவிய எதிர்ப்புகள் குறித்து காஸான் கூறினார்: “இது மிகவும் தாமதமானது, ஆனால் இது எதையும் விட சிறந்தது. உலகம் மாறத் தொடங்குவது நல்லது என்று நான் நம்புகிறேன் என்று குறிப்பிட்டார்.

சர்வதேச அளவில் மக்கள் அதிக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காஸான் வேண்டுகோள் விடுத்தார்: “எங்களுக்கு மனிதாபிமானம் தேவை. நீங்கள் எங்கள் குரல் என்பதால் எங்களுக்கு உங்கள் ஆதரவு மேலும் மேலும் தேவை. எங்களை சும்மா விட்டு விடாதீர்கள், உங்கள் ஆதரவை நிறுத்தாதீர்கள், நீங்கள் செய்வதை தொடர்ந்து செய்யுங்கள்“.

உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கு போர் ஆயுதங்களின் உற்பத்தியை நிறுத்த வேலைநிறுத்த நடவடிக்கையை எடுக்குமாறும், அவற்றை இஸ்ரேலுக்கு அனுப்புவதை தடுக்குமாறும் WSWS அழைப்பு விடுக்கிறது. அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி ஜூலை 24 அன்று வாஷிங்டன் டிசியில் ஒரு போராட்டத்தை ஏற்பாடு செய்தது—இந்தப் போராட்டம், போர்க்குற்றவாளி ஜோ பைடெனுக்கும் நெதன்யாகுவின் போர் இயந்திரத்துக்கு ஆதரவை வழங்கும் அவருடைய நிர்வாகத்துக்கும் வீண் முறையீடுகள் செய்வதற்காக அல்ல. மாறாக காஸா இனப்படுகொலை மற்றும் உலகெங்கிலும் விரிவடைந்து வரும் ஏகாதிபத்தியப் போர்களை நிறுத்தக்கூடிய ஒரேயொரு சக்தியான தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்தைக் கட்டியெழுப்பும் போராட்டத்தின் ஒரு பாகமாகவே இதை ஏற்பாடு செய்திருந்தது.

Loading