முன்னோக்கு

வெனிசுலாவுக்கு ஜனநாயகம் பற்றி பிரசங்கம் செய்வதற்கு அமெரிக்கா யார்?

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

வாஷிங்டனும் இஸ்ரேலும் மத்திய கிழக்கு முழுவதையும் தீ வைத்து வருகின்ற நிலையில், வெனிசுலாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களை, ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக ஒரு சதித்திட்டத்தைத் தூண்டுவதற்காக, பைடென்-ஹாரிஸ் நிர்வாகம் சுரண்டி வருகிறது. ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் அரசாங்கம் சீனா, ரஷ்யா மற்றும் ஈரானுடன் நெருங்கிய உறவைப் பேணி வருகிறது.

ஜூலை 31, ஜனாதிபதி நிக்கோலா மதுரோ, கராகஸில் உள்ள மிராஃப்ளோரஸ் ஜனாதிபதி அரண்மனைக்கு வெளியே இடம்பெற்ற பேரணியில் உரையாற்றுகிறார். [Photo: @PresidencialVen]

உலகெங்கிலும், அமெரிக்க ஏகாதிபத்தியமானது, பூமியிலுள்ள ஆற்றல் மற்றும் மூலோபாய கனிம உற்பத்தி பகுதிகள் மீது அதன் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும் கட்டாயத்தால் வழிநடத்தப்படுகிறது. அதே நேரம், எல்லாவற்றிற்கும் மேலாக, அதே வளங்களுக்கான அதன் முக்கிய புவிசார் அரசியல் போட்டியாளராக இருந்துவரும் சீனாவுக்கு மறுக்கப்பட்டு வருகிறது.

தேர்தல்களின் ஆரம்ப முடிவுகளின் அடிப்படையில், வெனிசுலா தேர்தல் ஆணையமானது, மதுரோ மற்றும் அவரது ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி, (PSUV) போட்டியாளரான எட்முண்டோ கோன்சலஸுக்கு 44 சதவிகிதத்திற்கு எதிராக 51 சதவிகிதம் முன்னிலை வகிக்கின்றனர் என்று அறிவித்தது. முன்னர் அறியப்படாத இராஜதந்திரியான எட்முண்டோ கோன்சலஸ், அமெரிக்காவால் நிதியளிக்கப்பட்ட யூனிட் தளத்தின் பாசிசத் தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு மாற்றாக தன்னை முன்நிறுத்தியிருந்தார்.

மச்சாடோ மற்றும் கோன்சலஸ் ஆகியோர் தங்கள் கூட்டணி தேரதலில் வென்றதாக வலியுறுத்தினர், மேலும் அவர்களின் வெற்றியைப் பாதுகாக்க ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்தனர். இருப்பினும், இரு கட்சிகளும் தங்கள் புகார்களை நிரூபிக்க போதுமான ஆதாரங்களை இதுவரை வழங்கவில்லை.

தேர்தல் தகராறைத் தீர்ப்பதற்கான கோரிக்கையை உச்சநீதிமன்றத்தில் வெளியிட்டுள்ள மதுரோ, மேலும் அனைத்து தேர்தல் பற்றிய தரவுகளையும் எதிர்காலத்தில் முன்வைப்பதாக உறுதியளித்துள்ளார்.

சரிபார்க்கப்பட்ட முடிவுகள் அல்லது நீதித்துறை முடிவுகளுக்காக காத்திருப்பதில் திருப்தி இல்லாத வாஷிங்டன், கடந்த வியாழக்கிழமை தனது சொந்த தீர்ப்பை வெளியிட்டது.

“பெரும் ஆதாரங்களைக் கருத்தில் கொண்டு, வெனிசுலாவில் இடம்பெற்ற ஜூலை 28 ஜனாதிபதித் தேர்தலில் எட்முண்டோ கோன்சலஸ் உர்ரூட்டியா அதிக வாக்குகளை வென்றது அமெரிக்காவிற்கும், எல்லாவற்றிற்கும் மேலாக, வெனிசுலா மக்களுக்கும் தெளிவாகத் தெரிகிறது” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட உரைகளில், மதுரோ அமெரிக்காவால் திட்டமிடப்பட்ட ஒரு “பாசிச சதித்திட்டத்தை” எதிர்கொள்வதாக அறிவித்து, “இராணுவத்தை எச்சரிக்கையாக இருக்கவும், எதற்கும் தயாராக இருக்கவும்” அழைப்பு விடுத்துள்ளார்.

இப்போதைக்கு, ஆயுதப்படைகளின் தலைவரும், பாதுகாப்பு அமைச்சருமான விளாடிமிர் பட்ரினோ, மதுரோவுக்கு “முழுமையான விசுவாசத்தையும் நிபந்தனையற்ற ஆதரவையும்” மீண்டும் உறுதிப்படுத்தினார்.

தேர்தலின் தொடங்கிய நாளிலிருந்து, வாஷிங்டனின் முழு அரசியல் ஸ்தாபனமும் அமெரிக்க ஆதரவுடைய சதித்திட்டத்திற்கான நிபந்தனைகளை உருவாக்க முற்பட்டு வருகிறது.

செவ்வாயன்று, அமெரிக்க துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் டுவிட்டர் X ல், வாக்குப்பதிவு விவரக் கோவையை உடனடியாக வெளியிடக் கோரி பதிவிட்டிருந்தார். அதில், அவர் பிடிவாதமான முறையில், “அமைதியான எதிர்ப்பாளர்கள் மற்றும் அரசியலில் உள்ளவர்களுக்கு எதிராக, வன்முறை, துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அமெரிக்கா வெனிசுலா மக்களுடன் நிற்கிறது, மக்களின் விருப்பம் மதிக்கப்பட வேண்டும்” என்று அவர் பதிவிட்டார்.

இந்தப் பெண்மனி எதைப் பற்றி பேசுகிறார்?

PSUV கட்சி அலுவலகங்கள், அரசு கட்டிடங்கள், பள்ளிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியவற்றை கொள்ளையடித்தும், எரித்தும் வருகின்ற எதிர்க்கட்சியினர் கலவரத்தினை தூண்டினர். மச்சாடோவின் வெளிப்படையான நோக்கமானது, ஆயுதப்படைகளில் பிரிவுகளைத் தூண்டுவதாக இருந்தது. இது ஒரு சதித்திட்டம், உள்நாட்டுப் போர் மற்றும் வெளிநாட்டு இராணுவ தலையீட்டை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த சம்பவங்கள் ஒன்றும் புதிதல்ல. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, வாஷிங்டனும், அதனிடம் இருந்து ஊதியம் பெற்று வரும் முகவர்களும் வெனிசுலாவில் இதேபோல் பொறுப்பற்ற மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை மீண்டும் மீண்டும் செய்து வருகின்றனர்.

ஏகாதிபத்தியம் வெனிசுலாவின் தலைமையை கடத்தவும், படுகொலை செய்யவும் முயன்று வருவதுடன், அதன் பொருளாதாரத்தை பேரழிவிற்கு உட்படுத்தி, மில்லியன் கணக்கானவர்களை வறுமைக்குள் தள்ளியும், நாடுகடத்தியும் மற்றும் எண்ணற்ற உயிர்களைக் கொல்லும் ஒரு மிருகத்தனமான பொருளாதாரத் தடைகளை விதித்தும் வந்துள்ளது. இதன் விளைவாக, முக்கிய உணவு மற்றும் மருத்துவப் பொருட்களின் தட்டுப்பாட்டால், 100,000 க்கும் மேற்பட்ட இறப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக, ஒரு சிறப்பு செய்தியாளர் ஆல்ஃபிரட் டி சயாஸ் 2020 ஆம் ஆண்டு நிலவரத்தை மதிப்பீடு செய்துள்ளார்.

2002 இல் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஹ்யூகோ சாவேஸை துரிதமாக பதவி நீக்கம் செய்வதற்காக, ஒரு சிதைவுற்ற இராணுவ சதிக்கு வாஷிங்டன் ஆதரவளித்தது. மச்சாடோ போன்ற அதி தீவிர வலதுசாரி சக்திகளை வளர்ப்பதற்கும், அரசாங்கத்தை சீர்குலைக்க வன்முறை பிரச்சாரங்களை ஏற்பாடு செய்வதற்கும் மில்லியன் கணக்கான டாலர்களை அமெரிக்கா செலவிட்டது.

2019 இல், வெனிசுலாவின் “இடைக்கால ஜனாதிபதியாக” ஜுவான் குவைடோ என்பவரை வாஷிங்டன் அறிவித்தது. எந்த மக்கள் ஆதரவையும் பெறாத அவர், எரிவாயு நிறுவனமான CITGO உட்பட பில்லியன் கணக்கான அரச சொத்துக்களை தனது அடியாட்களிடம் ஒப்படைத்தார். மேலும், 2020 இல், முன்னாள் அமெரிக்க இராணுவ சிறப்புப் படை ஆபரேட்டர்கள் மற்றும் இராணுவ ஒப்பந்தக்காரர்கள் அரசாங்கத்தை தூக்கியெறிந்து அதன் தலைவர்களைக் கொல்லும் நோக்கில் படுதோல்வியில் முடிந்த ஒரு படையெடுப்பை ஏற்பாடு செய்தனர்.

தேர்தலுக்குப் பின்னர் வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட ஒரு வெளிப்படையான தலையங்கத்தில், “வெனிசுலாவிற்கான அமைதியான ஜனநாயக மாற்றத்துக்காக, அமெரிக்காவும் மற்ற ஜனநாயக நாடுகளும் பெருமளவில் முதலீடு செய்துள்ளன. அந்த வகையில் இந்தத் தேர்தல் அவர்களிடமிருந்தும் திருடப்பட்டிருக்கிறது“ என்று குறிப்பிட்டது.

இதனை வேறு வார்த்தைகளில் கூறினால், வலதுசாரி எதிர்ப்பை வளர்ப்பதற்கும் வன்முறை மற்றும் ஆட்சி மாற்றத்தைத் தூண்டுவதற்கும் CIA மற்றும் USAID களால் கொட்டப்படும் பணம் அனைத்தும், அவர்கள் விரும்பிய முடிவுகளைத் தர வேண்டும் என்பதாகும்.

கடந்த புதன் கிழமையன்று, ஆள்காட்டி தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி, “எங்களுடைய பொறுமை மற்றும் சர்வதேச சமூகத்தின் பொறுமை தீர்ந்து வருகிறது, வெனிசுலா தேர்தல் [அதிகாரம்] தெளிவாக, இந்தத் தேர்தல் குறித்த முழு விவரமான தரவுகளை வெளியிடும் வரை நான் காத்திருக்கிறேன்” என்று குறிப்பட்டார்.

பில்லியனர்களின் ஆளும் தன்னலக்குழுவால் விலைக்கு வாங்கப்பட்டுள்ள, பெரும்பாலான மக்களால் எதிர்க்கப்படும் போர்களுக்கான தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, ஜனநாயக உரிமைகளை முறையாக அழித்து வருகின்ற, அமெரிக்க அரசாங்கத்திற்கு வெனிசுலா தேர்தல்களின் நடத்தையை ஆணையிட என்ன உரிமை இருக்கிறது?

அமெரிக்க அதிகாரிகள் தங்கள் “பொறுமையை” இழந்து, “மக்களின் விருப்பத்தை” பாதுகாப்பதைப் பற்றி பேசுகின்றனர். ஆனால், அமெரிக்க தேர்தல்கள் கூட மக்கள் வாக்குகளால் தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக ஜனநாயக விரோத தேர்தல் கல்லூரியால் (Electoral College) தீர்மானிக்கப்படுகிறது. 2000 இல், தேர்தலில் தோல்வியுற்ற அணிக்கு ஒரு முடிவை வழங்குவதற்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் ஒரு மாதத்திற்கும் மேலான காலத்தை எடுத்தது. 2020 ஆம் ஆண்டில், குடியரசுக் கட்சியின் வாக்கெடுப்பில் அதன் தெளிவான தோல்வியை முறியடிக்க முயன்றதால், மாநிலங்கள் பல வாரங்களாக இந்த சவால்களைத் தீர்க்கவில்லை.

நவம்பர் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, ஜனநாயகக் கட்சி மில்லியன் கணக்கான டாலர்களை செலவழித்து, மூன்றாவது இடத்திலுள்ள கட்சிகளின் முயற்சிகளுக்கு எதிரான ஒரு முழுமையான போரை அறிவித்துள்ளது. குறிப்பாக, சோசலிச சமத்துவக் கட்சி, தேர்தல் வாக்குச்சீட்டை அணுகுவதற்கு ஏற்கனவே உள்ள தீவிர தடைகளை கடக்க வேண்டும்.

சர்வதேச அளவில், வாஷிங்டனும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும் பில்லியன்கணக்கான டாலர்களில் ஆயுதங்களைக் கொடுத்து உக்ரேனில் இருக்கும் ஆட்சிக்கு முட்டுக்கொடுத்து, ரஷ்யாவுடன் ஒரு பினாமிப் போரை நடத்தி வருகின்றன. மேலும், அப்பட்டமான பாசிஸ்டுகளின் உதவியுடன் இராணுவச் சட்டத்தின் மூலம் உக்ரேன் தேர்தல்களையும் விதிகளையும் காலவரையின்றி ஒத்திவைத்துள்ளன. அதே நேரம், முக்கிய ட்ரொட்ஸ்கிஸ்ட்டான போக்டன் சிரோடியுக் உட்பட இடதுசாரி மற்றும் போர் எதிர்ப்பு எதிர்ப்பாளர்களை இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், உக்ரேன் ஆட்சி தடுத்து வைத்துள்ளது.

மத்திய கிழக்கில், இஸ்ரேலிய இனவெறி ஆட்சிக்கு வரம்பற்ற பில்லியன் டாலர் உதவிகளையும், ஆயுதங்களையும் வழங்குவதன் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் புவிசார் மூலோபாய நலன்களைப் பின்தொடர்கிறது. மில்லியன் கணக்கான அப்பாவி பொதுமக்களைக் கொலை செய்வதன் மூலமும், பட்டினி போடுவதன் மூலமும், மக்களை இடம்பெயர வைப்பதன் மூலமும் பாலஸ்தீனிய “பிரச்சினைக்கு” ஒரு “இறுதி தீர்வை” அடைவதை நோக்கமாகக் கொண்ட அதன் இனப்படுகொலை யுத்தம் தொடர்கிறது.

வெனிசுலாவுக்கு எதிராக தங்கள் பிரசங்கங்களை வழங்கும் “ஜனநாயகம்” மற்றும் “மனித உரிமைகள்” ஆகியவற்றின் அப்போஸ்தலர்களின் நற்சான்றிதழ்கள் இவை.

ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதாகக் கூறிக்கொண்டாலும், பிராந்தியத்திற்கான வாஷிங்டனின் கொள்கை மன்ரோ கோட்பாட்டால் தொடர்ந்தும் உந்தப்பட்டு வருகிறது. இந்த கோட்பாடு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் “சொந்த கொல்லைப்புறத்தின்” மீது கட்டுப்பாடற்ற மேலாதிக்கத்தை வலியுறுத்துகிறது. ஹிட்லர், ரிப்பென்ட்ரோப், கார்ல் ஷ்மிட் மற்றும் பிற நாசி தலைவர்கள் இந்த மதிப்பிழந்த கோட்பாட்டை கிழக்கு ஐரோப்பாவிலும் முன்னாள் சோவியத் யூனியனிலும் “வாழுவதற்கான இடத்திற்கான” மூன்றாம் பேரரசின் இனப்படுகொலை யுத்தத்தின் அடிப்படையிலான கருத்துக்களுக்கு உத்வேகம் அளித்தனர்.

“எங்கள் அரைக்கோளத்தையும் நம் நாட்டையும் பாதுகாக்கும் மன்ரோவின் தலையீடு” என்ற தலைப்பில் வாஷிங்டனில் சமீபத்தில் நடந்த ஒரு விவாத மன்றத்தால் காட்டப்பட்டுள்ளபடி, லத்தீன் அமெரிக்காவை உலகப் போருக்கான ஏவுதளமாகப் பயன்படுத்த முற்படுவதால், இந்தக் கோட்பாடு பென்டகனுக்கு ஒரு புதிய பொருத்தத்தைப் பெற்றுள்ளது. இது தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் பென்டகன் நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் அமெரிக்க தெற்கு கட்டளை மையத்தின் தளபதியும், இதன் முக்கிய குழு நிபுணருமான ஜெனரல் லாரா ரிச்சர்ட்சனால் காட்சிப்படுத்தப்பட்டது.

ஜெனரல் ரிச்சர்ட்சன் இந்த கோட்பாட்டை நீண்ட காலமாக அலுமாரியில் விட முடியாது என்று வாதிட்டார். “எங்கள் மூலோபாய போட்டியாளர்கள் அரைக்கோளத்தில் எங்களை மாற்ற முயற்சிக்கிறார்கள்,” என்றும், மேலும் வளர்ந்து வரும் சீனா மற்றும் ரஷ்யாவின் செல்வாக்கை தடுத்து நிறுத்துவதுக்கு “எங்கள் கால்களை எரிவாயுவில் வைப்பதற்கான” நேரம் இது என்று அவர் கூறினார்.

இந்த பிராந்தியத்தில், லித்தியம், தங்கம், தாமிரம், சோயாபீன்ஸ், சர்க்கரை, மாட்டிறைச்சி, சோளம், “லேசான கச்சா மற்றும் கனமான கச்சா எண்ணை வளங்கள்“ வெனிசுலாவில் மிகவும் நிறைந்துள்ளது என்று அவர் கூறினார்.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, வாஷிங்டன் இந்தப் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தப் பயன்படுத்தும் முறைகள், வரம்பற்ற இராணுவ படையெடுப்புகள், இராணுவ சதித்திட்டங்கள் மற்றும் பாசிச சர்வாதிகாரங்களை நிறுவுதல் உள்ளிட்ட எல்லையற்ற ஆக்கிரமிப்பைக் கொண்டிருக்கின்றன.

1954 ஆம் ஆண்டில், குவாத்தமாலாவில் உள்ள ஜேக்கபோ ஆர்பென்ஸின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை CIA தூக்கியெறிந்ததிலிருந்து, பிரேசில், சிலி, அர்ஜென்டினா மற்றும் 1960 கள் மற்றும் 1970 களில் அரைக்கோளத்தின் பெரும்பகுதிகளில் பாசிச இராணுவ சர்வாதிகாரங்களை உருவாக்குவதன் மூலமும், 1960 கள் மற்றும் 1970 களில், 1980 களில் மத்திய அமெரிக்காவில் மரண கொலைகார ஆட்சிகளுக்கு ஆதரவு மற்றும் 2009 இல் ஹோண்டுராஸில், 2019 இல் பொலிவியாவிலும், 2022 இல் பெருவிலும் வலதுசாரி சதித்திட்டங்களின் சமீபத்திய ஆதரவு வரை இது தடையின்றி தொடர்கிறது.

இன்று, வெனிசுலாவில் வாஷிங்டனின் நடவடிக்கைகள் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஹென்றி கிஸ்ஸிங்கரின் செயற்பாட்டு புத்தகத்திலிருந்து நேராக உள்ளது. அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலி ஜனாதிபதி சால்வடார் அலெண்டேவை தூக்கியெறிய ஒரு “சதித்திட்டத்தை” உருவாக்க வேண்டிய அவசியத்தை ரிச்சர்ட் நிக்சனுடன் ஒரு தொலைபேசி அழைப்பில் விளக்கியிருந்தார். மேலும், இந்த சதித்திட்டதை உடனடியாக மேற்கொள்ளுவதற்கு, கிஸ்ஸிங்கர் இழிவாக கருத்து தெரிவிக்கையில், “அதன் சொந்த மக்களின் பொறுப்பற்ற தன்மை காரணமாக, நாம் ஏன் கம்யூனிஸ்டுக்கு விட்டுச்செல்ல அனுமதிக்க வேண்டும் என்பதை நான் பார்க்கவில்லை” என்று குறிப்பிட்டார்.

இந்த நீண்ட மற்றும் இரத்தக்களரி வரலாற்றைக் கருத்தில் கொண்டு, மூன்றாம் உலகப் போருக்கான உந்துதலில் அமெரிக்க ஏகாதிபத்தியமும், அமெரிக்காவின் ஒவ்வொரு ஜனநாயக நிறுவனத்திலிருந்தும் அழுகும் குற்றவியல் பங்கு, வெளிப்படையான கேள்வியை எழுகிறது: வெனிசுலா மக்களுக்கு அல்லது வேறு யாருக்கும் “ஜனநாயகத்தை“ பற்றி பிரசங்கம் செய்வதற்கு வாஷிங்டன் யார்?

வெனிசுலாவில், ஏற்பட்டுள்ள நெருக்கடி, குறிப்பாக அதில் பெரும்பகுதி அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பால் உருவாக்கப்பட்ட நெருக்கடியாகும். இந்த நெருக்கடி, வெனிசுலா தொழிலாள வர்க்கம், லத்தீன் அமெரிக்கா, அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்களின் ஒரு பொதுவான போராட்டத்தில் மட்டுமே தீர்க்கப்பட முடியும்.

வெனிசுலாவில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தல் உண்மையான மாற்றீட்டை வழங்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே சட்டவிரோதமான இத்தேர்தல், வெனிசுலா மக்களின் எந்தவொரு கோரிக்கையும் கொண்டிருக்கவில்லை. மாறாக, பார்படோஸில் உள்ள கராகஸுக்கும் வாஷிங்டனின் லாக்கிகளுக்கும் இடையில் மூடிய கதவுகளுக்கு பின்னாலான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அமெரிக்க ஏகாதிபத்தியமானது, தென் அமெரிக்க நாட்டின் மிகப்பெரிய, எண்ணெய் இருப்புக்கள் மீது தனது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தும் நிகழ்ச்சி நிரலை முன்னேற்றுவதற்கான ஒரு வழிமுறையாக இவை ஏற்பாடு செய்யப்பட்டன.

மதுரோ அரசாங்கம், வெனிசுலாவை அதன் சொந்த விதிமுறைகளின் கீழ், முதலாளித்துவ கன்னைகளுக்கு பயனளிக்கவும், அதன் ஆட்சியைப் பாதுகாக்கவும், எண்ணெய் நிறுவனங்களை திருப்ப முயல்கின்றது. கடந்த வாரம், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், எண்ணெய் நிர்வாகிகளுக்கு “தாராளமாக வருமானம் ஈட்டுவதற்கு, கூட்டு முயற்சிகள் மற்றும் சுற்றுச்சூழல் மேற்பார்வை இல்லாமல் டெண்டர் ஒப்பந்தங்கள் மீது செயல்பாட்டுக் கட்டுப்பாடு” ஆகியவற்றுக்கு ரகசியமாக மதுரோ உறுதியளித்து வருகிறார் என்றும், மேலும், “எதிர்கால எண்ணெய் வருவாய் மற்றும் வெளிநாட்டு பத்திரதாரர்களுக்கு சுமார் 60 பில்லியன் டாலர் கடனை மறுசீரமைப்பதுக்கு நேரடியாக பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது” என்றும் குறிப்பிட்டது.

மதுரோ மற்றும் அவரது எதிர்ப்பாளர் மச்சாடோ ஆகிய இருவரின் வேலைத்திட்டமும் வெனிசுலா மார்கரெட் தாட்சரின் வேலைத்திட்டம் என்று மேற்கத்திய ஊடகங்களால் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இதற்கு பாரிய பொலிஸ் அரசு அடக்குமுறை தேவைப்படும். இதில், ஒரே குறிப்பிடத்தக்க வேறுபாடு என்னவென்றால், ரஷ்ய மற்றும் சீன நலன்களை அகற்றுவதாக அதி தீவிர வலதுசாரி எதிர்க்கட்சி உறுதியளிக்கிறது. இது, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு மூலோபாய மற்றும் அவசர முக்கியத்துவம் வாய்ந்தது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தலைமையிலான ட்ரொட்ஸ்கிச இயக்கம் மட்டுமே, 20 ஆம் நூற்றாண்டில் காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சிகள் மற்றும் போர்களின் துயரமான அனுபவங்களிலிருந்து முக்கிய பாடத்தை ஈர்த்துள்ளது.

பாசிசம், ஏகாதிபத்திய ஒடுக்குமுறை மற்றும் போரை அழிக்க தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் படையணிகளை முழுமையாகவும் வெற்றிகரமாகவும் வழிநடத்துவார்கள். இது, ஒரு தொழிலாளர் அரசாங்கத்திற்கான போராட்டத்திலும், சமூகத்தின் சோசலிச மாற்றத்திலும், அவற்றைப் பாதுகாக்க தொழிற்சாலைகள், வளங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் சிறந்த நிலைமைகளுக்காகவும், கட்டுப்பாட்டுக்காகவும் போராடுவதாகும்.

இதன் பொருள் என்னவென்றால், வெனிசுலாவிலும், அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் இன்றைய அவசரப் பணி, அனைத்து முதலாளித்துவ மற்றும் தேசியவாத சக்திகளுக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச இயக்கத்தை கட்டியெழுப்பி, முதலாளித்துவத்தையும் அதன் தேசிய அமைப்பு முறையும் தூக்கியெறிந்து, உண்மையான சமூக சமத்துவத்தின் அடிப்படையில் ஒரு உலகளாவிய அமைப்பு முறையை நிறுவுவதாகும்.

Loading