முன்னோக்கு

ஜேர்மன் இராணுவம் ஹிட்லரின் வேர்மாக்ட்டின் "பாரம்பரியங்களில்" வேரூன்றியிருப்பதாக அறிவிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

இரண்டாம் உலகப் போரின்போது பல மில்லியன் கணக்கான குடிமக்களை படுகொலை செய்து பட்டினி போட்ட நாஜி ஆட்சியின் இராணுவமான வேர்மாக்ட்டின் (Wehrmacht) பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டது என்று வலியுறுத்தி கடந்த மாதம் ஜேர்மனிய இராணுவம் ஒரு ஆவணத்தை வெளியிட்டது.

ஜூலை 12 அன்று, ஜேர்மன் இராணுவப் படைகள், ஏறத்தாழ பொதுமக்களுக்கு தெரியாமலேயே, “ஜேர்மன் இராணுவத்தின் பாரம்பரியங்களைப் புரிந்துகொள்வதற்கும் பராமரிப்பதற்குமான வழிகாட்டி நெறிமுறைகள் பற்றிய துணைத் தகவல்களை” வெளியிட்டது. இந்த ஆவணத்தில் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆயுதப்படைகளின் செயல்பாட்டு தயார்நிலை மற்றும் ஆதரவு துறையின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் காய் ரோஹர்ஷ்னைடர் (Kai Rohrschneider) கையெழுத்திட்டார். அந்த ஆவணம் நாஜி வேர்மாக்ட்டின் (Nazi Wehrmacht) உயர்மட்ட அதிகாரிகளை, இன்றைய ஜேர்மன் இராணுவமான புண்டேஸ்வெர்ருக்கு (Bundeswehr) “ பாரம்பரியத்தைக் கட்டியெழுப்புபவர்களாக “ மற்றும் “அடையாளத்தை உருவாக்குபவர்களாக “ என்று வெளிப்படையாக பெயர்களைக் குறிப்பிடுகிறது.

செப்டம்பர் 28, 2011 புதன்கிழமை, ஜேர்மனியின் ஹனோவருக்கு அருகிலுள்ள முன்ஸ்டரில் ஜேர்மன் இராணுவத்தால் ஊடகங்களுக்காக நடத்தப்பட்ட ஒரு செயல்விளக்க நிகழ்வின் போது ஒரு Leopard 2 டாங்கி படம்பிடிக்கப்பட்டுள்ளது. [AP Photo/Michael Sohn]

இது நேட்டோவின் பிரதான சக்திகள் உக்ரேனில் ரஷ்யா மீது போர் தொடுக்கையில் அவை நடவடிக்கையில் ஈடுபடுத்தி வருகின்ற அரசியல் சக்திகளின் தன்மையை மட்டும் எடுத்துக்காட்டவில்லை. காஸா மீதான இஸ்ரேலிய போருக்கு ஆதரவு கொடுத்ததற்காக இனப்படுகொலையில் உடந்தையாக இருப்பதாக இப்பொழுது குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜேர்மனிய அதிகாரிகளின் வாதங்களையும் இது உயர்த்திக் காட்டுகிறது. ஜேர்மன் அரசாங்கம் ஏதேனும் இனப்படுகொலை நோக்கத்தைக் கொண்டிருக்கலாம் என்பதை அவர்கள் திட்டவட்டமாக ஒப்புக்கொள்ள மறுப்பது நம்பகத்தன்மையைக் கொண்டிருக்கவில்லை, அதே நேரத்தில் அரசாங்கம் யூத இனப்படுகொலையில் ஒரு மையப் பங்கைக் கொண்டிருந்த வேர்மாக்ட்டிற்கு மறுவாழ்வு அளித்து வருகிறது.

உண்மையில், இந்த “துணை குறிப்புகள்” நாஜி ஆட்சியின் அதிகாரிகள் படையின் அரசியல் குற்றவாளிகளை வெட்கமின்றி பெருமைப்படுத்துகின்றன.

இரண்டாம் உலகப் போரின் போது நாஜி உயர்மட்டத்தினர் இழைத்த சொல்லொண்ணா குற்றங்களுக்கு இடையே, ஜேர்மன் ஆளும் வர்க்கம் மீண்டுமொருமுறை ரஷ்யா மீது போர் தொடுக்க தயாரிப்பு செய்து வருகின்ற நிலையில், அது அவர்களை “முன்மாதிரிகள்” மற்றும் “நாயகர்கள்” என்று புகழ்கிறது. இந்த உரையின் நோக்கம் “ஒரு பாரம்பரியத்தை உருவாக்கும் எடுத்துக்காட்டுகளை மேற்கோள் காட்டுவது, அடையாளத்தை வலுப்படுத்துவது மற்றும் இதன் விளைவாக, சம்பந்தப்பட்ட அமைப்பின் பகுதியில் அலகுகள் மற்றும் அமைப்புகளின் செயல்பாட்டு மதிப்பை அதிகரிப்பது”.

அது தொடர்கிறது:

சர்வதேச சட்டத்தை மீறுகின்ற உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போரால் தூண்டிவிடப்பட்ட திருப்புமுனை, பாரம்பரியங்களை வளர்ப்பதற்கும் கூட பெருமளவில் உயர்ந்த செயல்பாட்டு மதிப்பு மற்றும் உயர்ந்த போர் செயல்திறனில் இருந்து பெறப்பட்ட ஆயுதப் படைகளின் போர் தயார்நிலையின் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது.

இது யதார்த்தத்தை தலைகீழாக மாற்றுகிறது. யதார்த்தத்தில், ஜேர்மனியை பாரியளவில் மீள்ஆயுதபாணியாக்கவும் நீண்டகாலமாக இருந்து வந்த போர் திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் புட்டினின் பிற்போக்குத்தனமான உக்ரேன் மீதான படையெடுப்பை திட்டமிட்டு தூண்டியது நேட்டோ சக்திகளேயாகும். முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் போது ஏற்கனவே உக்ரேனை இணைத்துக் கொள்ளவும் மற்றும் ரஷ்யாவை இராணுவரீதியில் தோற்கடிக்கவும் முயற்சித்திருந்த ஜேர்மன் ஏகாதிபத்தியம், ரஷ்யாவுக்கு எதிரான போர் தாக்குதலில் ஒரு முன்னணி பாத்திரம் வகித்து வருகிறது.

இன்று ரஷ்யா மீது போர் தொடுப்பதற்கு நாஜி அதிகாரிகளின் பதவி உயர்வு இன்றியமையாதது என்று ஜேர்மன் இராணுவம் நம்புகிறது என்பதை அந்த மேலதிகக் குறிப்புகள் “ வெளிப்படையாகக் குறிப்பிடுகின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், 20 ஆம் நூற்றாண்டில் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் குற்றங்களை ஊக்குவிப்பதென்பது 21 ஆம் நூற்றாண்டில் அது இழைத்து வருகின்ற குற்றங்களில் இருந்து ஊற்றெடுக்கிறது. உண்மையில், “பாரம்பரியங்களை வளர்த்தெடுப்பது, ஏனைய விடயங்களுடன் சேர்ந்து, செயல்பாட்டு தயார்நிலையையும் மற்றும் பணிக்கு அவசியப்படும்போது போராடுவதற்கான விருப்பத்தையும் பலப்படுத்த வேண்டும்” என்று அந்த ஆவணம் குறிப்பிடுகிறது.

ஒரு குறிப்பிடத்தக்க பத்தியில், இராணுவ செயல்திறனுக்கான தேவை அவர்களின் குணாம்சம் மற்றும் சமூகத்தில் செயல்படும் திறன் ஆகியவற்றிற்கு மேலாக அவர்களின் இராணுவ திறமையை மதிப்பிடுவதை அவசியமாக்குகிறது என்று அது வெளிப்படையாக வாதிடுகிறது. “பாரம்பரிய இராணுவ நற்பண்புகள் (குணாம்சம்) அல்லது ஆயுதப் படைகளை சமூகத்தில் ஒருங்கிணைப்பதில் சாதனைகள் போன்ற பாரம்பரிய கட்டமைப்பின் பிற எடுத்துக்காட்டுகளை விட இராணுவ சிறப்புக்கு (திறன் அல்லது திறமை) அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்” என்று அது கூறுகிறது.

இதிலிருந்து என்ன வெளிப்படுகிறது? அப்பாவி மக்களை பாரிய படுகொலை செய்வது உட்பட இனப்படுகொலை மற்றும் போர் குற்றங்களை இழைத்த நாஜி அதிகாரிகளுக்கு இராணுவத்தில் பதவி உயர்வு வழங்கப்படுவது, இதேபோன்ற குற்றவியல் மற்றும் சமூக-விரோத நடத்தைகளை ஊக்குவிக்கிறது என்றால், இந்த வாதம் ஒரு ஈவிரக்கமற்ற மற்றும் வெற்றிகரமான இராணுவத்தை கட்டியெழுப்புவதில் ஒரு அவசியமான கூறுபாடாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

இந்த இன்றியமையாத கணக்கீடு ஜேர்மன் இராணுவத்தின் தீவிர வலதுசாரி பாரம்பரியங்களை ஊக்குவிப்பதன் கீழமைந்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட முதல் “புதிய பாரம்பரியங்கள் ஆணை” 1991 ஆம் ஆண்டில் ஜேர்மன் மறு ஒருங்கிணைப்புக்குப் பிறகு ஜேர்மன் இராணுவத்தின் சர்வதேச போர் பணிகளின் அனுபவங்களில் முக்கியமாக கவனம் செலுத்தியிருந்தாலும், புதிய “ மேலதிகக் குறிப்புகள் “ வேர்மாக்ட் மீது கவனம் செலுத்துகின்றன.

“[வெளியுறவுக் கொள்கையில்] புதிய சகாப்தத்தைக் குறிப்பிட்டு ஜேர்மன் இராணுவத்தின் பாரம்பரியங்களை வளர்த்தெடுப்பதில் , ஜேர்மன் இராணுவத்தின் ஸ்தாபக தலைமுறையானது பாரம்பரியத்தால் குணாம்சப்படுத்தப்பட்ட இராணுவ மேன்மையில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்க வேண்டியுள்ளது,” என்று அது குறிப்பிடுகிறது. “வேஹ்ர்மாக்ட் படையைச் சேர்ந்த சுமார் 40,000 முன்னாள் சிப்பாய்கள் போரில் ஒரு நிரூபிக்கப்பட்ட வரலாற்றைக் கொண்டிருந்தனர், ஆகவே ஜேர்மன் இராணுவத்தின் அபிவிருத்திக்கு அவசியமான போர் அனுபவத்தைக் கொண்டிருந்தனர்.”

இந்த “அனுபவம்” எதை உள்ளடக்கியது? வேஹ்ர்மாக்ட் வெறுமனே ஒரு போர் இராணுவம் அல்ல, மாறாக நாஜி பயங்கரவாதத்தின் ஒரு முக்கிய அங்கமாகவும் இருந்தது. அது சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக நிர்மூலமாக்கும் போரை நடத்தியது, அதன் விளைவாக குறைந்தபட்சம் 27 மில்லியன் சோவியத் குடிமக்கள் கொல்லப்பட்டனர், அதன் தளபதிகள் மற்றும் SS (Schutzstaffel – ஹிட்லர் காலத்தில் ஜேர்மனியில் பணிபுரிந்த ஜேர்மனியப் பாதுகாப்பு படை) மற்றும் கெஸ்டாபோ போன்ற பத்தாயிரக்கணக்கான அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் யூத இனப்படுகொலையில் செயலூக்கத்துடன் ஈடுபட்டிருந்தனர். மொத்தத்தில், கிட்டத்தட்ட 19 மில்லியன் மக்கள் வேஹ்ர்மாக்ட்டால் கொல்லப்பட்டனர், இது போர்முனையில் நேரடிப் போரில் கொல்லப்படவில்லை, மாறாக வெகுஜன மரணதண்டனைகள் அல்லது முழு கிராமங்கள் மற்றும் நகரங்களை அழித்தல் மூலம் கொல்லப்பட்டனர்.

உண்மையில், ஜேர்மன் இராணுவம் ஒருபோதும் வெற்றுப் பலகையாக இருந்ததில்லை. இது முன்னணி நாஜி இராணுவ அதிகாரிகளால் கட்டமைக்கப்பட்டது, குறிப்பிடத்தக்க வகையில், இது நவம்பர் 12, 1955 அன்று அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டபோது “புதிய வேஹ்ர்மாக்ட்” என்று அழைக்கப்பட்டது. 1957 ஐ ஒட்டி நியமிக்கப்பட்ட 44 தளபதிகள் மற்றும் அட்மிரல்கள் அனைவரும் ஹிட்லரின் பழைய வேஹ்ர்மாக்ட்டில் இருந்து வந்தவர்கள், முக்கியமாக இராணுவத் தளபதிகளிடமிருந்து வந்தவர்கள். 1959ல் அதிகாரிகள் பிரிவில் இருந்த 14,900 தொழில்முறை சிப்பாய்களில் 12,360 வேஹ்ர்மாக்ட் அதிகாரிகள் இருந்தனர். அவர்களில் 300 பேர் SS இன் தலைமைப் பிரிவில் இருந்து வந்தவர்கள்.

இப்போது இந்த நாஜி மரபு “பாரம்பரியத்தைக் கட்டியெழுப்புதல்” என்று ஜேர்மன் இராணுவம் பகிரங்கமாக குறிப்பிடுவது ஒரு கடுமையான எச்சரிக்கையாகும். 1930களில், ஆளும் வர்க்கம் ஜேர்மனியை “போருக்குத் தயார்படுத்த” ஹிட்லரை ஆட்சிக்கு கொண்டு வந்ததைப் போலவே, இப்போது முதலாளித்துவத்தின் ஆழமான நெருக்கடிக்கு இராணுவவாதம், பாசிசம் மற்றும் போருக்குத் திரும்புவதன் மூலம் அது பதிலளிக்கிறது. அவ்வாறு செய்வதன் மூலம், அது மீண்டும் ஒருமுறை அதன் இனப்படுகொலை பாரம்பரியத்தை எடுத்துக்கொள்கிறது.

“மேலதிகக் குறிப்புகளில் “ “முன்மாதிரியாக” மேற்கோள் காட்டப்பட்ட சில நாஜி இராணுவத் தலைவர்கள் இங்கே:

ஜெனரல் டாக்டர். கார்ல் ஷ்னெல் (Dr. Karl Schnell 1916-2008): ஷ்னெல் ஆரம்பத்தில் மேற்கத்திய பிரச்சாரத்தில் பங்கேற்றார், பின்னர் 1942 கோடையில் அவரது பொது ஊழியர்களின் பயிற்சியின் ஒரு பகுதியாக கிழக்கு முன்னணியில் உள்ள இராணுவக் குழு மையத்திற்கு அனுப்பப்பட்டார். பின்னர் அவர் பல போர்க்குற்றங்களில் சம்பந்தப்பட்டிருந்த இத்தாலியின் 3வது பான்சர்கிரெனேடியர் (Panzergrenadier) பிரிவில் மேஜராக (General Staff — இராணுவ தளபதி) பதவி உயர்வு பெற்றார். செப்டம்பர் 1943 மற்றும் ஆகஸ்ட் 1944 க்கு இடையில் இத்தாலியில் 3 வது கவச காலாட்படை பிரிவின் உறுப்பினர்கள் சுமார் 200 பொதுமக்களைக் கொன்றதாக வரலாற்றாசிரியர்கள் மதிப்பிடுகின்றனர். ஷ்னெல் ஜேர்மன் இராணுவத்தின் பதவிகளில் இருந்து உயர்ந்து இராணுவத்தில் இரண்டாவது மிக உயர்ந்த அதிகாரியாக ஆனார், நேட்டோவிற்குள் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரலாகவும் AFCENT இன் தலைமைத் தளபதியாகவும் சேவையாற்றினார். 1977 மற்றும் 1980 க்கு இடையில், அவர் பாதுகாப்பு அமைச்சகத்தில் மாநில செயலாளராக இருந்தார்.

லெப்டினன்ட் ஜெனரல் ஹான்ஸ் ரோட்டைகர் (Hans Röttiger 1896-1960): முதலாம் உலகப் போரின்போது ஏற்கனவே புருசிய இராணுவத்தில் லெப்டினன்ட்டாக இருந்த ரோட்டைகர், இரண்டாம் உலகப் போரில் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான அழித்தொழிப்பு பிரச்சாரத்தின் போது ஜனவரி 1942 இல் 4 வது பான்சர் இராணுவத்தின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். ஜூலை 1943 முதல், அவர் ரஷ்யாவில் இராணுவக் குழு A இன் தலைமை தளபதியாக பணியாற்றினார். போருக்குப் பின்னர், அவர் மறுஆயுதமயமாக்கலில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தார் மற்றும் செப்டம்பர் 21, 1957 அன்று இராணுவ ஆய்வாளர் பதவியை வகித்த முதல் நபராவார்.

சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான அழித்தொழிப்புப் போரின் போது ஹான்ஸ் ரோட்டைகர் (நடுவில்) காலாட்படை தளபதி ரிச்சர்ட் ரூஃப் (இடது) மற்றும் உளவுத்துறை துருப்புக்களின் காயமடைந்த சிப்பாய் ஆகியோருடன் உரையாடலில் [Photo by Bundesarchiv, Bild 101I-214-0342-36A / Geller / / CC BY-SA 3.0]

கர்னல் எரிக் ஹார்ட்மேன் ( Erich Hartmann 1922-1993): “மேலதிகக் குறிப்புகள்” வேர்மாக்ட்அதிகாரியை “இராணுவ விமானப் போக்குவரத்தில் மிகவும் வெற்றிகரமான போர் விமானி (352 வான்வழி வெற்றிகள்)” என்று கொண்டாடுகிறது. அதிக எண்ணிக்கையிலான கொலைகளுக்காக இரும்புச் சிலுவையின் நைட்ஸ் கிராஸ் (The Knight’s Cross of the Iron Cross — இரண்டாம் உலகப் போரின்போது நாஜி ஜேர்மனியின் இராணுவம் மற்றும் துணை இராணுவப் படைகளில் மிக உயர்ந்த விருதுகளாக இருந்தன) விருதைப் பெற்ற 27 இராணுவ சிப்பாய்களில் இவரும் ஒருவர். நாஜி பிரச்சாரம் செய்திப்படங்களில் அவரை ஒரு “போர் ஹீரோ” என்று தவறாமல் கொண்டாடியது. 1950 களின் பிற்பகுதியில், அவர் புதிதாக உருவாக்கப்பட்ட லுஃப்ட்வாஃபேவின் (Luftwaffe — ஜேர்மன் விமானப்படை) முதல் ஜெட் போர் விமான படைப்பிரிவான லுஃப்ட்ஜெஷ்வாடர் 71 (Luftgeschwader 71 ) “ரிச்தோஃபென் (Richthofen)” ஐ உருவாக்கினார்.

1950 களின் இறுதியில், அவர் புதிதாக உருவாக்கப்பட்ட லுஃப்ட்வாஃபேவின் (ஜெர்மன் விமானப்படை) முதல் ஜெட் போர் படைப்பிரிவான லுஃப்ட்ஜெஷ்வாடர் 71 “ரிச்தோஃபென்” ஐ உருவாக்கினார் .

எரிக் ஹார்ட்மேன் [Photo: Public domain, via Wikimedia Commons]

லெப்டினன்ட் ஜெனரல் ஹெகார்ட் பார்க்ஹார்ன் (Gerhard Barkhorn 1919-1983) மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் குந்தர் ரால் (Günther Rall 1918-2009): பார்க்ஹார்ன் மற்றும் ரால் ஆகியோருடன், ஹார்ட்மேனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது மற்றும் மூன்றாவது வெற்றிகரமான வேர்மாக்ட்போர் விமானிகளையும் ஜேர்மன் இராணுவம் கொண்டாடுகிறது. ஹிட்லர் அவர்கள் இருவருக்கும் Knight’s Cross of the Sword விருதை வழங்கினார். போருக்குப் பின்னர், அவர்கள் ஜேர்மன் இராணுவத்திலும் நேட்டோவிலும் பிரம்மாண்டமான தொழில்வாழ்க்கையை மேற்கொண்டனர். ரால் 1971 முதல் 1974 வரை ஜேர்மன் விமானப்படையின் ஆய்வாளராகவும் கூட இருந்தார் மற்றும் 1974-75 இல் நேட்டோ இராணுவக் குழுவில் ஜேர்மன் பிரதிநிதியாகவும் இருந்தார். 1971 முதல் 1974 வரை ரால் ஜேர்மன் விமானப்படையின் ஆய்வாளராகவும், 1974-75ல் நேட்டோ இராணுவக் குழுவில் ஜேர்மனியின் பிரதிநிதியாகவும் இருந்தார்.

குந்தர் ரால் (இடமிருந்து இரண்டாவது) அவரது 200 வது துப்பாக்கிச் சூடு, உக்ரைன், ஆகஸ்ட் 1943 [Photo by Bundesarchiv, Bild 146-2004-0010 / CC BY-SA 3.0]

ரியர் அட்மிரல் எரிக் டாப் ( Erich Topp 1914-2005): “மேலதிகக் குறிப்புகள்” படி, டாப் “இரண்டாம் உலகப் போரில் மிகவும் வெற்றிகரமான நீர்மூழ்கிக் கப்பல் தளபதிகளில் ஒருவர்” என்பதுடன், மிக உயர்ந்த நாஜி வட்டாரங்களில் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட ஒரு உறுதியான நாஜி என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். டோப் மே 1933ல் NSDAP (நாஜிக் கட்சி) யிலும் 1934ல் SS இலும் சேர்ந்தார். ஹிட்லரின் அந்தரங்க செயலாளரும் நாஜி கட்சி அதிபர் அலுவலகத்தின் தலைவருமான மார்ட்டின் போர்மானுடன் அவர் நெருக்கமான உறவுகளைப் பராமரித்து வந்தார். ஆயினும்கூட, போருக்குப் பின்னர் அவர் கடற்படையின் துணை ஆய்வாளராக உயர்ந்தார் மற்றும் நோர்வேயில் உள்ள வடக்கு ஐரோப்பாவிற்கான நேட்டோ தலைமையகத்தில் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் துறைக்கு தலைமை தாங்கினார்.

நீர்மூழ்கிக் கப்பல் U-552 இல் எரிக் டாப் [Photo by Bundesarchiv, Bild 101II-MW-3705-35 / Kramer / / CC BY-SA 3.0]

இந்த முன்னணி நாஜி இராணுவ அதிகாரிகளுக்கான பகிரங்க அஞ்சலி நீண்டகாலத்திற்கு முன்பே தயாரிக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதோடு, ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் (SGP - Sozialistische Gleichheitspartei) அனைத்து எச்சரிக்கைகளையும் இது ஊர்ஜிதம் செய்கிறது. செப்டம்பர் 2014 தீர்மானம் ஒன்றில், ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி, “ ஜேர்மனி நாஜிக்களின் அசுரத்தனமான குற்றங்களில் இருந்து படிப்பினைகளைக் கற்றுக் கொண்டது” மற்றும் “ஒரு அமைதியான வெளியுறவு கொள்கைக்கான பாதையைக் கண்டுபிடித்தது என்ற போருக்குப் பிந்தைய தசாப்தங்களின் பிரச்சாரம்” ஒரு கட்டுக்கதை என்று நிரூபணமாகி வருகிறது என்று குறிப்பிட்டது. ஜேர்மன் ஏகாதிபத்தியம் “உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதன் அனைத்து ஆக்ரோஷத்தன்மையுடனும், வரலாற்று ரீதியாக வெளிவந்ததைப் போலவே தன்னை மீண்டும் காட்டுகிறது. “

ஒரு சில மாதங்களுக்கு முன்னர், அப்போதைய ஜேர்மன் அரசாங்கம் மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வருகையை அறிவித்திருந்தது. அதேநேரத்தில், அதிவலது ஹம்போல்ட் பேராசிரியர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி Der Spiegel  இல் ஹிட்லரை “வக்கிரமானவர் அல்ல” என்று விவரித்ததுடன், “ அவர் தனது மேசையில் யூதர்களை அழிப்பதைப் பற்றி மக்கள் பேசுவதை அவர் விரும்பவில்லை “ என்று வாதிட்டார். அதே நேர்காணலில், பார்பெரோவ்ஸ்கி இப்போது இறந்துவிட்ட நாஜி அனுதாபியான ஏர்ன்ஸ்ட் நோல்டவை (Ernst Nolte) புகழ்ந்தார். 1980 களின் வரலாற்றாசிரியர்களின் சர்ச்சையில் சோவியத் ஒன்றியத்திற்கு ஒரு “புரிந்துகொள்ளக்கூடிய பதிலிறுப்பாக” நாஜி நிர்மூலமாக்கும் கொள்கையை நோல்ட நியாயப்படுத்தினார்.

ஹிட்லர் மற்றும் பாசிசத்தை இவ்வாறு வேண்டுமென்றே குறைத்துக் காட்டுவதும், மூன்றாம் பேரரசின் ((Third Reich) குற்றங்களைக் குறைத்துக் காட்டுவதும் புதிய போர்கள் மற்றும் குற்றங்களுக்கு களம் அமைக்கும் என்று SGP எச்சரித்தது. இது இப்போது நிஜமாகியுள்ளது. பத்து வருடங்களுக்குப் பிறகு, ஜேர்மன் ஆளும் வர்க்கம் அணுஆயுதமேந்திய ரஷ்யாவுக்கு எதிரான நேரடி போருக்கு —ஏனைய பிரதான ஏகாதிபத்திய சக்திகளுடன் கூட்டணி சேர்ந்து— தயாரிப்பு செய்கின்ற நிலையிலும், காஸாவில் பாலஸ்தீனர்களுக்கு எதிரான இனப்படுகொலையை ஆதரிக்கின்ற நிலையிலும், நாஜி போர் குற்றவாளிகளை பகிரங்கமாக கொண்டாடுகிறது. சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச மற்றும் போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் மூலமாக உலகப் போர் மற்றும் காட்டுமிராண்டித்தனத்திற்குள் மீண்டும் வீழ்ச்சியடைவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

Loading