ஹனியே படுகொலைக்குப் பிறகு ஈரானுக்கு எதிரான இராணுவ விரிவாக்கத்திற்கு தயாரிப்பு செய்வதற்காக அமெரிக்க ஜெனரல்கள் மத்திய கிழக்கில் சுற்றுப்பயணம் செய்கிறார்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகளைக் கட்டுப்படுத்தும் அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் தளபதியான ஜெனரல் மைக்கேல் குரில்லா, ஹிஸ்புல்லா தளபதி ஃபுவாட் ஷுக்ர் மற்றும் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஆகியோரை இஸ்ரேல் இலக்கு வைத்து படுகொலை செய்ததை அடுத்து இராணுவ நடவடிக்கைகளை திட்டமிட இந்த வார இறுதியில் இப்பிராந்தியத்திற்கு வந்துள்ளார்.

இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன் குன்றுகளில் இருந்து பார்த்தால், கலிலி பிராந்தியத்தின் எல்லைக்கு அடுத்துள்ள லெபனானில் உள்ள ஒரு பகுதியில் இஸ்ரேலிய தாக்குதலுக்குப் பிறகு புகை எழுகிறது. ஆகஸ்ட் 4, 2024 ஞாயிற்றுக்கிழமை [AP Photo/Leo Correa]

லெபனானில் ஷுக்கர் மற்றும் தெஹ்ரானில் ஹனியே ஆகியோரை இஸ்ரேல் திமிர்த்தனமாக கொலை செய்த பின்னர், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா போராளிகளும் ஈரானிய அரசாங்கமும் இஸ்ரேலில் உள்ள இலக்குகளைத் தாக்குவதன் மூலம் பதிலடி கொடுப்பதாக உறுதியளித்துள்ளன. இதனால் முழு மத்திய கிழக்கு பிராந்தியமும் இப்பொழுது போரின் விளிம்பில் நிற்கிறது.

வாஷிங்டனும் அதன் நேட்டோ ஏகாதிபத்திய நட்பு நாடுகளும், காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை மற்றும் இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகளுக்கு ஆதரவு கொடுத்து, இப் பிராந்தியத்தை எரியூட்டிய நிலையில், ஈரான், லெபனான் மற்றும் முழுப் பிராந்தியத்தின் மீதும் இராணுவ அழுத்தத்தைத் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த வெள்ளியன்று, ஏற்கனவே இப்பகுதியில் உள்ள இரண்டு கடற்படை தாக்குதல் அணிகளில் இணைவதற்காக பென்டகன் ஒரு போர்ப் படைப்பிரிவுடன் கூடிய பல போர்க்கப்பல்கள் மற்றும் நாசகாரிக் கப்பல்களை இப்பகுதிக்கு அனுப்பியுள்ளது. ஈரான் அல்லது ஹிஸ்புல்லாவின் பதிலடியைத் தடுக்க, அமெரிக்கப் படைகளுடன் நேட்டோ மற்றும் மத்திய கிழக்கு நட்பு நாடுகளின் ஒரு கூட்டணியை ஜெனரல் குரில்லா ஒன்று திரட்டுவார் என்று நேற்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஏப்ரலில் சிரியாவில் ஈரானிய தூதரகத்தை இஸ்ரேல் குண்டுவீசி பல உயர்மட்ட ஈரானிய அதிகாரிகளைக் கொன்ற பின்னர், “ஈரானின் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலைப் பாதுகாத்த அதே சர்வதேச மற்றும் பிராந்திய கூட்டணியை அணிதிரட்ட முயற்சிக்க” குரில்லா இந்த பயணத்தைப் பயன்படுத்துவார் என்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் ஆக்சியோஸிடம் தெரிவித்தனர். குரில்லா ஜோர்டானுக்கும் பல பாரசீக வளைகுடா எண்ணெய் ஷேக் ஆட்சி நாடுகளுக்கும் பயணிப்பார்.

கடந்த ஏப்ரலில், அமெரிக்க, பிரித்தானிய, பிரெஞ்சுப் படைகளும், ஜோர்டான் உட்பட பிராந்திய அமெரிக்க நட்பு நாடுகளும், இஸ்ரேலிய இலக்குகள் மீது ஈரான் ஏவிய ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதில் இஸ்ரேலிய ஆட்சிக்கு உதவின. ஈரான் முன்கூட்டியே அவர்களின் தாக்குதல் திட்டங்கள் குறித்து அமெரிக்க அதிகாரிகளை எச்சரித்து, பெரும்பாலும் பழைய ஏவுகணைகளைக் கொண்டு ஒப்பீட்டளவில் சிறிய தாக்குதலை மேற்கொண்ட போதினும், அது இஸ்ரேல் மற்றும் அதன் ஏகாதிபத்திய மற்றும் பிராந்திய கூட்டாளிகளின் ஒருங்கிணைந்த பாதுகாப்பை கிட்டத்தட்ட மூழ்கடித்தது. ஈரானிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த, இஸ்ரேல் மட்டும் 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஏவுகணைகளை ஏவியது.

ஈரானிய அல்லது ஹிஸ்புல்லாவின் தாக்குதல்கள் இன்று ஆரம்பமாகலாம் என எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிகாரிகள், “ஈரானிய பதிலடி தாக்குதல், ஏப்ரல் 13 இஸ்ரேல் மீதான அவர்களின் தாக்குதலின் (ஆனால் அதிக அளவு சாத்தியம்) அதே வரிசையில் இருக்கும் என்றும், அதற்கு லெபனானிலுள்ள ஹிஸ்புல்லாவையும் ஈடுபடுத்தலாம்” என்றும் அவர்கள் எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர். “முந்தைய ஈரானிய தாக்குதலில் இருந்து இஸ்ரேலைப் பாதுகாத்த அதே சர்வதேச மற்றும் பிராந்திய நாடுகளின் கூட்டணியை அணிதிரட்டுவது என்பது மிகவும் கடினமாக இருக்கலாம், ஏனென்றால் ஹனியேவின் படுகொலை இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலையின் பின்னணியில் உள்ளது” என்றும் அவர்கள் கவலை கொண்டுள்ளனர்.

நேட்டோ அரசாங்கம் மற்றும் பெருநிறுவன வட்டங்களில், ஷுக்ர் மற்றும் ஹனியே ஆகியோரின் படுகொலைகள் ஒரு பிராந்திய மோதலைத் தூண்டும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளன என்பது நன்கு அறியப்பட்டுள்ளது. டெல்டா, யுனைடெட், லுஃப்தான்சா குழு மற்றும் ஏஜியன் ஏர்லைன்ஸ் ஆகியவை இஸ்ரேலுக்கான விமானங்களை நிறுத்திவிட்டன, அதே நேரத்தில் பிரான்ஸ் மற்றும் இத்தாலி உள்ளிட்ட நேட்டோ நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு மத்திய கிழக்கிற்கு பயணிப்பதைத் தவிர்க்குமாறு அல்லது அவர்கள் அங்கு இருந்தால் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்புமாறு எச்சரிக்கை விடுத்துள்ளன.

காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை மற்றும் இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகளுக்கு அதன் ஆதரவுக்கு மத்தியில், மத்திய கிழக்கில் அது நடத்தி வரும் போர் விரிவாக்கம் “தற்காப்புக்கானது” என்ற வாஷிங்டனின் வாதங்கள் அப்பட்டமான அரசியல் பொய்களாகும்.

“பிராந்தியத்தில் கொதிநிலையைக் குறைப்பது, அந்த தாக்குதல்களைத் தடுத்து பாதுகாப்பது மற்றும் பிராந்திய மோதலைத் தவிர்ப்பது ஆகியவை ஒட்டுமொத்த குறிக்கோளாகும்” என்று வெள்ளை மாளிகையின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜொனாதன் ஃபைனர் நேற்று சிபிஎஸ் நியூஸ் “ஃபேஸ் தி நேஷன்” நிகழ்ச்சியில் தெரிவித்தார். கடந்த ஏப்ரலில் ஒரு பிராந்திய மோதலில் மத்திய கிழக்குடன் “மிக நெருக்கமான அழைப்பு இருந்ததாக” ஃபைனர் கூறினார். இப்போது, அமெரிக்காவும் இஸ்ரேலும் “ஒவ்வொரு சாத்தியக்கூறுக்கும்” தயாரிப்பு செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானியிடம் “பிராந்திய பதட்டங்களைத் தணிக்கவும், மேலும் அதிகரிப்பதைத் தவிர்க்கவும், ஸ்திரத்தன்மையை முன்னேற்றவும் அனைத்து தரப்பினரும் நடவடிக்கை எடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதாக” அமெரிக்க வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஜோர்டானிய மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடன் ஒரு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட நிலையில், ஐரோப்பிய அதிகாரிகளும் இந்த மோசடியில் இணைந்தனர். அவ்விரு அரசு தலைவர்களும் “அதிகரித்து வரும் பிராந்திய பதட்டங்கள் மீது அவர்களின் மிகப்பெரும் கவலையை வெளிப்படுத்தியதுடன், என்ன விலை கொடுத்தேனும் பிராந்திய இராணுவ விரிவாக்கத்தை தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்,” என்று எலிசே ஜனாதிபதி மாளிகை ஓர் அறிக்கையில் குறிப்பிட்டது. பிரான்ஸ் “இராஜாங்க மட்டத்தில் தீவிரப்பாட்டைக் குறைப்பதற்கு பங்களிப்பு செய்யும்” என்று கூறி, “மாபெரும் கட்டுப்பாடுகள் மற்றும் மக்களின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்வதற்கான மிகப்பெரும் பொறுப்பிற்கு” அது அழைப்புவிடுத்தது.

யதார்த்தம் என்னவென்றால், காஸா இனப்படுகொலைக்கு ஆதரவு கொடுக்கும் நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள்தான், அப்பிராந்தியத்தில் பதட்டங்களை எரியூட்டுவதில் மத்திய பாத்திரம் வகித்து வருகின்றன. மேலும், ஈரானையும் அதன் நட்பு நாடுகளையும் பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும் இராணுவ நடவடிக்கையை நோக்கி தொடர்ந்து தூண்டி வருகின்றன. உண்மையில், பைடென் நிர்வாகம் இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தென்யாகுவை, இந்தப் படுகொலைகளுக்கு சில நாட்களுக்கு முன்புதான் அமெரிக்க காங்கிரஸின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற அழைத்திருந்தது. ஆகவே, அமெரிக்க அதிகாரிகளைக் கலந்தாலோசிக்காமல், ஈரானுடன் பேரழிவு தரும் போருக்கான சாத்தியக்கூறு நிறைந்த இத்தகைய படுகொலையை இஸ்ரேல் செய்திருக்க முடியும் என்று நம்புவது கடினம் ஆகும்.

அமெரிக்க அதிகாரிகளுக்கு என்ன கூறப்பட்டதோ அதன் விபரங்கள் என்னவாக இருந்தாலும், காஸா இனப்படுகொலைக்கு மத்தியில் நெதன்யாகுவை அவர்கள் கூச்சலிட்டு, பாசிசவாத மற்றும் இழிவான முறையில் வரவேற்றமை, ஹமாஸின் ஒவ்வொரு உறுப்பினரையும் படுகொலை செய்வதற்கான இஸ்ரேலிய அரசாங்கத்தின் பகிரங்க திட்டங்களுக்கு ஒரு மறைமுக ஒப்புதலாக இருந்தது. அனைத்திற்கும் மேலாக, நெதன்யாகு வாஷிங்டனில் இருந்தபோது, பாரிஸ் ஒலிம்பிக்கைப் பார்க்க நெதன்யாகுவை அழைப்பதை தனிப்பட்ட முறையில் ஆதரிப்பதாக மக்ரோன் அறிவித்தார்.

நேட்டோ இராணுவ விரிவாக்கம் காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலையை எளிதாக்கும் என்று சர்வதேச ஊடகங்கள் வெளிப்படையாக ஊகிக்கின்றன. ஈரான் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அதன் நட்பு நாடுகளை ஹமாஸுக்கு அதிக ஆதரவை வழங்காமல் அச்சுறுத்துவதன் மூலம், ஏற்கனவே 186,000 க்கும் மேற்பட்ட உயிர்களைக் இஸ்ரேல் கொன்றுள்ளது. மேலும், “ஹமாஸின் பணம் மற்றும் ஆயுதங்களின் பிரதான ஆதாரமாக ஈரான் உள்ளது—அதன் தாக்குதல் டிரோன்கள் அக்டோபர் 7 அன்று ஹமாஸால் பயன்படுத்தப்பட்டன. ஆனால், இப்போது ஈரானும் பிராந்திய போருக்குள் இழுக்கப்படுவதைத் தடுக்க போராடுகிறது” என்று நியூ யோர்க் டைம்ஸ் எழுதியது.

அத்தகைய ஒரு போர் வெடிக்கும் ஒரு மகத்தான ஆபத்து அங்கே உள்ளது, ஆனால், அது மிகப் பெருமளவில் நேட்டோ ஏகாதிபத்திய தரப்பில் இருந்து வருகிறது. நேற்று ஹஸ்புல்லா டசன் கணக்கான ராக்கெட்டுக்களை வடக்கு இஸ்ரேலிய கிராமமான Beit Hillel இல் லெபனிய எல்லையை நோக்கி தான் செலுத்தியதாகக் கூறியுள்ளது. ஆனால் இது ஹிஸ்புல்லாவின் ஏவுகணைப் படைகளில் மிகச் சிறிய சதவிகிதமே ஆகும். இது பெரும்பாலும் இருப்பில் உள்ளது. அது 150,000 இல் இருந்து 200,000 ஏவுகணைகளைக் கொண்ட ஆயுதக் கிடங்கைக் கொண்டுள்ளதுடன், இஸ்ரேலுடனான ஒரு முழு அளவிலான போரில் நாளொன்றுக்கு 1,000 ஏவுகணைகளுக்கும் மேலாக ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இஸ்ரேலிய நகரங்களையும் எண்ணெய் உள்கட்டுமானத்தையும் பேரழிவிற்கு உட்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

ஈரானின் வல்லரசு கூட்டாளி நாடுகளான ரஷ்யாவும் சீனாவும் இதேபோல் எச்சரிக்கையாக இருக்குமாறு முறையிட்டு வருகின்றன. “இந்த கடிகாரம் இப்போது (நள்ளிரவு) இரண்டு நிமிடங்களைக் காட்டுகிறது என்று நான் கூறுவேன், ஆனால் இது கடிகாரத்தை மாற்ற முடியாதது மற்றும் ‘டூம்ஸ்டே கடிகாரம்’ தாக்குதலை மேற்கொள்ளத் தொடங்கும் என்று அர்த்தமல்ல” என்று ரஷ்ய துணை வெளியுறவு மந்திரி செர்ஜி ரியாப்கோவ் ரஷ்ய அரசுக்கு சொந்தமான ஒளிபரப்பாளரான ரோசியா-1 க்கு தெரிவித்தார். எவ்வாறிருப்பினும், ரஷ்ய இராணுவம் “அதன் வெடிமருந்தை உலர வைக்க” வேண்டியுள்ளது. ஏனென்றால், ரியாப்கோவ் இடக்கரடக்கலாக குறிப்பிட்டதைப் போல, எழக்கூடிய வெவ்வேறு இராணுவ சூழ்நிலைகள் “மிகவும் வித்தியாசமானதாக” இருக்கக் கூடும்.

சீன அரசு நடத்தும் குளோபல் டைம்ஸ், சீனாவின் வடமேற்கு பல்கலைக்கழகத்தின் மத்திய கிழக்கு ஆய்வுகள் நிறுவனத்தின் பேராசிரியர் வாங் ஜின் கூறியதை மேற்கோள் காட்டியது: “இப்போது செய்ய வேண்டியது மத்தியஸ்தம் மற்றும் ஒருங்கிணைப்பு, குறிப்பாக இதுபோன்ற தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என்று இஸ்ரேலை வற்புறுத்துவதாகும். அமெரிக்கா வெறுமனே துருப்புகளை அனுப்புவதைக் காட்டிலும் அதிகம் செய்ய வேண்டும், அது ஆழமாக ஈடுபட வேண்டும் மற்றும் மத்திய கிழக்கில் அதன் கடமைப்பாடுகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

ஆனால், ஏகாதிபத்திய சக்திகளுக்கு பகுத்தறிந்து, படுகொலையை மிதப்படுத்த வேண்டும் என்று விடுக்கும் திவாலான வேண்டுகோள்கள் தவிர்க்க முடியாமல் செவிடன் காதில் ஊதிய சங்காகவே விழுகின்றன. சோவியத்துக்கு பிந்தைய சகாப்தம் முழுவதும், ஏகாதிபத்திய சக்திகள் இந்த மூலோபாய, எண்ணெய் வளம் மிக்க பிராந்தியத்தை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்த தங்கள் இராணுவ வலிமையைப் பயன்படுத்த முனைந்துள்ளன. 1990களில் இருந்து ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும், பின்னர் லிபியா, சிரியா மற்றும் யேமனுக்கு எதிராகவும் இடம்பெற்றுவரும் பல தசாப்த கால ஏகாதிபத்தியப் போர்கள் அல்லது பினாமி போர்களில் இருந்து காஸா இனப்படுகொலை மற்றும் பிராந்தியப் போரின் அபாயம் தவிர்க்க முடியாமல் எழுகிறது.

பெரும் வல்லரசுகளுக்கு இடையே, குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம் சீனாவை குறிவைக்கும் உலகளாவிய புவிசார் அரசியல் போட்டியின் மத்தியில், முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்பின் அடிப்படையில் இந்த மோதல்களை அமைதியான முறையில் தீர்க்க இயலாது. இனப்படுகொலை மற்றும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான பாரிய எதிர்ப்பை தொழிலாள வர்க்கத்தினுள், ஒரு சர்வதேச சோசலிச போர் எதிர்ப்பு இயக்கமாக அணிதிரட்டுவதுதான் இரத்தக்களரி மேலும் பேரழிவு அதிகரிப்பதைத் தடுப்பதற்கான ஒரே வழியாகும்.

Loading