முன்னோக்கு

இஸ்ரேலின் தபீன் பாடசாலை படுகொலையும் போர்க்குற்றங்களை இயல்பாக்குதலும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

காஸாவில் இடம்பெற்றுவரும் இஸ்ரேலின் இனப்படுகொலை போரின் மிக மோசமான அட்டூழியங்களில் ஒன்றாக, மூன்று இஸ்ரேலிய ஏவுகணைகள் காஸா நகரில் உள்ள தபீன் பாடசாலைக் கட்டிடத்தை சனிக்கிழமை அதிகாலை தாக்கின. இந்த தாக்குதலில் 100 பாலஸ்தீனியர்கள் வரை படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றாலும், மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளை அகற்றுகையில் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்தும் உயர்ந்து வருகிறது.

ஆகஸ்ட் 10, 2024 சனிக்கிழமை, டெய்ர் அல்-பலாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் காஸா பகுதியில் இஸ்ரேலிய குண்டுவீச்சில் கொல்லப்பட்ட உறவினர்களுக்காக பாலஸ்தீனியர்கள் துக்கம் அனுசரிக்கின்றனர். [AP Photo/Abdel Kareem Hana]

இந்த சமீபத்திய பாரிய படுகொலை நடவடிக்கை, இஸ்ரேலிய சிப்பாய்களால் நடத்தப்பட்டாலும், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜேர்மனி உட்பட இஸ்ரேலின் ஏகாதிபத்திய ஆதரவாளர்களால் நிதியளிக்கப்பட்டு, ஆயுதங்கள் வழங்கப்பட்டு, நியாயப்படுத்தப்பட்டது.

சுமார் 6,000 இடம்பெயர்ந்த மக்களுக்கு அடைக்கலம் கொடுத்திருந்த தபீன் பாடசாலை, படுகொலைகளின் காட்சியாக மாற்றப்பட்டது. கார்டியனால் மேற்கோள் காட்டப்பட்ட ஒரு வீடியோவில், “உடல் உறுப்புகள், இடிபாடுகள் மற்றும் அழிக்கப்பட்ட தளபாடங்கள் இரத்தத்தில் நனைந்த மெத்தைகளில் சிதறிக்கிடக்கும் பயங்கரமான உயிர் இழப்பைக்” காட்டுகிறது. கோரமான சிதைந்த உடல் பாகங்கள் மற்றும் சடலங்களில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண மருத்துவ ஊழியர்கள் இன்னும் முயன்று வருகின்றனர்.

ஒரு மீட்புப் பணியாளரான அபு அனாஸ் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் ஏவுகணைகள் எச்சரிக்கை ஏதும் இன்றி விழுந்தன என்று குறிப்பிட்டார். “அங்கு மக்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர், மக்கள் குளித்துக் கொண்டிருந்தனர், குழந்தைகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் உட்பட மாடியில் பலர் தூங்கிக் கொண்டிருந்தனர்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

காயமடைந்தவர்களில் பலர், குழந்தைகள் உட்பட, உடலின் பெரும்பகுதியில் கடுமையான தீக்காயங்களைக் கொண்டிருந்தனர் என்று காஸா நகரத்தில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் தய்சீர் அல்-தன்னா தெரிவித்தார். மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளுக்கு கொடுக்க கிட்டத்தட்ட வலி நிவாரணிகளை கொண்டிருக்கவில்லை என்றும், மேலும் அறுவை சிகிச்சைகளுக்கு இடையில் ஏற்கனவே அதிகமாக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை முழுமையாக கிருமி நீக்கம் செய்ய போதுமான நேரம் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார்.

மருத்துவமனை இயக்குனர் ஃபடெல் நயீம் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் கூறியதாவது:

[/subhead]

மருத்துவமனையின் நிலைமை பேரழிவுகரமாக உள்ளது, கொடூரமான இஸ்ரேலிய படுகொலையின் காரணமாக மருத்துவ பொருட்கள் மற்றும் ஆதார வளங்களுக்கு கடுமையான பற்றாக்குறை உள்ளது. இதன் விளைவாக ஏராளமான உடல் துண்டிப்புகள் மற்றும் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.

[/subhead]

தபீன் பாடசாலையில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டமை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல, மாறாக திட்டமிட்ட இனப்படுகொலை வடிவமைப்பின் ஒரு பகுதியாகும். காஸாவின் பெரும்பகுதி தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 40,000 மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 2.3 மில்லியன் மக்கள், உணவு, சுத்தமான தண்ணீர் மற்றும் கண்ணியமான தங்குமிட வசதிகள் இல்லாமல் அகதிகளாக மாற்றப்பட்டுள்ளனர். பலர் பல முறை இடம்பெயர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.

தபீன் பாடசாலையில் காணப்பட்டதைப் போன்ற பாரிய படுகொலைக் காட்சிகள் நாளுக்கு நாள், வாரத்திற்கு வாரம் அரங்கேறுகின்றன. ஏகாதிபத்திய போர் நோக்கங்களைப் பின்தொடர்வதில் பாரிய படுகொலைகளும் போர் குற்றங்களும் இயல்பாக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஜூலை தொடக்கத்தில் இருந்து குறைந்தது 10 பாடசாலைகள் மீது தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன. இதில் நான்கு நாட்களில், நான்கு பாடசாலைகள் உட்பட, காஸாவில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் தாக்கப்பட்டுள்ளன. இங்கு தொடர்ந்து செயல்படுபவர்கள் உயிரிழப்புகளால் திணறி வருவதுடன், அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் பற்றாக்குறைக்கு முகம் கொடுக்கின்றனர். இறந்தவர்களின் எண்ணிக்கையில் உதவிப் பணியாளர்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் பத்திரிகையாளர்களும் உள்ளனர்.

இஸ்ரேலிய போர்க்குற்றவாளிகள், பாடசாலைகள் / அகதிகள் முகாம்கள் ஹமாஸ் போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருவதாக, அதே அபத்தமான கூற்றுடன் தங்கள் குற்றங்களை நியாயப்படுத்தி வருகிறார்கள். இஸ்ரேலின் தலைமை இராணுவ செய்தித் தொடர்பாளர் டானியல் ஹகாரி அறிவிக்கையில், ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட கட்டிடத்தில் “பெண்களும் குழந்தைகளும்” இருக்கவில்லை என்றார். ஹமாஸ் அமைப்பின் கட்டளை மையமாக இருந்த இந்த இடத்தின் மீதான தாக்குதலில் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். நிச்சயமாக, இதற்கு ஒரு சிறிய ஆதாரத்தையும் அவர் வழங்கவில்லை.

இந்த பொய்கள், அதன் சித்திரவதை மையங்களில் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த ஒரு பாலஸ்தீனிய கைதியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்வதை நியாயப்படுத்தும் ஒரு பாசிச ஆட்சியிடம் இருந்து வருகின்றன. நெகேவ் பாலைவனத்தில் உள்ள Sde Teiman தடுப்புக்காவல் நிலையத்தில் ஒரு ஆண் கைதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோ கடந்த மாதம் கசிந்தது. அதன் விளைவாக 100வது படைப் பிரிவை சேர்ந்த 10 சிறைக் காவலர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த தாக்குதல் மிகவும் கொடூரமாக இருந்ததால், கைதி நடக்க முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் சம்பந்தப்பட்ட சிப்பாய்களைப் பாராட்டுவதும் இந்த வீடியோ எவ்வாறு கசிந்தது என்பது பற்றி விசாரணை நடத்தக் கோருவதுமே அரசாங்கத்தின் உயர்மட்ட அமைச்சர்களின் பிரதிபலிப்பாக இருந்தது. சிறை அமைப்புமுறைக்குப் பொறுப்பான தேசிய பாதுகாப்பு மந்திரி இட்டாமர் பென்-க்விர், “நமது சிறந்த வீரர்களை” கைது செய்வது இஸ்ரேலுக்கு “வெட்கக்கேடானது” என்று அறிவித்தார். 

கற்பழிப்பு மற்றும் சித்திரவதையை நியாயப்படுத்தி, பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆளும் லிக்குட் கட்சியின் ஒரு உறுப்பினரான ஹனோக் மில்விட்ஸ்கி, ஹமாஸ் போராளிகளைப் பொறுத்தவரை, “அனைத்தும் சட்டபூர்வமானது! எல்லாம் சட்டபூர்வமானது!” என்று குறிப்பிட்டார்.

இதற்கு வாஷிங்டனின் விடையிறுப்பானது, ஒரு வழக்கமான கேலிக்கூத்துடன் இனப்படுகொலையைத் தொடர்வதற்கான பச்சை விளக்கை காட்டுவதுடன் ஒத்துப்போகிறது. இது, இஸ்ரேலின் “தற்காப்பு உரிமை” என்று அழைக்கப்படுவதை இரும்புக் கவசத்துடன் தொடர்ந்தும் பாதுகாப்பதற்கான அக்கறையுடன் பின்தொடர்கிறது. தபீன் பாடசாலையில், நடந்த படுகொலைக்குப் பிறகு, துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், “மிக அதிகமான பொதுமக்கள்” கொல்லப்பட்டது குறித்து புலம்பினார். ஆயினும்கூட, “ஹமாஸ் பயங்கரவாதிகளைப் பின்தொடர இஸ்ரேலுக்கு உரிமை உண்டு” என்று கூறிய அவர், பின்னர் போர் நிறுத்தத்திற்கான மற்றொரு வெற்று அழைப்பையும் சேர்த்துக் கொண்டார்.

உண்மையில், பைடென் நிர்வாகம் சியோனிச ஆட்சியை முழுமையாக ஆதரித்து, காஸாவில் மேற்கொள்ளப்பட்டுவரும் இனப்படுகொலைக்கு ஆயுதங்கள், நிதி மற்றும் அரசியல் ஆதரவைக் கொடுத்து வருகிறது. பாடசாலையை தாக்கிய மூன்று ஏவுகணைகளில் குறைந்தது ஒன்று அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட Mk-84 ஏவுகணை ஆகும்.

சமீபத்திய அட்டூழியத்தைப் பற்றி வாஷிங்டனில் முதலைக் கண்ணீர் சிந்துவது, கடந்த மாதம் அமெரிக்க காங்கிரஸில் நெதன்யாகு உரையாற்றிய போது, காஸாவில் காட்டுமிராண்டித்தனத்திற்கு மட்டுமல்ல, மத்திய கிழக்கில் ஒரு பரந்த போருக்காகவும் அவருக்கு இரு கட்சி ஆதரவு வழங்கப்பட்டது என்ற உண்மையை மறைக்க முடியாது.

இஸ்ரேலிய ஆட்சி உடனடியாக ஈரானுடன் மோதலைத் தூண்டும் நோக்கில் இரண்டு உயர்மட்ட படுகொலைகளை நடத்தியது—பெய்ரூட்டில் உயர்மட்ட ஹிஸ்புல்லாவின் இராணுவத் தளபதி ஃபுவாட் ஷுக்ரின் படுகொலை இடம்பெற்று, சில மணி நேரங்களுக்குப் பின்னர், தெஹ்ரானில் ஹமாஸின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டார். காஸாவில் புதுப்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் போர்நிறுத்தம் தேவை என்பது குறித்து ஹாரிஸ் மற்றும் பைடென் கூறும் பல்லவி கேலிக்கூத்தானது. ஏனெனில் அவர்கள் உயர்மட்ட ஹமாஸ் பேச்சுவார்த்தையாளர் கொல்லப்பட்டதை பாதுகாக்கின்றனர்.

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் முழு ஆதரவுடன் இஸ்ரேல் பரந்த மத்திய கிழக்கில் என்ன செய்ய உள்ளது என்பதற்கு காஸா படுகொலை ஒரு எச்சரிக்கை ஆகும். அமெரிக்க ஏகாதிபத்தியம் இஸ்ரேலை அதன் முக்கிய தாக்குதல் நாயாக பயன்படுத்தி ஒரு பிராந்தியப் போரைத் தூண்டுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக ஈரானை இலக்கு வைத்துள்ளது. வாஷிங்டன் சவாலுக்கிடமற்ற மேலாதிக்கத்தை அடைவதற்கு முக்கிய தடையாக ஈரானைக் கருதுகிறது.

இஸ்ரேலிய ஆட்சியின் குற்றங்கள் ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் லிபியாவில் அதன் சட்டவிரோதப் போர்களில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்களைப் பின்பற்றுகின்றன. அவை ஒட்டுமொத்த நாடுகளையும் நாசமாக்கி, சித்திரவதையை இயல்பாக்கி, ஒரு மில்லியனுக்கும் மேலான இறப்புக்களை விளைவித்துள்ளன. மக்களை “மனிதக் கேடயங்களாக” பயன்படுத்தியதற்கு “பயங்கரவாதிகள்” மீது பழிபோட வேண்டும் என்ற வாதங்களாலும் அப்பாவி மக்கள் படுகொலை நியாயப்படுத்தப்பட்டது.

மூன்று தசாப்த கால போரில் மேலாதிக்கம் பெறத் தவறியுள்ள அமெரிக்கா, ஆழ்ந்த பொருளாதார, அரசியல் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில், உலக மோதலுக்கு தயாரிப்பு செய்து வருகிறது. இதில் மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிரான போர் என்பது ஒரு போர் முனையாகும். உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்ற அதேவேளையில், வாஷிங்டனால் அதன் உலகளாவிய மேலாதிக்கத்திற்கு பிரதான அச்சுறுத்தலாக கருதப்படும் சீனாவுக்கு எதிரான ஆயுத மோதலுக்கான தயாரிப்புகள் துரிதமாக நடந்து வருகின்றன.

மனிதகுலம் முகங்கொடுக்கும் அச்சுறுத்தல் ஒரு அணுஆயுத மனிதப் பேரழிவாகும். அது இஸ்ரேலிய காசா பேரழிவை மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். உலகளாவிய மோதல் அபாயங்கள் ஒருபுறம் இருக்க, காஸாவில் நடக்கும் இனப்படுகொலையை, படுகொலைக்குப் பொறுப்பான அதே குற்றவாளிகளுக்கு முறையீடு செய்வதன் மூலமாக தடுத்து நிறுத்திவிட முடியாது. போருக்கான மூலகாரணமான முதலாளித்துவ அமைப்புமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் இஸ்ரேலிய மற்றும் அரேபிய தொழிலாளர்கள் உட்பட சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த போர் எதிர்ப்பு இயக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

Loading