இலங்கை மின்சார சபையில் பல்லாயிரக்கணக்கான தொழில்களை அழிக்கும் திட்டங்களை பற்றி மின்சக்தி அமைச்சர் தொழிற்சங்கத் தலைவர்களுடன் கலந்துரையாடுகின்றார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை மின்சார சபையின் (இ.மி.ச.) மறுசீரமைப்பில் புதிய சம்பளக் கட்டமைப்பை அறிமுகப்படுத்தி சுயவிருப்பில் ஓய்வுபெறும் முறையின் மூலம் இ.மி.ச. தொழிலாளர்களைக் குறைப்பது தொடர்பில் இ.மி.ச. நிர்வாகத்துடனும் அதன் தொழிற்சங்கங்களுடனும் கடந்த திங்கட்கிழமை கலந்துரையாடப்பட்டதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் (Photo: WSWS)

இதன் போது “சீர்திருத்தங்களின் முன்னேற்றம் மற்றும் தற்போதைய நிலை, பிரதான புதிய நிறுவனங்களுக்கான நியமனங்கள், மனித வள மேலாண்மை கொள்கை, உத்தேச புதிய சம்பள கட்டமைப்புகள், செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத் திட்டங்கள் மற்றும் சுயவிருப்ப ஓய்வுக் கொள்கை ஆகியவை பற்றி கலந்துரையாடப்பட்டன' என்று அவர் மேலும் கூறினார்.

இக்கலந்துரையாடலில் இ.மி.ச. ஐக்கிய தொழிற்சங்கக் கூட்டணியுடன் தொடர்புடைய அனைத்துத் தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர். இந்த கூட்டணி, இலங்கை மின்சார ஊழியர் சங்கம், இ.மி.ச. சுதந்திர ஊழியர் சங்கம், தேசிய ஊழியர் சங்கம், நுகர்வோர் தொடர்பு அலுவலர்கள் சங்கம், பொறியியலாளர்கள் சங்கம் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு ஆகும். முதல் மூன்று தொழிற்சங்கங்கள், முறையே மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ளன.

சட்டம் நிறைவேற்றப்பட்ட ஜூலை 23 அன்று, அமைச்சர் விஜேசேகர மற்றும் இலங்கை மின்சார சபை அதிகாரிகளுடன் தனியார்மயமாக்கல் மற்றும் வேலை அழிப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலில் இ.மி.ச. தொழிற்சங்க கூட்டணியும் கலந்து கொண்டுள்ளது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை ஆகஸ்ட் 7 அன்று நடைபெற்றது.

எரிசக்தி அமைச்சர் மற்றும் இ.மி.ச. அதிகாரிகளுடன் கலந்துரையாடலுக்குச் செல்வதற்கு முன்னர் அல்லது அந்தச் சந்தர்ப்பங்களினேலும் போது, ​​ அமைச்சரின் உத்தேச முன்மொழிவுகள் மற்றும் அவற்றின் விளைவுகள் பற்றி தொழிற்சங்க கூட்டணி தனது உறுப்பினர்களின் கருத்துக்களைக் கேட்காதது ஒரு புறம் இருக்க, அவர்களுக்கு அறிவிக்க கூட இல்லை.

அங்கத்தவர்களுக்குத் தெரியாமல், அமைச்சர் மற்றும் நிர்வாகத்துடன் நடத்திய கலந்துரையாடல் மூலம், இ.மி.ச. ஊழியர்களின் ஆயிரக்கணக்கான தொழில்களை அழிக்கவும், ஊதியங்களை வெட்டவும், வேலைகளை விரைவுபடுத்தவும் இ.மி.ச.யை 12 பகுதிகளாக பிரித்து, திட்டமிட்டு தனியார்மயமாக்குவதையும் தொழிற்சங்கத் தலைமை செயலில் ஆதரவளித்துள்ளது.

தொழில் அழிப்பு திட்டத்தின் கீழ் இ.மி.ச.யின் 26,000 தொழிலாளர் படை ஐந்தில் ஒரு பங்கு வரை 5,000 ஆக குறைக்கப்படும். அதற்காக சுயவிருப்புடன் ஓய்வு பெறும் முறை அமுல்படுத்தப்படுவதுடன் ஓய்வு பெறுவதால் ஏற்படும் தொழில் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வது நிறுத்தப்படும். உத்தேச புதிய சம்பள வியூகம் என்ன என்பதை விளக்காவிட்டாலும், அது செலவுக் குறைப்பு மற்றும் வேலையை விரைவுபடுத்துதலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டும். செயல்திறன் ஊக்குவிப்பு முறையும் மனித வள முகாமைத்துவமும் கூட இந்த திட்டங்களுடன் தொடர்புபட்டவையாகவே நடைமுறைப்படுத்தப்படும்.

இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் தேசிய முறைமை செயற்பாடு மற்றும் தேசிய மின்சாரத் துறை ஆலோசனைச் சபை ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

தனியார்மயமாக்கலுக்கு எதிராக, 20,000க்கும் மேற்பட்ட இ.மி.ச. தொழிலாளர்கள் ஜனவரி மாதம் வேலைநிறுத்தமும் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். மசோதா நிறைவேற்றப்பட்டாலும் அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று பொய் வாய்ச்சவடால் விடுத்த தொழிற்சங்க அதிகாரத்துவம், விக்கிரமசிங்க அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்கும் வீண் முயற்சியில் தொழிலாளர்களை சிக்க வைத்து அவர்களின் எதிர்ப்பைக் கலைத்துவிட்டது.

இ.மி.ச. தொழிலாளர்கள் மீதான இந்த தாக்குதலானது மூன்று பில்லியன் டொலர் பிணை எடுப்பு கடனுக்கு ஈடாக, சர்வதேச நாணய நிதியத்தால் (ச.நா.நி.) கட்டளையிடப்பட்ட பொருளாதார சிக்கன வெட்டுத் திட்டத்தின் கீழ், நூற்றுக்கணக்கான அரச நிறுவனங்களை மறுசீரமைத்தல் அல்லது தனியார்மயமாக்குவதன் பாகமாகும்.

இ.மி.ச. உடன் ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தையும் தனியார்மயமாக்கும் திட்டங்கள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. சுயவிருப்புடன் ஓய்வு பெறும் திட்டத்தின் கீழ், தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் முழு ஆதரவுடன், டெலிகொம் மற்றும் காப்புறுதி நிறுவனங்களில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் தொழில்களும் அகற்றப்பட உள்ளன.

இந்தத் திட்டத்தின் கீழ், டெலிகொம் நிறுவனத்தில் ஓய்வுபெறும் ஒரு ஊழியருக்கு அதிகபட்சமாக 15 இலட்சம் ரூபாவும் குறைந்தபட்சமாக 5 இலட்சம் ரூபாவுமாக அற்பத்தொகை இழப்பீடு வழங்கப்படும். காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில் சுயவிருப்புடன் ஓய்வு பெறும் திட்டம், அதன் ஊழியர்களின் கடும் எதிர்ப்பால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், தாமதமின்றி செயல்படுத்தப்படும்.

ஆளும் கட்சி போலவே, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி. உட்பட எந்தவொரு எதிர்க்கட்சியோ அல்லது அந்தக் கட்சிகளால் இயக்கப்படுகின்ற தொழிற்சங்கங்களோ அல்லது சுயேச்சை என்று கூறிக்கொள்ளும் தொழிற்சங்கங்களோ ச.நா.நி. சிக்கன திட்டத்தை எதிர்க்கவில்லை.

ஜே.வி.பி.யுடன் இணைந்த தேசிய தொழிற்சங்க மையம், தாம் வேலைநிறுத்தங்களை ஒழுங்கமைக்கவோ அல்லது இணைந்து கொள்ளவோ ​​போவதில்லை என்றும் அதற்குப் பதிலாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரின் வெற்றிக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளது.

தனியார்மயமாக்கல் உட்பட சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்திற்கு எதிராக, ஒரு பொதுவான போராட்டத்தை ஒழுங்கமைப்பதற்கான வேலைத்திட்டத்தைப் பற்றி கலந்துரையாட ஆகஸ்ட் 14 அன்று ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்த  இலங்கையின் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் கூட்டு, ஆகஸ்ட் 2 அன்று விடுத்த அறிக்கை பின்வருமாறு கூறுகிறது:

“இந்த தொழிற்சங்கங்களின் கீழ் வேலை நிலைமைகளை மேம்படுத்துவது ஒருபுறம் இருக்க, நமது தொழில்களையும் ஊதியங்களையும் காப்பாற்றிக்கொள்ள முடியாது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதிய சிக்கன திட்டத்திற்கு எதிராக ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தை ஒழுங்கமைப்பதை இனிமேலும் தாமதப்படுத்த முடியாது. எத்தகைய எதிர்ப்புகளும் அழுத்தங்களும் அரசாங்கத்தின் கொள்கைகளை மாற்றாது. தொழிற்சங்கத் தலைவர்கள் தொழிலாளர்களின் கோபத்தைக் கலைக்க மட்டுமே தனிமைப்படுத்தப்பட்ட, சிதறிய மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

“இந்த முதலாளித்துவ கட்சிகளும் அவற்றின் தொழிற்சங்கங்களும் தேர்தலுக்கு ஒத்துழைப்பு கோருவது ஒரு அரசியல் பொறியாகும். இதை நாம் முற்றாக நிராகரிக்க வேண்டும். அரசாங்கம் அமுல்படுத்தும் சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கையை தோற்கடிப்பதற்கு, தொழிலாளர்கள் தங்கள் ஒன்றுபட்ட சுயாதீன பலத்தை அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே, தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க முடியும்.

“நாம், கடந்த போராட்டங்களில் இருந்து படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். முதலும் முக்கியமுமான படிப்பினை என்னவெனில்: முதலாளித்துவ அமைப்பு மற்றும் முதலாளித்துவக் கட்சிகளுடன் பிணைந்துள்ள தொழிற்சங்கங்களை நாம் நம்ப முடியாது. அவை அனைத்தும் சர்வதேச நாணய நிதிய திட்டத்தை ஆதரிக்கின்றன. கடந்த காலத்தில் எமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் இதுவே ஆகும்.

“அதனால்தான் நாம் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை டெலிகாம், இ.மி.ச. மற்றும் காப்புறுதி கூட்டுத்தாபனத்தில் ஸ்தாபித்துக்கொள்ள வேண்டும். அவற்றில் தொழிற்சங்க அதிகாரவர்க்கத்திற்கு இடம் கொடுக்கக் கூடாது.

டெலிகொம், காப்புறுதி, இ.மி.ச. உட்பட அரச நிறுவனங்களின் தனியார்மயமாக்கலுக்கு எதிரான மற்றும் ஒட்டு மொத்தமாக ச.நா.நி. சிக்கன வெட்டுக்களுக்கு எதிரான போராட்டத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பது குறித்து ஆலோசிப்பதற்காக, தொழிலாளர் நடவடிக்கைக் குழுவின் கூட்டினால், ஆகஸ்ட் 14 புதன்கிழமை மாலை 4 மணிக்கு, கொழும்பு 2இல் அமைந்துள்ள ஜயசேகர முகாமைத்துவ நிலையத்தில் (JMC) நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நாம் அழைக்கிறோம்.

Loading