சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா) எட்டாவது தேசிய காங்கிரசை நடத்தியது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) அதன் எட்டாவது தேசிய காங்கிரசை ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 9, 2024 வரை நடத்தியது. COVID-19 தொற்றுநோய் காரணமாக இணையவழி மூலம் இந்த காங்கிரஸ் கூட்டம் நடைபெற்றது.

சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களான ஜோசப் கிஷோர் மற்றும் ஜெர்ரி வைட்டின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்கான வேலைத்திட்ட அடிப்படையை அமைக்கும் '2024 அமெரிக்கத் தேர்தல்களும் சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளும்' என்ற தீர்மானமும், 'போக்டன் சிரோடியுக்கை விடுதலை செய்! என்ற தீர்மானமும் காங்கிரஸால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆறு நாட்களாக இடம்பெற்ற காங்கிரசில், பிரதிநிதிகள் இந்தத் தீர்மானங்களை விரிவாகவும் விவரமாகவும் கலந்துரையாடினர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அனைத்துப் பகுதிகளில் இருந்தம், நட்புக் குழுக்களிலிருந்தும் கணிசமான பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஒரு சர்வதேச நிகழ்வாக இந்த காங்கிரஸ் இருந்தது. ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஜேர்மனி, இலங்கை, துருக்கி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா மற்றும் பிரேசிலில் இருந்து நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னணி உறுப்பினர்கள் இந்த காங்கிரசுக்கு வாழ்த்துச் செய்திகளை வழங்கினர்.

கட்சியின் தலைவரான டேவிட் நோர்த் காங்கிரஸ் பிரதிநிதிகளால் ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேசியக் குழுவினர், ஜோசப் கிஷோரை கட்சியின் தேசிய செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுத்தனர்.

கட்சியின் துணை தேசிய செயலாளராக கேத்லீன் மார்ட்டின் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2008 இல் சோசலிச சமத்துவக் கட்சியின் ஸ்தாபக காங்கிரசில் இருந்து கட்சியின் துணை தேசிய செயலராக சேவையாற்றி வந்த லோரன்ஸ் போர்ட்டர், அப்பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து, கட்சியின் தலைமையில் தொடர்கிறார். 32 வயதான மார்ட்டின் 2014 இல் சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து கொண்டார். 2018 இல் இருந்து சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியக் குழுவில் இருந்து வருகிறார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட தேசியக் குழு, உலக சோசலிச வலைத் தளத்தின் மூன்று இணை-தேசிய ஆசிரியர்களை நியமித்தது: அவர்களில் பாரி கிரே, ஆண்ட்ரே டேமன் மற்றும் நைல்ஸ் நிமூத் அடங்குவர்.

காங்கிரசை தொடங்கி வைத்த டேவிட் நோர்த், சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான தொழிலாளர் கழகத்தின் ஒரு நீண்டகால முன்னணி உறுப்பினரான இருந்த ஹெலன் ஹால்யார்டுக்கு அஞ்சலி செலுத்தினார். இவர் நவம்பர் 23, 2023 அன்று தனது 73 வயதில் காலமானார். தோழர் ஹெலன் 1973 முதல் அவர் இறக்கும் வரை தொழிலாளர் கழகம்/சோ.ச.க. தேசியக் குழுவின் உறுப்பினராக இருந்தார்.

“தொழிலாளர் கழகம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்றில் மட்டுமல்ல, மாறாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வரலாற்றிலும் ஹெலன் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தார்” என்று நோர்த் கூறினார். “அவரது பங்களிப்பு நமது உலகக் கட்சியின் அடித்தளங்களில் பொதிந்துள்ளது. ஹெலன் இப்போது உடல் ரீதியாக எங்களுடன் இல்லை என்றாலும், கட்சிக்கு அவர் அளித்த பங்களிப்புகள் அனைத்தும் உயிர் வாழ்கின்றன” என்று நோர்த் குறிப்பிட்டார்.

நோர்த் காங்கிரசின் வேலைகளையும் பணிகளையும் கட்சியின் வரலாறு மற்றும் ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறையின் அசாதாரண நெருக்கடியின் உள்ளடக்கத்தில் நிலை நிறுத்தினார்.

“எட்டாவது காங்கிரஸ் முதலாளித்துவ அமைப்புமுறையின் பாரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலைமைகளின் கீழ் நடத்தப்படுகிறது” என்று கூறிய அவர், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு பிரச்சினைகள் மேலாதிக்கம் செலுத்துகின்றன: “உலகளாவிய போரை நோக்கி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விரிவாக்கம் மற்றும் அமெரிக்காவிற்குள் ஜனநாயகத்தின் முறிவு” என்று அவர் வலியுறுத்தினார்.

“2024 அமெரிக்க தேர்தல்களும் சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளும்” என்ற தீர்மானம், உலக முதலாளித்துவ நெருக்கடியின் அம்சங்களையும் சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் அரசியல் அடித்தளத்தையும் கோடிட்டுக் காட்டுகிறது. “சோ.ச.க. ஒரு தனியான தேர்தல் வேலைத்திட்டத்தை கொண்டிருக்கவில்லை,” என்று இந்த தீர்மானம் கூறுகிறது. “நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னோக்கில் வேரூன்றிய மற்றும் அதன் அடிப்படையில் உள்ள கட்சியின் வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்து, பிரபலப்படுத்துவதற்கு அது தேர்தல் பிரச்சாரத்தைப் பயன்படுத்துகிறது.”

உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரின் விரிவாக்கம், காஸாவில் ஏகாதிபத்திய ஆதரவிலான இஸ்ரேலிய இனப்படுகொலை, நடந்து வரும் கோவிட்-19 தொற்றுநோய், சமூக சமத்துவமின்மையின் தீவிர வளர்ச்சி மற்றும் மற்றும் பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கி ஆளும் உயரடுக்கின் திருப்பம் ஆகியவற்றை தீர்மானம் விவரிக்கிறது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி அதன் மிக ஒருமுகப்பட்ட வெளிப்பாட்டை அமெரிக்காவில் காண்கிறது. அமெரிக்காவில் முதலாளித்துவ ஜனநாயகம் அதன் கடைசிக் கட்டத்தில் நிற்கிறது. ஆளும் வர்க்கத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான குடியரசுக் கட்சி, முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தலைமையில், பெருகிய முறையில் வெளிப்படையான பாசிசத் தன்மையைப் பெற்றுள்ளது. அவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் முடிவையும், ஒட்டுமொத்த அரசியலமைப்பு ஒழுங்கமைப்பையும் தூக்கியெறியும் நோக்கில் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு சதியைத் தூண்டினார். ஜனநாயகக் கட்சியின் மைய முன்னுரிமை ஏகாதிபத்தியப் போரின் பரந்த விரிவாக்கத்திற்கு குடியரசுக் கட்சி உட்பட இரு கட்சியினரின் ஆதரவைப் பெறுவதற்காக இந்த அரசியல் மாற்றத்தை மூடிமறைப்பதே அதன் மைய முன்னுரிமையாக உள்ளது.

உலகம் முழுவதும் பாரிய எதிர்ப்பு மற்றும் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியை இத்தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது. “ஆயினும், இந்த புறநிலை நிகழ்ச்சிப்போக்கை சோசலிசத்திற்கான ஒரு நனவான இயக்கமாக மாற்றுவது தன்னிச்சையாக இடம்பெறாது,” என்று அது குறிப்பிடுகிறது. “அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும், புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவதே மனிதயினத்தின் தலைவிதி தங்கியுள்ள தீர்மானகரமான மூலோபாய பிரச்சினையாகும்” என்று தீர்மானம் குறிப்பிடுகிறது.

முதலாளித்துவத்தின் பூகோள நெருக்கடியின் வெவ்வேறு கூறுபாடுகளின் வரலாற்றுப் பின்னணி மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரதிபலிப்பு பற்றிய ஒரு விரிவான ஆய்விற்கு இந்த காங்கிரஸ் தன்னை அர்ப்பணித்துக் கொண்டது.

தீர்மானத்தை அறிமுகப்படுத்திய ஜோசப் கிஷோர், 2008 இல் கட்சியின் ஸ்தாபக காங்கிரசுக்குப் பிந்தைய 16 ஆண்டுகளில் சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் நடைமுறை மீதான ஒரு மீளாய்வின் உள்ளடக்கத்தில் 2024 தேர்தல்களில் கட்சியின் தலையீட்டை நிறுத்தினார்

“அரசியலை நோக்கிய நமது அணுகுமுறையின் ஒரு சிறப்பியல்பான அம்சமாக நாம் உணர்வுபூர்வமாக விடையிறுப்பதில்லை,” என்று அவர் விளக்கினார். “முதலாளித்துவ நெருக்கடியின் வரலாற்று அபிவிருத்தியிலும், தொழிலாள வர்க்கத்தின் அனுபவங்களின் படிப்பினைகள் என்பன, இயக்கத்தின் வரலாற்றிலேயே நனவுபூர்வமாக பிரதிபலிக்கின்ற விதத்தில் அவற்றை உட்கிரகித்துக் கொள்வதுக்கு, நமது தற்போதைய பகுப்பாய்வை வேரூன்றச் செய்ய நாங்கள் தொடர்ந்து முயல்கிறோம்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஏகாதிபத்திய போர் வெடிப்பு (ஆண்ட்ரே டேமனால்), புலம்பெயர்ந்தவர்கள் மீதான தாக்குதல் (எரிக் லண்டனால்), ஜனநாயக ஆட்சி வடிவங்களின் முறிவு (ரொம் மக்கமன் மற்றும் ரொம் கார்ட்டரால்), வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்தி மற்றும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (ரொம் ஹால் மற்றும் ஜெர்ரி வைட் ஆகியோரால்), மற்றும் நடந்து வரும் கோவிட்-19 தொற்றுநோயின் அனுபவம் (இவான் பிளேக் மற்றும் பென்ஜமின் மத்தேயஸ் ஆகியோரால்) போன்றவை தொடர்பான விரிவான அறிக்கைகள், காங்கிரசில் முன் வைக்கப்பட்டன.

காங்கிரசின் ஒரு அமர்வு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் தனது அரசியல் ஐக்கியத்தை பிரகடனம் செய்துள்ள ஒரு ட்ரொட்ஸ்கிச இளைஞர் அமைப்பான போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் (YGBL) அமைப்பின் ஸ்தாபகரும் தலைவருமான போக்டன் சிரோட்டியுக்கை விடுவிப்பதற்கான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்னெடுத்துவரும் பிரச்சாரம் மற்றும் கிளாரா வைய்ஸின் அறிக்கைக்காக அர்ப்பணிக்கப்பட்டது. YGBL உறுப்பினர்கள் இக் கலந்துரையாலில் பங்கேற்றனர்.

நேட்டோவால் தூண்டப்பட்ட உக்ரேன்-ரஷ்யா போரை தோழர் போக்டன், எதிர்த்ததற்காகவும் ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாளர்களின் ஐக்கியத்திற்கான அவரது போராட்டத்திற்காகவும், ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் உக்ரேனில் பாசிசவாத ஜெலென்ஸ்கி ஆட்சியால் போக்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த தீர்மானம், போக்டானை உடனடியாகவும், நிபந்தனையின்றியும் விடுதலை செய்ய அழைப்பு விடுப்பதோடு, சோசலிச சமத்துவக் கட்சி “சமூக ஊடகங்கள் மற்றும் பிற தளங்களில் இந்த தீர்மானம், பரந்தளவில் சுற்றுக்கு விடப்படுவதை ஆதரிக்கிறது மற்றும் ஊக்குவிக்கிறது. போக்டனின் விடுதலைக்கு அழைப்பு விடுக்கும் மனுவில் கையெழுத்திடுமாறும் மற்றும் இந்த முக்கிய பிரச்சாரத்தில் அவர்களின் அமைப்புகளை ஈடுபடுத்துமாறும்” தனிநபர்களையும் அமைப்புகளையும் சோ.ச.க வலியுறுத்துகிறது” என்றும் அறிவிக்கிறது.

காங்கிரசுக்கான தீர்மானங்கள், அறிக்கைகள் மற்றும் வாழ்த்துக்களை உலக சோசலிச வலைத் தளம் வரவிருக்கும் நாட்களில் வெளியிடும். எமது வாசகர்கள் அனைவரையும் இந்த ஆவணங்களை படிக்குமாறும் சோசலிச சமத்துவக் கட்சியில் சேரும் முடிவை எடுக்குமாறும் நாம் வலியுறுத்துகிறோம். 

Loading