முன்னோக்கு

இங்கிலாந்தில் அதிதீவிர வலதுசாரிகளுக்கு எதிரான போராட்டத்தில் முன்னோக்கிய பாதை என்ன?

ஜூலை 30 அன்று பிரிட்டனில் வெடித்த புலம்பெயர்ந்தோருக்கு எதிரான கலவரம், ஆகஸ்ட் 4 அன்று பாசிச கும்பல்களால் புகலிட கோரிக்கையாளர் விடுதிகளை தீ வைத்து எரித்ததில் உச்சக்கட்டத்தை அடைந்ததுடன், மில்லியன் கணக்கான மக்களை அதிர்ச்சியடையச் செய்து கோபப்படுத்தியுள்ளது.

அதிதீவிர வலதுசாரிகளின் வன்முறையின் அடிப்படைக் காரணங்களைப் புரிந்துகொள்வதும், மேலும், சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) அரசியல்ரீதியாகத் தலைமை தாங்கி நடத்தும் இனவாதத்திற்கு எதிராக நிற்க (SUTR) என்ற பெயரில் ஏற்பாடு செய்த எதிர்-எதிர்ப்புகளின் பதிலை மதிப்பாய்வு செய்வதும் அவசியமாகும்.

முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டலைத் தவிர, அதிதீவிர வலதுசாரிகளை எதிர்த்து தோற்கடிக்க அங்கே எந்த நடைமுறையளவிலான மூலோபாயமும் இருக்க முடியாது என்பதை, அதுபோன்றவொரு இருப்புநிலைக் குறிப்பு எடுத்துக்காட்டுகிறது.

ஆகஸ்ட் 4, 2024 அன்று புலம்பெயர்ந்தோருக்கு எதிரான படுகொலையின் போது இங்கிலாந்தின் ரோதர்ஹாமில் தஞ்சம் கோருவோர் தங்கியிருந்த ஒரு ஹோட்டலுக்கு பாசிசவாதிகள் தீ வைத்தனர் [Photo by REUTERS/Hollie Adams]

அடிப்படையில் சர்வதேசத் தன்மை கொண்ட இந்தப் போராட்டம், டோமி ரோபின்சன் போன்ற பாசிசவாத குண்டர்களால் தூண்டிவிடப்பட்டு இங்கிலாந்து சீர்திருத்தத் தலைவர் நைஜல் ஃபாராஜால் ஊக்குவிக்கப்பட்ட வன்முறையில் இருந்து புலம்பெயர்ந்தவர்களையும் முஸ்லீம்களையும் அவசியமாகப் பாதுகாப்பதை மட்டும் கொண்டிருக்கவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக இதன் பொருள், தொழிலாள வர்க்கத்தின் தேவையான சோசலிசத் தாக்குதலை தடுக்க உழைக்கின்ற ஸ்டார்மரின் தொழிற்கட்சி அரசாங்கம் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் உள்ள அதன் நட்பு அமைப்புக்களுக்கு எதிரான போராட்டம் ஆகும்.

ஜூலை 4ம் தேதி பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி பதவிக்கு வந்த ஒரு மாதத்திற்குள் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான கலகங்கள் வெடித்தது ஒன்றும் தற்செயல் நிகழ்வு அல்ல. முஸ்லீம்கள் மற்றும் தஞ்சம் கோருவோர் மீது ரோபின்சன் மற்றும் ஃபாராஜ் ஆகியோரால் பொய்யாக குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று குழந்தைகளைக் கொன்றதே கலகங்களுக்கான சாக்குபோக்காக இருந்த அதேவேளையில், புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக திட்டமிட்ட தாக்குதல்களை உருவாக்கிய நச்சுத்தனமான சூழல், அடுத்தடுத்து வந்த தொழிற் கட்சி மற்றும் பழமைவாத அரசாங்கங்களால் பல தசாப்தங்களாக உருவாக்கப்பட்டது.

சோசலிச சமத்துவக் கட்சி அதன் ஆகஸ்ட் 4 அறிக்கையில் பின்வருமாறு எழுதியது:

பாசிசவாத மற்றும் அதிவலதுசாரிகளின் போக்குகளின் வளர்ச்சியானது, ஏகாதிபத்திய அரசியல் மற்றும் முதலாளித்துவ சீரழிவின் ஒரு செறிவான வெளிப்பாடாகும். ஆளும் உயரடுக்குகள், வெடிக்கும் சமூக அழுத்தங்களை வலதுசாரி, புலம்பெயர்ந்தோர்-எதிர்ப்பு திசையில் திசைதிருப்பவும், பிரிட்டனின் கொள்ளையடிக்கும் ஏகாதிபத்தியப் போர்களை மேலும் முன்னெடுத்துச் செல்லவும், தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்கு எதிரான போரைத் தொடரவும் அதிதீவிர தேசியவாதம் மற்றும் இனவெறியை அவர்கள் ஊக்குவித்து வருகின்றனர்.

தொழிற் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் கடுமையான தேசியவாதம், இராணுவவாதம் மற்றும் புலம்பெயர்ந்தோர்-விரோத வனப்புரையை ஊக்குவித்தது. சேர் கெய்ர் ஸ்டார்மர், உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் போருக்கு பில்லியன்களின் வழங்க உறுதியளித்ததுடன், காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை தாக்குதலுக்கு முழு ஆதரவையும் வழங்கினார். புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகளைக் கோரிய அவர், “படகுகளை நிறுத்தத் தவறியதற்காக” டோரிக்களை தாக்கியதுடன், தொழிற் கட்சியின் “நிதி விதிகளுக்கு” ஏற்ப சிக்கன நடவடிக்கைகள் தொடரும் என்றும் அறிவித்தார்.

அரசாங்கத்தில் தொழிற் கட்சியின் முதல் நடவடிக்கை, வெளியுறவு மந்திரி டேவிட் லாமியை போர்க் குற்றவாளி பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு ஆதரவு தருவதாக உறுதியளிக்க இஸ்ரேலுக்கு அனுப்பியது ஆகும். அதன்பின் ஸ்டார்மர் வாஷிங்டன் டிசி நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு அணு ஆயுதமேந்திய ரஷ்யாவுக்கு எதிரான இராணுவ விரிவாக்கத்துக்கு அடித்தளம் அமைத்தார்.

ஜூலை 21 அன்று, உள்துறைச் செயலர் யவெட் காப்பர், புலம்பெயர்ந்தோர் மீது பொலிசாரின் “கோடைகால திடீர் தாக்குதல்” மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான ஹோட்டல் தங்குமிடங்களுக்கு முடிவுகட்டுவதாக அறிவித்தார். இது நாய்களுக்கு அடிக்கும் விசில் சத்தமாக அதிவலதுகளுக்கு இருந்தது.

ஜூலை 23 அன்று, ஏழு தொழிற்கட்சி எம்.பி.க்கள் இரண்டு குழந்தைகளுக்கான சலுகைகள் மீதான உச்சவரம்பை எதிர்த்து ஒரு திருத்தத்திற்கு வாக்களித்த பின்னர், ஸ்டார்மர் அவர்களை பதவி நீக்கம் செய்தார். ஜூலை 29 அன்று, சான்ஸ்லர் ரேச்சல் ரீவ்ஸ் சுமார் 10 மில்லியன் வயதானவர்களுக்கான குளிர்கால எரிபொருள் கொடுப்பனவை வெட்டுவது உட்பட 23 பில்லியன் பவுண்டுகள் செலவின வெட்டுக்களுக்கான திட்டங்களை அறிவித்தார்.

இதற்கு மறுநாளே கலவரம் வெடித்தது.

தொழிற் கட்சியின் வலதுசாரி வேலைத்திட்டத்திற்கு எதிரான பாரிய தொழிலாள வர்க்க எதிர்ப்பு தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் தடுக்கப்பட்டுள்ளது. அது தேர்தலுக்குப் பின்னர் அற்ப ஊதிய வெகுமதிகளின் அடிப்படையில் எஞ்சியிருக்கும் எந்தவொரு தொழில்துறை நடவடிக்கையையும் மூடுவதற்கு நகர்ந்து, பிரிட்டனை வேலைநிறுத்தம் இல்லாத மண்டலமாக ஆக்கியது. நடுத்தர வர்க்கத்தின் வசதியான பிரிவுகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் போலி-இடதான SWP மற்றும் போரை நிறுத்து கூட்டணி, ஸ்டார்மர் அரசாங்கம் இடதுபுறம் தள்ளப்படுவதாகக் கூறி அதனுடன் இணைந்து கொண்டன.

தொழிற் கட்சியின் செயற்பட்டியலான ஏகாதிபத்தியப் போர் மற்றும் முதலாளித்துவ சிக்கன நடவடிக்கைகளுக்கு பரந்த எதிர்ப்பை தடுக்கும் அவர்களுடைய முயற்சிகள் கலகங்களுக்கு அவர்கள் காட்டிய விடையிறுப்பில் சுருக்கமாக வெளிப்படுகின்றன.

இனவாதத்திற்கு எதிராக நிற்க (SUTR) என்ற அமைப்பு “ஒற்றுமைக்கு” அழைப்பு விடுக்கின்றது

“அதிவலதுசாரிகளை நிறுத்து: இனவாதம், இஸ்லாமியவெறுப்பு மற்றும் யூத-எதிர்ப்புவாதத்திற்கு எதிராக ஒன்றுபடுவோம்” என்ற ஒரு அறிக்கையை இனவாதத்திற்கு எதிராக நிற்க என்ற அமைப்பு வெளியிட்டது. அதில் கையெழுத்திட்டவர்களில் முன்னணி தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர், மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து “சுதந்திரமானவர்களுக்கு” தலைமை தாங்கும் ஜெர்மி கோர்பின் உட்பட சுமார் 20 தற்போதைய மற்றும் முன்னாள் தொழிற் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒரு சிறிய சிறுபான்மையினரும் அடங்குவர்

SUTR இன் அறிக்கை, புலம்பெயர்ந்தோருக்கு எதிரான நஞ்சைத் தூண்டுவதில் தொழிற் கட்சியின் பாத்திரம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அதனால்தான் அது “இடது” தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் ஆதரிக்கப்பட்டது.

தொழிற் கட்சிக்கான அதன் அரசியல் மன்னிப்புடன் கைகோர்த்து, இந்த “ஐக்கிய” அறிக்கை, எதிர்ப்பு அரசியலின் மூலமாக பாசிசத்தைத் தோற்கடிக்க முடியும் என்ற பிரமைகளை ஊக்குவிக்கிறது. அழுகிவரும் முதலாளித்துவத்தில் வேரூன்றியுள்ள பாசிசத்தின் சமூக மற்றும் வர்க்க அடித்தளம் குறித்து SUTR மௌனமாக உள்ளது. தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில் கோர்பின் தலைமையில் ஒரு பல வர்க்க அணியை அவர்கள் கட்டியெழுப்புவதற்கு வசதியளிக்கும் வகையில், இந்த விடுபடல் வேண்டுமென்றே செய்யப்பட்டுள்ளது. அவர்களின் அறிக்கை “அதிவலதுகள் அனைத்து கண்ணியமான மக்களுக்கும் ஒரு அச்சுறுத்தலாக உள்ளனர்.” அறிவிக்கிறது:

ஸ்டார்மர், இந்தக் கலவரங்களுக்கு சட்டம் ஒழுங்கு மற்றும் ஒடுக்குமுறையுடன் பதிலளித்தார். அதிவலதுசாரி சக்திகளே அவற்றின் ஆரம்ப இலக்காக இருக்கின்ற அதேவேளையில், தொழிற் கட்சியின் புதிய நடவடிக்கைகள் “பொது ஒழுங்கிற்கு” அச்சுறுத்தலாக இருக்கும் அனைவருக்கும் எதிராக இது பயன்படுத்தப்படும் என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

அரசியல் மற்றும் சமூக அதிருப்தியை இலக்கு வைத்து 6,000 பேர் கொண்ட ஒரு புதிய தேசிய போலீஸ் படையை தொழிற்கட்சி அறிவித்துள்ளது. 2011 இலண்டன் கலகங்களின் போது, ஸ்டார்மர் முன்னோடியாக இருந்தவற்றை அடிப்படையாகக் கொண்ட முக அங்கீகார தொழில்நுட்பம் மற்றும் வழக்குகளை மிக விரைவாகச் செயல்படுத்தும் கீழ் நீதிமன்றங்களைப் பயன்படுத்தி, 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அச்சுறுத்தி 1,000 க்கும் அதிகமான கைதுகளை நடத்தியுள்ளார்.

கோர்பின்: தொழிற்கட்சியின் நிழல்

தொழிற் கட்சியைப் பாதுகாப்பதிலும், இந்த வலதுசாரி கட்சியில் இருந்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் முறித்துக் கொள்வதைத் தடுத்து நிறுத்துவதிலும் கோர்பின் அரசியல்ரீதியாக ஒரு வெறுக்கத்தக்க பாத்திரத்தை வகித்து வருகிறார்.

ஆகஸ்ட் 5 அன்று, அவர் உள்துறை செயலர் கூப்பருக்கு “அதிவலதுசாரிகளின் கலகங்களின் வெளிச்சத்தில் ஒரு அவசர கூட்டத்தைக் கோரி” ஒரு கடிதத்தை வெளியிட்டார். அவர், “எங்கள் அரசாங்கம் சகிப்புத்தன்மையின்மை, இஸ்லாமிய வெறுப்பு மற்றும் அவற்றின் பின்னால் உள்ள மதவெறியை கண்டித்து, பாதிக்கப்பட்டவர்களுடன் தோளோடு தோள் நிற்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று எழுதினார்.

இது, நாஜி ஹென்ரிச் ஹிம்லரின் SS கொலைப்படையை கண்டிக்குமாறு கேட்பதற்கு ஒப்பானதாக இருக்கிறது. “தொழிற் கட்சியின் இரும்புப் பெண்மணி” என்று வர்ணிக்கப்படும் கூப்பர், ஸ்டார்மரின் அரசாங்கத்தின் மையத்தில் “நாடு முதலில், கட்சி இரண்டாவது” என்ற எதேச்சதிகாரத்தின் உருவகமாக உள்ளார். புலம்பெயர்ந்தவர்களை அவர் இலக்கு வைப்பதும், போலிஸ் அதிகாரங்களை அதிகரிப்பதும் உள்நாட்டில் ஏகாதிபத்திய இராணுவவாதம் மற்றும் போருக்கான தொழிற் கட்சியின் உறுதிப்பாட்டின் வெளிப்பாடாக இருக்கிறது. இது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அதிவலதுசாரிகளின் அணிதிரட்டலை பலப்படுத்துவதுடன், இறுதியில் அதன் மீதே தங்கியுமுள்ளது.

ஐந்து “சுயேச்சைகளும்” கையெழுத்திட்ட கோர்பினின் கடிதம், இத்தாலி மற்றும் ஜேர்மனியின் பாசிசவாத அச்சுறுத்தலுக்கு மூன்றாம் விக்டர் இமானுவல் மற்றும் ஜனாதிபதி பௌல் வொன் ஹின்டென்பேர்க்கிற்கு பயனற்ற முறையீடுகளைக் கொண்டு பதிலிறுப்பு செய்த 1920கள் மற்றும் 30களின் சீர்திருத்தவாத தலைவர்களைக் குறித்த லியோன் ட்ரொட்ஸ்கியின் விவரிப்பை நினைவுக்குக் கொண்டு வருகிறது:

தொழிலாளர்களின் புரட்சிகர அணிதிரட்டலுக்கு அஞ்சி, இத்தாலிய சீர்திருத்தவாதிகள் தங்கள் நம்பிக்கைகளை ‘’அரசின்’' மீது வைத்தனர். அவர்களின் முழக்கம்: ‘’உதவி! விக்டர் இம்மானுவேல், அழுத்தம் கொடுங்கள்!’' ஜேர்மன் சமூக ஜனநாயகத்திற்கு அரசியலமைப்பிற்கு விசுவாசமான ஒரு மன்னர் போன்ற ஜனநாயக அரண் இல்லை. எனவே அவர்கள் ஒரு ஜனாதிபதியுடன் தொடர்பு கொள்ள வேண்டும்: ‘’உதவி! ஹிண்டன்பர்க், அழுத்தம் கொடுங்கள்! ‘’

தொழிற்கட்சி அரசாங்கத்திற்கு தொழிலாள வர்க்க எதிர்ப்பைத் தடுப்பதன் மூலம், கோர்பின் எதேச்சதிகாரத்தை வலுப்படுத்தி, நடுத்தர வர்க்கம் மற்றும் தொழிலாளர்களின் பிரிவுகளை சீர்திருத்த ஐக்கிய இராஜ்ஜியத்தை நோக்கி உந்தித் தள்ளுகிறார். மேலும், ராபின்சன் போன்ற பாசிஸ்டுகளின் கரங்களில் சிக்குவதற்கு உதிரிப் பாட்டாளிகளை கட்டாயப்படுத்துகிறார். ஃபாராஜின் பெரும்பாலான ஆதரவு முன்னாள் டோரி வாக்காளர்களிடம் இருந்து வருகிறது என்றாலும், தேர்தல் நடந்த இரவில் அவர் அறிவிக்கையில், “நாங்கள் தொழிற் கட்சிக்காக வருகிறோம்,” என்று குறிப்பிட்டார்.

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் வாக்குரிமை பறிப்பு வர்க்க உறவுகள் பற்றிய மிகவும் சிதைந்த தோற்றத்தை உருவாக்குகிறது. மக்கள்தொகையில் 82 சதவீதத்தினர் அதிவலதுசாரிகளின் கலகங்களை எதிர்ப்பதாக யூகோவ் கருத்துக்கணிப்பு கண்டறிந்தது. ஏகாதிபத்தியம், பாசிசம், இனப்படுகொலை மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு, பிரிட்டனிலும் உலகெங்கிலும் பெருவாரியான மக்கள் எதிர்ப்பு உள்ளது.

ஆனால், ஒற்றை-பிரச்சினை எதிர்ப்பால் அதிவலதுசாரிகளின் எழுச்சியைத் தடுத்து நிறுத்திவிட முடியாது. இதற்கு சோசலிசத்திற்காக, மக்கள்தொகையில் பெருவாரியான தொழிலாள வர்க்கத்தின் அரசியல் மற்றும் தொழில்துறை அணிதிரட்டல் அவசியமாகும்.

முதலாளித்துவத்திற்கு வெகுஜனங்களின் புறநிலை புரட்சிகர எதிர்ப்பை வெளிப்படுத்தும் கோரிக்கைகளைச் சுற்றி தொழிலாளர்களையும் இளைஞர்களையும் அணிதிரட்டி, வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்பு போராட்டங்களினூடாக எதிர்த்தாக்குதலை நாம் தயார் செய்ய வேண்டும்.

இந்த நோக்கத்திற்காக, சோசலிச சமத்துவக் கட்சி பின்வரும் கோரிக்கைகளை முன்மொழிகிறது:

காஸா இனப்படுகொலை வேண்டாம்! ரஷ்யாவுடனான போரை நிறுத்து, நேட்டோவை கலை!

தொழிலாளர்கள், இஸ்ரேலுக்கான ஆயுத உற்பத்தி மற்றும் வினியோகத்தை தடுத்து நிறுத்த வேண்டும். நேட்டோவில் இருந்து பிரிட்டன் உடனடியாக வெளியேறக் கோர வேண்டும். அணு ஆயுதப் போரை அச்சுறுத்தும் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். பிரிட்டனின் ஆயுதப் படைகளை கலைக்க வேண்டும். தேசிய சுகாதார சேவைக்கு (NHS) பில்லியன்கள், குண்டுகளுக்கு அல்ல!

அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரைத் துன்புறுத்துவதை நிறுத்து! தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்காக!

அனைத்து புலம்பெயர்ந்தோர் விரோத சட்டங்களையும் இரத்து செய்! அவர்களை தடுத்து நிறுத்தும் வேலைத்திட்டம் மற்றும் ஏனைய முஸ்லிம்-விரோத நடவடிக்கைகளை இரத்து செய்! புகலிடக் கோரிக்கையாளர்களை காட்டுமிராண்டித்தனமாக தடுத்து வைப்பதை நிறுத்து! திறந்த எல்லைகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு முழு ஜனநாயக மற்றும் சட்ட உரிமைகளுக்காக.

சிக்கன நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வை! சுகாதாரப் பராமரிப்பு, வீட்டுவசதி மற்றும் கண்ணியமான சம்பளத்திற்கு பில்லியன்களை ஒதுக்கு!

இன்றியமையாத சமூக திட்டங்கள் மற்றும் ஊதியங்களுக்கு “பணமில்லை” என்ற ஸ்டார்மரின் பொய்யை தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். லண்டனை பெரும் பணக்காரர்களின் விளையாட்டு மைதானமாக மாற்ற உதவிய வங்கி பிணையெடுப்புகள் மூலம் நிதியப் பிரபுத்துவத்தால் கைப்பற்றப்பட்ட நூற்றுக்கணக்கான பில்லியன்களை பறிமுதல் செய்!

ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்காக!

போர், பாசிசம், இனப்படுகொலை மற்றும் சமூக செலவின குறைப்பு நடவடிக்கைகளை எதிர்த்துவரும் ஐரோப்பா எங்கிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மத்தியில், தொழிலாளர்களும் இளைஞர்களும் சக்திவாய்ந்த கூட்டாளிகளைக் கொண்டுள்ளனர். நிறுவன-சார்பு தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகளின் பிடியை உடைக்க சாமானிய தொழிலாளர் அமைப்புகளைக் கட்டியெழுப்புங்கள்! தொழிலாள வர்க்கத்திற்கு அதிகாரத்தைக் கைமாற்றுவதற்கும், முதலாளித்துவ பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளைக் கொண்டு பிரதியீடு செய்வதற்குமான ஒரு அரசியல் இயக்கத்தை உருவாக்க வேண்டும்.

இந்தப் போராட்டத்தில் வெற்றி என்பது ஒரு புதிய புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவது என்பதாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரித்தானிய பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுமாறு தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.

Loading