முன்னோக்கு

ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டு உரையில் பைடென், ட்ரம்பின் இரண்டாவது ஆட்சி கவிழ்ப்பு குறித்து எச்சரிக்கிறார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஆகஸ்ட் 19, 2024 திங்கட்கிழமை சிக்காகோவில் நடந்த ஜனநாயக தேசிய மாநாட்டின் போது ஜனாதிபதி பைடென் பேசுகிறார்.  [AP Photo/Matt Rourke]

திங்களன்று மாலை ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனின் உரை யதார்த்தமற்ற ஒரு சித்திரமாக இருந்தது. தனது நான்காண்டு கால ஆட்சியின் பெறுபேறுகள் பற்றிய ஜனாதிபதியின் விளக்கம் வெறும் மாயையாக இருந்ததுடன், இன்றைய சமூக மற்றும் பொருளாதார நிலைமை பற்றிய அவரது சித்தரிப்பு ஜனத்தொகையில் பரந்த பெரும்பான்மையினர் முகங்கொடுக்கும் உண்மையான நிலைமைகளுடன் எந்த தொடர்பும் கொண்டிருக்கவில்லை.

எவ்வாறாயினும், பைடென் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அறிக்கையை வெளியிட்டார். அவர் தனது உரையின் முடிவில், 2021 ஜனவரி 6 இல் இடம்பெற்ற ட்ரம்ப்பின் ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சிக்குப் பிந்தைய முதல் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும் என்று அறிவித்தார். “அந்த நாளில், ஒரு நாடாக நாம் யார் என்பது பற்றிய அனைத்தையும் கிட்டத்தட்ட இழந்துவிட்டோம். அந்த அச்சுறுத்தல், இது மிகைப்படுத்தப்பட்டதல்ல, அந்த அச்சுறுத்தல் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது,” என்று குறிப்பிட்டார்.

மேலும் பைடென் கூறுகையில்:

டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தோல்வியடைந்தால் தேர்தல் முடிவை தான் ஏற்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். அதைப் பற்றி சிந்தியுங்கள். அவர் தோற்றால் ரத்த ஆறு ஓடும் என்று உறுதியளிக்கிறார், அவரது வார்த்தைகளில். அவர் தனது சொந்த வார்த்தைகளில், முதல் நாளிலிருந்து ஒரு சர்வாதிகாரியாக இருப்பார்.

அவரது பார்வையாளர்களிடமிருந்து எந்தவொரு சந்தேகத்தையும் எதிர்கொள்வது போல, அவர் மேலும் கூறினார்:

இந்த வழியில், இந்த நபர் தன் செயல்களுக்கு மிகவும் உறுதியுடன் இருக்கிறார். இல்லை, நான் கேலி செய்யவில்லை. இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். கடந்த காலங்களில் வேறு யாரேனும் சொன்னால், அவர் பைத்தியம் என்று நீங்கள் நினைப்பீர்கள், அது ஒரு மிகைப்படுத்தல் என்று நீங்கள் நினைப்பீர்கள், ஆனால் அவர் அதை அர்த்தப்படுத்துகிறார்.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக, அவர் இந்த கருத்தை தனக்கு கிடைத்த உளவுத்துறை தகவல்களையும், ட்ரம்பின் பொது அறிவிப்புகளின் அடிப்படையிலும் இதனைக் கூறியுள்ளார் என்று ஒருவர் அனுமானிக்க வேண்டும்.

இந்த அறிக்கையில் பல குறிப்பிடத்தக்க உண்மைகள் உள்ளன. முதலாவது, இதற்கு மாநாட்டிலேயே பதில் அல்லது பதில் இல்லை. குடியரசுக் கட்சி வேட்பாளர் இன்னும் இரண்டரை மாதங்களில் நடைபெறும் தேர்தல் முடிவுகளை ஏற்கமாட்டார் என்றும், அவர் தோற்றால் நாடு முழுவதும் வன்முறையைத் தூண்டுவார் என்றும் ஜனாதிபதியும், ஜனநாயகக் கட்சித் தலைவரும் நம்புகிறார்.

இவை, நடவடிக்கைகளுக்கு மிகவும் தீவிரமான தொனியைக் கொடுக்கும் என்று ஒருவர் எதிர்பார்த்திருக்கலாம். அப்படி எதுவும் நடக்கவில்லை. பைடெனின் அறிக்கைகள், எந்த கருத்தும் தெரிவிக்காமல் கடந்து சென்றதுடன், அவை ஒருபோதும் கூறப்படவில்லை என்பது போல மாநாடு செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து நடந்தது.

இரண்டாவதாக, அவைகளைப் பற்றி ஊடகங்களில் ஏறக்குறைய எதுவும் சொல்லப்படவில்லை.

நியூயோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் மற்றும் பொலிடிகோ ஆகியவற்றில் பைடெனின் உரை குறித்த செய்தி அறிக்கைகள் இவற்றைப்பற்றி குறிப்பிடவில்லை. ட்ரம்ப் குறித்த அறிக்கைகளை வெளிப்படையாகக் குறிப்பிடாமல், டைம்ஸ் கட்டுரையாளர் டேவிட் புரூக்ஸ், பைடெனின் “உற்சாகம் மற்றும் மகிழ்ச்சியைக்” காட்டிலும் அவரது “புன்னகை” மற்றும் “வெறித்தனமான” அணுகுமுறையின் பற்றாக்குறைக்காக அவரை சாடினார். மேலும், “கோபமும் சீற்றமும் அமெரிக்கா இப்போது பசியுடன் இருக்கும் உணர்வு அல்ல” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

அமெரிக்காவின் ஒட்டுமொத்த அரசியல் கட்டமைப்பும் தீவிரமடைந்து உருக்குலைந்து வரும் நிலைமைகளின் கீழ், ஜனாதிபதி தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன என்ற உண்மையை ஆளும் வர்க்கம் விவாதிக்க —அல்லது, இன்னும் துல்லியமாக, மக்களை எச்சரிக்க— விரும்பவில்லை என்பது தெளிவு.

பைடெனின் பேச்சுக்குத் திரும்புகையில், தேர்தலின் போதும் அதைத் தொடர்ந்தும் ட்ரம்ப் வன்முறைக்குத் தயாரிப்பு செய்து வருகிறார் என்று எச்சரித்த அதேவேளையில், அது குறித்து அவர் எதுவும் செய்யப் போவதாக பைடென் சுட்டிக்காட்டவில்லை. தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு வாக்களிப்பதே அவர் முன்மொழிந்த ஒரே தீர்வாகும் — இதன் முடிவுகளை ட்ரம்ப் ஏற்க மாட்டார் என்று சற்று முன்புதான் அவர் கூறியிருந்தார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததற்கு மாறாக, தேர்தலுக்கு பின்பும் பதவியேற்பு வரை அவர் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருப்பார் என்ற அடிப்படை உண்மையை பைடென் சுட்டிக்காட்டவில்லை. எந்தவொரு ஆட்சிக்கவிழ்ப்பும் வெற்றியடையாது என்பதை உறுதிப்படுத்த தனது அலுவலகத்தின் அதிகாரங்களைப் பயன்படுத்தப்போவதாக அவர் குறிப்பிடவில்லை.

பைடெனின் அறிக்கைகளுக்கான பதில் மற்றும் அவரது சொந்த விளக்கக்காட்சி இரண்டும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் அரசியல் இயக்கவியலை வெளிப்படுத்துகின்றன. ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியால் முன்னிறுத்தப்படும் ஆபத்து மிகவும் உண்மையானது. முன்னாள் ஜனாதிபதி, தான் அதிகாரத்திற்கு திரும்பினால், புலம்பெயர்ந்தோரை கைது செய்யவும் மற்றும் மக்கள் எதிர்ப்பை வன்முறையாக ஒடுக்கவும் நாடு முழுவதும் இராணுவத்தை நிலைநிறுத்துவதாக உறுதியளித்துள்ளார். அரசியலமைப்பு ஆட்சி வடிவங்களின் எந்தவொரு சாயலுடனும் முறித்துக் கொண்டு, பாசிசம் மற்றும் எதேச்சதிகாரத்தை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கும் செல்வந்த தட்டுக்களின் பிரிவுகளுக்காக ட்ரம்ப் பேசுகிறார்.

எவ்வாறிருப்பினும், ஜனநாயகக் கட்சி உட்பட ஆளும் வர்க்கத்திற்குள் ஜனநாயக ஆட்சி வடிவங்களைப் பேணுவதற்கு எந்த குறிப்பிடத்தக்க பகுதியும் இல்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக, பைடென் நிர்வாகத்தின் மைய முன்னுரிமை போரைத் தீவிரப்படுத்துவதாக இருந்து வந்துள்ளது — முதலாவதாக, ஒரு புதிய மற்றும் அபாயகரமான கட்டத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கும் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரைத் தூண்டுவது, இரண்டாவதாக, ஏகாதிபத்தியம்- காஸாவில் இனப்படுகொலையை ஆதரிக்கின்றது.

இந்த போரைத் தொடர, பைடென் குடியரசுக் கட்சியுடன் இருகட்சி உடன்பாட்டை நாடியுள்ளார். ஜனவரி 6 ஆட்சிக்கவிழ்ப்பு சதியைத் தொடர்ந்து ஒரு “வலுவான” குடியரசுக் கட்சிக்கு அழைப்பு விடுத்த அவரது அறிக்கையில் தொடங்கி உண்மையில், இரண்டாவது ஆட்சிக்கவிழ்ப்பு சதி குறித்து அவர் எச்சரித்துக் கொண்டிருந்த போதே, பைடென் அதை ட்ரம்ப் என்ற ஒரு தனிநபரின் விடயமாக மட்டுமே முன்வைப்பதில் கவனமாக இருந்தார், குடியரசுக் கட்சியை அல்ல.

ஏனென்றால் இது, ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினரைப் போலவே ஜனநாயகக் கட்சியும் அதே சமூக நலன்களையும் பொருளாதார அமைப்புமுறையையும் பாதுகாக்கிறது. கருத்து வேறுபாடுகள் என்னவாக இருந்தாலும், இவை இரண்டுமே பெருநிறுவன மற்றும் நிதியியல் செல்வந்த தன்னலக்குழுக்களின் கட்சிகள் ஆகும்.

பைடென் தனது கருத்துக்களில் முன்வைத்த சமூக யதார்த்தத்தின் சித்திரத்திற்கு முரணாக, பைடெனின் கண்காணிப்பின் கீழ் தொழிலாளர்களின் உண்மையான சராசரி வருவாய் வீழ்ச்சி கண்டுள்ளது. 2008 நிதியியல் நெருக்கடியை விடவும் மிகப்பெரியதாக, அமெரிக்க வரலாற்றிலேயே நிதியியல் செல்வந்த தட்டுக்களுக்கு மிகப்பெரியளவில் சமூக ஆதார வளங்களை கைமாற்றுவதற்கு அவரது நிர்வாகம் ஏற்பாடு செய்தது. பைடென்-ஹாரிஸ் நிர்வாகத்தின் நான்கு ஆண்டுகளில் மார்ச் 2024 நிலவரப்படி அமெரிக்க பில்லியனர் சொத்து 88 சதவீதம் அதிகரித்துள்ளது. அரசியல் ஸ்தாபனத்திற்குள் எந்த வெளிப்பாட்டையும் காணாத பரந்த அடிப்படையிலான அதிருப்தியைப் பயன்படுத்திக் கொள்ளும் ட்ரம்பின் திறனை இந்தப் பதிவு கணக்கில் கொள்கிறது.

இம்மாத தொடக்கத்தில் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு குறிப்பிட்டது, “ஆளும் வர்க்கம் பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கி திரும்புவதற்கான அடிப்படை புறநிலை காரணங்களாவன: 1) விரிவடைந்துவரும் வரும் உலகளாவிய ஏகாதிபத்திய போர்; மற்றும் 2) சமூக சமத்துவமின்மையின் தீவிர வளர்ச்சி.”

பைடென் நிர்வாகத்தின் நான்கு ஆண்டுகளில் இந்த செயல்முறைகள் பெரிதும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு கொடுப்பதன் மூலமாக ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட முடியும் மற்றும் சர்வாதிகாரத்தை எதிர்க்க முடியும் என்று நினைப்பது மிகப்பெரும் தவறாக இருக்கும். சோசலிச சமத்துவக் கட்சியின் தீர்மானம் கூறியவாறு:

நவம்பர் தேர்தலில் ட்ரம்ப் தோற்கடிக்கப்பட்டாலும் —இன்னுமொரு ஆட்சிக்கவிழ்ப்பு சதியை நடத்த அவர் தவறினாலும் கூட— அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புறநிலை பொருளாதார மற்றும் சமூக முரண்பாடுகள், ட்ரம்ப்பாக இருந்தாலும் சரி அல்லது இல்லாவிட்டாலும் சரி, ஆளும் உயரடுக்கை ஒரு சர்வாதிகாரத்தை நோக்கி உந்தித் தள்ளுகின்றன. ட்ரம்ப்பிசம் என்பது முதலாளித்துவ கட்டமைப்பிற்குள் ஜனநாயகரீதியில் தீர்க்கப்பட முடியாத ஒரு அமைப்புரீதியான நெருக்கடியின் ஒரு அறிகுறியாகும்.

ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு என்பது பெருநிறுவன மற்றும் நிதியியல் செல்வந்த தட்டுக்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதுடன் பிரிக்கவியலாது பிணைந்துள்ளது. இதற்கு ஜனநாயகக் கட்சியில் இருந்து முற்றிலுமாக அரசியல் முறிவு தேவைப்படுகிறது. பாசிசத்தை ஜனநாயகக் கட்சியின் மூலமாக தோற்கடிக்க முடியாது. மாறாக, இந்த இரண்டு கட்சிகள் மற்றும் முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்தில் தான் பாசிசத்தை தோற்கடிக்க முடியும்.

Loading