முன்னோக்கு

சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்கள் மிச்சிகன் மாநில வாக்குச்சீட்டில் இடம்பெறுவதற்கான அந்தஸ்தை வென்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஜூலை 18, 2024 அன்று மிச்சிகனில் வாக்குச்சீட்டில் இடம்பெறுவதற்கு ஜோசப் கிஷோர் மற்றும் ஜெர்ரி வைட் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

நவம்பர் 5 அன்று நடக்கவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மிச்சிகன் மாநில வாக்குச்சீட்டில் சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களான ஜோசப் கிஷோர் மற்றும் துணை ஜனாதிபதி பதவிக்கு ஜெரி வைட் ஆகியோரை இடம்பெறச் செய்வதற்கு மிச்சிகன் மாநில தேர்தல் ஆணையம் திங்களன்று ஒருமனதாக வாக்களித்தது.

மிச்சிகன் வாக்காளர்களின் 20,000க்கும் மேற்பட்ட கையெழுத்துக்களை சேகரித்த ஒரு கையெழுத்து பிரச்சாரத்தின் மூலம் சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்கள் தகுதி பெற்றனர். இந்த மனு கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது, ஜனநாயகக் கட்சி அதை சவால் செய்வதற்கு எந்த அடிப்படையையும் காண முடியவில்லை. அரச தேர்தல் ஆணையம் அதை பரிசீலித்து, SEP வேட்பாளர்கள் குறைந்தபட்சம் 12,000 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் முறையான கையெழுத்துக்களை பூர்த்தி செய்துள்ளனர் என்று தீர்மானித்தது, அதேபோல் மாநிலத்தின் பெரும்பாலான காங்கிரஸ் மாவட்டங்களில் சேர்க்க வேண்டிய குறைந்த பட்சம் 100 கையெழுத்துக்களையும் சேகரித்துள்ளதாக தீர்மானித்தது.

தேவையான கையெழுத்துக்களை சேகரிக்க டசின் கணக்கான சோசலிச சமத்துவக் கட்சி ஆதரவாளர்கள் நான்கு மாதங்களுக்கும் மேலாக பிரச்சாரம் செய்ததாக அவர்கள் தெரிவித்தனர். வெய்ன், மாகோம்ப், ஓக்லாந்து மற்றும் வாஷ்டெனாவ் மாவட்டங்களுமாக நான்கு கவுண்டிகள் அடங்கிய டெட்ராய்ட் பெருநகரப் பகுதியில் பல கையெழுத்துக்கள் பெறப்பட்டன. ஆயிரக்கணக்கான கையெழுத்துக்கள் பிரச்சாரக் குழுக்களால் Grand Rapids, Kalamazoo, Lansing, Flint, Port Huron மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள சிறு நகரங்கள், பெருநகரங்களில் சேகரிக்கப்பட்டன. மாநிலத்தின் 83 மாவட்டங்களில் 75 இல் வசிப்பவர்கள் கிஷோர் மற்றும் வைட்டை வாக்குச்சீட்டில் இடம்பெறச் செய்வதற்கு ஆதரவாக கையெழுத்திட்டனர்.

மிச்சிகனில் சோசலிச சமத்துவக் கட்சியின் மனு இயக்கத்தின் வெற்றி மகத்தான தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. மிச்சிகன் மாநிலம் 2024 தேர்தலின் மையப் புள்ளியாகும். இது ஒரு “போர்க்கள” மாநிலமாகவும், அமெரிக்காவில் அதிகரித்து வரும் அரசியல் நெருக்கடியின் மையத்திலும் உள்ளது.

2016 இல் ஹிலாரி கிளிண்டனை விட டொனால்ட் ட்ரம்ப்  குறுகிய வாக்கு வித்தியாசத்தில் வென்ற மூன்று தொழில்துறை மாநிலங்களில் மிச்சிகனும் ஒன்றாகும். பின்னர் 2020 இல் ட்ரம்பை, ஜோ பைடென் வென்றார். 2020 தேர்தலுக்குப் பிறகு, ட்ரம்ப் குடியரசுக் கட்சி மாநில சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து, தனது தேர்தல் தோல்வியை மாற்றியமைக்கவும், வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பைடென் பிரதிநிதிகளை ட்ரம்ப் பிரதிநிதிகளாக மாற்றவும் முயன்றார்.

2020 பிரச்சாரத்தின் போது, ​​ஒரு வன்முறையான தீவிர வலதுசாரி சதி மூலம் ஜனநாயக கவர்னர் கிரெட்சன் விட்மரை படுகொலை செய்ய குறிவைத்தது.

2020 தேர்தல் பிரச்சாரத்தின் போது, பிரதான ஆலைகளை மூட நிர்பந்தித்த வாகனத்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தின் விளைவாக ஏற்பட்ட ஆரம்ப கொரோனா வைரஸ் பொது முடக்கத்திலிருந்து “மிச்சிகனை விடுவிக்க” ட்ரம்ப் ஒரு பகிரங்க அழைப்பை விடுத்த பின்னர், ஜனநாயகக் கட்சி ஆளுநர் கிரெட்சன் விட்மரை படுகொலை செய்ய ஒரு வன்முறையான வலதுசாரி சதி திட்டம் தீட்டப்பட்டது. விட்மரை கடத்தி கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியவர்கள் தங்கள் திட்டங்களை செயல்படுத்தும் போது கைது செய்யப்பட்டனர்.

2024 இல், இரண்டு பிரதான முதலாளித்துவ கட்சிகளும் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடக விளம்பரங்கள், ஊதியம் பெறும் பிரச்சார தொழிலாளர்கள், மற்றும், ஜனநாயகக் கட்சியினரைப் பொறுத்த வரையில், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களின் ஒரு அணிதிரள்வைக் கொண்டு மாநிலத்தை நிரப்பி வருகின்றன. இவ்விரு கட்சிகளும் அநேகமாக மிச்சிகனில் மட்டும் அவற்றின் போட்டி பிரச்சாரங்களுக்காக 100 மில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவிடக்கூடும், மேலும் வாக்கெடுப்புக்குப் பின்னர் சட்ட ரீதியான சவால்களுக்காக இன்னும் மில்லியன் கணக்கான டாலர்களை செலவிட அவை தயாராக உள்ளன.

வேட்பாளர்களே கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் மிச்சிகனுக்கு வருகை தருகிறார்கள். ட்ரம்ப் தனது மிச்சிகன் அறைகூவல்களில் அதிதீவிர வலதுசாரி மற்றும் இராணுவவாத சக்திகள் மீது கவனம் செலுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மாநிலத்தை இழக்கும் சமயத்தில் வன்முறை நடவடிக்கைக்கு அவர்களை அழைப்பார்.

அவரது மிச்சிகன் அறைகூவல்களில் அதிதீவிர வலது மற்றும் இராணுவவாத சக்திகள் மீது ஒருமுனைப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது, கடந்த வாரம் அவர், 1970 களில் வெள்ளை மேலாதிக்க குழுவான கு கிளக்ஸ் கிளான் மீள்ஸ்தாபகம் செய்யப்பட்ட ஹோவெல் நகரில் ஒரு கூட்டத்தில் உரையாற்றினார். அங்கு ட்ரம்ப் வருவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர்தான் நவ-நாஜிக்கள் பகிரங்கமாக பேரணி சென்றனர்.

திங்களன்று, டெட்ராய்டில் நடைபெற்ற தேசிய பாதுகாப்புப் படை சங்கத்தின் தேசிய மாநாட்டில் ட்ரம்ப் உரையாற்றினார். 2020 முழுவதும், முதலில் மினியாபோலிஸ் பொலிஸால் ஜோர்ஜ் ஃபுளோய்ட் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கவும், பின்னர் தேர்தலுக்குப் பின்னர், வாக்காளர்களை மீறி ஜனாதிபதியாக இருப்பதற்கான அவரது திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கவும் தேசிய பாதுகாப்புப் படையை அழைக்குமாறு ட்ரம்ப் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

ட்ரம்ப், வெள்ளை மாளிகைக்குத் திரும்பினால், புலம்பெயர்ந்தவர்களைச் சுற்றி வளைக்கவும் மற்றும் போராட்டங்களை ஒடுக்கவும் நாடெங்கிலுமான பிரதான நகரங்களில் தேசிய பாதுகாப்புப் படையை நிலைநிறுத்த இருப்பதாக அச்சுறுத்தியுள்ளார்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

நேற்று, கிஷோர் X இல் வெளியிட்ட ஒரு அறிக்கையில், “தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிச தலைமைக்காக போராட சோசலிச சமத்துவக் கட்சி இந்த பிரச்சாரத்தைப் பயன்படுத்தும். [ஜெர்ரி வைட்] மற்றும் நாம் பெருநிறுவன மற்றும் நிதியியல் செல்வந்த தட்டுக்களின் கட்சிகளான ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டையும் எதிர்ப்போம்,” என எழுதினார்.

அந்த அறிக்கை தொடர்ந்து குறிப்பிட்டது, “இரண்டு கட்சிகளின் ஆதரவுடன், காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைக்கு எதிராகவும், ரஷ்யாவுக்கு எதிராக தீவிரமடைந்து வரும் அமெரிக்க-நேட்டோ போருக்கு எதிராகவும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட சோசலிச சமத்துவக் கட்சி போராடும். ஆளும் உயரடுக்குகள் பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கி திரும்புவதை நாங்கள் எதிர்ப்போம்.”

மிச்சிகன் அமெரிக்காவின் மிகப்பெரிய அரபு பெரும்பான்மை நகரமான டியர்போர்னின் தாயகமாக உள்ளது. அத்துடன் அம்மாநிலம் எங்கிலும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலைக்கு அங்கே மிகப்பெரும் எதிர்ப்பு உள்ளது. மிச்சிகன் பல்கலைக்கழகம் மற்றும் வேய்ன் மாநில பல்கலைக்கழகம் உட்பட பிரதான வளாகங்களில் போராட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டன. வளாகங்கள் மீண்டும் திறக்கப்படுகின்ற நிலையில், ஜனநாயகக் கட்சியுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக நிர்வாகிகள், அடிப்படை ஜனநாயக உரிமைகள் மற்றும் பேச்சு சுதந்திரத்தின் மீது பெரும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த பல வாரங்களாக, டெட்ராய்டுக்கு வெளியே, ஸ்டெல்லாண்டிஸ் இன் வாரன் டிரக் ஒருங்கிணைப்பு ஆலையில், 2,000 க்கும் அதிகமான வேலைகளை அழிப்பதில் கூட்டு வேலை செய்து வருகின்ற ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்க எந்திரத்திற்கு எதிராக, வாகனத்துறை சாமானிய தொழிலாளர்களின் கிளர்ச்சிக்காக போராடுவதிலேயே கடந்த பல வாரங்களாக சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம் மையக் கவனம் கொண்டிருந்தது.

பணிநீக்கங்களுக்கு எதிராக அனைத்து சாமானிய தொழிலாளர்களின் ஒன்றுபட்ட இயக்கத்திற்கு அழைப்பு விடுத்து கிஷோர் கடந்த வாரம் ஓர் அறிக்கை வெளியிட்டார்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

மிச்சிகன் இப்போதும் வாகனத் தொழில்துறையின் மையமாக உள்ளது. UAW தலைவர் ஷான் ஃபெயின், இப்போது ஹரிஸின் பிரச்சாரத்தையும் ஜனநாயகக் கட்சியையும் மிகவும் செயலூக்கத்துடன் ஊக்குவிப்பவர்களில் ஒருவராக உள்ளார். பெயினும் ஏனைய தொழிற்சங்க நிர்வாகிகளும் தீவிரமடைந்து வரும் உலகளாவிய போரை ஆதரிக்கின்றனர். அதேநேரம், அத்தகைய போர் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒரு போரை அவசியப்படுத்துகிறது.

“ஏகாதிபத்தியம் மற்றும் போருக்கான ஒரு கட்சியை ஆதரிப்பதன் மூலமாக, சர்வாதிகாரத்தையும் பாசிசத்தையும் எதிர்க்க முடியும் என்ற கூற்றை சோசலிச சமத்துவக் கட்சி முற்றிலுமாக நிராகரிக்கிறது” என்று கிஷோர் தெரிவித்தார். “குடியரசுக் கட்சியினர் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் இருவருமே பெருநிறுவன மற்றும் நிதியியல் செல்வந்த தட்டுக்களின் இரண்டு கன்னைகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.”

“மிச்சிகனில் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்திற்கான பரந்த ஆதரவு, ஒவ்வொரு இடத்திலும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் உண்மையான உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது” என்று கிஷோர் மேலும் கூறினார். “எங்களது தேர்தல் பிரச்சாரத்தில், இங்கே மிச்சிகனிலும், அமெரிக்கா எங்கிலும் மற்றும் உண்மையில் உலகெங்கிலும், தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் அடிப்படை அரசியல் பிரச்சினைகளை விளக்கவும், சோசலிசத்திற்கான போராட்டம் இன்றி, உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது, மற்றும் இந்த மாபெரும் வரலாற்றுப் பணியை ஒரு உலகளாவிய மூலோபாயத்தை ஏற்றுக்கொள்வதன் மூலமாக மட்டுமே இட்டுநிரப்ப முடியும் என்ற அவர்களின் புரிதலை அபிவிருத்தி செய்யவும் நாங்கள் போராடுவோம்.”

உலக சோசலிச வலைத் தளம், 2024 தேர்தல்கள் குறித்த அதன் ஒட்டுமொத்த செய்திகளின் பாகமாக, சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் குறித்த செய்திகளைத் தொடர்ந்து வழங்கும்.

Loading