டெலிகிராம் செயலியின் நிறுவனரான பிராங்கோ-ரஷ்ய பில்லியனர் பாவெல் துரோவ் பாரிஸில் கைது செய்யப்பட்டுள்ளார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கடந்த சனிக்கிழமையன்று, 39 வயதான பிராங்கோ-ரஷ்ய கோடீஸ்வரர் பாவெல் துரோவ்வை (Pavel Durov) பிரெஞ்சு எல்லை பொலிசாரும், இராணுவ போலீசாரும் கைது செய்தனர். டெலிகிராம் (Telegram) மறைகுறியாக்கப்பட்ட செய்தியிடல் செயலி (encrypted messaging app) நிறுவனரான துரோவ், பாரிஸில் உள்ள லு பூர்ஜே விமான நிலையத்தின் ட்ரான்சிட் பகுதியில் விமானத்துக்காக காத்திருந்தார். போதைப்பொருள் வர்த்தகம், சிறுவர் ஆபாசப் படங்கள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் அங்கீகரிக்கப்படாத மறைகுறியாக்கப்பட்ட செய்தியிடல் சேவைகளை வழங்குதல் சம்பந்தப்பட்ட 12 குற்றங்களுக்காக துரோவ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

டெலிகிராம் இணை நிறுவனர் பாவெல் துரோவ் ஆகஸ்ட் 1, 2017 [AP Photo]

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் நேற்று ட்விட்டரில் பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டதை நியாயப்படுத்தி, அவரது கைது குறித்து “தவறான தகவல்களுக்கு” எதிராக எச்சரித்தார். “பிரெஞ்சு மண்ணில் டெலிகிராம் தலைவரின் கைதானது, நடந்து வரும் நீதி விசாரணையின் ஒரு பகுதியாக நடந்தது. இது எந்த வகையிலும் அரசியல் முடிவு அல்ல. இந்த விஷயத்தில் நீதிபதிகள் தான் தீர்ப்பு வழங்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

யதார்த்தத்தில், துரோவ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பது வெளிப்படையாக அரசியல் உந்துதல் கொண்டதாகும். இது, பிற்போக்குத்தனமானது என்பதோடு, இதற்கு எந்த கணிசமான சட்ட அடித்தளமும் கிடையாது. இது, உக்ரேனில் ரஷ்யாவுடனான போரில் நேட்டோ சக்திகளுக்கு உதவுவதையும், டெலிகிராமின் 900 மில்லியன் பயனர்கள் இருக்கும் நாடுகளில் இணைய தனியுரிமை மற்றும் தகவல் சுதந்திரம் உட்பட ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு வழி வகுக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, முன்னாள் சோவியத் ஒன்றியத்திலுள்ள அனைத்து நாடுகளிலும், மத்திய கிழக்கு மற்றும் இந்தியாவிலும் டெலிகிராம் பயனர்கள் உள்ளனர்.

குறிப்பாக, நேட்டோ அரசாங்கங்கள் மற்றும் அதிவலது உக்ரேனிய ஆட்சியின் அதிகாரிகள், உக்ரேனில் மிகவும் பிரபலமாக இருக்கும் இந்த செயலியை தடை செய்ய மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளனர். ரஷ்யாவுக்கு எதிரான அவர்களின் போரில் குறுக்கிடும் “ரஷ்ய பிரச்சாரத்திற்கு” இது ஒரு வடிகாலாக இருப்பதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

துரோவ் ஒரு ரஷ்ய குடிமகனாவார். அவர் 2014 இல் ரஷ்யாவை விட்டு வெளியேறி துபாயில் வசித்து வருகிறார். இவர், VKontakte சமூக வலைப்பின்னலில் இருந்து தகவல்களை ரஷ்ய அரசாங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க மறுத்ததற்காக கிரெம்ளினுடன் மோதலுக்கு வந்த பின்னர் பிரெஞ்சு குடியுரிமையைப் பெற்றார். கடந்த சனிக்கிழமையன்று, பாரிசிலுள்ள லூ பூர்ஜே (Le Bourget) விமான நிலையத்தில் அவருடைய மெய்க்காப்பாளர் மற்றும் அவருடைய உதவியாளர் ஜூலியா வாவிலோவா ஆகியோருடன் அவர் கைது செய்யப்பட்டார். பின்பு மெய்க்காப்பாளரும், அவருடைய உதவியாளர் ஜூலியாவும் விடுவிக்கப்பட்டனர்.

சிறார்களுக்கு எதிரான வன்முறை (Ofmin) தொடர்பான பிரெஞ்சு அலுவலகம் துரோவுக்கு எதிராக இரகசியமாகத் தொடங்கப்பட்ட ஆரம்ப விசாரணையில் இருந்து அவருக்கு எதிரான 12 குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இந்த குற்றச்சாட்டுகள் எதுவும் துரோவின் சொந்த நடத்தையை குறிவைக்கவில்லை, மாறாக டெலிகிராம் பயன்பாட்டைப் பயன்படுத்தி மற்றவர்கள் செய்ததாகக் கூறப்படும் குற்றச் செயல்களுக்கு துரோவ் தனிப்பட்ட முறையில் பொறுப்பு என்ற வாதத்துக்கு குறிவைக்கப்பட்டுள்ளார். இந்த இட்டுக்கட்டப்பட்ட சட்ட வாதம், பிரதான சமூக ஊடக நிர்வாக அதிகாரிகளை கைது செய்யும் விடயத்தில் ஒரு “உலக முதன்மை நிகழ்ச்சி” என்று லூ மொன்ட் பத்திரிகை ஒப்புக் கொள்வதற்கு இட்டுச் சென்றுள்ளது.

கைது செய்யப்பட்ட உடனேயே, ஒரு பிரெஞ்சு போலிஸ் புலனாய்வாளர் TF1 செய்திக்கு தற்பெருமையுடன் திருப்தி உணர்வை இவ்வாறு வெளிப்படுத்தினார்: “[துரோவ்] இன்றிரவு கைதுசெய்யப்பட்டார். இது, ஏன் என்று தெரியவில்லை. … அவர் பிரான்ஸ் வழியாக கடந்து வந்தாரா? எப்படியோ அவரை இப்போது அடைத்து வைத்திருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

ஆரம்ப விசாரணை தடுப்புக்காவல் நாளை முடிவடைந்த பின்னரும் கூட துரோவ் சிறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார் என்று மற்றொருவர் கூறினார்: “பாவெல் துரோவ் தற்காலிக தடுப்புக்காவலில் முடிவடைவார், அது நிச்சயம். அவரது தளத்தில், அவர் கணக்கிட முடியாத எண்ணிக்கையிலான குற்றங்கள் மற்றும் தவறான நடத்தைகளைச் செய்ய மக்களை அனுமதித்தார், அவற்றைப் பற்றி அவர் எங்களுடன் மிதப்படுத்தவோ அல்லது ஒத்துழைக்கவோ முயற்சிக்கவில்லை.”

எவ்வாறிருப்பினும், இந்தக் கைது நடவடிக்கை ரஷ்யாவுடனான போரை நேட்டோ நடத்துவதுடனும் மற்றும் உக்ரேனிலும் சரி சர்வதேச அளவிலும் சரி, போருக்கான மக்கள் எதிர்ப்பை மட்டுப்படுத்தும் முயற்சிகளுடனும் பிணைந்துள்ளது என்பதை ரஷ்ய மற்றும் நேட்டோ-ஆதரவு ஊடகங்கள் இரண்டிலுமான செய்திகள் தெளிவுபடுத்துகின்றன.

டெலிகிராமை பரவலாகப் பயன்படுத்தும் உக்ரேனில் உள்ள ரஷ்யப் படைகளின் நடவடிக்கைகளில், துரோவ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பது பேரழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ரஷ்ய ஊடகங்கள் பகிரங்கமாக கவலை தெரிவித்து வருகின்றன. “பிரெஞ்சு உளவுத்துறை சேவைகளுக்கு பாவெல் துரோவ் கீழ்ப்படிய நிர்பந்திக்கப்பட்டால், டெலிகிராம் நேட்டோவின் ஒரு கருவியாக மாறக்கூடும்” என்று மாஸ்கோவ்ஸ்கி கொம்சோமோலெட்ஸ் அறிவித்தார். “டெலிகிராம் அரட்டைகளில் ஏராளமான முக்கியமான, மூலோபாய தகவல்கள் உள்ளன. … டெலிகிராம் செயலிழந்தால், [எங்கள் இராணுவம்] எவ்வாறு போராடப் போகிறது?” என்று கேள்வி எழுப்பினார்.

மாஸ்ட்ரிச் பல்கலைக்கழக பேராசிரியர் மரியெல்லே விஜெர்மார்ஸ் பிரான்ஸ்24 க்கு கருத்துரைத்தபோது, “டெலிகிராம் பரவலாக இராணுவத்திலும் அரசியல் ஸ்தாபகத்திலும் தகவல் தொடர்புகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவர்களின் தகவல் தொடர்புகளை அணுகுவதற்கு டெலிகிராமின் முதலாளிக்கு பிரான்ஸ் அழுத்தம் கொடுக்கும் என்று பல ரஷ்ய அதிகாரிகள் அஞ்ச வேண்டும் என்பது தெளிவாக உள்ளது” என்று குறிப்பிட்டார்.

நேட்டோ மற்றும் உக்ரேனிய ஊடகங்களால் வடிகட்டப்படாத, குறிப்பாக உக்ரேனிய துருப்புக்கள் மற்றும் நேட்டோ உபகரணங்களின் பாரிய இழப்புகள் தொடர்பாக, 2022 இலிருந்து உக்ரேனில் நடந்துவரும் நேட்டோ ரஷ்யா போரின் தொடக்கத்தில் இருந்து, போரின் தகவல் மற்றும் காட்சிகளின் ஆதாரமாக டெலிகிராம் வெளிவந்துள்ளது. ரஷ்யாவிற்கு எதிராக உக்ரேனிய இராணுவம் வெற்றி பெற்றதாகக் கூறப்படும் தவறான உத்தியோகபூர்வ விவரிப்புகளை மறுக்கும் இந்தத் தகவல், விரைவில் நேட்டோ அரசாங்கங்கள் மற்றும் நேட்டோ சார்பு ஊடகங்களின் விரோதத்தை ஈர்த்தது.

“உக்ரேனில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், டெலிகிராம் என்ற செய்தியிடல் செயலியானது, வடிகட்டப்படாத நேரடிப் போர் பின்னூட்டங்கள் தரும் தளமாக உருவெடுத்துள்ளது” என்று அமெரிக்க தேசிய பொது வானொலி 2022 இல் குறிப்பிட்டது. இது, நேட்டோ போருக்கு எதிர்ப்புக்களை தூண்டும் அபாயம் இருப்பதாக புகார் கூறியது. மேலும், “டெலிகிராம், அதன் உள்ளடக்கத்தை சிறிதும் கண்காணிக்கவில்லை, ரஷ்ய பிரச்சாரம் மற்றும் தவறான தகவல்களுக்கான மையமாகவும் மாறியுள்ளது. பல கிரெம்ளின் ஆதரவு சேனல்கள் பிரபலமாகி விட்டன...” என்று அது தெரிவித்தது.

குறிப்பாக இந்தாண்டு, போருக்கு உக்ரேனிய மக்களிடையே அதிகரித்து வரும் எதிர்ப்புக்கு மத்தியில், கியேவில் உள்ள அதிவலது ஆட்சியின் அதிகாரிகள் டெலிகிராம் மௌனமாக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். உக்ரேனிய மக்களில் முழுமையாக 72 சதவிகிதத்தினர் இந்த செயலியைப் பயன்படுத்துவதால், உக்ரேனிய அதிகாரிகள் இறுதியில் இந்த நடவடிக்கையை எடுக்கத் துணியவில்லை. எவ்வாறிருப்பினும், குறிப்பாக டெலிகிராமில் ரஷ்ய ஆதாரங்களை தணிக்கை செய்ய துரோவ் உடன்படவில்லை என்றால், அதை ஒரு முக்கிய உள்நாட்டு அரசியல் அச்சுறுத்தலாக அவர்கள் பார்ப்பதாக அவர்கள் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தி வந்தனர்.

உக்ரேனிய இராணுவ புலனாய்வு அதிகாரி ஆண்ட்ரி யூசோவ், ஜேர்மன் அரசு ஒளிபரப்பாளரான டாய்ச் வெல்லே (DW) இடம் டெலிகிராம் உக்ரேனின் “தகவல் பாதுகாப்புக்கு மட்டுமல்ல, தகவலுக்கும்” அச்சுறுத்தலாக உள்ளது என்று கூறினார். டெலிகிராமின் அநாமதேயம் மற்றும் தனியுரிமை என்பதன் அர்த்தமானது, அரசியல் அதிருப்தியை மிருகத்தனமாக ஒடுக்குவதில் இழிபுகழ் பெற்ற உக்ரேனின் உளவுத்துறை சேவைகள், அவர்கள் விரும்பாத ஆவணங்களை இடுகையிடும் நபர்களின் அடையாளத்தை அடையாளம் காணவோ கண்டுபிடிக்கவோ முடியாதுள்ளமையையே இது  அர்த்தப்படுத்துகிறது என்று உக்ரேனிய அதிகாரிகள் மீண்டும் மீண்டும் புகார் கூறினர்.

உக்ரேனிய நாடாளுமன்ற உறுப்பினர் யாரோஸ்லாவ் யுர்ச்சிஷைன், “டெலிகிராமுடனான ஒத்துழைப்பு வேலை செய்யவில்லை” என்றால், டெலிகிராமை தடை செய்வதை ஆதரிக்க முடியும் என்று DW விடம் கூறினார். ஏனென்றால் “ரஷ்ய பிரச்சாரத்தை உக்ரேனிய தகவல் தயாரிப்புகளுக்குள் எளிதாக ஊடுருவ அனுமதிக்கின்ற, தகவல் பாதுகாப்பில் காணப்படும் இதுபோன்ற ஓட்டைகளின் விளைவு, நம் நாட்டில் மிக அதிகமாகும். இது, எங்கள் குடிமக்களுக்கு வாழ்வா சாவா என்ற பிரச்சினையாகும்” என்று அவர் குறிப்பிட்டார்.

இது, சிறுவர் ஆபாசப் படங்களில் உடந்தையாக இருந்ததாக கூறப்படும் இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் அல்ல. மாறாக, உக்ரேனில் ரஷ்யப் படைகளுக்கு எதிரான நேட்டோ சக்திகளின் போர் மற்றும் உக்ரேன், நேட்டோ நாடுகளில் வளர்ச்சியடைந்துவரும்  எதிர்ப்பைக் கட்டுப்படுத்த, அந்தப் போரைப் பற்றிய செய்திகளை தணிக்கை செய்வதற்கான அவர்களின் முயற்சியுமே துரோவின் கைதுக்கு வழிவகுத்தது.  மேற்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்கா இரண்டிலும் கிட்டத்தட்ட 90 சதவீத எதிர்ப்பை முகங்கொடுக்கின்ற நிலையில், ரஷ்யாவுடன் போரைத் தொடுக்க உக்ரேனுக்கு துருப்புகளை அனுப்புவதற்கான மக்ரோனின் அழைப்பும் பாரியளவில் மதிப்பிழந்துள்ளது.

1991ல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்டதில் இருந்து வெளிப்பட்ட ரஷ்ய ஆளும் முதலாளித்துவ தன்னலக்குழுவின் வட்டங்களில் போருக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் ஆட்சிக்கும் உள்ள ஆதரவை கீழறுப்பதற்காக ஒரு ரஷ்ய பில்லியனர் கைது செய்யப்பட வேண்டும் என்று பிரெஞ்சு மற்றும் நேட்டோ அதிகாரிகள் விரும்புகின்றனர். சமீபத்தில், உக்ரேன் குர்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்யா மீது படையெடுத்தது, நேட்டோ ஆதரவிலான உக்ரேனிய ஆட்சியின் இராணுவ பின்னடைவுகளுக்கு இடையிலும், நேட்டோ மோதலைத் தீவிரப்படுத்தவும் ரஷ்யாவை சரணடைய நிர்பந்திக்கவும் உத்தேசித்துள்ளது என்பதை சமிக்ஞை செய்தது.

துரோவை கைது செய்வதன் மூலமாக, பிரான்சும் அதன் நேட்டோ ஏகாதிபத்திய கூட்டாளிகளும், ரஷ்யாவின் ஊழல் நிறைந்த ஆளும் உயரடுக்குகள், நேட்டோ கொள்கைக்கும் மற்றும் ரஷ்யாவை துண்டாடுவதற்கும் சூறையாடுவதற்குமான அதன் திட்டங்களுக்கும் இணங்காத வரையில், ரஷ்யாவின் வெளிநாட்டு சொத்துக்களும் அவர்களின் உயிர்களும் பாதுகாப்பாக இருக்காது என்று எச்சரித்து வருகின்றன.

துரோவின் கைதானது, இணைய சுதந்திரத்தின் மீது கட்டவிழ்த்து விடப்படும் தாக்குதலுக்குப் பின்னால் உள்ள முற்றிலும் பிற்போக்குத்தனமான அரசியல் சக்திகளை தெளிவாக்குகிறது.

Loading