முன்னோக்கு

பத்திரிகையாளர் ரிச்சர்ட் மெட்ஹர்ஸ்ட் கைதும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

சுதந்திர பத்திரிகையாளர் ரிச்சர்ட் மெட்ஹர்ஸ்ட் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதானது, பிரிட்டனிலும் சர்வதேச அளவிலும் ஜனநாயக உரிமைகள் மீது நடத்தப்பட்ட தீவிரமான தாக்குதல் ஆகும்.

மெட்ஹர்ஸ்ட்டின் கைது, பிரிட்டன் மற்றும் உலகம் முழுவதிலும் பாரிய ஆர்ப்பாட்டங்களைக் கண்டுவரும் காஸா இனப்படுகொலைக்கு எதிரான எதிர்ப்பை குற்றமாக்குவதற்கும் அச்சுறுத்துவதற்கும் தொழிற்கட்சி அரசாங்கத்தின் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக இருக்கிறது.

ரிச்சர்ட் மெட்ஹர்ஸ்ட் [Photo: Richard Medhurst/X]

ஆகஸ்ட் 15 அன்று லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் மெட்ஹர்ஸ்ட், பயங்கரவாதச் சட்டத்தின் (2000) பிரிவு 12ன் கீழ், விமானத்தில் இருந்து இறங்கியபோது கைது செய்யப்பட்டார். கிட்டத்தட்ட 24 மணிநேரம் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டிருந்த மெட்ஹர்ஸ்ட்டிடம் இருந்த அனைத்து மின்னணு சாதனங்களும், பத்திரிகை உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

“பயங்கரவாதச் சட்ட விதியின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் பத்திரிகையாளர் நான் என்று நம்புகிறேன்“ என்று மெட்ஹர்ஸ்ட் தனது டுவிட்டர் X கணக்கில் கூறியுள்ளார்.

முன்னதாக லண்டனுக்கு விமான டிக்கெட்டை முன்பதிவு செய்த நிலையில், இந்தக் கைதானது, மெட்ஹர்ஸ்ட் அரசின் கண்காணிப்பில் இருப்பதை உறுதிப்படுத்துகிறது. இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் உண்மையான பயங்கரவாதத்தையும், இனப்படுகொலையையும் நிறுத்துவதற்கு செயல்பாட்டாளர்கள் முயற்சித்து வருவதால், “பாசிச பயங்கரவாதச் சட்டம்” எந்தக் குற்றச்சாட்டும் அல்லது விசாரணையும் இல்லாமல் அவர்களை தடுத்து வைக்கப் பயன்படுத்தப்படுகிறது என்று மெட்ஹர்ஸ்ட் அதே நாளில் தனது டுவிட்டர் X கணக்கில் பதிவிட்டுள்ளார்.

மெட்ஹர்ஸ்ட் 2000 ம் ஆண்டு சட்டத்தின் கொடுமையான விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 2019 இல் திருத்தப்பட்ட இந்த சட்டமானது, ஒரு சர்ச்சைக்குரிய கருத்து சிந்தனைக் குற்றத்திற்கு, ஒரு நபரை 14 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க அனுமதிக்கிறது. அதாவது, “தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவான ஒரு கருத்தை அல்லது நம்பிக்கையை வெளிப்படுத்துதல்“ மற்றும் அவ்வாறு செய்யும்போது, ​​​​”ஒரு நபர் தடைசெய்யப்பட்ட அமைப்பை ஆதரிக்க ஊக்குவிக்கப்படுவார்களா என்பது குறித்து பொறுப்பற்றவராக” இருப்பார்.

மெட்ஹர்ஸ்டின் ஊடக இதழியல், காஸா மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் இடம்பெற்றுவரும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இஸ்ரேலிய போர்க்குற்றங்களை அம்பலப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. 10 மாதங்களாக இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை யூத-விரோத மற்றும் வெறுக்கத்தக்க அணிவகுப்பு என்று கண்டித்து வந்த முக்கிய அரசியல் தலைவர்களை கொண்டிருக்கும் தொழிற்கட்சி மற்றும் பழமைவாதிகளின் ஒரு அரசால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனநாயக உரிமைகள் மீதான ஒடுக்குமுறை ஆளும் உயரடுக்கின் போர் மற்றும் சிக்கன செயல்திட்டத்திற்கு அவசியமாகியுள்ளது. ஒவ்வொரு பெரிய ஏகாதிபத்திய சக்தியும், பாசிச இஸ்ரேலிய ஆட்சியால் பாலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்படுவதையும், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போரையும் ஆதரித்து வருகிறது.

பாரிய மக்கள் எதிர்ப்பையும், போருக்கு நிதியளிப்பதற்காக வேலைகள், ஊதியங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு எதிராக வலுவூட்டப்பட்ட தாக்குதலின் தேவையையும் எதிர்கொண்டுவரும் நிலையில், போர், போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளை எதிர்த்து அம்பலப்படுத்திவரும் ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்களை குறிவைப்பது உட்பட, தொழிற்கட்சி அரசாங்கமும் ஆளும் வர்க்கமும் எல்லா இடங்களிலும் அரசு அடக்குமுறைக்கு இன்னும் தீர்க்கமான முறையில் திரும்பியுள்ளன.

பிப்ரவரி 2022 இல், உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்ததில் இருந்து, பிரிட்டன் ஆளும் வர்க்கம் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான ஒரு பரந்த தாக்குதலின் ஒரு பகுதியாக, இடதுசாரி பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் எல்லைகளுக்குள் பல தசாப்தங்களாக நேட்டோ அத்துமீறல்கள் மற்றும் வலதுசாரி அமெரிக்க சார்பு ஆட்சியை அதிகாரத்திற்கு கொண்டு வந்த 2014 ஆட்சி மாற்ற நடவடிக்கையைத் தொடர்ந்து, வேண்டுமென்றே ஒரு படையெடுப்பு தூண்டிவிடப்பட்டது.

  • ஏப்ரல் 17, 2023 அன்று, பிரெஞ்சு வெளியீட்டாளர் எர்னஸ்ட் மோரெட், மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக பிரான்சில் நடந்த வெகுஜன ஆர்ப்பாட்டங்களில் அவர் பங்கேற்றதை நியாயப்படுத்தி, லண்டனில் உள்ள செயின்ட் பான்கிராஸ் ரயில் நிலையத்திற்கு அவர் வந்தபோது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டார். மோரேட் பயங்கரவாதச் சட்டம் 2000ன் அட்டவணை 7ன் கீழ் ரயில் நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். இந்த பயங்கரவாதச் சட்டமானது, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் அதிகாரிகள் பரிசோதிக்கவும், சந்தேகத்திற்குரிய பயங்கரவாத செயல்களை விசாரிக்க மக்களை நிறுத்தவும், கேள்வி கேட்கவும் மற்றும்/அல்லது தடுத்து வைக்கவும் அனுமதிக்கிறது.

  • மே 17, 2023 அன்று, செர்பியாவின் பெல்கிரேடில் இருந்து பிரிட்டனுக்கு வந்த பிரிட்டிஷ் பத்திரிகையாளர் கிட் கிளாரன்பெர்க் லூட்டன் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். தி கிரேசோன் பத்திரிகையின் எழுத்தாளரான கிளாரன்பெர்க் விசாரிக்கப்பட்டு, அவரது வங்கி அட்டைகள், மின்னணு சாதனங்கள் மற்றும் எஸ்டி கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, அவரது கைரேகைகள், புகைப்படம் மற்றும் டிஎன்ஏ ஆகியவை, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்புச் சட்டம் 2019 இன் அட்டவணை 3-ன் கீழ் எடுக்கப்பட்டன.

  • அக்டோபர் 16, 2023 அன்று, மனித உரிமை ஆர்வலரும், முன்னாள் பிரிட்டிஷ் இராஜதந்திரியும் மற்றும் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஞ்சின் (அப்போது லண்டனின் அதிகபட்ச பாதுகாப்பு பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்) முக்கிய பாதுகாவலருமான கிரேக் முர்ரே கிளாஸ்கோ விமான நிலையத்தில் பயங்கரவாதச் சட்டம் (2000) பிரிவு 7 இன் கீழ் கைது செய்யப்பட்டார். ஐஸ்லாந்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த முர்ரே, அங்கு அவர் ஜூலியன் அசான்ஞ்சின் பாதுகாப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மூத்த நபர்களை சந்தித்திருந்தார்.

அசான்ஞ் வழக்கு

மெட்ஹர்ஸ்டும், அசான்ஜின் சிறைவாசத்தை கடுமையாக எதிர்ப்பவராக இருந்தார். ஏகாதிபத்திய சக்திகளின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காக, தன்னை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் முயற்சிக்கு எதிராக அசான்ஞ் போராடிக் கொண்டிருந்தபோது, ​​ஜூன் மாதத்தில் லண்டனில் உள்ள உயர் நீதிமன்றத்திற்குள் இருந்து மெட்ஹர்ஸ்ட் அறிக்கை வெளியிட்டார்.

2010ல் இருந்து இந்த ஆண்டு ஜூன் மாதம் அசான்ஞ் விடுவிக்கப்படும் வரை அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததானது, ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான ஆளும் வர்க்கத்தின் தாக்குதலில் ஒரு மைல் கல்லாகும். ஏகாதிபத்திய போர்க்குற்றங்களை அம்பலப்படுத்துவதில் ஈடுபட்ட பத்திரிகையாளர்களை மௌனமாக்குவதற்கான பிரச்சாரத்தின் மிக முக்கியமான பலியாக 14 ஆண்டுகளாக அசான்ஞ் சிறைக்குள் வைக்கப்பட்டிந்தார். மேலும் அரச அடக்குமுறைக்கு இலக்கானவர்களில் பலர் அவரது விடுதலைக்கான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதில், அப்போதைய கார்டியன் பத்திரிகையாளர் க்ளென் கிரீன்வால்டின் பங்குதாரரான மறைந்த டேவிட் மிராண்டாவும் அடங்குவர். அவர் 2013ல் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ஹீத்ரோ விமான நிலையத்தில் பயங்கரவாதச் சட்டம் 2000ன் அட்டவணை 7ன் கீழ் கைது செய்யப்பட்டார். அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் தகவல் வழங்குபரான எட்வர்ட் ஸ்னோவ்டென் வழங்கிய இரகசிய தகவல்களைக் கொண்ட ஒரு USB இயக்கியை (thumb drive) மிராண்டா எடுத்துச் சென்றிருந்தார்.

ஜூன் 24 அன்று அசான்ஜின் விடுதலை பற்றிய முன்னோக்கில், உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு பின்வருமாறு எச்சரித்தது: அசான்ஞ் சுதந்திரமாக இருந்தாலும், ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான உலகளாவிய முதலாளித்துவ தாக்குதல் வேகமெடுத்து வருகிறது. ஏகாதிபத்தியத்தின் ஒவ்வொரு தந்திரோபாய பின்வாங்கலுக்கும், இன்னும் கொடூரமான எதிர் தாக்குதல் உள்ளது... உண்மையில், பொது நலன் கருதி உண்மைத் தகவல்களை வெளியிடுவதன் மூலம் உளவுச் சட்டத்தின் மீறல்களை ஒப்புக்கொள்ளும்படி ஒரு பத்திரிகையாளரை சித்திரவதை செய்ததன் மூலம், பைடென் நிர்வாகம் பத்திரிகை சுதந்திரத்தைத் தாக்குவதற்கு ஆபத்தான புதிய முன்னுதாரணத்தை அமைத்துள்ளது. தேர்தல் நடந்து ஒரு மாதம் கழித்து ஸ்டார்மரின் தொழிற்கட்சி அரசாங்கம் இந்த எச்சரிக்கையை உறுதி செய்துள்ளது.

சேர் கெய்ர் ஸ்டார்மர் (பிரிட்டன் பிரதமர்) 2008-13 வரை முடிக்குரிய வழக்கு சேவையில் (CPS) பொது வழக்குகளின் இயக்குனராக இருந்து, அசான்ஜ் மீதான துன்புறுத்தலில் முக்கிய பங்கு வகித்திருந்தார். பொய்யான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்காக அசாஞ்ஜை சுவீடனுக்கு நாடு கடத்தும் நடவடிக்கைகளை CPS மேற்பார்வையிட்ட நிலையில், ஸ்டார்மர் 2009, 2011, 2012 மற்றும் 2013 இல் நான்கு முறை வாஷிங்டனுக்குச் சென்றிருந்தார்.

2013 இல், அசான்ஞ் மீதான மோசடி விசாரணையைத் தொடருமாறு சுவீடன் வழக்கறிஞர்களுக்கு CPS அழுத்தம் கொடுத்தது. அசான்ஞ்சை அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கான சாக்குப்போக்காக, CPS இலிருந்து அவர்களின் சுவீடன் சகாக்களுக்கு மின்னஞ்சல்கள் மூலம் “நீங்கள் பயப்பட வேண்டாம்! உங்களுக்கு தைரியம் இல்லை! என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இப்போது, ​​ஸ்டார்மர் மற்றும் உள்துறைச் செயலர் யவெட் கூப்பர் ஒப்புக்கொண்ட ஒரு நடவடிக்கையில், பழமைவாதிகளால் இயற்றப்பட்ட பயங்கரவாதச் சட்டத்தில் ஒரு திருத்தத்தைப் பயன்படுத்தி, ஒரு பத்திரிகையாளர் மற்றும் அரசியல் ஆர்வலரை மீண்டும் மௌனமாக்குவதற்கும், குற்றவாளியாக்குவதற்கும் தொழிற்கட்சி முன்னோடியாக உள்ளது.

உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் இதே போக்கை பின்பற்றி வருகின்றன.

கடந்த ஏப்ரலில் ஜேர்மன் தலைநகர் பேர்லினில் நடந்த பாலஸ்தீன காங்கிரஸை நூற்றுக்கணக்கான போலீசார் கலைத்தனர். ஜேர்மன் உள்துறை அமைச்சகம், கிரேக்கத்தின் முன்னாள் நிதி அமைச்சரும், பான்-ஐரோப்பிய DiEM25 கட்சியின் தலைவருமான யானிஸ் வரூஃபாகிஸ், மற்றும் மருத்துவரும் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் ரெக்டருமான டாக்டர் கசான் அபு சித்தா ஆகியோரை நாட்டிற்குள் நுழைய தடை விதித்தது. காஸா போரின் போது அங்கிருந்த மருத்துவமனைகளில் எல்லைகளற்ற மருத்துவர்களுடன் இணைந்து பணியாற்றிய டாக்டர் சித்தா, சர்வதேச நீதிமன்றத்தின் முன் சாட்சியமளித்தபோது, ஜேர்மனி இனப்படுகொலைக்கு உதவி வருவதாக குற்றம் சாட்டினார்.

மே மாதம், பொதுக் கூட்டங்களில் பேசுவதற்காக அமெரிக்காவுக்குச் சென்றிருந்த சியோனிச எதிர்ப்பு இஸ்ரேலிய வரலாற்றாசிரியர் இலன் பாப்பே டெட்ராய்ட் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை முகவர்கள், அவரது செல்போனை அவரிடம் திருப்பிக் கொடுப்பதற்கு முன், செல்போனின் உள்ளடக்கங்களை பறிமுதல் செய்து நகலெடுத்து வைத்தனர்.

இந்த மாத தொடக்கத்தில், அமெரிக்க கடற்படையின் முன்னாள் உளவுத்துறை அதிகாரியும், ஐக்கிய நாடுகளின் ஆயுத ஆய்வாளரும், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க நேட்டோ போரின் வெளிப்படையான எதிர்ப்பாளருமான ஸ்காட் ரிட்டரின் நியூயோர்க் வீட்டில் மத்திய புலனாய்வுப் பணியகம் (FBI) சோதனை நடத்தியது. வெளிநாட்டு முகவர்கள் பதிவுச் சட்டத்தின் (FARA) சாத்தியமான மீறலின் அடிப்படையில் ரிட்டர் சோதனையிடப்பட்டார்.

பிரிட்டன், ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பல நாடுகளில், போர்-எதிர்ப்பு உணர்வின் மீதான தாக்குதலில், ஜோர்தான் “நதியிலிருந்து கடல் வரை, பாலஸ்தீனம் சுதந்திரமாக இருக்கும்” என்ற முழக்கத்தினை குற்றமாக்குவதற்கு வழிவகுத்ததுடன், டசின் கணக்கான கைதுகளுக்கும் வழிவகுத்தது.

காஸாவில் பாலஸ்தீனியர்கள் மீதான அழித்தொழிப்பு போரில், இஸ்ரேலால் குறைந்தது 116 ஊடக ஊழியர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். இதன் மூலம் பத்திரிகை மீதான இந்தப் போர் அதன் கொடூரமான முடிவை எட்டியுள்ளது.

மெட்ஹர்ஸ்டின் கைதானது, தொழிற்கட்சியின் ஏகாதிபத்திய சார்பு தன்மை பற்றிய சோசலிச சமத்துவக் கட்சியின் பகுப்பாய்வையும், முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் அல்லது முறையீடு செய்வதன் மூலம் இனப்படுகொலை மற்றும் பொலிஸ்-அரசு ஆட்சியை எதிர்த்துப் போராடுவது சாத்தியமற்றது என்பதையும் உறுதிப்படுத்துகிறது. போர் மற்றும் வளர்ந்து வரும் சமூக பிற்போக்கு நிலைமைகளின் கீழ், ஒரு ஜனநாயக ஆட்சியைப் பாதுகாப்பதில் முதலாளித்துவம் இனி இணக்கமாக இருக்கப் போவதில்லை.

ஊடகவியலாளர் மெட்ஹர்ஸ்ட் மற்றும் பத்திரிகை சுதந்திரத்தையும், காஸாவில் இனப்படுகொலையையும் தடுத்து நிறுத்தி, அத்தியாவசிய ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு, பிரிட்டனின் தொழிற்கட்சி அரசாங்கம் மற்றும் சர்வதேச அளவில் அதன் சகாக்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட வேண்டும். ஏகாதிபத்திய போருக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தில் வேரூன்றிய மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தை மையமாகக் கொண்ட ஒரு வெகுஜன இயக்கத்தை கட்டியெழுப்புவது என்பது இதன் பொருளாகும்.

Loading