காஸாவின் 89 சதவீத பகுதிகளிலிருந்து மக்களை இஸ்ரேல் வெளியேற உத்தரவிட்டுள்ளதால் ஐ.நா. உணவு விநியோகத்தை நிறுத்தியுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

அமெரிக்க-இஸ்ரேலிய இனப்படுகொலை மற்றும் காஸா மீதான இன சுத்திகரிப்பின் சமீபத்திய கட்டத்தில், இஸ்ரேலிய அதிகாரிகள் டெய்ர் அல்-பலா நகரத்தின் சில பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்ற உத்தரவிட்டுள்ளனர். இஸ்ரேல், காஸாவில் இடம்பெயர்ந்த மற்றும் பட்டினியால் வாடும் மக்களை அப்பகுதியின் ஒரு சிறிய பகுதிக்குள் அடைத்து வைக்கிறது.

தெற்கு காஸாவிலுள்ள ரஃபாவில் உணவு விநியோகத்தின்போது பாலஸ்தீனியர்கள் ஒன்று திரண்டுள்ளனர், நவம்பர் 8, 2023 [AP Photo/Hatem Ali]

இனப்படுகொலை தொடங்குவதற்கு முன்பு 2 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்டிருந்த காஸாவின் மக்கள் தொகை இன்று 41 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அல்லது காசாவின் மொத்த பரப்பளவில் 11% மட்டுமே குறிக்கும் ஒரு பகுதிக்குள் நெரிசலில் சிக்கியுள்ளது. மீதமுள்ள 89 சதவீதத்தினர் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் வெளியேற்ற உத்தரவுகளின் பேரில் வைக்கப்பட்டுள்ளனர்.

“இப்பகுதியில் முக்கியமான உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை சேவைகள் இல்லை. அதே நேரத்தில், அணுகல் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக உதவி வழங்கல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சதுர கிலோமீட்டருக்கு 30,000 முதல் 34,000 தனிநபர்கள் வரை அடர்த்தி கொண்ட கடுமையான கூட்ட நெரிசல், தண்ணீர், சுகாதாரம் மற்றும் சுகாதார விநியோகங்கள், சுகாதார சேவைகள், பாதுகாப்பு மற்றும் தங்குமிடம் போன்ற அத்தியாவசிய ஆதார வளங்களின் கடுமையான பற்றாக்குறை அதிகரித்துள்ளது” என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

கடந்த வாரக் கடைசியில் அறிவிக்கப்பட்ட அண்மைய இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையின் விளைவாக, ஐக்கிய நாடுகள் சபை தனது உணவு விநியோக முயற்சிகளை இரண்டாவது தடவையாக தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. ரபா நகரில் முந்தைய இராணுவ நடவடிக்கைகளின் போது ஐ.நா. அலுவலர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.

“இப்ப நாம் எங்கே செல்வது? ... செயல்படுவதற்கான இடம் முன்னெப்போதையும் விட மேலும் மேலும் கட்டுப்படுத்தப்படுகிறது” என்று ஐ.நா அதிகாரி ஒருவர் திங்களன்று ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். “இன்று காலை நிலவரப்படி, நாங்கள் காஸாவில் உணவு மற்றும் மருத்துவ கவனிப்பை வழங்க செயல்படவில்லை”, ஏனென்றால் “நாங்கள் இருக்கும் நிலைமைகளுடன் இன்று எங்களால் வழங்க முடியவில்லை” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தற்காப்பு மற்றும் பாதுகாப்புக்கான ஐ.நா.வின் துணை பொதுச்செயலாளர் கில்லஸ் மிச்சாட், “ஐ.நா மற்றும் மனிதாபிமான பணியாளர்களுக்கு தாங்க முடியாத அச்சுறுத்தல்களின் நீண்ட பட்டியலில் மக்களின் பாரியளவிலான வெளியேற்ற உத்தரவுகள் சமீபத்தியவை” என்று சேர்த்துக் கொண்டார். இஸ்ரேலிய அதிகாரிகள் “ஒரு முக்கியமான மனிதாபிமான மையமான டெய்ர் எல்-பலாவில் உள்ள 200 க்கும் மேற்பட்ட ஐ.நா பணியாளர்களை அவர்களின் அலுவலகங்கள் மற்றும் வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்ற ஒரு சில மணி நேர முன்னறிவிப்பை வழங்கினர்” என்று அவர் கூறினார்.

UNRWA வின் மூத்த தகவல் தொடர்பு அதிகாரி லூயிஸ் வாட்டர்டிஜ் அல் ஜசீராவிடம் “எங்களிடம் போதுமான உதவி இல்லாததால், இங்கு மக்களுக்குத் தேவையானதை வழங்குவது ஒரு உண்மையான போராட்டம் ஆகும். எங்களிடம் போதுமான பொருட்கள் இல்லை, அவற்றை மக்களுக்கு விநியோகிக்க போதுமான அணுகல் எங்களிடம் இல்லை” என்று தெரிவித்தார்.

“காஸாவில் சிகிச்சையளிக்கக்கூடிய நோய்களால் பலர் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். மக்களைக் காப்பாற்ற முடியும், ஆனால் அவர்களுக்காக அதைச் செய்வதற்கான வழி எங்களிடம் இல்லை. எங்களுடைய திறமைக்கு ஏற்றவாறு செயல்படுவதற்கான வழிமுறைகள் எங்களிடம் இல்லை” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 23 மற்றும் 26 க்கு இடையில், காஸா பகுதி முழுவதிலும் இடைவிடாத குண்டுவீச்சு மற்றும் தரைவழித் தாக்குதல்களுக்கு மத்தியில், 170 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 390 பேர் காயமடைந்தனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து 40,435 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 93,534 பேர் காயமடைந்தனர். ஆனால் இந்த எண்ணிக்கையில் கொல்லப்பட்டு இடிபாடுகளுக்குள் புதையுண்டதாக கருதப்படும் 10,000 பேர் சேர்க்கப்படவில்லை.

உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, இறப்பு எண்ணிக்கையில் 17,000 குழந்தைகளும் உள்ளடங்கும், இதன் அர்த்தம் காஸாவின் மொத்த குழந்தைகளில் 2.6 சதவிகிதத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். அக்டோபர் 7 முதல் ஒவ்வொரு நாளும் சராசரியாக 53 குழந்தைகள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

மருத்துவ இதழான லான்செட்டில் வெளியிடப்பட்ட மதிப்பீட்டின்படி, இஸ்ரேலின் வேண்டுமென்றே பஞ்சம் மற்றும் நோய் பரவல்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களையும் சேர்த்தால், உண்மையான இறப்பு எண்ணிக்கை 186,000 அல்லது அதற்கும் அதிகமாக இருக்கலாம்.

டெய்ர் அல்-பலாவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை அங்கு தஞ்சம் புகுந்துள்ள பாலஸ்தீனியர்களுக்கு இன்னுமொரு இடப்பெயர்வை குறிக்கிறது.

ராய்ட்டர்ஸ் ஒரு பெண்மணியை பேட்டி கண்டது, அவரும் அவரது குழந்தைகளும் 11 முறை இடம்பெயர்ந்ததாகக் கூறினார். “நான் என் பிள்ளைகளில் பாதிப்பேரை என் தளபாடங்களுக்கு அருகில் விட்டுவிட்டேன். இப்போது நான் என் குழந்தைகளுடனும் என் மகளுடனும் இருக்கிறேன். கடவுள் மட்டுமே நமக்கு உதவ முடியும்... என்னிடம் போக்குவரத்துக்கு பணம் இல்லை, எனது குடும்பம் தங்கியுள்ள பகுதி 17 க்கு நான் நடந்து செல்வேன். நான் என் குழந்தைகளை அழைத்துச் சென்றேன், மூன்று பிள்ளைகள் என் பின்னால் வந்தனர், அவர்கள் எங்கே என்று தெரியவில்லை” என்று அவர் கூறினார்.

நூறாயிரக்கணக்கான மக்கள் மத்திய காஸாவில் இன்னும் செயல்பாட்டில் உள்ள முக்கிய மருத்துவ வசதியான அல்-அக்ஸா மருத்துவமனைக்கு அருகில் தஞ்சம் புகுந்திருந்தனர். அவர்கள் இப்போது மீண்டும் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

இந்த மருத்துவமனை சமீபத்திய வெளியேற்ற உத்தரவின் கீழ் உள்ள பகுதியில் உள்ளது. அங்கு தங்குமிடம் தேடுபவர்கள் வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். “எங்கள் தலைவிதி இறப்பதுதான்,” என்று மருத்துவமனையிலிருந்து தப்பியோடிய ஒரு பெண் அசோசியேடட் பிரஸ்ஸிடம் கூறினார். “நாங்கள் செல்வதற்கு இடமில்லை. பாதுகாப்பான இடம் இல்லை” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மருத்துவமனைக்கு அருகில் நடந்த குண்டுவீச்சு அங்கு மருத்துவ சேவையை நிறுத்தி வைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது என்று எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. “இதன் விளைவாக, உயிர்காக்கும் சிகிச்சையைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கும் அதே வேளையில், காயப்பட்டவர்களுக்கான சிகிச்சையை தற்காலிகமாக நிறுத்தலாமா என்றும் MSF பரிசீலித்து வருகிறது” என்று இந்த தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

செவ்வாயன்று டெய்ர் எல்-பலாவில் இஸ்ரேல் அதன் குண்டுவீச்சை தீவிரப்படுத்தியது. காஸா பகுதி முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 40 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

“எஃப்-16 ரக ஏவுகணை அப்பகுதியில் விழுந்து அந்த இடம் முழுவதையும் அழித்துவிட்டது – பாதிக்கப்பட்டவர்களை இங்கிருந்து நம்மால் வெளியேற்ற முடியாது. அங்கு இன்னும் நிறைய பேர் உள்ளனர், அவர்களது வீடு நிரம்பியிருக்கிறது” என்று ஒரு குடியிருப்பாளர் அல் ஜசீராவிடம் கூறினார்.

மற்றொரு குடியிருப்பாளர் கூறுகையில், “நாங்கள் ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேடுகிறோம், உண்மையிலேயே முழு காஸா பகுதியிலும் பாதுகாப்பான இடம் இல்லை” என்று கூறினார்.

டெய்ர் எல்-பலாவில் இருந்து செய்தி சேகரிக்கும் அல் ஜசீரா பத்திரிகையாளர் தாரிக் அபு அஸ்ஸூம், “இஸ்ரேலிய வெளியேற்ற உத்தரவுகள் குடும்பங்களை விரக்தியடையச் செய்கின்றன, அவர்கள் தூங்குவதற்கு எங்காவது இடத்தை தேடுகிறார்கள். விரைவில், அவர்களுக்கு மற்றொரு சவால் இருக்கும்: தண்ணீரைப் பெறுவது கடினமாகும். காஸாவில் 70 சதவீத கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள், நீர் கிணறுகள் வெளியேற்றும் பகுதிகளுக்குள் அமைந்துள்ளதால், அவை அவற்றின் முக்கிய ஆதாரங்களில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. சில பாலஸ்தீனியர்கள் கொல்லப்படும் அபாயத்தில் திரும்பிச் செல்வது குறித்து கூட பரிசீலிக்கின்றனர்.”

உலக உணவுத் திட்டத்தின்படி, காஸா மக்களில் 96 சதவிகிதத்தினர் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை முகங்கொடுக்கின்றனர். 10 பேரில் 9 பேர் 24 மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக உணவு இல்லாமல் செலவழிக்கின்றனர்.

காஸாவில் குறைந்தபட்சம் 50,000 சிறுவர்களுக்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு சிகிச்சை தேவைப்படுகிறது. அதே நேரத்தில், 6 முதல் 23 மாதங்களில் உள்ள குழந்தைகளில் 96 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் அவர்களின் அடிப்படை ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்யவில்லை.

சுகாதாரப் பாதுகாப்பு வசதிகள் மீதான இஸ்ரேலின் நீடித்த போருக்கு மத்தியில், தொற்று நோய்கள் பரவலாக பரவி வருகின்றன. இஸ்ரேலின் நடவடிக்கைகள் போலியோ நோய்க்கு வழிவகுக்கிறது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஒரு அறிக்கையில் எச்சரித்துள்ளது.

“இஸ்ரேலிய அரசாங்கம் தொடர்ந்து அவசர உதவிகளைத் தடுத்து, நீர் மற்றும் கழிவு மேலாண்மை உள்கட்டமைப்பை அழித்தால், அது உலகளவில் கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்ட ஒரு நோய் பரவுவதற்கு உதவும்” என்று அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜூலியா பிளெக்னர் கூறினார். “இஸ்ரேலின் பங்காளிகள் முற்றுகையை உடனடியாக நீக்கவும், கட்டவிழ்ந்து வரும் போலியோ வெடிப்பைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகளை சரியான நேரத்தில் விநியோகிக்க காஸாவில் தடையற்ற மனிதாபிமான அணுகலை உறுதி செய்யவும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.

Loading