முன்னோக்கு

தொழிலாளர் தினத்தில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அரசியல் பிரச்சினைகள்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

சிக்காகோவில் ஆகஸ்ட் 27, 2024 அன்று இடம்பெற்ற மறியல் போராட்டத்தில், டக்கோட்டா (Dakkota) வாகன உதிரிபாகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இன்று ( திங்கட்கிழமை, செப்டம்பர் 2) அமெரிக்காவில் தொழிலாளர் தினம், இது பாரம்பரியமாக ஜனாதிபதி தேர்தலின் இறுதி கட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. அவர்களின் தேர்தல் பிரச்சாரங்களின் கடைசி இரண்டு மாதங்களில், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுமே ஒரு பாரிய அரசியல் மோசடியில் ஈடுபட்டுள்ளன.

ஏகாதிபத்திய போரைத் தீவிரப்படுத்துவதை மையமாகக் கொண்ட கமலா ஹாரிஸின் தேர்தல் பிரச்சாரம், அதன் நிஜமான திட்டநிரலை விவாதிப்பதைத் தவிர்க்க அதனால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. ட்ரம்ப்பின் தேர்தல் பிரச்சாரம் அதன் பாசிசக் கொள்கைகளை வலியுறுத்தி, பெருநிறுவன மற்றும் நிதிய தன்னலக்குழுவின் இரக்கமற்ற பிரிவுகளின் நலன்களை, ஜனரஞ்சக வாய்வீச்சினூடாக வெளிப்படுத்தி வருகிறது.

தொழிற்சங்க எந்திரத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட உத்தியோகபூர்வ தொழிலாளர் தின நிகழ்வுகள், தொழிலாள வர்க்க அதிகாரம் குறித்த எந்தவொரு கருத்தையும் கேலிக்கூத்தாக்குகின்றன. வேலைகள் மற்றும் ஊதியங்கள் மீது ஒரு பெரும் தாக்குதலை நடைமுறைப்படுத்த தொழிற்சங்க எந்திரம் உதவி வருகின்ற நிலைமைகளின் கீழ், எந்திரமானது ஹாரிஸை தொழிலாள வர்க்கத்தின் வேட்பாளராக சித்தரிக்க முயன்று வருகிறது.

அக்டோபர் 8 அன்று ஸ்டெல்லாண்டிஸின் வாரன் டிரக் அசெம்பிளி ஆலையில், ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கத்தினரின் (UAW) உதவியுடன், 2,000 க்கும் அதிகமான தொழிலாளர்கள் பாரிய பணிநீக்கம் செய்யப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, டெட்ராய்டில் ஹாரிஸை UAW வரவேற்க உள்ளது. சிக்காகோவில் டக்கோட்டா வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் ஆலையில், UAW ஆதரவிலான அதே சலுகைகள் ஒப்பந்தத்திற்கு ஐந்து முறை வாக்களிக்குமாறு தொழிலாளர்களை UAW நிர்பந்தித்தது. இறுதியில் சனிக்கிழமையன்று அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களின் கீழ் அது நிறைவேற்றப்பட்டது.

ஜனநாயகக் கட்சியின் அரசியல் மூலோபாயத்தின் மையமானது தொழிலாளர்களை போருக்கு அடிபணியச் செய்வதற்கு தொழிற்சங்க எந்திரத்தைப் பயன்படுத்துவதாகும். ஜனாதிபதி பைடென் AFL-CIO ஐ அவரது “உள்நாட்டு நேட்டோ” என்று குறிப்பிட்டபோது இதைத்தான் அர்த்தப்படுத்தினார்.

ரஷ்ய பிராந்தியத்தில் நேட்டோ டாங்கிகளை நிலைநிறுத்துவது மற்றும் ஞாயிறன்று மாஸ்கோ மற்றும் பிற ரஷ்ய நகரங்கள் மீது ஒருங்கிணைந்த டிரோன் தாக்குதல்கள் உட்பட, ரஷ்யாவுக்கு எதிரான போரில் தற்போது ஒரு மிகப்பெரும் விரிவாக்கம் நடந்து வருகிறது என்ற உண்மையைக் குறித்து ஹாரிஸ் அவரது தொழிலாளர் தின கருத்துக்களில் எதுவும் கூற மாட்டார் என்பதை உறுதியாகக் கூற முடியும். வெள்ளியன்று, நேட்டோ அங்கத்துவ நாடான துருக்கியின் வெளியுறவு அமைச்சர், உக்ரேனிய போர் “அணுவாயுதங்களைப் பயன்படுத்துவது சம்பந்தப்பட்ட ஒரு போராக தீவிரமடையும் அபாயம் உள்ளது” என்று எச்சரித்தார்.

அதேநேரத்தில், காஸாவில் நடந்து வரும் இஸ்ரேலின் இனப்படுகொலையில் பைடென்-ஹாரிஸ் நிர்வாகத்தின் நேரடி பங்களிப்பு பாரிய வெறுப்பையும் சீற்றத்தையும் தூண்டியுள்ளது. ஹாரிஸ் ஒரு “போர்நிறுத்தம்” குறித்து பேசுகின்ற அதேவேளையில், இஸ்ரேலில் உள்ள நெதன்யாகு ஆட்சி, அமெரிக்க ஆதரவுடன், மேற்குக் கரையில் இனப்படுகொலையை விரிவுபடுத்தி வருகின்றது. மேலும், ஈரானை இலக்கு வைத்து ஒரு பிராந்திய போருக்கு நெதன்யாகு ஆட்சி அச்சுறுத்தி வருகிறது.

இந்த யுத்த நிகழ்ச்சி நிரலுக்கு அனைத்தையும் அடிபணியச் செய்ய வேண்டும். வோல் ஸ்ட்ரீட், இராணுவ-உளவுத்துறை முகமைகள் மற்றும் உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் தனிச்சலுகை கொண்ட பிரிவுகள் ஆகியவற்றின் ஒரு கட்சியான ஜனநாயகக் கட்சி, பெருந்திரளான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் முகங்கொடுக்கும் சமூக பேரழிவைத் தீர்க்கும் கொள்கைகளுடன் பேசவோ அல்லது முன்னெடுக்கவோ இலாயக்கற்று இருக்கிறது.

இதுதான் ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினருக்கு சமூக கோபத்தை சுரண்டுவதற்கான திறனை வழங்குகிறது. எவ்வாறிருப்பினும் தொழிலாளர்கள் எச்சரிக்கப்பட வேண்டும்: ட்ரம்பும் அவரது MAGA (அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்கு) இயக்கமும் அமெரிக்க-பாணியிலான பாசிசவாதத்தின் ஒரு புதிய வடிவமாகும்.

ஹிட்லர் மற்றும் முசோலினியை மாதிரியாகக் கொண்ட ட்ரம்ப், “அமெரிக்காவில் வேலைகளைக் காப்பாற்றுவார்” என்றும் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வருவார் என்றும் கூறுகிறார். எவ்வாறிருப்பினும், நிதியியல் செல்வந்த தட்டுக்களின் கட்டளைகளை ஈவிரக்கமின்றி நடைமுறைப்படுத்துவதே ட்ரம்பின் நிஜமான வேலைத்திட்டமாகும்.

குடியரசுக் கட்சியினரின் “திட்டம் 2025” மற்றும் ட்ரம்பின் சொந்த “அமெரிக்கா முதலில்” திட்டநிரலில், இந்த கொள்கை உச்சரிக்கப்படுகிறது: பெருநிறுவன சுரண்டல் மீதான அனைத்து ஒழுங்குமுறைகளையும் நீக்குவது, சமூக திட்டங்களில் பாரிய வெட்டுக்கள், மற்றும் பெரும் செல்வந்தர்களுக்கு புதிய வரிக் குறைப்புக்கள் ஆகியவை இந்த திட்ட நிரலில் அடங்குகின்றன. இதனால் தான் ட்ரம்பின் பிரச்சாரம் பிளாக்ஸ்டோன் தலைமை செயலதிகாரி ஸ்டீபன் சுவார்ட்ஸ்மன் (43.2 பில்லியன் டாலர் நிகர மதிப்பு) மற்றும் டெஸ்லா முதலாளியும் எக்ஸ் இன் உரிமையாளருமான எலோன் மஸ்க் (நிகர மதிப்பு 243.7 பில்லியன் டாலர்) போன்ற நிதியியல் பிரபுத்துவத்தின் குறிப்பிடத்தக்க பிரிவுகளால் நிதியளிக்கப்படுகிறது.

ட்ரம்பின் பாசிசவாத வாய்வீச்சின் ஒருங்குவிப்பு புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகள் மீதே உள்ளது. அமெரிக்காவில் சமூக நெருக்கடிக்கு அவர்களைப் பலிக்கடா ஆக்கவும், இலாபத்திற்காக அனைத்து இனங்கள் மற்றும் தேசியங்களையும் சேர்ந்த தொழிலாளர்களைச் சுரண்டி வருகின்ற பெருநிறுவன மற்றும் நிதியியல் உயரடுக்கிடம் இருந்து கவனத்தை திசைதிருப்பவும் அவர் முனைகிறார். மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களைச் சுற்றி வளைத்து நாடுகடத்த தேசிய பாதுகாப்புப் படையை நிலைநிறுத்தவும் அவர் அச்சுறுத்தி வருகின்றார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் அச்சுறுத்தும் இராணுவ சர்வாதிகாரத்தை அமைக்கவிருக்கிறார். மேலும், அடிப்படை ஜனநாயக உரிமைகளை அகற்றுவதன் பிரதான இலக்கு தொழிலாள வர்க்கமாகும்.

இதுதான் தேர்தலில் மக்களுக்கு வழங்கப்படும் “தேர்வுகள்” ஆகும். இந்த முழு நிகழ்ச்சிப்போக்குமே ஆழமாக ஜனநாயக விரோதமானது. இவ்விரு கட்சிகளும் —குறிப்பாக ஜனநாயகக் கட்சியினர்— ஒவ்வொரு மாநிலத்திலும் பெரும்பாலும் பத்தாயிரக் கணக்கான அல்லது அதற்கு மேற்பட்ட கையெழுத்துக்கள் தேவைப்படும் வாக்குப்பதிவு அணுகல் விதிகளைப் பயன்படுத்தி, ஹாரிஸ் மற்றும் ட்ரம்ப் தவிர வேறு எந்த வேட்பாளரும் வாக்குச்சீட்டில் தோன்றுவதைக் கூட தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. தொழிலாள வர்க்கத்தின் நலன்கள் குறித்த எந்தவொரு அரசியல் வெளிப்பாட்டையும் விலக்குவதற்காகவே இவை அனைத்தும் செய்யப்படுகின்றன.

இந்த வேட்பாளர்களில் யார் வெற்றி பெற்றாலும், தேர்தலைத் தொடர்ந்து, அச்சுறுத்திவரும் அழிவுகரமான அணுஆயுதப் போரின் விரிவாக்கம், அத்துடன் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலின் தீவிரம் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதல்களின் விரிவாக்கம் ஆகியவை அதிகரிக்கும். அனைத்திற்கும் மேலாக, தொற்றுநோய்கள் மற்றும் இறப்புகளின் ஒரு பெரிய புதிய அலைக்கு மத்தியில் இரு கட்சிகளும் “என்றென்றும் கோவிட்” என்ற கொள்கைக்கு முற்றிலும் உறுதிபூண்டுள்ளன.

தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் பரந்த பெருந்திரளான மக்களிடையே, சமூக கோபமும் அதிருப்தியும் அதிகரித்து வருகிறது. ஆயினும், இந்த எதிர்ப்பை சோசலிசத்திற்கான ஒரு நனவான இயக்கமாக மாற்றுவது தானாக நடந்துவிடாது.

சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில், ஜோசப் கிஷோர் ஜனாதிபதி வேட்பாளராகவும் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஜெர்ரி வைட்டையும் அறிவித்து, சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவர் டேவிட் நோர்த், இந்த பிரச்சாரத்தின் நோக்கம்பற்றி பின்வருமாறு எழுதினார்:

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவை உயர்த்தி, முதலாளித்துவ அமைப்புமுறையை முடிவுக்குக் கொண்டு வந்து, அதை சோசலிசத்தால் பதிலீடு செய்வதைத் தவிர உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது என்ற புரிதலை வளர்த்துக் கொள்ள வேண்டும். உலக முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரான ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தில் அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சக்தியை அணிதிரட்டுவதை இலக்காகக் கொண்ட உலகளாவிய மூலோபாயத்தை பின்பற்றுவதன் மூலம் மட்டுமே இந்த மாபெரும் வரலாற்றுப் பணியை அடைய முடியும்.

தேர்தல் வரையிலும் அதற்கு அப்பாலும் இரண்டு மாதங்களில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பணி இதுவாகும்.

Loading