அதிதீவிர வலதுசாரி ஜேர்மனிக்கான மாற்றீடுக் கட்சி, சாக்சோனி மற்றும் துரிங்கியா மாநில தேர்தல்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஜேர்மனியில் நாஜி சர்வாதிகாரம் முடிவுக்கு வந்த பிறகு, முதல்முறையாக, அதன் மாநிலத் தேர்தல்களில் அதிதீவிர வலதுசாரி கட்சி, மிகவும் வலுவான சக்தியாக மாறியுள்ளது. ஜேர்மனிக்கான மாற்றீடுக் கட்சி (AfD) ஞாயிற்றுக்கிழமை துரிங்கியா மாநிலத்தில் பதிவான வாக்குகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைப் பெற்றுள்ளது. இது, இரண்டாவது பலமான கட்சியான கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியை (CDU) விட, வெறும் 10 சதவிகிதம் முன்னிலையில் உள்ளது. சாக்சோனி மாநிலத்தில், AfD 30 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, CDU க்கு பின்னால் இரண்டாவதாக நெருக்கமாக உள்ளது. 

துரிங்கியாவில் AfD கட்சியானது, பிஜோர்ன் ஹாக் என்பவரால் வழிநடத்தப்படுகிறது. தடைசெய்யப்பட்ட நாஜி முழக்கங்களைப் பயன்படுத்தியதற்காக தண்டனையைப் பெற்ற இவர், நீதிமன்றத் தீர்ப்பின்படி, இவரை ஒரு பாசிஸ்ட் என்று அழைக்கலாம். பத்து வருடங்களுக்கு முன்பு, இந்த வரலாற்று ஆசிரியர் மேற்கு ஜேர்மன் ஹெஸ்ஸிலிருந்து கிழக்கு ஜேர்மன் துரிங்கியாவுக்குச் சென்று அங்கு AfD இன் மாநில அமைப்பை நிறுவினார். சாக்சோனியின் முன்னணி வேட்பாளரான ஜோர்க் அர்பனும், AfD கட்சியின் பிஜோர்ன் ஹாக் பிரிவின் ஒரு பகுதியாக உள்ளார்.

ஜேர்மனிக்கான மாற்றீடுக் கட்சியின் பேரணியில், துரிங்கியா AfD இன் தலைவர் பிஜோர்ன் ஹோக். (AP Photo/Jens Meyer, file) [AP Photo]

எவ்வாறாயினும், AfD இன் தேர்தல் வெற்றியானது, பேராசைபிடித்த ஹிட்லர் பிஜோர்ன் ஹாக்கை காட்டிலும், அனைத்து நிறுவனமயமான கட்சிகளின் வலது பக்கத்துக்கான திருப்பத்தை காட்டுகிறது. இந்த கட்சிகள், வெடிக்கும் சமூகப் பதட்டங்களை வலதுசாரி பாதைக்குள் வழி தடுமாறச் செய்யவும், உக்ரேனிலும், மத்திய கிழக்கிலும் தங்கள் குற்றவியல் போர்களுக்கு ஆதரவைத் திரட்டவும், தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை நசுக்கவும் இனவெறி மற்றும் தேசியவாதத்தைத் தூண்டி வருகிறார்கள். 

தேர்தலுக்கு முன்னதாக, சோலிங்கனில் இஸ்லாமியப் பின்னணி இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஒருவரால் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, இந்த கட்சிகளின் இனவெறி பிரச்சாரம் ஒரு புதிய உச்சத்தை எட்டியது. மேலும் நாடுகடத்தப்படுதல், கடுமையான புகலிடச் சட்டங்கள் மற்றும் பொலிசுக்கு அதிக அதிகாரங்களை வழங்குவதற்கு கோரிக்கை விடுத்தல் ஆகியவற்றுக்கு, அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த அரசியல்வாதிகள் ஒருவரையொருவர் விஞ்சியிருந்தனர். இது, தேர்தலில் 74 சதவீத வாக்குப்பதிவுகளில் இருந்து, AfD க்கு அதன் வாக்குப் பங்கை அதிகரிக்க முடிந்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக, 'இடது' என்று கூறப்படும் கட்சிகளின் தொழிலாளர் விரோத, இராணுவவாத கொள்கைகள் மற்றும் சமூகப் பங்காளித்துவம் என்ற பெயரில் தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளால் வர்க்கப் போராட்டம் முறையாக நசுக்கப்பட்டு வருகின்றன. மேலும் இவை, சமூக சீற்றம், வாழ்க்கைத் தரம் மீதான அச்சம், ஆளும் உயரடுக்கின் ஆணவத்தின் மீதான வெறுப்பு மற்றும் போருக்கு எதிரான எதிர்ப்பு ஆகியவற்றை, தமது பிற்போக்குத்தனமான நோக்கங்களை சுரண்டிக் கொள்ள வலதுசாரி வாய்வீச்சாளர்களுக்கு உதவி வருகின்றன. 

பெரும்பான்மையான மக்களால் நிராகரிக்கப்பட்ட உக்ரேனில் நடந்துவரும் போர், இந்த தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. AfD ஒரு 'அமைதிக்கான கட்சி' என்று தன்னைக் காட்டிக் கொண்டது. இருப்பினும் அது அதிக மறுஆயுதமாக்கல், இராணுவத்துக்கு கட்டாய ஆட்சேர்ப்பை மீண்டும் அறிமுகப்படுத்துதல் மற்றும் 'ஜேர்மனியின் தற்காப்புத் திறன்களை' உடனடியாக மீட்டெடுத்தல் போன்றவற்றை ஆதரிக்கிறது. மேலும், ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ தாக்குதலை அது நிராகரிக்கிறது. ஏனெனில், அதன் புவிசார் மூலோபாய நலன்களை இன்னும் சுதந்திரமாக தொடர முடியும் என்பதற்காக, அது ஜேர்மன் ஏகாதிபத்தியத்தை அமெரிக்காவின் இராணுவ சார்புநிலையிலிருந்து விடுவிக்க விரும்புகிறது.

பேர்லினில் கூட்டாட்சி அரசாங்கத்தை அமைத்துள்ள மூன்று கட்சிகளும், அதே போல் இடது கட்சியும் தேர்தல் வீழ்ச்சியை சந்தித்தன. கடந்த மாநிலத் தேர்தல்களில் SPD 7 சதவிகித வாக்குகளை பெற்று பரிதாபகரமான முடிவைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தாலும், மாநில பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறுவதற்கு தேவையான 5 சதவீத வரம்பை துரிங்கியாவில் உள்ள பசுமைக் கட்சியினர் தாண்டவில்லை. 1 சதவீதத்துடன், ஜனநாயகவாதிகள் முக்கியத்துவமற்ற நிலையில் மூழ்கினர்.

ஜேர்மனியின் வரைபடம் சிவப்பு நிறத்தில் துரிங்கியாவையும் (நடுவில்) நீல நிறத்தில் சாக்சோனியையும் (வலது) கொண்டுள்ளது [Photo by NordNordWest/WSWS / CC BY-SA 3.0]

இடது கட்சியின் வீழ்ச்சி இன்னும் கடுமையாக இருந்தது. அது ஐந்து சதவீத வாக்கு வரம்பை தவறவிட்டதால், கிழக்கு ஜேர்மன் மாநிலத்தில் முதல் முறையாக மாநில பாராளுமன்றத்திற்குள் நுழைய முடியவில்லை. துரிங்கியாவில், பத்து வருடங்களாக முதலமைச்சர் போடோ ரமேலோவுடன் இடது கட்சி அரசாங்கத்தை வழிநடத்தியது. இத்தேர்தலில், இடது கட்சி 31 லிருந்து 13 சதவீதமாக வீழ்ச்சி கண்டது. இது ரமேலோவின் தீவிர வலதுசாரி அரசியலுக்கு, குறிப்பாக அகதிகளை முறையாக நாடுகடத்துதல், சமூக வெட்டுக்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் ஜேர்மன் படையினரை உக்ரேனுக்கு அனுப்புவதற்கு அழைப்பு விடுத்தல் ஆகியவற்றுக்கு கட்சி கொடுத்த விலையாகும். 

வழக்கமான சிடுமூஞ்சித்தனத்துடன், முதல் தேர்தல் கணிப்புகள் வெளியான பிறகு, முன்பை விட அதிகமான வாக்காளர்கள் வாக்களிப்பில் பங்கேற்ற இத் தேர்தலை 'ஜனநாயகத்தின் விடுமுறை' என்று ராமலோ விவரித்தார். CDU இன் மரியோ வோய்க்ட் ஒரு அரசாங்கத்தை அமைக்க உதவுவதற்கு இப்போது 'அனைத்தையும் செய்வேன்' என்று அவர் உறுதியளித்துள்ளார். மிகவும் வலதுசாரி கொள்கைகள் மீது AfD மற்றும் மத்திய கூட்டணி அரசாங்கத்துடன் போட்டியிடும் ஃபிரெட்ரிக் மெர்ஸ்சின் CDU வை ராமலோ ஆதரிக்கிறார். 

இடது கட்சியில் இருந்து பிளவுபட்ட சஹ்ரா வேகன்நெக்ட் கூட்டணி (BSW), அதன் முதல் மாநிலத் தேர்தல்களில் துரிங்கியாவில் 16 சதவீத வாக்குகளையும், சாக்சோனியில் 12சதவீத வாக்குகளையும் பெற்று, மிகப்பெரியளவில் தனது வாக்குகளை அதிகரித்துள்ளது.

நாம் விளக்கியது போல், ஆளும் கட்சிகள் மற்றும் BSW ஆகியவை AfD க்கு ஒரு மாற்றீடு அல்ல. இது, அகதிகளுக்கு எதிரான கிளர்ச்சி, அரசு மீள் ஆயுதமயமாக்கலுடன் உக்ரேன் போரை நிராகரித்து, சமூக துரோகத்தையும் ஒருங்கிணைக்கிறது. வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு, வேகன்நெக்ட் கட்சியின், சாக்சோனி மாநிலத்தின் முன்னணி வேட்பாளரான செபின் சிம்மர்மேன் மற்றும் துரிங்கிய மாநிலத்தின் கட்ஜா வுல்ஃப் ஆகியோர், CDU மற்றும் பிற நிறுவனமாயமான கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் நுழைவதற்கான தங்கள் விருப்பத்தை உறுதிப்படுத்தினர். AfD உடனான அரசாங்கக் கூட்டணியை அவர்கள் தற்போதைக்கு நிராகரித்த போதிலும், அவர்கள் அதி தீவிர வலதுசாரிக் கட்சியுடன் ஒவ்வொரு சந்தர்ப்பத்தின் அடிப்படையிலும் ஒத்துழைக்கும் வாய்ப்பைத் திறந்துவிட்டனர்.

AfD இன் வளர்ச்சி குறிப்பாக கிழக்கு ஜேர்மனியில், முன்னாள் GDR (கிழக்கு ஜேர்மனி) பிரதேசத்தில் உச்சரிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் இங்கு அனைத்து நிறுவனமயப்பட்ட கட்சிகளுடனும் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களே ஆகும். 

8,000 நிறுவனங்கள் மற்றும் மில்லியன் கணக்கான வேலைகளை அழித்த ஜேர்மன் ஒருங்கிணைப்புக்குப் பிறகு ஏற்பட்ட தொழில்துறை அழிவுடன் இது தொடங்கியது. SPD மற்றும் பசுமைவாதிகளின் கூட்டாட்சி அரசாங்கத்தின் 2010 நிகழ்ச்சி நிரலுடன் இது தொடர்ந்தது. இது, கிழக்கு ஜேர்மனியை குறைந்த ஊதிய வேலைக்கான ஒரு பெரிய சோதனை தளமாக மாற்றியது. மேலும், ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளின் பொருளாதார விளைவுகளில் இது உச்சத்தை எட்டியது. 

அதி தீவிர வலதுசாரி AfD க்கு ஆதரவைத் தூண்டும் சமூக நிலைமைகள் வெளிப்படையானவை. ஜேர்மன் மீண்டும் ஒன்றிணைந்து 34 ஆண்டுகளுக்குப் பிறகும், கிழக்கில் வாழ்க்கைத் தரம் மேற்கு நாடுகளை விட கணிசமானளவு வீழ்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில் வயது முதிர்வு, சீரழிந்து வரும் உள்கட்டமைப்பு, மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பற்றாக்குறை, மற்றும் மோசமான வறுமை ஆகியவை ஆதிக்கம் செலுத்துகின்றன. அரசு நிதியுதவி பெற்ற தொழில்துறை முதன்மைத் திட்டங்கள் பலமுறை வீழ்ச்சியடைந்துள்ளன. கார் தொழிற்சாலைகள், மைக்ரோசிப் உற்பத்தியாளர்கள் மற்றும் பல தொழிற்சாலைகள் இப்போது உலகப் பொருளாதாரப் போரின் சூறாவளியில் சிக்கும் அபாயத்தில் உள்ளன. சாக்சோனியில் மட்டும், கடுமையான நெருக்கடியை சந்தித்துள்ள 14 பெரிய நிறுவனங்கள் திவாலாகிவிட்டன அல்லது கடந்த ஆண்டு மூடப்பட்டுள்ளன.

இருப்பினும், வலதுசாரி தீவிரவாதக் கட்சிகளின் வளர்ச்சி கிழக்கு ஜேர்மனியில் மட்டும் அல்ல, மாறாக தேசிய ரீதியான கருத்துக் கணிப்புகளில், AfD 16 முதல் 19 சதவீதம் வரை வளர்ச்சி கண்டுள்ளது. ஏறக்குறைய அனைத்து ஏகாதிபத்திய நாடுகளிலும் இதேபோன்ற முன்னேற்றங்களைக் காணலாம். அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப், இத்தாலியில் ஜியோர்ஜியா மெலோனி, பிரான்சில் மரின் லு பென் மற்றும் நெதர்லாந்தில் கீர்ட் வில்டர்ஸ் ஆகியோர் இதற்கு உதாரணமாக இருக்கின்றனர்.

உலக முதலாளித்துவத்தின் ஆழமான நெருக்கடியே பாசிசம் மற்றும் போருக்கு திரும்புவதற்கான காரணமாகும். பொருளாதார வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் பெரும் செல்வந்தர்களுக்கும், தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான வேறுபாடு ஜனநாயகத்துடன் இனி சமரசம் செய்ய முடியாத நிலையை எட்டியுள்ளது. மூலப்பொருட்கள், சந்தைகள் மற்றும் இலாபங்களுக்கான போராட்டமானது, ஏகாதிபத்திய வல்லரசுகளை, முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களைப் போலவே, வன்முறையில், உலகின் மறுபங்கீட்டுக்கு இட்டுச் செல்கிறது.

ஆனால், இதே நெருக்கடி சோசலிசப் புரட்சிக்கான சூழ்நிலையையும் உருவாக்குகிறது. சமூக வெட்டுக்கள், பணிநீக்கங்கள் மற்றும் போருக்கு எதிரான தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் எதிர்ப்பு உலகம் முழுவதும் வளர்ந்து வருகிறது. ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்குடன் அதை ஆயுதமாக்குவதே முக்கியமான பணியாகும். சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei - ஜேர்மனி) இதற்காகத்தான் போராடி வருகிறது.

Loading