முன்னோக்கு

ஹாரிஸ்-ட்ரம்ப் விவாதம்: அரசியல் பிற்போக்குத்தனத்தின் ஒரு இழிவான கண்காட்சி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இடது மற்றும் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும், துணை ஜனாதிபதியுமான கமலா ஹாரிஸ் தேசிய அரசியலமைப்பு மையத்தில் ABC செய்தியின் ஜனாதிபதி விவாதத்தின் போது, செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 10, 2024 [AP Photo/Alex Brandon]

டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையே செவ்வாய்க்கிழமை நடந்த விவாதத்தின் இழிவான காட்சி அசாதாரண நெருக்கடியில் உள்ள ஒரு அரசியல் அமைப்பைப் பிரதிபலிக்கிறது. பாசிசவாத ட்ரம்பின் பைத்தியக்காரத்தனமான பிதற்றல்களுக்கும் போர்வெறியர் ஹாரிஸின் வெற்றுக் கருத்துக்களுக்கும் இடையே இடம்பெற்ற இந்த விவாதம் அமெரிக்க முதலாளித்துவத்தின் வக்கிரமான முகத்தை முன்வைத்தது.

இரண்டு வேட்பாளர்களும், ABC தொகுப்பாளர்களின் உதவியுடன், பரந்த உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும், எரியும் சமூகப் பிரச்சினைகள் விவாதிப்பதை தவிர்ப்பதில் கவனமாக இருந்தனர். 90 நிமிடங்கள் இடம்பெற்ற முழு விவாதத்தின் போது சமத்துவமின்மை, வறுமை, வேலை இன்மை அல்லது தேக்கமடைந்து வரும் ஊதியங்கள் குறித்து ஒரேயொரு விவாதமோ அல்லது கேள்வியோ கூட இருக்கவில்லை. வாரத்திற்கு 1,000 பேர் கோவிட்-19 நோயால் இறந்து வருவதையும், தொற்றுநோய் பணியிடங்கள் மற்றும் பள்ளிகள் வழியாக தொடர்ந்து பரவுவதையும் எந்த வேட்பாளரும் குறிப்பிடவில்லை.

ட்ரம்ப் அவரது நிர்வாகத்தின் போது பங்குச் சந்தை உயர்வை அவரது “பெரும் பொருளாதாரத்திற்கு” ஆதாரமாக சுட்டிக்காட்டினார். அதேவேளையில் ஹாரிஸ் அவரது பொருளாதார திட்டநிரலை செல்லுபடியாக்குவதற்கு மிகப்பெரிய அமெரிக்க முதலீட்டு வங்கியான கோல்ட்மன் சாச்ஸின் அதிகாரத்தை மேற்கோளிட்டார். வோல் ஸ்ட்ரீட்டின் வேட்பாளர்களான இந்த இருவரையும், மக்கள்தொகையில் அடிமட்டத்தில் உள்ள 90 சதவிகிதத்தினர் முகங்கொடுக்கும் யதார்த்தங்களில் இருந்து ஒரு பரந்த சமூகப் பிளவு பிரிக்கிறது.

சில சமயங்களில் மனச்சோர்வடைந்த நிலையில் தோன்றிய டிரம்ப், நாட்டில் நிலவும் ஆத்திரம் மற்றும் விரக்திக்கு வேண்டுகோள் விடுத்தார். அவர், இதற்கான உண்மையான ஆதாரமான முதலாளித்துவ அமைப்பு முறை மற்றும் ஆளும் வர்க்கத்திலிருந்து விலக்கி, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நோக்கி விவாதத்தை வழிநடத்த முற்பட்டார். “சிறைகள், மனநல மையங்கள், பைத்தியங்களின் புகலிடங்கள் மற்றும் தடுப்பு மையங்களில் இருந்து புலம்பெயர்ந்தோர் நம் நாட்டிற்கு வருகிறார்கள்” என்றார். “அவர்கள் உள்ளே வருகிறார்கள், இப்போது ஆபிரிக்க-அமெரிக்கர்கள் மற்றும் ஹிஸ்பானியர்கள் ஆகியோர் தொழிற்சங்கங்களால் நடத்தப்படும் வேலைகளை எடுத்துக்கொள்கிறார்கள்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஓஹியோவிலுள்ள தொழில்துறைமயப்படாத நகரமான ஸ்பிரிங்ஃபீல்டில் ஹைட்டிய ஆலைத் தொழிலாளர்களுக்கு எதிராக கடந்த வாரம் அவர் பிரச்சாரம் தொடங்கிய பாசிசவாத ஆத்திரமூட்டலை ட்ரம்ப் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டார். அங்கு உள்ளூர் நவ-நாஜிக்கள், ஹைட்டிய தொழிலாளர்கள் குடும்ப செல்லப்பிராணிகளைத் திருடுகிறார்கள் என்ற ஒரு பொய்யான வதந்தியைத் தூண்டினர்: “அமெரிக்கா எங்கிலுமான நகரங்களில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள், ஸ்பிரிங்ஃபீல்டுக்குப் போக வேண்டாம். ஸ்பிரிங்ஃபீல்டில், அவர்கள் நாய்களை சாப்பிடுகிறார்கள். உள்ளே வந்த மக்கள். அவர்கள் பூனைகளை சாப்பிடுகிறார்கள். அவர்கள் இங்கு வசிக்கும் மக்களின் செல்லப்பிராணிகளை சாப்பிடுகிறார்கள்” என்று ட்ரம்ப் குறிப்பிட்டார்.

ட்ரம்ப் அமெரிக்க பாசிசவாதத்தின் ஒரு உறுதியான வடிவத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறார். தேர்தலின் முடிவு என்னவாக இருந்தாலும், ட்ரம்பும் குடியரசுக் கட்சியினரும் சுமார் 70 மில்லியன் வாக்குகளைப் பெற்றிருப்பார்கள், நாட்டின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றியிருப்பார்கள், பல மாநில அரசாங்கங்களையும், அனேகமாக காங்கிரஸின் ஒன்று அல்லது இரண்டு அவைகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள்.

கணிசமான ஆதரவைத் திரட்டுவது ஒருபுறம் இருக்கட்டும், ட்ரம்ப் ஒரு பிரச்சாரத்தையும் கூட நடத்த முடியும் என்ற உண்மையானது, ஜனநாயகக் கட்சியின் முழுமையான அரசியல், திவாலானதை சாட்சியமளிக்கிறது. பரந்த மக்களின் சமூக அபிலாஷைகளுக்கு எந்தவொரு பரந்த அழைப்பையும் விடுப்பதற்கு ஜனநாயகக் கட்சி குரோதமாக உள்ளது மற்றும் அனைத்தையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் நோக்கங்களுக்கு கீழ்ப்படுத்துகிறது. இது ஒரு தவறான தந்திரோபாயம் மட்டுமல்ல, ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினரைப் போலவே, வங்கிகளையும் பெருநிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயகக் கட்சியின் வர்க்கத் தன்மையின் வெளிப்பாடும் இருந்து வருகிறது.

ஹாரிஸின் விவாத நிகழ்ச்சி, ஒட்டுமொத்தமாக அவரது பிரச்சாரத்தைப் போலவே, குடியரசுக் கட்சி, இராணுவம் மற்றும் தேசிய பாதுகாப்பு எந்திரத்தை இலக்காகக் கொண்டது. ட்ரம்புக்கு எதிரான பரந்த சமூக எதிர்ப்புக்கு எந்தவொரு அழைப்பையும் விடுப்பதை அவர் வேண்டுமென்றே தவிர்த்தார் என்பது மட்டுமல்ல, 21 ஆம் நூற்றாண்டில் மிகவும் பரவலாக வெறுக்கப்பட்ட அரசியல்வாதிகள் சிலருடன் அவர் செயலூக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டார்: “முன்னாள் துணை ஜனாதிபதி டிக் செனி மற்றும் காங்கிரஸ் உறுப்பினர் லிஸ் செனி ஆகியோரின் ஒப்புதல் உட்பட முன்னர் ஜனாதிபதி புஷ், மிட் ரோம்னி மற்றும் ஜோன் மெக்கெயினுடன் இணைந்து பணியாற்றிய 200 குடியரசுக் கட்சியினரின் ஒப்புதலை நான் உண்மையில் பெற்றுள்ளேன்” என்று ஹாரிஸ் குறிப்பிட்டார்.

காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையை நியாயப்படுத்திய ஹாரிஸ், ஈரானுக்கு எதிரான போர் அச்சுறுத்தலையும் விடுத்தார்: ஒரே ஒரு விஷயத்தை நான் எப்போதும் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், குறிப்பாக ஈரான் மற்றும் ஈரானுடன் தொடர்புடைய அதன் பினாமிகள், இஸ்ரேலுக்கு ஏற்படுத்தும் எந்த அச்சுறுத்தலுக்கும் இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் திறனை நான் எப்போதும் வழங்குவேன்.

சீனா தொடர்பான விடயத்தில், ட்ரம்பின் நிர்வாகம் சீனாவிற்கு அமெரிக்க கம்பியூட்டர் சில்லுகளை (chips) விற்று, சீன இராணுவத்தை மேம்படுத்தவும் நவீனப்படுத்தவும் உதவியது என்றும், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க தலைமையிலான போரை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் அழைப்பு விடுத்தார் எனக் கூறியும் ஹாரிஸ் வலதுபுறத்தில் இருந்து ட்ரம்பை தாக்கினார்.

ஹாரிஸ் அவரது நிறைவாக கூறிய கருத்துக்களில் பின்வருமாறு அறிவித்தார், “நாம் ஒன்றாக என்ன செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன், அதாவது, உலகில் அமெரிக்காவின் நிலையைப் பேணுவது, நமது இராணுவத்தை மதிப்பது மற்றும் உலகின் மிகக் கொடிய சண்டைப் படை எங்களிடம் இருப்பதை உறுதி செய்வது உட்பட, நாம் தகுதியான மரியாதையைப் பெறுவதை உறுதிசெய்வோம்.”

ஹாரிஸின் ஏகாதிபத்திய மிரட்டல் நடவடிக்கைகள், ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க போருக்கு அதிகரித்து வரும் எதிர்ப்புக்கு வாய்வீச்சு முறையீடு செய்வதற்கு ட்ரம்புக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. “என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாது,” என்று கூறிய அவர், ஊடகங்களில் அறிவிக்கப்பட்டதை விட இரு தரப்பிலும் ஏற்பட்ட இழப்புகள் மிக அதிகம் என்று குறிப்பிட்டார். மேலும், “மத்திய கிழக்கில் போர்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ரஷ்யா மற்றும் உக்ரேனுடன் எங்களுக்கு தொடர்ந்து போர் நடந்து வருகிறது. நாம் ஒரு மூன்றாம் உலகப் போரில் சிக்கிக் கொள்ளப் போகிறோம். அணு ஆயுதங்கள் மற்றும் ஆயுதங்களின் சக்தியின் காரணமாக இது முன்னெப்போதும் இல்லாத போராக இருக்கும்” என்று ட்ரம்ப் குறிப்பிட்டார்.

ட்ரம்ப் அவரே ஒரு வக்கிரமான ஏகாதிபத்திய அரசியல்வாதியாக இருந்து வருகின்ற நிலையில், அவர் தன்னை ஒரு “அமைதிவாதி” வேட்பாளராக காட்டிக் கொள்ள முடிகிறது என்ற உண்மையானது, தேர்தலுக்கு முன்னதாக இருகட்சி அமைப்புமுறையில் நிலவும் ஓர் அபாயகரமான இயக்கவியலுக்கு சாட்சியமளிக்கிறது.

ஜனவரி 6, 2021 ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி குறித்து விவாத மேலாளர்கள் வேட்பாளர்களிடம் கேட்டபோது இதே இயக்கவியல் வெளிப்பட்டது. ட்ரம்ப் அவரது பாத்திரத்தை “தேசபக்தி” என்று குணாம்சப்படுத்தியதுடன், குடியேற்றம் மீது ஹாரிஸைத் தாக்குவதற்கு முன்னுரிமை அளித்தார்: “நான் இதை உங்களிடம் கேட்கிறேன். நீங்கள் கேபிடல் பற்றி பேசுகிறீர்கள். தெற்கு எல்லை வழியாக இந்த மில்லியன் கணக்கான மக்கள் வர நாம் ஏன் அனுமதிக்கிறோம்?”

இதற்கு சரமாரியான சொற்றொடர்களுடன் விடையிறுத்த ஹாரிஸ், 2024ல் வரவிருக்கும் எதிர்காலத்தைப் பற்றிய எச்சரிக்கையை எடுக்காமல், கடந்த காலத்தின் ஒரு விஷயமாக ஜனவரி 6 ஐ முன்வைத்து பதிலளித்தார்: “ஜனவரி 6 என்ன என்பதை நினைவில் வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும், நாம் திரும்பிச் செல்ல வேண்டியதில்லை என்று நான் சொல்கிறேன். திரும்பிப் போக வேண்டாம். நாங்கள் திரும்பிச் செல்ல மாட்டோம். பக்கத்தைத் திருப்ப வேண்டிய நேரம் இது. அது உங்களுக்கு ஒரு பாலமாக இருந்தால், நல்லது, உங்களுக்காக எங்கள் பிரச்சாரத்தில் ஒரு இடம் இருக்கிறது. நாட்டுக்காக நிற்க வேண்டும். நமது ஜனநாயகத்திற்காக நிற்பது. சட்டத்தின் ஆட்சிக்காக நிற்பதற்கு, குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.”

உண்மையில், அரசியலமைப்பை தூக்கி எறிந்து சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான தொடர்ச்சியான மற்றும் அதிகரித்து வரும் முயற்சியில் ஜனவரி 6 ஒரு படி மட்டுமே. ட்ரம்ப் தோற்கும் எந்தவொரு தேர்தலின் முடிவுகளையும் புறக்கணிக்க அவர் சூளுரைத்துள்ளார். அத்துடன் அனைத்து வாக்காளர்களும் தங்களின் குடியுரிமையை நிரூபிக்க கோரும் ஒரு மசோதாவை பிரதிநிதிகள் சபையின் குடியரசுக் கட்சியினர் முன்னெடுத்து வருகின்றனர்—இந்த முயற்சி கடவுச்சீட்டு இல்லாத அல்லது பிறப்புச் சான்றிதழ்களை எளிதாக அணுக முடியாத மில்லியன் கணக்கான குறைந்த வருவாய் வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறிக்கும். இந்த மசோதா (SAVE சட்டம் என்றழைக்கப்படுவது) அநேகமாக சட்டமாக ஆகாது என்றாலும், மில்லியன் கணக்கான ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் வாக்களித்ததாக கூறப்படுவதால் ஜனநாயகக் கட்சியின் வெற்றி சட்டவிரோதமானது என்று ட்ரம்ப் வாதிட அனுமதிப்பதே அதன் நோக்கமாகும். விவாதத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அவர் ட்ரூத் சோஷியலில் (Truth Social) வலைத்தளத்தில் பின்வருமாறு பதிவிட்டார்: “ஜனநாயகக் கட்சியினர் வாக்காளர் பதிவுகளை சட்டவிரோத வெளிநாட்டினருடன் “திணிக்க” முயல்கின்றனர். அதை நடக்க விடாதீர்கள்-அதை மூடுங்கள்!! “

நவம்பர் 5 ஆம் தேதி தேர்தலுக்கு இன்னமும் எட்டு வாரங்களுக்கும் காலமே உள்ளது. மேலும் ஏகாதிபத்தியப் போர் மற்றும் சமூக எதிர்ப்புரட்சிக்கான இந்த இரண்டு வேட்பாளர்களுக்கிடையில் போட்டி நிலவும் என்று கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. ஒரு நெருக்கமான தேர்தல் போட்டியுள்ள நிலையில், அதனை ஒரு மோசடி என்று கண்டித்து, முறியடிக்க நீதிமன்றங்களிலும் தெருக்களிலும் தனது ஆதரவாளர்களை அணிதிரட்ட ட்ரம்ப் தனது குறுக்குவழித் திட்டத்துடன் முன்னேற வேண்டும்.

இந்த விவாதத்தைத் தொடர்ந்து சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோசப் கிஷோர் இரு கட்சிகளையும் கண்டித்து ஓர் அறிக்கை வெளியிட்டார்.

“செவ்வாய்கிழமை ஹாரிஸ் மற்றும் ட்ரம்புக்கு இடையில் இடம்பெற்ற விவாதம் ஒட்டுமொத்த அரசியல் அமைப்புமுறையினதும், ஆளும் வர்க்கத்தினதும் இரண்டு வேட்பாளர்களின் பிற்போக்குத்தனமான குணாம்சத்தை அம்பலப்படுத்தியுள்ளது. தேர்தலில் என்ன நடந்தாலும் சரி, ட்ரம்பும் குடியரசுக் கட்சியும் எதேச்சதிகார ஆட்சிக்கான கட்டமைப்பைக் கட்டியெழுப்ப முனைந்து வருகின்றனர். எவ்வாறிருப்பினும், வோல் ஸ்ட்ரீட் மற்றும் ஏகாதிபத்தியத்தின் ஒரு கட்சியான ஜனநாயகக் கட்சியை ஆதரிப்பதன் மூலமாக இந்த அச்சுறுத்தலை எதிர்க்க முடியாது” என்று கிஷோர் குறிப்பிட்டார்.

கிஷோர் மேலும் கூறுகையில், “உண்மையான பிரச்சினைகளைப் பற்றிய எந்த விவாதத்தையும் விலக்குவதற்கு எல்லாம் செய்யப்படுகிறது.. “சமத்துவமின்மை”, “முதலாளித்துவம்” மற்றும் “சோசலிசம்” என்ற சொற்றொடர்கள் இந்த விவாதத்தில் குறிப்பிடப்படவில்லை. ஒவ்வொரு கருத்துக்கணிப்பும் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டின் மீதும் பரந்த அதிருப்தியைக் காட்டினாலும் கூட, சோசலிச சமத்துவக் கட்சி உட்பட ஏனைய அனைத்து வேட்பாளர்களும் விலக்கப்பட்டுள்ளனர்.”

தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் தீவிரமான சமூக நெருக்கடியை கிஷோர் சுட்டிக்காட்டினார், இதில் “பாரிய கடன் சுமை”, “விலைவாசி உயர்வு,” “வீட்டுவசதி செலவு [இது] ஒரு வீட்டை அல்லது வாடகைக்கு வாங்குவதை சாத்தியமற்றதாக்குகிறது,” “தேக்கமடைந்த ஊதியங்கள்,” மற்றும் “வெகுஜன பணிநீக்கங்கள்” ஆகியவை அடங்கும்.

மேலும், “அடுத்த எட்டு வாரங்களிலும் அதற்கு அப்பாலும், இரண்டு முதலாளித்துவ கட்சிகளுக்கும் எதிராக அதன் நலன்களை வெளிப்படுத்தும் ஒரு சோசலிச தலைமையை தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக கட்டியெழுப்புவதே அவசர பணியாகும். இந்த அடிப்படையில் மட்டுமே பிற்போக்கு சக்திகள், சர்வாதிகாரம் மற்றும் போர் சக்திகளை தோற்கடிப்பது சாத்தியமாகும்” என்று கிஷோர் மேலும் தெரிவித்தார்.

Loading