மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
வடக்கு காஸாவில் எஞ்சியிருக்கும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் மற்றும் குழந்தையும் “உடனடி இறப்பு அபாயத்தில் உள்ளனர்” என்று ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தின் இயக்குனர் கேத்தரின் ரஸ்ஸல் சனிக்கிழமையன்று ஒரு அறிக்கையில் எச்சரித்தார்.
ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்னர், வடக்கு காஸா முழுவதையும் இனரீதியில் சுத்திகரிக்கும் “தளபதிகளின் திட்டம்” என்றழைக்கப்படுவதை நடைமுறைப்படுத்த இஸ்ரேல் வடக்கு காஸா மீது தாக்குதலைத் தொடங்கியது. காஸா பகுதியின் வடக்குப் பகுதிக்குள் உணவு, தண்ணீர் அல்லது மருத்துவப் பொருட்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் நூறாயிரக்கணக்கான மக்கள் வெளியேற வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
எஞ்சியிருக்கும், ஏறக்குறைய 100,000 மக்கள், வாழ்வின் அனைத்து அவசியத் தேவைகளில் இருந்தும் துண்டிக்கப்பட்டு, திட்டமிட்ட பட்டினியால் வாடுகின்றனர் அல்லது இஸ்ரேலிய குண்டுவீச்சால் கொல்லப்படுகின்றனர்.
காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு தொடர்ந்து நிதியுதவி அளித்து ஆயுதம் வழங்கி வரும் அமெரிக்காவின் ஒப்புதல் மற்றும் அதன் ஆதரவுடன் இஸ்ரேலின் “தளபதிகளின் திட்டம்” செயல்படுத்தப்படுகிறது. காஸா, லெபனான், சிரியா மற்றும் ஈரான் மக்களுக்கு எதிராக இஸ்ரேல் விரிவாக்கிவரும் போருக்கு உதவுவதற்காக அமெரிக்கா மத்திய கிழக்கிற்கு துருப்புக்களை அனுப்பி வருகிறது.
இந்த பட்டினி மற்றும் கொலைகாரத் தாக்குதலின் விளைவாக, “வடக்கு காஸாவில் உள்ள ஒட்டுமொத்த பாலஸ்தீன மக்கள், குறிப்பாக குழந்தைகள், நோய், பஞ்சம் மற்றும் இடம்பெற்றுவரும் குண்டுவீச்சுக்களால் இறக்கும் அபாயத்துக்கு முகம் கொடுத்து வருகின்றனர்” என்று ரஸ்ஸல் தெரிவித்தார்.
“இது ஏற்கனவே வடக்கு காஸாவில் ஒரு கொடிய வார இறுதி தாக்குதல்களாக உள்ளது” என்று கூறிய ரஸ்ஸல், “கடந்த 48 மணி நேரத்தில் மட்டும், ஜபாலியாவில் 50 க்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், அங்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த இரண்டு குடியிருப்பு கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன” என்று அவர் தெரிவித்தார்.
“இதர தாக்குதல்களைத் தொடர்ந்து வடக்கு காஸாவில் குழந்தைகளின் இறப்புகளின் பயங்கரமான எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, இந்த சமீபத்திய நிகழ்வுகள், இந்த பயங்கரமான போரின் இருண்ட காலகட்டங்களில் மற்றொரு இருண்ட அத்தியாயத்தை சேர்க்கின்றன” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பொதுமக்கள் மற்றும் மனிதாபிமான பணியாளர்களை குறிவைப்பதை சர்வதேச சட்டம் தடை செய்கிறது என்று ரஸ்ஸல் கூறினார். “ஆயினும் இந்த கோட்பாடுகள் மீண்டும் மீண்டும் மீறப்பட்டு வருகின்றன. இதனால் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டும், காயமடைந்தும், அவர்கள் உயிர்வாழ்வதற்கு அவசியமான அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் மறுக்கப்பட்டும் வருகின்றன” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த அறிக்கைகளை குழந்தைகளை காப்பாற்றுவதற்கான (save the children) அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ரேச்சல் கம்மிங்ஸ் எதிரொலித்தார். அவர் அல் ஜசீராவிடம் பின்வருமாறு கூறினார்:
காஸாவின் வடக்கில் இப்போது கட்டவிழ்ந்து வரும் பேரழிவை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மக்கள் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களால் தாக்கப்படுகிறார்கள். நிச்சயமாக, மக்களுக்கு உணவும் தண்ணீரும் போதுமானதாக இல்லை என்பதை நாங்கள் அறிவோம். வடக்கில் உணவு, குடிநீர் வாகனங்கள் செல்வதற்கு மறுக்கப்பட்டு வருகின்றன... இது முற்றிலும் பேரழிவுகரமானது.
காஸாவில், 20,000 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர் அல்லது உதவிகளின்றி உள்ளனர். மேலும், 14,000ம் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார். “குழந்தைகள் குடும்பத்தில் தங்களுக்கு விருப்பமில்லாத பாத்திரங்களை ஏற்க வேண்டும். அவர்கள் மற்றவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும், அவர்கள் தண்ணீர் எடுப்பது, உணவைத் தேடுவது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும், மேலும் எந்தக் குழந்தையும் பார்க்கக் கூடாத விஷயங்களை அவர்கள் பார்த்திருக்கிறார்கள்” என்று அவர் கூறினார்.
இந்த பாரிய படுகொலை கடந்த ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தது. அன்றைய தினம் காஸா பகுதியில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 31 பேர் கொல்லப்பட்டனர் என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. இக்கொலைகள் பெய்ட் லஹியா நகரம் மற்றும் ஜபாலியாவில் வீடுகள் மீது நடத்தப்பட்ட தனித்தனி தாக்குதல்களில் நடந்துள்ளன. இஸ்ரேலிய படைகள் பெய்ட் லஹியாவிற்கு அருகிலுள்ள கமால் அத்வான் மருத்துவமனையை தாக்கியதில் ஒரு குழந்தை கடுமையாக காயமடைந்ததுடன் மருத்துவமனையின் மழலையர் பள்ளி சேதமடைந்தது.
வடக்கு காஸாவில் உள்ள கமால் அட்வான் மருத்துவமனையின் இயக்குனரான டாக்டர் ஹுசாம் அபு சபியா, அல் ஜசீராவிடம் மருத்துவ ஊழியர்கள் பணியாற்றும் கொடூரமான நிலைமைகளை விவரித்தார். “இஸ்ரேலிய படைகள் மருத்துவமனைக்குள் நுழைந்து முழு மருத்துவ ஊழியர்களையும் தடுத்து வைத்தபோது, நான், எனது உதவி மருத்துவருடன் சேர்ந்து, ஒரு பாறைக்கும் கடினமான இடத்திற்கும் இடையில் தனியாக விடப்பட்டோம், ஒன்று விட்டுக்கொடுக்க வேண்டும் அல்லது உயிர்களைக் காப்பாற்ற எங்களால் முடிந்ததைச் செய்யத் தொடங்க வேண்டும்” என்று அபு சஃபியா அல் ஜசீராவிடம் கூறினார். “அனைத்து வகையான காயங்களாலும் பாதிக்கப்பட்டவர்களின் வெள்ளத்தில் நாங்கள் மூழ்கியுள்ளோம்.” “ஒட்டுமொத்த உலகத்தாலும் நாங்கள் கைவிடப்பட்டுள்ளோம், கற்பனை செய்ய முடியாத கடுமையான மற்றும் பயங்கரமான நிலைமைகளின் கீழ் வேலை செய்ய விடப்பட்டுள்ளோம்,” என்று அவர் தெரிவித்தார்.
ஒரு அறிக்கையில், ஐரோப்பா-மத்திய தரைக்கடல் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு பின்வருமாறு எழுதியது:
“ஆகஸ்ட் 2024 தொடக்கத்தில் இருந்து, இஸ்ரேலிய இராணுவம் பள்ளிகள், மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் தங்குமிடம் மண்டபங்களை 65 முறை குறிவைத்து தாக்கியுள்ளது. இதில், நடப்பு அக்டோபர் மாதத்தில் 39 முறை உட்பட, 672 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 1,000 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்று யூரோ-மெட் மானிட்டர் கள நிலவரக் குழு தெரிவித்துள்ளது.”
அக்டோபர் 7, 2023 முதல் காஸா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களால் குறைந்தது 43,341 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 102,105 பேர் காயமடைந்துள்ளனர் என்று காஸாவின் சுகாதார அமைச்சகம் வார இறுதியில் தெரிவித்துள்ளது. காஸாவின் பெரும்பகுதி தரைமட்டமாக்கப்பட்டுவிட்டன, 87 சதவிகித வீடுகள் அழிக்கப்பட்டுவிட்டன அல்லது சேதமடைந்துள்ளன. மேலும், 87 சதவிகித பாடசாலைக் கட்டிடங்கள் அழிக்கப்பட்டுவிட்டன அல்லது சேதமடைந்துவிட்டன என்று ஐ.நா. புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வார இறுதியில் லெபனான் முழுவதும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்தன. இதில் 10 பேர் காயமுற்றனர், இரு மருத்துவமனைகள் சேதமடைந்தன. செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 31 வரை இஸ்ரேலிய தாக்குதல்களில் 85 சுகாதார ஊழியர்கள் கொல்லப்பட்டதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது.
லெபனிய சுகாதார அமைச்சரகத்தின் கருத்துப்படி, லெபனான் மீது நடக்கும் இஸ்ரேலிய குண்டுவீச்சில் இறந்தோர் எண்ணிக்கை 2,986 ஐ எட்டியுள்ளது. இதில் குறைந்தது 772 பெண்களும் குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர்.
இந்த கட்டவிழ்த்து விடப்பட்ட பேரழிவின் பின்னணியில் அமெரிக்கா, மத்திய கிழக்கு முழுவதும் மேற்கொள்ளப்பட்டுவரும் இஸ்ரேலின் வெறியாட்டத்தில் அதன் ஈடுபாட்டை ஆழப்படுத்த மட்டுமே செய்கிறது. வாரயிறுதியில், அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் (CENTCOM) தலைவர் மைக்கேல் குரில்லா, இஸ்ரேலுக்கு வந்து அமெரிக்க போர் துருப்புக்களை அந்நாட்டில் நிலைநிறுத்துவதற்காக அமெரிக்க வான் பாதுகாப்பு பேட்டரியை அமைத்தார். அவரது இந்த விஜயம் “ஈரானை மையமாகக் கொண்டு மத்திய கிழக்கில் உள்ள அச்சுறுத்தல்கள்” குறித்து கவனம் செலுத்தியது என்றும் இஸ்ரேலிய இராணுவம் “அமெரிக்க ஆயுதப் படைகளுடன் அதன் உறவை ஆழப்படுத்தும்” என்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளன.
அணுஆயுதங்களைச் சுமந்து செல்லவும் மற்றும் பாரிய செறிவூட்டல் குண்டுவீச்சுகளை நடத்தவும் தகைமை கொண்ட B-52 குண்டுவீச்சு விமானங்கள் மத்திய கிழக்கிற்கு வந்திருப்பதாக சனிக்கிழமையன்று, அமெரிக்க மத்திய கட்டளையகம் அறிவித்தது. “மினோட் விமானப்படை தளத்தின் 5 வது வெடிகுண்டு பிரிவில் இருந்து பி -52 ஸ்ட்ராடோஃபோர்ட்ரெஸ் மூலோபாய குண்டுவீச்சு விமானங்கள் அமெரிக்க மத்திய கட்டளை பொறுப்பு பகுதிக்குள் வந்துள்ளன” என்று மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.
ஜெருசலேம் போஸ்ட் (Jerusalem Post) மேற்கோளிட்ட ஒரு அறிக்கையில், அமெரிக்க விமானப்படை பி-52 குண்டுவீசிகள் “உலகளாவிய துல்லியமான வழிசெலுத்தல் திறனுடன் அணுஆயுத அல்லது துல்லியமாக வழிநடத்தப்படும் மரபார்ந்த ஆயுதங்களை” கொண்டிருக்க தகைமை கொண்டவை என்று தெரிவித்தது. “ஒரு வழமையான மோதலில், பி-52 ரக மூலோபாய தாக்குதல், நெருக்கமான வான்வழி ஆதரவு, வான்வழி இடைமறிப்பு, வான்வழி தாக்குதல் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்,” என்பதையும் அது சேர்த்துக் கொண்டது. இந்த மூலோபாய குண்டுவீச்சு விமானங்கள் அமெரிக்க நாசகாரி கப்பல்கள், போர் படைப்பிரிவுகள் மற்றும் டாங்கர்கள் ஆகியவை பிராந்தியம் முழுவதும் இஸ்ரேலின் போருக்கு ஆதரவாக நிலைகொண்டுள்ளன.