முன்னோக்கு

டாலர் மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதற்கான ட்ரம்ப்பினுடைய போரின் முக்கியத்துவம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

பதவியேற்க இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க டாலருக்கு மாற்றாக ஒரு புதிய உலக நாணயம் உருவாக்கப்பட்டால், பிரிக்ஸ் (BRICS - பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா) நாடுகள் மீது 100% சதவீத வரி விதிக்கப்படும் என அச்சுறுத்தியுள்ளார். இந்த அச்சுறுத்தல், அமெரிக்காவின் உலக மேலாதிக்கம் எதிர்கொள்ளும் நெருக்கடியை வெளிப்படுத்துகிறது. மேலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஒரு மூன்றாம் உலக போருக்கான பாதையில் சென்று கொண்டிருக்கிற அதன் நெருக்கடியின் ஒரு குறிப்பிடத்தக்க வெளிப்பாடு இதுவாகும்.

வாஷிங்டன் மாநிலத்தின் டகோமா துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள தைவான் நாட்டின் யாங் மிங் கடல் போக்குவரத்து நிறுவனத்தின் சரக்குக் கப்பல், நவம்பர் 4, 2019 [AP Photo/Ted S. Warren]

சனிக்கிழமையன்று ட்ரம்ப் தனது சமூக ஊடகத் தளத்தில் வெளியிட்ட இந்த அச்சுறுத்தல், அவரது நெருங்கிய வட்டாரத்தில் ஏற்கனவே சிறிது காலமாக விவாதிக்கப்பட்டு வந்தது. டாலரிலிருந்து விலகுவதையும், டாலரின் ஆதிக்கத்தைக் குறைப்பதையும் அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கான ஒரு உயிர்பிழைப்புக்கான அச்சுறுத்தலாக இந்த வட்டாரம் கருதுகிறது.

டாலர் மேலாதிக்கத்தை இழப்பது ஒரு போரை இழப்பதற்கு இணையானது என்று ட்ரம்ப் கூறியது உட்பட, தேர்தல் பிரச்சாரத்தின் போது நியூயார்க் பொருளாதார கழகத்தில் ஆற்றிய உரை உள்ளிட்ட பல சந்தர்ப்பங்களில் இந்தப் பிரச்சினையை ட்ரம்ப் வலியுறுத்திக் காட்டினார்.

ட்ரம்ப்பின் அச்சுறுத்தல்கள் வெறும் மிகைப்படுத்தப்பட்ட வெறும் வார்த்தை ஜாலங்கள் அல்ல, மாறாக அவை அமெரிக்கப் பொருளாதாரத்தின் அடிப்படை இயக்கவியலை வெளிப்படுத்துகின்றன. அமெரிக்கப் பொருளாதாரத்தில் தினமும் நிகழும் பொருளாதார உறவுகள் மற்றும் முரண்பாடுகளின் நேரடி விளைவாக இந்த முரண்பாடுகள் உருவாகின்றன. 

பொருளாதார வளர்ச்சி என்று அழைக்கப்படுவது, உழைக்கும் மக்களின் தொடர்ந்து மோசமடைந்து வரும் சமூக நிலைமைகளைக் குறிக்கவில்லை. மாறாக, இது நிதியச் செல்வந்த உயரடுக்கினரின் பெரும் இலாபக் குவிப்பைக் குறிக்கிறது. இந்த வளர்ச்சி, கடனின் அளவு வானளாவிய உயரங்களுக்கு அதிகரித்ததன் மூலமாகவே பெருமளவில் சாத்தியமாகியுள்ளது.

அமெரிக்காவின் தேசியக் கடன் தற்போது 36 டிரில்லியன் டாலரை நோக்கி வேகமாக உயர்ந்து வருகிறது. கருவூலத் துறை மற்றும் பெடரல் ரிசர்வ் வாரியம் உள்ளிட்ட அனைத்து அரசு அமைப்புக்களும் இந்தக் கடன் வளர்ச்சி வீதத்தை “தாக்குப்பிடிக்க முடியாதவை” என்று வர்ணித்துள்ளன. தற்போது, ஆண்டு கூட்டாட்சி வரவு செலவுத் திட்டத்தில் ஏழில் ஒரு டாலர் வட்டி செலுத்துவதற்கே செலவிடப்படுகிறது.

இத்தகைய அளவுகோல்கள் வேறு எந்த நாட்டிற்கும் பயன்படுத்தப்பட்டால், அது திவாலான நாடாக அறிவிக்கப்பட்டிருக்கும். ஆனால் உலக முதலாளித்துவத்தில் அமெரிக்கா ஒரு தனித்துவமான நிலையை வகிக்கிறது. ஏனெனில் டாலர் உலக நாணயமாக உள்ளது. இதனால், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பெரும் அளவில் முதலீடுகள் அமெரிக்காவிற்கு வருகின்றன. இந்த நிதி ஓட்டம் அமெரிக்காவின் கடனை நிர்வகிக்க உதவுகிறது. 

இதன் அர்த்தம் என்னவெனில், தொடர்ந்து அதிகரித்து வரும் அமெரிக்காவின் செலவினம், குறிப்பாக அதன் விரிவடைந்து வரும் போர் முனைகளுக்கு நிதியளிக்க இராணுவத்திற்கான செலவானது, பிற நாடுகளின் நிதியளிப்புகளால் கடன் குவிப்பிற்கு நிதியாதாரம் அளிக்கப்படுகிறது என்பதாகும்.

ஆனால் டாலரின் மேலாதிக்கம் எந்த வகையிலும் கணிசமாகக் கேள்விக்குள்ளாக்கப்பட்டாலோ அல்லது அதன் மீதான நம்பிக்கை குறைந்தாலோ, மாற்று நாணயம் ஒன்று உருவாவதற்கு முன்பே, பெருக்கப்பட்ட கடன் கட்டமைப்பு சரிவடையும் அபாயத்தை எதிர்கொள்கிறது.

இந்தப் பொருளாதார உண்மைகள் அமெரிக்க பொதுமக்கள் மற்றும் உலக மக்களின் பார்வையிலிருந்து மறைக்கப்படுகின்றன. ஆனால் இவை ஆளும் பொருளாதார, அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களுக்கு நன்கு தெரிந்தவை ஆகும்.

2023 மார்ச் மாதம், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கான கருத்துரையில், பிரபல CNN நிகழ்ச்சியாளர் ஃபரீத் ஜக்காரியா பின்வருமாறு எழுதினார்: அமெரிக்க அரசியல்வாதிகள் கடன் குறித்து எவ்வித கவலையும் இன்றி செலவழிக்கும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். இதன் விளைவாக, கடந்த 20 ஆண்டுகளில் பொதுக் கடன் ஐந்து மடங்கு உயர்ந்துள்ளது. அதே காலகட்டத்தில், பெடரல் ரிசர்வின் நிதி நிலை பன்னிரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

“இவை அனைத்தும் டாலரின் சிறப்பு நிலையின் காரணமாக மட்டுமே சாத்தியமாகிறது. இந்த நிலை சரிந்தால், அமெரிக்கா இதுவரை எதிர்கொள்ளாத அளவிற்கு கடுமையான நெருக்கடியை சந்திக்க நேரிடும்” என்று அவர் எழுதினார்.

இந்த ஆண்டு செப்டம்பரில், ரீகன் காலத்திலிருந்து குடியரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினரான மிட்ச் டானியல்ஸ் ஒரு கருத்துரையை எழுதினார். அதில் அவர், “அமெரிக்க அரசுக் கடன் சந்தையின் வீழ்ச்சி மற்றும் டாலரின் உலக முதன்மை நாணய அந்தஸ்து இழப்பிற்கான திட்டத்தை தயாரிக்க” ஒரு மாநாடு கூட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அத்தகைய மாநாடு நடைபெற்றால், கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் “நம்பிக்கை நிதிகள் நம்பகமானவை அல்ல” என்பதையும், அவர்கள் பெற்று வந்த சமூகப் பாதுகாப்பு நலத்திட்டங்கள் வெகுவாக, ஒருவேளை கடுமையாகக் குறைக்கப்படலாம் என்பதையும் உணர்வார்கள் என அவர் எச்சரித்தார். இது “கோபமடைந்த மக்களையும்” “வன்முறை எதிர்வினைகளையும்” உருவாக்கி, “இராணுவச் சட்டத்தை” அமல்படுத்த வேண்டிய நிலையை ஏற்படுத்தலாம் என்றார்.

ட்ரம்ப்பின் அச்சுறுத்தல்களும், டாலர் மேலாதிக்கத்தின் இன்றியமையாத முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்துவதும் - இதை எந்த விலை கொடுத்தாவது பாதுகாக்க வேண்டும் என்பதும் - அமெரிக்க ஏகாதிபத்திய அரசின் தீவிரமடைந்து வரும் நெருக்கடியிலிருந்தே உருவாகின்றன.

பிரிக்ஸ் (BRICS) அமைப்புக்கு எதிரான அச்சுறுத்தலை ஆராய்ந்தால், இது உலக மக்கள்தொகையில் 45 சதவீதத்தையும், உலகப் பொருளாதாரத்தில் 35 சதவீதத்தையும் கொண்ட ஒரு பெரிய குழுவை இலக்கு வைக்கிறது. இந்த அமைப்பு ஆரம்பத்தில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்காவை மட்டுமே கொண்டிருந்தது. ஆனால் இப்போது ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளும் இதில் இணைந்துள்ளன.

உக்ரேன் போர் தொடங்கியபோது, ரஷ்யாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டதும், அது SWIFT என்ற சர்வதேச பணப் பரிமாற்ற அமைப்பிலிருந்து நீக்கப்பட்டதும், டாலருக்கு மாற்றான பண பரிமாற்ற முறைகளுக்கான தேடல் தீவிரமடைந்தது. அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படும் எந்த நாட்டிற்கும் ரஷ்யாவிற்கு நடந்ததே நடக்கலாம் என்ற உணர்வு பரவலாக ஏற்பட்டது.

தொடர்ச்சியான அமெரிக்க நிதி நெருக்கடிகளால் டாலர் மீதான நம்பிக்கை குறைந்துள்ளது. அடுத்த நெருக்கடி எப்போது ஏற்படும் என்பது யாருக்கும் தெரியவில்லை. ஆனால் முக்கிய மத்திய வங்கிகளின் நிதி நிலைத்தன்மை அறிக்கைகளை ஆராய்ந்தால், அனைத்து வங்கிகளும் அடுத்த நெருக்கடியை எதிர்பார்க்கின்றன. இந்நிலையானது தங்கத்தின் விலை உயர்வில் பிரதிபலிக்கிறது. இந்த விலை உயர்வுக்கு மத்திய வங்கிகளின் தங்க கொள்முதலே பெரும் காரணம் ஆகும்.

பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிரான அச்சுறுத்தல் ஒரு பரந்த பொருளாதாரப் போரின் ஒரு பகுதி மட்டுமே. இந்தப் போர், உலகளாவிய மேலாதிக்கத்தை தக்கவைத்துக் கொள்ள, கடன் சுமையில் சிக்கியுள்ள அமெரிக்க அரசால், அனைத்து அரசியல் ஸ்தாபனத்தின் அனைத்து பிரிவுகளாலும் ஆதரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. முதல் ட்ரம்ப் நிர்வாகம், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவுக்கு எதிராக வரிப் போரைத் தொடங்கியது. ஆனால் இது, 2011-இல் ஒபாமா நிர்வாகம் தொடங்கிய சீன எதிர்ப்பு “ஆசியா நோக்கிய திருப்பம்” என்ற கொள்கையின் தொடர்ச்சியே ஆகும்.

ஒபாமா நிர்வாகம், 2014-ஆம் ஆண்டளவில் அல்லது அதற்கு முன்னரே, ஒரு முக்கிய முடிவுக்கு வந்தது. அதாவது, அது முன்பு ஆதரித்த “சுதந்திர வர்த்தக” கொள்கை அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராக செயல்படுகிறது என்றும், இக்கொள்கை சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது என்றும் கண்டறிந்தது. எனவே, சீனாவின் இந்த பொருளாதார எழுச்சியை முறியடிக்க வேண்டும் என முடிவு செய்தது.

இதன் விளைவாக, பைடென் நிர்வாகம் ட்ரம்ப் காலத்து அனைத்து வர்த்தகத் தடைகளையும் தொடர்ந்து கடைப்பிடித்தது மட்டுமல்லாமல், சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை கட்டுப்படுத்தும் நோக்கில் மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. உயர்-தொழில்நுட்ப பொருட்கள், குறிப்பாக நவீன கணினி சில்லுகளின் ஏற்றுமதி மீதான தடைகளின் பட்டியலை தொடர்ந்து விரிவுபடுத்தியது. அமெரிக்கா இதனை தனது இருப்பிற்கே அச்சுறுத்தலாக கருதுகிறது. இத்தகைய நடவடிக்கைகளில் மூன்றாவது கட்டமாக, புதிய தடைகள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டன.

ட்ரம்ப்பின் “அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக்குவோம்” திட்டத்தில் சீனா மட்டுமே இலக்கு அல்ல. உலகின் மற்ற பகுதிகளும் எதிரிகளாகவே கருதப்படுகின்றன. அனைத்து இறக்குமதிகள் மீதும் 10-20 சதவீத வரி விதிக்கப்படும் என்ற அச்சுறுத்தல் இதனைக் காட்டுகிறது. இந்நடவடிக்கை, ஐரோப்பாவில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளை கடுமையாக பாதிக்கும். ஏற்கனவே ஐரோப்பிய பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்து நெருக்கடியில் உள்ள நிலையில், இந்த நடவடிக்கை மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

பொருளாதார மற்றும் இராணுவப் போரின் தாக்கங்களை எதிர்கொள்ளும் போது, சர்வதேச தொழிலாள வர்க்கம் வரலாற்றில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்பட வேண்டும்.

முதலாம் உலகப் போரின் பேரழிவுக்குப் பின்னர், பூகோள பொருளாதாரத்திற்கும் தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான முரண்பாட்டில் இருந்து எழுந்த மிக அடிப்படையான பிரச்சினையை ஒவ்வொரு ஏகாதிபத்திய சக்தியும் உலக சக்தியாக தன்னை நிலைநிறுத்துவதன் மூலம் தீர்க்க முயன்றது. இதற்குப் பிறகு, பொருளாதார ஒழுங்கை மீட்டெடுக்க குறைந்தபட்சம் ஒரு வரையறுக்கப்பட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஜேர்மனிய ஏகாதிபத்தியமும், கிழக்கில் எழுச்சி பெற்றுவந்த ஜப்பான் ஏகாதிபத்திய சக்தியும், எழுச்சி பெற்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் அதிகமாக மேலாதிக்கம் செய்யப்படும் சர்வதேச பொருளாதார ஒழுங்கிற்கு தங்களை இணைக்க முயன்றன.

ஆனால் அந்த வாய்ப்பானது 1929-ஆம் ஆண்டில் வோல் ஸ்ட்ரீட் பொறிவு மற்றும் அமெரிக்க சுங்க வரிகளால் தீவிரமாகக் கெடுக்கப்பட்ட பெருமந்தநிலையின் போது முறிந்தது. உலக சந்தையின் சிதைவை —பல அர்த்தங்களில் அது கிட்டத்தட்ட காணாமல் போயிருந்தது— எதிர்கொண்ட நிலையில், ஒவ்வொரு ஏகாதிபத்திய வல்லரசும் போரை நோக்கித் திரும்பின. ஜேர்மனி ரஷ்யாவை வெற்றி கொள்ள விரும்பியது, ஜப்பான் சீனாவை வெற்றி கொள்ள விரும்பியது, அமெரிக்கா தனது போட்டியாளர்களின் பாசாங்குகளை நசுக்குவதன் மூலம் தனது நிலையை வலுப்படுத்த முயன்றது. இதற்கான விளைவுதான் இரண்டாம் உலகப் போர் ஆகும்.

இன்று, உலகம் அதே அடிப்படையான முரண்பாடுகளால் தூண்டப்பட்ட புதிய உலகப் போரின் அடிவாரத்தில் உள்ளது. ஆனால் இப்போது, உலகப் பொருளாதாரத்தின் அதிக சிக்கலான தன்மை மற்றும் ஒருங்கிணைப்பினால், முந்தைய காலங்களுடன் ஒப்பிடும்போது அவை விரிவாக்கப் பெருக்கத்தில் உள்ளன என்று கூறலாம்.

ஒரு வரலாற்று நெருக்கடியில், ஆளும் வர்க்கங்கள் தங்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசிய நலன்களுடன் இன்னும் வெளிப்படையாக இணைகின்றன. முந்தைய காலங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனநாயக மூலோபாயங்கள் தூக்கி எறியப்படுகின்றன, மக்களை ஏமாற்றும் நோக்கில் அவர்கள் அணிந்திருந்த முகமூடிகள் கிழிக்கப்படுகின்றன. அவர்களின் உண்மையான முகம் பாசிசம், இனப்படுகொலை, போர், மற்றும் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான சர்வாதிகாரமான செயற்பாடுகளில் வெளிப்படுகின்றது.

தொழிலாள வர்க்கமும் தனது அடிப்படை நலன்களுடன் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, உலக சோசலிச புரட்சியின் வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தில், அது நனவுபூர்வமாக இதைச் செய்ய வேண்டும். இது ஏதோ அடையமுடியாததும் அல்லது தொலைதூரத்திலுள்ள முன்னோக்கோ அல்ல. இது மட்டுமே இன்றைய நாளின் ஒரே நடைமுறை மற்றும் சாத்தியமான வேலைத்திட்டமாகும். இப்போது வெடித்து வரும் அனைத்து போராட்டங்களையும் வழிநடத்தும் மைய மூலோபாயமாக இது இருக்க வேண்டும்.

Loading