முன்னோக்கு

ஜனநாயகக் கட்சியினர் எதிர்ப்பைத் தடுக்கும்போது, ட்ரம்ப் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் ஜனாதிபதி ஜோ பைடென், தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்கிறார். வாஷிங்டன், நவம்பர் 13, 2024 புதன்கிழமை [AP Photo/Evan Vucci]

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய நிர்வாகம் புதன்கிழமை அமெரிக்க மக்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான அதன் பாசிச தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதேவேளையில் ஜனநாயகக் கட்சியின் தலைவர்கள் தங்கள் கைகளைப் பிசைந்துகொண்டு, ட்ரம்பின் தாக்குதலுக்கு மிகவும் ஆக்ரோஷமான பதிலடிக்கு எதிராக எச்சரிக்கை விடுத்ததுடன், ட்ரம்ப் ஏற்கனவே பின்வாங்கத் தொடங்கிவிட்டதாகக் கூறியுள்ளனர்.

ட்ரம்ப் வெள்ளை மாளிகையால் அறிவிக்கப்பட்ட, எடுக்கப்பட்ட அல்லது அச்சுறுத்தப்பட்ட கணிசமான நடவடிக்கைகளின் பட்டியலை தினசரி புதுப்பிக்க வேண்டியுள்ளது. கடந்த புதன்கிழமை வெளியிட்ட பட்டியலில் திங்கள் இரவு அல்லது செவ்வாய்க்கிழமை எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகள் அடங்கும், ஆனால் புதன்கிழமை வெள்ளை மாளிகையால் மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டது:

  • சட்டம் மற்றும் முன்னுதாரணத்தைப் பொருட்படுத்தாமல், கூட்டாட்சி அரசாங்கம் முழுவதும் ட்ரம்பின் முழுமையான அதிகாரத்தை வலியுறுத்துகிறது. இதில், சம வேலைவாய்ப்பு ஆணையம் (EEOC) மற்றும் தேசிய தொழிலாளர் உறவுகள் வாரியம் (NLRB) ஆகியவற்றில் ஜனநாயகக் கட்சியால் நியமனம் செய்யப்பட்டவர்களை நீக்குவது, அமெரிக்க விவசாயத் துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரலை ட்ரம்ப் பதவி நீக்கம் செய்தது சட்டவிரோதமானது என்று எதிர்த்த பின்னர் அவரை அவரது அலுவலகத்திலிருந்து வலுக்கட்டாயமாக நீக்கியது; ஜனவரி 6, 2021 அன்று காங்கிரஸ் கட்டிடமான கேபிடோல் மீதான தாக்குதல் மற்றும் ரகசிய ஆவணங்களை சட்டவிரோதமாக வைத்திருத்தல் தொடர்பாக ட்ரம்பிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்த சிறப்பு ஆலோசகர் ஜாக் ஸ்மித்தின் அலுவலகத்தில் பணிபுரிந்த நீதித்துறை வழக்கறிஞர்களை பணிநீக்கம் செய்தல்; மற்றும் ஆவண வழக்கில் அவர்களின் பங்குகளுக்காக இரண்டு ட்ரம்ப் ஊழியர்கள், அவரது உதவியாளர் வால்ட் நௌடா மற்றும் மார்-எ-லாகோவில் சொத்து மேலாளர் கார்லோஸ் டி ஒலிவேரா ஆகியோர் மீது வழக்குத் தொடரப்படுவதை நிறுத்துதல்.
  • பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் ஒருங்கிணைப்பு (DEI) ஆகிய திட்டங்களுக்கு எதிரான முந்தைய ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் வகுக்கப்பட்ட வரையறைகளைப் பூர்த்தி செய்யாத எந்தவொரு திட்டத்திற்கும் கூட்டாட்சி நிதிகளைப் பயன்படுத்துவதற்கான தடையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. அதேவேளையில், “அமெரிக்கா அதன் வரலாறு முழுவதும் அதன் உன்னதமான கொள்கைகளுக்கு எவ்வாறு நெருக்கமாக வளர்ந்துள்ளது” என்பதை மகிமைப்படுத்தும் “தேசபக்தி கல்வியில்” பள்ளிகள் ஈடுபட வேண்டும் என்று கோருகிறது. அச்சுறுத்தும் வகையில், பாதுகாப்புச் செயலர் உட்பட நான்கு உயர்மட்ட அமைச்சரவை அதிகாரிகள், “பாலின சித்தாந்தம் மற்றும் பாரபட்சமான சமத்துவ சித்தாந்தத்தின் அடிப்படையில் கே-12 பள்ளிகளில் சட்டவிரோத மற்றும் பாரபட்சமான நடத்தை மற்றும் போதனைக்கு கூட்டாட்சி நிதியுதவி அல்லது ஆதரவை நீக்குவதற்கு” 90 நாட்களுக்குள் ஒரு திட்டத்தை வழங்க கட்டளையிடப்பட்டுள்ளனர்.
  • காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு எதிரான பல்கலைக்கழக வளாக எதிர்ப்புக்களை விசாரித்த பிரதிநிதிகள் சபையின் சூனிய வேட்டை கோரிக்கைகளை உத்தியோகபூர்வ அரசாங்கக் கொள்கையாக ஆக்குவதற்கான ஒரு நிர்வாக உத்தரவு. “அக்டோபர் 7, 2023 க்குப் பிறகு, வளாக யூத எதிர்ப்புவாதம்” காரணமாக எழும் போராட்டங்களுக்கு எதிராக பதிலடி கொடுக்க தங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்பதை அனைத்து கூட்டாட்சி நிறுவனங்களும் 60 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று இந்த உத்தரவு கோருகிறது. மேலும், உயர்கல்வி நிறுவனங்களை அனுமதிக்க முடியாததற்கான காரணங்களுடன் பழக்கப்படுத்துவதற்கான பரிந்துரைகளும் இதில் அடங்கும்... மேலும், அந்தக் காரணங்களுடன் தொடர்புடைய வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் செயல்பாடுகளை அத்தகைய நிறுவனங்கள் கண்காணித்து அறிக்கை செய்யலாம். மேலும் வெளிநாட்டினர் பற்றிய அத்தகைய அறிக்கைகள், பொருத்தமானதாகவும் பொருந்தக்கூடிய சட்டத்திற்கு இணங்கவும், விசாரணைகளுக்கும், தேவைப்பட்டால், அத்தகைய வெளிநாட்டினரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளுக்கும் இட்டுச் செல்கின்றன என்பதை உறுதிசெய்யப்பட வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், காஸா இனப்படுகொலை மற்றும் இஸ்ரேல் அரசின் பிற குற்றங்ளுக்கு எதிர்ப்பாளர்களாக அடையாளம் காணப்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் நாடுகடத்தப்படுவார்கள். 2017 ஆம் ஆண்டு, “யூதர்கள் நம்மை பிரதியீடு செய்ய மாட்டார்கள்!” என்று அணிவகுத்து கோஷமிட்ட நவ-நாஜிக்கள் “மிகச் சிறந்த மக்கள்” என்று கூறிய ஒரு ஜனாதிபதியின் கூற்று இது.
  • “அமெரிக்காவில் சட்டவிரோதமாக இருக்கும் உயர்-முன்னுரிமை கொண்ட வெளிநாட்டை சேர்ந்த குற்றவாளிகளுக்கு கூடுதல் தடுப்புக்காவல் இடத்தை வழங்குவதற்கும், பாதுகாப்புத் துறை மற்றும் உள்நாட்டு பாதுகாப்புத் துறையால் அடையாளம் காணப்பட்ட புலம்பெயர்வு அமுலாக்க தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் “குவாண்டனாமோ வளைகுடா கடற்படை தளத்தில் உள்ள புலம்பெயர்ந்தோர் செயல்பாட்டு மையத்தை முழு திறனுக்கு விரிவுபடுத்த அனைத்து பொருத்தமான நடவடிக்கைகளையும் எடுக்க” பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு செயலர் கிறிஸ்டி நொயெம் ஆகியோருக்கு ஒரு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக, அமெரிக்க நாடுகடத்தல் விமானங்களை ஏற்க மறுக்கும் வெனிசுவேலா, கியூபா மற்றும் நிகரகுவா போன்ற நாடுகளைச் சேர்ந்த காவலில் வைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோருக்கான ஒரு சித்திரவதை முகாமாக குவாண்டநாமோ வளைகுடா மாறவிருக்கிறது.

இந்த நடவடிக்கைகளில், குறிப்பாக கடைசி இரண்டின் சர்வாதிகாரத் தன்மைக்கு விளக்கம் தேவையில்லை. எந்தச் சட்டங்களை மதிக்க வேண்டும், எதைப் புறக்கணிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை ட்ரம்ப் தனக்குத்தானே எடுத்துக்கொள்கிறார். (பென்டகனுக்கு முன்னொருபோதும் இல்லாத மேற்பார்வை பாத்திரம் வழங்கப்பட்டுள்ளது) மேலும், ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை தேசபக்தி மூளைச் சலவை செய்வதற்கு ஏற்ப முறையாக மாற்ற உத்தரவிடுவதுடன், வெள்ளை மாளிகைக்கு எதிரான அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்தும் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக கல்விகற்கும் புலம்பெயர்ந்தவர்கள் மீதான துன்புறுத்தலை ட்ரம்ப் விரிவுபடுத்துகிறார். இறுதியாக, காவலில் வைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தவர்களை காலவரையின்றி சிறையில் அடைக்க வசதியாக, அமெரிக்க கடற்படையால் நடத்தப்படும் ஒரு பரந்த சித்திரவதை முகாமை ஸ்தாபிக்க பாசிச ஜனாதிபதி கோருகிறார்.

ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு மற்றும் சட்ட முன்னுதாரணத்திற்கு எதிரான இந்த வெறியாட்டத்தின் முன்னால், ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் தலைமை மண்டியிடுகிறது. பிரதிநிதிகள் சபையின் சிறுபான்மை தலைவர் ஹக்கீம் ஜெப்ரீஸ் “தீமையைப் பார்க்காதே, தீமையைக் கேட்காதே, தீமையைப் பேசாதே” என்பதை உள்ளடக்கிய ஒரு “விரிவான மும்முனை எதிர்தாக்குதலுக்கு” அழைப்பு விடுத்தார். அனைத்து கூட்டாட்சி மானியங்கள் மற்றும் இடமாற்றங்களையும் இடைநிறுத்த உத்தரவிட்டு திங்களன்று வெளியிடப்பட்ட குறிப்பாணையை வெள்ளை மாளிகை ரத்து செய்த பின்னர், செனட் சிறுபான்மைத் தலைவர் சக் ஷுமர் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அதில், அவர் ஜனநாயகக் கட்சியினரால் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் “எரிச்சலை ட்ரம்ப் இப்போதுதான் உணர்கிறார்” என்று நகைப்புக்குரிய வகையில் கூறினார்.

உண்மையில், மேலாண்மை மற்றும் வரவு-செலவு திட்டக்கணக்கு அலுவலகம் வழங்கிய குறிப்பாணைக்கு ஒரு பெடரல் நீதிபதி தற்காலிக தடை விதித்த பின்னர், வெள்ளை மாளிகை அந்த உத்தரவை திரும்பப் பெற்றது. அதேவேளையில், அந்த உத்தரவின் திடீர் மற்றும் சீரற்ற செயல்படுத்தலால் உருவாக்கப்பட்ட “குழப்பத்தை” மேற்கோளிட்டு, அதில் கோடிட்டுக் காட்டப்பட்ட கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தியது.

மிக முக்கியமாக, தொழிலாள வர்க்கத்தின் மீதான தனது பிற்போக்குத்தனமான தாக்குதல்களுக்கு ட்ரம்ப் தொடர்ந்து ஜனநாயகக் கட்சியின் ஆதரவைத் திரட்டி வருகிறார். லேகன் ரிலே சட்டத்தில் கையெழுத்திடும் வெள்ளை மாளிகை விழாவில், குவாண்டனாமோ விரிகுடா திட்டத்தை (மாலையில் ஒரு முறையான செய்தியில் விரிவாகக் கூறப்பட்டது) அவர் முதலில் குறிப்பிட்டார். இது ஒரு கொடூரமான புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு நடவடிக்கையாகும். எந்தவொரு குற்றத்திற்காகவும், ஒரு சிறிய போக்குவரத்து குற்றச்சாட்டிற்காகவும் குற்றம் சாட்டப்பட்ட எந்தவொரு ஆவணமற்ற நபரையும் நாடு கடத்தும் நோக்கத்திற்காக காவலில் வைக்கப்பட உள்ளனர்.

இந்த மசோதாவை டசின் கணக்கான பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் போதுமான செனட் ஜனநாயகக் கட்சியினர் ஆதரித்தனர். பென்சில்வேனியா செனட்டர் ஜோன் ஃபெட்டர்மன், ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்களில் ஒருவராக இருந்து, அந்த மசோதாவில் கையெழுத்திடுவதில் கலந்து கொண்டிருந்தார். ட்ரம்ப் அந்த மசோதாவின் இருகட்சி தன்மை குறித்து மீண்டும் மீண்டும் குறிப்பிட்டதுடன், அதற்கு வாக்களித்த ஜனநாயகக் கட்சியினருக்கு நன்றி தெரிவித்தார்.

ட்ரம்பின் நடவடிக்கைகளின் வேகத்தைக் கண்டு தாங்கள் “அதிர்ச்சியடைந்துள்ளதாக” ஜனநாயகக் கட்சியினர் கூறுகின்றனர், மேலும் அவர்களின் ஊடக வக்காலத்து வாங்குபவர்கள், ஜனநாயகக் கட்சியினர் அதைத் தடுக்க எதையும் செய்ய “சக்தியற்றவர்கள்” என்று கூறுகின்றனர். இந்த இரண்டு வாதங்களும் பொய்களாகும். ட்ரம்ப் “முதல் நாளிலிருந்தே தான் ஒரு சர்வாதிகாரியாக இருப்பேன்” என்று பலமுறை கூறியிருந்தார். மேலும், 2024 தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்த அச்சுறுத்தல்களை ஜனநாயகக் கட்சியினர் மேற்கோள் காட்டியிருந்தனர். ட்ரம்ப் தான் செய்வதாகச் சொன்னதைச் செய்கிறார் என்பதில் “அதிர்ச்சி” என்பது ஒருபுறம் இருக்கட்டும், அவர்கள் எப்படி ஆச்சரியப்பட முடியும்?

ட்ரம்பை எதிர்க்க “சக்தியற்றவர்களாக” இருப்பதற்குப் பதிலாக அல்லது பொலிட்டிகோ கூறியது போல், “பொது மக்களின் உணர்வு ட்ரம்பிற்கு எதிராகத் திரும்பும் வரை [தங்கள்] நேரத்தை ஒதுக்குவதற்குப் பதிலாக”, ஜனநாயகக் கட்சியினர் மிகவும் மாறுபட்ட அரசியல் கணக்கீடுகளைச் செய்துள்ளனர். மக்களிடையே ட்ரம்புக்கு ஆதரவு இருப்பதாக கூறப்படுவதைக் கண்டு அவர்கள் அஞ்சவில்லை. ட்ரம்பின் வர்க்கப் போர் கொள்கைகள் நடைமுறைக்கு வரத் தொடங்குகையில் தொழிலாள வர்க்கத்தின் பாரிய எதிர்ப்பு வெடிக்குமோ என்பதே அவர்களின் பிரதான அச்சமாக உள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களைச் சுற்றி வளைக்க ட்ரம்ப் உத்தரவிட்டதன் மீது ஏற்கனவே போராட்டங்கள் நடந்துள்ளன. ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கமும் தாக்குதலின் கீழ் உள்ளது என்பது தெளிவாகும்போது இந்த போராட்டங்கள் அதிவேகமாக வளரும்.

நிதி இடைநிறுத்தத்தின் விளைவாக திங்களன்று அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் (நீதிமன்ற உத்தரவால் சற்று தாமதமானது) பத்து மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களைப் பாதிக்கும். தொடக்க நிலையில் உள்ள அல்லது பள்ளி மதிய உணவு மற்றும் காலை உணவைப் பெறும் ஒரு குழந்தையைக் கொண்ட ஒவ்வொரு குடும்பமும், மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்கள் அல்லது தொண்டு நிறுவனங்களுக்கு மானியங்களை உள்ளடக்கிய மருத்துவ உதவி மற்றும் பிற கூட்டாட்சி திட்டங்களில் உள்ள அனைவரும் பேரழிவிற்கு ஆளாக நேரிடும். ஆதலால், ஒரு அரசியல் வெடிப்பு தவிர்க்க முடியாதது.

நிதிய தன்னலக்குழுவின் இரண்டு முக்கிய அரசியல் கருவிகளில் ஒன்றான ஜனநாயகக் கட்சியின் பாத்திரம், இந்த அரசியல் எதிர்ப்பை ஒடுக்குவது அல்லது பெரும் செல்வந்தர்களின் இலாபங்கள் மற்றும் செல்வவளத்தை அச்சுறுத்தாத வகையில், அதனை பாதுகாப்பான வழிகளில் திசைதிருப்புவதாகும். “யாரோ ஒருவர் நிரப்பக்கூடிய ஒரு இடம் இருப்பதாக” ஒரு ஜனநாயக மூலோபாயவாதியின் கவலையை பொலிடிகோவின் வர்ணனை மேற்கோள் காட்டுகிறது.

உண்மையில் ஒன்று இருக்கிறது, அதை புரட்சிகர சோசலிசக் கட்சியான சோசலிச சமத்துவக் கட்சியால் நிரப்ப முடியும், நிரப்ப வேண்டும். அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும், வலதுசாரிகள் பக்கம் நகர்ந்து, ட்ரம்ப் போன்ற வெளிப்படையான பாசிஸ்டுகளுக்கு அதிகாரம் அளிக்கும் அதிகாரப்பூர்வ முதலாளித்துவ அரசியல் அமைப்பு முறைக்கும், மக்கள்தொகையின் பரந்த பெரும்பான்மைக்கும், வேலைகள், வாழ்க்கைத் தரங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அதிகரித்து வரும் உலகளாவிய போர் அச்சுறுத்தலை எதிர்த்து பெரும் போராட்டங்களுக்குள் நகர்ந்து வருகின்ற தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் ஒரு பிரம்மாண்டமான அரசியல் வெற்றிடம் உள்ளது.