இலங்கையில் ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீதான பழிவாங்கல் தொடர்கிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

ஒல்டன் தோட்டத்தின் 22 தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட இரண்டு நீதிமன்ற வழக்குகள், முறையே டிசம்பர் மற்றும் ஜனவரியில் நீதவான் நீதிமன்றத்திலும் தொழில் நீதிமன்றத்திலும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. ஓல்டன் தோட்டத்தை கட்டுப்படுத்தும் ஹொரண பெருந்தோட்ட நிறுவனமும் அரச அதிகாரிகளும், போலியாக குற்றம் சாட்டப்பட்ட தொழிலாளர்களை தண்டிக்க உறுதியுடன் இருப்பதை இந்த இரண்டு வழக்குகளினதும் செயற்பாடுகள் வெளிப்படுத்தியுள்ளன.

29 ஏப்ரல் 2022 நடந்த, வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம் [WSWS Media]

மாஸ்கெலியாவில் உள்ள ஓல்டன் தோட்டத்தின் 22 தொழிலாளர்களுக்கு எதிரான வழக்கு கடந்த டிசம்பர் 15 அன்று விசாரணைக்கு வந்தபோது, ஹட்டன் நீதவான் இந்த வழக்கை மார்ச் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். இந்த வழக்கு 2021 மார்ச் மாதம் தொடங்கியதிலிருந்து தற்போது நான்கு ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

2021 பெப்ரவரி 15 அன்று நடைபெற்ற போராட்டத்தின் போது, தோட்ட முகாமையாளர் சத்தியமூர்த்தி சுபாஷ் நாராயணனையும் துணை முகாமையாளர் அனுஷன் திருச்செல்வத்தையும் தாக்கியதாகவும், முகாமையாளரின் வீட்டிற்கு சேதம் ஏற்படுத்தியதாகவும் இந்தத் தொழிலாளர்களுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தங்களது தினசரி சம்பளத்தை உயர்த்திக்கொள்வதற்காக முன்னெடுத்த போராட்டத்தை நசுக்க, கம்பனியும் பொலிசும் கூட்டு சதித் திட்டம் தீட்டி, தங்கள் மீது பொய்யாக குற்றம் சுமத்தியதாக தொழிலாளர்கள் வலியுறுத்துகிறார்கள். அவர்கள் அந்த ஆண்டு பெப்ரவரி 2 அன்று வேலைநிறுத்தத்தை ஆரம்பித்ததுடன் மூன்று நாட்கள் கழித்து நாடுமுழுவதும் இலட்சக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் ஈடுபட்ட வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். அவர்கள் தினசரி சம்பளத்தை 1,000 ரூபாயாக (2021ல் இருந்த பரிமாற்ற விகிதத்தில் 5 டொலர்) உயர்த்த வேண்டும் என்று கோரினர். எவ்வாறெனினும், நிர்வாகத்தின் அடக்குமுறை காரணமாக, தொழிலாளர்கள் மார்ச் 29 வரை வேலைநிறுத்தத்தை தொடர்ந்தனர்.

கடந்த நான்கு ஆண்டுகளில், முகாமையாளரின் வீட்டிற்கு சேதம் ஏற்படுத்தியதாக தொழிலாளர்களுக்கு எதிராக குற்றம் சுமத்துவதற்கு, இலங்கை சட்ட மா அதிபரின் ஆலோசனையை எதிர்பார்த்து இருப்பதாக கூறி, இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்ற பொலிசாரின் கோரிக்கையை நீதவான் ஏற்றுக்கொண்டார்.

டிசம்பர் 15 அன்று, முகாமையாளரின் வீட்டிற்கு சேதம் விளைவித்ததாக தொழிலாளர்களுக்கு எதிராக குற்றம் சுமத்த போதுமான ஆதாரங்கள் இல்லை என்று சட்ட மா அதிபர் முடிவு செய்துள்ளதாக மாஸ்கெலியாவில் உள்ள ஒரு பொலிஸ் அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சட்ட மா அதிபரின் இந்த முடிவு, தொழிலாளர்கள் தோட்ட சொத்துக்களை சேதப்படுத்தியதாக நிறுவனமும் பொலிசாரும் முன்வைத்த பிரதான குற்றச்சாட்டை பலம்வாய்ந்த முறையில் முறியடித்ததோடு, இந்த முழு வழக்கினதும் போலி பண்பை அம்பலப்படுத்தியது. இருப்பினும், நீதவான் இம்முறை தொழிலாளர்களுக்கு எதிராக புதிய குற்றச்சாட்டுகளை அமைக்க பொலிசாருக்கு நேரம் வழங்கி வழக்கை மீண்டும் ஒத்திவைத்தார்.

சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) ஓல்டன் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவும் (AWAC), வழக்கு ஆரம்பித்ததிலிருந்தே, இந்த வழக்கானது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) தொழிற்சங்க அதிகாரிகளின் உடந்தையுடன் பெருந்தோட்டக் கம்பனியும் பொலிசாரும் செய்த கூட்டுச் சதி என்று வலியுறுத்தி வருகின்றன. தோட்டத்தில் உள்ள இ.தொ.கா. அலுவலர்கள், தொழிலாளர்களை பொலிசில் சரணடைய அறிவுறுத்தியுள்ளனர்.

இதே பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ஹொரண பெருந்தோட்டக் கம்பனி, குற்றம் சுமத்தப்பட்ட 22 பேர் உட்பட 38 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தது. இந்த அடக்குமுறை நடவடிக்கைகள், ஓல்டன் தொழிலாளர்களை மட்டுமன்றி, ஊதிய உயர்வுக்காகவும் தாங்க முடியாத நிலைமைகளுக்கு எதிராகவும் போராடும் அனைத்து தோட்டத் தொழிலாளர்களையும் அச்சுறுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது.

மீண்டும் வேலையில் அமர்த்தக் கோரிய, வேலை நீக்கப்பட்ட 13 தொழிலாளர்கள் சம்பந்தமான தொழில் நீதிமன்றத்தின் வழக்குத் தீர்ப்பு ஜனவரி 9 அன்று வழங்கப்பட்டது. இந்த தொழிலாளர்கள் இ.தொ.கா. வழியாக முறையீடு செய்திருந்த அதே நேரம், 17 பேர் தனிப்பட்ட முறையில் ஒரு வழக்கறிஞரை நியமித்திருந்தனர். இந்த வழக்குகளும் கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

தொழில் நீதிமன்ற நீதிபதி, தங்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்ததோடு, இந்த 13 தொழிலாளர்களுக்கும் எதிராக, ஒவ்வொரு தொழிலாளியும் நீதிமன்ற செலவாக கம்பனிக்கு 7,500 ரூபா செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

தொழில் நீதிமன்ற வழக்கில் தொழிலாளர்களுக்காக வாதாடிய இ.தொ.கா.வின் தொழிலாளர் பணிப்பாளர், T.F. கதிர்வேல், உலக சோசலிச வலைத் தளத்துக்கு பேசும் போது, “இந்த தீர்ப்பு தொழிலாளர்களுக்கு எதிரானது. நான் பல வழக்குகளில் தொழிலாளர்களுக்காக வாதாடியிருக்கிறேன், ஆனால் எப்போதும் தொழிலாளர்களை பிரதிவாதிகளுக்கு பணம் செலுத்தக் கூறிய தீர்ப்பை பற்றி கேட்டது இல்லை,' என்றார்.

கதிர்வேலின் படி, தொழிலாளர்கள் முகாமையாளரின் வீட்டிற்கு சென்று அவரை தாக்கினார் என்று கூறி, நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார். ஆனால் பொலிஸ் இதுவரை அத்தகைய குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் கூட முன்வைக்கவில்லை.

தொழிலாளர்களால் செலவைச் சமாளிக்க முடியுமெனில், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்! என இ.தொ.கா. அதிகாரி கூறினார். இதன் பொருள், தொழிலாளர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கை நடத்துவதற்கு வழக்கறிஞர்களுக்கு பெரும் தொகை பணம் செலுத்த வேண்டியிருக்கும்.

மற்ற தொழிற்சங்கங்களின் போன்று, இ.தொ.கா.வும் பல வருடங்களாக சந்தா கட்டணங்களை வசூலித்து வந்துள்ளது. எனினும், இ.தொ.கா. அதிகாரிகள் வழகுக்கான செலவுகளைத் செலுத்தவில்லை. வறுமையில் பீடிக்கப்பட்ட தொழிலாளர்கள், தங்களின் அற்ப வருமானத்தின் மத்தியில், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நீதிமன்றத்திற்கு சமூகமளிப்பதற்கான பயணச் செலவுகளையும் வழக்குச் செலவுகளையும் செலுத்த வேண்டியிருந்தது.

இ.தொ.கா. அதிகாரிகள் தொழிலாளர்களை கைது செய்வதில் தோட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து நேரடியாக சதித்திட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) கட்டுப்பாட்டில் உள்ள அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் உட்பட ஏனைய தொழிற்சங்கங்கள் இந்த தொழிலாளர்களை பாதுகாக்க மறுத்துவிட்டன.

ஓல்டன் தொழிலாளர்கள் மீதான பழிவாங்கல்கள் தனியான சம்பவம் அல்ல.

ஓல்டனில் அடக்குமுறை நடந்த சில மாதங்களுக்குப் பின்னர், தலவாக்கலையில் உள்ள கட்டுக்கலை தோட்டத்தில் 11 தொழிலாளர்கள் பழிவாங்கப்பட்டு, பொய்க் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். கோவிட்-19 தொற்று நோய் காலத்தில் நிவாரணம் கோரியதற்காக ஹட்டனுக்கு அருகிலுள்ள வெலி ஓயா தோட்டத்தில் ஐந்து தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர்.

ஹொரனா பெருந்தோட்டமானது 22 பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளில் ஒன்றாகும், மேலும் இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றும் ஹேலிஸ் குழுமத்தின் ஒரு பகுதியுமாகும்.

அனைத்து தேயிலை தோட்ட நிறுவனங்களும், அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களின் ஆதரவுடன், தொழிலாளர்களை சுரண்டுவதை கடுமையாக்குவதற்கும், உலக சந்தைகளில் போட்டியிடுவதன் பேரில் உற்பத்தி செலவுகளை குறைப்பதற்கும் முயற்சிக்கின்றன. தொழிலாளர்களின் ஊதிய அதிகரிப்பு கோரிக்கைகளை இவை கடுமையாக எதிர்க்கின்றன.

இதற்கான ஒரு வழிமுறையாக 'வருவாய் பகிர்வுத் திட்டத்தை' (RSM) திணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இதில், சுமார் 1,000 தேயிலைப் செடிகள் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். நிறுவனத்தினால் விவசாய உள்ளீடுகள் வழங்கப்படுவதோடு தொழிலாளர்கள் குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் கூட ஒதுக்கப்பட்ட பகுதியை பராமரிப்பர். உழைத்த பிறகு, வருவாய் பகிர்வு முறைமையின் மூலம் ஒரு சிறிய பகுதியை மட்டுமே தொழிலாளி பெறுவார்.

இந்த வருவாய் பகிர்வு முறை பல தோட்டங்களில் திணிக்கப்பட்ட போதிலும், சில சந்தர்ப்பங்களில், தொழிலாளர்களின் எதிர்ப்பின் காரணமாக இது கைவிடப்பட வேண்டியிருந்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடுமையான சிக்கனக் கோரிக்கைகளில் ஒன்று, பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களும் 'பொருளாதார மறுசீரமைப்பை' எதிர்கொள்ள வேண்டும் என்பதாகும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முந்தைய அரசாங்கம், பயிர் பன்முகப்படுத்தல் மற்றும் சுற்றுலா மூலம் தேயிலை நிறுவனங்களின் இலாபத்தை உறுதி செய்வதற்கான திட்டங்களைத் தொடங்கியது.

கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதற்கு உறுதிபூண்டுள்ளதுடன் தொழிலாளர்களின் செலவில் தோட்டங்களை இலாபகரமானவையாக மாற்றும் முயற்சிகளை துரிதப்படுத்துவார்.

தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை பாதுகாக்கவும், வாழ்வதற்குப் பொருத்தமான வீடுகள் உட்பட கண்ணியமான ஊதியம் மற்றும் நிலைமைகளை வெல்லவும் போராட வேண்டும்.

இந்தப் போராட்டத்தை நடத்தும்போது, அனைத்து தோட்டத் தொழிலாளர்களும் பழிவாங்கப்பட்ட ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் விலக்கிக்கொள்ளக் கோருவது அவசியம். அனைத்து 38 தொழிலாளர்களும் உடனடியாக மீண்டும் வேலையில் அமர்த்தப்படுவதோடு இதுவரை வழங்கப்படாத ஊதியங்களும் வழங்கப்பட வேண்டும்!

இலங்கையில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் பெருந்தோட்டங்களில் உள்ள தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளின் போராட்டத்தை ஆதரிக்க வேண்டுமென நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

சர்வதேச பிரச்சாரத்தின் மூலம் பழிவாங்கப்பட்ட ஓல்டன் தொழிலாளர்களைப் பாதுகாப்பதில் சோசலிச சமத்துவக் கட்சியும் ஓல்டன் தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழுவும் முன்முயற்சி எடுத்தன. தொழிலாளர்கள் படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். தொழிற்சங்க அதிகாரத்துவங்களோ தங்கள் சொந்த உறுப்பினர்களுக்கு எதிராக கம்பனிகளுடனும் அரசாங்கத்துடனும் கூட்டுச் சேர்ந்துள்ளன.

போராட்டத்தை தங்கள் சொந்தக் கைகளில் எடுத்துக்கொள்ள தொழிலாளர்கள் தங்கள் சொந்த சுயாதீன நடவடிக்கை குழுக்களை உருவாக்க வேண்டும். இந்த நடவடிக்கை குழுக்களில் தொழிற்சங்க அதிகாரத்துவத்துக்கும் முதலாளித்துவ கட்சிகளுக்கும் எந்த இடமும் இருக்க கூடாது.

சோசலிச சமத்துவக் கட்சியும் ஓல்டன் தொழிலாளர் நடவடிக்கை குழுவும், தொழிலாளர்கள் இந்த முயற்சியை மேற்கொள்வதற்கு உதவத் தயாராக உள்ளன.

தொழிலாளர்கள் தங்கள் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை பாதுகாப்பதற்கான ஒரே வழி, இலாபத்துக்காக இயங்கும் இந்த அமைப்பு முறையை தகர்க்கவும், தொழிலாளர் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்தை நிறுவவும், பொருளாதாரத்தை மறுசீரமைக்கவும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒரு ஐக்கியப்பட்ட அரசியல் போராட்டத்தின் மூலம் மட்டுமே இது சாத்தியமாகும். பிராதன தொழில்துறைகள், வங்கிகள் மற்றும் பெருந்தோட்டங்களை தேசியமயமாக்கி, அவற்றை தொழிலாளர் வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதும் இதில் அடங்கும்.

இந்த போராட்டம், தெற்காசியா முழுவதும் மற்றும் சர்வதேச அளவிலும் முன்னெடுக்க வேண்டிய சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.