முன்னோக்கு

ஜேர்மனியின் கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியினர் அகதிகளுக்கு எதிராக அதிதீவிர வலதுசாரி AfD கட்சியுடன் ஐக்கியப்படுகின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் ஆளும் வர்க்கம் கூர்மையாக வலதை நோக்கி நகர்ந்து வருகிறது. ஜேர்மனியில், அரசியல் ஸ்தாபனங்கள் பாசிசத்திற்கு மறுவாழ்வளிப்பது குறித்த அனைத்து கட்டுப்பாடுகளையும் தடைகளையும் கைவிட்டு வருகின்றன.

நாஜிக்களின் ஆவுஷ்விட்ஸ் வதை முகாம் விடுதலையின் 80 வது ஆண்டு நிறைவை நினைவைக் கூரும் வகையில், கடந்த புதன்கிழமை இடம்பெற்ற பாராளுமன்றத்தின் கூட்ட அமர்வை, யூத இனப்படுகொலையை திட்டமிட்டு குறைத்துக் காட்டியும், அதனை அற்பமாக்கியும் அதிதீவிர வலதுசாரி ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சிக்கு சிவப்புக் கம்பளத்தை விரித்து முடித்துக் கொண்டது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜேர்மன் பாராளுமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக, பிரதான பாராளுமன்ற குழுக்களில் ஒன்று, ஒரு எதேச்சதிகார மற்றும் இனவாத மசோதாவை நிறைவேற்ற உதவுவதற்காக பாசிசவாதிகளுடன் கைகோர்த்துள்ளது.

கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்/கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CDU/CSU) ஆகிய கட்சிகளின் பாராளுமன்றக் குழு, “பாதுகாப்பான எல்லைகள் மற்றும் சட்டவிரோத புலம்பெயர்வை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஐந்து அம்சங்கள்,” மற்றும் “உள்நாட்டு பாதுகாப்பிலான கொள்கை மாற்றத்திற்கு ஆதரவு” என்ற இரண்டு தீர்மானங்களை முன்வைத்திருந்தது. பிப்ரவரியில் கூட்டாட்சி தேர்தல்களில் சான்சிலருக்கான CDU/CSU கட்சிகளின் வேட்பாளரான CDU பிரிவின் தலைவர் பிரெட்ரிக் மெர்ஸ், AfD உடன் ஒத்துழைத்து அவற்றை நிறைவேற்றுவதற்கான அவரது விருப்பத்தை முன்னதாக தெரிவித்திருந்தார்.

எல்லைகள் மற்றும் குடியேற்றம் மீதான முதல் தீர்மானத்தின் வாக்கெடுப்பில் 348 வாக்குகள் ஆதரவாகவும், 345 வாக்குகள் எதிராகவும், 10 பேர் வாக்களிக்காமலும் இருந்தனர். இந்தத் தீர்மானம், தற்போதைய ஐரோப்பிய ஒன்றிய சட்டத்திற்கு முரணான “அனைத்து அண்டை நாடுகளுடனும் நிரந்தர எல்லைக் கட்டுப்பாடுகளை” கோருவதுடன், தரை வழியாக ஜேர்மனிக்கு வரும் அனைவருக்கும் புகலிடம் கோரும் உரிமையை ஒழித்துக்கட்டுகிறது. மேலும், “நாட்டை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்பட்ட அனைவரையும்” அடைத்து வைப்பதற்காக தடுப்புக்காவல் இடங்களில் “குறிப்பிடத்தக்க அதிகரிப்பை” இது கோருகிறது.

கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்/கிறிஸ்துவ சமூக ஒன்றியம், தாராளவாத ஜனநாயகக் கட்சி (FDP) மற்றும் AfD ஆகிய கட்சிகள் பாராளுமன்ற குழுக்களின் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. அதேவேளையில், சமூக ஜனநாயகக் கட்சியினர் (SPD), பசுமை கட்சியினர் மற்றும் இடது கட்சியினர் இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர். இடது கட்சியில் இருந்து உடைந்து சென்ற BSW கட்சி (Bund Sarah Wagenknecht) இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

உள்நாட்டு பாதுகாப்பு கொள்கை மீதான இரண்டாவது தீர்மானம், கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்/கிறிஸ்துவ சமூக ஒன்றியம் மட்டுமே ஆதரித்தது. அது 509 க்கு 190 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.

முதல் தீர்மானத்தின் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு, AfD கட்சியின் பாராளுமன்றக் குழு மகிழ்ச்சியில் மிதந்தது. AfD பாராளுமன்ற உறுப்பினர் பேர்ண்ட் பௌமான், ஒரு “உண்மையான வரலாற்று தருணம்” குறித்து பேசினார். ட்ரம்ப், ஜியோர்ஜியா மெலோனி (இத்தாலி), கீர்ட் வில்டர்ஸ் (நெதர்லாந்து), ஹெர்பேர்ட் கிக்கில் (ஆஸ்திரியா) மற்றும் சமீபத்தில் அதிகாரத்திற்கு வந்துள்ள ஏனைய அதிவலது அரசியல்வாதிகளுக்கு இணையாக தனது கட்சியை நிறுத்தி, AfD கட்சியின் தலைமையிலான ஒரு புதிய சகாப்தம் இங்கேயும் இப்போதும் தொடங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஒட்டுமொத்த விவாதமும் பாதுகாப்பு வெறிக்கூச்சல் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான இனவெறிப் பிரச்சாரத்தால் குணாம்சப்படுத்தப்பட்டிருந்தது. ஒரு வாரத்திற்கு முன்பு, ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட அகதி ஒருவர், ஒரு சிறு குழந்தையையும் ஒரு நபரையும் கொன்ற அஸ்காபென்பேர்க்கில் இணம்பெற்ற தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு கணம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த ஆண்டில், மாக்டெபர்க், மன்ஹெய்ம் மற்றும் சோலிங்கனில் நடந்த மூன்று வேறுபட்ட தாக்குதல்கள் இடம்பெற்றன. இதனால், ஜேர்மனி முழுவதும் அவசரகால நிலையில் இருப்பதாகவும், ஜேர்மனியில் பாதுகாப்பு கோரும் அகதிகள், முழு மக்களுக்கும் ஒரு தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும், எல்லைகளை மூடுவதன் மூலமும், ஏராளமானவர்களை நாடு கடத்துவதன் மூலமும் மட்டுமே இதை எதிர்கொள்ள முடியும் என்று சான்றாக காட்டப்படுகின்றன.

“இது பொதுப் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கிற்கு ஒரு அச்சுறுத்தல் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வதற்கு முன்னர் ஜேர்மனியில் வேறு என்ன நடக்க வேண்டும்” என்று சான்சிலர் ஷொல்ஸ்க்கு (SPD) எதிராக பிரெட்ரிக் மெர்ஸ் கூச்சலிட்டார். மாக்டெபேர்க் மற்றும் அஸ்காபென்பேர்க் தாக்குதல்களுக்குப் பின்னர், வார்த்தைகள் இறுதியாக செயல்களால் பின்பற்றப்பட வேண்டும் என்று அவர் கூறினார். மெர்ஸ் தனது “மனசாட்சியை” மேற்கோள் காட்டி வெளிநாட்டினரை வெறுக்கும் AfD உடனான தனது ஒத்துழைப்பை நியாயப்படுத்தினார். ஏனெனில் அது “இனி செயலற்ற நிலையில் இருப்பதை அவரால் சமரசம் செய்ய முடியாது”.

இந்த மோசமான கிளர்ச்சியை சமூக ஜனநாயகக் கட்சியோ அல்லது பசுமைக் கட்சியினரோ எதிர்க்கவில்லை. AfD கட்சியுடன் பிரெட்ரிக் மெர்ஸ் ஒத்துழைத்ததற்காக அவர்கள் அவரைத் தாக்கினர். இது மீண்டும் மீண்டும் கடுமையான கருத்துப் பரிமாற்றங்களுக்கு இட்டுச் சென்றது. ஆனால், அவர் விரும்பினால் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் தனது நோக்கங்களை அடைய முடியும் என்ற நிலைப்பாட்டிலிருந்து மட்டுமே அவர்கள் அவ்வாறு செய்தனர்.

அரசாங்க அறிக்கை ஒன்றுடன் விவாதத்தைத் தொடங்கி வைத்த சான்சிலர் ஷொல்ஸ், அஸ்காஃபென்பேர்க் தாக்குதலை சகித்துக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டதுடன் “எனக்கு இது போதும், நான் சீற்றமடைந்துள்ளேன்” என்று விவரித்தார். ஆனால் இதற்குக் காரணம் சட்டங்கள் இல்லாதது அல்ல என்று கூறிய அவர், சட்டவிரோத அல்லது குற்றச் செயல்களில் ஈடுபடும் குடியேறுபவர்கள் மீது இவை செயல்படுத்தப்படவில்லை என்று குறிப்பிட்டார். மேலும், உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய சட்டங்கள் எதுவும் தேவையில்லை. மாறாக, தற்போதுள்ள விதிகளை சிறப்பாக அமல்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

அகதிகளுக்கு எதிராக அவரது அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்த எண்ணற்ற சட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை ஷொல்ஸ் பட்டியலிட்டார். “சமீபத்திய ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானுக்கு குற்றவாளிகளை நாடு கடத்துவதில் ஐரோப்பாவில் வெற்றி பெற்ற ஒரே நாடு நாங்கள் மட்டுமே” என்று ஷோல்ஸ் பீற்றிக்கொண்டார். சில நடவடிக்கைகள் ஜேர்மனிய அரசியலமைப்பு மற்றும் ஐரோப்பிய சட்டம் அனுமதிக்கும் வரம்பிற்குச் சென்றுள்ளன என்று அவர் வலியுறுத்தினார்.

பேர்லினில் உள்ள CDU தலைமையகத்திற்கு வெளியே போராட்டக்காரர்கள்

புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளின் ஜனநாயக உரிமைகளை கோட்பாட்டளவில் பாதுகாக்கவும் மற்றும் அவதூறு பிரச்சாரத்தை எதிர்க்கவும் ஜேர்மன் பாராளுமன்றத்தில் ஒரு குரல் கூட எழுப்பப்படவில்லை. பாராளுமன்றத்திற்கு வெளியேதான் மனித உரிமை அமைப்புகளும், புராட்டஸ்டன்ட் மற்றும் கத்தோலிக்க தேவாலயங்களின் பிரதிநிதிகளும் குரல் கொடுத்தனர். இவர்கள் வெளியிட்ட நான்கு பக்க கூட்டு அறிக்கையில், தேவாலய தலைவர்கள் “தற்போதைய விவாதத்தின் நேரம் மற்றும் தொனி” குறித்து தமது ஆழ்ந்த திகைப்பை வெளிப்படுத்தினர். இது “ஜேர்மனியில் வசிக்கும் அனைத்து புலம்பெயர்ந்தோரையும் இழிவுபடுத்தும், தப்பெண்ணங்களுக்கு எரியூட்டும், அத்துடன் எங்கள் கருத்துப்படி, உண்மையில் இருக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பங்களிப்பு செய்யாது” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

அனைத்து ஸ்தாபனக் கட்சிகளின் பொதுவான நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகும் தேவாலயங்கள்கூட, இந்த விடயத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கத் தூண்டிய காரணத்தை எப்படி விளக்க முடியும்?

இந்த தாக்குதல் முற்றிலும் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக மட்டுமே இயக்கப்படுவதாக தெரிகிற போதிலும், விலைவாசி உயர்வுகள் சமூக வெட்டுக்கள் மற்றும் செல்வந்தர்களுக்கான வரி விலக்குகளால் உருவாக்கப்பட்ட ஒரு சமூக நெருக்கடிக்கு, புலம்பெயர்ந்தோர் ஒரு பலிக்கடாவாக ஆக்கப்படுகின்றனர். இதற்கு SPD, பசுமைக் கட்சி, CDU/CSU மற்றும் FDP, அத்துடன் இடது கட்சி ஆகியவை கூட்டாகப் பொறுப்பாகும்.

அகதிகள் வருவதைத் தடுக்க இன்று தேவைப்படுவதாக நியாயப்படுத்தப்படுகின்ற அதிகரித்த போலிஸ் அதிகாரங்கள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் அழிப்பு, நாளை கிளர்ச்சி செய்யும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை ஒடுக்க பயன்படுத்தப்படும்.

வருகின்ற பொதுத் தேர்தல் முடிவுகள் என்னவாக இருந்தாலும் புதிய அரசாங்கமானது, பாரிய சமூக தாக்குதல்களை நடத்தும். அனைத்து ஸ்தாபக கட்சிகளும் இராணுவச் செலவுகளை இரட்டிப்பாக்கி மும்மடங்காக்குவதில் உடன்படுகின்றன. வோல்க்ஸ் வேகன், மெர்சிடிஸ், அவற்றின் வாகன விநியோகஸ்தர்கள் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ள லட்சக்கணக்கான திறமையான வேலைகள் அழிக்கப்படும்.

கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்/கிறிஸ்துவ சமூக ஒன்றியம் ஆகிய கட்சிகள் AfD உடன் கைகோர்த்த அதேநாளில், நான்கு முன்னணி வணிக அமைப்புகளின் தலைவர்கள், பொதுத் தேர்தலுக்குப் பின்னர் வரி, சமூக மற்றும் எரிசக்தி கொள்கையில் ஒரு தலைகீழ் திருப்பத்திற்கு அழைப்பு விடுத்து ஒரு கூட்டு முறையீட்டை வெளியிட்டனர். சுமார் 140 வணிக சங்கங்களின் கூட்டணி “பொருளாதார எச்சரிக்கை” போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. கிட்டத்தட்ட 1,000 சிறு வணிக உரிமையாளர்கள் பல நகரங்களில் பேரணிகளில் பங்கு பெற்றனர்.

தொழிலாளர்களின் வருவாய்கள் மீதும் கடந்தகால சமூக வெற்றிகள் மீதும் மிகப்பெரும் தாக்குதல்களை முன்அனுமானிக்கும் இந்த வேலைத்திட்டத்திற்கு பாசிச முறைகள் அவசியப்படுகின்றன. இதுதான் முன்னாள் பிளாக்ரோக் (BlackRock) நிறுவனத்தின் மேலாளரான பிரெட்ரிக் மெர்ஸ், AfD உடனான நல்லிணக்கத்திற்கான நிஜமான காரணமாகும்.

ஜேர்மனியில் இடம்பெற்றுவரும் சம்பவங்களின் அபிவிருத்திகள் அமெரிக்காவில் நடந்துவரும் அபிவிருத்திகளுக்கு சமாந்தரமாக உள்ளன. ட்ரம்ப் முதன்முதலில் தேர்தலில் வெற்றி பெற்றபோது, அவர் இன்னும் ஒரு வெளியராகக் கருதப்பட்டாலும், பணக்காரர்களும் சக்திவாய்ந்த வணிகத் தலைவர்களும் இப்போது அவருக்கு ஆதரவளிக்கின்றனர். உலகின் மிகப்பெரும் செல்வந்தரான எலோன் மஸ்க், நடைமுறையளவில் பரந்த அளவிலான சமூக செலவினங்களை பூஜ்ஜியத்திற்கு குறைக்கும் வகையில், அரசு செலவினங்களை மூன்றில் ஒரு பங்கு குறைக்க ட்ரம்பால் பணிக்கப்பட்டுள்ளார். AfD தலைவர் அலிஸ் வைடலின் மிக முக்கியமான ஆதரவாளர்களில் மஸ்க்கும் ஒருவர் என்பது தற்செயல் நிகழ்வு அல்ல.

ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதை பகிரங்கமாக “ஹிட்லர் வாழ்க” என்ற வணக்கத்தை செலுத்தி வரவேற்ற எலன் மஸ்க், வெறும் சில நாட்களுக்குப் பின்னர் AfD இன் ஒரு பேரணியில் கூறுகையில், ஜேர்மனியில் இடம்பெற்ற யூத இனப்படுகொலை குறித்த அதன் “கடந்தகால குற்றத்தை” கடந்து சென்று அதிதீவிர வலதுசாரிகளின் கொள்கைகளைத் தழுவ வேண்டும் என்று குறிப்பிட்டார்.

ட்ரம்ப் அகதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை, ஒரு பொலிஸ் அரசைக் கட்டியெழுப்புவதற்கும், உள்நாட்டில் இராணுவத்தை நிலைநிறுத்துவதற்கும் மற்றும் அதிவலது சக்திகளை அணிதிரட்டுவதற்கும் ஒரு நெம்புகோலாக பயன்படுத்தி வருகிறார். ஜனநாயகக் கட்சியினர் இதை எதிர்க்கவில்லை. ஏனென்றால் அவர்களும் வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவத்தின் அதே வர்க்க நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைவாதிகளின் வனப்புரையால் எவரும் ஈர்க்கப்படக் கூடாது. AfD ஐ உள்ளடக்கிய ஒரு அரசாங்கத்தை தயாரிப்பதற்காக பிரெட்ரிக் மெர்ஸை, ஷொல்ஸ் மற்றும் ஹேபெக் குற்றஞ்சாட்டுவதில் அவர்கள் சொல்வது சரிதான். ஆனால், அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியினரைப் போலவே, அவர்களும் எதிர்ப்பை ஒடுக்கவும் “ஒழுங்கைப்” பேணவும் அவர்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள். இதில் தொழிற்சங்கங்கள் அவர்களுக்கு ஆதரவளிக்கும். அவர்கள் பாராளுமன்றக் குழுக்களிலும் உள்ளூர் மட்டத்திலும் பாசிஸ்டுகளுடன் ஒத்துழைப்பார்கள்.

பாசிஸ்டுகளுக்கு எதிரான எதிர்ப்பு தொழிலாள வர்க்கத்திடம் இருந்து மட்டுமே வர முடியும். தொழிலாளர்கள் தங்கள் சக ஊழியர்களையும் அண்டை வீட்டுக்காரர்களையும் நாடுகடத்தவோ, அவர்களின் ஊதியங்கள் குறைக்கப்படவோ, அவர்களின் வேலைகள் அழிக்கப்படவோ, கல்வி மற்றும் சுகாதாரம் தனியார்மயமாக்கப்படவோ, ஓய்வூதியங்கள் மற்றும் சமூக நலன்கள் நசுக்கப்படவோ அனுமதிக்க மாட்டார்கள்.

இந்த போராட்டத்திற்கு தலைமை கொடுக்க, தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு அரசியல் முன்னோக்கும் சர்வதேச அளவில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் மற்றும் முதலாளித்துவத்தை தூக்கிவீசப் போராடும் அதன் சொந்த கட்சியும் அவசியமாகும். இதனால் தான் ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி பிப்ரவரி 23 நடைபெற இருக்கும் கூட்டாட்சி தேர்தல்களில் போட்டியிடுகிறது.